சிரித்துக் கொண்டே இருக்கும் பொம்மைகள்

This entry is part 3 of 28 in the series 27 ஜனவரி 2013

 

1960 களில் என் ஆறாம் வகுப்பு நாட்களில்தான் நடந்தது என் முதல் நட்பும் முதல் பிரிவும். உடம்பெல்லாம் பூக்கள் பூக்கும் உணர்வு ஞாயிற்றுக் கிழமைகளில்தான். அந்த வயதில் நான் ஞாயிற்றுக் கிழமையையே வெறுத்தேன். என் நண்பன் உமாசங்கரை அந்த ஒரு நாள் பார்க்கமுடியாதல்லவா?

அழகான பூப்போட்ட கண்ணாடிப் பாத்திரத்தை பொட்டென்று போட்டுடைத்தது போல் உமா சொன்னான். அவன் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி விட்டதாம். நாளையே எல்லாரும் மெட்ராஸ் போகிறார்களாம். என்னை ஓர் இருள் கவ்வியது. அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன். அவன் தலையை என் தோளில் புதைத்துக் கொண்டான். பின் சொன்னான்.

‘உன் முகவரியைத் தா. நான் மெட்ராஸ் போனதும் உனக்குக் கடிதம் எழுதுகிறேன். இப்போது என் மெட்ராஸ் முகவரி எனக்குத் தெரியாது.’

ஒரு துண்டுத் தாளில் எழுதித் தந்தேன். பன்னீர், 1A சன்னதித் தெரு, அறந்தாங்கி (P.O) தஞ்சாவூர் மாவட்டம். அந்தத் தாளை அவன் பத்திரமாக வைத்துக் கொண்டான். தன் நோட்டுப் புத்தகத்திலும் எழுதிக் கொண்டான்.

தபால் அலுவலகம் என் பள்ளியிலிருந்து நடந்தால் 5 நிமிடம் ஓடினால் 2 நிமிடம். ஒரு மணிக்கு மதிய உணவு இடைவேளை. தபால் அலுவலகம் ஓடினேன். எங்கள் தெருவுக்கு வரும் தபால்காரரை அடிக்கடி பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. அவரிடம் கேட்டேன். ‘பன்னீர், 1ஏ. சன்னதித் தெரு என்று கடிதம் ஏதும் இருக்கிறதா?’ ‘இல்லை தம்பீ’ என்றவர் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். மறுநாள் தபால்களைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். பாதியிலேயே தபால்காரர் வந்தார். ‘இன்றைக்கும் வரலீங்க தம்பீ. நாளைக்கு வரும்.’ என்றார். இருபது வயது குறைவான என்னை அவர் ‘ங்க’ போட்டுப் பேசியது, எனக்காக பாதியிலேயே வந்து என் எதிர்பார்ப்புச் சூட்டைத் தணித்தது, நாளைக்கு வரலாம் என்று நம்பிக்கை ஊட்டியது எல்லாமே அவரை ஒரு அசாதாரண மனிதர் என்று எண்ண வைத்தது. அடுத்த நாள் அவர் சொன்னது போலவே நடந்தது. ஒரு தபாலுடன் பாதியிலேயே ஓடி வந்தார். ‘தம்பீ, நீங்கள் எதிர்பார்த்த கடிதம்.  ஒரு நட்புக்காக இத்தனை ஈடுபாடு காட்டுவது இந்த வயதுக்கு அதிகம்தான் தம்பீ.’ என்றார்.

எங்கள் நட்பு தொடர்ந்தது. பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், உமாசங்கரின் தொடர்ந்த கடிதங்கள் என்று வளர்ந்தது. கோட்டைச் சுவரில் காகம் எச்சமிட்ட அரசவிதை முளைத்துவிட்டதுபோல் ஒரு நட்பு முளைத்துவிட்டது. யாரால் பிடுங்க முடியும்?

ஒரு பொங்கலுக்கு என்னை அழைத்தார். எங்கள் வாழைத் தோப்பில் தலைவாழை இலைகள் கொஞ்சம் கட்டிக் கொண்டு, எங்கள் தோட்டக்காரரிடம் ஒரு பெரிய வாழைத் தாரை எடுத்துவரச் சொல்லி அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்றுதான் தெரியும். அவர் பெயர் அனந்தராமன். அவர் மனைவியின் பெயர் அன்னபூரணி. என்னைவிட 2 வயது அதிகமான ஒரு மகன் குமரகுரு தொடக்கப் பள்ளியில் ஒரு மகள் துளசி. இதுதான் அவர் குடும்பம். என்னை ஒரு முக்கிய விருந்தாளியாக நடுவில் உட்கார வைத்து

2

அன்னபூரணியம்மாள் என் இலையில் பொங்கலையும் கறியையும் பரப்பினார்கள். அட! என்ன ருசி. அனந்தராமன் சொன்னார். ‘ஒரு தாய் மாமன் போல வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள் தம்பீ. என்ன பொறுப்பு. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு பெரிய ஆளாக வருவீர்கள் தம்பீ’

‘எப்படிச் சொல்கிறீர்கள்?’

‘உதித்தது. கொட்டிவிட்டேன். சிந்திக்கவில்லை. அதுதான் கடவுள் சித்தம். நம் கற்பனை பொய் சொல்லும். சிந்தனைகூட பொய்தான் சொல்லும்.’

அந்தப் பேச்சின் முதிர்ச்சி என்னை பரவசப் படுத்தியது. இப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கும்

பள்ளிக்காலம் முடிந்தது. புகுமுக வகுப்பு செல்ல கல்லூரியிலிருந்து கடிதம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மீண்டும் அந்த ஒரு மணி. அனந்தராமன் சார். அதே எதிர்பார்ப்பு. ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். ‘தம்பீ, கல்லூரிக் கடிதம். எந்தக் கல்லூரி என்று சொல்லுங்கள்’ என்றார்

‘மன்னர் சரபோசி அரசினர் கல்லூரி, தஞசாவூர்.’

“நல்ல கல்லூரி தம்பீ. நல்லாப் படிங்க’.

‘கடவுள் சித்தம் சார்’

‘அட! நான் சொல்ல நினைத்தேன்’ என்று சொல்லிச் சிரித்தார்.

எனக்கு வரும் கடிதங்களை என் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பி வைத்தார். விடுமுறைகளில் ஊருக்குப் போகும்போது தலையாட்டி பொம்மையும் கொய்யாப் பழமும் அவருக்காக வாங்கிச் சென்றேன்.

‘இந்த பொம்மைகளோடு விளையாட குழந்தைகள் இல்லேயே  தம்பீ’

‘இந்த ராஜா ராணி பொம்மை சாதாரணமானதுதான். இந்த ஓவியன் அந்த சிரிப்பை என்ன அழகாகத் தீட்டியிருக்கிறான் பார்ந்த்தீர்களா? ஒரு பிரச்சினையில் இருக்கும்போது இந்த முகங்களைப் பாருங்க சார்.’

‘ஆம் சரிதான்.’

எங்களுடைய பேச்சு இப்படித்தான் எப்போதும்.

என் இளங்கலைப் பட்டம் திருச்சியில் முதுகலைப் பட்டம் சென்னையில்.  கோட்டைச் சுவர் அரசமரம் உறுதியாக வளர்ந்தது. தஞ்சாவூர் கல்லூரியிலேயே பேராசிரியராகச் சேர்ந்துவிட்டேன். அனந்தராமன் சாரின் மகன் குமரகுரு டெல்லியில் ஒரு  கம்பெனியில் சேர்ந்துவிட்டார். அனந்தராமன் சாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்தக் கோடை விடுமுறையில் குமரகுருவுக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது. நீங்கள் வந்த பிறகுதான் எல்லா ஏற்படுகளும் செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தார்.

3

கோடை விடுமுறை. அனந்தராமன் சார் வீட்டுக்குச் சென்றேன். முதல் பத்திரிகையை 50 ரூபாயுடன் தந்தார். அப்போது அது பெரிய தொகை. அவர் அறையின் கண்ணாடி அலமாரியில் அந்த தஞ்சாவூர் பொம்மைகள் என்னைப்  பார்த்து சிரித்தன. ‘நீங்கள் சொன்னது உண்மைதான் தம்பீ. இந்தச் சிரிப்பு மனசுக்குள் பூக்களைத் தூவுகின்றன.’ சில பத்திரிக்கைகளையும் முகவரிகளையும் கொண்டுவந்தார். ‘இந்தப் பத்திரிகைகளுக்கு முகவரிகளை நீங்கள்தான் தம்பீ எழுதவேண்டும். ஒரு தபால்காரராக எத்தனையோ கையெழுத்துக்களைப் பார்த்திருக்கிறேன். உங்கள் கையெழுத்திலுள்ள வசீகரம் நான் கண்டதே இல்லை தம்பீ. நான்  கற்பனையில் சொல்லவில்லை. சிந்தித்தும் சொல்லவில்லை’ என்றார்.

குமரகுரு திருமணம். எங்கள் வாழைத் தோப்பிலிருந்து பூவோடு தாரோடு இரண்டு வாழைமரங்களைக் கொண்டுவந்து பந்தலுக்கு முன் கட்டிவைத்தேன். வேலைகள் எல்லாம் சிறப்பாக நடந்தது. திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பெண்ணை அழைத்துக் கொண்டு குமரகுரு டெல்லி சென்றுவிட்டார்.

நான் ஊர் வரும்போதெல்லாம் காலையில் நானும் அனந்தராமன் சாரும் அந்தப் பூங்காவில் நடப்போம். பிறகு அந்த சிமிண்டு பெஞ்சில் அமர்ந்து பேசுவோம். குமரகுது மாதாமாதம் பணம் அனுப்புகிறாராம். நல்ல வேலையாம். வெகு சீக்கிரத்தில் ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறாராம்.

‘கடவுள் சித்தம் சார்’

‘நான் சொல்ல நினைத்தேன்’.

‘இதுதான் சார் எதார்த்தம். எதார்த்தத்தோடு நாம் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். நடக்கும் காரியங்களில் மூக்கை நீட்டியே மனிதன் நொந்து போகிறான்.’

‘சரியாகச் சொன்னீர்கள் தம்பீ.’

துளசிக்கும் திருமணம் முடிவானது. என் வசதிக்காக அதையும் ஒரு கோடை விடுமுறையில்தான் வைத்திருந்தார். அதேமாதிரியே முதல் பத்திரிகையை எனக்கு வைத்தார். இப்போது 100 ரூபாய். அதே மாதிரி பத்திரிகைகளைக் கொண்டு வந்தார். முகவரிகள் எழுதினேன்.

‘குமரகுரு கடிதம் எழுதும் போதெல்லாம் உங்களைக் கேட்காமல் இருக்கமாட்டார். அவர் திருமணத்திற்கு நீங்கள் போட்ட மோதிரத்தை அணியாமல் சென்றால் சட்டை போடாமல் போவதுபோல் இருக்கிறதாம்’

வாய் விட்டுச் சிரித்தார். நானும் சிரித்தேன். எல்லாரும் சிரித்தோம். பந்தலுக்கு இரண்டு வாழைமரங்களைக் கொண்டு வந்து கட்டினேன். எல்லா ஏற்பாடுகளையும் சேர்ந்தே செய்தோம்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான். குமரகுரு தொலைபேசியில் பேசினார். அவரால் திருமணத்திற்கு வரமுடியாதாம். ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

4

மிக மிக முக்கியமான வேலைகளாம். அனந்தராமன் சார் என்னிடம் சொல்லிக் கலங்கினார். ‘கடவுள் சித்தம்’ என்பீர்கள். நீங்களே கலங்கலாமா?’ இதைவிட முக்கியமான காரியங்கள் சார் அவைகள். இந்தத் தேவையைச் செய்ய நாமெல்லாம் இருக்கிறோம். அவருடைய வேலையை அவர் மட்டும்தான் சார் செய்யவேண்டும். அந்தப் பொம்மைகளைப் பாருங்கள்.  இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.’ என்றேன். என் தோளைப் பாசமாகத் தட்டிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டார். அன்னபூரணி அம்மாவும் சோகத்தை மறந்துவிட்டார்.

துளசியின் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் எதுவுமே கேட்கவில்லை. திருமணம் முடிந்ததும் பெண்ணை பையனோடு கல்கத்தாவுக்கு அனுப்பிவிடவேண்டும் என்று மட்டும்தான் சொன்னார்கள்.

‘மகனின் வாழ்க்கையைத்தான் முக்கியமாக நினைக்கிறார்கள். அருமையான வரன் சார்.’

‘கடவுள் சித்தம் தம்பீ.’

அவரின் கைகளைக் குலுக்கினேன். 11 மணிக்கு முகூர்த்தம் 9 மணிக்கு மாப்பிள்ளையின் தகப்பனார் இடியாய் ஒரு கேள்வியை இறக்கினார். ‘தாய் மாமன் சீரென்று ஒரு சடங்கு உண்டு. தாய்மாமன் இல்லாவிட்டால் பெண்ணின் சகோதரர் சீர் செய்ய வேண்டும். என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்’ என்றார். அனந்தராமன் துளசி இருந்த அறைக்குச் சென்றார். அன்னபூரணியம்மாவும் அங்குதான். நானும் சென்றேன். ‘கடைசி நேரத்தில் இப்படி கேட்கிறார்களே, இவர்களை நம்பி எப்படியப்பா நான் கல்கத்தா போவேன்’ சொல்லி அழுதார் துளசி. அன்னபூரணியும் அழுதார். அனந்தராமன் ‘கடவுள் சித்தம்’.  என்று சொல்லாமல் தடுமாறினார். நிலமையை மாற்றியாக வேண்டும். நான் சொன்னேன். ‘அவர்கள் ஆசைப்பட்டிருந்தால் சீர் வரிசையை முன்கூட்டியே கேட்டிருக்கலாம். சுயநலம் இருந்திருந்தால் உடனே கல்கத்தாவுக்கு குடுத்தனம் செய்ய அனுப்பமாட்டார்கள். ஏன் நாமாக ஒன்றைக் கற்பனை செய்யவேண்டும். அவர்களுக்கு இது முக்கியமான சம்பிரதாயமாக இருக்கலாம். நான் அவரிடம் பேசுகிறேன்’. அனந்தராமன் சாரிடம் மெதுவாகச் சொன்னேன் ‘அந்த பொம்மைகளைப் பார்த்தீர்களா? அது துண்டு துண்டாய்ப்போனாலும் சிரித்துக் கொண்டுதான் இருக்கும். நீங்களெல்லாம் இங்கேயே இருங்கள். நான் அவரிடம் பேசுகிறேன்.’

‘அந்த சம்பிரதாயம் எங்களுக்கு உண்மையிலேயே தெரியாது சார். குமரகுரு வரமுடியாமல் போனதால் அதைப்பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. அதனால் பரவாயில்லை. அந்த சீருக்காக  5,000 தருகிறோம். உங்கள் உறவினர்களிடம் சொல்லிவிடுங்கள். முகூர்த்தம் அதே நேரத்தில் நல்லபடியாக நடக்கட்டும்.’

‘உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்பி உங்களிடம் அதைச் சொல்லாமல் இருந்தது தவறுதான்.’

முகூர்த்தத்திற்கு முன்பதாகவே 5000க்கான காசோலையை அவரிடம் கொடுத்தேன். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை.

 

5

துளசிக்குக் கணவன் வீடு ரொம்பப் பிடித்துவிட்டதாம். கல்கத்தாவுக்கு மகளை அனுப்பும் நேரம். சில மரங்கள் வாழ்நாளில் ஒரு தடவைதான் பூக்கும், பெண்ணைப் பெற்றவருக்கு பெண்ணை அனுப்பிவைப்பதும் அப்படித்தான். அது ஒரு சுகமான வலி. எல்லார் கண்ணிலும் மழை காத்திருந்தது. எந்த நேரத்திலும் கொட்டலாம். அன்னபூரணி அழுதபோது அவர் முகத்தைப் பார்க்காமல் அனந்தராமன் சார் என் தோளில் சாய்ந்து கொண்டார். துளசியின் கணவரும் தேம்பினார். நான் சொன்னேன். ‘ஆனந்தக் கண்ணீருக்கும் ஒரு அளவுண்டு. எல்லாரும் சந்தோசமாக அனுப்பிவையுங்கள்.’

அடுத்தநாள் அனந்தராமன் சார் உடனே வீட்டுக்கு வரச்சொன்னார். துளசியின் மாமனார் வந்திருக்கிறாராம். என்னோடு ஏதோ பேச வேண்டுமாம். உடனே சென்றேன்.

துளசியின் மாமனார் சொன்னார் ‘தம்பீ, என் நண்பர் சீதாராமன் இப்போது கேரளாவில் ஏதோ ஒரு மாவட்ட கலெக்டராக இருக்கிறார். அவர் மகளுக்கு வரன் தேடுகிறார். உங்களைப்பற்றிச் சொன்னேன்.  அவர் விரும்புகிறார். அடுத்த வாரம் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வருகிறார்களாம். அவர்களுக்கு அமெரிக்காவில் ஹியூஸ்டனில் ஒரு மென்பொருள் நிறுவனம் இருக்கிறதாம். அவர் மகள் அங்குதான் சில பயிற்சி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். அந்த நிறுவனத்துக்கு நீங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். கல்லூரி வேலையை விட்டு விட வேண்டுமாம். அல்லது நீண்ட விடுப்பு எடுக்க வேண்டுமாம். இதற்கு நீங்கள் சம்மதித்தால் அவர்களை வரச் சொல்கிறேன்.’ என்றார்.

மென்பொருள் நிறுவனம் என்பது என் நீண்ட நாளைய கனவு. அது இப்படித் தானாக வரும் என்று நினைக்கவே இல்லை. காற்றடித்த திசையிலேயே எல்லார் காத்தாடியும் பறந்தது.  என் திருமணம் முடிந்தது. நான் ஹியூஸ்டன் சென்றுவிட்டேன்.

இப்போது கைத்தொலைபேசிக் காலம். அனந்தராமன் சாரிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசுவேன். இருபது வருட காலங்கள் ஓடிவிட்டன. இப்போது அனந்தராமன் சாருக்கு எண்பது வயது. எனக்கு அறுபது வயது. எங்கள் சந்திப்பு எங்களின் பேச்சு அவைகளுக்கு வயதே ஆகவில்லை. நான் ஊருக்கு வந்திருந்தேன். அந்த பூங்கா அப்படியேதான் இருந்தது. அந்த பெஞ்சில் அமர்ந்து பேசினோம்.

இந்த இருபது வருட காலத்தில் என்னென்ன நடந்துவிட்டது. குமரகுருவின் மகன் எலக்ட்ரான் ஓட்டத்தைத் துல்லியமாகப் பார்க்கக்கூடிய ஒரு மைக்ராஸ்கோப்பைக் கண்டுபிடித்திருக்கிறாராம். ஆஸ்திரேலியாவின் முன்னணிப் பத்திரிகை அவர் படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது. துளசியின் குடும்பம் இப்போது லண்டனில். துளசியின் மகள் புற்றுநோயின் டிஎன்ஏஐ கண்டுபிடித்து எல்லாவகையான புற்று நோயையும் குணப்படுத்த முடியும் என்று காட்டியிருக்கிறாராம். அவரைப் பற்றிய செய்தியை நீயூயார்க் டைம்ஸ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தது. என் மகன் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களின் கணக்குகளைத் துல்லியமாகக் கையாளும் ஒரு மென்பொருளைக் கண்டுபிடித்திருக்கிறான்.

‘நம்மைப் பற்றி இந்த ஊர்க்காரர்களுக்கே கூடத் தெரியாது. நம் பிள்ளைகளைப் பற்றி இப்போது உலகமே பேசுகிறது சார்.’

6

அந்த 80 வயதிலும் அவர் தெளிவாக இருந்தார். என் கரம் பற்றியிருந்த அவரின் பிடி கொஞ்சம் அழுந்தியது. அவர் உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்தேன். மெதுவாக அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றேன். அந்தச் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். நான் அருகில்  அமர்ந்தேன்.

‘என் நண்பன் உமாசங்கரின் கடிதத்தில் தொடங்கிய நட்பு இத்தனை காரியங்களையும் உள்ளடக்கித்தான் சார் நடந்திருக்கிறது’

‘அதைத்தான் தம்பீ நான் கடவுள் சித்தம் என்கிறேன். எந்த ஒரு நிகழ்வும் ஒரு தொடரின்றி நடப்பதில்லை. நம் விருப்பம் என்பதை விட கடவுளின் விருப்பமென்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அது உங்களிடம் பூரணமாக இருக்கிறது தம்பீ.’

இருவரும் ஒரே சமயம் அந்த அலமாரியைப் பார்த்தோம். சிரித்துக் கொண்டே இருக்கும்  பொம்மைகள்

யூசுப் ராவுத்தர் ரஜித்

 

Series Navigationபறக்காத பறவைகள்- சிறுகதைபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 5
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Sivakumar N, New Delhi says:

    இனிமை, நன்று என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு… அருமை!

  2. Avatar
    Naanjil Maathavan says:

    அருமை
    ஒரு நாவலை
    சிறுகதையில் சொல்லி விட்டீர்

Leave a Reply to Sivakumar N, New Delhi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *