கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?

author
0 minutes, 38 seconds Read
This entry is part 3 of 8 in the series 1 மார்ச் 2020

கோ. மன்றவாணன்

      இலக்கியக் கூட்டமோ அரசியல் கூட்டமோ எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்குப் பேசுகின்ற ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது கைதட்டல் ஓசையையே! கைதட்டல் இல்லாமல் ஒரு கூட்டம் முடிகிறதென்றால் அது இரங்கல் கூட்டமாக இருக்கலாம். அங்குக் கூட இறந்தவரின் இணையற்ற பெருமைகளைப் பேசுகின்ற போது கைதட்டிப் போற்றுவோரும் உண்டு.

      பின்மாலை நேரங்களில் நடைபெறும் சில இலக்கியக் கூட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கைதட்டல் ஓசை கேட்கிறது. அதைப் பாராட்டின் அத்தாட்சியாகக் கருத முடியாது. அந்தக் கை ஓசைக்குள் கொசுக்கள் ஒன்றிரண்டு இறந்துபோய் இருக்கலாம்.

      அறிஞர்களின் பேச்சில் ஆய்வு முடிவுகள் நிரம்பி வழியும். அவர்களுக்குக்  கைதட்டல்கள் கிடைப்பதில்லை.

      கைதட்டல் எதிர்பார்த்துச் சில செய்திகளைச் சொல்லும்போது அவ்வாறு கைதட்டல் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பேச்சாளரின் முகமும் அகமும் தளர்ந்துவிடுகின்றன. அதன்பின் அவர்பேச்சில் அவருக்கே சுவாரசியம் ஏற்படுவதில்லை.

      பிரபலமானவர்கள் எது பேசினாலும் கைதட்டும் மக்கள் உண்டு. ஒரு கல்லூரியில் ஒரு நடிகர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். அதற்கே மாணவர்கள் குரல்கோஷமும் கரகோஷமும் எழுப்பினர். அவர் வணக்கம் சொன்னார். அதற்கும் கைதட்டல்கள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்துச் சிரித்தார். அதற்கும் கைதட்டல்கள். விதவிதமாய்க் கனைத்துக் குரலைச் சரிசெய்து கொண்டார். அதற்கும் பேரோசையோடு கைதட்டல்கள். அவர் எது பேசினாலும் கைதட்டல்தான் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

      “என் ரத்தத்தின் ரத்தமான கழக அடலேறுகளே” என்று மக்கள் திலகம் எம்ஜிஆர் சொல்லி முடிப்பதற்குள் எழும் கைதட்டல் ஓசை அடங்குவதற்கு இரண்டு மூன்று நிடமிடங்கள் ஆகலாம். மேடைப் பேச்சால் தமிழையும் தமிழகத்தையும் கட்டி ஆண்ட கலைஞர் அவர்கள், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று கரகரபிரியா ராகத்தில் சொன்னதும்… கைதட்டல் ஓசையோடு உணர்ச்சி வெள்ளம் கரைபுரளுவதைக் கண்டு உணரலாம். இப்படியாக ஒவ்வொரு தலைவருக்கும் தமக்கே உரிய தொண்டர்களை விளிக்கும் விதத்தை விதந்தோதுகின்றன கைதட்டல்கள்.

      தெருமுனைகளில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்கேற்கிற பேச்சாளர்கள், உச்சக்குரலில் தம்கட்சித் தலைவர்களின் பெயர்களைச் அடிக்கடி உச்சரிப்பார்கள். அந்தத் தலைவர்களின் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் கட்டாயமாகக் கைதட்டல்கள் வெடியோசைக்கு இணையாக ஒலிக்கும். அந்தப் பேச்சாளர்களின் அரிய கருத்துகளுக்கு… வாதத் திறனுக்குக் கைதட்ட,  அந்தத் தொண்டர்கள் அறிந்திருக்கவில்லை.

      சில பேச்சாளர்கள் இருக்கிறார்கள். சங்கக் கவிதையை மடமடவென மனப்பாடமாகப் பொழிவார்கள். அதைக்கேட்ட கூட்டத்தினர் கைதட்டுவார்கள். ஆனால் அந்தக் கவிதையின் வார்த்தைகள் கூட அவர்களின் செவிகளில் தெளிவாகச் சேர்ந்திருக்காது. அந்தக் கவிதை அவர்களுக்குப் புரிந்திருக்காது. ஆனாலும் கைதட்டுவார்கள். எனக்குத் தெரிந்த  ஒரு பேச்சாளர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதிதாசன் கவிதையைச் சொல்வார். கவிதையின் முழுவரிகளையும் 48 வரிகள் 64 வரிகள் என முழுமையாகச் சொல்வார். ஒருசொல்லுக்கும் அடுத்துவரும் சொல்லுக்கும் இடையே இடைவெளி இல்லாதவாறு புல்லட் ரயில் வேகத்தில் சொல்லுவார். கேட்பவர்களுக்கு ஒன்றுமே புரியாது. ஆனாலும் கைதட்டுவார்கள். சில பேச்சாளர்கள் எந்தக் கூட்டமானாலும் எந்தத் தலைப்பு என்றாலும் கபிலர் சொன்ன 99 மலர்களின் பெயர்களை ஒப்பிப்பார்கள். அண்மையில் ஒரு கூட்டத்தில் நன்றியுரை ஆற்றியவரும் 99 மலர்களை ஒப்பித்ததைக் கேட்டேன். அவர்கள் சொன்ன மலர்களின் பெயர்களில் ஒன்றைக்கூட அதைக் கேட்டவர்கள் திருப்பிச் சொல்ல முடியாது. தெளிவாக இடைவெளிவிட்டுப் புரியும்படி சொன்னால்தானே மலர்களில் ஒரு பெயரையாவது திருப்பிச் சொல்ல முடியும். மூச்சிரைக்க… மூச்சிரைக்க… மலர்களின் பெயர்ப்பட்டியலை அவர் சொல்லி முடித்ததும் எழும் கைதட்டல்கள், “கூட்டத்தில் ஏதாவது கலாட்டவா?” என்று அரங்கின் வெளியில் இருப்பவர்களைத் திடுக்கிட வைக்கும். இவையெல்லாம் பேச்சாளர்களின் மனப்பாட ஆற்றலை வெளிப்படுத்துமே தவிர, கேட்போர் மனதில் அந்தக் கவிதை வரிகளோ அவற்றின் பொருளோ சென்று சேராது. இந்தப் பேச்சாளர்கள் இப்படி மனப்பாடமாக மழையென ஒப்பிக்கும் போது… சற்று இடைமறித்து, அந்தப் பாடலின் 20 ஆவது வரியிலிருந்து சொல்லுங்கள் என்றோ அல்லது விட்ட இடத்திலிருந்து தொடருங்கள் என்றோ கூறிப் பாருங்கள். தடுமாறுவார்கள். மீண்டும்  தொடக்க வரியிலிருந்து சொன்னால்தான் அவர்களால் அந்தக் கவிதையை முழுமையாகச் சொல்ல முடியும். பள்ளிக்கூடத்தில் ஏ,பி,சி,டி யை வரிசை ஒழுங்கோடு சொல்லும் மாணவனைத் திடீரென்று ஓ விலிருந்து சொல் என்று சொன்னால்… அவனால் வரிசையாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது மனப்பாடம்.

      நீண்ட கவிதைகளைச் சொல்லி அவையினரை வியப்பில் ஆழ்த்துவதைவிட, அக்கவிதையிலுள்ள அவசியமான முக்கிய இரண்டு மூன்று வரிகளை மட்டும் சொல்லுணர்த்தி பொருளுணர்த்தி, நயமுணர்த்திச் சொல்லிப் பாருங்கள். அக்கவிதை வரிகள் அவையினரின் மனங்களுக்குள் தென்றலென உட்சென்று நிரம்பும். அக்கவிதை வரிகள் அப்படியே உள்செல்லாவிட்டால்கூட, அதன்பொருள் நிச்சயமாகக் கேட்போரின் நெஞ்சத்துக்குள் மஞ்சமிட்டுக்கொள்ளும். இப்படிச் சொல்லும் போது கைதட்டல்கள் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் பேச்சின் பொருள் மக்களிடம் சென்றடையும்.

      இன்னும் சில பேச்சாளர்கள், அழகாகத் தமிழில் பேசிக்கொண்டே வருவார்கள்…. திடீரென இரண்டு மூன்று வாக்கியங்களைச் சொல்லிடைவெளி இன்றி ஆங்கிலத்தில் படபடவென்று பொரிந்து தள்ளுவார்கள். ஆங்கிலம் தெரியாத கூட்டத்தினர் அதிசயித்துக் கைதட்டுவார்கள். என்ன புரிந்து கைதட்டினீர்கள் என்று அவர்களைக் கேட்டால் உதட்டைத்தான் பிதுக்குவார்கள்.

      பேச்சு என்பதே தன் சிந்தையில் தோன்றிய கருத்தை, அவையில் கூடியுள்ள நூற்றுக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் கொண்டு சேர்த்து, அவர்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டும். தன்னுடைய புலமையை தன்னுடைய மனப்பாட ஆற்றலை வியந்து பார்க்கச் செய்வதால், அவையினருக்கு என்ன பயன்?

      தன் நண்பர் பேசும் போதுமட்டும் கைதட்டும் நண்பர் குழாம் உண்டு. மற்றவர்கள் எவ்வளவு அழகாக அறிவாகப் பேசினாலும் கைதட்ட மாட்டார்கள். சாதி பார்த்து… கைதட்டுவோரும் உண்டென்கின்றனர் சிலர். கைதட்டவே ஆட்களை அழைத்து வருவோரும் உண்டாம்.

      கூட்டத்தில் கைதட்டல் எழுந்தவுடன் அனிச்சைச் செயலாகக் கைதட்டுவோரே இங்கு அதிகம் உண்டு. முதலில் கைதட்டலைத் தொடங்கி வைத்தவரே அசலான ரசிகராக இருக்கலாம். இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் என்ற அமுதபாரதியின் ஹைக்கூ கவிதையைப்போல் இந்தக் கைதட்டல்களில் எந்தக் கையோசை முதலாவது என்று அறிய முடியுமோ?

      அரங்கத்தில் பேச்சாளர் பேசிக்கொண்டிருப்பார். சிலர் அலைபேசிகளில் விரல்நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் கைதட்டல் ஓசையைக் கேட்டவுடன் அனிச்சை செயலாக ஒரு கையால் தங்களின் தொடையைத் தட்டுவார்கள். இன்னொரு கையில்தான் அலைபேசி இருக்கிறதே! சிலர் ஒப்புக்கு மெல்லக் கைதட்டுவார்கள். அதன்ஓசை அவர்களுக்கே கேட்காது. சிலர் விருப்பமே இல்லாமல் அவைநாகரிகம் கருதிக் கைதட்டுவது போன்று ஒரு பாவனை செய்வார்கள்.

      நொறுக்குத் தீனி தின்னுகிற போதிலோ தேநீர் அருந்துகிற போதிலோ எந்தப் பேச்சாளர் என்ன பேசினாலும் கைதட்ட இயலாமல் போகிற சூழலும் நிகழும்.

      கல்லூரிகளில் மாணவர்கள் விடாது கைதட்டுவார்கள். அது பாராட்டு அல்ல. “பேச்சை நிப்பாட்டு” என்பதற்கான கட்டளை. நெடுநேரக் கைதட்டலைத் தமக்கான பாராட்டாகக் கருதி மேலும் பேச்சை இழுக்கும் பேச்சாளர்களின் அறியாமையை இன்றும் கண்டு சிரிக்கலாம்.

      எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் கைதட்டல் பெறுவதற்காகவே வாட்ஸப் ஜோக்குகளையும் குட்டிக்கதைகளையும் அடுக்குமொழி போல் இருக்கும் பொன்மொழிகளையும் மனப்பாடம் செய்துவந்து  தம்பேச்சில் கலப்படம் செய்யும் பட்டிமன்றப் பேச்சாளர்கள் உண்டு.

      “இதற்கெல்லாம் கைதட்ட மாட்டீர்களா” என்றும்- “இதற்கு உற்சாகமாகக் கைதட்டுங்கள்” என்றும்- கைதட்டலைக் கேட்டு வாங்குகிறப் பேச்சாளர்களும் உண்டு.

      மாயதந்திர நிகழ்ச்சி நடத்துபவர்களும் சாலைகளில் வித்தை காண்பிப்பவர்களும் அடிக்கடி கைதட்டச் சொல்வார்கள். நம் கவனத்தைத் திசைதிருப்பவே அப்படிச் சொல்லுகிறார்களோ என்னவோ. அந்தக் கைதட்டல் வேளையில் அவர்களின் தந்திர வேலைகள் நிறைவேறிவிடலாம்.

      இத்தகைய கைதட்டல்களையும் தாண்டி மெய்யாகவே எழும் கைதட்டல்கள் உண்டு. சமூக மேன்மைக்காகவே தன்பேச்சைப் பயன்படுத்தும் பேச்சாளர்களுக்கு அத்தகு கைத்தட்டல்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. நல்ல கருத்துகளையும் நயமான வெளிப்பாட்டுத் தன்மையையும் நாம் கைதட்டி வரவேற்பதே அந்தப் பேச்சாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. கைதட்டல் இல்லையென்றால் கழைக்கூத்துக் கலைஞர்களால் கயிற்றின் மீது நடக்க முடியுமா எனக்கேட்பதில் உளவியல் நுட்பங்கள் வெளிப்படும்.  அந்த உளநுட்பங்கள் பேச்சாளர்களுக்கும் பொருந்தும்.

      பேச்சுக்குக் கிடைக்கின்ற உடனடிப் பாராட்டுப் பத்திரம் கைதட்டல்தான். கைதட்டலுக்கு மயங்காத மகிழாத பேச்சாளர்களே இல்லை. தனக்குப் பல்லாயிரம் பொன்முடிப்புக் கொடுத்தாலும் தன் பேச்சுக்குக் கிடைக்கின்ற கைதட்டலுக்கு இணையாகாது என்பதைப் பேச்சாளரின் உள்மனம் ஒப்புக்கொள்ளும்.

      கைதட்டல்கள் பல உண்டு. மெய்யான கைதட்டல்கள் எவையென்று எந்தப் பேச்சாளரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை என்பது ஒரு செளகரியம்தான்.

      ஆனால்…

      எல்லாப் பேச்சாளர்களுக்கும் ஒரு கைதட்டல் நிச்சயம். அது, “வாய்ப்பளித்தமைக்கு நன்றிகூறி இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்… நன்றி வணக்கம்” என்பதற்குக் கிடைக்கும் கைதட்டல். இவ்வளவு அழகாகப் பேசினாரே என்பதற்கான கைதட்டலா அல்லது இத்துடன் முடித்தாரே என்பதற்கான கைதட்டலா என்பதை யாரறிவார்?

Series Navigationபுத்தகங்கள்நெம்பு கோல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *