குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11

This entry is part 34 of 40 in the series 26 மே 2013

ஜோதிர்லதா கிரிஜா

தயா தன் அலுவலகத்துள் நுழைந்து, பிரிவுக்குள் சென்றடைந்த போது, சங்கரன் ஏற்கெனவே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். மணி ஒன்பதரை கூட ஆகியிருக்கவில்லை யாதலால், வேறு யாரும் வந்திருக்கவில்லை.

இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து இருக்கைகள். தயா கைப்பையை மேசை மீது போட்டுவிட்டு முகத்தைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கினாள். எப்போதும் தமாஷாக ஏதேனும் பேசிச் சிரிப்பதையே இயல்பாகக் கொண்ட தயா அழுதது சங்கரனை வேதனையில் ஆழ்த்தியது. சீனு கொண்டுவந்து கொடுத்த அவள் கடிதத்தைப் படித்ததும் தனக்கே கண்கள் கலங்கியபோது அவள் அழுததில் என்ன வியப்பு என்கிற எண்ணமும் அதைத் தொடர்ந்தது.

“என்ன ஆச்சு, தயா? கண்னைத் தொடச்சுண்டு இயல்பா யிருக்கப் பாரு. யாரும் என்ன, ஏதுன்னு கேக்கும்படியா நாம வெச்சுக்கக்கூடாது.”

கண்களைத் துடைத்துக்கொண்ட தயா பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்தாள். ஒரே நாளில் அவன் இளைத்தும் கறுத்தும் போயிருந்தான்.

“ரமா வந்து எல்லாம் சொன்னா. . . அவா வந்து பாத்துட்டுப் போயாச்சா?”

“உம். . .”

“சரின்னுதானே சொன்னே?”

“அப்படித்தானே சொல்லச் சொல்லி யிருந்தேளாம்?” என்றாளவள் வெடுக்கென்று.

“கோவிச்சுக்காதே, தயா. இப்போதைக்கு வேற என்ன செய்யறது, சொல்லு.”

“நீங்க பாட்டுக்குச் சரின்னு சொல்லச் சொல்லிட்டேள். அந்தப் பையனோட முகத்துக்கு நேரேயே, ‘உன்னை எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, எனக்குப் பிடிச்சவர் வேற ஒருத்தர் இருக்கார்’ அப்படின்னு சொல்லிடணும்கிறதுதான் நான் போட்டு வெச்சிருந்த திட்டம். ஆனா, நீங்க என்ன திட்டத்தோட இப்போதைக்குச் ‘சரி’ன்னு சொல்லச் சொன்னேள்னு எனக்குத் தெரியாததால அப்படியே சொல்லிட்டேன்.”

“அதான் லெட்டர்லயே எழுதியிருந்தேனே, தயா? எந்தத் திட்டமும் இப்ப சத்தியா எனக்குத் தோணல்லே. யோசிக்கணும் இனிமேதான். நீயும் நானும் சேந்து முடிவு பண்ண வேண்டிய விஷயமில்லியா?”

“மூணு மணிக்குப் பெர்மிஷன் போடலாமா?”

“போடலாம். . . நான் அரை நாள் லீவே போட்டுட்றேன். நீ மூணு மணிக்குக் கிளம்பி வா. நாம வழக்கமாச் சந்திக்கிற பார்க்குக்கு வந்துடு.”

“சரி.”

“ஆளு எப்படி இருக்கான்?”

“எங்க அக்காவோட பாஷையில சொல்லணும்னா, காண்டா மிருகம் மாதிரி இருக்கான். முப்பத்துமூணு வயசுன்னு சொல்றா.. முப்பத்தஞ்சுக்கு மேலேயே இருக்கும் போல இருக்கு. அதான் ஜாதகமெல்லாம் பாக்க வேணாம்னுட்டா. தப்பு வழிகளுக்குப் போறவனோட மூஞ்சின்னு பாத்ததுமே தெரியறது.”

வெளியே காலடியோசை கேட்க, “சரி, சங்கர். நாம அப்புறமாப் பேசலாம்,” என்ற தயா தனது மேசையைத் துடைக்கலானாள்.

. . .தயா அந்தப் பூங்காவை யடைந்தபோது, சங்கரன் அவர்களது வழக்கமான இடத்தில் ஏற்கெனவே வந்து உட்கார்ந்திருந்தான். அவனெதிரே உட்கார்ந்துகொண்ட தயா, சில நொடிகளுக்குப் பிறகு`, தொண்டையைச் செருமிய வாறு, “ சொல்லுங்க!” என்றாள்.

“நீதான் சொல்லணும்.”

“என்னது! நான் சொல்லணுமா! நான் என்ன சொல்றது இதிலே? முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான்.”

“என்ன முடிவு?”

“என்னை உடனே கல்யாணம் பண்ணிக்கிற முடிவு.”

“என்ன பேசறே, தயா? அது எப்படி சாத்தியம்? யோசிச்சுத்தான் பேசறியா?”

“ஆமா. நாம ஒருத்தரை ஒருத்தர் இழக்காம இருக்கணும்னா அது சாத்தியமாகத்தான் வேணும். எங்க அக்கா கூட அப்படித்தான் சொல்றா. ரெஜிஸ்டர் ஆ·பீசுக்குப் போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குங்கங்கறா.”

“உங்க அக்கா கிட்ட சொல்லிட்டியா எல்லாத்தையும்?”

“பின்னே? வீட்டுல எல்லார் கிட்டயும் சொல்லியாச்சு. ஆனா ஆள் நீங்கன்னு சீனுவையும் சாம்பவியையும் தவிர வேற யாருக்கும் தெரியாது. டில்லியில டி·பென்ஸ் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற ஒருத்தர்னு சொல்லியிருக்கேன். உள்ளூர்னு தெரிஞ்சா கல்யாணம் ஆகிற வரைக்கும் வெளியில விட மாட்டாளே! அதுக்குத்தான்.”
“ரமா எல்லாம் சொன்னா. நேத்து சாயந்தரம் அவளைப் போய்ப் பாத்தேன். . . . ரெஜிஸ்டர்ட் மேரேஜ்னு சுலபமாச் சொல்லிட்டே. அது என்ன அவ்வளவு சுலபமா! அவங்களுக்கு நோட்டீஸ் குடுக்கணும். அதுக்குக் கொஞ்ச நாள் கழிச்சுத்தான் கலியாணம் பண்ணிக்க முடியும். அது எவ்வளவு நாள்னு தெரியல்ல. விசாரிக்கணும்.. . சரி. கலியாணம் பண்ணிக்கலாம். ஆனா அதுக்கு எங்க வீட்டிலேலயும் சம்மதிக்கணுமே! தவிர, கலியாண வயசில ரெண்டு தங்கைகள் இருக்கிறப்ப அது தப்பாகாதா? நாங்க இருக்கிறதோ சின்ன போர்ஷன். கலியாணம் ஆனா பெரிய வீடாப் பாக்கணும். ஒருத்தர் சம்பளம் வாடகையிலயே போயிடும். உங்க வீட்டுல நீ ஒருத்திதான் இப்ப சத்தியா சம்பாதிச்சுண்டிருக்கே. உங்கப்பாவோ நஷ்டம் வருதுன்னு ஓட்டலை மூடிட்டார். . .”

“ . . . . . . . . . ”

“என்ன, ஒண்ணுமே சொல்லாம இருக்கே?”

“சங்கர்! நீங்க பழியை என் மேல போட்ற மாதிரி பேசறேள்.”

“பழி போடல்லேம்மா! உன்னோட சம்பாத்தியத்தை நம்பி இருக்கிற உங்க அப்பா குடும்பத்தைக் கைவிட்டுட்டுக் கலியாணம் பெரிசுன்னு கெளம்பிடக் கூடியவளா நீ? இல்லியே. அப்படியே கலியாணம்னு நாம பண்ணிண்டாலும், உங்கப்பாவுக்கு உன் சம்பளத்தைக் குடுக்க நினைப்பே. அது தப்புன்னு நான் சொல்லவே மாட்டேன். அப்படி ஏதானும் நினச்சுடாதே. அப்ப? என்னோட ஒரு சம்பளத்துல நாம பெரிய வீட்டில எப்படி இருக்க முடியும்? – கலியாணம்னு பேருக்குப் பண்ணிண்டுட்டு நாம ரெண்டு பேரும் ராமகிருஷ்ன பரம ஹம்சரைப் போலவும் சாரதா தேவி மாதிரியும் வாழறதுக்குத் தயாரா யிருக்கணும்!” – இவ்வாறு சொல்லிவிட்டு, சங்கரன் கடகடவென்று சிரித்தான்.

“அட! நீங்க ஜோக் அடிக்கிறதா நினைச்சுண்டு இப்படிப் பேசினாலும், இதுவும் ஒரு நல்ல வழியாத்தான் தெரியறது எனக்கு! அருமையான யோசனை. அப்படியே பண்ணிடலாம். உங்க வீட்டுல சொல்லிச் சம்மதம் வாங்கிட்டேள்னா, நான் கெளம்பி வர எப்பவும் தயார்! வேற வீடு கூடப் பாக்க வேணாம் – இப்போதைக்கு! . . . என்னது! பேந்தப் பேந்த முழிக்கிறேள்? நெஜமாத்தான் சொல்றேன், சங்கர்!”

எந்தத் திட்டமும் புலப்படாத நிலையில்தான் அவன் அவளைச் சந்தித்த போது இருந்தான். ஒரு திடீர் எண்ணத்தில் தான் விளையாட்டாய்ச் சொன்னதை அவள் பிடித்துக்கொண்டு விடுவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. உற்சாகம் பொங்கத் தன்னைக் கண்கொட்டாது பார்த்தபடி உட்கார்ந்திருந்த அவளை அவன் திகைப்புடன் பார்த்துவிட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.

“என்ன சங்கர்? ஒண்ணுமே சொல்லாம இருக்ககேள்? நான் நெஜமாவேதான் சொல்றேன். இது அருமையான யோசனை. நாம பெரிசா வீடு எதுவும் தேடவேண்டி வராது. நாம சொல்றதுல உங்க அப்பா அம்மாவுக்கும் நம்பிக்கை வரும்.”

‘அதெல்லாம் யாரும் நம்ப மாட்டா. ‘வீட்டில பிரும்மசாரி வேஷம் போட்டுண்டு வெளியில ஏதாவது லாட்ஜ்ல ரெண்டு பேரும் தங்கிப்பா’ ன்னு அசிங்கமாப் பேசுவா எங்கப்பா!’ என்று தனக்குள் எண்ணிக்கொண்ட சங்கரன், “இதென்ன, சினிமாக்கதையா, தயா, இப்படி யெல்லாம் பண்றதுக்கு? இந்தப் பேச்சையே எங்க வீட்டுல எடுக்க முடியாதும்மா! அசிங்கம் அசிங்கமாப் பேசுவா எங்கப்பா!”

“சரி. அப்ப என்னதான் வழி?” என்று வினவிய தயாவின் குரலில் எரிச்சல் மண்டியது.

“நான் ஏதோ விளையாட்டாச் சொன்னேன், நீ அதையே பிடிச்சிக்காதே…“

“அப்படின்னா உங்களுக்கு தைரியம் போறல்லைன்னு அர்த்தம். அடுத்தாப்ல நான் கெளம்பி வர்றதுக்குத் தயாரா யிருக்கேனில்ல?”

“நீ எந்த ஏச்சுப் பேச்சும் கேக்க வேண்டி யிருக்காது, தயா. நீ வந்துட்டா, உங்க அப்பா அம்மா உன் காது கேக்காத தூரத்தில நின்னுண்டு என்ன பேசினாலும் அது உன்னைப் பாதிக்கப் போறதில்லே. ஆனா என்னோட விஷயம் அப்படியா? உன்னையும் கூட்டிண்டு போய் எங்க வீட்டுல வெச்சுக்ண்டு தினமும் அவா கிட்ட நான் பாட்டுக் கேக்கவேண்டி இருக்கும். . அதைப் பத்தி நீ யோசிச்சுப் பாக்க மாட்டேன்றே, தயா!”

“அவா பாடப் போற அந்தப் பாட்டு என்னை மட்டும் பாதிக்காதா, சங்கர்? என்ன பேசறேள் நீங்க? முன்ன பின்ன அறிமுகம் இல்லாதவாளால அவமானப் பட்றதுக்கும் அவா கிட்ட பாட்டுக் கேக்கிறதுக்கும் நானே தயாரா யிருக்கிறப்ப, உங்க சொந்த அப்பா அம்மா கிட்ட நீங்க பாட்டுக் கேக்கிறது பெரிய விஷயமா ? சொல்லுங்கோ! அப்படியே ஒருக்கா தாங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமானா, வெளியேறிட்டாப் போச்சு!”

சங்கரன் திடுக்கிட்டுப் போய் அவளைப் பார்த்தான்.

“அக்கம் பக்கத்தில உள்ளவாள்ளாம் என்ன பேச்சுப் பேசுவா, தெரியுமா? வயசான ரெண்டு தங்கைகள் இருக்கிறப்ப சுயநலமாக் கலியாணம் பண்ணிண்டு, குடும்பத்தைக் கைவிட்டுட்டு ஒடிப் போயிட்டான்னு பேசுவாளே, தயா? என்னால நினைச்சுக் கூடப் பாக்க முடியல்லே.”

“ . . . . . . . . . “

“எங்கம்மா அப்படியே முறிஞ்சு போயிடுவா.. ரொம்பப் பூஞ்சை உடம்பு. ஏற்கெனவே ஒரு ஹார்ட் அட்டேக் ஆனவா.. உனக்குத்தான் தெரியுமே!”

”நாலு பேரு நாலு விதமாத்தான் பேசுவா. அதுக்கெல்லாம் பயந்து செத்துண்டிருந்தா, நம்ம காரியம் நடக்குமா, சங்கர்?”

சங்கரனுள் பெருவியப்புப் பரவியது. அவளை யடைவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை விடவும் தன்னை யடைவதில் அவளுக்கு அதிக ஆர்வம் இருந்ததை அவன் தெள்ளத் தெளியப் புரிந்துகொண்டான். தயா தன்னைக் காட்டிலும் துணிச்சலுள்ளவள் என்னும் உண்மை அவன் முகத்தைச் சிறியதாக்கியது. தன்னைப் போன்ற கோழைகள் காதலிக்கவே லாயக்கில்லை என்று கூட அந்தக் கணத்தில் அவனுக்குத் தோன்றிவிட்டது. ‘ராமகிருஷ்ண பரமஹம்சர் – சாரதா தேவி ஆகியோருடைய உதாரணத்தைப் பற்றி ஏன் தான் இவளிடம் சொல்லித் தொலைத்தேனோ!’ என்று வருந்தினான்.

“தயா! இதெல்லாம் வாய் கிழியப் பேசுறதுக்கும் கேட்டுட்டுக் கை தட்டுறதுக்கும்தான் லாயக்கு! நடைமுறைக்கு இதெல்லாம் கொஞ்சங்கூடச் சரிப்பட்டு வராதும்மா!”

“சங்கர்! துணிஞ்சவனுக்குத் துன்பமில்லைங்கிறது உங்களுக்கும் தெரியும். இதுக்கு நீங்க ஒத்துக்கல்லேன்னா, அப்புறம் வேற என்னதான் வழி?”

“யோசிக்கலாம். அது சரி. கலியாணத்துக்குத் தேதி குறிச்சாச்சா?”

“இன்னைக்குத் தேதி பத்தா? இருபத்தஞ்சாம் தேதி ஒரு முகூர்த்தம் இருக்காம். நிச்சயதார்த்தம், கலியாணம் ரெண்டையுமே அன்னைக்கே வெச்சுக்கலாம்னிருக்கா.”

“எல்ல¡ச் செலவையும் அவாளே ஏத்துக்கறால்லே? முப்பதாயிரம் வேற குடுக்கறா. இல்லியா?”

“ஆமா. அதுக்கென்ன?”

“இது மாதிரி ஒரு இடம் அமையுமா, தயா? யோசிச்சியா?”

“பணமும் சொத்தும் பெரிசுன்னா, நீங்க சொல்றது சரிதான். ஆனா நான் அப்படி நினைக்கல்லையே! எங்க அக்கா என்னை ‘சுயநலக்காரி’ ன்னு ஒருசொல் சொல்லியிருந்தாலும், நான் பெரியவா ஏற்பாட்டுக்குப் பணிஞ்சு போயிருப்பேன்.”

“பாத்தியா, பாத்தியா! உன் வாயாலேயே நீ மாட்டிண்டே, பாரு. உங்க அக்கா ஒரு கடுஞ்சொல் சொல்லியிருந்தாலும் உன்னால தாங்க முடிஞ்சிருந்திருக்காது. உடனே உங்க அம்மா அப்பா பேச்சுப்படி நடந்துக்குவே! ஆனா நான் மட்டும் என்னை யார் என்ன தூத்தினாலும் மேல்போட்டுக்காம இருந்துறணும்! இல்லியா? இது உனக்கே நியாயமாப் பட்டுதுன்னா சரி!”

தயா வாயடைத்துப் போனாள். ‘சங்கர் சொல்லுவது நியாயந்தான். சாம்பவி என்னை சுயநலக்காரின்னு சொ¡ல்லிட்டா நான் தாங்க மாட்டேன்! ஆனா இவர் மட்டும் தன் மனுஷா என்ன திட்டினாலும் தாங்கிக்கணும்னு நான் எதிர்பார்க்கிறது சரியே இல்லேதான்!’ – சிறுத்துப் போய்விட்ட முகத்தைத் தாழ்த்திக்கொண்ட தயா, “வெரி, வெரி சாரி, சங்கர்! நான் அப்படிப் பேசியிருந்திருக்கக் கூடாது!” என்றாள்.

“பரவால்லே, தயா. விடு. நமக்குள்ள என்னத்துக்கு சாரி சொல்றதும் இன்னொண்ணும்?”

சிறிது நேரம் இருவரும் ஒருவர் பார்வையை ஒருவர் தவிர்ததபடி இருந்தார்கள். அவள் மணலில் விரலால் கோடுபோட, அவன் புற்களைப் பிடுங்கிக்கொண்டிருந்தான். அந்தப் பேசாமையை தயாதான் கலைத்தாள்.

“சொல்லுங்க சங்கர். அப்ப, என்ன பண்ணலாம்?”

“தெரியலியே, தயா, தெரியலியே!”

“தெரியல்லேன்னா எப்படி, சங்கர்? ஏதாவது ஒண்ணு சொல்லுங்க.”

அவன் அடிபட்டவன் போன்று பார்வையை அகலமாக்கிக்கொண்டு அவளைப் பார்த்தான்.: “நீ இப்ப சொன்ன வழிக்கு ‘யெஸ் ஆர் நோ’ சொல்லச் சொல்றே! அதானே?”

“அது நீங்களே சொன்ன வழிதானே, சங்கர்?”

“சரி. சரி. ஏதோ கிறுக்குத்தனமா நான் தான் வாய்க்கு வந்ததைச் சொல்லிட்டேன்னா, நீயும் அதையே பிடிச்சிண்டு தொங்குறியே? இருந்தாலும், யோசிக்கிறதுக்கு டைம் குடு.”

“அது போறும், சங்கர்! . . வாங்க. ஓட்டலுக்குப் போய் ஏதாவது டி·பன் சாப்பிடலாம்..”

இருவரும் ஓட்டலில் தங்கள் பிரச்சினை தவிர மற்றவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டே சிற்றுண்டி யருந்திக் காப்பியும் குடித்தபின் பில்லுக்காகக் காத்திருந்த போது தயாவின் கலங்கிய பார்வை ஆழமாக அவன் மீது படிந்தது.

“எனக்கென்னமோ பயம்மாருக்கு, சங்கர். இதுதான் நம்ம கடைசி சந்திப்புன்னு காரணமே இல்லாம மனசுக்குப் பட்றது,” என்ற தயா சட்டென்று பொங்கி அழத் தொடங்கினாள். அவனுக்கும் விழிகள் சிவந்தன. அவளது அந்த உள்ளுணர்வு மிகவும் குரூரமான முறையில் மெய்ப்படப் போவது தெரியாமல் – ஆனால், மனக்கலக்கத்துடன் – இருவரும் நெடிய கணத்துக்கு ஒருவரை மற்றவர் பார்த்தபடி இருந்தார்கள்.

சுதாரித்துக்கொண்ட சங்கர், “சீ! கண்ணைத் துடைச்சுக்கோ.. இது பொது இடம். யாரானும் பாக்கப் போறா!” என்றான்.
– தொடரும்
jothigirija@live.com

Series Navigationகோவை இலக்கிய சந்திப்பு அழைப்பிதழ்அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *