கொள்ளெனக் கொடுத்தல்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

 

அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல டீசர்ட்டையும் அணிந்திருந்தார். சற்றே அழுக்காய் தெரிந்தார்.

அந்த இடத்தில் அவர் தேடியது கிடைக்கவில்லை போல! அவ்விடத்தை விட்டு மெல்ல அகன்று சற்று தள்ளியிருந்த விளையாட்டுத் திடலின் அருகே சென்றார். அவர் நடையில் மெல்லிய நடுக்கம் இருந்தது. திடலில் இருந்த காலி இருக்கைகளை உற்றுப் பார்த்தார். அதன் மேல் விழுந்திருந்த ஒன்றிரண்டு காய்ந்த இலைகளை கைகளால் தள்ளி விட்டு அதில் அமர்ந்தார்.

பிள்ளைகளெல்லாம் பள்ளியினுள்ளே சென்றுவிட்ட அந்த வெயில் கூடிய மதிய பொழுது மிகவும் அமைதியாக இருந்தது. காற்று கூட எதையும் கலைத்துவிடாதபடிக்கு மிக லேசாய் வீசிக் கொண்டிருந்தது. ஏனோ என்னால் அவரை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. சற்று நேரம் எதையோ யோசித்து விட்டு பின் அங்கிருந்து பார்வையால் தரையைத் துழாவியபடியே மறுபடி பள்ளிக்கு அருகே வந்தார். முன்பு பார்த்த இடத்திலேயே திரும்பவும் தேடினார்.

எனக்கு அவரைப் பார்க்கும் போது என் அப்பா ஞாபகம் வந்தது. அப்பாவிற்கும் ஏறக்குறைய இவர் வயது தான் இருக்கும். இவரைப் போலவே இப்போது அவரும் உடல் மெலிந்து, கறுத்துப் போய் லேசாக கூன் போட்டிருந்தார். முதுமையில் அனைவரும் ஒரே சாயலைக் கொண்டு விடுவார்கள் போல!

அப்பாவிற்கு இன்று எப்படியும் தொலைபேசிவிடவேண்டும் என்று நினைத்தபடி மாடிப்படிகள் தொடங்கும் இடத்தில் எழுதப்பட்டிருந்த உடல்நலம் தொடர்பான வாக்கியங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது “அம்மா!” என்ற குரல் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினேன். அந்த பெரியவர் என்னருகே நின்றுக் கொண்டிருந்தார். கண்களில் பசியும் தயக்கமும் தெரிந்தன. உதடுகள் துடித்தபடி இருந்தன. கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். காசு கேட்கப் போகிறார் என்று தோன்றியது.

இது போன்றவர்களை நான் சில நேரங்களில் எதிர் கொள்வதுண்டு. ஒருமுறை தேக்கா செல்ல பேருந்து எடுக்க போகும் வழியில் திடீரென்று எதிர்பட்ட பதின்ம வயது பெண் ஒருத்தி “ஆன்டி, தயவு செய்து ஐந்து வெள்ளிகள் இருந்தால் கொடுங்கள்! வீட்டிற்கு போவதற்காக வைத்திருந்த காசை தொலைத்துவிட்டேன்!” என்றாள். அவளது குரலுடன் சேர்ந்து  கண்களும் கெஞ்சின. பள்ளிப்பையுடன்  களைத்துப் போய் நின்றபடியிருந்த அவளது தோற்றம் கையிலிருந்து சில வெள்ளிகளைக் கொடுக்க வைத்தது. அதே போல எங்கள் வீட்டினைக் கடந்து செல்லும், மனநலம் குன்றிய தோற்றம் கொண்ட ஒருவர், எப்போதாவது நின்று “ஒரு வெள்ளி கொடுங்கள்!” என்பார், என்னவோ கொடுத்து வைத்ததைக் கேட்பவர் போல.

ஒரு முறை ஒரு தோழியைப் பார்ப்பதற்காக மார்சிலிங் சென்று திரும்பும் போது காசிற்காக கெஞ்சிக் கொண்டிருந்த மூதாட்டியைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். அவர் என் அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் வசிப்பவர். விடியற்காலையில் தகர டப்பாக்களைப் பொறுக்கி, எங்கிருந்தோ கிடைக்கும் அட்டை பெட்டிகளையெல்லாம் சேகரித்து, வாரம் ஒரு முறை அதை காரங்குனியிடன் போட்டு பணம் பெற்றுக் கொள்பவர். பக்கத்தில் இருந்த கோப்பிக் கடையில் மேஜையைத் துடைக்கும் போது பார்த்திருக்கிறேன். அவ்வப்போது சேர்ந்துப் போகும் செய்தித்தாள்களை அவருக்குக் கொடுத்தால் அதைக் கூட மிகுந்த தயக்கத்தோடு பெற்றுக் கொள்வார். அதைத் தவிர வேறு எதை கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார். இதற்கு பிரதிபலனாக சீனப் பெருநாளின் போது மறக்காமல் அங்க் பாவில் இரண்டு வெள்ளிகள் வைத்துக் கொடுப்பார்.  அன்று அவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றினாலும் என்னை அங்கே பார்த்தால் அவர் சங்கடப் படக்கூடும் என்று தோன்ற வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றேன். அதன் பிறகு பார்த்த போது கொடுத்த காசைக் கூட அவர் என்னிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை.

பெருவிரைவு ரயில் நிலையம்  செல்லும் வழியில் டிஷ்யூ தாள்கள்  வைத்தபடி அமர்ந்திருக்கும்  வயதானவர்களுக்கும் நான் அவ்வப்போது ஏதாவது செய்வதுண்டு.  எங்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரும் போது அவர்களுக்கு ஐந்து வெள்ளிகளோ, பத்து வெள்ளிகளோ கொடுப்போம். கோவில் உண்டியலில் போடுவதை விட இதில் போடுவது மேல் என்பது என் கருத்து. கடவுளுக்குச் செய்ய, நான் இல்லாவிட்டாலும் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த முதியவர்களுக்கு நான் கொடுக்கும் சில வெள்ளிகள் அவர்களது அன்றைய தினத்தில் ஒரு சிறிய மாற்றத்தையாவது  ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

“ஏம்மா, என் கண்ணாடியை  எங்கனயோ வச்சுட்டேன்! நீ பார்த்தியாம்மா!” என்றார் அந்த பெரியவர். கண்ணாடியைத் தான் இவ்வளவு நேரம் தேடிக் கொண்டிருந்தாரோ! அவர் இதுவரை தேடிய இடங்களை என் கண்களால் துழாவிய படியே “இல்லையே!” என்றேன். அவர் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றினார்.

“காலையில இங்கன தாம்மா தமிழ் முரசு படிச்சுகிட்டு இருந்தேன். எப்பவும் படிச்சுட்டு பத்திரமா பையில வெச்சிடுவேன். இன்னிக்கு என்னவோ ஞாபகம். எங்கேயோ வச்சுட்டேன். வயசாயிடுச்சுன்னா இது ஒரு பிரச்சனை! எல்லாம் மறந்திடுது!”

“ம்ஹீம்…! எம்மவன் கிட்ட மறுபடி கேட்கோணும்! இதை வாங்கிக் கொடுக்கும் போதே படிச்சு படிச்சு சொன்னான். அவனை விட அவென் கட்டிகிட்டு வந்தது தான் அதிகம் பேசும்… ம்ஹீம்! அவங்களும் பாவம்! எவ்வளவு தான் மத்தவங்களுக்கு செய்யமுடியும். ஒரு வயசுக்கு மேல எதுவும் முடியறது இல்லை. யாரையாவது எதிர்பார்க்கத் தொடங்கினோம்னாலே பிரச்சனை தான். அவங்கள என்ன சொல்றது? எம் மறதிய சொல்லோணும்!” நான் அங்கே இல்லையென்றாலும் இதையெல்லாம் தனியாகவே சொல்லிக் கொண்டிருந்திருப்பார். அவரது அப்போதைய தேவை கேட்பதற்கு இரு காதுகள் மட்டும் தான் என்று தோன்றியது.  “எங்கனயாவது பார்த்தா சொல்லும்மா!” என்றார் தயக்கத்துடன்.

அவர் இன்னும் என் முகத்தைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தது வித்தியாசமாய் இருந்தது. அவர் உண்மையாக கண்ணாடியைத் தொலைத்தார் என்று எனக்கு தோன்றவில்லை. காசு கேட்க கூச்சப்படுவது போல தெரிந்தது.

“ஏதாவது சாப்பிட்டிங்களாப்பா!” என்றேன்.

“இன்னும் இல்லைம்மா! மருமவளும் மவனும் வேலைக்குப் போனதும் பசியாறிட்டு கீழே இறங்கினேன். கூட்டாள்களோட பேசிட்டு, பேப்பர படிச்சுட்டு அதோ அந்த விளையாட்டுத் திடல் பக்கமா கொஞ்ச நேரம் லாத்திட்டு வந்தேன். நடுவுல எங்க வச்சேன்னு தெரியலை!”

உலகெங்கும் பெற்றோர்களின் நிலை இது தான் போல. அனைவரும் எதையும் பேச யோசித்தபடி இருக்கிறார்கள். என் பெற்றோர் கூட எங்களின் படிப்பிற்காக இருந்த அனைத்தையும் செலவு செய்துவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்த வீட்டிலிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் ஒரே நிம்மதி. அவர்களுக்கு எனது அண்ணன் செலவு செய்யத் தயாராக இருந்தாலும் அண்ணிக்கு விருப்பம் இல்லை. அவர்களும் மற்றவர்களிடம் கேட்க கூச்சப்பட்டுக் கொண்டு ஒரே பெண்ணான என்னிடமும் வாங்க முடியாமல் தயக்கத்துடன் காலம் தள்ளுகிறார்கள். இவர் வீட்டிலும் இதே நிலை தான் இருக்க வேண்டும். என் அப்பாவே “ஏதாவது இருந்தா கொடும்மா! ரொம்ப பசிக்குது..!” என்று கையேந்தி நிற்பதாய் தோன்றியது எனக்கு.

“இதை வச்சிக்கோங்க! முதல்ல போயி எங்கேயாவது சாப்பிடுங்க! பிறகு தேடிக்கலாம்!” என்றபடி ஐந்து வெள்ளிகளை அவர் கையில் கொடுத்தேன். “இல்லைம்மா காசெல்லாம் வேண்டாம்!” என்றார் பதறியபடி. கையேந்துவது கண்டுபிடிக்கப் பட்டதில் ஏற்பட்ட பதட்டம் அவர் உடல் மொழியில் தெரிந்தது.

என் கணவராயிருந்தால் இப்படி கொடுப்பதைத் தடுத்திருப்பார். “எல்லாம் காசுக்காக சொல்ற பொய். காசு கொடுத்து கொஞ்ச நேரம் கழிச்சுப்  பாரு, எங்கேயாவது தண்ணி குடிச்சுட்டு சாய்ஞ்சு கிடப்பார்” என்பார். இவர் அப்படி செய்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். உண்மையிலேயே பசியாயிருந்து நான் அதை கடந்து போவதை விட, ஏமாந்து போவது பரவாயில்லை என்று தோன்றியது.

அதற்கு மேலும் அவர் தர்மசங்கடத்துடன் மறுப்பதைக் கேட்கும் தெம்பு எனக்கிருக்கவில்லை.  “பரவாயில்லை! வச்சிக்கோங்க!” என்று அவரை மேலே பேச விடாமல், பலவந்தமாய் அவர் கைகளில் அந்த வெள்ளிகளைத் திணித்துவிட்டு, மேலும் பேச்சைத் தவிர்க்க, பள்ளியின் வாயிலை நோக்கி நகர்ந்தேன். அவர் முகம் உணர்ச்சிக் குழப்பத்தில் இருந்தது. வயதான என் பெற்றோரின் அருகில் இருந்து கவனித்துக் கொள்ளாத மன குறுகுறுப்பை  இப்படி தீர்த்துக் கொள்கிறேனோ!

அவர் தனக்குள்ளே ஏதோ பேசியபடி தளர்ந்த நடையோடு, அடுக்குமாடி குடியிருப்புகளினூடாக நுழைந்து என் பார்வையிலிருந்து மறைந்தார். என் அப்பாவிற்கே உணவு பரிமாறியது போல எனக்கு நிம்மதியாய் இருந்தது.

பள்ளியின் கேட் திறக்கும் ஒலி கேட்டு நடப்பிற்கு வந்தேன். பிள்ளைகளை விடத் தொடங்கினார்கள். அம்மாவைப் பார்த்ததும் இந்தக் குழந்தைகளின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி! இப்படித் தானே ஒருகாலத்தில் என் தாயும் என்னை எதிர்பார்த்து பள்ளியின் வாயிலில் காத்து கிடந்தார். அப்படி இருந்தவருக்கு என்னால் செய்ய முடிந்தது தான் என்ன? இப்போது பார்த்த பெரியவரும் இப்படித் தான் தன் பிள்ளையைப் படிக்க வைத்திருப்பார். இதை அவருடைய பிள்ளை யோசிப்பானா?

என்னைப் பார்த்ததும் என் மகள் வேகமாய்  ஓடி வந்து கட்டிக் கொண்டாள். மூன்று மணி நேரம் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி. பள்ளியை விட்டு வெளியே வந்த குழந்தைகளும் அவர்களை அழைக்க வந்தவர்களுமாக அந்த இடம் கலகலத்துப் போனது. என் பெண் பள்ளிப் பையை என்னிடம் கொடுத்து விட்டு தன் நண்பர்களுடன்  விளையாடத் தொடங்கினாள். நான் அந்த விளையாட்டை ரசித்தபடி நின்றேன். என் பெண்ணிற்கு பிற்காலத்தில் தன் பெற்றோரைப் பற்றிய அக்கறை நிச்சயம் இருக்கும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

அனைத்து பிள்ளைகளையும் அனுப்பி முடித்த ஆசிரியர்கள், பள்ளியின் கேட்டை மூடிக் கொண்டிருந்தார்கள். “யாரோ வெளியே இதை மறந்து வைத்துவிட்டார்கள் போல! காலையில் இஸபெல்லின் அம்மா என்னிடம் கொடுத்தார்.” என்று அவர்களில் ஒருவர் சொல்வது கேட்க, அவசரமாய் உள்ளே எட்டிப் பார்த்தேன். அவர்களின் கையில் பழுப்பு நிறச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடி. ‘அடடா! இது தான் அந்த பெரியவர் விட்டுச் சென்ற மூக்குக் கண்ணாடியா? அப்படித் தான் இருக்க வேண்டும்!”

“நான் பார்க்கவில்லையென்று சொல்லி அதோடு நிறுத்தியிருந்தால் இந்தப் பள்ளிக்கு வந்து விசாரித்திருப்பாரே!”

நான் அவரை வலிய திசைத் திருப்பி விட்டேனோ  என்ற குற்றவுணர்ச்சி அழுத்தத் தொடங்கியது. “எங்கனயாவது பார்த்தா சொல்லும்மா!” என்ற அவரது குரல் காதில் ஒலிக்க, அவசரமாய் அவர் சென்று மறைந்த திசையை கண்களால் தடவினேன். எப்படியாவது அவரைப் பார்த்து இந்த கண்ணாடி இங்கே இருப்பதைச் சொல்ல வேண்டும் என்று என் மனம் பரபரக்கத் தொடங்கியது.

Series Navigation
author

ஹேமா

Similar Posts

Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    மதிப்பிற்கு உரிய ஹேமா அவர்களுக்கு,

    கதையை முடித்தவிதம் நன்றாக இருக்கிறது. நாம் சில சமயம் மற்றவர்களைப்பற்றித் தவறான முடிவுக்கு எப்படி வந்துவிடுகிறோம், எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.

Leave a Reply to ஒரு அரிசோனன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *