செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…

author
1
0 minutes, 6 seconds Read
This entry is part 11 of 14 in the series 28 நவம்பர் 2021

 

 

 

 

கோ. மன்றவாணன்

 

இசைப் பேரறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகர் எழுதிய 20-03-1961 தேதியிட்ட கடிதம் ஒன்று வினவிக் குழுக்களில் உலா வருகிறது. அதை அப்படியே இங்கே தருகிறேன்.

பேரன்புடையீர், வணக்கம்.

தங்கள் 16-3-61 தேதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க மகிழ்வு. தங்கள் அழைப்பின்படி தமிழ்வருஷப் பிறப்பு விழாவிற்கு யான் வந்து கச்சேரி செய்ய செளகரியம்.

எனக்கும, எனது பக்க வாத்யக்காரர்கள் உள்பட, பிடில், மிருதங்கம், கெஞ்சிரா உள்பட, ரயில் செலவுள்பட செட்டடக்கம் ரூ. 1001/- (ஆயிரத்தி ஒரு ரூபாய்) கொடுக்கும்படியாக(க்) கேட்டுக்கொள்ளுகிறேன். இந்த(த்) தொகைக்கு(த்) தங்களுக்கு சம்மதமிருப்பின் உடன் அட்வான்சு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். எல்லா விபரத்திற்கும் தங்கள் அன்பார்ந்த பதில் உடன் எதிர்பார்க்கிறேன். நலம்.

இங்ஙனம் தங்களன்புள்ள

எம்.எம். தண்டபாணி தேசிகர்

அன்றைய காரைக்குடி இந்து வர்த்தகர்கள் சங்கச் செயலாளர்                  கு.அ. அங்கமுத்து முதலியார் அவர்களுக்குத்தான் இந்தக் கடிதத்தை எழுதி இருந்தார்.

இதில் செட்டடக்கம் என்றொரு சொல் இருக்கிறது. செட்டு மற்றும் அடக்கம் ஆகிய இரு சொற்களின் சேர்க்கையாக அந்தச் சொல் உள்ளது. அதற்கு என்ன பொருள் என்று வினவிக் குழுவில் கேட்டிருந்தேன். யாரும் பதில் அளிக்கவில்லை. பதிவைப் பார்த்தவர்களுக்குப் பதில் தெரிந்திருக்காது. பதில் தெரிந்தவர்கள் பதிவைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

தேசிகரின் வாசகத்தில் ரூ. 1001/-க்கு முன்னதாகக் கட்டணம் என்றோ… ஊதியம் என்றோ…. சம்பளம் என்றோ… குறிப்பிடாமல் செட்டடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும். 

சொற்றொடரின் போக்குக்கு ஏற்ப, செட்டடக்கம் என்ற சொல்லுக்கு “ஆக மொத்தம்” எனப் பொருள் இருக்குமோ என்று சிந்தித்தேன். மேலும் Set என்ற ஆங்கிலச் சொல்லும் அடக்கம் என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்த தமிங்கிலச் சொல்லாக இருக்குமோ என்றும் எண்ணினேன். தற்கால நிறுவனங்கள், தாங்கள் அளிக்கும் சேவைத் தொகுப்புகளை Package என்கிறார்கள். அதுபோல், இசை நிகழ்ச்சியில் இன்ன இன்ன இடம்பெறும் என்ற வகையில் ஒரு Package ஆகச் செட்டடக்கம் என்ற சொல் குறிக்குமோ என்றும் நினைத்தேன். Set + அடக்கம் = செட்டடக்கம் என்பது Packageக்குப் பொருந்துவது போலவும் தோன்றியது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தில் அப்படியான போக்கு இருந்திருக்காது. தமிங்கிலச் சொல்லாக்கத்துக்கும் தேவை இருந்திருக்காது. அதனால்… செட்டடக்கம் என்பதற்கு ஆழமான பொருள் ஏதும் இருக்கலாம் என்று தோன்றியது.

செட்டடக்கம் என்ற சொல்லை அகராதிகளில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் செட்டு என்ற சொல் இருக்கிறது. அதற்குப் பொருள் சிக்கனம் என்று குறித்து இருக்கிறார்கள். செட்டுக்கட்டு என்ற சொல்லும் இருக்கிறது. கட்டுச்செட்டு என்றும் அதைச் சொல்வார்கள். அதற்கும் சிக்கனம் என்றே பொருள். இந்தச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொற்களாக Economy, Thrift ஆகிய சொற்கள் உள்ளன. Economical Management என்பதை செட்டான நிருவாகம் என்றும் எழுதி இருக்கிறார்கள்.

அறச்செட்டு என்றொரு சொல்லும் தமிழில் உண்டு. அதற்கு அதிகப்படியான சிக்கனம் என்று பொருள். இதை ஆங்கிலத்தில் Excessive Frugality என்பார்கள். அறச்செட்டு முழு நட்டம் என்ற பழமொழியும் தமிழின் புழக்கத்தில் உண்டு. சிக்கனமாக இருக்க வேண்டும்தான். அதற்காக அதிகப்படியான சிக்கனத்தைக் கையாண்டால் முழு இழப்பு ஏற்படும் என்பதை அந்தப் பழமொழி உணர்த்துகிறது.

அவ செட்டா குடும்பம் நடத்துறா என்று என் அம்மா பேசிக் கேட்டிருக்கிறேன். அதாவது வீண்செலவு இல்லாமல் சிக்கனமாகக் குடும்பம் நடத்துகிறாள் என்று பொருள்விளக்கம் கொள்ளலாம். கட்டுச்செட்டாக வாழ்கிறாள் என்பதும் எடுத்துக் காட்டான சொற்றொடர்.

ஆக… செட்டு என்பதற்குச் சிக்கனம் என்பது பொருள்.

அடுத்ததாக…. அடக்கம் என்ற சொல்லைப் பார்ப்போம். அந்தச் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. தற்காலப் புழக்கத்தில் அடக்கவிலை என்ற சொல்லைப் பரவலாகப் பயன்படுத்துகிறோம். உற்பத்தி விலைக்கே தருதல், வாங்கிய விலைக்கே விற்றல், வாங்கிய விலையோடு அதற்குண்டான செலவுத் தொகையும் சேர்த்துவரும் விலை ஆகியவை எல்லாம் அடக்கவிலை (Cost Price) என்ற சொல்லுக்குள் அடக்கம். இந்தப் பொருள்கொள்ளலைச் செட்டடக்கம் என்ற சொல்லில் உள்ள அடக்கம் என்ற சொல்லோடு பொருத்திப் பார்க்க வேண்டும்.

செலவுகளைச் சிக்கனமாகச் சுருக்கிக்கொண்டு அந்தச் செலவுத் தொகைக்கே நிகழ்ச்சியை நடத்தித் தருவதற்குத்தான் செட்டடக்கம் என்ற சொல்லை அவர் எழுதி இருக்கிறார். அதாவது “இதற்கு மேல் எதையும் குறைக்க முடியாது. இதுவே மிகக்குறைந்த தொகை” என்ற பொருள் தொனியும் அந்தச் சொல்லில் உள்ளது.

செட்டடக்கம் என்ற சொல்லுக்குச் சிக்கனமான அடக்கச் செலவுத் தொகை என்று பொருள் காண வேண்டும். அதற்கு இணையான மற்றொரு சொல் வேண்டும் என்றால் அடக்கவிலை என்பது போல், அடக்கத் தொகை என்று சொல்லலாம். அடக்கத் தொகை என்பது சுருக்கமான தொகை என்றும் குறைந்த தொகை என்றும் சிக்கனமான தொகை என்றும் பொருள்தரும்

இப்போது மேற்படி கடிதத்தில் உள்ள வாசகத்தில் செட்டடக்கம் என்ற சொல்லுக்கு மாற்றாக அடக்கத் தொகை என்ற சொல்லைப் பயன்படுத்திப் படித்துப் பாருங்கள்.

“எனக்கும் எனது பக்க வாத்யக்காரர்கள் உள்பட, பிடில், மிருதங்கம், கெஞ்சிரா உள்பட, ரயில் செலவுள்பட அடக்கத் தொகை ரூ. 1001/- (ஆயிரத்தி ஒரு ரூபாய்) கொடுக்கும்படியாக(க்) கேட்டுக்கொள்ளுகிறேன்.”

 

 

Series Navigationஐந்து கவிதைகள் குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *