சுழன்றும் அவர் பின்னது காதல்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 4 of 9 in the series 20 டிசம்பர் 2020

குணா

கலித்தொகை


கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்
சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக்

கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின்

பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்

காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என்

தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்

நாண் இன்மை செய்தேன், நறு நுதால், ஏனல்

இனக்கிளி யாம் கடிந்து ஓம்பும் புயத்து அயல்

ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று, வந்தானை

“ஐய சிறிது என்னை ஊக்கி” எனக்கூறத்

“தையால் நன்று” என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பில், வாய்யாச் செத்து

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான், மேல்

மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன், ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென

ஒண் குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன்

சுழன்றும் அவர் பின்னது காதல்

நடைபயில இது தன்னாட்சி கூடமில்லை. நாம் பார்க்கப்படுகிறோம். மற்றவர்க்கு இங்கே காட்சிப் பொருளாகிறோம். நம்மையொற்றி நம்முடன் நடக்கும் பெரிய பட்டாளம். அவரவர் வேலையை பார்ப்பதாய் ஒரு பிரமை. ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பையும் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் நடைபாதை இப்பொழுது சாதாரணமாகிப் போய்விட்டது.

அதிகாலையோ… மாலையோ… நடத்தல் அவசியம் என்று வகுத்து வைத்துக் கொண்டு. நல்லதாய் உணர்ந்து உடற்பயிற்சியாக்கி… பட்டகுறை தொட்டகுறையாய் அடுத்தவரை கண்காணிப்பதை அங்கமாக்கி… உள்ளும் புறமுமாய் நித்தம் இது அரங்கேறும். மற்ற சில பரிமாற்றங்களும் இதில் அடக்கம்.

இந்த பரிபாலனத்தின் அங்கமாய் புறநகர் பகுதியின் ஒரு குடியிருப்பு.

நித்திய அரங்கேற்றத்தின் கூடாரம்… கதாபாத்திரங்கள் அங்கவை, சங்கவை. சிவாஜி படம் கண்முன் வந்தால் சற்று ஒதுக்கி வையுங்கள். இவர்கள் கட்டாயம் ஒத்துப்போக மாட்டார்கள். இருவரும் மூதிளங் கன்னியர். மென்பொருள் நிறுவனத்தில் வேலை.  கை நிறைய சம்பளம். மாதாந்திர வாடகைக்குள் அடங்கும் தேவையான பலு தெரியாத கடன்… அலுவலகம் நடக்கும் தூரம், வேலையென்று ஆனதும் பர பரவென வாங்கி குடியேறி விட்டார்கள்.  இதோ இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறார்கள்.

முன் காலை… கதிரவன் எழுந்திருக்கவில்லை. ஒட்டியுள்ள நெடுஞ்சாலையின் பரபரப்பு இன்னும் தொற்றிக் கொள்ளவில்லை.  சீருடை ஏற்றி அவசர கதியில் பள்ளிப் பேருந்தில் தள்ளிவிடப்படும் சிறார்கள் இன்னமும் எழுந்திருக்க மாட்டார்கள். இந்நேரம் நிம்மதியாய் தூங்கி கொண்டிருப்பார்கள். காரணம்… அதட்டி எழுப்புவார் இங்கே நடக்கிறார்கள். உள்ள கொழுப்பை கரைக்க… சர்க்கரையை இறக்க… அவர்களுடன்… சட்டென வேலை கிடைத்து கையும் முதுகும் என்னை கவனி என்று சொல்லுமளவிற்கு தேய்ந்து போன… வளையும் போல, முதுமை அவசர கதியில் வேண்டாமென… இல்லை வந்துவிட்ட மூதிள மக்கள்… பெண்டிரும் ஆடவரும் அடக்கம்.

வீட்டை விட்டால் … அலுவல்… விட்டால்…வீடு… இடைப்பட்டதில் இந்த கூற்று. பார்த்த முகங்கள்… பரிச்சயப்பட்ட பழக்கங்கள்… இது தான் இவர்களுக்குள் அந்நியோன்யம். இதைத் தவிர… அடுக்கு மாடி குடியிருப்பில் அவ்வப்போது நடக்கும், உருவாக்கி கொள்ளும் குழும கூட்டங்கள்.

“வர்றான்… வர்றான்… பாரு…” − அங்கவை, சங்கவையிடம் முணு முணுத்தபடி… இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். பின்னால்… வாலிபம் கடக்கும் மூதிள வாலிபனென்று வைத்துக்கொள்வோம்… பிரதாப் நடந்து வந்து கொண்டிருந்தான். சற்றே காதோரம் சிறு இள நரை. ஜிம்மேற்றிய தேகம்… நான் இன்னும் இளைஞன் என்று சொன்னது.
அவனுக்காகவே… அங்கவை வேகம் குறைத்து மெதுவாக செல்வது போலிருந்தது. பிரதாப் அவர்களை கடந்து நடந்தான். கடக்கும் போது… “ஹாய்” சொல்லி கடந்தான்.

அங்கவைக்கு உள்ளுக்குள் ஜிவ்வென்றது.


அங்கவைக்குள் நடக்கும் இந்த சிறு மாற்றத்தை சங்கவை கவனிக்கத் தவறவில்லை. அவளும் சாதாரணமாக “ஹாய்” சொன்னாள். ஒன்றை மட்டும் உணர்ந்திருந்தாள்… தினமும் இந்த இடத்தில் தான் கடந்து போவான். அது எப்படி?

என்ன வித்தை செய்து விட்டாய்… எனக்குள் உன்னைக் கண்டதும் ஏன் இந்த மாற்றம்… ‘ஹாய்’ சொல்ல கூட சிறு தயக்கம். உன் அருகாமை தந்த ஸ்பரிசக்காற்றை மீண்டும் உணர்ந்ததாலா… ?  – அங்கவை நினைத்துப் பார்க்கிறாள்.

ஒரு மாதத்திற்கு முன்… இங்கே நடந்து செல்லும் போது… இதற்காகவே காத்திருந்தது போல் கிடந்த சிறு கல்… சற்று பெரியது என்றே சொல்லலாம்… அங்கவையை தடுக்கி விட்டது… தடுங்க பட்டதோ…? இதே போல் கடக்கும் தருவாயில்… நிலை தடுமாறிய அங்கவை… பிரதாப் தாங்கிப் பிடிக்க… தவறவில்லை. அந்நிய தேகம்… அருகாமை ஸ்பரிசம்… நச்சென்று பார்த்தாள்… அவனும்… தவறு செய்தோம் என்று தோன்றவில்லை… இருவருக்கும்… சர சரத்த குறுகுறுப்புடன்…

“ஆர் யூ ஓக்கே…?” – கேட்டதும் சுதாரித்துக்கொண்டாள். சட்டென விலகி… “யா…யா…” என்றாள்.

அன்று முதல்… இது சங்கவையின் எண்ணம்… பார்க்கும் இடங்களிலெல்லாம்… பார்த்த பொழுதெல்லாம்… ஒரு சிறு புன்னகை பரிமாற்றம்… இருவரிடமும்…

இது என்ன காதலா…?

“ஏய்… என்ன… வழக்கம் போலத்தானா… விட்டுத்தள்ளுடி..” – சங்கவை அமைதியைக் கலைத்தாள்.

“அப்படி தள்ள முடியவில்லை. அவனுக்கும் இப்படி தோன்றுமோ… ஏன் எனக்குள் இப்படி…?”

‘இன்ஃபாக்ச்சுவஷன்… இனக்கவர்ச்சி. தேவைன்னு நினக்கிற மனநிலை… நேரம் பார்த்து பட்டுன்னு பட்டதும்… பக்குன்னு பத்திகிச்சு. காலக்கோளாறு. படிக்கும் போதே ஒருத்தன பிடிச்சிருந்தால்… வேற வேலை பாத்திட்டிருப்ப… இதப்பத்தி யோசிக்காம… அதோ போறாளே பங்கஜம்… அவள மாதிரி போய்ட்டிருப்ப…பசங்கள எழுப்பணும்… பள்ளிக்கு அனுப்பணும்னு…”

எனக்கு அப்படி தோன்றவில்லை சகியே. இது பக்கென்று பற்றியது இல்லை. சில காலமாய் எங்களுக்குள் ஓடும் ரச பரிமாற்றம். சிற்றிளம் வயதில் வரும் இனக்கவர்ச்சி தாகம் இல்லை. உள்ளுணர்ந்து வெளிப்படும் ஆத்மார்த்த நேசம். உன்னிடம் சொல்ல எனக்கு இருக்கிறது என்ற முற்படலோ என்று தோன்றுகிறது.

நிறுவன நிமித்த கலந்துரையாடலில் சந்தித்தது. எதையோ கைப்பேசியில் தேடிக்கொண்டிருந்தவன் அங்கவை பேசத் தொடங்கியதும் சட்டென்று பார்த்தான். வேறெங்கும் கவனம் சிதறாமல்… வெகு நேரம்… அங்கவை பேசி முடிக்கும் வரை… பேசி முடித்த பின்னும்… அவ்வப்போது… அவளையே… தேடித் திரிந்தது கிடைத்துவிட்டதில் வரும் குழந்தை சந்தோஷத்தை அவன் முகத்தில் பார்க்க முடிந்தது.

இடைப்பட்ட தேநீர் இடைவேளையில் அருகில் வந்தான்.

“நல்லதொரு பேச்சு. தீர்க்கம் தெரிந்தது. தீர்வு தெளிவுடன். வெகு நாளாகிறது இப்படி கேட்டு. நன்றி” – சொல்லிவிட்டு புன்னகைத்து சென்றுவிட்டான். அப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை.

“என்ன சொன்னார்? பிடித்துக்கொள்… நம் தொழில் சமூகத்தில் ஒரு விடிவெள்ளி” − சக தோழி சொன்னதும் பார்த்தேன்… அவளை… தொடர்ந்து அவன் இருக்கும் திசை தேடி… அவனை நோக்க… காணவில்லை.

அப்புறம் குடியிருப்பு குழுமக் கூட்டத்தில் பார்த்தது. வந்தவன் அருகாமை இருக்கையில் அமரவா… என சமிக்ஞித்து பதிலுக்கு காத்திராமல் அமர்ந்துவிட்டான்… புன்னகைத்து. அப்பொழுதும் ஜிவ்வென்றது. கூச்செரிந்தேனோ… தெரியவில்லை.

‘கேட்கலாமா…? – என்ற அங்கவையை பார்த்தாள்.

“என்னன்னு… எனக்கு ஜிவ்வுங்குது… உனக்குமான்னா…? லின்க்ட் இன்ல பார்த்தல்ல… அவன் சீஃப் டி… அவன் கிட்ட இப்படி பேசுனா எவ்வளவு சீப்பா நினைப்பான்… யோசிச்சு பாரு”

“எனக்கு அப்படி தோணல…”

ஆனால் இது தொடர்கிறது. அது எப்படி.. தினமும்… சொல்லி வைத்தாற் போல்… இதே இடத்தில்… நேரம் பார்த்து என்றால் சாத்தியமில்லை. நாங்கள் நேரம் மாறி வருகிறோம். இருந்தும்… இதே இடம்… ஒரு வேளை நாம் வருவதை பார்த்திருந்து வருகிறானோ… ஒரு வேளை அது தான் தடுக்குதோ… தான் என்று.. சொல்லவும் முடியாமல்… சொல்ல துடித்து… உள்ளுக்குள்ளே வைத்து… நீ ஆண்… நீ தான் சொல்ல வேண்டும் என்று தர்க்கம் பண்ண தோணலை. எனக்கு என்னவோ ஒரு இழைக்கு எதிர்பார்த்து நூல் கிடைத்தால் தொடங்க காத்திருப்பது போலிருக்கு. கேட்டுத்தான் பார்ப்போமே…”

சங்கவை என்னையே பார்த்தாள்.

என்ன ஆயிற்று இவளுக்கு? பெரிய கூட்டத்தையே கட்டியாளும் இவள்… அந்த தருணங்களில் எந்த ஒரு தடுமாற்றமும் இல்லாமல்… ஆணித்தரமாய் ஆலோசனை சொல்லுபவள்… இப்பொழுது… அவனை கண்ட மாத்திரத்தில்… நிலை குலைந்தாள் என்று சொல்ல முடியாது. ஒரு பரபரப்பு… தடுமாற்றம்… இந்த ஒரு ஸ்பரிசம் மட்டும் தொடக்கம் என்று சொல்ல முடியாது. இது தான் காதலா… சிறு வயது என்றால் ஒத்துக்கொள்ள்லாம்… இளம் பிராய குளறுபடியென்று. இது பகுத்தறியும் வயசு. என்றால்… காதல் வராதா… காதலிக்க வயசுண்டா என்ன? இது என்ன பெரிய சமச்சாரம்… எத்தனை சந்தர்ப்பங்கள்… கேட்டு விட வேண்டியது தானே… என்ன தயக்கம்… இவளுக்கு… பெண் என்பதாலா… பெண் என்றால் சொல்லக் கூடதா… உண்மையிலேயே இருவருக்குள்ளும் இது ஒடுகிறதா…? இவள் தான் பெண்… அவன்…? எது தடுக்கிறது…

இது தான் வித்தியாசம் போலும்… சிறு வயது காதலுக்கும்… முது பிராய காதலுக்கும்… இளங்கன்று பயமறியாது… சிறு பிராயத்தில் பட்டென்று பாய்ந்து விடும். பூ கொடுத்து… தொட்டு பேசி… துள்ளிக்குதித்து ஓடி விடும். வயதின் அனுபவம் நுழைகிறது. சுற்றுப்புறம் பார்க்கிறது… சூழ்நிலை பார்க்கிறது… நாம் கடந்து பெற்ற அங்கீகாரம் முன்னால் தடுக்கிறது. கேட்டு இல்லையென்று விட்டால்… என்ற எண்ணம் முன்னால் வருகிறது. கேட்டுத்தான் பார்ப்போமே என்றவள் கேட்க போவதாய் எனக்குத் தோன்றவில்லை.

ஓரே இடத்தில் பணியென்றால்… அநேக சந்தர்ப்பங்கள்… அநேக தனிமைகள். எதேனும் ஒரு நேரம் நிச்சயம் வெளிப்படுத்திக் கொள்ளலாம். அதில் ஒரு விகாரம் தெரியாது. பேசுவார் பேசுவர். பின்னர் அதுவே அடங்கிப்போகும். சந்தோஷமாய் சேர்த்து வைத்து வேடிக்கை பார்ப்பார்கள்.

ஆனால் இங்கே…?

ஒரு இடைத்தரகம் வேண்டுமோ? சினிமாத்தனமாய் தோன்றினாலும் அது தான் நிஜம் போலும். ஆதி காலம் தொட்டு இது தானே நடக்கிறது. நாம் கடந்து வந்த பாதையும் இதைத் தானே காட்டியுள்ளது. இப்பொழுது… இங்கு… இது தான் என் கதாபாத்திரமோ…? என்ன தான் படித்தாலும், பகுத்தறிந்தாலும்… அடிப்படையில் இவையெல்லாம் நிதர்சனம். காதல்… தூது… சேர்ப்பு…

இளங்காலைக் கதிரவன்… வெளிவர தொடங்கி விட்டான். நடை பயணம் முடித்தவர்கள் ஒதுங்கும் சிற்றுண்டிச்சாலை தூரத்தில் தெரிந்தது.

முன்னால் செல்லும் பிரதாப் மெதுவாகத்தான் போய்க்கொண்டிருந்தான். ஒரு எட்டு… பிடித்து விடலாம்…

“ஏய்… வேகமாக நட…” – அங்கவையைப் பார்த்து சொல்லி வேகமாக நடந்தேன்… அவளும்… ஏதோ புரிந்தது போல…

அவனை கடக்கும் போது…

“ஹாய்… ஒரு காபி சாப்பிடலாமா?” – என்றேன்.

அவன் அவசரமாய் காதிலிருந்து ஒலி வாங்கியை எடுத்துவிட்டு… ”ஷ்யூர்… ஏன் கூடாது… உங்கள் தோழியும் தானே” – என்று அங்கவையை பார்த்தபடி கேட்டான்.

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationதீ உறு மெழுகுமன்னிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *