குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

This entry is part 12 of 14 in the series 28 நவம்பர் 2021

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

ண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது

எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது.

சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி

சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது

ஒட்டிக்கொண்டிருந்தபோது

போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில்

சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச் சிதறடிக்கச் செய்வதாயும்

குட்டிவிட்டுச் செல்வார்கள்.

சிலர் முதுகில் தட்டிக்கொடுக்கும் வீச்சில்

குழந்தையின் சின்ன தேகம் அதிர்வதைப் பார்த்து

அப்படி மகிழ்ந்து சிரிப்பார்கள்

ஒரு தேக்கரண்டி நீர் சிற்றெறும்புக்கு நதியா கடலா

எப்படித் தத்தளிக்கிறது….

குழந்தையின் கன்னத்தில் வலிக்கக் கிள்ளுபவர்கள்

அதை எப்போதும் கொஞ்சலென்றே சாதிக்கிறார்கள்

செல்லமே கொல்லும் வலி தரும்போது

கோப அறை குழந்தைக்குக் உயிர்வலியன்றி வேறென்ன?

குழந்தை பேசுபொருளாகும்

ட்ரெண்டிங்கில் இடம்பெறும்

ஒருநாள்

அவர்கள் குழந்தையையும் அதன் சச்சதுரக் கப்பல்களையும்

அவை மிதக்கவென அது தன்னந்தனியே எப்போதும்

ஊற்றெடுக்கச் செய்துகொண்டிருக்கும்

சிற்றோடைகளையும்

சமுத்திரங்களையும்

தங்கள் குழுப்பெருமையைக் கொண்டாடுவதற்கான

இன்னொரு இனத்தை இழிவுபடுத்துவதற்கான

கச்சிதமான கருவியாகப் பயன்படுத்த வேண்டி

சொந்தங்கொண்டாடத்தொடங்குவார்கள்.

அப்பொழுதும் அவர்களுடைய இறுக்கமான அணைப்பிலிருந்து

திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை.

 

Series Navigationசெட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *