சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)

This entry is part 14 of 16 in the series 17 ஜனவரி 2016

KS-Subramanian-300x260(1)

 

வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்

விலை: ரூ 350.

தொடர்புக்கு : வர்த்தமானன் பதிப்பகம், சென்னை

மின்னஞ்சல் முகவரி: varthashree@gmail.com

 

 

 

 

நூல் குறித்து

 

 

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம் மொழிகள். இவற்றிடையேயான உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு / நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங் களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது. இந்தக் கூறுகளை இனங்கண்டு பதிவு செய்யும் ஓர் எளிய தேடல் முயற்சிதான் இந்த நூல்.

இந்த நூலில் 480 ஸம்ஸ்க்ருத மேற்கோள்களும், 790 தமிழ் மேற்கோள்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் காலவரம்புகளால் கட்டுப் படுத்தப்படாமல் தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை வியாபகம் கொண்டுள்ளன.

இரு பண்டைய இந்தியச் செம்மொழிகளிடையே இணையாகப் பரிணாமம் கொண்டுள்ள சிந்தனையோட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வுக்கும், இந்த இரண்டு மொழி ஆர்வலர்களிடையே ஒற்றுணர்வுக்கும் ஓரளவாவது வழிவகுக்கவேண்டும் என்ற நம்பிக்கையே இந்த நூலின் நோக்கம்.

img194(1)

மேற்காணும் வாசகங்கள் நூலின் பின்னட்டையில் இடம்பெறும் வரிகள். நூலின் தொகுப்பா சிரியர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தமிழிலக்கிய உலகிற்குக் குறிப்பிடத்தக்க பங்காற்றி யிருப்பவர். பங்களித்துவருபவர். ஆசிய வளர்ச்சி வங்கியில் ஓர் இயக்குனராகப் பணி ஓய்வு பெற்று இந்தியாவுக்குத் திரும்பியதிலிருந்து தரமான தமிழ்ப்படைப்புகளை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் ஆங்கிலம் வழியாக அறிமுகம் செய்துவைப்பதில் முனைப்போடு இயங்கிவருபவர். ஜெயகாந்தனின் பல நூல்கள், அசோகமித்திரனின் சில நூல்கள், பாரதியார் கவிதைகள், உமாமகேசுவரியின் கவிதைகள், திலகவதியின் புதினம் கல்மரம், தற்காலத் தமிழ்க் கவிதைகள் மூன்று தொகுதிகள், சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை கவிதை வெளியில் இயங்கிய, இயங்குகின்ற பெண்களின் கவிதைகள், கவிஞர்கள் சிற்பி, புவியரசு, தமிழன்பனின் படைப்பாக்கங்கள் என பலவற்றை ஆர்வத்தோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

தற்காலத் தமிழ்க்கவிஞர்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது சம்பந்தப்பட்ட கவிஞர் களை தொடர்புகொண்டு அனுமதி வாங்கி தனது மொழிபெயர்ப்பை அவர்களுக்குப் படித்துக் காட்டி ஒப்புதல் வாங்கிய பண்பும் கண்ணியமும் குறிப்பிடத்தக்கது.

தனக்குப் பிடித்த படைப்புகளை மொழிபெயர்த்துவரும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பின் மூலம் கிடைக்கும் சன்மானத்தை மூல ஆசிரியருக்கே கொடுத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தான் மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு முயற்சிகளை labour of love என்கிறார்!

சிறுவயதில் தந்தை இறந்துபோய்விட, குடும்பச் சூழல் காரணமாய் ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் பத்துவருடங்கள் கழித்தவர். (தன்னுடைய அனுபவச் சுவடுகள் என்ற நூலில் இதுகுறித்தெல்லாம் எழுதியிருக்கிறார்). அந்த இல்லம் தன் கல்வி, முன்னேற்றத்துக்கு அடித்தளமாக விளங்கியதை மறவாமல் தன்னாலான உதவிகளை அந்த இல்லத்திற்குத் தொடர்ந்த ரீதியில் செய்துவருகிறார். அது தவிர, படிப்புக்காக எத்தனையோ பேருக்கு ‘வலது கை அளிப்பது இடது கைக்குத் தெரியாத வண்ணம் உதவி வருகிறார். நம்முடைய கடந்த காலத்தை மறக்கலாகாது என்பார். அதே சமயம், கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நேர்மறையான மனிதர்களையும், நிகழ்வுகளையுமே நினைவில் இருத்திக்கொள்வதையும், நினைவுகூர்வதையும் இயல்பாகக் கொண்டிருக்கிறார்.

அவருடைய இந்த நூல் அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில் சென்னை யிலுள்ள வர்த்தமானன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் குறித்து நமக்கு விமர்சனப் பார்வைகள் எழலாம். ஆனால், நூலின் நோக்கமே தமிழிலக்கியம் ஸம்ஸ்க்ருதத் திலிருந்துதான் எல்லாவற்றையும் இரவல் வாங்கியிருக்கிறது, களவாடியிருக்கிறது என்று நிறுவுவதுதான் என்று, எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் இந்த அரிய படைப்புமுயற்சிக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியாகியிருந்த ஒரு விமர்சனத்தைப் படித்து உண்மையிலேயே வருத்தமாயிருந்தது. அதேவிதமாய் அந்த விமர்சனத்திற்கும் உள்நோக்கம் கற்பிக்க முடியுமே என்று எண்ணத் தோன்றியது.

ஸம்ஸ்க்ருத மொழியிலும் தமிழ் மொழியிலும் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ள காரணத்தால், முழுக்க முழுக்க தன் வாசிப்பனுவம், ரசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நூலைத் தொகுத்துள்ளார். நூலில் இடம்பெறும் ஸம்ஸ்க்ருதக் கவிதைகளை தமிழிலும், அவற்றில் பலவற்றின் அர்த்தங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்துள்ளார் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். நூல் உருவான விதம் குறித்து ’என்னுரை’ பகுதியில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். அந்தப் பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் இந்த நூல் உருவாக்கத்தில் அவர் சொல்லச் சொல்ல எழுதி, எழுதியதை தட்டச்சு செய்துதரும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தகுந்த சன்மானமும் கிடைத்தது. (மற்றபடி, எனக்கு ஸம்ஸ்க்ருதத்தில் சிறுவயதில் தாத்தா சொல்லித் தந்த சில சுலோகங்கள் தெரியும் என்பதைத் தாண்டி, தேர்ச்சியொன்றும் கிடையாது.) அந்த சந்தர்ப்பங்களில் பாரதியார் கவிதைகளை, திருக்குறள் வரிகளை உருகியுருகி, கண்ணில் நீர் துளிர்க்க வாய்விட்டு டாக்டர் கே.எஸ் உரக்க வாசிப்பதையும், குறுந்தொகை, ஔவையார், சங்கப் பாடல்கள் முதல் நஞ்சுண்டன், மாலதி மைத்ரி, கோ.ராஜாராம், லீனா மணிமேகலை, அறிவுமதி, பாரதிதாசன், வண்ணதாசன், லீனா மணிமேகலை என எங்கே நல்ல வரிகள் தென்பட்டாலும் அவற்றில் பரவசத்தோடு ஒன்றிப்போய்விடுவதையும் அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

78 வயதெல்லாம் ஒரு வயதா என்ன என்று கேட்பதாய் டாக்டர் கே.எஸ் சுறுசுறுப்பாய் வேலை செய்வதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கும்! இப்பொழுது டாக்டர் மணிலால் பௌமிக்கின் சிந்தனையைத் தூண்டும் CODE NAME GOD என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருக் கிறார்!

 

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1937) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இளம் வயதில் தந்தையை இழந்த கே.எஸ். தன் அஸ்திவாரப் பருவத்தில் 10 ஆண்டுகள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் கொடை நிழலில் வாழ்ந்தார். இந்திய அரசுப் பணியில் (IRAS) 15 ஆண்டுகளும் (1960 – 1975), ஆசிய வளர்ச்சி வங்கியில் 22 ஆண்டுகளும் (1975 – 1998) பணிபுரிந்து, ஒர் இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார்.

1998 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பியதிலிருந்து இலக்கிய சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இவற்றில் நாவல்கள், குறுநாவல்கல், சிறுகதை / கட்டுரை / கவிதைத் தொகுப்புகள் அடங்கும். இலக்கிய, சமூக, வளர்ச்சிக் களன்களைத் தழுவிய இவரது தமிழ்க்கட்டுரைகள் ஏழு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.

அமரர் பாரத் ரத்னா சி.சுப்பிரமணியம் நிறுவிய தேசிய வேளாண் நிறுவனத்திலும், தமிழ் மொழி / கலாச்சார ஆய்வுமையமான ’மொழி’ அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றிவருகிறார். சாகித்ய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்

சிந்தனை ஒன்றுடையாள் நூலில் இடம்பெறும் டாக்டர்.கே.எஸ்.சுப்பிரமணியனின் என்னுரை

என் வாழ்வின் பத்து அஸ்திவார ஆண்டுகளை (1948 – 1958) ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் என்னும் ஏழை மாணவர் விடுதியின் கொடை நிழலில் கழித்தேன். அந்தப் பருவத்தில், ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள சில நூல்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, நாரத பக்தி ஸூத்ரம், பர்த்ரிஹரியின் நீதி சதகம், ஆதிசங்கரரின் விவேக சூடாமணி போன்ற நூல்களின் பகுதிகள் இவற்றில் அடங்கும். கல்லூரியில் திரு.வெங்கடாசலம் என்ற அற்புதமான ஸம்ஸ்க்ருத ஆசிரியர் (இறுதியாக, ஒரு ஸம்ஸ்க்ருதப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர்) மூலமாக காளிதாஸரின் படைப்புகளில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாயிற்று. அது படிப்படியாக வளர்ந்தது. கடந்த பல பத்தாண்டுகளில் அவ்வப்போது சில புதிய ஸம்ஸ்க்ருதப் படைப்புகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஏற்கனவே பரிச்சயமான பழைய நூல்களை அசைபோடுவேன். ஸம்ஸ்க்ருதத்தின்பால் இருந்த என் ஆர்வம் என்னுள் நிலைத்து இருந்தது.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு கொங்குப்பகுதியைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத ஆர்வலர் என்.வி.நாயுடுவின் An Anthology of Sanskrit Poetry (ஸம்ஸ்க்ருதக் கவிதைத் தொகுப்பு) என்ற தொகுப்பு நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல பொருண் மைகளை உள்ளடக்கிய தொகுப்பு. அது அர்த்தமுள்ள வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. பிறகு, பாரதிய வித்யா பவன், சின்மயா மிஷன் நிறுவனங்கள் பதிப்பித்த தொகுப்புகளையும் தேடிப் பிடித்து வாசித்தேன். இதன் நீட்சியாக ஏற்கனவே பரிச்சயமான ஆன்மிக/ தத்துவ நூல்களையும், காளிதாஸரின் பல படைப்புகளையும் மீண்டும் படிக்கத் தொடங்கினேன். இதன் பயனாகப் பல புதிய சாளரங்கள் திறந்தன. ஒரு பிரமிப்பு என்னை ஆட்கொண்டது.

இந்த நூல்கள் பெரும்பாலும் ஆங்கில உரையுடன்தான் இருந்தன. என்னுடைய கோணத்தில் தேர்ந்தெடுத்த, பல பொருண்மைகளைத் தழுவிய ஸம்ஸ்க்ருத மேற்கோள்களைத் தொகுத்து, அவற்றின் தேவநாகரி எழுத்துமுறையைத் தமிழ் எழுத்துப்பெயர்ப்புடனும் (transliteration), தமிழ் மொழிபெயர்ப்புடனும் தந்து ஒரு நூலை உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆரோக்கியமான தயக்கத்தையும் மீறி இந்தப் பணியைத் தொடங்கினேன். இந்த நூலுக்கு ‘ஒரு ஸம்ஸ்க்ருத முத்துக்குளியல்’ என்ற நாமகரணமும் என் உள்ளத்தில் அரங்கேறியது!

தொகுப்பு முயற்சி சூடு பிடித்தது. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு. ஓர் எண்ணம் என்னுள் மெல்ல மெல்ல மொட்டவிழ்ந்தது. பல ஸம்ஸ்க்ருத மேற்கோள்களுக்கு இணையான தமிழ்க் கவிதைகளும் பதிவுகளும் என்னுள் தலைகாட்டத் தொடங்கின. பொருத்தமான தமிழ் மேற்கோள்களைத் தேடிக் கண்டுபிடித்து இணைப்பது ஒரு பொருளார்ந்த முயற்சியாக அமையலாம்.

இந்திய மொழிகளில் தமிழும் ஸம்ஸ்க்ருதமும். மிகவும் தொன்மை யான இரண்டு செம்மொழிகள். இந்த இரண்டு மொழிகளுக்கும் இடையேயான உறவு தமிழ் நூல்களில் சுட்டப்பட்டுள்ளது. இந்த உறவு குறைந்தபட்சம் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இலக்கிய அடிப்படையில் இந்த உறவுப்பாலம் சார்ந்த தேடல் சுவையானதாகவும், பயனுள்ளதாகவும் அமையலாம்.

என் அணுகுமுறையில் ஒரு மடைமாற்றம் நிகழ்ந்தது. இந்த முயற்சியை நானே மேற்கொள்ளலாமா என்ற பேராசை.

இதற்கான என் தகுதியை நிதானமாக எடைபோட்டேன். ஸம்ஸ்க்ருதப் படைப்புகளுடனான என் பரிச்சயத்தைப் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளேன். தமிழை ஏழாம் வகுப்பு வரைதான் முறையாகப் பயின்றிருக்கிறேன். பல பத்தாண்டுகளாக என் உள்ளார்ந்த ஆர்வத்தாலும் சுயமுயற்சியாலும் தமிழ் இலக்கியத் தையும், நவீன இலக்கியப் படைப்புகளையும் வாசித்து ரசித்திருக் கிறேன். சில பண்டைய இலக்கியங்களைப் பெரும்பாலும் உரைகள், துணை நூல்கள் வாயிலாகப் பயின்றிருக்கிறேன். படிப்பதை எல்லாம் குறிப்புகள் எடுத்துப் பாதுகாப்பதும் பயன்படுத் துவதும் என் வழக்கம். ஆர்வமும் பல்லாண்டு உழைப்பும் பல வாயில்களைத் திறந்தன.

என்னுடைய தமிழ்த் தேடலின் ஓர் அங்கமாக இலக்கிய, சமூக, வளர்ச்சிக் களங்களைத் தழுவிய என் தமிழ்க் கட்டுரைகள் ஏழு நூல்களாக வெளிவந்துள்ளன. இந்த வெளியீடுகள் என்னுடைய தமிழ்மொழிப் பரிச்சயத்துக்கும், புரிதலுக்கும் ஓரளவு கூர்மையை நல்கியிருந்தன.

பல பத்தாண்டுகளாக நான் வாசித்துச் சிறுகச் சிறுகச் சேகரித்து வைத்திருந்த ஸம்ஸ்க்ருத/தமிழ் இலக்கிய அறிவுக்கு ஒரு வடிகால் கிடைத்துவிட்டதாக எண்ணியதால் ஒரே நேரத்தில் ஆர்வமும் தயக்கமும் எழுந்தன. தயக்கம் என்னைப் பின்னுக்கு இழுத்தது; ஆர்வம் உந்தியது. இறுதியில் ஆர்வம் வென்றது.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்தத் தேடல் முயற்சி தீவிரம் அடைந்தது. முன்பு பரவலாக இருந்த என் வாசிப்பு அனுபவத்தின் இலக்கு கூர்மை பெற்றது.

சில சங்க இலக்கியப் படைப்புகள், திருக்குறள், நாலடியார் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் போன்ற சில மூல நூல்களை உரையாசிரியர்களின் துணையுடன் மீண்டும் வாசித்தேன். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளின் இனிமையும் உயிர்ப்பும் கைகொடுத்தன. வையாபுரிப் பிள்ளையின் ‘புறத் திரட்டு’ ஓர் அரிய களஞ்சியம். திருமூலர், நாயன்மார்கள், ஆழ்வார்களின் பக்தி இலக்கியம் குறித்து எழுதப்பட்ட துணை நூல்கள்; நான் பல பத்தாண்டுகளாக வாசித்து, குறிப்பெடுத்த பல நவீன, பண்டைய படைப்பிலக்கியக் குறிப்புகள்; 600க்கும் மேற்பட்ட ‘புதுக் கவிதை’க ளையும், ஏறத்தாழ 80 சங்கப்பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அனுபவத்தோடு தமிழ் இலக்கிய மேற்கோள் களைச் சேகரித்தேன். இவற்றோடு, தேர்ந்த தமிழ்ப் புலமை உள்ள நண்பர்களின் உதவியுடன் சேகரித்த சில இலக்கிய மேற்கோள்களை யும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த முயற்சியின் விளைவாகக் கிடைத்த பலன் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

இந்த நூலுக்கான கட்டமைப்பு ஒருவாறு என் மனதில் உருவாயிற்று. ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் வாழ்வியல், ஆன்மிக, தத்துவப் படைப்புகளிலிருந்து பல கருப்பொருள்கள் சார்ந்த மேற் கோள்களைத் தேடித் தொகுப்பது. பிரபஞ்சப் பார்வை, மனித நேயம், ஆன்மிகம், இறைத்தத்துவம், வாழ்வியல் கூறுகள், அரசு நிர்வாகம், நற்பண்புகள், பெண்ணின் உலகம், வாழ்வுக்காதல், அழகியல், அறிவியல், இலக்கிய நயம் என்று பொருட்தலைப்பு களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸம்ஸ்க்ருத மேற்கோள்களைத் தமிழில் எழுத்துப்பெயர்ப்புச் செய்வதுடன் தமிழில் பொருள் தருவது; இயன்றவரையில், ஒத்த கருத்தையோ, இணையான கருத்தையோ எதிர்மறை நிலைப்பாட்டையோ உள்ளடக்கிய மேற்கோள்களைத் தமிழ் இலக்கியக் களத்திலிருந்து தேடித் தொகுப்பது; பழந்தமிழ் மேற்கோள்களுக்கும் பொருள் தருவது ஆகியவற்றுடன் பதிவு வட்டக் கட்டமைப்பு முடிவடைகிறது.

பக்தி இலக்கிய மேற்கோள்களைத் துணை நூல்கள், தொகுப்பு நூல்கள் மூலமாகச் சேகரித்ததால், எந்தப் பதிப்பிலிருந்து எடுத்தவை என்ற விவரம் இங்குத் தரப்படவில்லை. இந்த பக்தி இலக்கிய மேற்கோள்களுக்குப் பொருளும் தரவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் இன்றும் புழக்கத்தில் உள்ளவை; இரண்டு, இவற்றில் தத்துவச் செறிவு இருப்பதால் அவற்றை உள்வாங்குவதில், வாசகப் பிரதி (ணூஞுச்ஞீஞுணூடூதூ tஞுதுt) முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, வாசகர்கள் தங்களின் படிப்பு அனுபவத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நானூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத மேற்கோள்களுக்கு பொருத்தமான தமிழ் மேற்கோள்களைக் கண்டடைவது தலைசுற்றும் முயற்சி. பொருத்தத்தை எவ்வாறு நிர்ணயிப்பது? சில மேற்கோள்களின் பொருத்தம் வெளிப்படையாக இருந்தது. சில தமிழ் மேற்கோள்களில் ஸம்ஸ்க்ருத மேற்கோளின் சாயல் நிழலாடுவதாக எனக்குப் பட்டது. அவற்றையும் தேர்ந்தெடுத்தேன். எல்லா வாசகர்களுக்கும் அந்த நிழலாட்ட உறவு உடனே புலப்படாமல் போகலாம். ஏன், எனக்கே ஒருசில தமிழ் மேற்கோள்களில் எந்த விதமான ஒத்ததிர்வு என் உணர்வை வருடிச் சென்று மறைந்தது என்பதைத் துல்லியமாக இன்று இனங்காண முடியவில்லை. எனினும் அந்தக் கன்னிக் கணத்தின் சத்தியத்தை, சட்டாம்பிள்ளைத்தனமான மீள்பார்வையின் அடிப்படையில் தணிக்கை செய்து விலக்க முயலவில்லை. தமிழ் மேற்கோளில் ஸம்ஸ்க்ருத வாசகத்துக்கு மாறுபட்ட கருத்தும் இருக்கும்.

இந்த இடத்தில், ஒரு விளக்கம் பொருத்தமுள்ளதாக இருக்கும். இந்தத் தொகுப்பின் நோக்கமே, இரண்டு பழம்பெரும் செம்மொழிகளில் காலங்காலமாக பல சிந்தனைகள் இணையாகப் பரிணமித்துப் பதிவாகியுள்ளன என்பதைக் காட்டுவதுதான். இந்தச் சிந்தனை மரபும், சிந்தனை இழைகளும் காலத்தை வென்று இன்றையத் தமிழ் இலக்கியக் களனிலும் வியாபித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீடித்த உறவைப் படம் பிடிக்க முயல்வதுதான் இந்த நூலின் குறிக்கோள்; காலவரிசைப்படி ஒப்புநோக்குவது அல்ல.

ஒரு சில தமிழ் மேற்கோள்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருண் மைப் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. இயைபும் பொருத்தப் பாடும்தான் இதற்குக் காரணம். அவை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இயல்பாக அமர்ந்திருக்கின்றன.

தமிழ் மேற்கோள்கள் பற்றிய புள்ளி விவரம் பதிவுசெய்யத் தக்கது என்று தோன்றுகிறது. இந்தத் தொகுப்புநூலில் இடம்பெற்றுள்ள மொத்த ஸம்ஸ்க்ருத மேற்கோள்கள் 480. தமிழ் மேற்கோள்களின் எண்ணிக்கை 790; அதாவது, 65% அதிகம். தமிழ் மேற்கோள்களைப் பரவலான வகைமைப்படிப் பார்ப்பதும் சுவையாக இருக்கலாம்.   (டி)தொல்காப்பியம் முதலிய இலக்கண/அழகியல் நூல்கள்: 67(8.5%); (டிடி) சங்க இலக்கியம் : 156 (19.8%) ; (டிடிடி) திருக்குறள் : 127 (16.1%) ; (டிதி) நீதி இலக்கியம் : 147 ( 18.1%) ; (தி) காப்பியங்கள் : 37 ( 4.7%) ; (திடி) பக்தி இலக்கியம் : 116(14.7%) ; (திடிடி) நவீன இலக்கியம் : 138 (17.5%) . இந்தத் தொகுப்பில் தமிழ் மேற்கோள்களின் வலுவான இருப்பையும், அவற்றின் தோற்றுவாய்களின் பரந்த வீச்சையும் காலப் பரப்பையும் இந்த எண்கள் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்.

தமிழ் மேற்கோள்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ‘பொருள்’ பல உரை நூல்களிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த உரை நூல்களைப் பற்றிய விவரங்கள், ‘இந்த நூலைக் கட்டமைக்க உதவிய நூல்கள்’ என்ற பின்னிணைப்பில் பதிவுசெய்யப்பட்டுள் ளன. ஒவ்வொரு மேற்கோளிலும் இந்த விவரம் குறிப்பிடப்பட வில்லை.

அடுத்து, ஸம்ஸ்க்ருத வாசகத்தைத் தமிழில் எழுத்துப்பெயர்ப்புச் (tணூச்ணண்டூடிtஞுணூச்tஞு) செய்வதில் உள்ள சவால். இது எவ்வாறு மேற்கொள் ளப்பட்டுள்ளது என்பது ஒரு தனிக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. இதைக் கணினியில் பதிவேற்றம் செய்வதும் அதை ‘பிழைத் திருத்தம்’ பார்ப்பதும் பிரசவ வேதனைதான். இறுதியில் சுகப் பிரசவம்தான் என்பது என் நம்பிக்கை.

இவ்வளவு உழைப்புக்குப் பிறகும் சில பிழைகள் ஒளிந்துகொண் டிருக்கலாம். இதற்கு நானே முழுப் பொறுப்பு. புலமை உள்ளோர் இவற்றைச் சுட்டிக்காட்டினால் நான் நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்வேன்.

இந்த நூலில் உள்ள பதிவுகளை எவ்வாறு வகைப்படுத்துவது? அள்ளித் தெளித்த கோலமாக உலா வர விடுவதா? அல்லது, அர்த்தமுள்ள பகுதிகளாக வகைப்படுத்துவதா? இரண்டாவது அணுகுமுறையே பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தேன். இந்தப் பகுதிப் பிரிப்பு ஓரளவு பட்டையான தூரிகை வீச்சாகத்தான் இருக்க முடியும் : மிகவும் துல்லியமாக வரம்பு வரைய முற்பட்டால் பகுதிகளின் எண்ணிக்கை அளவுக்கு மீறிப் பெருகிவிடும். இந்தப் பின்புலத்தில், இந்த நூலின் ‘உள்ளடக்கத்தில்’ உள்ள பகுதிகள் முற்றிலும் தனித்தியங்கும் கோள்கள் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண் டும். ஒரு பகுதியில் உள்ள ஒரு பதிவு இன்னொரு பகுதியிலும் இடம்பெறத் தகுதி உள்ளதாக இருக்கலாம். இத்தகைய நெகிழ்வுத் தன்மை தவிர்க்க இயலாதது.

இந்த நூலை உருவாக்குவதில் எனக்கு உதவிய மூல நூல்கள், தொகுப்பு நூல்கள், துணை நூல்களின் பட்டியல் ஓர் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய தேடல் முயற்சி எவ்வாறு பரந்த களத்தில் பயணித்துள்ளது என்பதை இந்தப் பட்டியல் உணர்த்தும்.

இந்த முயற்சியில் எனக்கு உதவியும் ஊக்கமும் அளித்த நண்பர்       களை நன்றியுடன் நினைவு கூர விரும்புகிறேன். எனக்கு ஆலோசனையும் ஊக்கமும் அளித்து உதவிய நண்பர்கள் முனைவர் பா.ரா. சுப்பிரமணியன், முனைவர் ம.ராஜேந்திரன், முனைவர் கே.ஏ. வரதன், முனைவர் வ. ஜெயதேவன். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த நூலை வெளியிட உற்சாகமாக முன்வந்து உதவிய ஸ்ரீ வர்த்தமானனுக்கும் வர்த்தமானன் பதிப்பகத்துக்கும் என் இதயங் கனிந்த நன்றி.

ஸம்ஸ்க்ருத மேற்கோள்களைப் பொருத்தமான எழுத்துப்பெயர்ப் புக் குறியீடுகளுடன் கணினியில் பதிவேற்றம் செய்வது பொறுமை யையும் ஈடுபாட்டையும் மிகவும் சோதனைக்கு உள்ளாக்கும் வேலை. இதில் அடிக்கடி திருத்தங்கள் வேறு. தமிழ் மூல / தொகுப்பு/ இணை நூல்களிலிருந்து தமிழிலக்கிய மேற்கோள்க ளைத் தேர்வு செய்து பதிவு செய்தல். அவற்றைப் பொருத்த வேண் டிய பொருண்மைசார் இடங்களை நிர்ணயித்தல், அவ்வப்போது சில மாற்றங்கள் செய்தல் – இவை போன்ற சலிப்பூட்டும் பணிக ளைச் சிறிதும் தொய்வின்றி, தளராத உற்சாகத்துடன் திறமையாக மேற்கொண்ட நண்பர் லதா ராமகிருஷ்ணனின் அரிய உதவிக்கு என் உளங்கனிந்த நன்றியும் பாராட்டுகளும்.

இந்தத் தொகுப்புநூலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பது பற்றி என் நண்பர்களுடன் ஒரு சுவையான சொல்லாடல். பல பெயர்கள் களத்தில். நண்பர் ம.ராஜேந்திரன் பாரதியாரின், ‘எங்கள் தாய்’ கவிதையை நினைவுகூர்ந்தார். “…. ‘செப்புமொழி பதினெட்டுடை யாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ – இந்த வரிகள் இந்தத் தொகுப்புநூலின் அடிநாதத்தைப் பிடிப்பதுபோல் தோன்றுகிறது. இரண்டு பண்டைய மொழிகளினூடே உள்ள சிந்தனை ஒற்று மையை வலியுறுத்துவது இந்த நூலின் முக்கிய நோக்கமல்லவா? எனவே ‘சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற தலைப்பு எவ்வாறு இருக்கும்?” என்று கூறினார். இந்தத் தலைப்பின் பொருத்தம் என்னை வெகுவாக ஈர்த்தது. பெயர்சூட்டுவிழா இனிதே நிறைவடைந்தது!

இறுதியாக, ஒரு தன்னிலை விளக்கம். இந்த நூல் தமிழ், ஸம்ஸ் க்ருத மொழிகளில் ஆர்வமுள்ள ஒரு பயணியின் எளிய தேடல் முயற்சிதான். இணையான கருத்துப்பதிவுகள் உள்ள சில ஸம்ஸ் க்ருத – தமிழ் இலக்கிய மேற்கோள்களின் தொகுப்புதான். இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இருமொழி மேற்கோள்களுக்கிடையே புலப்படும் ஒற்றுமை / வேற்றுமைகளைப் பற்றி முடிவு செய்வது வாசகர்களின் உரிமை.

இந்த முயற்சி எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இரு பண்டைய இந்தியச் செம்மொழிக ளிடையே இணையாகப் பரிணாமம் கொண்டுள்ள சிந்தனைகளைப் பற்றிய புரிந்துணர்வுக்கும், இதன் அடிப்படையில் இந்த இரண்டு மொழி ஆர்வலர்களிடையே தேவைப்படும் ஒற்றுணர் வுக்கும் ஓரளவாவது இந்த நூல் வழிவகுக்குமானால் நான் மனநிறைவு அடைவேன்.

 

சென்னை, ஜூன், 2015.                                 கே.எஸ்.சுப்பிரமணியன்

 

 

 

 

 

சிந்தனை ஒன்றுடையாள் நூலிலிருந்து சில வரிகள்:

 

பிரபஞ்சப் பார்வை’

 

ஸர்வபூ4தஸ்தமாத்மானம் ஸர்வபூ4தானி ச ஆத்மனி   │

ஸம்பஸ்0யன் ப்3ரம்ம பரமம் யாதி நான்யேன ஹேதுனா! ││

கைவல்ய உபநிஷத3ம் 10

 

 

பொருள்:

எல்லா உயிர்களிடத்திலும் தன்னைக் காண்பதாலும், எல்லா உயிர்களையும் தன்னில் காண்பதாலும், ஒருவன் ப்ரம்மத்தை அடைகிறான்; வேறு எந்த வழியிலும் அல்ல.

 

 

 

தமிழில் பாரதியின் வரிகள்:

 

“வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானிழல் வளரு மரமெலாம் நான்;

காற்றும் புனலும் கடலுமே நான்;

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்;

அவைபிழை யாமே சுழற்றுவோன் நான்;

கண்டநற் சக்திக் கணமெலாம் நான்;

காரணமாகிக் கதித்துளோன் நான்;

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

ஞானச்சுடர்வானில் செல்லுவோன் நான்;

ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

அறிவாய் விளக்குமுதற் சோதி நான்…”

 

 

 

பஞ்சதந்த்ராவிலிருந்து மனிதநேயம் சார்ந்த ஒரு மேற்கோள்:

 

ப்ராகாஸ்0யம் ஸ்வகு3ணோத3யேன கு3ணினாம் க3ச்சந்தி கிம் ஜன்மனா │

பஞ்சதந்த்ரா (1.94)

 

பொருள்:

பெரியோர் தம் சீரிய பண்புகளால் புகழ் எய்துகின்றனர். பிறந்த குலத்துக்கு இதில் என்ன தொடர்பு?

 

தமிழில்:

 

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 

திருக்குறள். 972

 

 

பொருள்:

 

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

 

 

 

 

ஆன்மாவின் தன்மை குறித்த ஈஸாவாஸ்ய உபநிஷத் வாக்கியம்:

 

ததே3ஜதி தன்னைஜதி

தத்3தூ3ரே தத்3வந்திகே                   │

தத3ந்தரஸ்ய ஸர்வஸ்ய தத்3

ஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத :         ││

ஈஸா0வாஸ்ய உபநிஷத3ம்

 

பொருள்:

அது (ஆன்மா) இயங்குகிறது, இயங்காமலும் உள்ளது; அது தொலைவில் உள்ளது, மிக அருகிலும் உள்ளது; அது அனைத்தின் உள்ளும் உறைகிறது, அனைத்தின் வெளியிலும் உள்ளது.

 

தமிழில்:

 

உள்ளத்தும் உள்ளன்புறத்துளன் என்பவர்க்கு

உள்ளத்துளன்புறத்துளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லைபுறத்தில்லை தானே ?

 

திருமூலர்.

 

 

மெய்யறிவு அல்லது ஆன்மஞானம் சடங்குகள் சார்ந்தது அல்ல என்ற ஆதிசங்கரரின் விளக்கம்:

 

யானி கர்மாணி ஸா0ஸ்த்ரேண விதீ4யந்தே

தான்யபி அவிது3ஷோ விஹிதானி         │

 

பொருள்:

 

சாத்திரங்களில் கட்டளையிடப்பட்டுள்ள சடங்குகள் மெய்யறிவு (ஆன்மஞானம்) அடையாதவர்களுக்கே.

 

 

தமிழில் வள்ளலாரின் பொன்மொழி:

 

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டே.

 

 

பக்தியைப் பற்றிய நாரத பக்திஸூத்ரத்தின் சித்திரம்:

 

ஞாத்வா மத்தோ ப4வதி ஸ்த3ப்தோ4

ப4வதி ஆத்மராமோ ப4வதி

 

பொருள்:

எதை அறிந்து மது அருந்தியவன்போல் ஆகின்றானோ, ஐம்பொறி இழந்தவன்போல் ஆகின்றானோ, ஆன்மாவில் ஆழ்ந்து இன்புறுகிறானோ – அதுவே ப4க்தி.

 

 

 

தமிழில் திருமூலரின் உயிர்த்துடிப்புள்ள வரிகள்:

 

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

என் பொன் மணியை இறைவனை ஈசனைத்

தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே!

 

மக்கள் சார்பே அரசனின் அணிகலன் என்ற கௌடில்யரின் அர்த்தசாஸ்திரப் பதிவு:

 

ப்ரஜாஸுகே2 ஸுக2ம் ராஞ்ஞ : ப்ரஜானாம் ச ஹிதே ஹிதம்     │

நாத்மப்ரியம் ப்ரியம் ராஞ்ஞ : ப்ரஜானாம் து ப்ரியம் ஹிதம்.

கௌடில்யரின் அர்த்தஸா0ஸ்திரம்

 

பொருள்:

மக்களின் மகிழ்ச்சியே மன்னனின் மகிழ்ச்சி. மக்கள் நலனே மன்னனின் நலன். மன்னனுக்குத் தனிப்பட்ட விருப்பம் என்று ஒன்று இல்லை. மக்கள் விருப்பமே அவன் விருப்பம்

 

 

தமிழில் திருவள்ளுவர் இலக்கணம்:

 

கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு

முடையானாம் வேந்தர்க் கொளி.

 

திருக்குறள் – 390

 

 

பொருள்:

கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக் காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்கு போன்றவன்.

 

 

 

நிர்வாகத்தில் பணித்தகுதியின் முக்கியத்துவத்தைச் சாணக்ய நீதி அடிக்கோடிட்டுக் கூறுகிறது:

 

 

யோ யஸ்மின் கர்மணி குஸ0ல : ஸ

தஸ்மின்னியோக்தவ்ய :│

 

சாணக்யநீதி (2)

 

பொருள்:

ஒருவன் எந்தப் பணியில் ஆற்றல் உள்ளானோ அந்தப் பணியையே அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

திருக்குறள்:

 

இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

 

திருக்குறள் 517 .

பொருள்:

ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 

 

உள் உந்துதலின் அடிப்படைத் தாக்கத்தை வலியுறுத்தும் யோக வாஸிஷ்டா வாக்கு:

 

அந்த : ஸம்ஸக்திரேவைகம்

காரணம் ப3ந்த4மோக்ஷயோ :│

 

யோக3வாஸிஷ்டா (5.67.34)

 

பொருள்:

(உள்ளார்ந்த உயிர்ப்பே அடிமைத்தனத்துக்கும் விட்டு விடுதலை யாவ தற்கும் காரணமாய் அமையும்.)

 

 

இந்தக் கருத்து குறித்த கணியன் பூங்குன்றனாரின் அமர வரி:

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

 

பொருள்:

கேடும் ஆக்கமும் பிறரால் விளைவதன்று.

 

 

 

உயிர்த்துடிப்புள்ள பாரதிதாசனின் கவிதை வரிகள்:

 

பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே

அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!

கன்னங்கருத்த இருட்டின் கறையே

தொங்கும் நரம்பின் தூளே! இதைக் கேள்;

மனிதரில் நீயுமோர் மனிதன், மண்ணன்று!

இமை திற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!

தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!

மீசையை முறுக்கி மேலே ஏற்று!

 

 

 

உலகம் இனிது என்று உவகையுடன் கூறுகிறார் காளிதாஸர்:

 

அஹோ உதா3ர ரமணீயா ப்ருதிவீ       │

 

காளிதாஸரின் அபிஞ்ஞான ஸா0குந்தலம் 7.8

பொருள்:

ஆஹா! இவ்வுலகம் எத்துணை அழகு!

 

 

உலகின் அழகைப் பருகிக் கூத்தாடுகிறார் பாரதியார்!

 

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவு மமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறி படைத்தோம்.

உலாவு மனச்சிறு புள்ளினை யெங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம் ;

பலாவின் கனிச்சுளை வண்டியி லோர்வண்டு

பாடுவதும் வியப்போ?

 

 

காதல் பரவசத்தைப் பற்றி காளிதாஸரின் மேகதூதத்தில் மேகத்தை நோக்கி யக்ஷன் கூறுகிறான்:

 

தஸ்மின்காலே நயனஸலிலம் யோஷிதாம் க2ண்டி3தானாம்

ஸா0ந்திம் நேயம் ப்ரணயிபி4ரதோ வர்த்ம பா4னேஸ்த்யஜாஸு0│

ப்ராலேயாஸ்த்ரம் கமலவேத3னாத்ஸோபி ஹர்த்தும் நலின்யா :

ப்ரத்யாவ்ருத்தஸ்த்வயி கரருதி4 ஸ்யாத4னல்பாப்4யஸூய :             ││

 

 

பொருள்:

இதுதான் விடியல் நேரம். சிணுங்கும் பெண்களின் கண்ணீரைக் காதலர்கள் துடைக்க முயலும் நேரம். சூரியனின் பாதையிலிருந்து விரைவாக விலகு. ஏனெனில், அவனும் கண்ணீர் துடைக்கவே வருகிறான் சு தாமரையின் முகத்தில் கண்ணீர்போல் திரண்டுள்ள பனித்துளிகளைத் துடைக்க வருகிறான். அவனது கதிர்களை மறைப்பது முறையன்று.

 

இதே அதிர்வுகள் உள்ள அள்ளூர் நல்முல்லையாரின் குறுந்தொகை வரிகள் :

 

‘குக்கூ’ என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் சு

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

 

பொருள்:

கோழி குக்கூ என்று கூவிற்று. எனது தோளை மணந்த காதலரைப் பிரியச் செய்யும் வாளைப் போல வைகறைப் பொழுது வந்தது. அதனால், என் தூய நெஞ்சம் ‘துட்’கென அச்சம் கொள்வதாயிற்று.

 

 

Series Navigationஒலியின் வடிவம்தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *