சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்

author
1 minute, 27 seconds Read
This entry is part 14 of 16 in the series 21 பெப்ருவரி 2016

 

முனைவர் கோட்டி திருமுருகானந்தம்

thiru560@hotmail.com

 

 

 

 

சிங்கப்பூரில் 1819 ஆம் ஆண்டு முதலே தமிழ்மொழி பேசப்படுகிறது, சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எனவே சிங்கப்பூர் வரலாற்றோடு தமிழர் இரண்டறக் கலந்து உள்ளனர் என்பதுண்மை. தொடக்க காலத் தமிழர்கள் தமிழில்தான் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். காலவோட்டத்தில் தமிழரின் தொகை பெருகப் பெருக தமிழ்மொழியும் வளர்ந்து உள்ளது. தமிழர் சென்ற நாடுகளுக்கு எல்லாம் மனைவி, மக்களை அழைத்துச் செல்லாமல் தாய்மொழியோடு சென்றனர். அப்படிச் சென்றவர்கள் மொழியை, பண்பாட்டை வளர்க்கப் பல வழிகளைப் பின்பற்றினர். அவற்றில் ஒன்றுதான் இதழ்களைத் தொடங்கி நடத்தியதாகும். இவர்கள் நடத்திய சில இதழ்கள் தோன்றிய வேகத்தில் மறைந்து விட்டன. சில இதழ்கள் சில காலம் வந்தன. ஆனால் எந்த இதழும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவில்லை.

 

சிங்கப்பூர்ப் பத்திரிகை வரலாறு:

 

சிங்கப்பூரில் தொடக்கக் காலம் முதல் பல இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கில அரசு இங்கு வாழும் சீனர், மலாயர், தமிழர் ஆகியோர் தத்தம் மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்க அனுமதி தந்துள்ளது. இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்கி கருத்துப் பரிமாற்றம் செய்துக் கொண்டனர். சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளாக விளங்கும் இந்நான்கு மொழிப் பத்திரிகைகள் குறித்த அறிமுகத்தைக் காண்போம்.

 

மூத்த தமிழ்ப் பத்திரிகை:

 

சிங்கப்பூரை உள்ளடக்கிய மலாயாவில் தோன்றிய முதல் தமிழ்ப்பத்திரிகை எது எனச் சரியாகத் தெரியவில்லை. தற்போது கிடைக்கின்ற தரவுகளின்படி சி.கு. மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875 ஆம் ஆண்டு நடத்திய சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த தமிழ் இதழாகும். இதற்குமுன் இங்கு இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆராய்ச்சிக்குரியது. இதைத் தொடர்ந்து தமிழில் பல பத்திரிகைகள் தோன்றியுள்ளன.

 

சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள்:

 

சிங்கப்பூரில் 1875 ஆம் ஆண்டு முதல் காலந்தோறும் நாளிதழ்கள், வார, மாத, பருவ இதழ்கள் தோன்றிப் பணிகள் செய்தவண்ணம் உள்ளன என்பது உண்மை. இவ்விதழ்கள் மக்களின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாது மக்களை மகிழ்ச்சியாகவும் வாழவைக்கின்றன. தமிழர் வாழ்வு, தமிழ் மொழி, தமிழ்க் கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, சமயம், அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சி ஆகியவற்றின் நிலைப்பாட்டிற்கு இங்குத் தோன்றிய தமிழ் இதழ்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிங்கை வர்த்தமானி, தங்கைநேசன், ஞானசூரியன், விஜயகெதனன், வித்தியா விசாரிணி, வாகை நேசன், உலக நேசன், சிங்கை நேசன், இந்து நேசன், நூருல் இஸ்ஸாம், சிங்கை ஞானோதயம், பினாங்கு ஞானாசிரியன், சிலாங்கூர் வித்யா பாஸ்கரன், ஜனோபகாரி, பாதுகாவலன், சத்தியவான், பினாங்கு ஜர்வசன மித்திரன், உதயதாரகை, பொதுஜன மித்திரன், தமிழ்நேசன், மலேயா கிறீஸ்த்துவ மித்திரன், முன்னேற்றம், சீர்திருத்தம், நவநீதம், தமிழ்முரசு, மலாய் மணி, புதிய உலகம், போன்ற நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அவ்வக் காலங்களில் தோன்றி உள்ளன. இவ்விதழ்கள் அனைத்தும் தொடர்ந்து வரவில்லை. இவைகளில் சில இதழ்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. எஞ்சிய இதழ்கள் பெயர்களைத் தவிர வேறு தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. 1875 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தோன்றிய சிங்கை வர்த்தமானி முதல் இன்று வரை வந்து கொண்டிருக்கும் தமிழ்முரசு நாளிதழ் வரை அனைத்து இதழ்களும் சிங்கப்பூர்த் தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளன.

சிங்கப்பூர் முன்னோடி இதழ்கள்:

 

சிங்கை வர்த்தமானி, தங்கைநேசன், ஞானசூரியன், வாகைநேசன், வித்தியா விசாரிணி, விஜயகெதனன், உலக நேசன், இந்து நேசன் முதலான இதழ்கள் சிங்கை நேசனுக்குமுன் சிங்கப்பூரை உள்ளடக்கிய மலாயாவில் தோன்றி உள்ளன. சிங்கை நேசன் வெளிவந்த காலத்தில் இந்து நேசன் என்னும் இதழ் பினாங்கிலிருந்து வெளிவந்துள்ளது. எனவே இவ்விதழ்களை மலாயாவின் மூத்த இதழ்கள் என அழைப்பதில் தவறேதும் இல்லை.

 

சிங்கை வர்த்தமானி:

 

மகுதூம் சாயபுவும் நாகூர் முகம்மது அப்துல் காதிறுப் புலவரும் 1875 ஆம் ஆண்டு நடத்திய சிங்கை வர்த்தமானி என்னும் இதழே சிங்கப்பூரின் மூத்த இதழாகும். இதை ஆய்வாளர் பால பாஸ்கரன் தமது இணைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை மலேசிய தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் இராசேந்திரனும் வழிமொழிகின்றார். எனவே தற்போது கிடைக்கின்ற சிங்கப்பூர் இதழ்களில் இதுவே மூத்த இதழாகும். இதற்கான சான்று சிங்கை நேசன் இதழில் மகுதூம் சாயபு எழுதியுள்ள தலையங்கங்களில் உள்ளது. இவ்விதழை இப்பொழுது உள்ளவர்கள் யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. இந்நூலாசிரியரும் இதனைத் தேடும் பணியில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். இதற்கும் முன்பே அன்றைய சிங்கப்பூரில் மலாயாவில் இதழ்கள் தோன்றியுள்ளனவா என்பது ஆய்விற்குரியது.

 

தங்கை நேசன்:

 

தங்கை நேசன் என்ற இதழை மகுதூம் சாயபு 1875 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளியிட்டுள்ளார். இதற்கான சான்று அவர் நடத்தியுள்ள சிங்கை நேசன் இதழில் உள்ளது. இவ்விதழ் எவ்வளவு காலம் வந்தது, எப்போது வந்தது, உள்ளடக்கம் என்ன, எத்தனை பக்கம் என்ற ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

 

ஈ. டபல்யூ. பிர்ஷ் என்னும் ஆங்கிலேயர் The Vernacular Press in the Straits என்னும் கட்டுரையை 1879 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். இக்கட்டுரையில் அவர் இக்கால கட்டத்தில் சிங்கப்பூரில் இருந்த அச்சகங்கள் குறித்துச் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். அப்போது அந்த அச்சகங்கள் அச்சிட்டு உள்ள பத்திரிகைகளைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஜாவி பிராணக்கான் என்னும் பெயரிய நிறுவனம் ஜாவி பிராணக்கான், தங்கை சினாகென் என்னும் இரு பத்திரிகைகளை வெளியிட்டு உள்ள செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். அவர், தங்கை சினாகென் – தங்கை நேசன் என்ற தமிழ்ப் பத்திரிகை 1876 ஆம் ஆண்டு முதல் மாதத்திற்கு இரு முறை வந்துள்ளது, ஏறக்குறைய இரண்டாண்டுகள் வந்திருக்கிறது, 150 படிகள் விற்பனையாயின எனக் கூறியுள்ளார். முதலில் அவர் தங்கை நேசனைப் பார்த்து தமது கட்டுரையை எழுதியிருப்பாரா என்ற ஐயம் எழுகிறது.

 

No mention has as yet been made in the Society’s journal of the recent appearance of a Vernacular Press in this Colony, and a brief notice of its rise and progress may have some interest.

 

Towards the end of the year I876 an association, entitled the “Jawi Peranakkan” (Straits born), established a Malay printing office and began the publication of a weekly newspaper under that name. Later on a Tamil Paper – the “Tangai Snahen” – was issued by the same publishers: it is a fortnightly periodical, has been in existence for some two years, and has now reached a circulation of 150 copies. About the same time efforts were made by others to produce both Malay and Tamil newspapers; a Tamil Paper having been brought out prior to the publication of the “Tangai Snahen,” and two Malay Papers subsequently to that of the “Jawi Peranakkan,” but these have, after a short run, died out, and the “Jawi Peranakkan” and the “Tangai Snahen” are, at the present moment, the sole representatives in Singapore of the two languages.

(E.W. Birch, The Vernacular Press in the Straits, p.204)

 

எனத் தங்கை நேசன் பத்திரிகை குறித்த தகவலை இவர் குறிப்பிட்டுள்ளார். இதில் இவர் குறிப்பிட்டுள்ள 1876 ஆம் ஆண்டு தங்கை நேசன் வெளிவந்தது என்ற கருத்து தவறானதாகும். சிங்கை நேசன் இதழில், அதன் ஆசிரியர் சி.கு. மகுதூம் சாயபு எழுதியுள்ள தலையங்கத்தில் தங்கை நேசன் பத்திரிகை நடத்தியது குறித்தும் அதற்கு வரவேண்டிய பணம் குறித்தும் வருத்தமுடன் எழுதியுள்ளார். இதில் சி.கு மகுதூம் சாயபு தங்கை நேசன் இதழ் 1875 ஆம் ஆண்டு நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்கை நேசன் வெளிவந்த ஆண்டைத் தவிர தங்கை நேசன் குறித்த வேறு தகவல்களைச் சி.கு. மகுதூம் சாயபு சுட்டிக் காட்டவில்லை. இதனால் ஈ. டபல்யூ. பிர்ஷ் என்பவர் தங்கை நேசன் பத்திரிகை குறித்துக் கூறியுள்ள கருத்து தவறானது என்பது இதன் மூலம் உண்மையாகிறது.

 

ஞானசூரியன்:

 

தற்போது கிடைக்கக்கூடிய சிங்கப்பூர் இதழ்களில் காலத்தால் மூத்த இதழான ஞானசூரியன், இலண்டன் நூலகத்திலும் சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியத்திலும் உள்ளது. ஞானசூரியன் என்ற இதழ் சிங்கப்பூரில் 1882 ஆம் ஆண்டு திங்கள்கிழமை தோறும் வந்துள்ளது. இதனைச் சிங்கப்பூர்க் கலாவிருத்தி சங்கம் நடத்தி உள்ளது. மகுதூம் சாயபுவிற்குச் சொந்தமான தீனோதய வேந்திரசாலை அச்சிட்டு உள்ளது. இவ்விதழின் முதல் பக்கத்தில் சங்க முத்திரை காணப்படுகிறது. அதன்பின் BOARD OF EDUCATION என ஆங்கில மொழிபெயர்ப்பு உள்ளது. அதற்கடுத்து இதழின் பெயரான ஞானசூரியன், தமிழில் பெரியதாகவும் ஆங்கிலத்தில் சிறிதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கடுத்து

 

ஊனக் கண்ணார்க் கொளித்துமும் புறமொன்றாய

ஞானக் கண்ணார்க் கருள்வனாடு                      

 

என்ற வாசகம் காணப்படுகிறது. இதற்கடுத்து திங்கட்கிழமை தோறும் பிரகடனஞ் செய்யப்படும் என்ற வாசகம் இடம்பெறுகிறது. இவ்விதழ் நான்கு பக்க அளவில் சிறிய வடிவில் நான்கு பத்திகளில் வந்துள்ளது. மார்கட் சரக்கு விலை, தலையங்கம், விதவைகட்கும் உரிமை பொருந்தும், சிங்கப்பூர்ச் செய்திகள், மணிலா செய்திகள், கல்வி நிலைமை, இந்தியச் செய்திகள், சமாசாரத் திரட்டு, மின்தபால் சங்கதி போன்ற தகவல்களைத் தாங்கி இரண்டாம் இதழ் வந்துள்ளது.

 

இஃது, சி.கு. மகுதூம் சாயபுவிற்குச் சொந்தமாகிய தீனோதய வேந்திர சாலையில் கலாவிருந்தி சங்கத்தாரால் பிரகடனஞ் செய்யப்பட்டது.

 

என்ற செய்தி பத்திரிகையின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. இவ்விதழின் ஆசிரியராக மகுதூம் சாயபு இருந்திருக்கிறார். இவ்விதழ் எவ்வளவு காலம் வந்ததெனத் தெரியவில்லை. இவ்விதழ் சில கட்டுரைகளை வெளியிட்டு உள்ளது. அதில் முயற்சி உடையார் இகழ்ச்சியடையார் என்னும் கட்டுரை மக்கள் அனைவரும் முயற்சியுடன் வாழ்க்கையை அணுகவேண்டும் என்கிறது. கல்வி நிலை என்னும் கட்டுரை நமது முன்னோர்கள் கல்வியில் சிறந்து விளங்கியதை முதலில் கூறுகிறது. பின்னர் இலக்கியங்களில் காணப்படும் கல்வி குறித்த செய்திகளைக் கூறுகிறது. அதன்பின் மக்கள் கற்க வேண்டியதன் அவசியத்தையும் அதனால் அவர்கள் அடையும் நன்மைகளையும் உணர்த்துகிறது. சிங்கப்பூர்ச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மார்கட் சரக்கு விலை, கடித ஒழுங்கு என்ற தகவல்களுடன் இவ்விதழ் வந்துள்ளது. இவ்விதழ் எவ்வளவு காலம் வந்தது எனத் தெரியவில்லை.

 

வாகைநேசன்:

 

மலாயாவில் வெளிவந்துள்ள இதழ்களில் வாகைநேசனும் ஒன்றாகும். பினாங்கிற்கு அருகிலிருக்கும் கூலிம் பகுதியில் வாழ்ந்த தம்பிமாமா என்னும் கா. முகியித்தீன் மதினா சாயபு, 1884 ஆம் ஆண்டு வாகை நேசன் என்னும் இதழைப் பினாங்கில் நடத்தி உள்ளார். இவர் தமிழகம் நாகூர் பகுதியைச் சார்ந்தவர். இவர் சிங்கை நேசனின் பினாங்கு பகுதியின் முகாமையாளராக இருந்து உள்ளார். தம்பிமாமா குறித்துப் பாடியுள்ள சரம கவிதைகளில் அவரது சிறப்பு, மக்கள் அவர்மீது வைத்திருத்த பற்று, வாகை நேசன் நடத்தியது முதலிய தகவல்களைக் காண முடிகிறது. இதனால் சிங்கை நேசனுக்கும் முன்னே மலாயாவில் வாகை நேசன் என்ற இதழ் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இவ்விதழ் குறித்த தகவல்கள் இந்த அளவில்தான் உள்ளன.

 

வித்தியா விசாரிணி:

 

குலாம் காதிறு நாவலர் (1833 – 1908) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாகூரில் பண்டித வாப்பு ராவுத்தர் மகனாக 1833 ஆம் ஆண்டு பிறந்தார். நாகைப்பட்டிணம் நாராயணப் பிள்ளையிடமும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடமும் முறையாகத் தமிழ் பயின்றார். இவர் சமயக் கல்வியில் கற்றுத் தேர்ந்த பெரியவர்களிடம் மார்க்கக் கல்வியைப் பயின்றார். மதுரையில் அமைந்திருந்த சங்கத்தில் சங்கப் புலவராக விளங்கினார். நாகூர் தர்காவின் ஆதீன வித்வானாகவும் விளங்கினார். பத்திரிகையாளர், இலக்கியப் படைப்பாளர், பாவலர், உரையாசிரியர், நாவலர் எனப் பன்முகங்கொண்ட குலாம் காதிறு நாவலர் 1888 ஆம் ஆண்டு வித்தியா விசாரிணி என்னும் இதழைப் பினாங்கிலிருந்து நடத்தியுள்ளார். நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர் என மக்கள் இவரை அழைத்தனர். இவர் புலவராற்றுப்படை, மதுரைக் கோவை, மும்மணிக் கோவை, நன்னூல் விளக்கம், பொருத்த விளக்கம், ஆரியு நாயக புராணம், பதாயிருக் கலம்பகம், பகுதாது எமக வந்தாதி, நாகூர்ப்புராணம், குவாலீர்க் கலம்பகம், சமுத்திர மாலை, நாகூர்க் கலம்பகம், சச்சிதானந்த மாலை, பிரபந்தத் திரட்டு, சித்திரக்கவி திரட்டு முதலான கவிதை நூல்களைப் படைத்துள்ளார். சீறாப்புராண வசனம், ஆரியு நாயக வசனம், தருமணி மாலை வசனம், பிக்க்ஷி மாலை உரை முதலான உரை நடை நூல்களை எழுதியுள்ளார். அரபுத் தமிழ் அகராதி என்னும் அகராதியைப் படைத்துள்ளார். உமரு பாஷாவின் யுத்த சரித்திரம் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். இவர் படைத்துள்ள நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 34 என ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

 

1888 ஆம் ஆண்டு வெளிவந்த உலக நேசனின் சமகாலத்தில் வித்திய விசாரிணி வெளிவந்துள்ளதாக பெ.சு.மணி (அச்சும் பதிப்பும் என்னும் நூலில்) குறிப்பிட்டு உள்ளார். இவ்விதழ் இலங்கையிலிருந்து வெளிவந்த முஸ்லீம் நேசனுடன் சில முறை கருத்து வாதங்களில் ஈடுபட்டுள்ளது என ஆய்வாளர்கள் கருத்து உரைத்து உள்ளனர். இவ்விதழில் மார்க்க வினா விடை, சமய சட்ட திட்டங்கள், நெறிமுறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகள் முதலியன இடம் பெற்றுள்ளன.

 

விஜய கெதனன்:

 

விஜய கெதனன் என்னும் இதழ் பினாங்கிலிருந்து 1887 ஆம் ஆண்டிற்குமுன் வந்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து விபரம் ஏதும் கிடைக்கவில்லை. விஜய கெதனன் என்னும் இதழ் வெளிவந்த தகவலை உலக நேசன் இதழ் ஆசிரியர் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இவ்விதழ் வெளிவந்துள்ளது புலனாகிறது.

 

உலகநேசன்:

 

உலகநேசன் என்ற வார இதழ் 1887 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் நாள் முதல் பினாங்கு நகரிலிருந்து வாரம் ஒருமுறை வந்துள்ளது. இவ்விதழ் மலாயாவின் மூத்த இதழ்களுள் ஒன்றாகும். இவ்விதழ் ஆசிரியராக அ. மு. மரைக்காயர் இருந்து இருக்கிறார். 124 சோலியா ஸ்டிரீட், பினாங்கு என்ற முகவரியிலிருந்து சிறிய அளவில் நான்கு பக்க அளவில் மூன்று பத்திகளில் இவ்விதழ் வந்துள்ளது. உலக நேசனின் தொடக்கத்தில் பிஸ்மில்லா ஹர்றஹ்மா ணிர்றஹீம் என்ற இசுலாமிய வாசகத்தைத் தொடர்ந்து இடப்பக்கம் பதிவு எண் 85 உள்ளது. இதற்கடுத்து உலகநேசன் என்ற பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை தோறும் பிரகடனஞ் செய்யப்படும் என்ற வாசகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் காணப்படுகிறது. பிறகு

 

நன்னெறி தவறாது நடங்கள்; அதைவிட்டு விலகாதிருங்கள்

 

என்ற முழக்கம் காணப்படுகிறது. அதன்பின் ஆங்கிலத் தேதி, மாதம், ஆண்டு ஆகியன இடம் பெற்றுள்ளன.

 

நேசர்மனங்களிக்க நீணிலத்திற் சோம்பலிக்கும்

மாசரிதை தாங்கியொளிர் மாவுலக

வந்திடுங் கையொப்ப மார்களுக்கே நாமென்றுந்

தந்திடுவோம் வந்தனந் தான்

 

என்ற வெண்பா கையொப்பர்களுக்கு – வாசகர்களுக்கு – நன்றி தெரிவிக்கும் பொருட்டு இடம்பெற்றுள்ளது. கையொப்பத் தொகை, விளம்பரங்கள், தலையங்கம், பினாங்கு செய்திகள், ரங்கூன் செய்திகள், துருக்கிய சேனைகள், ஜெர்மனியும் பிரான்சும் முதலிய செய்திகள் உள்ளன. இவ்விதழின் முதல் தலையங்கம் இவ்விதழ் நோக்கம், மக்கள் அடையும் நன்மைகள், இதற்குமுன் இங்கு வந்துள்ள இதழ்கள் முதலானவற்றைத் தெளிவாக எழுதியுள்ளார். உலகிலுள்ள பிற இனத்தவர்களைப் போலத் தமிழர்கள் இதழ்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இக்கருத்து இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பெரிதும் பொருந்துகிறது. இந்த இழுக்குமுன் இங்கு வித்தியா விசாரிணி, வாகை நேசன், விஜய கெதனன் முதலான இதழ்கள் தோன்றி மறைந்து உள்ளதை இத்தலையங்கம் உணர்த்துகிறது. இவையாவும் பொது மக்களின் ஆதரவு இன்மையினால் தோன்றிய வேகத்தில் மறைந்து போனதை இதழாசிரியர் வருத்தமுடன் எழுதியுள்ளார். அதைப் போல இவ்விதழும் மூடுவிழா காணக்கூடாது என்பதற்காக வாசகர்களின் ஆதரவை வேண்டுகிறார்.

 

சிங்கை நேசன்:

 

சிங்கை நேசன் ஆசிரியரான மகுதூம் சாயபு சிறந்த இதழாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். தமிழ், ஆங்கிலம், அரபு முதலிய மொழிகளை நன்கறிந்தவர். இவர் தமது தீனோதய வேந்திர சாலை என்னும் அச்சகத்தின் வாயிலாகத் தமிழ், சீனம், மலாய் முதலிய மொழிகளில் நூல்களை அச்சிட்டுக் கொடுத்துள்ளார். இவர் சிங்கை நேசன் இதழை 27 – 06 – 1887 முதல் 23 – 06 – 1890 வரை சிங்கப்பூரில் வாரந்தோறும் அச்சிட்டு வெளியிட்டு உள்ளார். இவ்விதழ், விக்டோரிய மகாராணியின் பொன்விழா அன்று தொடங்கி அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இதழாகும். இவ்விதழின் தொடக்கத்தில் சிங்கை நேசன் என்னும் பெயர் தமிழில் பெரிய எழுத்தில் உள்ளது. அதன் பிறகு திங்கட்கிழமை தோறும் பிரகடனஞ் செய்யப்படும் என்ற வாசகத்தின் கீழ் THE TAMIL JOURNEL SINGAI NESAN IS DESIGNED TO COMMEMORATE THE JUBLIEE OF HER MAJESTRY THE QUEEN – EMPRESS VICTORIA என ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து

 

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றமாகும் இறைக்கு

 

என்ற குறள் இடம்பெறுகிறது. இதற்கடுத்து ஆங்கில ஆண்டு, மாதம், தேதி முதலிய தகவல்கள் உள்ளன. நான்கு பக்கங்களில் நான்கு பத்திகளில் வாசகர் படிப்பதற்கு ஏற்ற எழுத்துருவில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பக்கத்தில் வெளியிட்டவர், அச்சிட்டவர் விபரம் உள்ளது.

 

சிங்கை நேசன் நோக்கம்:

 

ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நோக்கமுண்டு. சில கலை வளர்ப்பன. சில அறிவியல் வளர்ப்பன. சில இலக்கியம் வளர்ப்பன. சில கவிதை வளர்ப்பன. சில பொது அறிவை வளர்ப்பன. சில கட்டுரை வளர்ப்பன. இதைப் போல இவ்விதழுக்கும் நோக்கமுண்டு. இதனை இதழாசிரியர் மகுதூம் சாயபு, இவ்விதழின் நோக்கம், செல்ல வேண்டியபாதை முதலியன குறித்து மிகத் தெளிவாக முதல் இதழில் எழுதியுள்ளார்.

 

சிங்கப்பூரிலே தமிழ் பாஷை பேசும் பல சாதியார் அனேகர் இருந்தும் மற்றைச் சாதியாரைப் போல் நாம் ஒரு பத்திரிகை யில்லாதிருப்பது ஏன்? முன்னர்ப் பத்திரிகைகள் வெளிப்பட்டும் மடிந்து போயின. ஆகவே இதுவும் அப்படித் தானென்று சிலர் எண்ணுவார்கள். அவை மடிந்து போனதிற்குக் காரணம் நம்முடைய விளம்பரத்தில் வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

 

இம்முறை பொது நன்மைக்குரிய விஷயங்களைப் பற்றிப் பிரசுரிக்கிறோமே யொழிய, தனித்தனி ஆட்களை யிகழ்ந்தும் வீண்காரியங்கள் வெளிப்படுத்தப் படா. படித்தவர்களும் படியாதவர்களும் வாசிக்க விளங்கத் தக்க பாஷையில் எழுதி வருவோம். எழுதி வருங்காரியங்கள் எவர்களையும் பிரியப் படுத்தவும் எழுப்பி விடவும் முயற்சி பண்ணவும் சோம்பலினின்று விழிக்கவும் செய்யவே கூடியளவு பிரயாசப் படுவோம். வாசிப்பவர்கள் அருவருத்து வெறுக்கத்தக்க காரியங்களை நீக்கி விடுவோம்.

 

இப்பத்திரிகைக்கு இரண்டு நோக்கமுண்டு. பத்திரிகை எழுதுகிறவர் நோக்கம் ஒன்று. பத்திரிகைக்குக் கையொப்பராகி வாங்கி வாசிப்பவர் உடைய நோக்கம் மற்றொன்று. பேனாவைப் பிடித்துப் பத்திரிகை யெழுது கிறவர் தம்முடைய மனச்சாட்சிக்குச் சற்றேனும் மாறாமல் பொது நன்மையே எப்பொழுதும் நோக்கமாகக் கொண்டிருக்கல் வேண்டும். பத்திரிகை வாசிப்போர் பலராகையால் அவர்கள் நோக்கமும் பல விதமாயிருக்கும்.

 

 

(சி.கு. மகுதூம் சாயபு, சிங்கைநேசன், 27 – 06 – 1887, இதழ் 1, ப.1)

 

எனத் தெளிவாக மகுதூம் சாயபு கூறுவதிலிருந்து இவ்விதழ் நோக்கத்தை உணரமுடிகிறது. எவ்விதழுக்கும் நோக்கம் இருப்பது போல இவ்விதழுக்கும் தெளிவான நோக்கம் இருப்பதை இப்பத்தி உணர்த்துகிறது. மேலும் இதிலிருந்து இவ்விதழுக்குமுன் சிங்கப்பூரில் இதழ்கள் தோன்றி மறைந்துள்ள உண்மையையும் மகுதூம் சாயபு உணர்த்தியுள்ளார்.

 

சிங்கை நேசன் விபரம்:

 

 

சிங்கை நேசன் இதழ் வெளிவந்த விபரத்தைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

 

 

எண் ஆண்டு இதழ்கள் 
Volume 1 27 – 06 – 1887 முதல் 25 – 06 – 1887 வரை 52 இதழ்கள்
Volume 2 02 – 07 – 1888 முதல் 04 – 06 – 1889 வரை 50 இதழ்கள்
Volume 3 01 – 07 – 1889 முதல் 23 – 06 – 1890 வரை 49 இதழ்கள்
  மொத்தம்   151

 

சிங்கை நேசன் தொடங்கியது முதல் 151 இதழ்கள் தொடர்ந்து வந்துள்ளன. இதழ் ஒன்று முதல் இதழ் நூற்று ஒன்பது வரை தீனோதய வேந்திரசாலை எண் ஒன்று, முகம்மதலி லேன் என்ற முகவரியிலிருந்தும் இதழ் நூற்றுப் பத்து முதல் இதழ் நூற்று ஐம்பத்து ஒன்று வரை தீனோதய வேந்திரசாலை, எண் எழுபத்து நான்கு துல்லாயர் ஸ்திரீட் என்ற முகவரியிலிருந்தும் மகுதூம் சாயபு அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்.

 

சிங்கை நேசன் வடிவமைப்பு:

 

சிங்கை நேசன் பிரதி திங்கள்கிழமை தோறும் நான்கு பக்க அளவில் மிக நேர்த்தியாக வெளிவந்துள்ளது. இன்று வரும் செய்தித்தாள்கள் போல் பெரிய அளவில் இல்லாமல், அதாவது 16 x 11 என்ற அளவில் வந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு பத்திகள் உள்ளன. செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் இக்காலம் போல் படங்கள் இடம்பெறவில்லை. இக்காலக் கட்டத்தில் பிற இதழ்களிலும் புகைப்படங்கள் அதிகம் இடம் பெறவில்லை. தலைப்புச் செய்திகள் பெரிய எழுத்துருவில் உள்ளன. வாசகர் படிப்பதற்கு ஏற்ற சரியான எழுத்துருக்களில் செய்திகள் இடம்பெற்று உள்ளன.

 

சிங்கை நேசன் உள்ளடக்கம்:

 

திருக்குறள், தலையங்கம், கடவுள் வாழ்த்து, சிங்கப்பூர்ச் செய்திகள், இந்தியச் செய்திகள், இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள், தந்திச் சமாச்சாரம், சமாசாரத் திரட்டு, விளம்பரங்கள், மார்கட் சரக்குவிலை, நூலறிமுகம், பேங்நாணயம், கடிதம் என்ற உள்ளடக்கங்கள் சிங்கை நேசனில் தொடக்கம் முதல் இறுதி வரை இடம்பெற்றுள்ளன. இதழாசியர் மகுதூம் சாயயு படைத்து உள்ள குறள் எல்லாத் தலையங்கங்களுக்குமுன் இடம் பெற்றுள்ளது.

 

இந்து நேசன்:

 

இந்து நேசன் என்னும் இதழ் 1887 ஆம் ஆண்டுகளின் இறுதியில் பினாங்கு நகரிலிருந்து மாதமிருமுறை வந்துள்ளது. இவ்விதழிழ் எவ்வளவு காலம் வந்தது, உள்ளடக்கம் என்ன, எத்தனை பக்கம், பத்திரிகை ஆசிரியர், வெளியிட்டவர், அச்சு விபரம் போன்ற விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இக்காலத்தில் பினாங்கிலிருந்து வந்துள்ள உலக நேசன் என்னும் வார இதழும் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ள சிங்கை நேசன் என்னும் வார இதழும் இதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. இந்த இதழ் ஆங்கில அரசு ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது உறுதியாகத் தெரிகிறது. இதற்குச் சான்றாக இவ்விதழின் தொடக்கத்தில் ஆங்கில அரசின் சின்னம் இடம் பெற்றுள்ளது. இவ்விதழைத் தமிழர் நடத்தியிருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதற்குச் சான்றாக இதழின் முதற்பக்கத்தில் ஆங்கில அரசின் சின்னத்தை அடுத்துச் சிவமயம் என்ற வாசகம் இடம் பெறுகிறது. இதற்கு அடுத்து இந்து நேசன் என்னும் பெயர் தமிழில் பெரிய அளவிலும் ஆங்கிலத்தில் சிறிய அளவிலும் இடம் பெற்றுள்ளது. இதற்கடுத்து மாதமிருமுறை பிரகடனஞ் செய்யப்படும் என்ற செய்தி உள்ளது. இதற்கடுத்து

 

இந்து நேசனை யாவரும்புகழச் சந்ததங் கணபதி கந்தனும் காப்பு

 

என்னும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து

 

கற்றரிந்தும்பொய் கொலைகள் கட்காமஞ்சூதை

நிர்க்கறிந்தோர் மேன்மை நிலை

 

என்னும் வாசகம் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இதழின் வலப்பக்கம் வால்யூம் எண் இருக்கிறது. அடுத்து வெளிவரும் இடம், நாள், தேதி, ஆங்கில மாதம், ஆங்கில ஆண்டு இருக்கிறது. வலப்புறத்தில் இதழ் எண் இடம் பெறுகிறது.

 

இக்காலத்தில் எல்லாப் பத்திரிகைகளும் கையொப்பக்காரர்களின் அதாவது சந்தாதாரர்களின் ஆதரவில்தான் வெளிவந்துள்ளன. இதற்கு இவ்விதழும் விதிவிலக்கு அன்று. பத்திரிகை கிரியவரலாறு என்று இதனை இவ்விதழ் குறித்து உள்ளது. 1. உள்ளூர் சந்தா, 2. மலாய், அச்சை, ஜாவா தேசத்தார்க்குத் தபாற் செலவு உள்பட சந்தா, 3. இந்தியா, இலங்கை, பர்மா தேசத்தார்க்குத் தபாற்கூலி உள்பட சந்தா என மூன்று விதமான சந்தாவினை இவ்விதழ் வசூல் செய்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு அதாவது பினாங்கில் வாழும் மக்களுக்கு வருடச் சந்தா $ 2.00, ஆறு மாதச் சந்தா $ 1.25, மூன்று மாதச் சந்தா $ 1.00 செலுத்த வேண்டும் என்கிறது. மலாய், அச்சை, ஜாவா தேசத்தார்க்குத் தபாற் செலவு உள்பட வருடச் சந்தா $ 3.00, ஆறு மாதச் சந்தா $ 2.00, மூன்று மாதச் சந்தா $ 1.00 செலுத்த வேண்டும் என்கிறது. இந்தியா, இலங்கை, பர்மா தேசத்தார்க்குத் தபாற்கூலி உள்பட வருடச் சந்தா Rs 5.00, ஆறு மாதச் சந்தா Rs 3.00, மூன்று மாதச் சந்தா Rs 2.00 செலுத்த வேண்டும் என்கிறது. இத்தகவலை இந்து நேசனின் எட்டாவது இதழின் முதற்பக்க விளம்பரம் (06 – 02 – 1888) உரைக்கிறது. இதற்குமுன் ஏழு இதழ்கள் இருபத்து ஐந்து பக்கங்களில் வந்துள்ளன. அந்த இதழ்களில் உள்ள செய்திகளின் தொடர்ச்சியாக இந்த இருபத்தைந்தாம் பக்கம் இருக்கிறது.

 

முடிவாகப் பார்க்கும்போது, தற்போது கிடைக்கின்ற தரவுகளின்படி சிங்கை வர்த்தமானி, தங்கை நேசன், ஞான சூரியன், வாகைநேசன், விஜயகெதனன், வித்தியா விசாரிணி, உலகநேசன், சிங்கை நேசன் முதலான இதழ்கள் முன்னோடி இதழ்களாகத் திகழ்கின்றன. சிங்கை நேசனின் சமகாலத்தில் இந்து நேசன் என்ற பத்திரிகை வந்துள்ளது. இவ்விதழ்கள் அனைத்தும் நீண்டநாள் வந்ததாகத் தெரியவில்லை. மேலும் இவ்விதழ்கள் அனைத்தும் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *