சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ

This entry is part 6 of 42 in the series 29 ஜனவரி 2012

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. ஒரு ப்ளாங்க் சிலேட்டாகத்தான் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.
ஆரம்ப அத்தியாயமே பொடனியில் பளேர் என்று அறைகிறது. கியூபாவை ஆக்ரமித்திருக்கும் அமெரிக்க படைகளின் சுங்கச்சாவடிகள்! அவர்களுக்கு முன்னே நிறைய ஜீப்புகள். அதில் ஏராளமான கணினிகள், அதன் தொடர்புடைய பொருட்கள். மொத்தம் 450 கணினிகள். லூசியஸ் வார்க்கர் என்கிற பாதிரியார் அந்தக் குழுவின் தலைவர். அனுமதி மறுக்கப்பட்ட பின், சாலையில் அமர்ந்து விடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, பதிமூன்று குழுக்கள். வெவ்வேறு பொருட்கள். மருந்துகள், பால் பவுடர், மூக்குக்கண்ணாடிகள், குழந்தைகளுக்காக பொம்மைகள், சக்கர நாற்காலிகள், துணிகள், சோப்புக்கட்டிகள்.
அதிகாரி கேட்கிறான்: நீங்களோ பாதிரிமார்கள். பிடல் காஸ்ட்ரோ ஒரு கம்யூனிஸ்ட். இது தெரிந்தால் நீங்கள் போகமாட்டீர்கள்.
பாதிரியார் சொல்கிறார்: உங்களுக்கு பிடல் காஸ்ட்ரோவை தெரியவில்லை. தெரிந்திருந்தால், நீங்களும் எங்களோடு சேர்ந்திருப்பீர்கள்.
கியூபாவின் ஆரம்ப நாட்களிலிருந்து படிப்படியாக, அமெரிக்க ஆதிக்கம் வளர்ந்ததை, அழகாகச் சித்தரிக்கிறது புத்தகம். பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை, அணுஅணுவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பாப்பிலான் புத்தகத்தை, ஆங்கிலத்தில் படித்தபோது ஏற்பட்ட விறுவிறுப்பு, இந்தத் தமிழ் புத்தகத்திலும் கிடைப்பது ஒன்றே அதன் சுவையைச் சொல்லும்.
எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்ற, காஸ்ட்ரோ மதபோதனை வகுப்பிலும் மனம் ஒன்றாமல் இருந்தது அவன் கம்யூனிஸ்டாக உருவாக தளம் போட்டது. அதுவமல்லாமல் பணக்காரன், ஏழை என்கிற பாகுபாடே அவனுக்கு பிடிக்கவில்லை. ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தபோது, முதலாம் ஆண்டிலேயே மாணவர் தலைவரானான் காஸ்ட்ரோ. பின் நாளைய போராட்டத்துக்கு வித்து அது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அமெரிக்காவை, மாணவ பருவத்திலேயே எதிர்க்க ஆரம்பித்தவன் காஸ்ட்ரோ. அவனுக்கு எதிராக மாபியாவை திருப்பி விட்டது அமெரிக்கா. காஸ்ட்ரோ அஞ்சவில்லை. துணிந்து எதிர்த்தான். அவனுக்கு பின்னால் மாணவர் படையே இருந்தது.
ஸ்பெயின் கியூபாவை அடிமைப்படுத்தியபோதே, அதற்கு எதிராக குரல் கொடுத்தவர் ஹொஸே மார்த்தி. மார்த்தியைப் பற்றி அறிந்தவுடன், காஸ்ட்ரோவின் போராட்டம் தீவிரமானது. கியூபாவில் அடிமைப்பட்ட வெள்ளையர்களைப் போலவே கறுப்பர்களும் உண்டு. ஆனால் இதுநாள் வரை யாரும் அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. அவர்களை ஒரு மனிதர்களாகவே மதிக்கவில்லை. அதை மாற்றியவர் மார்த்தி. கறுப்பர்களும் அடிமைப்பட்டவர்களே. அவர்களும் விடுதலைப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்கிற புரட்சி வாதத்தை முதலில் எடுத்தவர் மார்த்திதான். இது காஸ்ட்ரோ வுக்கு பிடித்திருந்தது. மார்த்தி கொல்லப்பட்ட சம்பவம், அவரது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காஸ்ட்ரோவுக்கு உந்துதல் தந்தது.
காஸ்ட்ரோ ஒரு சிறந்த வக்கீல், பேச்சாளர். அவர் வழக்குகளை, அவரே முன்னெடுத்து வாதம் செய்வார். தடை செய்யப்பட்ட போராட்டத்தை நடத்தியதற்காக காஸ்ட்ரோ கைது செய்யப்படுகிறார். அவர் வழக்கை அவரே வாதிடுகிறார். ஏன் கைது தவறு என்று பேச வந்தவர், போராட்டத்தில் இருக்கும் நியாயத்தைப் பற்றிப் பேசுகிறார். அரசை விமர்சிக்கிறார். கோர்ட் மக்கள் வெள்ளத்தில். தன் மேலுள்ள வழக்கையே, தனக்கு சாதகமாக, மக்களை ஈர்க்கும் ஒரு வழியாக மேற்கொண்ட காஸ்ட்ரோவின் புத்திசாலித்தனம் நீதிபதிக்கு பிடித்து அவரை விடுதலை செய்து விட்டார்.
பலமுறை தன் புரட்சிப்படை கொண்டு தாக்கி தோல்வியுற்று சிறை சென்றுள்ளார் காஸ்ட்ரோ. அங்கு அவர் நிறைய புத்தகங்களைப் படிக்கிறார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காஸ்ட்ரோ கியூபா வரத் தடை. அதனால் மெக்ஸிகோ வந்தார். அங்கு அவருடன் இணைந்தார் சேகுவாரா. அங்குதான் கொரில்லா போர்முறையை அவர் அ|றிந்து கொண்டார். அதையே தன் போர் முறையாக மாற்றிக் கொண்டார். ஆனாலும் தொடர் தோல்விகள். ஆனால் பத்திரிகைகளுக்கு அவர் தெரிய ஆரம்பித்தார். அவர் புகழ் பரவியது. சேகுவாரோ தலைமையில் ஒரு படை, சில ராணுவ முகாம்களைக் கைப்பற்றியது. சே ஒரு மருத்துவர். அவரே ராணுவ தளபதியாகவும், காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவராகவும் செயல்படுவார். காஸ்ட்ரோ முதல் முறையாக அமெரிக்க பத்திரிக்கையாளர்களையும், சுற்றுலா பயணிகளையும் கடத்தினார். அமெரிக்கா அலறியது. பணிந்து போனது. கியூபா காஸ்ட்ரோ வசம் வந்தது. எல்லாவற்றையும் தேசிய மயமாக்கினார். அமெரிக்காவுக்கு அடிவயிற்றில் எரிய ஆரம்பித்தது.
பதிலடியாக கியூபன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அமெரிக்கா மறுத்தது. சர்க்கரை மலைபோல் தேங்க ஆரம்பித்தது. சே உலக நாடுகள் சுற்றினார். ரஷ்யாவுடன் கை கோர்த்தார். கியூப சர்க்கரை ரஷ்ய மக்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அமெரிக்கா, எந்த ஒரு அமெரிக்க பொருளையும் கியூபா அனுப்ப மறுத்தது. ஐநா சபையின் இருபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவில் நேருவும் காஸ்ட்ரோவும் சந்தித்துக் கொண்டனர். இந்தியா கியூபாவுக்கு நேசக்கரம் நீட்டியது. தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள் என்கிற கியூப வாசகத்தின்படி எல்லாவற்றையும் கீயூபர்களே உருவாக்கிக் கொண்டார்கள். அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையெல்லாம் அமெரிக்க பத்திரிக்கைகளே வெளிச்சம் போட்டுக் காட்டின.
கியூபாவின் பொருளாதாரம் மேம்படுவதற்கு சேயும் ஒரு காரணம். அங்கு ஆசிரியராக வேலை செய்து கொண்டிருப்பவர் பகுதி நேர விவசாயியாகவும் இருப்பார். அங்கோலா, நிகராகுவா போன்ற நாடுகள் புரட்சி செய்த போது காஸ்ட்ரோ சோவியத் உதவியுடன் அவர்களுக்கு உதவி விடுதலை வாங்கித்தந்தார்.
காஸ்ட்ரோவைப் பற்றிய அற்புதமான தகவல்கள், நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. முழுவதும் எழுத இயலாது. வாங்கிப் படித்துத்தான் அறிந்து கொள்ளவேண்டும்.
0
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. தொடர்புக்கு: 044-42009601/03/04.
0

Series Navigationநான் வெளியேறுகையில்…சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    Kalai says:

    பிடல் காஸ்ட்ரோ பற்றி இப்படி கியூப நாட்டு விளம்பரத்தை வரலாறு என்று எழுதுவதற்கு மருதன் வெட்கப்படவேண்டும். கிழக்கு பதிப்பகம் வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு என்ன வரையறைகளை எழுத்தாளர்களுக்கு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. 42 வருடமாக ஒரே நபரின் ஆட்சி நடந்து வருவது பற்றி எந்த வெட்கமும் இல்லாமல் பாராட்டுரை எழுதுவதை கம்யூனிஸ்டுகள் அல்லாமல் வேறு யார் செய்ய முடியும்? மாற்றுக் கருத்து உள்ளவர்களை சிறை பிடிப்பது, ஓரின ஈர்ர்பு கொண்டவர்களை சிறையில் அடைப்பப்து, கறுப்பர்களை இரண்டாம் தரக் குடிமகன்காளாக நடத்துவது, தம்பியிடம் ஆட்சியை ஒப்படைத்த வாரிசு அரசியல் என்று கொஞமா தீவினைகள்?

  2. Avatar
    Kalai says:

    முதலாளித்துவத்தை திட்டிக் கொண்டே கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் சர்க்கரை விற்பது, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுக்கு கேளிக்கை வசதி பண்ணித் தருவதும் தான் கியூபாவின் நடைமுறை. இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல், கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்வதாலேயே சீனாவிற்கும், கியூபாவிற்கும் கொடி பிடிப்பது தான் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் தேசாபிமானம்.

  3. Avatar
    punai peyaril says:

    அனுபவம் இல்லாமெலே தூரத்து கானல்நீரை பற்றி இவர்கள் லாலி பாடுவது இவர்களின் அறிவின்மையைக் காண்பிக்கிறது…

  4. Avatar
    kalai says:

    கிழக்கு பதிப்பகத்திற்கும், காம்ரேட் மருதனுக்கும் அடுத்த புத்தகத்தின் ஐடியா: லட்சக் கணக்கான மக்களைக் கொன்றழித்த கம்போடிய கம்யூனிஸ்ட் போல் போட் பற்றிய வரலாறை வெளியிடலாம்.

Leave a Reply to Kalai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *