சிந்தனைச் சிற்பி

This entry is part 36 of 42 in the series 1 ஜனவரி 2012
மாமேதைகள் பிறந்த கிரேக்க நாடு! அங்கே மஞ்சு சூழ் மலைப் புறத்தில் ஒரு சிற்றூர்! அங்கிருந்து கூட்டங் கூட்டமாக வந்து கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் பேசிக் கொள்கிறார்கள்.
“ஆஹா! என்ன மேதா விலாசம்! வாய் திறந்தால் போதும் சத்தான சிந்தனைகளை வாரித் தெளிக்கிறார்! முத்தான கருத்துக்களை கொட்டிக் கொடுக்கிறார்!”
யார் இந்தப் புகழ்ச்சிக்குரிய சிந்தனைச் சிற்பி? மக்களின் சிந்தை கவர்ந்து மிதிப்பைப் பெற்ற மாமேதை! எல்லோரும் அவரை டயாஜெனிஸ் என்று அழைக்கிறார்கள்.  அவர் குடியிருந்த குடிசை வீட்டிற்கே சென்று பார்க்கிறார்கள்.  உரையாடி மகிழ்ந்துவிட்டுத் திரும்புகிறார்கள்.
காட்டுத் தீ போல் இந்தச் செய்தி நாட்டைப் பற்றிக் கொள்கிறது. நாடாளும் நாயகனின் காதுகளிலும் விழுகிறது.
“அந்த மேதையை நான் பார்க்க வேண்டும்! அழைத்து வாருங்கள் அரசவைக்கு!” என்று ஆணை பிறக்கிறது.  ஆர்பாட்டத்தோடு அணிவகுத்துப் புறப்படுகின்றனர் ஐம்பது வீரர்கள்.
ஆணையைப் பிறப்பித்தவன் அலெக்ஸாண்டர்! ஆட்பெரும் படை கொண்டு அவனியையே நடுங்க வைத்த மாசிடோனியாவின் மாவீரன்! ஈராயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான மறவர்களைக் கொண்ட மாபெரும் சைனியத்தை உருவாக்கிய பெரும் தீரன்! ஏறு நடையும் எழிலும் கொண்டு விளங்கிய ஏதென்ஸ் நகராட்சியைத் திக்குமுக்காடச் செய்தவன்! இந்தியாவின் ஜீலம் நதிவரை வந்து தன் வீரத்தின் முத்திரையைச் சூரத்தனமாகப் பதித்துச் சென்ற சண்டப் பிரசண்டன்! ஆம்! அவன் தான் ஆணையைப் பிறப்பித்தான்!
ஆர்பாட்டத்தோடு சென்ற வீரர்கள் விரைவிலேயே அடக்கத்தோடு திரும்பினர்.
“எங்கே அந்த மேதை?” அலெக்சாண்டர் கேட்டான்.
“சென்று தான் தரிசிக்க வேண்டும்!” பதிலுறுத்தினர் வீரர்கள்.
இதைக் கேட்டதுதான் தாமதம்! பொங்கிய கோபத்தை அங்கத்தில் அடக்கிக் கொண்டு புயல் போலப் புறப்பட்டான் அலெக்சாண்டர்!
வீர நடை போட்டு அவன் தூர வரும்போதே, தத்துவ மேதையைத் தரிசிக்கத் திரண்டிருந்த மக்கள் திகிலுடன் விலகி நின்றனர்.
இரத்தச் சிவப்பான கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டு பள்ளியறை நாடிப் பகலவன் மேற்றிசை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில், “ஏதாகுமோ! என்ன நடக்குமோ!” என்று மக்கள் கிலி கொண்டு நிற்க, புலி போல நின்றான் அலெக்ஸாண்டர்!
அங்கு ஒரு புறத்தில் ஓர் ஓலைக் குடிசை! அதன் தாழ்வாரத்தில் பழுத்த பழமாக ஒரு கிழம்! தலையிலும் தாடைகளிலும் வெள்ளிக் கம்பி போன்ற ரோமங்களின் திரட்சி! கவர்ச்சி மிக்க செழிப்பான முகம்! கடல் போலப் பரந்து விரிந்த நெற்றி! கழுகின் அலகு போல் நீண்ட மூக்கு! தடித்த உதடுகள்! துடிக்கும் புருவங்கள்! கனச் சிவப்பில் தீட்சண்யமான கண்கள்! ஆனால், பொழிந்து கொண்டிருப்பதோ கனிவு மழை!
“நான் தான் அலெக்சாண்டர்!” கம்பீரமான குரல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது!
“ஓ.. அப்படியா?” தாடிக்காரக் கிழத்தின் தடிப்பான உதடுகளிலிருந்து நயமான நாதசுர மிழற்றல்!
“நானிலம் நடுங்கப் படை நடத்திக் கொண்டிருப்பவன் நான்! அகிலத்தையே என் அடி தொட்டுக் கிடக்க வைக்கும் ஆற்றல் மிகு சக்கரவர்த்தி நான்!” அலெக்ஸாண்டர் மேலும் கர்ஜித்தான்!
“ஓஹோ!” புதிராகக் காட்சி தந்த கிழத்தின் வாயிலிருந்து புளகிக்கச் செய்யும் புல்லாங்குழல் நாதம்!
“என்னைப் போல் ஒரு வீரன் இந்த மண்ணுலகில் தோன்றியதில்லை! தோன்றப் போவதுமில்லை! ஆம்! என்னை ஈன்றெடுத்த அன்னை மட்டுமல்ல! அந்த ஆண்டவனே நினைத்தாலும் இன்னொரு அலெக்ஸாண்டரை உருவாக்க முடியாது! அப்படிப்பட்ட புகழுக்கு உரியவன் நான்!” ஆக்கிரோஷத்தோடு நெருங்கினான் அலெக்ஸாண்டர்!
“ஓஹோஹோ!” என்று கிண்கிணிக் குரல் கொடுத்த அந்தக் கிழம், தன் முகத்தில் ஒரு சாந்தப் புன்னகையைத் தவழவிட்டது!
அந்தப் புன்னகைக்குத் தான் என்ன சக்தி! அலெக்ஸாண்டரின் ஆர்ப்பரிப்பு அடங்கிவிட்டதே! தணலாகப் புறப்பட்டு வந்தவன் இப்போது புனலாக மாறிவிட்டானே! காந்தக் கண்களின் கவர்ச்சியில் கட்டுப்பட்டு, இரும்புத் துண்டாகவல்லவா நிற்கிறான்!
“தங்களைக் காணத்தான் வந்துள்ளேன். தத்துவ மேதையே! வைரங்கள்!  வைடூரியங்கள்! வண்ணமிகு ரத்தினங்கள்! கண்ணைப் பறித்திடும் கடல் நீலக் கோமேதகங்கள்! கத்தும் கடல் கொடுக்கும் முத்துச் சுடர் மணிகள்! இத்தனை செல்வங்களையும் நான் குன்று போல் குவித்துள்ளேன்! வேண்டியதைக் கேளுங்கள்! காணிக்கையாக்கச் சித்தமாய் இருக்கிறேன்!” என்று அலெக்ஸாண்டரின் கர்ஜனைக் குரலில் கனிவு மிகுதியும் கலந்திருந்தது!
தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த கிழம் காதைக் கொஞ்சம் திருப்பி, அதில் உள்ளங்கையை அமர்த்தி, “என்ன?” என்று ஓர் எதிர் கேள்வி எழுப்பிற்று!
“தங்களுக்கு என்ன வேண்டும்?” உரக்கக் கூவினான் அலெக்ஸாண்டர்!
“எனக்குச் சூரிய வெளிச்சம் வேண்டும்! மறைக்காமல் கொஞ்சம் தள்ளி நின்றால், அதுவே போதும்!”
கிழத்திடமிருந்து வந்த பதிலைக் கேட்டு வாயடைத்துப் போனான் அலெக்ஸாண்டர்! “மண்ணுலகமே வேண்டும்” என்று அவன் உலகை வலம் வருகிறான்!
ஆனால், இந்தக் கிழத்திற்குச் சூரிய வெளிச்சம் போதுமாமே! ஆம்! சூரியன் இல்லாவிட்டால் இந்த உலகம் ஏது?
அகங்காரத்தோடு வந்த அலெக்ஸாண்டர் அடக்கத்தோடு மண்டியிட்டான்!
Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)ஜென் ஒரு புரிதல் – 25
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *