க.நா.சு.வும் நானும்

This entry is part 11 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் க.நா.சுப்ரமண்யம் என்ற பெயரையே முதன் முதலில் அறிந்தது தமிழ் நாட்டில் அல்ல. ஒரிஸ்ஸாவில். ஹிராகுட் அணைக்கட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில மாதங்களி.ல். 1950-ன் ஆரம்ப மாதங்களிலோ அல்லது சற்றுப் பின்னோ. அப்போது எனக்கு வயது 17. எனக்கு ஆறு அல்லது ஏழு வயது மூத்தவரும், எனக்கு அந்த புதிய மண்ணில் புதிய வாழ்க்கையின் ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த செல்லஸ்வாமி என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருக்கு அடுத்த வீட்டில் இருந்த ஜனார்தனம் என்பவர் தன் விதவைத் தாயுடனும் பத்து வயதுத் தங்கையுடனும் இருந்தார். அவர்களுடனும் பேசிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். அவருடைய விதவைத் தாயும்  என்னிடம் பிரியமாக இருப்பார்.

 

ஜனார்தனம் வீட்டிற்கு அமுத சுரபி வந்து கொண்டிருந்தது. அவ்வப்போது அங்கு செல்லும்போது அமுதசுரபியும் எனக்குப் படிக்கக் கிடைக்கும். ஒரு முறை ஒரு வருட சந்தா கட்டினால் ஒரு புத்தகம் இலவசம் என்று விளம்பரம் வந்ததன் பயனாக வந்த இலவச புத்தகம், க.நா.சு. எழுதிய “ஒரு நாள்” என்ற நாவல்

 

அப்போதெல்லாம் கிடைத்தது எதையும் படித்து வைப்பேன். ஒரு நாள் என்ற  அந்த நாவல், அதுகாறும் நான் படித்திருந்த நாவல்கள் எதனிலிருந்தும் வித்தியாசமான கதையும் எழுத்தும் கொண்டதாக இருந்தது. அதற்கு முன் வித்தியாசமான என்ற வகையில் சேர்க்கக்கூடிய  எழுத்தை நான் படித்தது சி.சு. செல்லப்பாவின் மணல்வீடு என்ற சிறுகதைத் தொகுப்பும், புதுமைப் பித்தன் இறந்த போது கல்கியில் வெளிவந்திருந்த கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற கதையும் தான். ஆனால் நாவல் என்று பார்த்தால் ஒரு நாள் தான் வித்தியாச மான ஒரு வாழ்க்கையை, உடன் நிகழ் கால வாழ்க்கையை கண் முன் நிறுத்திய நாவல். சாதாரண மனிதர்கள், ஒரு கிராமம். அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்பு. ஒரு நாள் நிகழ்வு. உலக மெல்லாம் சுற்றி அலைந்த மூர்த்திக்கு அமைதியான அந்த கிராமத்து வாழ்க்கையும் மனிதர்களும் அர்த்தமுள்ளதாகவும், தன் வாழ்வும் இனி அந்த கிராமத்து மனிதர்களிடையே தான் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. உலகம் சுற்றியது போதும், இனி அங்கு பார்த்த பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டு இங்கேயே தங்கிவிடலாம் என்று தன் மாமாவிடம் சொல்லி விட்டுப் போகிறான்

 

இந்த மாதிரியான எழுத்து எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. இது போன்ற நாவலையோ எழுத்து பாணியையோ க.நா.சு வின் ஒரு நாள் நாவலுக்கு முன் நான் படித்ததில்லை. சிறு வயதிலிருந்து நான் கிடைப்பவற்றையெல்லாம் படித்து வந்திருக்கிறேன். அனேகமாக 12 வயதில் தற்செயலாகக் கிடைத்த வேத நாயகம் பிள்ளையிலிருந்து ஆரம்பித்து வாரா வாரம் வீடு தேடி வந்த கல்கி, எஸ்.வி.வி, லக்ஷ்மி வரை எல்லாம் தான். அவற்றில் படிக்கும் சுவாரஸ்யம் தவிர . வேறு நினைப்புகள் இருந்ததில்லை. பின்னர் 1950 வாக்கில் மு.வ.. அப்போதெல்லாம்  அதிகம் பேசப்பட்டவர்கள் மு.வ.வும் கல்கியும் தான். மு.வ. கதை சொல்வதற்கும் பாத்திரங்கள் பேசுவதற்கும் கையாண்ட தமிழ் கொஞ்சம் வேடிக்கையாகவும் செயற்கையாகவும் இருந்தது. அவ்வளவே. ஆனால் ஒரு நாள் எனக்கு புது மாதிரியான எழுத்தாக இருந்தது. . அடுத்து கலைமகள் பிரசுரம் மூலமாக க.நா.சு.வின் பொய்த் தேவு, சர்மாவின் உயில். இரண்டும் கிடைத்தன. பொய்த்தேவு தவிர மற்றவற்றில் கதை என எதுவும் அழுத்தம் பெறவில்லை. மனிதர்களும் அவர்கள் வாழ்க்கைத் தேர்வும் அது பற்றிய விசாரங்களுமே நிறைந்திருந்தன. விசாரங்கள் இருந்தாலும் மனிதர்கள் உயிர்ப்புடன் நம் முன் உலவினார்கள். அப்போதோ ஜான் ஸ்டெய்ன் பெக்கின் (John Steinbeck)- ன்  Pasteurs of Heaven என்ற நாவல் படித்த ஞாபகம். கலிஃபோர்னியாவில் ஒரு கிராமத்தில் பலதரப்பட்ட மக்களையும் அவர்கள் வாழ்க்கை யையும் சித்தரித்த நாவல் அந்த சமயத்தில் செல்லஸ்வாமியிடம் இருந்த Andre Maurious –ன்   Call No Man Happy என்ற சுயசரிதமும் படித்த நினைவு. ஆனால் அது ஒரு தனி உலகம் என்று மனம்  பிரித்து வைத்துக்கொண்டது. நாடும் கலாசாரமும் சரித்திரமும் வேறல்லவா! .

 

அதே சமயம் ரா.ஸ்ரீ தேசிகனோ இல்லை பேராசிரியர் கே. ஸ்வாமி நாதனோ சரியாக நினைவில் இல்லை, கலைமகள் பத்திரிகையில் என்று நினைக்கிறேன். அக்கால கட்டத்திய தமிழ் எழுத்துக்களில் தனக்குப் பிடித்தவற்றை குறிப்பிட்டிருந்தார். அவற்றில், புதுமைப் பித்தனின் கதைகளையும், க.நா.சுப்ர மண்யனின் பொய்த்தேவு, சர்மாவின் உயில் போன்றவற்றையும் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சிலர் இருந்திருப்பார்கள். எனக்கு நினைவு இல்லை அப்போது தான் ரகுநாதன் தன் சாந்தி பத்திரிகையில் கல்கி எழுத்தின் வெகுஜன கவர்ச்சியைப் பற்றி எழுதியது எனக்கு பிடித்துப் போயிருந்தது.

 

1956-ம் வருட கடைசியில் நான் தில்லிக்கு வேறு வேலை தேடிப் போய்விட்டேன். அங்கு ஹோட்டலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வாசக சாலையில் கிடைத்த சுதேசமித்திரன் பத்திரிகையில் க.நா.சு அன்றைய தமிழ் நாவல் இலக்கியம் பற்றியும் சி.சு. செல்லப்பா தமிழ்ச் சிறுகதையின் அன்றைய நிலை பற்றியும் எழுதி ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தார்கள். .தமிழில் வெற்றி பெற்ற நாவலாசிரியர்கள் என்று தன்னையும் சேர்த்து மூன்றே பேர்கள்  மற்ற இருவர் ந. சிதம்பர சுப்பிரமணியமும் ஆர். ஷண்முக சுந்தரமும் தான் என்பது க.நா.சு.வின் முடிபு. அவர் குறிப்பிட்டிருந்த நாவல்கள் ந.சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், ஆர் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் என்று எனக்கு நினைவு. க.நா.சுவினது அன்று மிகவும் அறியப்பட்டது பொய்த் தேவு ஆகும் வெற்றி பெற்றோர் மூவரில் தன்னையும் அவர் சேர்த்துக்கொண்டது கேலியாக பேசப்பட்டது. யாருமே படிக்காதவர்கள் இம்மூவரும் என்பது எதிர் தரப்பின் பலத்த வாதம். இதெல்லாம் பழைய கதை. முதன் முறையாக க.நா.சு. இலக்கியத் தரம் என்று ஒன்று இருக்கிறது அதற்கான குணங்கள் வேறு. வாசகப் பெருக்கம் அதற்கு உதவாது வியாபாரத்துக்கு உதவலாம் என்று அன்றைய தமிழ் எழுத்தில் ஒரு புதிய சம்வாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது தான் எனக்கு ஒரு நாள், பொய்த் தேவு போன்ற நாவல்களும் சிறுகதையில் தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிருதம், ரகுநாதன், புதுமைப் பித்தன் போன்றோரின் சிறுகதைகளும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு பிரவாஹமாக பாய்ந்து செல்வதை உணர்ந்தேன். மாறு பட்டிருப்பதை முதலில் எனக்கு உணர்த்தியது 1950-ல் எனக்குப் படிக்கக் கிடைத்த க.நா.சு.வின் ஒரு நாள் தான். அது ஒரு பிர்வாஹமாகும் என்று படிப்படியாக பின் வருடங்களில் உணர வைத்தது அவருடைய எழுத்துக்களும் சுதேசமித்திரன் தொடங்கி அவர் உருவாக்கிய விமர்சன சம்வாதம் தான்.

 

அன்று வரை எல்லாமே படிக்கப்பட்டன, சகட்டு மேனிக்கு. நல்லது கெட்டது, தரமானது தரமற்றது என்ற பாகுபாடின்றி. தெரிந்த ஒரே பாகுபாடு படிப்போர் எண்ணிக்கையின் லக்ஷங்களைப் பார்த்து.

 

இது ஒரு தொடக்கமே. சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு என்று க.நா.சு விட்டு விடவில்லை. தொடர்ந்து சுதேசமித்திரனில் இடம் கிடைத்த வரை எழுதினார். செல்லப்பாவும். இவர்கள் எழுத்தைக் கண்டனம் செய்வோர் எண்ணிக்கையில் பிராபல்யத்தில் அதிகம் என்பதாலும் இது ஒரு இயக்கமாகத் தொடர்ந்ததாலும் தமிழில் இந்த புதிய பார்வை வேரூன்றியது. சுதேசமித்திரன் கிளப்பிவிட்ட சர்ச்சை அங்கு தொடராவிட்டாலும் சரஸ்வதி பத்திரிகை அவருக்கு இடமளித்தது. அதைத் தொடர்ந்து 1959-ல் செல்லப்பா இனி மற்ற பத்திரிகைகளை நம்பிப் பயனில்லை என்று  எழுத்து இதற்கென ஒரு தனி பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். செல்லப்பாவே பின்னர் இரண்டு மூன்று இடங்களில் சொன்னது போல, இலக்கியத் தரம் என்ற ஒன்றை விமர்சனம் இல்லாது ஸ்தாபித்துவிடமுடியாது, தரமற்றது தானே அழியும், தரமானது என்றோ ஒரு நாள் தன்னைத் தானே ஸ்தாபித்துக்கொள்ளும், கால வெள்ளம் இதையெல்லாம் சரிசெய்துவிடும் என்று நம்பி இருப்பது சரியில்லை என்று சொல்லிச் சொல்லி முதலில் இதில் நம்பிக்கையில்லாத செல்லப்பாவையும் விமரிசனத்தில் தீவிரமாக ஈடுபடச் செய்தது க.நா.சு. குளவி கொட்டக் கொட்ட செல்லப்பாவும் குளவியானார்.

 

இன்று 2012-ல்  விமர்சனம் என்பது சாதாரண விஷயமாகிவிட்ட காரணத்தால் அறுபது வருடங்களுக்கு முந்திய நிலையைச் சொன்னால் நம்புவது கஷ்டமாக இருக்கும். விமர்சனம் என்பதோ, சாதகமாகவோ பாதகமாகவோ அபிப்ராயங்கள் சொல்வது பண்பற்ற காரியமாக பொதுவாக நம்பப் பட்டது. அகிலனின் ஆலோசனையின் பேரில் அவர் சார்ந்திருந்த திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம், ”ஒரு நூலை, ஆசிரியரை பாராட்டாவிட்டாலும் பழித்துப் பேசும் பண்பாடற்ற காரியத்தைச் செய்ய வேண்டா மென்று இந்த எழுத்தாளர் மாநாடு கேட்டுக்கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றியது. இது ஆண்டு 1959 அல்லது 1960-ல் நடந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே உரை விளக்கம் சொல்லும், இலக்கண வகை சொல்லும் மரபு தான் இருந்ததே தவிர ஒரு செய்யுள் கவிதையாகும் விந்தையைப் பற்றிப் பேசினதே இல்லை. ஆக தமிழ் எழுத்தாளர் விமர்சனத்தை வேண்டாத காரணம் வியாபாரம் கெடுவதற்கும் மேலாக அது தமிழ் மரபு அறியாத ஒன்றாகவும் இருந்தது சௌகரியமாகப் போயிற்று.

 

ஆக வரலாற்றிலேயே இல்லாத ஒன்றை புதிதாக ஸ்தாபிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது மனிதர்களின் விருப்பு வெறுப்புக்களை, சுபாவங்களைப் பொறுத்த விஷயம். விஞ்ஞானத்தில் அது சம்பந்தப்பட்ட Nature அல்லது Scientific American-ல் ஒரு முறை எழுதினால் போதும். அது உலகம் முழுதும் படிக்கப் படும் அவரவர் தனித்த பரிசோதனைகளில் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். நிராகரிப்பும் அங்கீகரிப்பும் வேறு எந்த அன்னிய சார்புமற்ற அதனதன் துறை சார்ந்த விதிகளுக்குட்பட்டு நடக்கும். தலைமுறை தலைமுறையாக, ஊர் ஊராக பிரசாரம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இலக்கிய . விமர்சனம் அத்தகைய விதிகளுக்கு உட்பட்டதல்ல. அதற்கு இடைவிடாத 40 – 50 வருட தொடர்ந்த இயக்கம் தேவை யாயிருந்தது. இன்னமும் விமர்சனத்தை சகஜமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழில் விளைந்துள்ளதாகச் சொல்ல முடியாது.

 

1956 சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அவர் ஆரம்பித்ததை தன் கடைசிமூச்சு பிரியும் வரை, 1988 டிஸம்பர் வரை, திரும்பத் திரும்ப சொல்ல இடம் கிடைத்த வற்றிலெல்லாம் சந்தப்பங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். அவரோடு 1956-ல் இணை சேர்ந்த சி.சு.செல்லப்பாவும் தான். அவர் சுதேசமித்திரனில் தனக்குக் கிடைக்கும் இடம் போதாதென்று எழுத்து என்னும் பத்திரிகையும் தொடங்கினார். க.நா.சு. வும் செல்லப்பாவும் இணைந்து நடத்திய பிரசாரம் என்று தான் சொல்ல வேண்டும்.

 

க.நா.சு தமிழ் இலக்கியத்தின் தரம் பற்றி நாவல் மட்டுமல்ல, சிறுகதையையும் சேர்த்துக்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றவர்களாகக் கூறிய எட்டு பத்து பேர்களில் அவர் தன்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அவரைத் தாக்கி எழுதியவர்கள் யாரும், சிறுகதைகளில் வெற்றி பெற்றவராகத் தன்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அவரும் ஏதோ சுய வெறுப்பு விருப்பு அற்று சில இலக்கிய அடிப்படைகளை வைத்துத்தான் சொல்கிறார் என்று யாருக்குமே கவனிக்கத் தோன்றவில்லை. கவனிக்க விரும்பவும் இல்லை. அதை வெகு சௌகரியமாக மறந்தும் ஒதுக்கியுமே பேசினார்கள். அவர் தன்னை ஒதுக்கிக் கொள்ளட்டும், எங்களை எப்படி ஒதுக்கலாம் போற்றி அல்லவா புகழவேண்டும் என்பது அவர்கள் கட்சி.

 

அந்த ஆரம்ப வருடங்களில் க.நா.சு.வுக்கு எழுதக் கிடைத்த பத்திரிகைகள் தமிழில் எழுத்து, சரஸ்வதி இரண்டும் தான். ஆனால் அவர் ஆங்கிலப் பத்திரிகைகளிலும், இதையே விடாப்பிடியாக எழுதி வந்தார். .QUEST. THOUGHT என்ற இரு பத்திரிகைகள். இந்த ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியதால் அவர் ஒரு அமெரிக்க ஏஜெண்ட் எனக் கண்டு பிடித்தனர். யார்? ரஷ்ய ஏஜெண்டுகளாக இருந்த முற்போக்கு எனச் சொல்லிக் கொண்ட ஒரு கட்சித் தொண்டர்கள்.

 

சுத்த காங்கிரஸ் பத்திரிகையான சுதேசமித்திரன், எழுத்து, பின் முற்போக்கை அணியைச் சேர்ந்த சரஸ்வதி யில் எழுதுபவர் எப்படி அமெரிக்க ஏஜெண்ட் ஆனார் என்றெல்லாம் யோசிக்க அவர்களுக்குக் கவலை இல்லை. பாமர, வணிக எழுத்துக்களை பாமர வணிக எழுத்து என்று சொன்னால்,  அது எப்படி அமெரிக்க ஏஜெண்டின் காரியம் ஆகும்?, க.நா.சு.வை வேலைக்கமர்த்தி, கல்கி, அகிலன் போன்றோரை இலக்கியத் தரமற்றவை என்று எழுதச் சொல்லித் தூண்டுவதில் அமெரிக்காவுக்கும் சி.ஐ.ஏ.க்கும் என்ன அக்கறை என்பதையும் அவர்கள் விளக்க வில்லை. எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தில் தனக்குப் பிடிக்காதவரை, தான் பதில் சொல்லத் தெரியாவிட்டால் அமெரிக்க ஏஜெண்ட் என்று வசை பாடலாம் என்ற ஒரு புதிய போர்த் தந்திரம் அப்போது தான் உருவானது கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த எழுத்தாளர்களின் கண்டு பிடிப்பு இது. இதில் வேடிக்கை என்னவென்றால் கட்சிக் கொள்கையென தீர்மானம் நிறைவேற்றப் பட்டுவிட்டது போல அவர்கள் எல்லோரும் ஊர்வலத்தில் கோஷம் இடுவது போல, என்ன? ஏது?, உண்மையா? என்றெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்கு. கட்சியில் எல்லோரும் சொல்கிறார்கள். நாமும் சொல்லித் தான் ஆகவேண்டும் என்ற நியதி.

 

காரணம் அன்றைய தமிழ் எழுத்து உலகின் சூழலில் எது பற்றியும் அபிப்ராயம் பரிமாறிக்கொள்வது என்ற விமர்சன சூழலே இருந்ததில்லை. க.நா.சு அப்போது சொல்லி வந்தது போல, விமர்சனம் இல்லாது, எழுதப்படுவது எல்லாம், வணிக ரீதியாக வெற்றி பெற்று பிராபல்யம் பெற்றது எல்லாம் இலக்கியம் என்ற மிக சௌகரியமான வெகுஜன மரபு ஆழ வேரூன்றியிருந்தது. வசூலில் வெற்றி என்றால் கலைவெற்றி என்ற தமிழ் சினிமா மரபு போல.

 

இலக்கியப் பிரக்ஞை என்ற சிந்தனையே இல்லாது இருப்பது தமிழ் இலக்கியத்தில் அதன் தொடக்க காலத்திலிருந்தே வருவதுதான். எந்த நூல் பற்றியும், இலக்கண ஆராய்வும் பொருளடக்கமும் தான் பேசப்பட்டதே ஒழிய அது இலக்கியமாக வெற்றி பெற்றுள்ளதா, என்ற விசாரணையே தொன்று தொட்டு இருந்த தில்லை.

 

முதன் முதலாக எந்த எழுத்தையும் விமர்சித்தல் என்பது நிகழ் கால தமிழ் எழுத்தில் தான் தொடங்கியது. அதைத் தொடங்கியது க.நா.சு. இப்படி மரபில் இல்லாத ஒன்றை, தனக்கு சௌகரியம் இல்லாத ஒன்றைத் தமிழ் எழுத்துலகம் ஏற்றுக்கொள்வது மிகச் சிரமமான காரியம். அதிலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றவர்களதும், பெரும் பிராபல்யம் பெற்றவர்களதும், அது தரும் சுகங்களை அனுபவிப்பவர்களதும், எழுத்து எல்லாம் இலக்கியமல்ல என்று சொல்லப்படுமானால், அது எத்தகைய பலமற்ற ஒரு சிலரிடமிருந்தே கிளம்பும் குரல் என்ற போதிலும், பலத்த எதிர்ப்பையும் விரோதத்தையும் சம்பாதித்துத் தந்தது.

 

அந்தக் காலங்களில் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாக இருந்த அ.ச.ஞானசம்பந்தம், மு. வரதராசன் போன்றோர், இலக்கியத் திறன், இலக்கிய மர[பு என்றெல்லாம் பேசத் தொடங்கிய போதிலும் அவர்கள் மாணவர்களுக்காக எழுதிய

பாட புத்தகங்களில் தற்கால இலக்கியம் பற்றி கடைசியில் பேசுவதாக எந்த அபிப்ராயமும் சொல்லாத நாலு வரிகள் எழுதியிருப்பார்கள். நினைவிலிருந்து சொல்கிறேன். “புதுமைப் பித்தன், கல்கி, விந்தன், மாயாவி, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சிறுகதைகள் எழுதி இத்துறையைச் சிறப்பித்து மகிழ்ந்தார்கள்.,,,,” இந்த ரகத்தில் இருக்கும். இவர்கள் பேராசிரியர்கள். தற்கால இலக்கியம் கற்பிக்க பாடப் புத்தகம் போல எழுதியவர்கள்.

 

விமர்சனம் என்ற துறையே தமிழில் முதன் முதலாக தொடங்கியது க.நா.சு. எழுத ஆரம்பித்த பிறகு தான். அவர் தன்னையும் விமர்சித்துக்கொண்டார். தன் சக எழுத்தாளர் களையும் விமர்சித்தார். விமர்சிக்கத் தொடங்கியதோடு சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், அவை யெல்லாம் மறக்கப்பட்டு விமர்சகர் என்ற லேபிளே அவருக்கு ஒட்டப்பட்டது. இது ஒரு பரிதாபகரமான விளைவு. அது பற்றி அவர் கவலை ப்படவில்லை என்பது வேறு விஷயம்.

 

ஆனால் சோகம் என்னவென்றால், விமர்சனம் என்ற மரபே தமிழில் அது வரை இல்லாத காரணத்தால், பெரும் வாசகப் பெருக்கத்தைக் கொண்ட எழுத்தாளர்கள் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டது அவர் எதிர்பார்த்தது தான் . அது இயல்புதான். ஆனால், யார் யாருடைய எழுத்துக்களின் இலக்கிய அங்கீகாரத்துக்காக அவர் வாதிட்டாரோ, அவர்களே கூட அதை வரவேற்கவில்லை. “நல்ல நாவல் கதைன்னு எழுதீண்டு இருந்தவர் ஏனோ இப்படி விமர்சனம் பண்றேன்னு கிளம்பி பேரைக் கெடுத்துக்கறார்”: என்றோ அல்லது “இதெல்லாம் நம்ம வேலை இல்லை. காலம் அதைப் பாத்துக்கும். என்னத்துக்கு வீணா இவர் பழி சுமக்கணும்” என்றோ தான் அவர்களது எதிர் வினையாக இருந்தது. அவரைக் கேலி செய்தவர்களும் இந்த வட்டத்தில் உண்டு. வேடிக்கை என்னவென்றால் இப்படிச் சொன்னவர்கள், கேலி செய்தவர்கள் எல்லாம் க.நா.சு.வின் விமர்சன இயக்கத்தால் தான் இலக்கியத் தரம் கொண்ட எழுத்தாளர்களாக இனம் காணப்படார்கள். க.நா.சு வால் இலக்கியத் தரமற்ற எழுத்து என்று ஒதுக்கப்பட்டவர்கள் தூற்றுதலை விட, அவர் ஏற்றுக்கொண்ட இலக்கிய எழுத்துக்காரர்ளின் அலட்சியப் பேச்சே தமிழில் விமர்சனம் என்றோ இலக்கிய மரபு என்றோ ஏதுமற்றிருந்த நிலைக்கு சாட்சியம் சொல்லும். நான் சிலபெயர்களைக் குறிப்பிட்டால் ஆச்சரியமாக இருக்கும். ”விமர்சனம் எதுக்கு? காலம் பார்த்துக்கும்” என்று சொன்னவர்களில் ந. பிச்சமூர்த்தியைக் காணலாம். க.நா.சு.வைக் கேலி செய்தவர்களில் பி.எஸ். ராமையாவைக் காணலாம். சிட்டியைக் காணலாம்.  க.நா.சுவைக் காட்டமாகத் திட்டியவர்களில் ஜெயகாந்தனையும் காணலாம். ஜெயகாந்தன் எழுதத் தொடங்கியபோது அவரது பிராபல்யத்தை மீறி அவரது இலக்கியத் தரத்தைப் பற்றிச் சொல்லிப் பாராட்டிய முதல் குரல் க.நா.சு.வினது. இத்தகைய அலங்கோலத்தில் இருந்தது அன்றைய தமிழ் எழுத்துலகம். க.நா.சு.வை மறைமுகமாகத் தாக்கும் ”உண்மை சுடும்” என்ற ஜெயகாந்தனின் முன்னுரையைப் பார்க்கலாம். “சுடவில்லை, உண்மை யல்லாததால்” என்று க.நா.சு. வேறிடத்தில் பதிலளித்திருந்தார். யாராயிருந்தால் என்ன, புகழுரைகள் தான் இனிக்கும்.

———————————————

Series Navigationநம்பிக்கை ஒளி! (6)அவம்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

10 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    #யாராயிருந்தால் என்ன, புகழுரைகள் தான் இனிக்கும்.#

    எக்காலத்திலும் மாறாத உண்மை…

  2. Avatar
    K A V Y A says:

    ஒரு இலக்கிய விமர்சகனைத் திட்டக்காரணம் என்னவென்று கண்டிபிடிப்பது ரொம்ப சிம்பிள்: எ.காவாக, ஒரு நாவல் இலக்கியத்தரம் வாய்ந்ததென்று இவன் எப்படிச் சொல்கிறான்? எங்கு எவர் ஒரு நல்ல நாவலுக்கு இலக்கணம் சொல்லியிருக்கிறார் முதலில்?

    ஒரு மரபுக்கவிதை யாப்பிலக்கணத்தைக்கொண்டு எழுதப்படுகிறது. அவ்விலக்கணம் தவறும்போது அக்கவிதையை விமர்சிப்பார்கள். ஒரு நாவலை எந்த அடிப்படையில் இலக்கியத்தரமென்று விமர்சிப்பார்கள் ? இந்த கநாசுவே இலக்கியத்தரத்துக்கு அளவுகோலைக் கண்டிபிடித்தாரா? He has just banked upon his reading in Eng lit / lit criticism and showed it to Tamilians. Like our Kollywood directors or musicians copy Hollywood. If you read his book on Tamil lit criticism, (he released one), you will know how cleverly lifts from Eng lit critical tradition.

    இலக்கியத்தரமென்று ஒன்று கிடையாது. எது எனக்குப் பிடிக்கிறதோ, அல்லது எழுதியது எனக்குப் படிக்கும்போது இன்புற வைத்ததா (இதை இலக்கிய இன்பம் எனலாம்) அப்படியானால் எனக்கு அந்நாவலோ அக்கவிதையோ இலக்கியத்தரம் வாய்ந்தது. அவ்வளவுதான். அதே சமயம் இன்னொருவருக்கு அப்படி தராது. எனவே அஃது இலக்கியத்தரமில்லாததாகலாம். அவருக்கு படிக்க அந்நாவல் இலக்கியம் இன்பம் தராவிட்டால்.

    இப்படி ஆளாளுக்கு வேறுபடும் சப்ஜக்டிவ் (subjective) கருத்தை, பொதுவெளியில் வைத்து இஃதே உலக இலக்கிய இரசனையாளரின் – இங்கே தமிழ் இலக்கிய இரசனையாளர்களின் – கருத்தாகும் என்பது திமிர்தானே?

    //யாராயிருந்தால் என்ன, புகழுரைகள் தான் இனிக்கும்.// சுத்த கப்சா. As explained below:

    கநாசுவுக்கு இலக்கியத்தரம் எது என்பது எப்படித்தெரியும்? இதுதான் தரம் அதுவன்று என்று தான் கருதுவதை ஏன் பொதுவெளியில் வைத்தார்? If u say he has a right to public space for his criticism, we hav a right to call it travesty of public opinion.

    He was rightly attacked for his temerity.

    இதற்குப் பதில் சொல்லவும்.

  3. Avatar
    இளங்கோ says:

    காவ்யா தரமில்லையென்று எத்தனையோ படைப்புகளை விமர்சிக்கிறார். எப்படி? தனக்குத் தோன்றும் அளவுகோளில்தானே?
    பொதுவெளியில் வைக்கத்தேவையில்லையெனில் விமர்சிப்பதே எதற்கு?

    1. Avatar
      K A V Y A says:

      இளங்கோ கேட்டதற்கு முதலில் ஒரு பிக் தேங்க்ஸ்.

      நான் மட்டுமன்று; கநாசு மட்டுமன்று; பலரும் தங்கள் விமர்சனங்களைப் பொது வெளியில் வைத்துப் பார்ப்பவர்களே. தான் எழுதுவது பிறர் படித்து எப்படி உணர்கிறார்கள் என்பது சமூகத்தில் மனிதனுக்கு இறைவன் வைத்த ஒரு அடிப்படை ஆசை.
      இதுவரை சரி. இதற்குமேல்…

      பொதுவெளியில் வைப்போர் தம் விமர்சனம் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என நினைத்து இறும்பூதெய்யக்கூடாது; அவ்விமர்சனம் எதிர்க்கப்பட்டால், கோபம் கொளல்; சொன்னவரை இழிவுபடுத்திப்பேசுதல், அல்லது அதீதிய சோகம் கொண்டு தற்கொலை செய்தல் அல்லது புலம்பல் கூடாது.

      கநாசு கொஞ்சமே இப்படி ரீஆக்ட் கொடுத்தார். சாமிநாதன் கொடுப்பதைப்பாருங்கள் இளங்கோ. கநாசுவின் விமர்சனத்தை விமர்சனம் செய்வோரை எப்படி நோக்குகிறார் எனபதைப்பாருஙகள். என்னவோ அவர்கள் அப்படிச் செய்யக்கூடாதென்றும் கநாசு சொல்லுக்கு மறு சொல்லிருக்ககூடாதென்றும் சாமிநாதன் நம்மைப்புரிய வைக்கிறார்.

      One writes his criticism and allows others to read his views. He can wait to know their reactions. But he shdnot react to their reactions. A critic should plough a lonely furrow and then keep godly silence. He can intervene only when his views are distorted / misrepresented or misunderstood.

      My criticism of poems here is my own thoughts or reactions. The last person I respect is the thinnai reader. I don’t bother about what he thinks about my criticism. It is arrogance but such arrogance is essential for a literary critic. A godly indifference to you, the thinnai reader. Only where I feel he has not properly understood my views. Dont try to please anybody; you will end up a-sorrowing. He who pleases everybody, pleases nobody. Precisely !

  4. Avatar
    Dr.G.Johnson says:

    தமிழில் விமர்சனங்களை எழுத்தாளர் முதல் வாசகர்வரை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதிலும் நமது பிரபலமான எழுத்தாளர்கள் தங்களின் படைப்பை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை என்றே கருதுகின்றனர். ஜெயகாந்தன்கூட தனது குறுநாவல்களின் தொகுப்பில் என் நூலுக்கு முன்னுரை எழுத யாரும் தேவையில்லை எனெக் கூறி தானே முன்னுரை எழுதியுள்ளார். இதுபோன்ற நிலையில்தான் மு.வாவும், அகிலனும் மற்றவர்களும் இருந்துள்ளனர் என்பதை இக் கட்டுரை வழியாக அறிந்து வியப்புற்றேன்.
    சிறுகதையும் நாவலும் எப்படி மேல்நாடுகளில் பிரபலமாகி நமக்கு வந்ததோ, அதுபோன்றுதான் விமர்சன இலக்கியமும். விமர்சனமும் திறனாய்வும் இன்னும் நம்மிடையே ஆர்வத்தை உண்டுபண்ணாதது ஒரு முக்கிய காரணமோ என்னவோ தெரியவில்லை.
    ஆனால் மேல்நாடுகளில் இந்தக் கலை எங்கோ சென்றுவிட்டது. அங்கு விமர்சனத்துக்கு விமர்சனம் எழுதப்படுகிறது. டேன் பிரவுன் எழதிய டா வின்சி கோட் எனும் பிரபல நூலுக்கு இதுபோல் விமர்சனத்துக்கு விமர்சனமும் அதற்கு வேறொரு விம்சர்சனமும் நூல்களாக வெளிவந்தன! அத்தகைய பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது அந்த நூல்!
    பொதுவாக ஆங்கில நூல்களைப் பார்த்தால் முதல் பக்கத்திலோ அல்லது பின்பக்க அட்டையிலோ நூலைப்பற்றிய பிரபலமான பத்திரிகையாளர்களின் மதிப்புரைகள் ஓரிரு வரிகளில் அச்சிடப்பட்டிருக்கும். நூலை வாங்குவோர் பலர் அதைத்தான் முதலில் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் நம்மிடம் அதுபோல் இல்லை. நூல் எழதுவோர் வெளியீடு செய்யும் விழாவில் ஓரிருவர் வாழ்த்திப் பேசுவர். அதுதான் நூல் விமர்சனம்!
    தமிழ் இலக்கியம் சிறந்தோங்க வேண்டுமெனில் நல்ல விமர்சனங்கள் நிச்சயமாக தேவை. வெறும் புகழ்ச்சியில் மயங்கும் படைப்பாளரின் எழுத்து கால ஓட்டத்தில் நிலை நிற்காது.
    ” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பார் இலானும் கெடும். “…குறள் . . டாக்டர் ஜி. ஜான்சன்.

  5. Avatar
    R.Karthigesu says:

    க.நா.சு. தொடங்கி வைத்த இந்த விமர்சன மரபினால் இன்றைய தமிழ்ப் புனைவு இலக்கியத்தில் “தீவிர இலக்கியம்” என்றும் “வெகுஜன இலக்கியம்” என்றும் இரண்டு பெரும் பிரிவுகள் உருவாகியுள்ளன. லேபல்களைத் தலையில் ஒட்டிக் கொள்வதில் தீவிர இலக்கியமே ரொம்பத் தீவிரமாய் இருக்கிறது. “தீவிர இதழ்கள்” என்ற லேபலிலும் பல இதழ்கள் வருவது தெரிந்ததே.

    இந்தத் தீவிர இதழ்களில் மட்டும்தான் இன்று விமர்சனங்கள் வருகின்றன. ஆகவே விமர்சிக்கத் தகுந்தவை இவை மட்டுமே என்ற ஒரு கருத்தும் உருவாகியிருக்கிறது. ஆகவே “இலக்கியம்” என்பது இந்தத் “தீவிர” பிராண்டைப் பொறுத்ததுதான் என்றும் ஆகியிருக்கிறது.

    ஆனால் எல்லாம் ஒரு சிறு (elite) குழுவினர் ஆடும் விளையாட்டுப் போலத்தான் தெரிகிறது. இலக்கியத்தை இன்புறுதலுக்காகப் படிக்கும் வாசகனுக்கு இந்த விளையாட்டில் நாட்டமில்லை. அவன் தனக்கென வாசிக்கத் தேர்ந்தெடுக்கின்ற படைப்புக்கள் இந்த விமர்சனங்களைச் சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவு.

    ரெ.கா.

  6. Avatar
    K A V Y A says:

    விமர்சகர்கள் எழுதியதை சட்டை செய்யத் தேவையில்லை. சட்டை செய்தால் அவர்கள் இமாலய உயரத்துக்குத் தன்னை கற்பனை பண்ணி குரங்குச்சேட்டைகள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
    விமர்சனக்கலை என்ற சொல்லையே எதிர்க்கிறேன். ஆங்கிலத்தில் இலக்கிய விமர்சனம் உண்டு. அதற்கு விகுதிகளும் சிலர் வகுத்தனர். (I A Richards in his Principles of Literary Criticism. Empson in his Seven Types of Ambiguity). அதே சமயம் ஆங்கிலேயர் விமர்சனத்தை ஒரு கலையென்றழைப்பது கிடையாது. அவ்விதிகளைச் சட்டைசெய்யாமல் தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக; அல்லது தான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறாதிருக்க என்ற நினைப்பில் விமர்சனம் எழுதியோர் நிறைய பேரங்கே. அப்படிப்பட்ட ஆங்கிலேயர் ஒருவர் இப்படிப்பட்ட விமர்சகர்களைப் பற்றி என்ன சொல்கிறார் ? இவர்கள் என்னதான் எழுதட்டும், இறுதி முடிவு வாசகனிடமே. அவனே தீர்ப்பு சொல்லும் நீதிபதியாவான்.

    “… I rejoice to concur with the common reader; for by the common sense of readers uncorrupted with literary prejudices, after all the refinements of subtilty and the dogmatism of learning, must be finally decided all claim to poetical honours”

    இதுவே தமிழுக்கும் பொருந்தும்.

    1. Avatar
      R.Karthigesu says:

      விமர்சனம் (criticism) கல்விக்கூடங்களில் ஒரு கலைத்துறைப் பாடம் என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம். மொழியும், வரலாறும், சமுகவியலும் சில பல தலைப்புக்களை எடுத்துக்கொண்டு அலசுவது போல இலக்கியத்தை அலசலாம். அதுவும் ஒரு நல்ல பயிற்சியே. ஆனால் இது பொதுவாக இலக்கியத்தின் தரத்தை நிர்ணயப்படுத்தும் அளவுகோலாக ஆக்கப்படக்கூடாது. க.நா.சு. அப்படி ஆக்கினார். அதுதான் கோளாறாகிப் போனது. தங்களுக்குப் பிடிக்காத சில எழுத்தாளர்களைப் புறந்தள்ளுவதற்கு இது ஒரு ஆயுதமாக அமைந்தது. பொதுவான வாசகர்களால் போற்றப்பட்ட கல்கி, அகிலன், மு.வ. போன்றோரை எள்ளிநகையாட இந்த ஆயுதம் பயன்பட்டது.

      ஆனால் நான் மேற்சொன்ன மூவரும் எல்லா சீரியஸ் எழுத்தாளர்களையும் காலத்தால் வென்று நிற்கிறார்கள். எந்தப் புத்தகக் கடை அடுக்குகளில் பார்த்தாலும் இந்த நிதர்சனம் முன்னிற்கும்.

      ரெ.கா.

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        // ஆனால் எல்லாம் ஒரு சிறு (elite) குழுவினர் ஆடும் விளையாட்டுப் போலத்தான் தெரிகிறது. இலக்கியத்தை இன்புறுதலுக்காகப் படிக்கும் வாசகனுக்கு இந்த விளையாட்டில் நாட்டமில்லை. அவன் தனக்கென வாசிக்கத் தேர்ந்தெடுக்கின்ற படைப்புக்கள் இந்த விமர்சனங்களைச் சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவு.

        ஆனால் இது பொதுவாக இலக்கியத்தின் தரத்தை நிர்ணயப்படுத்தும் அளவுகோலாக ஆக்கப்படக்கூடாது. க.நா.சு. அப்படி ஆக்கினார். அதுதான் கோளாறாகிப் போனது. தங்களுக்குப் பிடிக்காத சில எழுத்தாளர்களைப் புறந்தள்ளுவதற்கு இது ஒரு ஆயுதமாக அமைந்தது. பொதுவான வாசகர்களால் போற்றப்பட்ட கல்கி, அகிலன், மு.வ. போன்றோரை எள்ளிநகையாட இந்த ஆயுதம் பயன்பட்டது.

        ஆனால் நான் மேற்சொன்ன மூவரும் எல்லா சீரியஸ் எழுத்தாளர்களையும் காலத்தால் வென்று நிற்கிறார்கள். எந்தப் புத்தகக் கடை அடுக்குகளில் பார்த்தாலும் இந்த நிதர்சனம் முன்னிற்கும். //

        ரெ.கா-வா ? “ஊசி இல்லை மரம்” எழுதிய ரெ.கா-வா இதை சொல்வது ?

        நம்ப மிகவும் சிரமமாக இருக்கிறது.

  7. Avatar
    K A V Y A says:

    //அந்தக் காலங்களில் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாக இருந்த அ.ச.ஞானசம்பந்தம், மு. வரதராசன் போன்றோர், இலக்கியத் திறன், இலக்கிய மர[பு என்றெல்லாம் பேசத் தொடங்கிய போதிலும் அவர்கள் மாணவர்களுக்காக எழுதிய

    பாட புத்தகங்களில் தற்கால இலக்கியம் பற்றி கடைசியில் பேசுவதாக எந்த அபிப்ராயமும் சொல்லாத நாலு வரிகள் எழுதியிருப்பார்கள். நினைவிலிருந்து சொல்கிறேன். “புதுமைப் பித்தன், கல்கி, விந்தன், மாயாவி, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சிறுகதைகள் எழுதி இத்துறையைச் சிறப்பித்து மகிழ்ந்தார்கள்.,,,,” இந்த ரகத்தில் இருக்கும். இவர்கள் பேராசிரியர்கள். தற்கால இலக்கியம் கற்பிக்க பாடப் புத்தகம் போல எழுதியவர்கள்
    //

    தமிழ்மொழிக்கு அணிசெய்த பேராசிரியர்கள் பழிக்கப்படுகிறார்கள். அநியாயமாக. மாணாக்கர்களுக்கு எழுதப்படும் இலக்கிய வரலாற்று நூல்களில் ஆசிரியர்கள் என்ன செய்தார்கள் என்று மட்டும் சொன்னால் போதும். எப்படிச் செய்தார்கள் என்று விலாவரியாக விமர்சனம் தேவையில்லை. அப்படியே எழுதினாலும் அது கோடிட்டுத்தான் காட்டப்படவேண்டுமே தவிர விளக்கினால், ஒரு ஆசிரியருக்கு ஒன்பது பக்கங்கள் கொடுக்க வேண்டிவரும். பின்னர் அது இலக்கிய வரலாறாகாது. சுமை.

    Such remarks on great Tamil scholars and teachers are nothing but scurrilous. Unfortunate as it comes from a writer who is called Senior writer!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *