சிவப்புச்சட்டை….

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 14 in the series 4 செப்டம்பர் 2022

 

 

ச.சிவபிரகாஷ்

 

சென்னையின் முக்கியமான அடையாளங்களில்  ஒன்றாக காணப்படுவது ‘கூவம் ஆறு – .’இது பிரதான பல சாலைகளை கடந்தாலும், ரயில் நிலையம் அருகில்  ஒடும் ஒரு பகுதி இடத்தின் தெரு பெயர் “முல்லை நகர்.”கூவம் ஆற்றின் அதன் இருகரையிலும் , வரிசைப்பட்டு அமைந்திருப்பது குடிசைகள் தான். இது பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடமே, ஆட்டோ, ரிக்க்ஷா, ஓட்டுநர்கள், தினகூலிகள், இப்படி பலக்குடும்பத்தினர் வாழ்ந்திருக்க, ரயில் நிலையத்தில் தின கூலியாக இருப்பவர்  “போர்டர் குப்பன்”இவரும், இரயில்வே அதிகாரி ஒருவரது வீட்டில் வீட்டுவேலை, செய்தும் ஆஸ்துமா நோயினால் அவதிபடும் மனைவியும், அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு   படிக்கும் ஒரே மகன்  என இவர்கள் குடும்பமும் அங்கு வசிக்கின்றனர்

“போர்டர் குப்பன்”-இரயிலில் ஏறி, இறங்கும் பயணிகளின் சிலரது உடைமைகள் எவ்வளவு பெரியதாக இருந்தும்,.. கேட்கும் கூலி தரப்படாவிட்டாலும், கொடுக்கும் கூலியை வாங்கி க்கொள்ளும் நல்ல குணமுடையவர். ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முற்படும் முதியவர்களுக்கோ, பெண்களுக்கோ, இடம் பிடித்து தந்தும், கொடுப்பதை வாங்கிக்கொள்வார்.  சுமைகளை  இலகுவாக கையாண்டாலும், வாழ்க்கையை சுமக்க முடியாமல் அவதிப்படுகிறார். காரணம் “ குடி”ஒருநாளைக்கு ஐநூறு, ஆயிரம் சம்பாதித்தாலும், வருமானத்தில் பாதி ‘குடிக்கே’ சரியாபோகும். இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகன் ‘ ராஜபாண்டி’வாழ்வது சேரியாக  இருந்தாலும், படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் அங்கிருக்கும் பசங்களோடு சேர்வதில்லை, பள்ளி விட்டு வந்தவுடனும், புத்தக புழுவாக ஏதாவது படித்து க்கொண்டேயிருப்பவன். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்  வாங்கி தேர்ச்சி பெற்று நல்ல கல்லூரியில் சேர ஆர்வம் கொண்டதால். அவ்வப்போது இவனது அம்மாவிடம்,, அப்பாவிடமும் இதை வலியுறுத்தி கொண்டிருந்தான்.

பரிட்சை நெருங்கியாச்சு. தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம். அன்று வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அப்பா குப்பனிடம்

அப்பா….

கண்கள் சொருக. தள்ளாடியபடியே,  என்னடா? – என்றார்

அப்பா… பரிட்சை வரப்போகுது

அதுக்கென்ன? – என அதட்டலாக கேட்க

 எக்ஸாம் பீஸ் கட்டணும், அதுக்கு பணம் வேணும் – என்று பதிலளித்தான்……      அதுக்கு குப்பன்  

பணமா…? “போடா..ங்க”  பணம், கிணம் கேட்டா க்கா  தொலைச்சுப்பூடுவேன் என நா குழைத்து பொத்தென கீழே சாய்ந்தார்.

சரி… அப்பா, போதையில இருக்கார் காலைல கேட்டுக்கலாம் என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு இவனும் படுக்க சென்றான்.ஆனால்… அப்பாவின் பிடிவாதமும், இரவு கடக்கும் ரயில் சத்தமும் இவனை தூங்க விடாமல் செய்தது.

காலை…. தெளிவான முகத்தில், வேலைக்கு கிளம்ப தயாராக இருந்த தந்தை குப்பனிடம் மீண்டும் கேட்டான் ராஜபாண்டி

அப்பா…

என்னடா பாண்டி.?

பரிட்சைக்கு பணம் கட்டணம்பா, – என  கேட்க

பணத்துக்கு நான் எங்கே போறது? எனக்கு வயசாயிடுச்சு, பாழாப்போன இந்த குடியால உடம்பும் போச்சு  இன்னும்… எத்தனை நாள் நான் உழைப்பேன்னு தெரியல? எத்தனை நாள் நான் உசுரோட இருப்பன்னு  தெரியல, உன் ஆத்தாளுக்கும்  முடியாம  ஏதோ… அவளும், வேலை செஞ்சி நமக்கு சோற்றை பொங்கி போடுறாள்.

குடிச்சு, குடிச்சு  என் கை, காலு  எல்லாம் கொஞ்சம், கொஞ்சமா செத்துபோகுது, ஏதோ… மன தெம்புல வண்டி ஓடுது,  உன் ஆத்தாளுக்கும் முடியல, அப்பப்போ மேல், மூச்சும், கீழ் மூச்சும் வாங்கும். எங்களுக்கு இனி தெம்பும் இல்லை,

அதனால நீ! படிச்ச வரைக்கும் போதும், இனிமே எதுவுமே கிழிக்க வேணாம்,ஏதாவது வேலைக்கு போ…, இல்லைன்னா பேசாம  என்கூட தொழிலுக்கு வா,  நான் எங்க யூனியன் ல சொல்லி உன்னை வேலைக்கு சேர்த்து வுடறேன், நீயும் அந்த சிவப்பு சட்டையை போட்டு க்கிட்டு கூலியாக தொழில இறங்கு, நல்ல பணமும் வரும்,

 அப்பனையும், ஆத்தாளையும்  காப்பாத்து,  இது விட்டு போட்டு, நான்.. படிக்க தான் போகனும்னு  நினைச்சின்னா , இந்த  வூட்ல… இனி  உனக்கு  இடம் கிடையாது என்ன சொல்ற? . – இதை கேட்டு அமைதியாக இருந்த பாண்டியை

என்ன இறுமாப்பு இருந்தால், நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் பதில் சொல்லாம இருக்கே? என கையை ஓங்கி …. ‘நிதானித்து’ உன்னை   நான் ஏன் கேட்கனும்,? போடா நாயேன்னு,.. முதல்லேயே, வேலைக்கு துரத்தியிருந்திருக்கனும், இல்லாததால  இப்போ தப்பா போச்சு.  இனி….. இதுக்கு மேலே சொல்ல மாட்டேன்.  இனிமே படிக்கவும் வேணாம், பரிட்சையும் எழுத வேணாம்   ராவுக்குள்ள முடிவு பண்ணி வெய்.

என சொல்லியபடியே  பீடியை பத்தவைத்தபடியே  கிளம்பி  நடந்தார்  குப்பன்.

ஆத்திரமும், அழுகையையும், அடக்கியபடி இவனது அம்மாவிடம் நடந்தவற்றை கூறி கெஞ்ச-  அம்மாவும் இவனை ஆறுதல் படுத்த தொடர்கிறாள்

“தம்பி… “  எனக்கும் மனசு கஷ்டமாக தான் இருக்கு, உன்னை வேலைக்கு போக சொல்றது  வருத்தமாகவும் இருக்கு, எத்தனையோ வசதி வாய்ப்பு  இருக்குற பிள்ளைங்க படிக்காம, ஊரை சுத்துதுங்க, இதை நானும் தான் பார்க்குறேன்.

என்ன பண்றது? நம்மல மாதிரி ஏழைங்க படிக்கணும்னா கூட சமயத்துல முடியாம போகுது. இது தான்! நம்ம தலைவிதியை  என்னவோ ?

பாவம்… அப்பாவுக்கும், வயசாகி போச்சு, என்ன தான் குடிச்சிட்டு வந்தாலும், உன்னை இவ்வளவு தூரம் படிக்க வெச்சவர் தானே? கெட்ட பழக்கத்தினால இப்போ… இவரால முடியல, அதுதான்.

உனக்கும் வயசு ஏறிட்டே போகுது, நீயும் வீட்டு நிலைமையை  தெரிஞ்சி பார்த்து நடந்துக்க. வேலைக்கு போயிட்டே படிக்க முடியுமான்னு பாரு, பரிட்சை எழுத முடியுமான்னு பாரு.  – என்றவளிடம்

சரி… மா, நீ சொல்றது எல்லாமே சரி, ஆனால்…. பரிட்சைக்கு இன்னும்  பத்து, பதினைந்து நாள் தான் இருக்கு, வாழ்க்கையில ! இது தான் முக்கியமான பரிட்சை. இதை எழுதி முடிச்சிட்டா கூட பரவாயில்லை., பரிட்சையில் பாஸ் பண்ணிட்டேனா  போதும். வேலைக்கு போயிட்டு, தபால் மூலமா படிக்கிறதுக்கு முயற்சி பண்ணிக்கிறேன். நீயாவது….. எனக்கு எப்படியாவது ? பரிட்சைக்கு பணம் கட்ட ஏற்பாடு என கெஞ்சினான்.

சரிடா…. நான் வேலை செய்யுற வீட்ல  இன்னிக்கு கேட்டு பார்க்கிறேன்.கடவுள் விட்ட வழி கிடைச்சதுன்னா,  சந்தோஷம். நான் கொடுக்கிறேன். அப்புறம் நாளைக்கு போய்…. பரிட்சைக்கு பணம் கட்டு. – என்று கொஞ்சம் தைரியம் சொன்ன அம்மாவை கட்டிப்பிடித்து நன்றி சொன்னான் பாண்டி

அன்று மாலை வழக்கம் போல, போதையில் வந்த குப்பன்.

டேய்! மவனே…. ஏய்… பாண்டி – என கத்தி அழைக்க, பாடங்கள் படித்துக்கொண்டிருந்தவன் பதறியவாறு

என்னப்பா…..?

ஒன்னுமில்லை,  காலைல…. பரிட்சைக்கு பணம் கட்டனும் கேட்டீயே

“ஆமா…. “

எனக்கும் மனசு கேட்கல,  சாயங்காலம்… ஒரே ஒரு கட்டிங் மட்டும் சாப்பிட்டு மீதி பணத்தை எடுத்துட்டு உன் கையில போய் கொடுக்கலாம் ன்னு நினைச்சு வந்தேண்டா, அங்க போய் கட்டிங் வாங்கி சாப்பிட போகும் போது, என் நண்பன் ஒருத்தன்  அங்கு வந்து எனக்கு ஒரு குவாட்டர் வாங்கி கொடுன்னு நச்சரிச்சான்,, நான் காசில்லாத போது, எனக்கு அவன் வாங்கி கொடுத்திருக்கான். அந்த நன்றி யை மறக்க கூடாதில்ல., அதான்…. ஒரு ஆப் வாங்கி, பாதி, பாதி, சாப்டோமா, இருந்த துட்டெல்லாம் செலவாயிடுச்சுடா – என்றதும்

அப்பா… நீங்க என்னீக்கு தான், இந்த குடியை விடபோறீங்களோ தெரியல? இப்படி….. குடிச்சு, குடிச்சு உடம்பை  கெடுத்துக்காதீங்க, நான் படிக்கலைன்னாலும் பரவாயில்லை, அம்மாவும், நீங்களும், எனக்கு வேணும்.

 பக்கத்து வீட்டு மணி அண்ணா…. இப்படி குடிச்சு, குடிச்சு, லிவர் கெட்டுபோய் செத்துபோயிட்டார் தெரியுமில்ல, பாவம்…. அந்த வீட்ல என்னைவிட சின்ன பசங்க இரண்டும் அப்பா இல்லாம…. எவ்வளவு கஷ்டபடுதுங்க,? அந்த நிலைமை எனக்கு வேணாம்பா, தயவு செஞ்சு இந்த குடியை விட்ருங்க பா.

நீங்க இல்லாம… நான் படிச்சு பெரியாளாக வர விரும்பலை,நீங்க இருக்கும்போதே, நல்லா படிச்சு, நல்ல உத்தியோகம் கிடைச்சு, சம்பளம் வாங்கி, உங்களையும், அம்மாவையும், நல்லபடியா பார்த்துக்கணும், அதான் என் ஆசை, அது முடியலைன்னா, நான் செத்து போயிடுவேன், அப்பவாவது… , நீங்க, திருந்திருவீங்களாவதுன்னு  பார்ப்போம்., என பாண்டி சொல்லிக்கொண்டிருக்கும் போது,

“என்னடா…… மவனே”, இப்படியெல்லாம் பேசுற , என்றபடியே போதையில் சாய்ந்தார்.  

இதை கண்டு

கண்கலங்கியபடி பாண்டி உட்கார்ந்திருக்க, அம்மாவும் வீட்டு வேலைக்கு சென்றவள்  திரும்பியதும்.

பாண்டி…. இந்தா, நீ கேட்ட பணம், நாளைக்கு ஸ்கூல்ல போய், பரிட்சைக்கு பணத்தை கட்டு என நீட்டினாள். இதனை பெற்றதும்.

அம்மா……. என அழைக்க

என்னடா கண்ணு…?

குடும்பத்துக்காகவும், எனக்காகவும்  எவ்வளவு  கஷ்டபடுறே,?  பேசாம.. அப்பா சொல்ற மாதிரி நான் வேலைக்கு போயிடவாமா? அப்பவாவது அப்பா குடிக்காமல்  இருக்கிறாரான்னு பார்ப்போம். அப்பாவுக்கும் வயசாயிடுச்சு, வெளியேயும், வேலைக்கு போனாலும் குடிச்சிட்டு வந்திடுறார். என்னால உங்க ரெண்டு பேருக்கும் கஷ்டம்., அதனால நான் பரிட்சை எழுதவும் போறதில்லை, படிக்கவும் போறதில்லை,இப்போ தான் முடிவு செஞ்சேன். நீ! வேலை செய்யுற வீட்ல கடனாக வாங்கின இந்த பணத்தை திருப்பி கொடுத்திடுமா. – என்றான் பாண்டி.

அதெல்லாம் ஒன்னும் வேணாம் ….. பாவி மனுஷன், தினம், தினம், குடிச்சு தான் சீரழியருதில்லாம, ஒத்த புள்ளை உன்னையும் சீரழிக்க பார்க்குறான், புத்தி இருந்தால், இப்படி செய்வானா?

நீ, விருப்பப்பட்ட மாதிரி படி,என்னால முடியற வரைக்கும் நான் உன்னை படிக்க வைக்கிறேன். நீ நல்லா படிச்சு, நல்ல உத்யோகத்து போயிட்டீனா தான் இதுக்கு விடிவு காலம் பிறக்கும். ஆளுங்க சேர்க்கை சரியில்லாததாலேயும், வேலைக்கு போயிட்டு கொஞ்சம் காசு பார்க்கிறதாலேயும் தான், கையில கிடைக்கிற காசையெல்லாம் இப்படி தண்ணி அடிச்சிட்டு, காலிபண்ணிடுறார். நீ படிச்சு, கௌரவமா நல்ல வேலைக்கு போயி, இந்த இடத்தையும் விட்டுட்டு நாம வேறு எங்காவது போனால் திருந்திடுவாரான்னு பார்ப்போம்.

அதுவரைக்கும் மனசை போட்டு குழப்பிக்காதே… உன் லட்சியத்தை நீ அடையும்  வரை…  சரியா ? “ஹாங்”…

அப்புறம் இன்னொரு விஷயம்…. இந்த பணம் கூட நான் வேலை செய்யுற வீட்ல கடனாக கொடுக்காம, சும்மா தான் கொடுத்தாங்க., உன்னை பத்தி அவங்ககிட்ட சொன்னேன். ரொம்ப பெருமைப்பட்டாங்க, அதுவும் இல்லாம…. அவங்க பையன் அமெரிக்காவுல இருக்கானாம், இங்கிருந்து அங்கே போய் வாழுற நம்ம நாட்டு ஆளுங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து ஏதோ…. ‘டஸ்டு ‘ நடத்துறாங்களாம்.

பாண்டி குறுக்கிட்டு…. டஸ்டா?  அப்படியெல்லாம் இல்லை “ட்ரஸ்ட்”ஆக இருக்கும். அறக்கட்டளைன்னு சொல்லுவாங்க – என்றதும்.

ஆமாமா…. அதே தான், நம்ம நாட்டு ஆளுங்களுக்காக , படிக்க வைக்க முடியாதவர்களுக்கு, படிக்க விருப்பம் இருந்தும், பணமில்லாமல் படிக்க முடியாம இருக்கிறவங்களுக்கு, படிப்புக்கு உதவி செய்றாங்களாம், உடம்பு முடியாம இருக்கிறவங்களுக்கும் வைத்தியம் பார்க்க உதவி செய்றாங்களாம்.அதனால…

நான் உன் விஷயத்தை… ‘என் பையன்’கிட்ட சொல்லி, உதவி  வாங்கி தரேன்னு வேலை செய்யுற  வீட்ல, அந்த ஐயாவும், அம்மாவும் சேர்ந்தே சொல்லியிருக்காங்க, அதனால் நீ! எதை பத்தியும் கவலைப்படாம, நீ நெனச்சத சாதித்து க்காட்டு அதான் பெருமை, சந்தோஷம் எல்லாம். என்றாள்.

மகிழ்ச்சியில் திளைத்த பாண்டி, மறுநாள் பள்ளியில் பரிட்சை க்கு கட்டணம் செலுத்தி விட்டு தயாரானான்.

வழக்கம் போலவே, அம்மா வீட்டு வேலைக்கும், அப்பா குடித்துவிட்டு பாண்டி யை வேலைக்கு போக வற்புறுத்துவதும் தொடர்ந்தது.

இன்றொரு நாளில்..

“டேய் பாண்டி “…. என்னடா தினம், தினம் சொல்லிக்கிட்டே இருக்கேன்.?  நீ! பாட்டுக்கு கம்முன்னே இருக்கே….. நான் எங்க யூனியன் – ல  வேற உனக்கு சொல்லி வெச்சிருக்கேன். – என்றவனை

அப்பா… கொஞ்ச வருஷம் பொருத்துக்குங்க பா, நான் கண்டிப்பாக படிச்சு, முடிச்சவுடனே  வேலைக்கு போயிடுறேன்பா. –    குப்பன் குறுக்கிட்டு

என்னது….?  படிக்க போறீயா, நான் உன்னை படிக்க வெச்சா தானே ? எப்படி படிக்கிறேங்கிறத  பார்க்கலாம்.

நானும் ஏதோ…. பையன் கொஞ்சம் வளரட்டும் அதுவரைக்கும் படிக்கட்டும்னு  கவர்மெண்டு ஸ்கூல்ல சேர்த்து வுட்டா, ஏதோ கவர்னர் மாதிரி பேசிக்கிட்டு திரியுற,

நானும் எவ்வளவு நாள் தான் எல்லா பாரத்தையும் சுமக்கிறது,?  இவ்வளவு நாள் விட்டதே தப்பா போச்சு. மரியாதையாக , வேலைக்கு கிளம்பு – நீ வேலைக்கு வந்து சம்பாதித்து கொடுத்தீனா….. நான் சந்தோஷமா, போய் குடிச்சிட்டு, பெருமையா என் சினேகிதக்காரன்கிட்டெல்லாம்  சொல்லிப்பேன்  என் பையன் சம்பாதித்து  கொடுக்கிறான்யா,  இனி எனக்கு கவலை இல்லை மூன்று வேளையும் சரக்கு கிடைச்சுடுது., நான் யாருக்கிட்டேயும், இன்னிக்கு நீ, வாங்கி கொடு, நாளைக்கு நான் வாங்கி தரேன்னு சொல்லமாட்டேன். – என்றவனிடம்.

அப்பவும்….. இந்த குடி தான் பெரிசா தெரியுதாபா? இப்போ… நான் சொன்னா புரிய போறதில்லை, நான் பெத்து போட்டவன், இவனுக்கு என்ன தெரியும். சின்ன பையன் னு நினைக்கிறீங்க.  காலம்  ஒரு  நாள் எல்லாத்தையும்  மாத்தும், அப்போ தான் நீங்க உணர்வீங்க.

ஒரு விஷயம் பா… , நான் கண்டிப்பாக வேலைக்கு போறேன். இன்னும் ஒரு பத்து நாள் பொருத்துக்குங்க, வர போற  இந்த பரிட்சையெல்லாம் முடிச்சிடுறேன். லீவு விட்டாச்சுன்னா,  சத்தியமா கிளம்பிடுறேன். .

ஆனால்….. ஒன்னு, உங்கள மாதிரி சிகப்பு சட்டையை போட்டு க்கிட்டு, கூலியாக  வரமாட்டேன் பா,

நான் படுகிற கஷ்டம் நம்ம பையன் படக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா.. இந்த விஷயத்திலாவது, எனக்காக விட்டு கொடுக்கனும். எனக்கு பிடித்த மாதிரி, என் உடம்பு ஒத்துழைக்கிற மாதிரியான வேலையை தேடி, சம்பாதித்து தாரேன். பத்து நாட்கள் மட்டும் பொறுத்துக்குங்க.  என்று சொல்லியபடியே

அம்மா…. சொன்ன விஷயத்தை முழுவதும் அப்பா குப்பன் காதில் போட்டு வைத்தான். மனசு மாறும் என்ற நம்பிக்கையில்.  அதற்குள் சட்டென்று

அதெல்லாம் நடக்கிற கதை இல்லை.. உனக்காக பத்து நாள் டைம் தரேன். அம்புட்டுதான். என கொடியில் போட்டு வைத்திருந்த சிவப்புச்சட்டையை உடம்பில் மாட்டி லாவகமாக ஒரு சந்திரிகா பீடியை பத்துவைத்து புகைத்தபடியே  வெளியே  கிளம்பினான் குப்பன்.

……….

தேர்வும் சொன்னது போல் பத்து நாளில் முடிந்து விட்டது. அப்பாவிடம் கொடுத்த சத்தியத்தை  ‘ காப்பாற்ற முயன்று.. ‘ முடியாமல்

மூன்றாம் நாள்….. மாலை வழக்கம் போல போதையில் வந்த குப்பன். மனைவியிடம்

என்னடி…. சொல்றான்,? – உன்  மவன்., பரிட்சை முடிஞ்சதும், வேலைக்கு போறேன்னு  சொன்னான். என்னாச்சு? மூன்று நாளாகுது.

என்ன சொல்வது என புலப்படாமல்,… போவான், போவான். ஒத்த புள்ள ஆசைபபடுது, படிக்க வைக்க முடியாம, வேலைக்கு துரத்திறதிலேயே இருக்கீயேயா. இப்படி குடிக்கிற காசை வெச்சாவது, படிக்க வைக்கலாம் இல்ல, – என கேட்க.

“ஆங்….. “நான் எப்படி குடிக்கிறது?

ஏன்  ? குடிக்காம இரு… என்றவளை

குடிக்கலைன்னா… நான் செத்து போயிடுவேன்  டீ

இப்ப மட்டும் என்ன வாழுதாம்? நீ  இருக்கிறதும், ஒன்னுதான், இல்லாம இருக்கிறதும் ஒன்னுதான். – என வாதங்கள் நீண்டு க்கொண்டிருக்க எங்கோ வெளியே  சென்றவன் திரும்பி வந்தான்.

என்ன சத்தம்?

… ம்…. நீ  இன்னும் வேலைக்கு போகலையான்னு கூறுக்கெட்டவன்  கேட்கிறார். – என்றாள்  அம்மா.

அதற்கு  “பாண்டி “- ஏதோ சொல்லனும் என்பதற்காக,

என்னப்பா… நான் தான் முதல்லேயே சொல்லிட்டேன் இல்ல, திரும்பி, திரும்பி கேட்டுக்கிட்டே, அம்மாவையும் தொந்திரவு பண்ணினால் என்ன அர்த்தம்?  “த்தோ” இப்போ கூட, வேலை தேடி தான் போயிட்டு வரேன். – என்றதும்  குப்பன்

ஆமாமா….. நாட்ல, பாதி பேர் படிச்சுட்டு, வேலை வெட்டி இல்லாம, கிடைக்காம, சுத்திகிட்டு இருக்காங்க.  துரை… எம்.பி.பி.எஸ், படிச்சு கிழிச்சிருக்கார். இவருக்கு மட்டும்  போனவுடனே  வேலை  கிடைச்சிடும், கவுரவத்தையெல்லாம், மூட்டைக்கட்டிட்டு, ஒழுங்கு மரியாதையா என் கூடவே  தொழிலுக்கு வந்திடு. வேற வேலைக்கெல்லாம்  தேடி அலையாத. எங்க யூனியன் – ல,  ஏற்கனவே சொல்லிட்டதால அனுமதி கொடுத்திட்டாங்க, காண்ட்ராக்ட் க்காரன், தீபாவளிக்கு எனக்கு சிவப்பு சட்டை ஒன்னுக்கொடுத்தான் பார். அதை இன்னும் தைக்காம வெச்சிருக்கேன், அதை  எடுத்திட்டு போய்   தையல்காரன்க்கிட்ட கொடுத்து தைத்து போட்டுக்கோ. என பழைய  பஞ்சாகமாக, விவாதங்கள் தொடங்க.

ஏய்…. சோறு போடு டீ, – என மனைவியை அதட்டி, அவளும், (சென்னை கலீஜான….. தமிழ் பாழையில் குப்பனை அர்ச்சித்தபடி, தட்டில் சோற்றை போடவும்,  இவன், சாதத்தை, பிசைந்து, பிசைந்து, இரண்டு வாய் உள்ளே செல்வதற்குள் போதை தலைக்கேறி சாய்ந்தான்.  

காலை விடிந்ததும், அப்பா கண்ணில்படுவதற்குள், ரோட்டுக்கு கிளம்பியவன்

நமக்கு என்ன வேலை தெரியும்? முன்னே, பின்னே வேலைசெய்து பழக்கமில்லை, படிப்பும் அரைகுறை, யார்க்கிட்டேயும்  பேசி பழக்கமில்லை, எந்த வேலைக்கு போறது? எங்கே போறது? முடிவெடுக்க முடியாமல்,  யோசித்தபடியே தெரு வழியே நடந்து செல்கையில்

‘எதிர்ப்பட்ட’ – எப்போதாவது பார்த்து சிரிக்கும் பக்கத்து தெரு பையன்(வயதில் கொஞ்சம் பெரியவன்) காலையில் வீடு, வீடாக  பேப்பர்  போடும் விபரம் அறிந்து அவனிடம்  விசாரித்தான்.

“அண்ணே”….         அழைத்தான்

என்ன தம்பி, ?

ஒன்னுமில்லைண்ணா,… நீங்க வீடு, வீடாக போய் பேப்பர் போடுறீங்கள்ள ?

ஆமா…. என்ன விஷயம்?

எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? – பாண்டி  கேட்க

மாதம். என்ன ஐநூறு, ஆறுநூறு கிடைக்கும்.

அவ்வளவு தானா?

பின்னே….. காலையில் அதிகபட்சமாக  ஒருமணிநேரம் தான் வேலையே, அதுக்கு எவ்வளவு கொடுப்பாங்க,? – ஏன்  கேட்குற  

நானும்  பேப்பர் போட வரவா? – என்றபடி எல்லா விஷயத்தையும்  இவனிடம் சொன்னான் பாண்டி.

அதுக்கென்ன தம்பி?.. நான் நாளைக்கே சேர்த்து விடுறேன். சைக்கிள் ஒன்று இருந்தால் போதும். ‘நான்’… காலைல பேப்பர்  போட்டு விட்டு, முழு நேரமாக ஒரு கொரியர் கம்பெனி ல வேலை செய்யுறேன் அங்கேயும் உன்னை சேர்த்து விடுறேன். மாதம் எப்படியும் ஏழு, எட்டாயிரமாவது சம்பாதிக்கலாம். சரியா என கேட்க.

“சரிண்ணே”… நாளைக்கே வரேன். என சொல்லிவிட்டு, வந்தவன் அம்மாவிடமும், வேலைக்கு செல்ல இருக்கும் விபரத்தை தெரியப்படுத்தினான்.   அதற்கு…    ‘அம்மா மறுக்க,’

‘சமாதானப்படுத்தினான்’ – காலேஜ் சேரும் வரை போறேன். அதுக்குள்ள அப்பா மனசு மாறினாலும், மாறிடும். அதுவரைக்கும் வேலைக்கு போறத

 தடுக்காதீங்கம்மா. என்றான்.

சரியென… ஒப்புக்கு சம்மதித்தாள்.

…..

சொன்ன படி அந்த பையன், பாண்டியை இரண்டு இடத்திலும் சேர்த்துவிட, தினமும் சைக்கிளில்  சென்று வந்துக்கொண்டிருந்தான். ஒரு மாதம் சம்பளமும் வாங்கி ஆகிவிட்டது.

நாளை காலை 10.00மணியளவில் பரிட்சை முடிவுகள் வெளியாக இருப்பதாக இந்த  இரவு அறிவிப்பு வர, மிகுந்த ஆவலோடு…. காலை பேப்பர் எல்லாம் போட்டுட்டு, குளிச்சிட்டு, ரிசல்ட் போய் பார்ப்போம். ஒருநாள் கொரியர் கம்பெனில லீவு சொல்லிக்கலாம்.  – என  நினைப்பில் படுத்துறங்கி.

காலையில்…

போட்டுக்க  மாற்று  சட்டை இல்லாததால், கொடியில் கிடந்த பள்ளி  வெள்ளை சட்டையை அணிந்து, வழக்கம் போல சைக்கிளை மிதித்துக் கொண்டு, ஒவ்வொரு வீடாக  பேப்பர் போட்டு, இன்னிக்கு ரிசல்ட் வருது  நல்ல மதிப்பெண் வரணுமே , அப்பா.. மனசு மாறி, காலேஜ் சேர சரின்னு சொல்லனுமே, என முணுமுணுத்துக்கொண்டே ஏதோ ஒரு சிறிய தெருவிலிருந்து, மெயின்ரோட்டுக்கு திரும்புகையில் ….. மெயின் ரோட்டிலிருந்து அந்த சிறிய தெருவுக்குள், தண்ணீர் லாரி ஒன்று வேகமாக நுழைய.எதிர்பாராத விதமாக ராஜபாண்டி மீது லாரி மோத,  ‘தூக்கி வீசப்படுகிறான்’.

அதற்குள்.. விஷயம் பரவ, கதறிஅழுது, தலையிலும், வாயிலிலும், அடித்தபடி, பெற்றவர்களும், மற்றவர்களும் அந்த இடத்தில் கூடிவிட, போலீஸ்  மட்டும் உடனே வராததால், பிணமாக கிடந்த பாண்டியின் தலையிலிருந்து வெளிவந்திருந்த ரத்தம், அவன் போட்டிருந்த வெள்ளை சட்டை முழுவதும் சிவப்பாக மாறி போயிருந்தது. இதை கண்ட பாண்டியின் தாய் பேச்சும், மூச்சும் இல்லாமல் கீழே சாய,  மனைவியை தாங்கிய குப்பன்

 கதறி அழுது புலம்பினான்…. சிவப்பு சட்டையை நான் தான்டா உன்னை போட சொன்னேன். நீ, விருப்பமில்லாமல்… முடியாதுன்னு சொன்ன, கடைசியில….. நீயே!….. போட்டுறுக்கேன்  பார்த்துக்கோன்னு  சொல்ற மாதிரி இருக்குடா. என ஆக்ரோஷமாக கலங்கி கத்தி, நீயும் இல்லாம, உன் ஆத்தாளும் இல்லாம நான் மட்டும் இருந்து என்ன பிரியோஜனம்,டா….. என சொல்லியபடியே, இவனும் அங்கேயே தொப்பென்று விழுந்து மடிய  பார்ப்பவர் நெஞ்சமெல்லாம் வெடிக்கும் போலானது.

…..

அன்றைய  காலை பரிட்சை முடிவில்.. மாநிலத்தில் மூன்றாம் இடத்திலும், பள்ளியில் முதல் இடத்திலும் தேர்வாகி இருந்தான்  பாண்டி

மாலை செய்தியாக….. மூவரின் மரண செய்தியே தலைப்பானது.

 

*****முற்றும் *****

 

 

 

 

                                                                                                                                    ச.சிவபிரகாஷ்

 

 

 

 

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 277 ஆம் இதழ்நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *