சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்

This entry is part 23 of 26 in the series 10 மே 2015

India-Pakistan-Tamil-Movie

0

1.தொழில் போட்டியால் மோதலில் ஆரம்பிக்கும் வக்கீல் ஜோடி காதலில் சிக்கும் கதை

2.இரு இதயங்களை காதலால் இணைய வைக்கும் இந்தியன் பீனல் கோட்!

3.இரு துருவங்கள் காதல் வயப்பட்டு ஒரு துருவமாகும் படம்!

பல்பொருள் அங்காடியில் மெலினாவை பார்க்கிறான் கார்த்திக். மெல்ல காதல் அவன் இதயத்தில் எட்டிப் பார்க்கும்போது, அவனுக்குப் பிடித்த ‘காதலுக்கு மரியாதை’ திரைப்பட குறுந்தகடு அவளுக்கும் பிடிக்கிறது. ஆனால், அதன் உள்ளே ஒரு சிக்கல் இருப்பது அறியாமல், இருவரும் அந்த தகடுகளை வாங்குகிறார்கள். முக்கிய சாட்சியை, போலி என்கவுன்டரில் சுட்ட, லஞ்சலாவண்ய காவல் அதிகாரியை படம் பிடித்த காட்சிகள் இருக்கும் குறுந்தகடு, மெலினாவிடம் இருப்பதாக எண்ணி, அந்த சதிகார காவல் அதிகாரி, அவளைத் துரத்துகிறான். அவளைக் காப்பாற்றி, காதலிலும் வெற்றி அடைகிறான் கார்த்திக்.

கார்த்திக்காக நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு இதுவும் ஒரு நஷ்டம் தராத படம். நடிப்பிலும் சிறிதளவு முன்னேற்றம். அனுஷ்காவின் தங்கை போலிருக்கும் சுஷ்மா ராஜுக்கு மெலினா வேடம். அழகிய வளைவுகளுடன் அசத்தல் அறிமுகம். வீடு புரோக்கர் ஹரிதாசாக ஜெகன், சுளிப்பை கொள்முதல் செய்து, கடை விரிக்கிறார். நண்பன் செல்வமாக வரும் காளி சரத் வெகுளியான கமெண்டுகளில் கவர்கிறார். காவல் அதிகாரியாக வில்லன் புருஷோத்தமன், பார்த்த ரகம். பயங்காட்டாத முகம். காமெடி கிராமத்து பெரியவர்களாக பசுபதியும், எம்.எஸ்.பாஸ்கரும், கிச்சு கிச்சு மூட்ட மறந்து விடுகிறார்கள். சில காட்சிகளில் கார்த்திக்கின் அம்மாவாக வரும் ஊர்வசி, அசத்துகிறார்.

இசைக்குப் புதியவரான தீனா தேவராஜனின் பின்னணி இசையில் வித்தியாசம். பாடல்களில் கொஞ்சம் ஆயாசம். ஒளிப்பதிவாளர் ஓம், தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

திரில்லர் கதையாக ஆரம்பித்து, நடுவில் காமெடிக்குத் தாவி, கடைசியில் சஸ்பென்சுடன் முடிக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த். நினைத்தோடு சரி. படம் இரண்டும் கெட்டானாய் மலர்ந்திருக்கிறது. ஆனாலும், வலிந்து திணிக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளை வெட்டி விட்டால், இதுவும் ஒரு நல்ல படமே!

0

சினிமா பார்வை : பாதி கிணறு

0

ரசனை மொழி : விஜய் ஆன்டனி கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தாச்சு!

0

Series Navigationகவிதைகள்ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *