சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை

author
1
0 minutes, 6 seconds Read
This entry is part 2 of 19 in the series 19 ஏப்ரல் 2015

முனைவர் ந.பாஸ்கரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
பெரியார் அரசு கலைக் கல்லூரி,
கடலூர்-1

மனிதனைச் சூழ்ந்துள்ள சமூகம், பொருளாதாரம், உயிரியல் போன்றவற்றின் கூட்டுநிலையாகச் சுற்றுச்சூழல் விளங்குகிறது. உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகளை விளக்கிக் கூறுவதாக சூழலியலை உணரமுடிகிறது. சுற்றுச்சூழலில் காணப்படும் பொருள்களின் தன்மைகளுக்கேற்ப அறிவியலாளர்கள் பல்வேறு சூழ்நிலை மண்டலங்களை வகுத்துள்ளனர். அவற்றுள் குளம், ஏரி, ஆறு போன்றவற்றை உள்ளடக்கியது நீர்ச்சூழ்நிலை மண்டலம் ஆகும். இயற்கையில் கிடைக்கும் இன்றியமையாத பொருள்களில் ஒன்றாக விளங்கும் நீர், உயிர்க்கூறுகளின் இயக்கத்திற்கு மூலமாகிறது. நீர் ஆதாரத்தின் இருப்பும,; செழிப்பும,; உயிர்ப்பும் சங்ககாலத்தில் போற்றப்பட்டிருந்ததையும்;, இன்றைய நிலையில் நீர் ஆதாரங்கள் கேள்விநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவலத்தையும் எட்டுத்தொகையுள் ஒன்றாகிய புறநானூற்றை மையப்படுத்தி அணுகலாம்.
தமிழிலக்கியத்தில் சூழலியல் :
அந்தரத்தில் தொங்குவதான உயிர்களின் வாழ்வியல் ஓர் ஆதாரத்தோடு உறவு கொண்டு தொடர்வதையே வாழ்க்கை நிலை என்பர். இந்த ஆதாரத்தையும் சூழலாக உள்வாங்கலாம். ஆதாரத்தை உயிர்ப்புடன் சித்தரிப்பிலேயே கவிதையியலின் சிறப்பு உள்ளது. சங்க செய்யுளில் தொடங்கி இன்றைய நவீனம் வரை சூழலிலா அமைப்பில் சுவை இருக்காது என்பதற்கிணங்க அனைத்தும் ஒவ்வொரு சூழலியலுடனேயே இயற்றப்படுகின்றன. திணை, துறை, இறைச்சி, உத்தி, பின்புலம் என்றவையே சூழலை சொல்லுகின்றன. உயிரில்லாப் பொருளை உயிருள்ள பொருளாகவும், பேசாத பொருளை பேசுவதாகவும்; மாற்றியும் ஏற்றியும் புனைவதிலேயே ஒவ்வொரு படைப்புகளும் இருக்கின்றன. இவ்வாறு படைப்புக்கும் சூழலுக்குமான உறவை வைத்தே சூழலியம் என்பதற்கு உழவெநஒவரடளைஅ  என்னும் ஆங்கில பதத்தை பேராசிரியர் தே.லூர்து (சூழலியம் ப.46) உருவாக்கம் செய்துள்ளார். இத்தன்மையில் புறநானூற்று நீர்க்கூறுகளை இக்கட்டுரை அணுகியுள்ளது.
ஐம்பூதங்களில் சூழலியல் :
ஐவகைப்பட்ட பூதங்களின் தன்மையை மனிதனின் குண இயல்புகளுடன் தொடர்புபடுத்தி உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடுகிறார். இதில் பொறுமைக்கு நிலத்தையும், பொறுமையின் எல்லையையும் பகை அழிக்க செய்யும் ஆலோசனை விரிவுக்கு ஆகாயத்தையும், பகைவனை அழிக்க முனையும்போது உடல், மனம், படை போன்றவற்றின் வலிமைக்கு வளியையும், முற்றும் அழிவை ஏற்படுத்தும் வலிமைக்குத் தீயையும், எதிர்க்காமல் சரணடையும் பகைவரை அருள் செய்து அன்பால் ஏற்கும்போது நீரையும் பொருத்திக் காட்டுகிறார். (புறம் பா-2)
இதன்வழி, அரசு என்னும் நிறுவனத்தை நடத்தும் பிரதிநிதி அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல, போற்றாரையும் பொறுத்துக்கொள்ளும் பொறை என்னும் குணம் உள்ளவராக விளங்க வேண்டும் (குறள்-15) என்பது தொடங்கி சூழ்ச்சி, வலி, தெறல், அளி என்னும் குணப்பண்புகளும் பெற்றவராக இருக்கவேண்டும் என்ற முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார்.
அன்பு, கருணை, தயை, அருளல் போன்ற குணச்சிறப்புக்கு ‘நீர்’ என்பதின் தன்மை புலவர்களால் காட்டப்பட்டுள்ளது. கெடுப்பதும், எடுப்பதுமான இரண்டையும் செய்யக்கூடியத் தன்மை கொண்டதாக மழையைக் காட்டும் வள்ளுவனைப் போன்றே ஐயூர் முடவனார் தமது கவிதையில் பாண்டியன் மாறன் வழுதியின் போர்க்கோபத்தை வெளிப்படுத்த,
“நீர்மிகின் சிறையும் இல்லை, தீமிகின்                               மன்னுயிர் நழற்ற நிழலுமில்லை                                 வளிமிகின் வலியும் இல்லை, ஒளிமிக்க                            அவற்றோர் அன்;ன சினப்போர் வழுதி..” (புறம்-51)
என்னும் செய்யுளைப் புனைகிறார். இதில் நீர் மிகுதி அரணழிக்கும், தீ மிகுதி வெம்மை செய்யும், வளிமிகுதி மோதி மிதிக்கும் என்பவற்றை உவமங்களாக்கிக் காட்டுகிறார்.
அறம் : அரசு – நீர்ச்சூழலியம்
அரசனின் ஆட்சியின் பெருமையை அடையாளப்படுத்துவதற்கு அவன் ஆளுகைக்குட்பட்ட நீர் நிலையுடன் இணைத்துக் கூறியுள்ளனர். நீர் நிலைகளை உருவாக்குவது, பெருக்குவது, பாதுகாப்பது போன்றவை அரசுக்குரிய கடமையாகவும் அறமாகவும் வலியுறுத்தி உள்ளனர். இவற்றில் தவறிழைக்கும் அரசு வரலாற்றில் நிலைக்காது என்பதை அறிவுறுத்தியும் உள்ளனர். உயிர்களின் அனைத்து ஆதாரங்களுக்கும் ஆதாரமாக இருப்பது நீராதாரம் என்பதையும், நீரைப் போற்றுவதே அரசின் தலையாயக் கடமை என்றும் கூறியுள்ளனர்.
“நீயே, தண்புனற் காவிரிக் கிழவனே” (புறம்-5.8)
என சோழமன்னன் பெருந்திருமாவளவனைக் காரிக்கண்ணனாரும்,
“வையைச் சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்                                பொல்லா யாணர் மையல் கோமான், மாவல்…” (புறம்-71)
என மாவல் என்பானை பூதப்பாண்டியனும் சுட்டுவதால் அறியப்படுகிறது.
ஒரு நாட்டை சுட்டும்போது அதன் நீர் வளத்தையே முதன்மைப்படுத்தியுள்ளனர். இதனை,
“விழுநீர் வேலி நாடு கிழவோனே” (புறம்-13)
என்னும் முடமோசியார் கூற்று வெளிப்படுத்துகிறது. நாட்டின் வளமை, மன்னனின் ஆட்சி சிறப்பு என்பதை நீர்வளம் தன்னுள் நிறுத்தி வைத்துள்ளது எனலாம்.
ஓர் அரசன் இம்மைக்கும் மறுமைக்குமான புகழை அனுபவிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருப்பான். நீர்ப்பெருக்கம் செய்ய வேண்டும். ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் உயிர்களைப் பேணுவது அரசனின் தலைமைத்தொழில். உயிர் உறைய உடம்பு வேண்டும். உடம்பு செழிக்க உணவு வேண்டும். உணவு விளைய நீர் வேண்டும். நீர் விளைய நல்லரசு வேண்டும். எனவே, நீராதாரத்தைப் பெருக்கும் அரசனுக்கே நீடுபுகழ் நிலைக்கும். இதனை,
“நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே…” (புறம்-18)
இதன்வழி, ‘அறம’; என்பது நீர்வளம் பெருக்கி அதனால,; உயிரையும் உடம்பையும் படைத்தலால் ஏற்படுகிறது என்பதை அறிவிக்கிறார்.
நாட்டில் இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும் மழை பெய்யும் காலத்துப் பெய்யாது பொய்ப்பினும், விளைச்சல் குறைந்து போயினும் அதற்குக் காரணமாக அரசையும் ஆள்பவரையுமே குற்றம் சாட்டியுள்ளனர்.
இயற்கை, பொய்யாகும் காலத்தும், மாறுபடும் காலத்தும், பேரிடர் காலத்தும் அரசும் ஆள்பவரும் முன்யோசிப்பில் செயல்பட்டு பாதுகாக்க வேண்டும். அதுவே நல்லரசுக்கும் நல்லாட்சிக்கும் இலக்கணமாகும். உழவர்களுக்கான நீராதாரத்தை மழையிலாக் காலத்தில் தருவதே நல்லரசு ஆகும்.(புறம்-35) அப்படி இல்லாதபோது மக்கள், முடியாட்சியில் பழி பேசுவர். குடியாட்சியில் வெளியேற்றுவர். இரண்டுக்கும் வரலாறு இருந்தது, இருக்கிறது.
ஆறு-குளம்-வாய்க்கால் : சூழலியம்
ஒரு நாட்டினுடைய வளமை அங்குள்ள ஆற்றின் நீர்வளம் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ‘சோழநாடு சோறுடைத்து’ என்னும் சொல் வழக்கின் திறவு காவிரி ஆறே ஆகும். காவிரியின் நீர் வளத்தை சொல்லும் கோவூர்கிழார்,
“புனிறுதீர் குழவிக்கு இல்இற்று முலை போலச்                           சுரந்த காவிரி மரங்கள் மலிநீர்                                 மன்பதை புரக்கும் நன்நாட்டுப் பொருநன்” (புறம்-68)
இதில் சேயை ஈன்ற தாயின் மார்பகப்பாலை போலே பெருக்கெடுக்கும் காவேரியால் உலகத்து உயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் சோழநாட்டு அரசனின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.
முந்நீர் விழா (புறம்-9), மணற் புனை பாவை விழா (புறம்-11) போன்ற நீர்நிலைக்கான விழாக்கள் தமிழர் வாழ்வின் வழக்கத்தில் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.
சுற்றுச்சூழல் அறிவியலாளர் பருவ காலத்திற்கு ஏற்ப குளங்களைக் குறிப்பிட்ட காலங்களில் மட்டும் தண்ணீர் இருக்கும் தற்காலிக குளங்கள், வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் நிரந்தர குளங்கள் என பிரிக்கின்றனர். புறநானூற்றின் வழி குளங்கள் அனைத்தும் நிரந்தர குளங்களாகவே இருந்துள்ளதை அறியமுடிகிறது. இக்குளங்கள் குடிநீர் குளங்கள், குளியல் குளங்கள், பொது குளங்கள் என மூவகைப்பட்டதாக இருந்துள்ளது. குடிநீருக்கான ஊருணி (குறள்-215) என்பதை எல்லா நேரங்களும் மிகுந்த காவல் போட்டு காத்துள்ளனர். இதனை ‘கடிதுறை நீர்’ என்ற புறப்பாடல்(பா.எ-16) காட்டுகிறது. பகைக் காலங்களில் எதிரியால் இக்குளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை புறநானூறு (பா-16) வெளிப்படுத்துகிறது. இதற்கு விளக்கம் எழுதிய ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை போர் நிகழும்போது பகைவருடைய நாட்டின் விளை நிலங்கள், நீர் நிலைகள், ஊர்கள் போன்றவற்றை அழிப்பதும், தீயிட்டு கொளுத்துவதையும் செய்துள்ளனர். இதனை நிகழாமல் தடுப்பதற்கும் அரசனை அழிவு சிந்தனையில் இருந்து நீக்கி அறச்சிந்தனையில் ஈடுபடுத்துவதற்கும் சான்றோர்கள் எடுத்த முயற்சியே பல பாடல்களில் பதிவாகியுள்ளதை உணரமுடிகிறது.
ஆறுகளின் குறுக்கேயும் குளங்களில் இருந்து கால்வாய்கள் பிரியும் இடங்களிலும் அணைகள் கட்டி அதில் கதவுகள் அமைத்து தேவைக்கு ஏற்ப நீரை திறந்துவிடும் மேலாண்மையைப் புறநானூற்று அரசர்களிடம் இருந்ததை மாங்குடிக்கிழார்(பா-24) குறிப்பிடுகிறார். மேலும், பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது பனை, தென்னை, கரும்பு என்பனவற்றில் உள்ள சுவைமிக்க முந்நீரை உண்டு ஆறு, குளம், ஊற்று என்னும் முந்நீர்; பாயும் நாட்டில் வாழும் பெண்கள் வாழ்த்த நீ நீடு வாழ்க!, என வாழ்த்திப் பாடுகின்றார்.
நலங்கிள்ளி என்பவன் தான் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும்போது பலருக்கும் நெல் மூட்டைகளைப் பரிசாக வாரி வழங்கியுள்ளான். அபபொழுது ஓங்கிய கரைகளோடு அமைந்த குளம், குளக்கரையிலே அமைந்திருக்கக்கூடிய வயல்கள், வயலோரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் களங்கள் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளைப் பரிசாக மகிழ்வுடன்; வாங்கி சென்றுள்ளனர். இதனை,
“முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்…” (புறம்-33)
என்று வெளிப்படுத்துகிறார்.
தொகுப்புரை :
திரைப்படத்தின் திரைக்கதையைப்போல கவிதையின் பின்புல சூழலில் பொதிந்துள்ள பொருளை உய்த்துணர்வது சூழலியம் எனலாம். சொல்லுக்கான நேரடி பொருள் ஒன்றாக இருக்க அதுவுணர்த்தும் ஆழ்பொருள் அல்லது நுண்பொருளைச் சூழலியத்துடன் இணைத்துக் காண்பது இலக்கியச் சுவையைத் தரும்.
புறநானூற்றுப் பாடலில் காணப்படும் ஐம்பூதங்களின் குணங்கள் அவற்றுடன் தொடர்புடைய அரசனின் தலைமைப்பண்புகளுடன் புலப்படுத்தப்பட்டுள்ளது.
நீரின்றியமையாது உலகு என்னும் குறள் கருத்து விளக்கமுறும் தன்மைகள் கண்டுணரப்பட்டு நீர் என்பது அறமாகவும், அன்பு, கருணை, தயைப் போன்ற குணங்களுக்கு மட்டுமின்றி சினத்திற்கும் குறியீடாகும் என்பதும் சூழலுடன் விளக்கப்பட்டுள்ளது.
மழை பொழியாத காலத்தும், கோடை காலத்தும் ஓர் அரசு முன்கூட்டியே நீர் சேமிப்பைச் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு செய்யாத அரசை மக்கள் செறுப்பர் என்பதும் விரித்துரைக்கப்பட்டுள்ளது.
ஆறு, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகள் பாதுகாப்பதும், புதிதுபுதிதாக ஏற்படுத்துவதும் ஓர் அரசனின் இம்மை மறுமைக்கான நிலைத்தப் புகழுக்குக் காரணமாகும். போர்ப்பெருக்கத்தை விட நீர்ப் பெருக்கம் செய்யும் அரசையே வரலாறு பதிவு செய்து கொள்ளும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது. இவை புறநானூற்று அரசர்க்கு மட்டுமல்ல இன்றைய அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.

Series Navigationமவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
author

Similar Posts

Comments

  1. Avatar
    ஷாலி says:

    //போர்ப்பெருக்கத்தை விட நீர்ப் பெருக்கம் செய்யும் அரசையே வரலாறு பதிவு செய்து கொள்ளும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது. இவை புறநானூற்று அரசர்க்கு மட்டுமல்ல இன்றைய அரசியல் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும்.//

    இதை நன்கு உணர்ந்த கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணைகட்ட முயற்சி செய்கிறது.கேரளா அரசு முல்லைபெரியாறு அணையை இல்லாமல் ஆக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.ஆக அண்டை மாநிலங்கள் அனைத்தும் திட்டமிட்டு தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி செய்கின்றனர்.காரணம் தமிழ் நாடு தனி நாடு என்று கருதி விட்டார்கள் போலும்.

    நீர் நடக்கும் பாதையெல்லாம் நஞ்சையாக இருந்ததை மாற்றி, அப்ரூடு மனை பட்டாக்களாக நம் ஆட்சியாளர்கள் மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.ஆறு ஓடிய பகுதிகளில் இன்று சாக்கடை ஓடுகிறது.இந்த ஊரங்கண நீர் மேலாண்மையை அரசு அப்படியே கட்டிக்காக்கிறது.திரைப்பட கொட்டகைகளில் காட்சிகளில் வந்து போனவர்களை எல்லாம் ஆட்சியாளர்களாக மாற்றியது யார் குற்றம்?

    தமிழ் நாட்டில் நீர் மேலாண்மை நீர் சேமிப்பு என்பது டாஸ்மாக் தண்ணீரைத்தான் குறிக்கும்.மிக பக்காவாக திட்டம் போட்டு விற்பனை குறியீட்டை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.குடி மகன்களுக்கு தாகசாந்தி செய்வதில் தட்டுப்பாடு வராமல் மக்களின் முதல்வர் பார்த்துக்கொள்கிறார்.வேறென்ன வேண்டும் நமக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *