சாகச நாயகன் – 4. ஷீ தாவ் – ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக

This entry is part 19 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

chanj

 

பிஸ்ட் ஆப் புயூரி படத்தின் அனுபவம் சானுக்கு தான் யார் என்பதை உணர வைத்தது.  யாரையும் வீணே புகழ்ந்து துதி பாடி வாழ விரும்பாத குணம் தனக்கு இருந்ததைத் தெரிந்து கொண்டான்.

 

எத்தனை தான் நல்ல முறையில் ஸ்டண்ட் செய்தாலும், சான் நிச்சயம் இயக்குநர், தயாரிப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளரின் கீழ் அவர்களது ஏவலுக்கு பணிந்தே வேலை செய்ய வேண்டி இருந்தது.

 

அடிதடி சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது ஒருங்கிணைப்பாளரின் கை மிகவும் ஓங்கி இருக்கும்.  இயக்குநர்களுமே அவர்களைப் பணிந்து வேலை வாங்கியாக வேண்டும்.

 

அதனால் ஸ்டண்ட் வட்டாரத்தில் ஒருங்கிணைப்பாளர்களை ஷீ தாவ் – பாம்பின் தலை என்று அழைப்பர்.  மிகவும் அபாயகரமான, சூட்சுமமான காட்சியை எடுக்கும் போது, இருநூறுக்கும் மேற்பட்டவர்களை அவர்கள் கையாள வேண்டியிருக்கும்.  அதனால் ஷீ தாவ்வுக்கு செட்டிலே சக்தி அதிகம்.  புரூஸ் லீயின் படம் தவிர மற்ற படங்களுக்கு அவர்கள் தான் சண்டைக் காட்சிகளை உருவாக்கி அதற்கு ஏற்றவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.

 

அதனால் ஒருங்கிணைப்பாளர்கள் எப்போதுமே பத்துப் பன்னிரண்டு பேர்கள் சூழ, புகழாரத்தை வாங்கிக் கொண்டு, அவ்வப்போது பெரிய மனிதராக நடத்தப்பட்டு செட்டில் வலம் வருவார்கள்.

 

வெற்றிகரமாக துதி பாடுகிறவர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கும்.  மிகவும் எளிய பணிகள் தரப்படும். புகழ் பாடாதவர்களுக்கு உயரத்திலிருந்து குதித்தல், கடினமான விழுதல் போன்ற வேலைகள் தரப்படும்.

 

எவ்வளவு தான் நன்றாகப் பணி செய்த போதும், போட்டி அதிகம்.  அவர்களுக்குப் பணிந்து நடக்காவிட்டால் வேலை இல்லாமல் அலைய வேண்டியிருக்கும்.

 

சான் பணி செய்த வந்த காலத்தில் ஒரு நாளைக்கு 15 அமெரிக்க டாலர்களே ஊதியம் பெற்றனர்.

பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் ஒரு படத்திற்கான அத்தனை சண்டைக் காட்சிகளுக்கும் தனித்தனியாக விலை பேசி, மொத்தமாக பணத்தை ஷீ தாவ்விடம் கொடுத்து விடுவார்கள்.  குறிப்பிட்ட  சண்டைக் காட்சியை எடுத்த முடித்த பின்னர், அதற்கான தொகையைக் கொடுக்காமல், மற்றொரு காட்சியையும் அதே நாளில் எடுத்து விட்டு ஒரு நாள் கூலியை மட்டுமே கொடுப்பார்கள்.  ஒரு முழு காட்சிக்கான பணத்தை முழுவதுமாக ஒருங்கிணைப்பாளர் தன் பையில் போட்டுக் கொள்வார்.

ஸ்டண்ட் கலைஞர்கள் ஒரு வேலை என்று ஆரம்பித்து இரண்டு வேலையைச் செய்து, ஒரு வேலைக்கான கூலியை மட்டுமே பெறும் நிலை இருந்தது.  அப்போதெல்லாம் எந்த விதிகளும் சங்கங்களும் இருக்கவில்லை.  ஒருங்கிணைப்பாளரை எதிர்க்கவும் முடியாது.  எதிர்த்தால் வேலைக்கான பட்டியலிலிருந்து பெயர் நீக்கிப்பட்டு விடும்.

 

ஸ்டண்ட் கலைஞர்கள் ஒரு வேலை என்று ஆரம்பித்து இரண்டு வேலையைச் செய்து, ஒரு வேலைக்கான கூலியை மட்டுமே பெறும் நிலை இருந்தது.  அப்போதெல்லாம் எந்த விதிகளும் சங்கங்ளும் இருக்கவில்லை.  ஒருங்கிணைப்பாளரை எதிர்க்கவும் முடியாது.  எதிர்த்தால் வேலைக்கான பட்டியலிலிருந்து பெயர் நீக்கிப்பட்டு விடும்.

 

இதை யாருமே விரும்பவில்லை.  எல்லோரும் கடினமாக உழைத்தனர்.  ஆனால் அதன் முழுப்பலனையும் அனுபவிக்க முடியாமல் போனது.  அப்போது சானுக்குத் தானும் ஷீ தாவ்வாக ஆகி, ஸ்டண்ட் கலைஞர்களை நல்ல முறையில் ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.  அந்த நேரத்தில் அது சாத்தியமாவது மிகக் கடினம் என்ற காரணத்தால் ஒரு கனவாகவே எண்ணினான்.

 

கோல்டன் ஹார்வெஸ்ட் படம் ஒன்றிற்கு சாமோ காட்சியை எடுத்துக் கொண்டு இருந்தான்.  மிகவும் கஷ்டமான அடி விழும் காட்சி அது.

 

“யூன் லோ.. என்ன அது, காமேராவிற்கு முகத்தக் காட்டிட்டியே..”

 

சான் சோர்வுடன் நின்றான்.

 

“மறுபடியும் செய்.. போ..” என்ற சாமோ விரட்டினான்.

 

தான் சிறுவனாக இருந்த போது கழகத்தில் எப்படி மிரட்டினானோ, அதே போன்று இப்போதும் மிரட்டுவது சானுக்கு சற்றும் பிடிக்கவில்லை.  இருந்தாலும் வேலை செய்தால் தானே ஊதியம் கிடைக்கும்.  தெரிந்தேயிராத மற்ற ஒருங்கிணைப்பாளரை விடவும் சாமோ எவ்வளவோ மேல் என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வேண்டா வெறுப்புடன் மறுபடியும் காட்சியில் நடிக்கத் தயாரானான்.

 

அப்போது செட்டின் ஒரத்தில் ஒரு புதியவர் வந்திருப்பதைக் கவனித்தான்.  ஹாங்காங்கில் இருக்கும் பெரும்பாலான கலைஞர்கள் சானுக்குத் தெரிந்தேயிருந்தது. அன்று செட்டில் இருந்த அனைவரும் அவனுக்குத் தெரிந்தவர்களே. ஆனால் அவரோ புதியவர்.  அவருக்கு அங்கே என்ன வேலை என்று யோசித்தான்.  மேலும் யோசிக்க நேரம் கொடுக்காத சாமோ, காட்சியைப் படமாக்குவதில் மும்முரமானான்.

 

மறுமுறை சுவரில் ஏறி, மறுபடியும் தரையில் விழுந்தான்.

 

“போதும் போதும்” என்று சாமோ சொன்னதும், ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று அப்படியே கண்களை மூடிக்கொண்டு தரையில் சான் படுத்திருந்தான்.

 

அப்போது ஒரு குரல்.  “மன்னிக்கவும்” என்றது.

 

“போய் விடுங்கள்.. நிம்மதியாகச் சாக விடுங்கள்” என்று கத்த வேண்டும் போலிருந்தது சானுக்கு.  இருந்தாலும் கண்களைத் திறந்து பார்த்தான்.

 

வேலைச் செய்யும் கலைஞர்களைக் கூர்ந்து கவனித்து வந்த அந்தப் புதியவர் தான் பக்கத்தில் நின்றிருந்தார்.

“என்ன வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே, அவருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமே என்று இஷ்டமில்லாமல் எழுந்தான்.

 

“நான் இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை” என்றார்.

 

“அப்போ எதுக்கு இங்கே இருக்கீங்க? யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் சான்.

 

அந்தப் புதியவர் “நான் பாவ் ஹாக் லாய்.. இயக்குநர்..” என்றார்.

 

“நான் உங்களைப் பற்றி கேள்விப்பட்டதில்லையே?”

 

“யாருக்கும் தெரியாது.  நான் தா தீ என்ற ஒரு மிகச் சிறிய தயாரிப்பு நிறுவனத்தை வச்சிருக்கேன்.  புதுசா படம் பண்ணப் போறோம். அதுக்கு ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளர் வேண்டியிருக்கு.. அதுக்காகத் தான் இங்கே வந்தேன்..” என்று தன் நோக்கத்தை அந்தப் புதியவர் வெளியிட்டார்.

 

“அப்படியா.. அத வந்து ஏன் விழுந்திருக்க என்கிட்டே வந்து கேட்டீங்க.. ஒருங்கிணைப்பாளர்.. அதோ அங்கே இருக்கார்..” என்று சாமோ இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான்.

 

பாவ் உடனே, “அவரப் பாக்க வரல்ல.. நான் உன்னப் பார்க்கத் தான் வந்தேன்” என்றார்.

 

அவரைப் பார்த்து ஆச்சரியத்துடன், “என்ன?” என்று கேட்டான் சான்.

 

“நீ ரொம்ப நல்லா ஸ்டண்ட் செய்வேன்னு எல்லாரும் சொன்னாங்க.  நானும் இப்போ செய்ததைப் பாத்தேன்.. நல்லாவே இருந்தது.  அதனாலே உனக்கு விருப்பம் இருந்தா எங்கப் படத்துக்கு ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளரா ஒப்பந்தம் செஞ்சிக்கலாம்ன்னு நினக்கிறேன்” .

 

“ஒப்பந்தமா?” சாதாரண ஸ்டண்ட் கலைஞனான தனக்கு, ஒப்பந்தம் பேசுமளவுக்கு ஒருங்கிணைப்பாளர் வாய்ப்பா என்று மகிழ்ச்சியுடன் வேறெதையும் யோசிக்காமல் “எங்கே கையெழுத்துப் போட வேண்டும்” என்று உடனே கேட்டான்.

 

இவ்வளவு வேகமாக சான் ஒப்புக்கொள்வான் என்று எதிர்ப்பார்க்காத பாவ், அடுத்த நாள் நிறுவனத்திற்கு வந்து மற்ற விவரங்களைப் பேசிக் கொள்ளலாம் என்ற சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

 

பின்னால் சென்ற சான், “உங்களுடன் வேலை செய்ய ரொம்ப சந்தோஷம். என்னை விட அதிக அனுபவசாலிங்க நிறைய பேர் இருக்க, என்னை தேர்ந்தெடுத்ததுக்கு ரொம்ப நன்றி” என்று கூறினான்.

 

உடனே அவர் திரும்பி, “உண்மைய சொல்லப் போனா.. அவங்கள வச்சி எங்களால செய்ய முடியாது” என்று சொன்னார்.

 

அவர் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்லிச் சென்றார் என்று சானுக்கு அப்போது புரியவில்லையென்றாலும், எப்படியோ தேடி வந்த சந்தர்பத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது என்று உள்மனம் எடுத்துச் சொன்னது.

 

மறு நாள் காலை பாவ்வைச் சந்திக்கச் சென்றான் சான்.  தா தீ நிறுவன அலுவலகம் அத்தனைப் பெரிதாக இருக்கவில்லை.  எவ்வளவு தான் பெரிய பெரிய நடிகர்களை வைத்து பெரிய நிறுவனங்கள் படங்களை எடுத்தாலும், இது போன்ற சில சுயேச்சையான சிறிய நிறுவனங்களும் நல்லப் படங்களை எடுக்கவேச் செய்தன.  அதனால் சானின் நம்பிக்கையோ மிகவும் அதிகமாக இருந்தது.

 

பாவ் சானை தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தினார்.  தயாரிப்பாளர் சானைப் பார்த்தது கிடையாது.  இருந்தாலும் அவனது ஸ்டண்ட் திறமையைப் பாராட்டி, ஒப்பந்தம் செய்ய ஒத்துக்கொண்டார்.  இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

முதல் படம் சீனப் படம். ஷீ பாஸ் யாவ். நான்கு அரசர்கள் ஒரு ராணி.  அது ஆங்கிலத்தில் “தி ஹிரோயின்” என்று பெயரிடப்பட்டது.

 

“பட்ஜெட்” என்று பாவ் சொன்னதற்கு, “பட்ஜெட்டுக்கு எந்தவிதப் பிரச்சினையுமில்ல..” என்ற தயாரிப்பாளர், “பணம் எவ்வளவு தான் இருந்தாலும் திறமை தான் படத்திற்கு ரொம்ப முக்கியம். உன்னிடம் திறமை இருப்பது எனக்குத் தெரிகிறது” என்று சானிடம் கூறினார்.

 

தயாரிப்பாளர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மடித்துத் தன் கோட் பையில் போட்டுக் கொண்டு செல்ல, சானும் பாவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“எங்களால ரொம்ப கொடுக்க முடியாது. ஆனா உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.. நாளைக்கு ஷ{ட்டிங் ஆரம்பம். வாழ்த்துக்கள்” என்று பாவ் சானுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பேசினார்.

 

“எங்களால ரொம்ப கொடுக்க முடியாது. ஆனா உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.. நாளைக்கு ஷ{ட்டிங் ஆரம்பம். வாழ்த்துக்கள்” என்று பாவ் சானுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பேசினார்.

 

“எனக்கு உதவியாளர்களை நான் வைத்துக் கொள்ளலாமா.. இல்ல.. நானே எல்லாத்தையும் செய்யணுமா?” என்று சான் கேட்க,

 

“யார் தேவையோ.. அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்.. அதை எப்படியும் சமாளித்து விடலாம்” என்றார்.

இதைக் கேட்டதும் சானுக்கு மகிழ்ச்சி.  கை குலுக்கி விட்டு ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராகும் தன் கனவைப் பற்றி எண்ணிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான்.

 

புது வேலை நாளையிலிருந்த ஆரம்பம். உண்மையாக ஷீ தோவாக மாற உள்ளான்.  யார் யாரை அழைக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொண்டான்.

 

படப்பிடிப்பு ஆரம்பமானது.

 

யூன் லோ என்கிற சான் தன்னுடைய கழக நண்பர்களான ய+ன் குவாவையும் யூன் பியாவ்வையும் தன்னுடன் வேலை செய்ய அழைத்து வந்தான்.  பத்தொன்பது வயதில் ஒருங்கிணைப்பாளரான சானிடம் ய+ன் பியாவ், “தினம் தினம் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டண்ட் கூட்டத்தாருடன் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்வதை விட புதுக் கம்பெனினினாலும் இதுவே மேல்..” என்று ஆரம்பித்து, “பணத்தை மட்டும் சரியா கொடுத்தச் சரி..” என்று முடித்தான்.

“இந்தக் கம்பெனியில பணத்தைப் பத்தி இப்ப பேச வேண்டாம்.  அப்புறமா பாத்துக்கலாம்” என்று சான் சொல்லி அவர்களை அமைதிப்படுத்திவிட்டு வேலையைத் தொடங்கினான்.

 

படம் அத்தனை நன்றாக எடுக்கப்படவில்லை.  ஆனால் சண்டைக்காட்சிகளில் மூவரும் இணைந்து எவ்வளவு நன்றாகச் செய்ய முடியுமோ அத்தனை முயன்று செய்தார்கள்.  சானுக்கு அந்த வேலை பிடித்திருந்தது.  முடிவுகள் எடுப்பது, ஆணைகள் இடுவது என்று தான் விரும்பியதைச் செய்ய முடிந்தது. அந்தப் படத்தில் ஒரு சிறு பாத்திரமேற்று நடிக்கவும் வாய்ப்புக் கிட்டியது.

 

என்ன செய்த போதும் படம் பெரும் தோல்வியடைந்தது.  பாவ் துவண்டு போனார்.  ஆனால் தயாரிப்பாளர் மட்டும் “கவலைப்படாதே.. உலகம் இந்தப் படத்தோடு முடிந்துவிடவில்லை.  நஷ்டத்தை அடுத்தப் படத்தில் ஈடு கட்டிவிடலாம்” என்று தன்னம்பிக்கைக் கொடுத்து உடனே அடுத்தப் படத்திற்கான வேலையைத் துவக்கினார்.

 

அடுத்தப் படம் போலீஸ் வுமன் என்ற படம்.  முதல் படத்தை விடவும் சற்று நன்றாக வந்திருந்தது.  சென்ற படத்தில் செய்த தவறுகளையெல்லாம் புரிந்து கொண்டு, அதைச் சரி செய்து இந்தப் படத்தை எடுத்து முடிந்தனர்.  ஆனால் அதுவும் பெரும் தோல்வியடைந்தது.  அதன் தோல்வி கதையின் காரணமாக மட்டுமல்ல.  அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

 

ஹாங்காங் திரையுலகில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடந்தது.  இது என்ன என்பதை அடுத்தத் தொடரில் தெரிந்து கொள்ளலாம்.

 

Series Navigationதூங்காத கண்ணொன்று……முக்கோணக் கிளிகள் [2]
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *