சிமோன் அப்பா

This entry is part 11 of 14 in the series 25 செப்டம்பர் 2022

          கி தெ மொப்பசான்

                           தமிழில் நா. கிருஷ்ணா

(1er décembre 1879  பிரசுரமான் இச்சிறுகதையில் ஆற்றங்கரை யில் ஒரு சிறுதவளை மீதான படைப்புப் பார்வையும்,  மொப்பசானுக்கே உரிய வகையில் இக்கதையில் ஒளிந்துள்ள மெலிதான நுட்பமும் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. )

 நண்பகல், காலை நேர வகுப்புகள் முடிவுக்குவந்ததை தெரிவிக்கும் வகையில் பள்ளி மணி அடித்து ஓய்ந்தது.  பள்ளிக் கதவு திறக்கப்பட்டது, பையன்கள் முந்தி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியேறினார்கள். வழக்கமாக வகுப்பிலிருந்து வெளியேறிய அடுத்தநொடி உணவுக்காக கலைந்து விடுவார்கள், இன்று வழக்கத்திற்கு மாறாக, சிறிது தூரத்தில் கூடி  நின்று, முணுமுணுக்கிறார்கள்.

 

காரணம் இல்லாமலில்லை, அன்றைய தினம் காலையில்தான், லா பிளான்ஷோத் மகன், முதன் முறையாக அவர்கள் வகுப்பிற்கு வந்திருந்தான். பிளான்ஷோத் என்ற பெண்மணியின் பெயர் அவர்களுக்குப் புதிதல்ல, ஒவ்வொரு பையனின் குடும்பத்திலும் அப்பெயரைக் குறிப்பிட்டுப் வம்பு பேசுவது அன்றாடம் நடப்பதுதான் ; பொதுவெளியில் நல்ல அபிப்ராயம் இருப்பினும், அவர்கள் அம்மாக்களிடையே பெண்மணியின் பெயர் ஏதோ பாவப்பட்டதென்கிற அபிப்ராயம் இருக்கவே செய்தது, பையன்களும் காரணத்தை விளங்கிக் கொள்ளாமலேயே, அப்பெண்மணியைக்குறித்து அதே கருத்தைக் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

 

சிமோன் விஷயத்திற்கு வருவோம், அவன் வயது பையன்களுக்கு சிமோனைத் தெரியுமா என்றால் தெரியாது.. அவன் வீட்டிலேயே அடைந்து கிடப்பவன், பிற பையன்களோடு கிராமத்துத் தெருக்களிலோ அல்லது ஆற்றங்கரைகளிளோ ஓடிப்பிடித்து விளையாடுவதெல்லாம் இல்லை, ஊர்ப்பையன்களுக்கும் அவன் விளையாட வரவில்லை என்பதால் வருத்தமும் இல்லை. இப்படியான சூழலில்தான், சிமோன் இவர்களோடு அதிகம் கலக்காததன் காரணத்தை நன்கறிந்தவன்போல ஒருபையன், அவனுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும், கண்களை இலேசாக சிமிட்டிக்கொண்டு ஏளனத்தோடு கூறியதை ஒருவித மகிழ்ச்சியோடும், கணிசமான ஆச்சரியத்தோடும் வரவேற்று, தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவன் தெரிவித்த செய்தி :

 

« சிமோனைத் தெரியுமில்லையா, அவனுக்கு அப்பா கிடையாதாம் ! »  

 

               பிளான்ஷோத் மகனான சிமோனும் வகுப்பிலிருந்து வெளியில்வந்திருந்தான். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம், கொஞ்சம் வெளிறிய தேகம், பார்க்க என்னவோ போலிருந்தாலும், பையன் படு சுத்தம்.

 

               சிமோன்  வீடு திரும்பவேண்டும், வேறெங்கே அவன் அம்மாவிடம். ஆனல் அவனுடைய பள்ளித் தோழர்கள் விடுவதாக இல்லை, கூடிக்கூடித் தங்களுக்குள் அவனைப்பற்றிய கிசுகிசுப்பைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருந்தவர்களின் விஷமும்,  குரூரமும் கலந்த பார்வை  தற்போது நம்முடைய பையன் மீது, தொடர்ந்து அவனைச் சீண்டிப் பார்க்கும் திட்டத்துடன், ஒருவர் இருவரென நெருங்க ஆரம்பித்து, அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்.

 

               இவர்களுக்கு என்னிடம் என்ன வேண்டும், எதற்காக இப்படி தண்னைச் சூழ்ந்து நிற்கவேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள இயலாமல் குழப்பத்துடனும், வியப்புடனும் சிறுவன் சிமோன் அவர்கள் மத்தியில் நிற்க,  அவனைப் பற்றிய செய்தியைப் கொண்டுவந்து, அதனை வெற்றிகரமாக பரப்பிய பெருமையில் திளைத்த பையன் இவனை நெருங்கி :  

 

« உன் பெயரென்ன ?  » எனக்கேடக, இவனும் « சிமோன் ! » எனத் தெரிவித்தான்.

 

« சிமோன், சிமோன் மட்டும் தானா, தலைப்பெழுத்தில்லையா ? » எனத் திரும்பவும் போக்கிரிப்பையன் கேட்க,

 

ஐந்துவயது சிறுவனும் இக்கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத்  தெரியாமல் :

 

« ஆமாம், ‘சிமோன்’  » என்றான்.

 

« மொட்டையா இப்படி சிமோன் என்று சொன்னால் ஆச்சா ? »  – குரலை உயர்த்தி வயதில் மூத்தபையன் சிமோனை மறுபடியும் கேட்டான்.

 

               «  என்னுடைய பெயர் சிமோன், அதைத் தவிர வேறு பெயர்களில்லை » என்றான், கண்களில் நீர்கோர்த்திருந்தது.

 

கூடியிருந்த பையன்கள் சிரிக்க ஆரம்பித்தனர், இப்பிரச்சனையில் மறுபடியும் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் சிமோனைச் சீண்டியவன் :

 

« நல்லா கேட்டுக்குங்க. இவன் அப்பன்  இல்லாத பையன் ! » – என்றான்.

 

மறுகணம், அங்கு மிகப்பெரிய அமைதி. பையன்கள் மொத்தபேரும் அதிர்ச்சியில் ஊமையாக நின்றார்கள், ‘தகப்பனற்ற ஒருபையன்’ என்பது, அவர்களைப் பொறுத்தவரை அசாதாரணமான,  நம்பவியலாத, மிகவும் மோசமானதொரு தகவல். இயற்கைக்குப் புறம்பான ஓர் அதிசயப் பிறவியைப் போல அவனைப் பார்த்தனர். சிமோன் தாய் பிளான்ஷோத் குறித்து, அவர்களுடைய அம்மாக்கள்  இதுநாளவரை கொண்டிருந்த, விவரிக்க முடியாத அதே வெறுப்பு தங்களிடமும் நன்கு வளர்ந்திருப்பதை அவர்கள் உணர முடிந்தது.

 

சிமோனைப் பொறுத்தவரை,  மீளமுடியாத பேரிடரில் சிக்கியதாக கருதி, ஒரு மரத்தின் பிடிப்பில் அழுந்த சாய்ந்து நின்றான். தன் தரப்பில் பதில்சொல்லவேண்டும், என்ன சொல்லலாம், யோசித்தான். தனக்கொரு தகப்பனில்லை என்கிற மோசமான விஷயத்தை மறுப்பதற்கு, மற்ற பையன்களுக்குப் பதிலென்று ஒன்றைக் கூற அவனிடம் எதுவுமில்லை. இறுதியாக, ஏதாவது சொல்லவேண்டும் என்றெண்ணியவன்போல ஆத்திரத்துடன்  அவர்களிடம்: “நீங்க நினைப்பதுபோல அப்பனில்லாத பையன் இல்லை, எனக்கும் ஒருவர் இருக்கிறார்”, எனக் கத்தினான்.

 

« இருக்கிறார் என்றால்,  எங்கே? » –  இம்முறையும் கேள்வி கேட்டது வயதில் மூத்த அதே பையன்.

 

               சிமோன் பதிலின்றி  மௌனம் காத்தான்; தெரிந்தால்தானே சொல்வான். சுற்றி நின்ற சிறுவர்கள் சந்தோஷ மிகுதியில் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள், விலங்குகள், பறவைகளென்று உறவாடும் வாழ்க்கை. கோழிப்பண்ணையில், காயமுற்ற ஒரு பறவையின் ஜீவனை முடிக்க, பிறகோழிகளுக்குத் தேவைப்படும் குரூரத்தைக் கண்ட அனுபவம் அவர்களுக்கு உண்டு, சிமோன் அவர்களுக்குக் காயமுற்ற பறவை. இந்நிலையில் சிமோன் கவனம் திடீரென்று அருகிலிலிருந்த சிறுவன்மீது சென்றது, அவன் அண்டைவீட்டுப் பையன், தாய் ஒரு விதவை, சிமோனைப்போலவே அப் பையனும் தாயுடன் தனியே வசிப்பவன்.  

 

               « ஏய் உன்னைத்தான். உனக்கு மட்டும் அப்பா இருக்கிறாரா என்ன, உனக்குக் கூடத்தான் இல்லை » – என்று அவனிடம்  சிமோன் கூற,

 

               « யார் சொன்னது அப்படி, எனக்கு அப்பா இருக்கிறாரே! »- என்றான் அப் பொடியன்.

 

       « இருந்தால், எங்கே? » சிமோன் பதில் கேள்வி கேட்டான்.

 

               « அவர் செத்துட்டார், கல்லறையில் இருக்கிறார். »

 

சிமோனுக்கு தக்கப் பதிலைக் கொடுத்த பெருமிதம் பையனிடம் தெரிந்தது. அண்டைவீட்டுப் பையனின் தகவலுக்கு கூடிநின்ற பிற பையன்களின் ஒப்புதலும் முணுமுணுப்பாக  வெளிப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை அவனது தந்தை கல்லறையில் இறந்துவிட்டார் என்ற உண்மை, தந்தையென்று ஒருவரும் இல்லாத பையனைத் துவம்சம் செய்யப் போதுமானது. கூடிநின்ற பையன்களின் தகப்பன்களும் பெரும்பாலும் பொல்லாதவர்கள், குடிகாரர்கள், திருடர்கள், தங்கள் தங்கள் மனைவியரிடம் கடுமையாக நடந்துகொள்கிறவர்கள்,  இந்நிலையில் அவர்கள் பிள்ளைகளாகிய தாங்கள் எல்லோரும் நெறிமுறைப்படி இருப்பவர்கள்போலவும், மாறாக சிமோன் நெறிமுறைக்குள் வராதவன் போலவும் எனவே அவன் மூச்சுமுட்டிச் சாகலாம் என்பதுபோல ஒருவரை ஒருவர் முட்டிமோதிக்கொண்டு அவனை நெருங்கினார்கள்.

 

அடுத்த நொடி, சிமேனுக்கு நேரெதிரில் இருந்த பையன்,  அவனைக் கிண்டல் செய்யும் விதத்தில் தன்னுடைய நாக்கை வெளியில் நீட்டிக் காட்டிய பின்:

 

     “அப்பாஇல்லை! இவனுக்கு அப்பா இல்லை ! » எனச் சத்தம் போட்டான்.

 

     சிமோன் இரு கைகளாலும் அவன் தலைதலைமுடியைப் பற்றி, கால்களால் உதைக்க அச்சிறுவனோ சிமோன் கன்னத்தை மிருகத்தனமாகக் கடித்தான். அடுத்த நொடி அங்கே பெரும் சலசலப்பு. சண்டைபிடித்த பையன்கள் விலக்கப்பட்டார்கள். கூடியபையன்கள் கைத்ட்டி ஆர்ப்பரிக்க  சிமோன் அடிபட்டு, ஆடைகிழிந்து, கன்றிப்போய், ஆங்காங்கே வீங்கி , தரையில் கிடந்தான்.  எந்திரத்தனமாக எழுந்து, தன் சட்டைக்குமேல் அணிந்திருந்த ஜாக்கெட்டில் படிந்திருந்த மண்ணையும் தூசிகளையும் தட்டிக்கொண்டிருக்க, கும்பலில் இருந்த ஒரு பையன்:

 

               « நடந்த விஷயத்தை போய் உன் அப்பாகிட்ட சொல்லு.» எனக் கத்தினான்.

 

சிமோன் இதயம் உடைந்து நொறுங்கியிருந்தது. தன்னைச் சுறியிருந்த பையன்கள் பலசாலிகள், அவர்களுக்குப் பதில் சொல்ல இவனால் ஆகாது, காரணம்  அவனுக்கு அப்பா இல்லை என்பது பொய்யல்ல உண்மை. பையன்கள் முன்பாக அழக்கூடாது, அப்படி அழுவது தன்னைச் சங்கடத்தில் நிறுத்தக்கூடும் என்பதால் ஒருவித பெருமிதத்துடன் அழுகையை அடக்கப் பிரயத்தனம் செய்தான்.  மூச்சுத் திணறியது, பின்னர் சத்தமின்றி  பெரும் துக்கத்தில் உடல் குலுங்க தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

 

இந்நிலையில் அவனுடைய எதிரிகளிடையே ஒருவித மூர்க்கத்தனமான மகிழ்ச்சி வெடித்தது.  அச்சத்திற்குரிய கொண்டாட்டங்களில்  காட்டுமிராண்டிகள் வெளிப்படுத்தும் இயல்புடன்,  அவர்கள் ஒருவரையொருவர் கைகளைப் பிணைத்துக்கொண்டு,  அவனைச் சுற்றிவந்து ஆட்டம்போடத் தொடங்கினார்கள்: « அப்பா இல்லை »”  « அப்பா இல்லை  » எனத் திரும்பத் திரும்பச் சொல்லவும் செய்தார்கள்.

 

ஆனால் சிமோன் மறு நொடி அழுகையை நிறுத்தினான். ஒருவித ஆத்திரமும் கோபமும் தலைக்கேறியது. காலடியில் கற்கள் கிடந்தன;  அவற்றைக் கையிலெடுத்தவன் முழு பலத்துடன், தன்னிடம் வம்புசெய்தப் பையன்கள் மீது வீசினான். அடிபட்ட இரண்டு அல்லது மூன்று பேர் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். சிமோன் தற்போது ஏதோ பலசாலிபோல தோற்றம் தர, பிற பையன்களிடத்திலும் ஒருவித அச்சத்தைக் காணமுடிந்தது. பெருங்கோபமுற ஒரு மனிதன் முன்பு  நிற்பதற்கு அஞ்சியோடும்  கூட்டம்போல, பையன்களும் கோழைகளாக தங்களை விட்டால் போதுமென்று ஓடி மறைந்தனர்.

 

தனித்து விடப்பட்ட , தந்தையற்ற அச்சிறுவன், மனதில் தோன்றிய பழைய நினைவொன்றின் காரணமாக ஆற்றிள் மூழ்கி உயிரைவிடத்  தீர்மானித்து வயற்காடுகளை நோக்கி ஓடினான். உண்மையில், எட்டுநாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு படுத்திக்கொண்டான்.  உயிர்வாழ்க்கைக்காக பிச்சையெடுத்த ஒரு தரித்திர மனிதன் கையில் காசில்லையென்று ஆற்றில் குதித்திருந்தான். அவனைத் நீரிலிருந்து மீட்டு கரையில் போட்டபோது சிமோன் அங்கிருந்தான். பாவபட்ட அம்மனிதன், சாதாரணமாக பரிதாபமாக இருப்பான், அத்துடன் அசுத்தமான அசிங்கமானத் தோற்றம்வேறு.  இந்நிலையில் அம்மனிதனை, வெளிறிய கன்னங்கள், நீரில் நனைந்த நீண்ட தாடி, மூட மறந்த கண்களென்று கரையில் கிடத்தியிருந்தபோது, அவனிடத்தில் கண்ட அமைதி, இவனிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்த கூட்டத்தில் ஒருவர். “அவன் இறந்துவிட்டான்” என்றார். இன்னொருவர் “அவன் முகத்தில் இப்போதுதான் சந்தோஷத்தை காணமுடிகிறது” என்றார். அவனைப்போல சிமோனும் ஆற்றில் விழுந்து இறக்க நினைத்தான், காரணம், இறந்த தரித்திர மனிதனுக்கு கையில் காசில்லை என்பதுபோல இவனுக்கும் தகப்பனில்லை.

 

ஆற்றின் அருகே சென்றதும் சிமோன் பார்வை தண்ணீர் மீது சென்றது. மீன்கள் சில  தெளிவான நீரோட்டத்தில் சற்று துள்ளலுடன் உல்லாசமாக வலம்வந்தன, அவ்வப்போது எம்பி நீரின் மேற்பரப்பில் வட்டமிட்ட ஈக்களைப் பிடித்தன. அவற்றின் செயல்பாடுகள் ஆர்வத்தைத் தர ,அழுவதை நிறுத்தி அவற்றைப் பார்த்தான். ஆனால் சில சமயங்களில், புயலுக்கிடையிலான அமைதியின்போது திடீரென வீசும் சூறைக்காற்று மரங்களை முறித்து சாய்த்தபின் அடிவானத்தில் மறைந்துபோவதுண்டு, அதுபோல சாகவேண்டும் என்ற எண்ணம்  மனதில் பெரும் வலியுடடன் அவனுள் உதித்தது.: “நான் நீரில் மூழ்கவேண்டும், காரணம் எனக்கும் தந்தையென்று ஒருவருமில்லை” எனத் தனக்குள் கூறிக்கொண்டான்.

 

வெயில் கூடுதலாக இருந்தாபோதிலும்,  குறைசொல்ல முடியாது, வெப்பம் தாங்கிக் கொள்ளகூடியதாக. இனிமையான கதிரொளியில் புல் பூண்டுகளில் வெதுவெதுப்பை உணர்ந்தான்.  நீர் கண்ணாடி போல் ஒளிர்ந்தது. சிமோன் ஒரு சில நிமிடங்கள் பேரின்பத்தில் திளைத்தான். கண்களில் நீர்கோர்த்தது, தொடர்ந்துணர்ந்த சோர்வில், அங்கிருந்த புல்தரையில், காயும் வெயிலில் படுத்துறங்க விரும்பினான்.

 

சிறிய பச்சை தவளையொன்று அவனது காலடியில் குதித்தது. அதைக் கையில் எடுக்க முயற்சிக்க  தப்பித்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதியில் அதன் பின்னங்கால்களின் நுனியைப் பிடித்துத் தூக்கினான். அச்சிறு பிராணி, அவன் பிடியிலிருந்து தப்பிக்கச் செய்த முயற்சிகளைக் காண அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் உடலைச் சுருக்கி பின்னங்கால்களில் நிறுத்திய மறுகணம் உடலைத் தளர்த்தி,  அவற்றை தவளை நீட்ட, இரண்டும் கம்பிகளைப் போல விறைத்துக் கொண்டன. அதே வேளை பொன் வளையமிட்ட வட்டமான கண்களுடன், தவளையின் முன் கால்களின் பாதங்களிரண்டும் அசைவது கைகளை அசைப்பதுபோல இருந்தது. அக்காட்சி, சிறு சிறு மரத்துண்டுகளை ஒன்றோடொன்று ஆணியால் இணைத்து குறுக்குமறுக்குமாக உருவாக்கப்பட்ட இளஞ்சிறார்களுக்குரிய  விளையாட்டுபொம்மையை அவனுக்கு நினைவூட்டியது, அதிலும் இப்படித்தான்  பொம்மைவீரர்களை அசைத்து இயக்க முடியும். பின்னர் தனது வீட்டையும் தாயையும் நினைத்து, மிகுந்த சோகத்துடன் பழையபடி அழ ஆரம்பித்தான். அவனுடைய கைகால்களில் உதறல் எடுத்தது. உறங்குவதற்கு முன்பு மண்டியிட்டு பிரார்த்தனை செய்வான். அதைத் தற்போதும் முயன்றான், ஆனால் அதை முடிக்க இயலவில்லை, காரணம் விம்மல்கள் இடைவெளியின்றி, விரைவாகவாகவும், கொந்தளித்தும் அவனை முழுமையாக ஆக்ரமித்திருந்தன. இந்நிலையில் அனைத்தையும் மறந்தான், அவனைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதிலும் கவனம்செல்லவில்லை, தற்போதைக்கு அழுவது ஒன்றுதான் செய்யவேண்டிய வேலை என்பதுபோல அதைமட்டும் செய்தான்.

 

               திடீரென்று, கனத்ததொரு கரம் தோளை அழுத்துகிறது, தொடர்ந்து கட்டைக் குரலில் : « அடேய் குட்டி பையா`!  அப்படியென்ன கவலை உனக்கு,  எங்கிட்டச் சொல்லேன், நானும் தெரிந்து கொள்கிறேன்`! ? » என்றது. சிமோன் திரும்பிப் பார்த்தான். சுருட்டைமுடியும், தாடியுமாக வாட்டசாட்டமான தொழிலாளித் தோற்றத்தில் இருந்த அம்மனிதன் நல்லவிதமாக அவனைப் பார்த்தான். சிமோன் அவனிடம், கலங்கிய கண்களும் நெஞ்சமுமாக : : 

 

               « அப்பா இல்லையென்று சொல்லி, எல்லோரும் என்னை அடிக்கிறார்கள். எனக்கு.. எனக்கு…அப்பா இல்லை » என பதிலளித்தான்.

 

               « என்னது, அப்பா இல்லையா,  அப்ப்டையெல்லாம் ஒருவரும் இருக்க முடியாது. தந்தை இல்லாத மனிதரில்லை, எல்லோருக்கும் அப்பா உண்டு »  எனத் தெரிவித்து, அந்நபர் சிரித்தான்.

 

               சிறுவன், தனது கடுந்துயரத்திற்கிடையில், சிரமத்துடன் பதில் சொல்ல முனைந்து : “ஆனால் எனக்கு அப்படி ஒருத்தரில்லை.” » என்றான். சிறுவனின் பதில் தொழிலாளியை பையன் விஷயத்தில்  அக்கறைகொள்ள வைத்தது.  பையன் வேறு யாருமல்ல லா பிளான்ஷோத் மகன் என்பதைத் தொழிலாளி புரிந்துகொண்டான். ஊருக்குப் புதியவன் என்றாலும், ஓரளவிற்கு சிமோன் கதையை அம்மனிதன் அறிந்திருந்தான்.

 

               « உனக்கு ஒரு அப்பா வேண்டும், அவ்வளவுதானே  கவலைப் படாதே, கொடுக்க முடியும் , என்னுடன் வா, உன் அம்மாவிடம்போவோம்” – என்று சிமோனிடம் தெரிவித்தான்.

சிறுவன் கையைப்பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து நடந்தார்கள். தொழிலாளியின்  முகத்தில் மீண்டும் சிரிப்பு, காரணம் பையனின் தாய்  ‘பிளான்ஷோத்’ ஐ திரும்பச் சந்திக்க நேரும் என்பதைக் குறித்த வருத்தமேதும் அவரிடமில்லை. அப்போதெல்லாம் அவள் ஊரில் மிக அழகானப் பெண்களில் ஒருத்தியென பெயரெடுத்திருந்தாள். ஒருவேளை அத்தொழிலாளியின் அடிமனதில் அவள் இள்மபெண்ணாக இருந்தபோது இழைத்த தவறை மறுபடியும் இழைக்கலாம், என்கிற எண்ணமிருக்கலாம், யார் அறிவார்.

 

பையனும் தொழிலாளியும், வெள்ளையடித்து, நன்கு பராமரிக்கபட்டிருந்த ஒரு சிறிய வீட்டை . அடைந்தார்கள். அங்கிருந்த பெண்மனியைக் கண்டதும்:

 

« இதுதான் ! » என்று வீட்டை அடையாளப்படுத்திய பையன். « அம்மா ! » என்று கூவி அழைத்தான்.

 

               வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி வெளிப்பட்டாள். அவளைக் கண்ட மறுநொடி தொழிலாளி சிரிப்பதை நிறுத்தினான், காரணம் நெட்டையாகவும், சற்று வெளிறிய தேகத்துடனும் இருந்த அப்பெண், ஏற்கனவே ஓருவனிடம் ஏமாந்தது போதும் இனி ஒர் ஆணை வாசற்படியைத் தாண்ட விடமாட்டேன் என்பதுபோல கடுமையான முகத்துடன் வாயிலில் நின்றிருந்தாள். அவள் தோற்றம் தொழிலாளியை அச்சம்கொள்ளச் செய்தது.தலையிலிருந்த தொப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு, தடுமாற்றத்துடன்: ” மேடம் இதோ உங்கள் பையன், ஆற்றங்கரையோரம் பார்த்தேன், அழைத்து வந்தேன் ” – என்றான்.

 

               ஆனால் சிமோன் தன் தாயைக் இறுகப் பிடித்துக்கொண்டு  மீண்டும் அழ ஆரம்பித்தான்:

 

               « அம்மா, ஆற்றைத்தேடி நான் போனது, விழுந்து சாகத்தான். எல்லோரும் என்னை அடித்தார்கள், உதைத்தார்கள் … ஏனென்றால் எனக்கு அப்பா இல்லையாம் ». இளம்பெண்ணின் கன்னமிரண்டும் எறிதழல்போல சிவந்தன, நெஞ்சில் ரணப்பட்டிருந்தாள். உணர்ச்சிவேகத்தில் மகனை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய முத்தமிட்டாள். வந்த மனிதனோ நெகிழ்ந்திருந்தான், அங்கிருந்து எப்படி விடைபெற்றுச் செலதெனத் தெரியாமல் குழம்பியபடி நின்றிருந்தான்.. இந்நிலையில் பையன் சிமோன் திடீரென்று அவனிடம் ஓடிவந்தான் :

 

               « உங்களுக்கு என்னுடைய அப்பாவா இருக்க விருப்பமா? » – எனக்கேட்டான்.

 

               பெரும் அமைதி. லா பிளான்ஷோத், ஊமையாக, தான் பரிதாபமானநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைப்போல கூனிக்குறுகி  இருகைகளையும் மார்பில்வைத்து சுவரின் பிடிமானத்தில் சாய்ந்து நின்றாள். தனது கேள்விக்குப் பதில் வராத நிலையில், சிறுவன் மீண்டும்:

« உங்களுக்கு என்னுடைய அப்பா ஆக விருப்பமில்லைன்னா சொல்லுங்க, நான் ஆத்துல குதிச்சுடறேன் »- என்றான்.

 

               தொழிலாளி அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டவன்போல,  சிரித்துக்கொண்டே

 

               « ஏன் ஆகக் கூடாது? உனக்கு அப்பாவாக இருக்க எனக்கும் சம்மதம்தான் » என்றான்.

 

               «  நல்லது, உங்கள் பெயரைச் சொல்லுங்க, மற்றவர்கள் உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டால் நான் அவர்களுக்குச் சொல்ல வேண்டுமில்லையா? »

 

               “பிலிப்,”  என்று தொழிலாளி தனது பெயரைக் கூறினான்.

 

               ஒரு நொடி சிமோன் ‘பிலிப்’ என்கிற அப்பெயரை தனது மனதில் நன்கு பதிவு செய்தக்கொள்ள எண்ணியவன் போல அமைதியாக இருந்தான். பின்னர்  தனது கைகளை நீட்டி:

 

               « நல்லது,  இனி பிலிப் ஆகிய நீங்கள் எனக்கு அப்பா! » –  என்றான், தொழிலாளியின் பதிலால் சாமாதானம் அடைந்தவன் போல.

 

               பையனை தரையில் இருந்து உயரே தூக்கிப்பிடித்த தொழிலாளி இரண்டு கன்னங்களிலும் ஒருவித அவசரத்துடன்  முத்தமிட்டான், பின்னர் அதே வேகத்தில் அவ்விடத்திலிருந்து விரைவாக நடந்துசென்றான்.

 

               அடுத்த நாள் பையன் பள்ளிக்குள் நுழைந்தபோது, ​​எதிர்பார்த்ததுபோலவே விஷமச் சிரிப்பொன்று  அவனை வரவேற்றது; அன்றும் வகுப்பை விட்டு வெளியேறும்போது, மூத்த வயது பையன் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிக்க, சிமோன் தன் மனதில் பதிவு செய்திருந்த வார்த்தைகளை, கல்லை எறிவதுபோல வீசினான் :

 

               « பெயர் பிலிப்,  அவர் தான் என் அப்பா. »

 

               எனச் சிமோன் தெரிவிக்கவும், எல்லா பக்கங்களிலிருந்தும் ஏளன ஆரவாரங்கள்:

 

               « என்ன சொன்ன பிலிப்பா யார் அது?…இப்படி தலையுமில்லா வாலுமில்லாம சொன்னா போதுமா?… அது என்ன, பிலிப்?… எங்கே கண்ண்டு பிடிச்ச அந்தப் பெயரை?”

 

 

               சிமோனுக்குப் பதில் சொல்ல விருப்பமில்லை; அவனுக்குத் தான் தெரிவித்த பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை, அலட்சியத்துடன் பையன்களைப் பார்த்தான். அவர்களுக்காக பயந்து ஓடும் எண்ணமில்லை மாறாக எது  நடந்தாலும் நடக்கட்டும், எனப் பொறுமையுடனிருந்தான். நல்லவேளையாக பள்ளி ஆசிரியர் குறுக்கிட்டு சிக்கலிலிருந்து அவனை விடுவித்தார். அவனும் வீடுவந்து சேர்ந்தான்.

 

               இச்சம்பவத்திற்குப் பின்னர் மூன்று மாதங்கள் தொழிலாளி பிலிப், லா பிளான்ஷோத் வீட்டு வழியாக அடிக்கடி போக நேரிட்டது. சிற்சில சமயங்களில் ஜன்னலருகே அமர்ந்து அப்பெண் எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள், அவ்வேளைகளில் அவளிடம் பேச அவன்  துணிந்திருக்கிறான். அவளோ, அவனை வீட்டிற்குள் அனுமதிக்காது வெளியிலேயே நிற்கவைத்து பேசி அனுப்பிவிடுவாள். தவிர தேவையற்ற பேசுக்க்கோ, சிரிப்புக்கோ இடமில்லை என்பதுபோல நடந்துகொள்வாள்.  இருந்தபோதிலும் தன்னிடம் உரையாடுகிற போதெல்லாம் அவள் கன்னங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி கூடுதலாக சிவக்கின்றன, என கற்பனைசெய்துகொள்ளும் அகம்பாவம் எல்லா ஆண்களையும் போல தொழிலாளியிடமும் இருந்தது.

 

               ஆனால் உடைந்த நற்பெயரை ஒட்டவைப்பது அத்தனைச் சுலபத்தில் இல்லை, அதற்குரிய தெம்பும் இளம்பெண்ணிடத்தில் இல்லை. வெளியிற் செல்லக்கூடத் தயங்கி லா பிளான்ஷோத், வீட்டில் அடைந்துகிடப்பாள், இருந்தபோதிலும் ஊர் வாயை அவளால் மூட முடியவில்லை. .

 

சிமோனைப் பொறுத்தவரை,  தனது புதிய அப்பாவை மிகவும் நேசித்தான், அன்றைய அலுவல்கள் முடிந்ததும்  ஒவ்வொரு மாலையும் அவருடன் உலாத்தச் செல்வான். பள்ளிக்கும் தவறாமல் ஆர்வத்துடன் சென்றுவந்ததோடு, வகுப்புத் தோழர்களுடன் பதிலுக்குப்பதில் என்றில்லாமல் கண்ணியத்துடன் பழகினான். இருப்பினும், ஒரு நாள், முதனலில்  சிமோனிடம் சண்டைபிடித்த பையன் அவனிடம் சொன்னான்:

 

« நீ  பொய் சொல்லியிருக்க. ’பிலிப் என்ற பெயரில், உனக்கு அப்பா என்று ஒருவரும் இருக்கமுடியாது. »

 

« எதனால் அப்படிச் சொல்ற ? » –  சிமோன் குழப்பத்துடன் கேட்டான்.

 

தன்னுடைய கைகளைப் பிசைந்தபடி, மற்றபையன் தொடர்ந்தான் :

 

 

” காரணம்,  அப்படி ஒரு அப்பா உனக்கு இருந்தால் ,  அவர்  உங்கள் அம்மாவின் கணவராக  இருக்கவேண்டும்.”

 

அந்தப் பையன் பதிலில் இருந்த நியாயம் சிமோனைக்  கலக்கமடையச் செய்தது: «இருக்கட்டுமே, அதனாலென்ன எனக்கு அவர் அப்பா. » என்றான் அவனிடம்.

 

« கேட்க நன்றாக இருக்கலாம், ஆனால் அவரை முழு மனதோடு  அப்பா என நீ சொல்ல முடியாது »- பையன் ஏளனத்தோடு கூறினான்.

 

சிமோன் தலையைத் தொங்கப் போட்டபடி பிலிப் வேlலைசெய்யும் லுசோன் என்பவருடைய கொல்லுபட்டறையை நோக்கி கனவுடன் நடந்தான்.

 

அக்கொல்லுப்பட்டறை மரங்களால் மூடப்பட்டு இருண்டிருந்தது. அவ்விடத்தில்  விசித்திரமான உலைஅடுப்பின்  சென்னிற ஒளிச்சிதறல்களில் ஐந்து கொல்லர்கள் கையுறையின்றி வெறும் கைகளால் சம்மட்டிகொண்டு பெரும் சப்தத்துடன் அடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் தீச்சுவாலைகளிடையே அரக்கர்கள்போல இருந்தனர். அவர்கள் விழிகள் சம்மட்டியில் வதைபட உள்ள கனிந்த இரும்புகள் மீதிருந்தன.  எச்சரிக்கையுடன் கூடிய அவர்கள் கவனமனைத்தும் இரும்பு சம்மட்டியோடுசேர்ந்து  உயர்வதும் திரும்ப விழுவதுமாக இருந்தன. சிமோன் யார் கண்களிலும் படாமல் மெதுவாக தன்னுடைய அண்மைக்கால நண்பரை நெருங்கி சட்டைக்கையை பிடித்து இழுத்தான். தொழிலாளியும் திரும்பினான். சட்டென்று அங்கு வேலைகள் ஸ்தம்பித்தன. அங்கிருந்த அனைவரின் கண்களும் தற்போது இவர்கள் மீது. வழக்கத்திற்கு மாறாக கொல்லுப்பட்டறையில் அமைதி. இந்நிலையில்,  சிமோனுடைய பலவீனமான சிறிய குரல் உரத்து ஒலித்தது:

 

« சொல்லுங்கள் பிலிப்! சற்று முன்பு, மிஷோது என்கிற பையன் என்னிடம், நீங்கள் எனக்குப் பெயருக்குத்தான் அப்பா என்கிறான், முழுமையான அப்பா இல்லையாம். » 

 

« எதனால் அப்படிச் சொன்னான் ? » தொழிலாளி கேட்டான்.

 

« ஏனென்றால் நீங்கள்  என் அம்மாவுக்கு கணவர் இல்லையாம். »- வெகுளித்தனத்துடன் வந்தது சிமோனுடைய பதில்.

 

சிறுவன் பதிலைக்கேட்டு ஒருவரும் சிரிக்கவில்லை.. பட்டறைகல்லில் நிறுத்தியிருந்த சம்மட்டியின் கைப்பிடியில் இருந்த தன் கைகளின் பின்பகுதியில் நெற்றிபட கவிழ்த்து, நின்றவண்னம்  பிலிப் யோசனையில் மூழ்கியிருந்தான். அவனுடைய தோழர்களான சக தொழிலாளிகளின் பார்வை அவனைவிட்டு விலகவில்லை, மாறாக ராட்சதர்கள் போல நின்றிருந்த அம்மனிதர்களுக்கிடையில்  பொடியன் சிமோன், பிலிப்பின் பதிலை எதிர்பார்த்து பதற்றத்துடன் காத்திருந்தான்.

 

திடீரென்று, அனைவரின் சிந்தனைக்கும் பதிலளிக்கும் வகையில், நான்கு கொல்லர்களில் ஒருவர் பிலிப்பிடம்:

 

« லா பிளான்ஷோத் நல்ல பெண் மட்டுமல்ல்ல  துணிச்சலானவளும் கூட,  அதுவன்றி அவளுடைய துரதிர்ஷ்ட்டத்திற்கிடையிலும் நேர்மையும் திடமனமும் கொண்டவள். ஒரு நேர்மையான மனிதனுக்கு, கண்ணிமிக்க மனைவியாக  அவள் இருக்கக்கூடியவள் » என்று தெரிவிக்க, மற்ற மூன்று பேரும், உண்மைதான் என்றார்கள். தொழிலாளி தொடர்ந்தார்:

 

« அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட  தோல்விக்கு, அப்பெண் இழைத்த தவறுதான் காரணமா என்ன ?” அவளிடம்,  மணம் செய்துகொள்கிறேன் என சத்தியம்  யாரேனும் செய்திருப்பான். இன்றைய தேதியில் ஒருவர் இருவரல்ல,  பெண்களுக்கு அப்படி வாக்குறுதி அளித்து ஏமாற்றும் பலரை நான் அறிவேன். அவர்களில் நம்முடைய மரியாதைக்குரியவர்களும் அடக்கம் . »

 

“அது உண்மை,” – மற்ர மூன்றுகொல்லர்களும் ஒரே குரலில் பதிலளித்தனர்.

 

அவர் தொடர்ந்தார்: “பாவம்  தன் பையனைத் தனியொருவளாக வளர்ப்பதற்கு அவள் மிகவும் கஷ்டப்பட்டாள், அவள் அழாத நாட்களே இல்லை, தவிர வீட்டைவிட்டு தேவாலயத்திற்குச் செல்வதன்றி வேறெதற்கும் வெளியிற் செல்வதில்லை. அவள் பிரச்சனைகளை ஆண்டவர் மட்டுமே நன்கு அறிவார். »

 

«அதுவும் உண்மைதான் » மூன்றுபேரும் திரும்பவும் ஆமோதித்தார்கள்.

 

அங்கு உலைக்களத்தீயை ஊதிக்கொண்டிருந்த துருத்தியின் சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. திடீரென, பிலிப் சிமோன் பக்கம் குனிந்தான்.

 

 « இன்று மாலை உன் தாயிடம் பேசுகிறேன், அவளிடம் சொல்! »  எனத் தெரிவித்து சிமோன் தோளில் கைவைத்துத் தள்ளி கொல்லுபட்டறையைவிட்டு அவனை அனுப்பிவைத்தான்.

 

பிலிப் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தான். `அடுத்தகணம் சேர்ந்தாற்போல ஐந்து சம்மட்டிகளும் முழுமனதுடன் பட்டறைக்கல்லில் காய்ச்சிய இரும்பின்மீது விழ ஆரம்பித்து  வலுவுடனும், பலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அந்திவரை தொடர்ந்தன. எப்படி பண்டிகை நாட்களில் தேவாலயமொன்றின் மணியோசை சிறிய பிற மணிகளின் ஓசையை அமிழ்த்திவிட்டு ஓங்கி ஒலிக்குமோ அதுபோல அவனுடைய சம்மட்டியும் ஒவ்வொரு  நொடியும் ஓயாமல் ஒலித்து காதுசெவிடும்படி பெரும் ஓசையுடன் பிற சம்மட்டிகளின்மீது ஆதிக்கம் செலுத்த, பிலிப் தீப்பொறிகளிடையே நின்று இரும்பை அடிப்பதில் மும்முரமாக இருந்தான்.

 

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அணியும் ஜாக்கெட், துவைத்த சட்டை, ஒழுகுசெய்த தாடியுமாக லா  பிளான்ஷோத் வீட்டின் கதவை, பிலிப் தட்டும்போது வானம் முழுக்க நட்சத்திரங்கள்.  வெளிப்பட்ட அவள் வருந்தும் குரலில்:  “இருட்டிய பிறகு இப்படி வருவது சரியல்ல பிலிப்.” » என்றாள். அவன் பதில் சொல்ல விரும்பியபோதிலும், என்னசொல்வதென்று புரியாமல் தடுமாறி குழப்பத்துடன் நின்றான்.

 

அதையே சற்று விளக்கமாகச் சொல்ல நினைத்தவள்போல:

 

« உங்களுக்கு சொல்லி  புரியவைக்க வேண்டுமென்பதில்லை, என்னைப்பற்றி இந்த ஊர் பேசியது போதுமென்று நினைக்கிறேன். »

 

தாமதமின்றி அவன் கூறினான்:

 

« நீ என் மனைவியானால், அப்பேச்சு என்ன செய்யும் ! »

 

இம்முறை பதிலேதுமில்லை. ஆனால்  இருண்டிருந்த வீட்டின் அறையிலிருந்து உடலொன்று தொபீரென விழுவதுபோல ஒரு சத்தம்.மறுகணம் அவசர அவசரமாக பிலிப் வீட்டிற்குள் சென்றான்.

 

ஏற்கனவே படுக்கச் சென்றிருந்த நம்முடைய சிமோன் முத்தமிடும் ஓசையையும் , அவனுடைய தாய் அடிக்குரலில் முணுமுணுப்பதையும்  பிரித்துணர முடிந்தது.  பின்னர்,  தன்னுடைய சமீபத்திய நண்பனின் ஹெர்க்குலீஸ் கரங்கள் தன்னைத் திடீரென உயர்த்திப் பிடித்திருப்பதை  உணர்ந்தான். பிடித்திருந்த தொழிலாளி நண்பன் உரத்த குரலில் :

 

”  இனி யாராவது உன்னைச் சீண்டினால், அவர்கள் காதைத் திருக உன்னுடை அப்பா கொல்லர் பிலிப் ரெமி வருவாரென்று, வகுப்புத் தோழர்களிடம் சொல்” – என்றான்

 

 

மறுநாள், பள்ளி நிரம்பி வகுப்பு தொடங்கும் நேரத்தில், பொடியன் சிமோன்  எழுந்துநின்றான்,  வெளிறிய தோற்றம், உதடுகள் நடுங்க: “என் அப்பா பெயர்  ‘பிலிப் ரெமி’, கொல்லன் , எனக்குப் பாதகம் செய்வோரின் காதை இழுத்துப்பிடித்து  திருகுவேனென என்னிடம் அவர் உறுதி அளித்திருக்கிறார்” – எனத் தெரிவித்தான், குரலில் தெளிவிருந்தது.

 

இம்முறை ஒருவரும் சிரிக்கவில்லை,  ஏனென்றால் கொல்லன் பிலிப் ரெமியை அனைவருக்கும்  ஏற்கனவே நன்றாகத் தெரியும்,  அதுவன்றி  இன்று  அவன் ஓரு தந்தை, ஊரும் உலகமும் பெருமையுடன் கொண்டாடுகிற மனிதன்.

                           —————————–

Series Navigationஉணர்வுடன் இயைந்ததா பயணம்? – அத்தியாயம்.3  கு அழகிரிசாமியின் நூற்றாண்டின் போது..
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *