சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

rajid

 

‘நாடகங்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘சிங்கையில் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தரமுடியுமா? எங்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியுமா?’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அயல்நாடுகளில் தமிழ்க்கல்வித் துறையிலிருந்து அன்பு அழைப்பு. ஏற்றுக்கொண்டேன். உற்றாரையும் உடன்பிறந்தோரையும் பார்க்கலாம். ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்பது போன்ற வாய்ப்பு. தயாரானேன். பயணச்சீட்டு, விசா, கருத்தரங்கிற்கு கட்டுரை எல்லாம் தயார். முஸ்தபா கடையில் சில பேனாக்கள்,  மிட்டாய்கள், ரொட்டிகள், சில துணிகள் வாங்கிக்கொண்டு வெளியேறினேன். முடிச்சை முழுசாகப் பார்த்து சல்யூட் அடித்த சீருடைக் காவலருக்கு பதில் சல்யூட் அடித்தேன். வலதுபக்கத்தில் இருவர் லவ்விக்கொண்டிருந்ததை கழுத்தைத் திருப்பாமல் பார்த்தேன். தங்களின் தொலைபேசி அட்டை என்னென்னவெல்லாம் தரும் என்று மனப்பாடம் செய்த ஆங்கிலத்தை ஒரு பங்ளா பையன் ஒலிப்பானில் ஒப்பித்துக்கொண்டிருந்தது புரியவேயில்லை. பக்கத்து உணவகத்தில் தோசையையும் முள்கரண்டியையும் வைத்துக்கொண்டு இரண்டு வெளிநாட்டினர் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். சிராங்கூன் சாலையில் பச்சை மனிதனை எதிர்பார்த்து ஏராள மனிதர்கள். அட அந்தக் கரையில் புர்கான் நிற்கிறார். ஆச்சரியப்பட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன் புதுவீட்டில் பால்காய்ச்ச, அக்கா மகளுக்கு நிக்காஹ் முடிக்க, வாளாந்தரவை வைத்தியரிடம் முதுகுவலிக்கு சூரணம் வாங்க என்று ஊருக்குச் சென்றார். விமானநிலையம் சென்று அனுப்பிவைத்தேன். அவர் வந்துவிட்டதைப் பார்த்ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. காத்திருந்தேன். பச்சைமனிதன் ஒளிர்ந்தான். அவரும் என்னைப் பார்த்துவிட்டு வேகமாகக் கடந்துவந்தார். அவர் தோளை வளைத்து முதுகில் சரித்து என் முகத்தை அவர் தோளில் புதைத்து சலாம் சொன்னேன். நிறைய பேசவேண்டும். சாப்பிட்டுக்கொண்டே பேசலாம். அந்த உணவகத்துக்குள் சென்றோம். அந்த வெளிநாட்டினர் பாதி தோசையை முடித்திருந்தார்கள். எங்களைப் பார்த்து புன்னகைத்து ‘ஹாய்’ என்றார்கள். இந்தப் பண்பாட்டை நாம் பழகவில்லையே என்று வருந்தினேன். அமர்ந்தோம். ஊர் சென்றுவந்த கதையெல்லாம் சொன்னார். முதுகுவலி தேவலாம் என்றார். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? என்றார். நான் ஊர் போகும் விபரங்களைச் சொன்னேன். பிறகு அவர் தொடர்ந்தார். அதற்குமுன் அந்த புர்கானைப் பற்றி நான் சொல்லிவிடவேண்டும்.

 

2002ல் நான் முதன்முதலில் வீடு வாங்கினேன். வீடமைப்புக் கழகத்தோடு மூன்றாவது சந்திப்பில் 18000 வெள்ளிக்கான காசோலை கொடுத்து சாவி வாங்கவேண்டும். டெக்ஸ்டைல் சென்டர் ஓசிபிசி கிளை 18000 கடன் தருவதாக உறுதி தந்தது. நெருங்கியபோது ஒரு பிணை வேண்டும் என்றது. அது ஒரு பெரிய விஷயமாகவே படவில்லை. குடும்பத்தோடு வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்கு அழைப்பவர்கள், ஊரிலிருந்து வந்தது என்று ஹல்வாவும் கருவாடும் அனுப்புபவர்கள் என்று என் நெருங்கிய வட்டங்களிடமெல்லாம் கேட்டேன். நாளை சொல்கிறேன் என்று சொன்னவர்கள் என் தொலைபேசிக்கு பயந்துகொண்டு  ஒதுங்கிக்கொண்டனர். என் தாய்வழி தூரத்து உறவாம். அதுவும் அவர் சொல்லித்தான் தெரியும். என்னைப் பெயர் சொல்லியே அழைத்ததில்லை. ‘மாப்ளே’ என்றுதான் அழைப்பார். பேசும்போது தேன் சொட்டும் இல்லை கொட்டும். அவரிடம் கேட்டேன். நாளை சொல்கிறேன் என்றார். ஒருநாள் கழித்துப் பேசினார். வேறு யாருக்கோ பிணை கொடுத்துவிட்டாராம். எனக்கு உதவ முடியாமல் போனதற்கு வருத்தமாம். எனக்கு உதவி செய்ய நினைத்த ஒருவர் அவரிடம் அபிப்ராயம் கேட்டிருக்கிறார். ‘அவருக்கு ஏதாவது ஒன்றென்றால் முழுத்தொகையும் நீதான் கட்டவேண்டும். அப்போது நான்தான் சொன்னேன் என்று என்னிடம் வந்து நிற்கக்கூடாது என்று வலிதெரியாமல் அவர் ஊசி ஏற்றிய சேதி என் காதுக்கு எட்டியபோது உணர்ந்தேன். சில பசுக்கள் ரத்தம் கறக்குமென்று. அப்போதுதான் இந்த புர்கானை  அணுகினேன். நாளைக்காலை 10 மணிக்கு அந்த ஓசிபிசி கிளைக்கு வருகிறேன் என்று சொல்லி 9.45க்கே வந்துவிட்டார். அவருடைய வருமானவரியைப் பார்த்துவிட்டு ‘கிரேட்’ என்றார் அந்த வங்கிப் பெண். அமரவைத்தார். உள்ளே சென்றார். குதிஉயரச் செருப்பு கம்பளத்தில் ரிதமித்தது. வந்தார். சில தாள்களை விரித்தார். எல்லாவற்றிலும் என் கையெழுத்து. கீழேயே புர்கானின் கையெழுத்து. எடுத்து அடுக்கிக்கொண்டார். ‘யு கேன் கலக்ட் யுவர் செக் டுமாரோ எனி டைம்’ என்றார். என் மனசுக்குள் விளிம்புவரை பொங்கிக் கொண்டிருந்த பால்ச்சட்டி சூடு தணிந்து அடங்கி அடங்கி ஆடை கட்டியது. வெளியேறினோம். புர்கானைக் கேட்டேன்.

 

‘நீங்கள் ஏன் எதையுமே படித்துப் பார்க்கவில்லை?’

 

‘அதிகப்படியாகப் போனால் இந்த 18000ஐ நான் தரவேண்டும். இந்தக் கடனை வாங்கிக் கொடுக்க என்று நான் வரவில்லை. நான் வாங்குவதாகவே தயார்ப்படுத்திக்கொண்டுதான் வந்தேன்.’.

 

உதடுகளைப் பிரிக்காமல் உள் நாக்கால் கத்தினேன். ‘புர்கான் நீங்கள் மனுஷனா? அவுலியாவா?’ அந்த புர்கான்தான் இப்போது என்னிடம் ஏதோ சொல்லப்போகிறார். தொடர்ந்தார்.

 

‘நாங்கள் ஒருகிலோ தங்கம் கொடுத்து ஊருக்கு ஆட்களை அனுப்புகிறோம். சட்டப்படிதான். நீங்களும் ஏன் எடுத்துப்போகக் கூடாது? அதற்கான டூட்டி 4500 யு.எஸ்ஸுடன் செலவுக்கும் 700 வெள்ளி தந்துவிடுவோம். நீங்கள் இறங்கியதும் அங்கே வாங்கிக்கொள்வார்கள்.’

 

சுங்கவரி, சுங்கஅதிகாரி, தங்கம், டூட்டி எல்லாமே  எனக்கு வயிற்றைக் கலக்கும் சமாச்சாரங்கள். ஆனாலும் கேட்பது புர்கான். நானில்லாவிட்டாலும் அவருக்கு எத்தனையோ பேர். ஆனாலும் அவர் கேட்டு நான் மறுப்பது ரோட்டில் அம்மணமாய் ஓடுவதைவிடக் கேவலம். ‘சரி’ என்றேன்.

 

முதல்நாள் இரவு கடைக்குச் சென்றேன்.  ஒரு வெல்வெட் பையில் ஒரு கிலோ பிஸ்கட்டைக் கொடுத்தார். கையை கீழே இழுத்தது. இவ்வளவு கனமா?  யுஎஸ் டாலரை எண்ணும் இயந்திரம் சர்ர்ர்…  என்று எண்ணி 4500 காட்டியது. எடுத்துத் தந்தார். 700  வெள்ளியைத் தனியாகத் தந்தார். அடுத்த வாடிக்கையாளரிடம் திரும்பிவிட்டார். 10 காசுக்கு கடலைமிட்டாய் தருவதுபோல் 70000 வெள்ளியை தந்துவிட்டு சலனமில்லாமல் வேலையைத் தொடர்கிறார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

காலை 7 மணி. விமானநிலையம். போர்டிங் பாஸ் வரிசையில் நான். உடமைகள் சுமார் 10 கிலோ. கைப்பையில் மிக பத்திரமாக என் கடவுச்சீட்டு, தங்கம், யுஎஸ் டாலர். ஒரு ஆள் ஓடிவந்தார்.

 

‘அண்ணே நான்தான் ஹிதாயத்துல்லா மருமகன். நாசர். ஊருக்குப் போறீகளா? திருச்சிக்குத்தானே?’

 

‘ஆமாம்.’

 

‘லக்கேஜ் கொஞ்சம் அதிகமா இருக்குண்ணே. உங்களுக்கு இந்த ஒரு பெட்டிதானே. சேர்த்துப்போடுவோம்னே.’

 

ஒப்புக்கோண்டேன். அந்த ஹிதாயத்துல்லா யார் என்றே தெரியாது. மனுஷன் 30 கிலோவை எந்த தைரியத்தில் கொண்டுவந்தான் என்று விளங்கவே இல்லை. போர்டிங் பாஸ் வாங்கியபிறகு யோசித்தேன். வில்லங்கமான பொருள் ஏதாவது அதில் இருக்குமோ? முடிந்துவிட்டது. இனி சந்தேகிக்காதே. அறைந்தது மனசாட்சி.

 

பக்கத்து சீட்டில் அந்த நாசர். ஏதேதோ பேசினார். என் கவனம் என் கைப்பயையில் மட்டுமே இருந்தது. விமானத்தில் ஒரு சீட்டு கொடுத்தார்கள். அந்த சீட்டின் கீழ் நுனியில் சுங்கவரி செலுத்தும் பொருளை எழுதவேண்டும். ஒரு  கிலோ தங்கம் என்று நான் எழுதியதை கவனித்தவர் கடைசியில் போய் உட்கார்ந்துகொண்டார். ஒரு வினாடியில் அந்நியனாகிவிட்டார். திருச்சி நெருங்கியது. அதோ ஒரு கோடுபோல் தெரிகிறதே. அதுதான் கொள்ளிடமா? அட! மலைக்கோட்டை. விமானம் தரை தொட்டது. எல்லாரும் இறங்கியபின் இறங்கினேன். நான் வரிசையில் நின்றபோது அந்த நாசர் எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு சாமான்கள் ஓடும் பெல்ட்டில் பெட்டி வெளியாகும் அந்த ஆதிமூலத்துக்குள்ளிருந்தே தன் பெட்டிகளை இழுத்து சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு வெளியேறும்போது என்னை ஜாடையாகப் பார்த்துவிட்டு ஓட்டம் பிடித்தார். மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா? நரியிலிருந்து பிறந்தானா?

 

என் முறை வந்தது. என் கடவுச்சீட்டில் முத்திரைகள் குத்தப்பட்டன. கைப்பையை ஊடுகதிரில் அனுப்பினேன். உலோகத்தைக் காட்டிக்கொடுக்கும் அந்த சிறப்புப் பாதையில் நான் வெளியேறினேன். கைப்பையை எடுத்துக்கொண்டேன். சீருடையில் ஒரு அதிகாரி வந்தார். அது வெள்ளையா? மஞ்சளா? கேட்டார் ‘பிஸ்கட்டா’ . ‘ஆம்’. ஒரு கவுண்டரைக் காட்டிப் போகச்சொன்னார். சென்றேன். என் கடவுச்சீட்டையும் தங்கத்தையும் அவர் முன் வைத்தேன். தங்கக்கட்டியை நீக்கிப்பார்த்துவிட்டு மூடிவிட்டார். கடவுச்சீட்டைப் பிரித்தார். மூன்று மாதத்திற்கு முன்புதான் என் கடவுச்சீட்டைப் புதுப்பித்திருந்தேன். இந்தியா விசாவும் ஒரு முறை மலேசியா சென்ற முத்திரைகள் மட்டுமே இருந்தது.

 

‘ஆறு மாதத்திற்குள் நீங்கள் ஏற்கனவே இந்தியா வந்திருக்கிறீர்களா?’

 

‘இல்லை’

 

‘உங்கள் பாஸ்போர்ட்டில் எதுவும் தெரியவில்லை. பழைய பாஸ்போர்ட் எங்கே? ‘

 

‘கொண்டுவரவில்லை. நான் அப்படி வந்திருந்தால் உங்கள்  சிஸ்டத்தில் தெரியுமே?’

 

‘இங்கே வந்திருந்தால் தெரியும். நீங்கள் டெல்லிக்கோ சென்னைக்கோ வந்திருந்தால் இங்கே தெரியாது’

 

‘ஆறு மாதத்திற்குள் நீங்கள் இந்தியா வந்திருக்கவில்லை என்பதற்கான ப்ரூஃப் இல்லை. உங்கள் கோல்டை நாங்கள் கான்பிஸ்கேட் செய்கிறோம்.’

 

என் விழிகள் வெளியே வந்து விழுந்தன.

 

‘அப்படியானால் போகும்போடு எடுத்துக்கொண்டு கோகிறேன்.’

 

‘முடியாது ஜுவல்லரிதான் முடியும். ரா கோல்டு முடியாது.

‘அப்படியானால் என்னதான் வழி?

‘திங்கட்கிழமை ஏ.ஸி வருவார். காலை 8 மணிமுதல் இரவு 8  மணிவரை எந்த நேரமும் வருவார். நீங்கள் காலை 8 மணிக்கே வந்துவிடுங்கள். அவர்தான் முடிவு செய்யவேண்டும்.’

 

‘ஆனாலும் சட்டம் என்று ஒன்று இருக்குமே? அவர் அனுமதிப்பாரா?’

 

‘அது எங்களுக்குத் தெரியாது.’

 

இன்னொரு அதிகாரி வந்தார். யானைக்கருப்பு. தும்பைப்பூ வெள்ளையில் ப்ரஷ் மீசை. சுத்தமாக ஒதுக்கியிருந்தார். 50 மதித்தேன்.

 

‘என்ன வேலையா வந்தீங்க?’

 

தமிழ்ப் பல்கலைக் கழகத்துத்தில் ஒரு செமினார். அதோடு டாக்டரேட் பண்ணும் திட்டமும் உண்டு, அதற்காகத்தான் என் எல்லா சர்டிபிகேட்டுகளையும் எடுத்துவந்தேன்.’

 

என் கோப்புகளை விரித்தேன். ஒவ்வொன்றாகப் பார்த்தார். மிக அக்கரையோடு பார்த்தார். பின் கேட்டார்.

 

‘இவ்வளவு படித்த நீங்கள் இதை ஏன் எடுத்து வந்தீர்கள்?’

 

‘அடப்பாவி! இதைக் கேட்கவா இவ்வளவு பார்த்தாய்?’ எனக்குள் கேட்டுக்கொண்டேன்.

 

தொடர்ந்தார். இது ஒன்றும் பிரச்சினையே இல்லங்க. உங்க பழைய பாஸ்போர்ட் எங்கே இருக்கு?’

 

‘சிங்கப்பூர்ல.’

 

நீங்க 6 மாதத்துக்கு எடையில வரலயில்ல?’

 

‘வரல.’

 

‘அப்படின்னா அதக்காண்பிச்சுட்டு நாளக்கி எடுத்துட்டுப் போங்க. இத அனுப்புனவங்ககிட்டேயே சொல்லுங்க. அந்த பாஸ்போர்ட்டை அனுப்ப ஏற்பாடு பண்ணுவாங்க.’

 

‘அதச் சொல்லாம ஏன் இப்படி மிரட்றாரு அவரு?’

 

‘உங்ககிட்டே பழைய பாஸ்போர்ட் இல்லேன்னு நெனச்சிருப்பாரு.’

 

பக்கத்து கவுண்டரில் 5 பவுன் நகைக்கு 1 லட்சம் டூட்டி கட்டச்சொல்ல  இரண்டு ஆண்டுகளாக வீட்டுவேலை செய்துவிட்டு ஊர் திரும்பிய அந்த அம்மா மயங்கிவிழ ஒரு பயணி தண்ணீரைத் தேடி ஓடினார். அந்த அதிகாரி சாவகாசமாக அடுத்தவரிடம் விசாரணை செய்துகொண்டிருக்கிறார்.

 

‘சரி. எப்படியும் பாஸ்போர்ட்டுடன் நாளை வருகிறேன்.’

 

‘வாங்க. நாளக்கு இதே குரூப்தான் இருப்போம்.’

 

வாங்கிய தங்கத்துக்கு ஒரு ரசீது கொடுத்தார். ஒரு அரைக்கால் டவுசர் ஓடிவந்தார். ஒரு நெளிந்துபோன தகர டப்பாவில் தங்கக்கட்டியை வைத்து புண்ணுக்கு கட்டுப்போடுவதுபோல் பிளாஸ்டரைச் சுற்றினார். உள்ளே கொண்டுபோனார்.

 

‘எங்கே கொண்டுபோகிறார்?’

 

‘லாக்கரில் வைக்க.’

 

‘அடப்பாவிகளா! லாக்கர் இந்த அரைக்கால் டவுசர் பொறுப்பிலா? நாளை அதைக் காணவில்லை என்று சொன்னால்?’

 

ஏன் இப்படி பயப்படுகிறேன். என்ன செய்வது. நான் விரட்டி விரட்டிக் கொத்தும் நாகஜாதியல்ல. பார்த்தாலே மிரளும் காகஜாதி. கேவலமான பயந்தாங்கொள்ளி. அதை இப்ப நினைத்து என்ன பயன்? இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டும். அந்த ரசீதுடன் வெளியே வந்தேன்.

 

‘அண்ணே. என் பேரு அன்சாரி. நீங்க புர்கான் அனுப்புனவங்கதானே?’

 

‘ஆமாம்.’

 

‘புர்கான் போன்ல இருக்காரு. பேசுங்க.’

 

பேசினேன். மொத்தத்தையும் சொன்னேன்.

 

‘பழய பாஸ்போர்ட் வீட்லதானே இருக்கு.’

 

‘ஆமா’

 

‘அக்காவுக்கு தெரியுமா?’

 

‘தெரியும்.’

 

‘சரி நான் போய் வாங்கிவிடுகிறேன். இன்று இரவே அது சென்னைக்கு வந்துவிடும். நாளை காலை  8 மணிக்கு எப்படியும் திருச்சிக்கு வந்துவிடும். தைரியமாக இருங்கள். இது ஒரு பிரச்சினையே இல்ல. அப்படியே போனாலும் போகட்டும். என்ன ஒரு 70000 வெள்ளி. நம்மால சம்பாதிக்க முடியாததா என்ன?’

 

உதடு திறக்காமல் உள்நாக்கால் கத்தினேன். ‘புர்கான் நீங்க மனுஷனா? அவுலியாவா?’ பிறகு உதட்டால் சொன்னேன்.

 

‘அப்படியெல்லாம் ஆகாது புர்கான்.’

 

‘போயிட்டு வாங்க. நாளக்கி எப்படியும் வாங்கீரலாம். எல்லாருக்கும் சலாம் சொல்லுங்க. ராத்திரி 12 மணிக்கு போன் வரும் பேசிக்கங்க.’

 

உடனே சிங்கப்பூருக்கு போன் செய்தேன். புர்கான் போன் செய்ததாகவும் அந்தப் பழைய பாஸ்போர்டை கொடுத்தனுப்புவதாகவும் சொல்லி தைரியா இருங்க என்று ஆறுதலும் சொன்னார்  மனைவி.

 

ஊருக்குப் புறப்பட்டேன். சில கண்ணீர்துளிகள். சில மௌனங்கள். சில உணர்ச்சி மீறல்கள் ஓராண்டுக்குப் பின்னும் எந்த மாற்றமும் இல்லாத அதே முகங்கள். என்னை வெளியே பார்க்கிறார்கள். எனக்கோ காதுக்குள் எறும்பு புகுந்து எங்கங்கோ ஊர்வதுபோல் இரைச்சலிடுகிறது இந்தப் பிரச்சினை. யாருக்கும் தெரியாது. தம்பிக்கு மட்டுமே தெரியும். படுத்தேன். 12 மணி. போன் அடித்தது. ‘அண்ணே நான் பஷீர் பேசுறேண்ணே. உங்க அட்ட என்கிட்டதான் இருக்கு. இப்ப திருச்சிக்கு கிளம்புறேன். நாளக் காலையில 8 மணிக்கெல்லாம் வந்திடுங்க. நானும்  வந்திடுவேன்’ என்றார். அவர் பத்திரமாக வைத்திருப்பாரா? ஆக்ஸிடண்ட் ஆயிட்டா? என் பாஸ்போர்ட் காணாம போயிட்டா? என் பாஸ்போர்ட்டை நகல் எடுத்து வேறு ஏதாச்சும் பண்ணிட்டா?

கொத்துப்பரோட்டா நினைவுகள்  என்னைக் கொன்றன. மனசாட்சி சொன்னது. ‘இந்த நூற்றாண்டில் வாழ எந்தத் தகுதியும் உனக்கில்லை’  உண்மைதான். அமைதியானேன். லேசாக அயர்ந்தேன். விழித்தேன். போன் 5.30 காட்டியது. குளித்துவிட்டு பஜ்ரு தொழுதேன். தம்பி வந்தான். ‘ஏன் 3 மணிக்கே ரெடியாகுரீங்க. கார் 6 மணிக்குத்தான் வரும்’ சே! என் போன் இன்னும் சிங்கப்பூர் நேரத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறது. இனிமேலா தூங்கமுடியும்? ஒரு வழியா 6 மணி நெருங்கியது.

புறப்பட்டேன் மணி 8. திருச்சி வந்துவிட்டேன். அந்த பஷீரை அழைத்தேன்.

 

‘வந்துக்கிட்டிருக்கேண்ணே. இப்பத்தான் பஸ்ஸைவிட்டு இறங்குறேன். ஒரு ஆட்டோவப் புடிச்சு அடுத்த அரைமணி நேரத்தில வந்துர்றேன். மொத கேட்ல வெளியேயே நில்லுங்க.’

 

4 பேராக 5 பேராக விமான நிலையத்துக்குள் மக்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒரு நடுத்தர வயதுப்பெண். ஒரு கிழவி. அம்மாவோ. மாமியாவோ. சில பிள்ளைகள். ஒன்றிரண்டு வாயில் புடவைகள் இன்னும் நாங்கள் சாகவில்லை என்றன. எல்லார் இடுப்பிலும் ஜப்பான் சேலைதான். கால்களில் ஹவாய் செருப்பு. கொஞ்சம் தங்கம். விவசாய நம்பிக்கைகளை விமானப் பயணங்கள் தின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

 

ஒருவர் ஆட்டோவிலிருந்து என் அருகில் வந்து இறங்கினார். 24 மணிநேரமும் தூங்காத கண்கள். பீடிக்கறைப் பற்கள். குருவிக்கூடாய் தலைமுடி. ஒரு அழுக்கு ஊதா பேண்ட் பத்தேபூ சட்டை.

 

‘பஷீர்தானே’

 

‘ஆமாண்ணே’

 

பெல்ட்டுக்கு உள்பக்கம் கையை விட்டார். ஒரு கருப்பு பிளாஸ்டிக் பை. பிரித்தார். ஓட்டைபோட்ட என் காலாவதியான கடவுச்சீட்டு. புரட்டினேன். என் போட்டோ என்னைப் பார்த்து சிரித்தது. ‘என்ன பாடுபடுத்திட்டேன் பாத்தியா?’

 

‘நீங்க போங்கண்ணே. அந்த ஆபீஸர் பேரு ராகவனா?’

 

‘பேரெல்லாம் தெரியாதுப்பா’

 

தைரியமாப் போங்கண்ணே. குடுத்துருவாங்க.’

 

உள்ளே போனேன். வாசலில் துப்பாக்கியுடன் ஒரு காவலாளி. ‘அது சுடுமா?’ எனக்குள் கேட்டுக்கொண்டேன். தடுத்தார். அந்த ரசீதைக் காட்டினேன்.  ஒரு கையெழுத்து. உள்ளே சென்றேன். அந்த ப்ரஷ் மீசை நின்றுகொண்டிருந்தார்.

 

‘பாஸ்போர்ட் வந்துவிட்டது’

 

டாலர் எங்கே?’

 

‘இருக்கிறது’

 

‘அந்த உருப்படிய எடுத்துவாப்பா’

 

அரைக்கால் டவுசர் ஓடினார். அந்த டப்பாவுடன் வந்தார். விடுவிடுவென்று ரசீது போட்டார். மொத்த டூட்டி இரண்டு லட்சத்து நாற்பத்திரெண்டாயிரம் என்று எழுதினார். 4500 யு எஸ். டாலர் உத்தேசமா ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தேன். 20000ரூபாய் கூடுதலாய் வந்தது.

 

‘ஹி….ஹி… சரியாக இருக்கிறது என்று பிஸ்கட்டைக் கொடுத்தார். ஒரு டூட்டி ரசீதையும் கொடுத்தார்.

 

‘பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இன்கம்டாக்ஸிலிருந்து எப்போது வேண்டுமானாலும் என்கொயரி வரலாம்’

 

வாங்கிக்கொண்டு வெளியேறினேன். பிஸ்கட்டை பஷீரிடம் கொடுத்தேன்.

 

‘அந்த டூட்டி ரசிதைக் கொடுங்கண்ணே. போற வழில செக்கிங் இருக்கும்’.

 

‘எனக்கும் வேண்டுமே. இன்கம்டாக்ஸ் என்கொயரி வருமாமே’

 

‘போய்ச்சேர்ந்த ஒடனே கூரியர்ல அனுப்பீர்ரண்ணே, ஒங்க அட்ரஸ மட்டும் ஒத்த ஒத்த எழுத்தா எனக்கு எஸ்ஸெம்மெஸ் பண்ணுங்கண்ணே’

 

அடுத்த நாள். ஒரு ப்ரௌன் கலர் உரையில் ஒரு கடிதம் என் பெயருக்கு வந்திருந்தது. என் முகவரி ஒவ்வொரு எழுத்தாக பார்த்து பார்த்து மான்கொம்பு மாதிரி எழுதியிருந்தது. இது எப்படித்தான் அந்த டெலிவரிமேனுக்குப் புரிந்ததோ  தெரியவில்லை. ஆனாலும் வந்து சேர்ந்துவிட்டது. என் தம்பி சொன்னான்

 

‘இவ்வளவு கேவலமான கையெழுத்த நான் பாத்ததேயில்ல’

 

ஆனால் அந்தக் கையெழுத்தில் படித்தவனிடம் காணமுடியாத சத்தியமும் வியர்வையும் மட்டுமே  எனக்குத் தெரிந்தது.

 

யூசுப் ராவுத்தர் ரஜித்

 

 

 

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *