சூன்யவெளி

author
5 minutes, 24 seconds Read
This entry is part 9 of 13 in the series 25 அக்டோபர் 2020

ஐ.கிருத்திகா

                பின்னங்கழுத்தில்  சடை  உரசி  கசகசத்தது. முதுகில்  நேர்க்கோடாய்  வழிந்த  வியர்வை  கீழ்வரை  நீண்டு  குறுகுறுக்க  வைத்தது. தீபா  தோளில்  மாட்டியிருந்த  பையை  இரு  கைகளால்  இறுக  பற்றியபடி  நின்றிருந்தாள்.

பார்வை  அங்குமிங்கும்  அலைபாய்ந்தது. யாராவது  பார்த்துவிடுவார்களோ  என்ற  அச்சத்தில்   தன்னை  அந்த  அரசமரத்துக்குப்  பின்புறம்  மறைத்துக் கொண்டாள். இரண்டாள்  பருமனுள்ள  அரசமரம்  அதற்கு  தோதாகவே  இருந்தது.

ரயிலடி  வெறிச்சோடிக்  கிடந்தது. எப்போதுமே  அப்படித்தான். கிராமத்து  ரயிலடிகளின்  சாயல்  அது. வெயிலூரும்  கல்  பென்ச்சில்  காகங்கள்  தத்தின. எச்சங்கள்  பொறுக்குகளாக  காய்ந்து  கிடந்தன. தகர  ஷெட்  போடப்பட்டிருந்த  இடத்தை  விட்டு  தீபா  வெகுதூரம்  தள்ளி  நின்றிருந்தாள்.

காது  நீண்ட  பை  கனக்கவில்லை. இரண்டு  செட்  துணிகளைத்  தவிர  சர்டிபிகேட்  அடங்கிய  பைல்  உள்ளது. அவ்வளவுதான். அது  போதுமென்று  அழகேசன்  சொல்லிவிட்டான். தீபா  வந்ததிலிருந்து  ஒரேயொரு  கூட்ஸ்  வண்டி  மட்டுமே  போயிருந்தது. பாசஞ்சர்  வர  நேரமிருந்தது.

அரசமரத்தின்  சருகுகள்  உருள்கிற  பிளாட்பாரமில் தீபாவும்  ஒரு  சருகுபோல்  படபடத்து  நின்றிருந்தாள். அங்கொன்றும், இங்கொன்றுமாக  சனம்  ரயிலை  எதிர்பார்த்து  காத்துக்  கிடந்தது.

” பன்னண்டு  மணிக்கு  வர்ற  ரயிலுக்காக  நீ  ஒம்போது  மணிக்கே  வந்து  காத்துக்  கெடப்பியா…….?”

அழகேசன்  வந்ததும்  அப்படித்தான்  கடிந்து  கொள்ளக்கூடும். அவன்  சாவகாசமாக  பதினொன்றரைக்கு  கூட  வரலாம். அவளால்  அப்படி  முடியாது. இரவு  அவளுக்குப்  பொட்டுத்  தூக்கமில்லை. புரண்டு, புரண்டு  படுத்துக்  கொண்டேயிருந்தாள். 

” தூக்கம்  வரலையாடி…..?”

அம்மா  கூட  கேட்டாள். திக்கென்றிருந்தது. அவசரமாய்  எழுந்து  போய்  தண்ணீர்  குடித்தாள். 

” தாகமா  இருந்துச்சும்மா…..”

சொல்லிவிட்டு  திரும்பிப்  படுத்துக்கொண்டாள். வீட்டை  விட்டுக்  கிளம்புவது  என்று  முடிவெடுத்தபோது  ஒரு  பரவச  உணர்வு  எழுந்தது. 

‘ இருபது  வருடங்கள்  வாழ்ந்த  வீட்டை, அம்மாவை, அப்பாவை  விட்டா….’ 

உள்ளே  ஒரு  கொக்கி  விழுந்து  இழுத்துப்  போட்டது. ஒருநொடிதான். தன்னை  விடுவித்துக்கொண்டுவிட்டாள். அழகேசனின்  இதமான  ஒரு  தழுவல்  பற்றிய நினைப்பு  அதற்குப்  போதுமானதாயிருந்தது.

மனம்  மேலும், மேலும்  அதைக்  கேட்டபோது  அவன்  மறுக்கவில்லை. அப்பாவின்  அதிகாரக்குரல்  இடையிட்டு  கலைக்கும்போது  அழகேசனின்  அணைப்பு  அதை  மறக்கடிக்கும்.

முற்றிய  மூங்கில்  கழிகளை  வெட்டிக்  கொள்வதற்காக  அழகேசன்  வந்தான். சந்து  வழியாக  கொல்லைப்பக்கம்  வந்தவனுக்கு  அப்பா  தண்ணீர்  கொடுக்க  சொன்னார்.

அம்மா  கைவேலையாக  இருந்ததால்  தீபா  ஓடிவந்தாள். சொம்பு  நீர்  தளும்பிற்று. குளிக்காமல்  சோம்பிக்  கிடந்தவள்  முகத்தில்  வியர்வை  மினுங்கிற்று. முன்நெற்றி  முடிக்கற்றைகள்  அலம்பலாய்  கிடந்தன. சாந்து  பொட்டு  அழிந்து  ஒரு  கோடு  போல  நீண்டிருந்தது. 

” தண்ணியக்  குடு…..”

அப்பா  கடுகடுத்தார். அழகேசன்  குனிந்த  தலை  நிமிராது  வாங்கிக்கொண்டான். தீபா  அப்போதுதான்  முதன்முறையாக  அவனைப்  பார்த்தாள். பனியன்  மட்டும்  அணிந்திருந்தான்.

கைகளிலும், மார்பிலும்  கெட்டிச்சதை  திம்மென்று  உருண்டு  திரண்டிருந்தது. அப்பா  அவனிடம்  மூங்கிலைக்  காட்டி  ஏதோ  சொல்லிக்  கொண்டிருந்தார். அவன்  தண்ணீரை  வாயில்  கவிழ்த்தபடியே  தலையாட்டினான். 

” ஆளு  விட்டு  அனுப்பாம  ஒங்கப்பா  ஒன்னைய  அனுப்பி  வச்சிருக்காரு……”

” இல்லீங்க….ஆளு  பின்னாடி  வருது. நான்  சும்மா  மேற்பார்வைக்காவ  வந்தேன்.”

அவன்  பார்வை  உள்ளே  சென்ற  தீபாவின்  மேல்  படிந்து  நழுவியது. அவளும்  நிலைப்படியருகில்  சென்று  திரும்பிப்  பார்த்தாள். அப்பா  மேலும், மேலும்  கேள்விகள்  கேட்டார். படிப்பு  பற்றி, அக்கா  திருமணம்  பற்றி, சம்பா  மகசூல்  பற்றி.

அவனும்  சளைக்காமல்   பதில் சொல்லிக்கொண்டிருந்தான். தீபாவுக்கு  மறுபடியும்  கொல்லைக்கு    வரவேண்டும்  போலிருந்தது. உள்ளே  இருக்க  தரிக்கவில்லை. அமாவாசை  காக்கைகள்  கொல்லைப்படியில்  தத்திக்  கரைந்தபோது, தான்  சாதம்  வைக்க  பெருந்தன்மையாக  ஒத்துக்கொண்டாள்.

அழகேசன்  ஆட்களிடம்  சிரித்தபடி  ஏதோ  சொல்லிக்கொண்டிருந்தான். வேட்டியை  மடித்துக்  கட்டியிருந்தான். தோளில்  கிடந்த  துண்டு  தலைக்கு  முண்டாசாகியிருந்தது. 

” கா….கா…..”  

ஏற்கனவே  வந்துவிட்ட  காக்கைகளை  தீபா  உரக்க  அழைத்து  சோற்றை  துணி  துவைக்கும்  கல்லில்  வைத்தாள். அழகேசன்  இயல்பாக  திரும்புவதுபோல  மெல்லமாய்  திரும்பிப்  பார்த்தான். கை  முண்டாசை  அவிழ்த்துவிட்டது. படிந்து  கிடந்த  கோரை  முடியை  இடது  கையால்  கோதிவிட்டுக்கொண்டான்.

தீபாவின்  முகத்தில்  இரு  பட்டாம்பூச்சிகள்  சிறகடித்தன. கைகழுவுவது  போல்  குனிந்து  சிறிதுநேரம்  தாமதித்தாள். இளமூங்கில்  கழிகள்  போல்  அவள்  கரங்கள்  நீண்டிருந்தன. ரத்த  சிவப்பு கண்ணாடி  வளையல்கள்  குலுங்கின.

அழகேசன்  இடுப்பில்  கைவைத்து  பிடரியை  தடவிவிட்டுக்கொண்டான். உதட்டில்  புன்னகை  உறைந்திருந்தது. தீபா  நிமிர்ந்தால்  கண்  சிமிட்டலாம்  என்று  காத்திருந்தான். தீபா  அவன்  எதிர்பார்த்தது  போலவே  தலை  உயர்த்தாமல்  புருவம்  உயர்த்திப்  பார்த்தாள்.

அவன்  வாய்மூடி  நாக்கைச்  சுழற்றி  உட்கன்னப்  பகுதிகளை  துழாவியபடியே  கண்ணடித்தான். தீபாவுக்கு  இதயம்  வெடித்து, வெடித்து  மீண்டது. அடிவயிற்றில்  குறுகுறுவென்று  எதுவோ  ஊர்ந்தது.

சட்டென்று  பார்வையைத்  திருப்பிக்  கொண்டு  உள்ளே  ஓடிவந்துவிட்டாள். இரண்டாம்  முறையாக  எச்சில்  இலை  எறிய  கொல்லைக்கு  வர  வேண்டியிருந்தது. 

” நீ  குடும்மா…..நான்  போடறேன்.”

தீபா  முந்திக்கொண்டாள். அம்மாவுக்கே  ஆச்சர்யம்தான். 

இலைகளை  குறுக்குவாக்கில்  மடித்து  கொல்லைக்கு   வந்தவள்  ஆள்  அரவமற்று  கிடந்த கொல்லையைக்  கண்டு  ஏமாந்துபோனாள். ஆட்கள்  சாப்பிட  போயிருப்பதாக  அப்பா, அம்மாவிடம்  சொன்னது  காதில்  விழுந்து சற்று  ஆசுவாசமாக  இருந்தது. 

” எத்தன  கழி  வேணுமாம்….?”

” பந்தல்   போடுறதுக்கு முப்பது  கழி  வேணுமாம். வெட்டி  முடிய  ரெண்டு  நாளாவும். “

தீபா  நிம்மதி  பெருமூச்சு  விட்டாள். 

தீபாவுக்குக்  கால்கள்  வலித்தன. காலேஜ்  செல்வதற்காக  ரயிலடிக்கு  தோழிகளோடு  வருவாள். காலேஜ்  அடுத்த  ஏழு  கிலோமீட்டர்  தொலைவிலிருந்த  டவுனிலிருந்தது. தோழிகள்  சிரித்துப்  பேசி  அரட்டையடித்தபடி  நின்றிருப்பர். தீபாவுக்கு  அவர்களோடு  சேர்ந்துகொள்ள  ஆசையாயிருக்கும்.  அப்பாவின்  கடிதல்கள்  ஞாபகத்துக்கு  வரும். 

” போனமா, வந்தமான்னு  இருக்கணும். அனாவசிய  அரட்டை  வச்சிக்க  கூடாது ” என்பார்  அப்பா.

தினமும்  சுப்ரபாதம்  போல  அதைச்சொல்வார். தீபா  தோழிகளிடமிருந்து  சற்று  தள்ளியே  நிற்பாள். மனதிலூரும்  ஆசைகளைப்  பொத்தி  முடிச்சிட்டுக் கொள்வாள். பாதங்களின்  விரல்கள்  பன்னீர்ப்பூக்கள்  போல ப்ளாட்பாரமில்  படிந்திருக்கும். கட்டைவிரலால்  கீறிக்கொண்டேயிருப்பாள்.

கல்லூரி  மாணவர்களின்  கண்கள்  அவள்  மீது  மொய்க்கும். மொட்டு  போல  மலர்ந்து, காந்தம்  போல  வசீகரிக்க  அவளால்  எப்படி  முடிகிறது  என்று  அவர்களுக்கு  ஆச்சர்யமாக  இருக்கும். ஒவ்வொருமுறையும்  ஆண்  அவளை  நோக்கும்போது  அவனது  பார்வையின்  ஊடுருவலால்  அவளுக்கு  மயிர்க்கால்கள்  குத்திட்டு  நிற்கும்.

ஒருவித  கிளர்ச்சி  மொதுமொதுவென்று  மேனியெங்கும்  ஊறி  மார்புகளை  விம்மச்  செய்யும். அழகேசனைப்  பார்த்தபோது  அப்படித்தான்  மார்புகள்  விம்மின. 

அன்று  அவள்  கருநீல  தாவணி  உடுத்தியிருந்தாள். தாவணி  ஒரு  குழந்தை  போல  அவள்  மார்பில் துவண்டு  கிடந்தது. அழகேசன்  கொல்லை  வாசலில்  நின்று  தண்ணீர்  கேட்டபோது  அப்பா  இல்லாத  தைரியத்தில்  தீபாவே  நீர்  எடுத்துக்  கொண்டு  போனாள்.

கிணற்றில்  நீர்  தளும்பி  வழிந்தது. அவன்  கைகள்  நீட்டி  சொம்பை வாங்கிக் கொண்டான். தீபாவின்  இடுப்பில்  ஒளிர்ந்த  மச்சத்திலிருந்து  கண்களை  அகற்ற  முடியாமல்  தடுமாறினான். இருவரின்   விரல்களும்  உரசிக்கொண்டன.

தீபாவுக்குக்  காது  மடலுக்குக்  கீழே  கழுத்து  கூசியது. அழகேசன்  நன்றி  சொல்லி  விலகி  நின்று  தண்ணீரைக்  குடித்தான். அவனுடைய  நீளமான  நிழல்  மத்தியான  வெயிலில்  தரையில்  படிந்து  கிடந்தது. தீபா  சொம்புக்காக  நின்றிருந்தாள். அவன்  நிதானமாகக்  குடித்தான். மிடறு, மிடறாக  விழுங்கினான்.

உள்ளே  அடங்காத  தாகம்  கிளர்ந்து  கொண்டேயிருந்தது.  விரல்கள்  சொம்பை  அழுத்தமாகப்  பற்றியிருந்தன. மொழுமொழுவெனவிருக்கும்  பித்தளை  சொம்பு  அது. உருளி  போன்ற  வடிவத்திலிருந்தது. அதை  உயர்த்திப்  பிடித்து  அண்ணாந்து  வாயில்  சரித்துக்  கொண்டவனை  தீபா  விழுங்கிவிடுவதுபோல்  பார்த்திருந்தாள். 

” தேங்க்ஸ்…..”

அவன்  சொம்பை  நீட்டி  மறுமுறை  நன்றி  சொன்னான். தீபாவுக்குத்  தலையசைந்தது. அம்மா  உரக்க  அழைத்தாள்.

” இதோ  வர்றம்மா…..”

திரும்பி  பார்த்தபடியே  உள்ளே  சென்றாள். அடுத்தநாளும்  கொல்லை  கலகலப்பாயிருந்தது. குருவிகள்  கிரீச்சிடும்  சத்தம்  மட்டுமே  கேட்கும்  மதியப்பொழுதில்  மெல்லிய  முணுமுணுப்போடு  பாட்டு  ஒலித்தது. மூங்கில்  வெட்டுபவர்கள்  சத்தமாக  சிரித்துப்  பேசிக்  கொண்டிருந்தனர். அழகேசன்  அடிக்கடி  கொல்லைக்கதவை  பார்த்தபடி  பாடினான்.

” தம்பிக்கு  பாட்டுன்னா  உசுரோ……”

ஓராள்  கேட்க, அவனுக்கு  தலையசைந்தது.

” மனசு  எதுலயாவது  வசமாயிருச்சின்னா  பாட்டு  தன்னால  வந்துரும்.”

” இப்ப  எதுல  வசமாச்சி…….?”

ஒருவன்  வெட்டுவதை  நிறுத்திவிட்டு  கேட்டான். 

” அது  கெடக்கு  வுடுங்க…..”

அவனின்  நழுவல்  அவர்களை  சலிப்புக்குள்ளாக்கிற்று. சாயந்தரம்  வேலை  முடிந்து  கிளம்பியபோது  கண்கள்  தீபாவைத்  தேடின. தீபாவின்  அப்பாவிடம்  பணத்தைத்  தந்தபோது  கூட  அவள்  எட்டிப்  பார்க்கவில்லை. இரண்டாம்  சந்திப்பு  பேருந்து  நிறுத்தத்தில்  நேர்ந்தது.

தீபா  அம்மாவுடன்  நின்றிருந்தாள். அழகேசனைக்  கண்டதும்  உதட்டின்  வளைவுகள்  கோடிழுத்ததுபோல்  விரிந்தன. அடிக்கடி   ஓரக்கண்ணால்  அவனைப்  பார்த்தவாறிருந்தாள். அடுத்தடுத்து  சந்திப்புகள்  நிகழ்ந்தன. இடைவெளி  குறைந்தது.

முதல்  அணைப்பு  ஒரு  கருவேலஞ்செடியின்  பின்புறம்  நிகழ்ந்தது. ஒரேயொருமுறை  அவசரமான  அத்துமீறல்  நடந்ததும்  அங்குதான். ரயிலடிக்கு  வரும்  பாதையின்  இடதுபுறம்  ஒரு  ஒற்றையடிப்பாதை  பிரியும். அதன்  இருபக்கமும்  கருவேலஞ்செடிகள்  அடர்ந்திருக்கும். அங்கு  சந்தித்துக்கொள்வது  இலகுவானதாகவே  இருந்தது.

தீபா  தினமும்  பத்து  நிமிடங்கள்  முன்னதாகவே  கிளம்ப  ஆரம்பித்தாள். அப்பா  காரணம்  கேட்டபோது, ஓட்டமாக  ஓடி  ரயிலைப்  பிடிப்பது  சிரமமாயுள்ளது  என்றும், நிதானமாக  நடக்க  பத்து  நிமிடங்கள்  தேவைப்படுவதாகவும்  கூறினாள். 

பிடாரி  கோயில்  அழகேசன்  தெருவிலிருந்தது. வெள்ளிக்கிழமை  அம்மா  சிறு  தூக்கில்  எண்ணெயோடு  கிளம்பிவிடுவாள். அழகேசனுடனான  பழக்கத்துக்குப்  பின்பு  தீபாவும்  ஒட்டிக்கொண்டாள். 

” என்னிக்கில்லாம  இதென்ன  புதுசா  இருக்கு…..”

முதல்முறை  அம்மாவுக்கு  ஆச்சர்யமாயிருந்தது. அழகேசன்  வீட்டைக்  கடக்கும்போது  தீபாவுக்கு  இதயம்  படபடக்கும். இவள்  வருவது  தெரிந்து  அவன்  பந்தலில்  காலார  நடந்து  கொண்டிருப்பான். அல்லது  செல்போனில்  யாருடனோ  பேசுவதுபோல்  பிரயாசைப்படுவான்.

தீபா  அம்மாவின்  நிழலைத்  தொட்டு  நடப்பாள். தலை  குனிந்திருக்கும். விழிகள்  அலமலந்து  போகும். கடப்பதற்குள்  எப்படியும்  ஒருமுறை  அவனைப்  பார்த்துவிடுவாள். அவனும்  எதேச்சையாகப்  பார்ப்பது  போல்  பார்ப்பான். சில  சமயம்  உதடுகளை  நாவால்  ஈரப்படுத்துவான். அவளுக்கு  நெஞ்சுக்குள்  குறுகுறுக்கும். 

” காலப்  பின்னிப்  பின்னி  நடக்காத……” என்பாள்  அம்மா.

தீபா  தடுமாறுவாள். தெருமுனையில்  பிடாரி  கோயிலிருந்தது. அதிலிருந்து  நாலே  எட்டில்  அழகேசன்  வீடு. அம்மா, அவளைப்  பிடாரிக்கு  விளக்குப்  போட  சொல்லுவாள். எப்போதாவது  அழகேசன்  அம்மாவும்  வருவாள்.

” பொண்ணு  படிப்ப  முடிச்சிருச்சா……?”

ஒருமுறை  கேட்டாள். 

” இது  கடசி  வருசம். “

” மேக்கொண்டு  படிக்கப்போவுதா……….?”

” அவுங்கப்பா  என்ன  சொல்றாங்கன்னு  தெர்ல.”

இருவரும்  பேசிக்கொண்டிருந்தனர்.தீபாவின்  பார்வை  திண்ணையிலமர்ந்திருந்த  அழகேசன்  மீதிருந்தது. அழகேசன்  நண்பர்களுடன்  அரட்டையடித்துக்  கொண்டிருந்தான். நண்பன்  தோளில்  கை  இலகுவாக  விழுந்திருந்தது. விரல்களை  அவ்வபோது  சொடக்கிட்டுக்  கொண்டான். 

இன்னொரு  கை  அடிக்கடி  முடியைக்  கோதிக்  கொண்டது. இறுதி  செமெஸ்டர்  நடந்து  கொண்டிருந்த  ஒருநாளில்தான்  சங்கமம்  நிகழ்ந்தது. அழகேசன்  கெஞ்சினான். தீபாவின்  இடுப்பில்  பிடி  இறுகியிருந்தது. முதலில்  மறுத்த  தீபா  அவனின்  இறுக்கமான  தழுவலில்  இளகிப்போனாள். 

தீபா  வியர்த்து  வழிந்தாள். மணி  பன்னிரண்டை  நெருங்கிக்  கொண்டிருந்தது. அப்பா  வெளியூர்   கல்யாணத்துக்கு  முதல்நாளே  கிளம்பிப்  போயிருந்தார். கல்யாணப்  பத்திரிக்கையைப்  பார்த்ததுமே  அந்த  தேதியைத்  தோதான  நாளாக  தீபா, அழகேசனுக்குத்  தெரிவித்துவிட்டாள்.

கல்யாணம்  முடிந்து  பஸ்  பிடித்து  அப்பா  வீட்டுக்கு  வர  எப்படியும்  பன்னிரண்டுக்குமேல்  ஆகிவிடும். அதற்குள்  ரயில்  ஊர்  எல்லையைக்  கடந்திருக்கும்.

தீபா  சரிந்து  அமர்ந்தாள். ரயிலடியில்  கூட்டம்  சேரத்  துவங்கியிருந்தது. மரநிழலில்  தங்கக்காசுகளை  இறைத்ததுபோல  வெயில்  சிதறியிருந்தது. தூரத்தில்  பார்வையை  செலுத்தி  ரயிலின்  அறிகுறியை  ஆவலுடன்  எதிர்பார்த்து  சனம்  நடைமேடையில்  நின்றிருந்தது.

வெயில்  காந்தி  காற்றில்  அனல்  வீசிற்று. இரட்டை  நாகம்  போல  வழுவழுத்து  வளைந்து  ஓடிய  தண்டவாளங்கள்  வெயில்  பட்டு  பளபளத்தன. தீபாவுக்கு  வீடு  நினைவுக்கு  வந்தது. அப்பா  வந்துவிடுவார். அம்மா  மென்று  விழுங்கி  அவளில்லாததை  தெரிவிப்பாள். வீடு  திமிலோகப்படும்.

தாழம்பூ  வாசம்போல  செய்தி  ஊரெங்கும்  கசியும். தீபாவுக்கு  சூடான  தோசைக்கல்லில்  நீர்  தெளித்ததுபோல்  வயிற்றுக்குள்  சொரேரென்றது. இரண்டுவாய்  நீர்  உள்ளே  போனபோதும்  பயம்  அடங்கவில்லை. அழகேசன்  முகத்தை  நினைவுக்குக்  கொண்டுவந்து  பயத்தைத்  துரத்த  முனைந்தாள். அவன்  முகத்தை  மீறி  அப்பாவின்  முகம்  வந்து  நின்றது.

தீபா  மரத்தில்  சாய்ந்து  கொண்டாள். அப்படி  சாய்ந்து  கொள்வது  சற்று  ஆறுதல்  தரும்  போலிருந்தது. தொண்டைக்குள்ளிருந்து  செருமல்கள்  எழுந்து  அடங்கின. உள்ளங்கை  வியர்த்து  கசகசத்தது. கழுத்தில்  ஊறிய  வியர்வை  இரு  மார்புகளுக்கு  மத்தியில்  நேர்கோடாய்  இறங்கிற்று.

நெற்றியில்  மினுங்கிய  வியர்வைத்துளிகளில்  முடி  படிந்து  போயிருந்தது. தீபா  அலைபேசியை  எடுத்துக்  பார்த்தாள். அணைத்து  வைத்திருந்த  அலைபேசியை  உயிர்ப்பிக்க  பயமாயிருந்தது. படபடப்புடன்  திரும்ப  உள்ளே  வைத்தாள். ரயில்  வருவதற்கான  அறிவிப்பு  வரத்  துவங்கியது.

சனம்  பரபரப்படைந்தது. தீபா  தோள்பையை  இறுக்கிக்  கொண்டாள். மெல்ல  மரநிழலை  விட்டு  நகர்ந்துவந்தாள். ஒருவரும்  அவளை  கவனிக்கவில்லை. குழந்தைகளோடும், மூட்டை  முடிச்சிகளோடும்  ரயிலில் இடம்  பிடிக்க   ஆயத்தமாகிக்  கொண்டிருந்தனர். 

” பன்னண்டு  மணி  பாஸஞ்சர்ல  ஏறி  டவுனுக்குப்  போயிட்டா  அங்கிருந்து  சென்னைக்கு  பஸ்  ஏறிடலாம். சென்னைக்குப்  போயிட்டா  ஒருத்தரும்  நம்மள  கண்டுபுடிக்க  முடியாது. “

அழகேசன்  சொன்னபோது  தீபாவின்   கண்கள்  விரிந்தன. அப்போதே  எல்லாம்  வசமாகிவிட்டதுபோல்  நினைத்துக்கொண்டாள். ஆண்பிள்ளை  கடைசி  நேரத்தில்  கூட  வந்து தொற்றிக்கொள்வான். மனதில்  துணுக்களவு  நம்பிக்கை  ஒட்டிக்கொண்டிருந்தது.

ரயில்  கூச்சலிட்டபடி  வந்து  ரயிலடியில்  உடம்பைக்  கிடத்திக்கொண்டது. அதில்   கூட்டம்  அவ்வளவாக  இல்லை. உள்ளே ஏற  தள்ளுமுள்ளு  நடந்தது. 

” காலியாத்தான  கெடக்கு. எதுக்கு  இப்புடி  தள்ளுறீங்க…..”

ஒருவன்  சத்தம்  போட்டான். 

” அஞ்சி  நிமிசந்தான்  நிக்கும். அதுக்குள்ள  மூட்ட, முடிச்சிய  சொமந்துக்கிட்டு  ஏறணுமில்ல…..”

கூட்டத்திலிருந்து  பதில்  வந்தது. சொன்னதுபோலவே  கார்டு  விசில்  ஊத  ஆரம்பித்தார். மொத்த  சனத்தையும்  வாரிக்கொண்டு  ரயில்  ஊறத்  தொடங்கியது. தீபா  இறுதியாக  ஒருமுறை  பார்வையை  ஓடவிட்டாள்.

அழகேசன்  வரவில்லை. எண்ணி  ஐந்தாவது  நிமிடம்  இடம்  வெறிச்சோடிப்  போக, தளர்ந்த  கால்களை  பெயர்க்க  முடியவில்லை. மெல்ல, மெல்ல  நடைக்குப்  புதிதுபோல்  தீபா  அடியெடுத்து  வைத்து  வீடு  நோக்கி  நடக்க  ஆரம்பித்தாள். 

முற்றும்

Series Navigationதேடல்வளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *