குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1

This entry is part 24 of 33 in the series 14 ஏப்ரல் 2013

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை

மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

 

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை தமிழ்நாடு நிலவரம் சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

 

 _லதா ராமகிருஷ்ணன்

[1]

 

image001

ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி யது அரசின் கடமை என்று வகுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறை யில் இது எத்தனையளவு சாத்தியமாகியிருக்கிறது? இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி மூலம் அடித்தட்டு வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குறிப் பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்களின் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறதா? இல்லையா? தாய்மொழியின் மாண்பு, தாய்மொழி வழிக்கல்வியின் தேவை ஆகியவை குறித்து மேடையில் முழங்கினால் மட்டும் போதாது. உண்மை யிலேயே இன்றைய குழந்தைகள் தாய்மொழித் தேர்ச்சி பெற கல்விக் கூடங்கள் எந்த அளவுக்குத் துணைசெய்கின்றன, என்பன போன்ற விஷயங் களை அலசியாராயவும், மதிப்பாய்வு செய்யவும், கல்வி கற்பித்தலில் நிலவும் குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், பரவலாக் கவும் ப்ரதம் [Pratham] என்ற அரசு சாரா அமைப்பின் முன்முயற்சியின் பயனாய் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதிலுமுள்ள கிராமப்   புறப் பகுதிகளில் ‘அஸெர்’ சுற்றாய்வு மேற் கொள்ளப்பட்டுவருகிறது. ஐந்தாம் வகுப்பு மாணாக்கர்களில் இரண்டாம் வகுப்புப் பாடநூல்களைக்கூட படிக்க இயலாதவர்கள் இருக்கிறார்கள், தமிழ்மொழியின் எழுத்துகளைக்கூட அடை யாளங்காண முடியாதவர்களாய் பக்கம் பக்கமாக மிகுந்த பிரயத்தனத்துடன் எப்படியோ மனப்பாடம் செய்து ஒப்பேற்றிவருவதும், இந்த மாணாக்கர்கள் ஆசிரியர்களாலும், பள்ளி நிர்வாகத்தாலும் கல்வி சார் அனைத்துவிதமான செயல்பாடுகளிலும் ஒதுக்கப்பட்டுவரும் நிலையே நிலவி வருவதும் ASER சுற்றாய்வின் மூலம் தெரியவந்தபோது, பொறுப்பிலுள்ளவர்கள் அஸெர் ஆய்வறிக்கையைப் பொருட்படுத்தாமலிருக்கவே முயன்றனர். அஸெர் ஆய்வு முறையில் குறைகாணவே முயன்றனர். ஆனால், அஸெர் குழுவினர் கருமமே கண்ணாய் இந்தச் சுற்றாய்வை வருடாவருடம் மேற்கொண்டு வருவதும், மிகவும் வெளிப்படையாய் தங்களுடைய ஆய்வுமுறைகளையும், முடிவுக ளையும், அவை சார்ந்த உரையாடல்களையும் நடத்திவரும் காரணத்தால் இன்று நாடெங்கும் அஸெர் ஆய்வறிக்கை மீதான கவனம் அதிகரித்துவருகிறது.

 

ஆனால், கல்விபெறும் உரிமைச் சட்டம் எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் கல்வி பெறுவதை அவர்களுடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக நிறுவி யுள்ளது. ஆனால், இது நடைமுறையில் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது? பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினராகத் திகழும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைத்துவருகிறதா? இந்த விவரங் களைத் திரட்டி, பரவலாக்கி சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத் துடன் அஸெர் சுற்றாய்வு வருடாவருடம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

வருடாவருடம் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதா அல்லது குறைந்துகொண்டுவருகிறதா, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்களா, அரசுப்பள்ளிகளில் சேர்க்கவிரும்புகிறார்களா, ஆங்கிலமொழி, தமிழ்மொழி, கணிதம் ஆகிய பாடங்களில் 5-16 வயதுப் பிரிவுகளில் மாணாக்ககர்களின் தேர்ச்சியும் பயிற்சியும் எப்படி உள்ளது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளன, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான விதிமுறைகள் சரிவரப் பின்பற்றப்பட்டுவருகின்றனவா போன்ற விவரங்கள் இந்தச் சுற்றாய்வின் மூலம் திரட்டப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனியாக பெரிய அளவில் வருடாவருடம் நடத்தப்பட்டுவரும் சுற்றாய்வுகளில் இதுவும் ஒன்று.

 

இதை நடத்துவதில் ‘ப்ரதம்’ என்ற தன்னார்வ அமைப்பு முக்கியப் பங்கு வகித்துவருகிறது. 1994-ம் ஆண்டு மும்பை குடிசைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கியது இந்த அமைப்பு. ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள்ளாகவே அவர்கள் நடத்திவந்த 150 பால்வாடிகள் 2000 அ அக உயர்ந்தன. விரைவிலேயே பள்ளிக்குச் சென்று கல்விகற்காத குழந்தைகள் ஒருவகையென்றால் இன்னொரு வகை ‘கண்ணுக்குப் புலனாகாத’ கல்வித் தேவை அந்தக் குழந்தைகள் மத்தியில் இடம்பெற்றிருப்பதை அவர்களால் உணர முடிந்தது. அதாவது, பள்ளிக்குச் சென்றும் பல்வேறு காரணங்களால், சூழல்களால், கற்பித்தல் சார் குறைபாடுகளால், கல்வித் திட்டத்திலுள்ள குறை பாடுகளால் கற்கவியலாத நிலையில் உள்ள குழந்தைகள். எனவே, 2002-ல் ’ப்ரதம்’ அமைப்பு மேற்குறிப்பிட்ட வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த ’பள்ளி செல்லும் குழந்தைகள் ’மொழிப்பாடங்களிலும், கணிதப்பாடத்திலும் பெற்றிருக்கும் பயிற் சியை  சில எளிய, சுயமாக உருவாக்கப்பட்ட  கற்றல் சார் உபகரணங்களின் மூலம் கண்டறியும் முயற்சியை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

 

’அஸெர்’ மற்றும் தரமான கல்வி அனைத்துப்பிரிவுக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஒத்தநோக்குடைய வேறு சில தன்னார்வ அமைப்பு கள் ஒன்றிணைந்து இந்திய மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களுக்குத் தங்கள் ஆய்வுக்குழுவை அனுப்பி அங்குள்ள கிராமங்களில் இருக்கும் ‘பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை’ அணுகி அவர்களோடு நட்பு முறையில் பேசி அவர்களைத் தங்களுடைய சுற்றய்வில் பங்கேற்கச்ச் செய்து அதன்மூலம் அந்த மாணாக்கர்களின் கல்வி சார் தேர்ச்சிக்குறைபாடுகளையும், தேவைகளை யும் அறிந்துகொண்டுவருகிறார்கள். பின், அவற்றைக் களையத் தேவையான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளிகளுக்குச் சென்று இந்த சுற்றாய்வு மேற்கொள்ளப்படுவதில்லை. காரணம், பள்ளிகள் தங்களிடமுள்ள மாணாக்கர்க ளில் நன்றாகக் கற்பவர்களையே இத்தகைய ஆய்வுகளுக்கு அனுப்பித் தருவது வழக்கமாக உள்ளது. எனவே, பள்ளிகளில் நிலவும் உண்மையான கல்வித் தரத்தை, கற்றல்-கற்பித்தல் சார் தேவைகளை அறிந்துகொள்ள முடிவதில்லை.

 

2005-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடம் தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களின் அளவிலும் இந்த அஸெர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவு கள் வெளியிடப்பட்டுவருகின்றன.

 

இந்த வருடம், பிப்ரவரி 8-ம் தேதி தமிழ்நாட்டைப் பொறுத்தவரையான 2012-ம் ஆண்டுக்கான அஸெர் சுற்றாய்வின் முடிவுகள் சென்னை மியூசிக் அகாதெமி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டன. தரமான கல்வி குழந்தைகளுக்குக் கிடைக்கவேண்டும், மாநிலத்தின் கல்வித்தரம் உயரவேண்டும் என்பதில் அக்கறையுள்ள, அதைநோக்கி அர்ப்பணிப்புடன் செயல் பட்டுவருகின்ற கல்வியாளர்கள், சேவை அமைப்புகள், சமூகப் பணியாளர்கள், அறிஞர்கள் அச்சு ஊடகம், ஒளி-ஒலி ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், பத்திரிகை யாளர்கள், சமூகப்பிரக்ஞை மிக்க வெகுமக்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

image002

Vசிறந்த கல்வியாளரும் தன்னளவில் முன்மாதிரி ஆசிரியராகவும், தலைமையா சிரியராகவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திறம்படப் பணியாற்றியவரு மான, தரமான கல்விக்கான தேவையை, தரமான கல்வி  சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குக் கிடைக்கவேண்டிய தேவையை வலியுறுத்தி தொடர்ந்து எழுதி வருபவருமான திரு.எஸ்.எஸ்.ராஜகோபாலன் [இவருடைய சகோதரர் திரு எஸ்.எஸ். கண்ணனும் அவருடைய துணைவியாரும் பார்வையற்ற மாணவர்க ளின் கல்விக்காக அரும்பணியாற்றியவர்கள்], எய்ட் இண்டியா என்ற அமைப்பின் தலைவரும் முன்னாள் மணோன்மணீயம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்தி தேவி அவர்கள், பத்திரிகையாளரும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவருபவருமான ’பரீக்‌ஷா’ ஞாநி, ‘தி ஹிந்து’ நாளிதழின் ஆசிரியரும், இருபதாண்டுகளுக்கும் மேலாக பொருளா தாரவியலைக் கற்பித்துவருபவரும் அது குறித்து பல எழுத்தாக்கங் களை வெளியிட்டிருப்பவருமான திரு.சித்தார்த் வரதராஜன், ’பீப்பிள்ஸ் வாட்ச்’ என்ற மனித உரிமை அமைப்பின் செயலாண்மைத் தலைவரான ஹென்றி டிபாக்னே [Mr.Henry Tipagne], எய்ட் இண்டியா அமைப்பின் தலைமை செயலாண் மைத் தலைவரும், செயலருமான திரு. பாலாஜி சம்பத், இந்த அமைப்பின் இணைச் செயலரான திரு. ரவிசங்கர் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

 

அஸெர் ஆய்வறிக்கை 2012 – சில முக்கியத் தகவல்கள் – குறிப்பாக, தமிழகத்தில் நிலவும் கல்வித்தரம் குறித்து

[ASER REPORT 2012 – Some important points to ponder with special reference to Tamil Nadu

image003

அஸெர் – 2012 சுற்றாய்வு இந்தியா முழுமையிலும் நடத்தப்படுவது. அதன் 16 மாநிலங்கள் அமைந்துள்ள 567 மாவட்டங்களைச் சேர்ந்த 16,166 கிராமங்கள் இதில் இரம்பெறுகின்றன. மொத்தம், 5,96,846 குழந்தைகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த 28 மாவட்டங்களில் அமைந்துள்ள  811 கிராமங் களை உள்ளடக்கிய அளவில்,  22844 கிராமப்புறக் குழந்தைகள் இந்தச் சுற்றாய்வில் இடம்பெற்றனர். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறும் 21 தன்னார்வ அமைப்புகளிலிருந்து 690 தன்னார்வப் பணியாளர்கள் இந்தச் சுற்றாய்வைத் திறம்பட நடத்திமுடித்தனர்.

 

1]Award Trust 2] Foundation of His Sacred majesty 3] Gramodaya Social Service Society 4] Grass Roots Foundation 5] Institute of Human Rights Education 6] Jeeva Anbalayam Trust 7] Manitham Charitable Trust 8] NEEDS Trust 9] New Life – Villipuram 10] NEWS Trust 11] Nilam Trust 12] PRESS Trust 13] Raise India Trust 14] READ Trust 15] RIGHTS Trust 16] RWDT                   17] SODEWS 18] Udhavum Manasu Trust 19] Valarum Vandavasi 20] VEPADA 21] WORLD Trust.

 

இந்த்ச் சுற்றாய்வில் ஒன்றாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளுக்கு எளிய தமிழில் ஒரு பத்தி தரப்பட்டு அதை அவர்கள் சுலபமாகப் படிக்க முடிகிறதா என்று பார்க்கப்படுகிறது. அதேவிதமாய் இரண்டாம் வகுப்பு மாணாக்கர்களிடம் எளிய ஆங்கிலப் பத்தி தரப்பட்டு அதை வாசிப்பதில் அவர்களுக்கு உள்ள தேர்ச்சி-தேர்ச்சியின்மை அறியப்படுகிறது. இரண் டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இரண்டு இலக்க கழித்தல் கணக்குகள் தரப்பட்டு குழந்தைள் கணிதப்பாடத்தில் எந்த அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள் ளார்கள் என்பது அறியப்படுகிறது.

 

மதிப்பாய்வுத் தாள் 1-ல் தமிழில் சில எழுத்துகளும், இரண்டு எழுத்துகளைக் கொண்ட எளிய சொற்களும் தரப்படுகின்றன. மதிப்பாய்வுத் தாள் 2-ல் எளிய தமிழில் பத்துவரிகளைக் கொண்ட கதையொன்றும் 4 வரிகளைக் கொண்ட இரண்டு பத்திகளும் தரப்படுகின்றன.

 

அஸெர் 2012 ஆய்வறிக்கையில் கண்டுள்ள அளவில், தமிழகத்தில் முதல் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 43.4%  மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளங்காண முடிந்தவர்களாய் இருக்கிறார்கள். இரண்டாம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளில் 43.6% மட்டுமே எளிய தமிழ் சொற்களை வாசிக்கமுடிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பில் படிக்கும்மாணாக்கர்களில் 29.9% மட்டுமே எளிய தமிழ்க் கதையை [இரண்டாம் வகுப்புப் பாடநூலில் இருக்கக்கூடிய]ப் படிக்கமுடிந்தவர்களாய் இருக்கிறார்கள்.

 

இந்தியா அளவில் எடுத்துக்கொண்டால் 3-5 வகுப்புகளில் படித்துவரும் பிள்ளைகளில் தாய்மொழியில் தரப்பட்டுள்ள எளிய பத்தியைப் படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 66.4% என்பதிலிருந்து 54% என்பதாகச் சரிவடைந்திருக்கிறது.

 

தமிழகத்தில், 3-5 வகுப்புகளில் படித்துவரும் குழந்தைகளில் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எளிய பத்தியை சரியாக வாசிப்போரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 49.2% என்பதிலிருந்து 48.9% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

 

தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட கற்றல்திறன் அளவுமட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ அதேயளவாய் [சுமார் 40% என்ற அளவில்] இருந்துவருகின்றன.

 

முதல் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 53.9% பேர் மட்டுமே 1-9 வரையான எண்களை சரியாக அடையாளங்காணக்கூடியவர்களாய் இருக்கிறார்கள்.

 

இரண்டாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 54.2% பேரால் மட்டுமே 11 முதல் 99 வரையான எண்களை சரியாக அடையாளங்காண முடிகிறது.

 

ஐந்தாம் வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் 13.0% பேரால் மட்டுமே வகுத்தல் கணக்குகளை சரியாகப் போட முடிகிறது.

 

இந்தியாவில், 3-5 வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் எளிய கழித்தல் கணக்குகளை சரியாகச் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 59.4% என்பதிலிருந்து 40.7% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

 

தமிழகத்தில் 3-5 வகுப்பில் படித்துவரும் குழந்தைகளில் எளிய கழித்தல் கணக்குகளை சரியாகச் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் 43% என்பதிலிருந்து 38.6% என்பதாகச் சரிவடைந்துள்ளது.

 

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பில் படித்துவரும் பிள்ளைகளில் 57.1% பேரால் மட்டுமே எளிய ஆங்கில வார்த்தைகளை வாசிக்க முடிகிறது.

 

கல்விபெறும் உரிமைச் சட்டத்தில் வகுத்துரைக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றுவதில் _

 

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட, தமிழகத்தில் இந்த விதிமுறைகள் அதிக அளவு பள்ளிகளில் பின்பற்றப்பட்டுவருகின்றன.

 

தமிழகத்தில் மாணவிகளுக்கான ’பயன்படுத்தத் தகுந்த அளவிலான கழிப்பறை வசதிகள் 2010-ல் 35.1% என்று இருந்த அளவு 2012-ல் 62.2% என்பதாக மேம்பட்டுள்ளது. அகில இந்திய சராசரி அளவோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் அளவுமட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக உள்ளது.

 

 

image005

தரமான கல்விக்கான தேவையையும் நடப்பில் அது குறித்த கவனமும் அக்கறையும் கிடப்பில் போடப்பட்டிருப்பதையும் குறித்து உரையாற்றிய கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், பல வருடங்களுக்கு முன்பு தான் ஒரு குக்கிராமத்தில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த காலத்தில் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாகவே இருந்ததையும், மாணாக்கர்களில் பெரும்பாலோர் முதன்முறையாக பள்ளிக்கு வரும் தலைமுறையினராக இருந்ததையும் நினைவுகூர்ந்து அதையெல்லாம் மீறி அப்போது கல்வி தரமாக அமைந்திருந்த தன்மையை, ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணியாற்றிய தன்மையை எடுத்துரைத்தார். ஆனால் இன்று பள்ளிக்கூடங்களில் முறையாகப் பயிற்சிபெற்ற ஆசிரியர்களே பணியிலமர்த்தப் படுகிறார்கள். பள்ளிகளில் மேம்பட்ட உள்கட்டமைப்புவசதிகள் இடம்பெற்றிருக் கின்றன. இருந்தும் மாணாக்கர்களின் கற்றல்-திறன்  மேம்படவில்லை என்ரு வருத்தத்துடன் கருத்துரைத்த திரு. ராஜகோபாலன் இதற்காக மாணாக்கர்களைக் குறைகூறுவது சரியல்ல என்றார். ஒர் நியாய விலைக் கடை சரியாக இயங்கவில்லையென்றால் நாம் முனைப்பாகப் போராடுவதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜகோபாலன் அதுபோலவே கல்வித்தரம் சரியாக இல்லாத போதும், பள்ளிகள் குழந்தைகளுக்கு, அதுவும்  நலிந்தபிரிவுகளைச் சேர்ந்த குழந்தை களுக்குக் கல்வி கற்பிப்பதில் முறையாக இயங்காதபோதும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என்று வலியுறுத்திக்கூறினார்.

 

அஸெர் ஆய்வறிக்கை போன்று சுயமாக, சமூகப்பிரக்ஞையுள்ளவர்களால் மேற் கொள்ளப்படும் ஆய்வின் வழியாகப் பெறப்படும் முடிவுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும், அவை தொடர்பான அத்தியாவசிய நடவடிக்கைகளை, மாற்றுவழிகளை காலந்தாழ்த்தாமல், மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று எடுத்துக்கூறிய அவர் இத்தகைய ஆய்வுகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும்போது அவை பெரும்பாலும் உண்மைநிலையை பிரதிபலிப்பதில்லை என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.  அஸெர் ஆய்வு போன்று சுயமாக சமூக அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை அரசுகள் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளாய் பாவிக்கத் தேவையில்லை என்றும், மாறாக, அரசுப்பணிகள் சிறக்கச் செய்ய உதவிபுரி வதாய் அவற்றை பாவித்து, உரிய அளவாய் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஊக்குவிக்கவேண்டும் என்றும், அவற்றின் அடிப்படையில் தேவைப்படும் மாற்றங்களைக் கல்வித்துறையில் செயல்படுத்தவேண்டும் என்றும், அப்பொழுது தான் ‘மக்கள் நல அரசு’ என்ற சொற்றொடர் அர்த்தம்செறிந்ததாக அமையும் என்றும் கருத்துரைத்தார்.

 

மேலும், எப்பொழுதெல்லாம் அரசு மாறுகிறதோ அப்பொழுதெல்லாம் அதற்கு முந்தைய அரசு கொண்டுவந்த நல்ல செயல்திட்டங்கள் கூட கிடப்பில் போடப் பட்டுவிடுகின்றன என்பதை சுட்டிக்காட்டிய திரு.ராஜகோபாலன், இந்த அணுகு முறை தவறு என்றார். அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் போதுமான அளவு இருப்பதில்லை என்று குறிப்பிட்ட திரு.ராஜகோபாலன்மாவட்ட கல்வி அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அஸெர் அறிக்கை போன்ற முன்முயற்சிக ளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுகள் ஒரு கண்காணிப்புக்குழுவை அமைக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் பள்ளிகளில் முறையான முன்னறிவிப்போடு மேற்கொள்ளப்படும் ஒரு ‘இன்ஸ் பெக்‌ஷனுக்கு மூன்று திடீரென்று முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வழிவகுக்கப்பட்டிருக்கிறது  என்றாலும்  இந்த நடைமுறை பின்பற்றப்படுவதேயில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அரசுகள் மனது வைத்தால்,அதிகாரத்திலுள்ளவர்கள் மனதுவைத்தால் கட்டாயம் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும் என்று எடுத்துரைத்தார்.

 

 

[* இன்னுமுண்டு]

Series Navigationகுழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?ஆதாமும்- ஏவாளும்.
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *