சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு (6)

This entry is part 15 of 26 in the series 17 மார்ச் 2013

 
இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் உணர்வு கொண்டவர்களிடம் இதைத் தானே எதிர்பார்த்தது. வேறு கால கட்டங்களில் எழுத்து பத்திரிகையும் தோன்றியிருக்காது. அங்கு ஒரு செல்லப்பாவும் எங்கள் முன் இருந்திருக்க மாட்டார்.

செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார். அவர் சாதகமான பார்வை கொண்டிருந்த ந. சிதம்பர சுப்பிரமணியத்தின் “நாகமணி” மண்ணில் தெரியுது வானம்” போன்ற  நாவல்கள். நா. பார்த்த சாரதியின் ஆத்மாவின் ராகங்கள், மணிக்கொடி காலத்து கி.ரா. வின் நாவல் (செல்லப்பாவே என்னிடம் கொடுத்து எழுதச் சொன்னது), டி.செல்வராஜின் மலரும் சருகும், சிதம்பர ரகுநாதனின் அபத்தமான கட்டுரை இவற்றையெல்லாம் நான் தீவிரமாக எதிர்த்து எழுதியிருக்கிறேன். ஹெப்சிபா ஜேசுதானைப் பற்றியோ, கிருத்திகா பற்றியோ எனக்கு ஏதும் பெரிய அபிப்ராயங்கள் இருந்ததில்லை. கு. அழகிரிசாமி எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற போதும் அவர் க.நா.சு. பற்றி எழுதியது அபத்தமாகப் பட்டபோது அதை நான் எழுத்து பத்திர்கையில் எழுதத் தயங்கவில்லை. செல்லப்பாவுக்கு மறுப்பு இருந்ததில்லை. எனக்கு மிக ஆச்சரியம் அளித்தது, கு. அழகிரிசாமியை சென்னையில் நேரில் சந்தித்த போது அவர் மிக நட்புணர்வுடன் தான் பழகினார். என் தலைமுறை எழுத்தாளார் யாரும் என்னை முகம் கொடுத்து பேசியிருக்க மாட்டார். பகைமையின் ஜ்வாலை என் முகத்தைச் சுட்டெரித்திருக்கும்.  தில்லியில் நடந்த ஓவியக் கண்காட்சிகள் ஒன்றிரண்டைப்பற்றியும் (யூகோஸ்லாவிய ஒவியம் கண்காட்சி ஒன்று பற்றி எழுதியது நினைவிலிருக்கிறது.) எழுதியிருந்தேன். இப்ராஹீம் அல்காஷியின் இயக்கத்தில் தேசீய நாடகப் பள்ளி முதன் முதலாக மோஹன் ராகேஷ் என்னும் ஹிந்தி நாடகாசிரியரின் முதல் நாடகம், லெஹ்ரோன் கா ராஜ்ஹன்ஸ் மேடையேறிய போது அது பற்றி எழுதியிருந்தேன். ஹிந்தி நாடக எழுத்து, மேடை ஏற்றம் எல்லாம் அல்காஷியின் காலத்தில் புதிய வரலாறு படைத்தன. அந்த வரலாற்றின் ஆரம்ப நாடகங்களில் ஒன்று அது. ஆனால், தில்லியில் ஒரு ஹிந்தி நாடக மேடையேற்றம் பற்றி என்ன எழுதி விளக்க முடியும்? என்ன அர்த்தம்? அதற்கு. பால சந்தரும், சோவும், க்ரேஸி மோகனும் சென்னையில் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்த காலத்தில் இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எனக்கு ஏற்பட்ட உற்சாகத்தைச் சொல்ல விரும்பினேன். அதற்கு மேல் அதற்கு அர்த்தமும் இல்லை. பயனும் இல்லை. இரண்டு நாடக உலகங்களும் வேறு வேறு வித்தியாசமான உலகங்களைச் சேர்ந்தவை. எல்விஸ் பெஸ்லியையும் மைக்கேல் ஜாக்ஸனையும் எம்.டி. ராமனாதனுக்கு அறிமுகப்படுத்தும் காரியம் தான். செல்லப்பா எதையும் நிராகரிக்கவில்லை. இதெல்லாம் நமக்கு எதற்கு? என்று அந்த ஆரம்ப வருடங்களில் சொல்ல வில்லை.
ஒன்றே ஒன்றை அவர் போட மறுத்து விட்டார். எழுத்து இதழ் ஒன்றில் சோ தமிழ் நாடகங்களின் பெருமை பற்றி, ஏதோ ஒரு விழாவில் பேசிய பேச்சின் பதிவை வெளியிட்டிருந்தார். சோ அப்போது ஒரு பெரும் சூறாவளியாக தன் எதிர்ப்பட்டதை யெல்லாம் சின்னா பின்னமாக்கிக்கொண்டிருந்தார். தன் நாடகங்கள் மூலம்  அப்போது  டிகே ஷண்முகம், நவாப் ராஜமாணிக்கம் ஆர். எஸ் மனோஹர் போன்ற பழைய ஜாம்பவான்களையெல்லாம்  இருந்த இடம் தெரியாமல் செய்திருந்தார்,.  அவர்கள் நாடகங்கள் மறைந்ததைப் பற்றி எனக்கு ஏதும் வருத்தம் இல்லை. இவர்களை மீறி தமிழ் நாடகம் எப்போதோ மாறியிருக்கவேண்டும். ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருக்கவேண்டும். ஆனால் யார் யாருடைய நாடகங்களும் நாடக வாழ்க்கையும் மறையக் காரணமாக சோ இருந்தாரோ அவர்களையெல்லாம் மாபெரும் கலைஞர்கள் என்றும் தான் ஏதோ ஜனங்களைச் சிரிக்க வைத்து தானும் நாடகக் காரன் என்று ஒப்பேத்துவதாகவும் தனக்கு முந்திய நாடக கலைஞர்களைப் புகழ்ந்து தள்ளியிருந்தார். சோ நாடகங்கள் என்ற பெயரில் செய்யும் காரியம் அன்றைய அரசியல் வாழ்க்கை நடப்புகளை நியாயமாகவே கேலி செய்தது, இப்படி மேடையிலாவது நாடகம் என்ற பெயரிலாவது கேலிச் சித்திரங்கள் அரசியலிலும் அறிவார்த்த உலகிலும் பட்டங்களும் அதிகாரங்களும் கொண்ட வேஷங்கள் தரித்து பவனி வருவதை கிண்டல் செய்யும் ஒரு விவேகமுள்ள மனிதராவது இருக்கிறாரே என்று நான் சோ பற்றி சந்தோஷப்பட்டாலும், அவரை நாடகாசிரியராகவோ, அவரதை நாடகங்கள் என்றோ, அவர் புகழாரம் சூட்டி பெருமைப் படுத்தியவர்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் தாம் என்றோ நான் கருதவில்லை. அதை அவர் நிஜமாகவே நம்புகிறார் என்றால், தன் நாடகங்கள் மூலம் அவர்கள் நாடக வாழ்வு மறைவதைப் பற்றி அவர் கவலைப் படாததும் அவர்களை ஜீவிக்க வைக்க தாம் நாடகங்கள் போடுவதை ஏன் நிறுத்த வில்லை என்றும் எனக்குத் தோன்றிற்று. இதை நான் எழுதி அனுப்பினேன் எழுத்துக்கு. ஆனால் செல்லப்பா அதைப் பிரசுரிக்கவில்லை. அதற்கு அடுத்த முறை நான் விடுமுறையில் சென்னை வந்தபோது ஏன் போடவில்லை என்று செல்லப்பாவைக் கேட்டேன். சோ தன் நாடகங்கள் மூலம் ஒரு நல்ல காரியம் செய்து வருகிறார். அவரது அரசியல், சமூக கிண்டல்களை ஜனங்கள் மிகவும் ரசிக்கிறார்கள். அதற்கு ஒரு இடம் உண்டு. இதெல்லாம் தில்லியில் இருக்கும் உங்களுக்குத் தெரியவில்லை என்று பதில் அளித்தார். பின்னர் நான் இதை நாடகம் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையில் அடக்கினேன். அது பிரக்ஞை இதழில் பிரசுரமாகியது. அந்தக் கட்டுரையைப் படித்த சோ பாராட்டவே செய்தார் என்று பிரக்ஞையின் ரவிஷங்கர் சென்னை சென்டிரலில்
வண்டியை விட்டு இறங்கினதுமே சொன்னார்.

டென்னஸி வில்லியம்ஸின் Street Car Name Desire என்னும் நாடகம் பற்றியும், James Baldwin-ன் Giovanni’s Room பற்றியும் எழுதி அனுப்பியிருந்தேன். செல்லப்பாவுக்கு அவற்றை வெளியிட விருப்பமில்லை. அவர் பதில் சொன்னது ஜேம்ஸ் பால்வின் பற்றியது மாத்திரம் எனக்கு நினைவிலிருக்கிறது. “ஆமாம் எதற்கு இந்த கண்றாவியெல்லாம் பத்தி எழுதறேள்?. அதெல்லாம் அவாளோடேயே இருக்கட்டும் நமக்கு வேண்டாம். அதெல்லாம் எழுத்து பத்திரிகைக்கு வேண்டாம். நமக்குன்னு நிறைய வேறே காரியங்கள் இருக்கு.” என்றார். காரணம் எனக்கு புரிந்தது. ஜேம்ஸ் பால்ட்வின் நாவல் முழுக்க முழுக்க ஹோமோ செக்சுவல் உறவு பற்றியது. டென்னஸி வில்லியம்ஸ் நாடகம் பற்றி எழுதியதை க.நா.சு.வுக்கு அனுப்பினேன். அது இலக்கிய வட்டம் இதழில் பிரசுரமானது.  இந்தக் கத்தையோடு தான் வ.ரா. பற்றி எழுதியதும் சேர்ந்து கொண்டது என்று நினைக்கிறேன். அது தீபம் இதழில் பிரசுரமானது. வ.ரா பற்றிய எழுதிய அச்சுப் பிரதி என்னிடம் இல்லை. தொலைந்து விட்டது.  எப்படி தொலைந்தது?

என் விஷயத்தில் இதெல்லாம் தொலைவது ஒரு அலாதி காரணங்களைக் கொண்டிருக்கும். படிக்க எடுத்துச் சென்ற குடும்பம் அதை பழைய பேப்பர் கடையில் போட்டிருக்கும். “இதெல்லாம் சேர்த்து வைப்பேளா என்ன? வேணும்னா அந்த எடைக்கு வேறே பத்திரிகை தந்துடறேனே, பழைய பேப்பர் சேர்ந்ததும்?” என்று பதில் வந்தது. இன்னொருவன்  இருபது வயதுக்காரன் படிக்கிறேன் பேர்வழி என்று எழுத்து, இலக்கிய வட்டம் எல்லாம் எடுத்துச் சென்றவன் காபி சாப்பிட பணம் இல்லையென்று அதுவும் பழைய பேப்பர் கடைக்குச் சென்றது. இதையெல்லாம் மீறித்தான் என் இலக்கிய சேவை நடந்து வருகிறது!!!! இப்போது நான் யாரிடம் 1964-1967 தீபம் இதழ்களைக் கேட்பது?

ஆரம்ப வருடங்களில் செல்லப்பா ஏதோ ஒரு உத்சாகத்தில் எங்களுக்கு ( கி.அ.சச்சிதானந்தம், தருமு சிவராமூ, பின் நான்) இலக்கியம் மீறி மற்ற விஷயங்கள் பற்றி எழுத வாய்ப்புத் தந்த போதிலும், பின்னர் அவர் லகானை இறுக்கிப் பிடித்தார் என்றே சொல்லவேண்டும். அவரது நியாயம் அவருக்கு. அந்த நியாயம் எங்களுக்குப் புரிந்தது தான். ஆனாலும், முதலில் கொஞ்சம் இடம் கொடுத்து பழக்கி விட்டாரே. எழுத்து இல்லையெனில் இந்த அளவு இலக்கிய விவகாரங்களில் கூட எழுத எங்களுக்கு வாய்ப்பு இருந்திராது  எழுத்து தவிர வேறு எந்த பத்திரிகையும் இவ்விஷயங்களில் அக்கறை காட்டியதில்லை. மற்றவர்கள் எப்படியோ, சச்சிதானந்தம், நான், சி. மணி யாரும் வெளித்தெரிந்திருக்கவே மாட்டோம் என்பது நிச்சயம். இதில், நகுலன், தருமு சிவராமூ சி.கனக சபாபதி என்று நிறையப் பேரைச் சேர்க்கலாம்.

ஆனால் எழுத்து எங்களுக்கு ஒரு வழி காட்டிவிட்டது. சின்ன பெட்டிக்கடை மாதிரி நாங்களும் பத்திரிகை தொடங்கினால் என்ன? எனக்குத் தெரிந்தவர்கள், அக்கறை காட்டக் கூடியவர்கள் என்று எனக்குத் தோன்றியவர்களுக்கெல்லாம் எழுதினேன். எழுத்து பத்திரிகை தன்னை இலக்கிய வட்டத்தை விட்டுத் தாண்டி எல்லைகளை விஸ்தரிப்பதில் செல்லப்பாவுக்கு இஷ்டமில்லை. இலக்கியத்தில் ஏதும் விழிப்புணர்வு ஏற்படவேண்டுமென்றால், தமிழ் நாட்டில் கலை இலக்கியத் துறைகள் அத்தனையின் வறட்சியையே, குணத்தையுமே மாற்றவேண்டும். எனவே பல துறைகளையும் தழுவியதாக ஒரு பத்திரிகையை நாம் தொடங்கலாம். ஆளுக்கு முதலில் 100 ரூபாயும் பின் மாதாமாதம் 10 ரூபாயும் பத்திரிகை தன்னைக் காத்துக்கொள்ளும் வரை பத்திரிகைக்கு செலவு செய்யலாம். வல்லிக்கண்ணன் இதற்கு ஆசிரியராக இருக்கலாம். பணம் போடும் யாரும் இதில் பொறுப்பேற்க வேண்டாம். எல்லாம் வல்லிக்கண்ணனின் பொறுப்பாக இருக்கட்டும். அவர் தாராளமான பார்வை கொண்டவராதலாம் எதையும் விருப்பு வெறுப்பற்று, அணுகுவார்.என்று எல்லோருக்கும் எழுதினேன்.

பத்து பன்னிரண்டு பேர் இதற்கு ஒப்புதல் அளித்தார்கள். இதில் சுஜாதாவும் ஒருவர். மிக உற்சாகத்தோடு கட்டாயம் தானும் இதில் சேர்ந்துகொள்வதாக ஒரு நீண்ட கடிதம் எழுதினார். வல்லிக்கண்ணன், பத்திரிகை தன் காலில் நிற்க தொடங்கும் வரை தான் இனாமாக இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக எழுதினார். சந்தோஷமாக இருந்தது. அசோகமித்திரனுக்கு கணையாழி அனுபவம் உள்ளதால், “வல்லிக்கண்ணன் எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்வார். உங்கள் அனுபவத்தில் அவருக்கு அவ்வப்போது ஏதும் உதவி தேவை எனில் அவருக்கு உதவுங்கள்,” என்று அவருக்கு எழுதினேன். அசோகமித்திர னிடமிருந்து ஒரு நீண்ட விளக்கமான பதில் வந்தது. அதில் அவர் சொல்லியிருந்தது, (கடிதம் மற்ற எதையும் போல தேடி எடுக்க வேண்டும். யாரும் இதை மறுத்து கேள்வி எழுப்பினால், தேடி எடுத்துவிட முடியும் என்றே நினைக்கிறேன்) சுருக்கமாக, அவர் எழுதியது: இந்தக் காலத்தில் சட்டைக் காலரின் அழுக்குப் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. எல்லாத்துக்கும் பணம் தேவையாகத் தானே இருக்கிறது. எனக்கு மாதம் ரூ 300 கிடைக்குமானால், நான் வல்லிக்கண்ணனுக்கு உதவலாம்.” இது நடப்பது 1960 களின் பின் பாதியில். 1966-67 ஆக இருக்கலாம் அனேகமாக. அக்காலங்களில் என் சம்பளமே ரூ 360 – 400 க்குள். இதில் நான் தில்லியில் குடும்பம் நடத்தி, பெற்றோருக்கும் பணம் அனுப்பி, .. எல்லாம் நடக்க வேண்டும். வல்லிக்கண்ணனுக்கு உதவ என்று இவ்வளவு பணம் கேட்க அவருக்கு  எப்படிக் மனம் வந்தது?. ஒரு கால கட்டம் வரை இலவசமாக வேலை செய்ய முன் வந்த எந்த சம்பாத்தியமும் இல்லாத வல்லிக்கண்ணனுக்கு அவ்வப்போது உதவ ரூ 300. அது எங்களுக்கு சாத்தியம் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். இதற்கு பத்து வருடங்களுக்குப் பிறகு, என்னை எழுதச் சொல்லி, எழுதிய பிறகு அதைப் பிரசுரிக்க மறுத்ததை பக்கத்திலிருந்து பார்த்த இரு நண்பர்கள் “இனி நாமே பத்திரிகை நடத்தலாம். நாங்க மூன்று பேர் ஆளுக்கு ரூ 100 போட்டு நடத்திவிடலாம் பெரிய விஷயம் இல்லை” என்று தொடங்கியது தான் யாத்ரா.  பத்துவருடங்களுக்குப் பிறகு ஒரு பத்திரிகையின் முழுச் செலவுக்குமே ரூ 300

பத்து பன்னிரண்டு பேருக்கு எனக்குத் தெரிந்த வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கு இதெல்லாம்  எழுதினால் அது செல்லப்பாவின் காதுக்குப் போகாமல் இருக்குமா? அவருக்கு இது மறைக்கப்பட்ட அல்லது மறைக்கப் படவேண்டிய விஷயமோ இல்லை. இந்தப் பத்திரிகைத் திட்டம் வெறும் பேச்சோடு நின்ற பிறகு விடுமுறையில் செல்லப்பாவைப் பார்த்த போது பக்கத்தில் சி.கனகசபாபதி இருந்தார். “நீங்க சொல்லாட்டாலும் எனக்குத் தெரிந்து போச்சு நீங்க பத்திரிகை ஆரம்பிக்கத் திட்டமிட்டது” என்றார் செல்லப்பா. இதில் மறைக்க என்ன இருக்கிறது. இதோ கனகசபாபதி இருக்கிறார் அவர் சொல்லியிருக்கக் கூடும். சச்சிதானந்தம், வைதீஸ்வரன், முத்துசாமி யார் வேணாலும் சொல்லியிருக்கலாமே?”   என்றேன். அப்போது கனகசபாபதி “நான் உங்களுக்கு எழுதினதைத் தான் சொன்னேன். நாமெல்லாரும் சேர்ந்து செல்லப்பாவின் கைகளை வலுப்படுத்துவோம். பின் அவரே தம் தளத்தை விஸ்தரிப்பார்” என்று” என்றார். செல்லப்பா இதைக் கோபத்தில் சொல்லவில்லை. ”செய்யுங்கோ எல்லாரும் அவா அவாளுக்கு தோன்றியபடி முயற்சிக்க லாமே. ஆனால் விட்டுப் போச்சே. எல்லாம் தனியா செய்தாத்தான் உண்டு. ஊர் கூடி செக்கிழுக்கறது நடக்குமா என்ன? என்றார்.

இதன்  இன்னொரு காட்சி க.நா.சு. வின்  வீட்டில். “சாமிநாதன் சங்கமம்- னு பேர்ல ஒரு பத்திரிகை தொடங்கப் போறாராம்”  இனிமே .தீபம் பார்த்தசாரதி, முரசொலி மாறன் –ங்கற மாதிரி சங்கமம் சாமிநாதன்னு ஆயிடுவார்” என்று சொல்ல,   இந்த கேள்வியே சௌகார் ஜானகி, படாபட் லட்சுமி புளிமூட்டை ராமசாமி என்று வளர்ந்து வந்த கலாசாரத்திலிருந்து பெற்றது,. அதற்கு,  க.நா.சு. “ அது என்னவோ தெரியாது.  சங்கடம்  சாமிநாதன்னு ஆகலாம்” என்றாராம். அப்போது  எங்களிடையே  மனக்கசப்பு  நிலவிய காலம்.  அதுக்கு  அடிக்கடி  தூபம்  போட்டுக்கொண்டி  இருந்தவர்கள்  உண்டு.

இதற்கு ஒரு வருஷத்திற்குள்  (அனேகமாக 1968} எனக்கும் முன்னால் எழுத்து பத்திரிகையோடும் செல்லப்பாவோடும் பரிச்சயம் கொண்டிருந்த, செல்லப்பாவோடு அனேகமாக தினம் தினம் பார்த்துப் பேசி பழகி வந்த ந.முத்துசாமி, சி.மணி, கி.அ. சச்சித்தானந்தம் வி.து. சீனிவாசன் இப்படி பலர் செல்லப்பாவுக்கு தெரியாமலேயே (அவருக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப் படுவார், ஆனால் புரிந்து கொள்ளமாட்டார் என்ற நினைப்பில்) கூட்டாக நடை என்ற பத்திரிக்கையைக் கொணர்ந்து விட்டனர். காலாண்டு பத்திரிகை.ஆசிரியத்வமும் பேருக்கு ஒருத்தர் இருந்தாலும் ஒரு கூட்டு ஆசிரியத்வம் தான். எழுத்து பத்திரிகையில் தனக்கு இடம் கொடுப்பதில்லை, செல்லப்பாவுக்கு தன் கவிதைகள் பிடிப்பதில்லை என்று சொல்லி வந்த ஞானக் கூத்தன் கவிதைகள் நடையில் முதல் முறையாக வெளிவந்தன. சி. மணியும் வே மாலி என்ற இன்னொரு புனைபெயரில் முற்றும் மாறிய வடிவிலும் பாணியிலும் கவிதைகள் எழுதத் தொடங்கினார். சி.மணியிலும் கிண்டல் இருந்தது தான். ஆனால் வே மாலியின் கிண்டல் வெளிப்படையாகவும் முற்றிலுமாக கிண்டல் தொனி ஏற்றது. க.நா.சு வுக்கு இது எல்லாமே பிடித்திருந்தது.  வே.மாலியும் ஞானக் கூத்தனும் ரொம்பப் பிடித்திருந்தது. அப்போது எழுத்து நடந்து கொண்டு தான் இருந்தது. நான்கு ஐந்து வருடங்களுக்குப் பின் தான், கொஞ்ச காலம் காலாண்டு பத்திரிகையாக மாறி பின் நின்றது. செல்லப்பா எழுத்து பத்திரிகையில் நடை பற்றி எழுதியிருந்தார். தன்னிடம் பயிற்சியும் போதனையும் பெற்றவர்கள் புதிதாக கடை பரப்பியது பற்றி வருத்தம் இருந்திருக்கும். ஆனால் கோபமோ பகைமையோ இருக்கவில்லை. அவர் நடை பத்திரிகையில் வந்துள்ளவை பற்றி ஆதரவுடனேயே எழுதினார். க.நா.சு. எழுதும்போது, என் நினைவிலிருந்து சொல்கிறேன்.  செல்லப்பா தன் அச்சிலேயே தன்னைச் சார்ந்தவர்களையும் வார்க்க முயற்சிக்கிறார். அதை மீறத்துணிந்தவர்களின் பத்திரிகை என்று ஆங்கிலத்தில் தில்லி பத்திரிகைகளில் எழுதினார், நடையில் எழுதிய வர்கள் நிச்சயமாக வேறு தொனியில் வேறு விஷயங்களைப் பற்றி எழுதினார்கள் தான். கலாநிதி என்று போற்றப்பட்ட கைலாசபதி எம்.ஏ. பி.எச். டி யின் தமிழ் நாவல் புத்தகத்தின் அபத்தங்களைப் பற்றி நான் எழுதியிருக்கக் கூடும் தான். ஆனால் அத்தனை விரிவாக இல்லை. வே மாலியின் கவிதைகள், ந.முத்துசாமியின் நாடகங்கள் பிரசுரமாகியிருக்கும் தான். அவர் பிரசுரிக்க மறுத்ததாகச் சொல்லப்பட்ட ஞானக் கூத்தன் கவிதைகள் பற்றி செல்லப்பா ஒரு வார்த்தை கூட கண்டனமாக எழுதிப் படித்த நினைவு எனக்கில்லை. ஆதரவாகத் தான் எழுதியிருந்தார்.  மாற்று இதயம் வேண்டும் என்ற நீண்ட கவிதை எழுதிய செல்லப்பா ஞானக் கூத்தனின் பரிசில் வாழ்க்கை” கவிதையைப் பிரசுரித்திருக்க மாட்டாரா என்ன? எனக்குப் படிக்கக் கிடைத்தது எழுத்து பத்திரிகையிலேயே நடை பற்றியும் ஞானக் கூத்தன் கவிதை பற்றியும் தன் எழுத்து பத்திரிகையில் எழுதி தம் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கியவர்கள், இன்னும் தொடர்ந்து எழுத்து பத்திரிகையில் எழுதுகிறவர்கள் எவரது எழுத்து பற்றியும், ஞானக் கூத்தன் கவிதை பற்றிக்கூட ஏதும் பாதகமாக கருத்துக் கூறி எழுதவில்லை. அவர் தொடர்ந்து எங்கள் எழுத்துக்களையெல்லாம் கவனித்துத் தான் வந்திருந்திருக்கிறார். இதை இவ்வளவு விரிவாக எழுதக் காரணம் இம்மாதிரியான ஒரு புரளி காற்றில் பரப்பப் பட்டு அது ஒரு மாதிரியான ஆவணமாகப் பதிவு பெற்று வருகிறது.  க.நா.சு வும் கூட தனக்கும் செல்லப்பாவுக்கும் இடையே எழுந்துவிட்ட மனக் கசப்பை ஏனோ, செல்லப்பா தன் அச்சில் தன் சிஷ்யர்களையும் வார்க்கப் பார்க்கிறார். சிஷ்யர்கள் அதற்கு எதிராகத் தான் செயல்படுகிறார்கள் என்று எழுதிவிட்டார். சிஷ்யர்கள் தம் மார்க்கத்தை விரிவாக்கிக் கொண்டார்களே தவிர செல்லப்பாவுக்கு எதிராகச் செயல்படவில்லை.

இதற்கெல்லாம் பல வருஷங்கள் கடந்த பின் தான் அவரது இறுதி நாட்களில் தான் செல்லப்பாவிடமிருந்து காட்டமும் கசப்புமான எதிர்வினைகள் வரத் தொடங்கின. நேர்ப் பேச்சில். எழுத்தில் அல்ல. அது அவரது கடைசிக் கால தள்ளாமையிலும் மனம் நொந்தும். அது பற்றி பின்னர்.

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3வாலிகையும் நுரையும் – (15)
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *