கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)

This entry is part 3 of 45 in the series 2 அக்டோபர் 2011

 


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

செர்நோபிள் ஒரு விதி விலக்கு ! நிபுணருக்கும், மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

சி. ஜெயபாரதன்

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ! ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள்.  அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது.  அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனையாகிப் போனது.  மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ?  21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன !

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி  தேவையான தீங்கு  என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி  வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள  இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.   அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக்  கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து.  வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின்  சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.

அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.  மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நிர்ப்பந்த விதி இதுதான்:  பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.  வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.  செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.  பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.  செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

கடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல் வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்குவது ஒன்றும் புதிய விஞ்ஞான முறை யில்லை.  ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்பு நீக்கி இரசாயனச் சாலைகள் எண்ணற்றவை சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.  அனுதினமும் ஆயிரக் கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது.  உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது.  இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது.  ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?  செத்துப்போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா ?  நமக்கு முதலில் வேண்டியது நீர்வளம்.  அதற்கு அடுத்தபடிதான் மீனினம்.  அப்படி வேறு வழிகள் இருப்பினும் நீர் வெள்ளத்தைக் கொண்டு வரச் சிக்கனச் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்க வேண்டும்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.  சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான்.  அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை.  அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை.  அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பிற்போக்குத் தன்மை அது.

அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் வால் முளைக்குது,  ஏழாம் விரல் முளைக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்,  மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும்.  அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.   உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்படுத்தப்பட்டு புளுடோனியம் பிரித்தெடுக்கப் படுகிறது.  அந்தப் புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கி அணு உலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விபரங்களை << தேசீயப் பாதுகாப்பு இரகசியமாக >> [National Security Secret] வைத்துள்ளது.  தெருவில் போவோனுக்குத் << தேசீயப் பாதுகாப்பு >> என்று சொன்னால் என்ன புரியும் ? ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன.  பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து.  பிரம்மாண்டமான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன.  அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை.  அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்?

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=htmlஅசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலைமிரட்டல்கள், தாக்கல்கள்

+++++++++

<< கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர். >>

<< இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன. >>

<< இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார். >>

<< அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.  இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது >>

+++++++++

நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன்படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

“இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”

கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளிவரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரிலிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடுகிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!  சென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான்! பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மூன்று அல்லது நான்கு சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.

பாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின்சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங்களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய முன்வர வேண்டும்.

Russian VVER & Chernobyl Reactors

தகவல்:

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=htmlஅசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG
(Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants – கடல் நீரிலிருந்து குடிநீர் – திண்ணைக் கட்டுரை]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

10 Picture Credit: The Hindu

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 1, 2011)  R- 2

Series Navigationஆத்மாவில் ஒளிரும் சுடர்கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

3 Comments

  1. Avatar
    Kalai says:

    This author has a very short vision as he is a specialist in Atomic energy, he supports this. I am sure that he is not from South Tamil Nadu. Why he is not talking about alternative energy (Solar & Wind). Koodankulam is densely populated area. Why don’t they pick another place which is free from people?
    Even USA is now considering natural energy (think about it..here in US we get much less Solar energy than India). When you compare the number of atomic stations with US, you must see how far is the power station from city.

    When we talk about accidents, number of people die in once incident of road accidents is nothing when compared to one incident of atomic accidents. Also the aftermath effects cannot be reverted. They are just doing some test runs, but more cases of cancer are getting reported(I lost 3 of my close relatives recently to this deadly tumors and more than 10 others in my small village with in 1km radius – these are known cases to me..there may be more – My relatives live in a village very close to Kerala).

    Don”t think for short term. What are we going to leave for our future generations? If your children or grand children have to live in Koodankulam for generation after generation, will you still support?

    If sea water gets polluted and the fishes die, the authors answer is to get fish away from the plant. What a stupid you are. If you keep dumping more salt, won’t it affect teh whole environment at one point of time.

    Your views are it is good only if you live comfortably..you don’t worry about your surrounding, your future generations and even your neighbors.

  2. Avatar
    ஜெயபாரதன் says:

    திருப்பூரில் வேலைநிறுத்தம் : ரூ. 60 கோடி அளவிற்கு பாதிப்பு

    http://www.dinamalar.com/News_detail.asp?Id=411647

    திருப்பூர் : மாநிலத்தில் நிலவி வரும் தொடர்மின்வெட்டை கண்டித்தும், தடையில்லா மின்சாரத்திற்கு கூடங்குளம் அணுமின் உøலையை உடனே திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் தொழிற்பாதுகாப்புப் படை சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.

    பெட்டிக்கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தங்களது போராட்டம் 90 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்பாதுகாப்புபடை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய ஒருநாள் வேலைநிறுத்தத்தின் மூலம், ரூ. 40 கோடி அளவிற்கு பனியன் உற்பத்தியும், ரூ. 20 கோடி அளவிற்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொடர்மின்வெட்டு காரணமாக, ரூ. 30 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பனியன் சில்லரை வர்த்தகத்தில் ரூ. 25 கோடி அளவிலும், பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரிவில் ரூ. 35 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கோவையில் கல்வீச்சு – 12 பேர் கைது: மின்வெட்டை கண்டித்தும், கூடங்குளம் அணுமின் உலையை உடனே திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை, பல்லடம், அவிநாசி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டது. கோவையில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கிராஸ்கட் பகுதியில் திறந்திருந்த 4 பேக்கரி, 1 ஹோட்டல் உள்ளிட்ட 12 வர்த்தக நிறுவனங்கள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *