சிறுவன்

This entry is part 32 of 34 in the series 28அக்டோபர் 2012

 

முடிவேயற்று மிகவும் நீண்ட

அந்தப் பேரூந்துப் பயணத்தில் வாந்தியெடுத்த,

காய்ச்சலுக்கு தெருவோரக் கடையொன்றில்

தேயிலைச் சாயம் குடித்த,

அப்பாவைத் தேடி அம்மாவுடன்

*பூஸாவுக்குச் சென்ற…

 

கல்லெறிந்து மாங்காய்ப் பிஞ்சுகளை

பையன்கள் பறித்துப் போகையில்

அவர்களுக்கொரு பாடம் புகட்டிட

அப்பா இல்லாததால்

உதடுகளைக் கடித்து

பெருமூச்சைச் சிறைப்படுத்திக் கொண்ட…

 

ஒருபோதும் தான் காண அழாத அம்மா

மறைவாக அழுவதைக் கண்டு

உறங்காமல்

உறங்குவது போல் தலையணை நனைய அழுத…

 

ஆற்றில் சுழிகள் உடையும் விதத்தை

இரவுப் பூக்கள் மலரும் விதத்தை

நட்சத்திரங்கள் உதிர்ந்து வீழும் விதத்தை

தன்னந்தனியாகப் பார்த்திருந்த…

 

எவ்வளவு துரத்தியும் போகாத

அந்தக் கருத்த, ஒல்லியான, விடலைச் சிறுவன்

இருக்கிறான் இன்னும்

நள்ளிரவில் விழித்து அவன்

அவ்வப்போது தனியாக அழுகிறான்

 

ஈரமாகிறது எனது தலையணை

 

*பூஸா – இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

 

– இஸுரு சாமர சோமவீர

– எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! விரைவாக மாறும் வெளிக்கருவால், பூமியின் காந்தப் புலமும், ஈர்ப்பு விசையும் பாதிக்கப் படுகின்றன.முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Comments

  1. Avatar
    இளங்கோ says:

    அந்த சோகம் பகிரப்பட்டது தோழரே..எங்களிடம்..உம் கவிதை வழி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *