சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்

This entry is part 8 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நம் நாட்டிலேயே முதன் முதலில் முறைப்படி தொழிற்சங்கம் தொடங்கப் பட்டது சென்னையிலும் மும்பையிலும்தான். Madras Workers Union (சென்னை தொழிலாளர் சங்கம்) என்ற பொது அமைப்பு 1918 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. காங்கிரஸ்காரரும், சைவ நெறிச் செல்வரும், தமிழறிஞருமான சாந்த சொரூபி திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அது தொடங்கப் படுவதற்கு முழு முதற் காரணமாக இருந்தார் என்பதுதான் இதில் வியப்புக்குரிய செய்தி!


(பி.பி. வாடியா)
பி.பி. வாடியா, சிங்காரவேலு செட்டியார், சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் துணையுடன் அந்தத் தொழிற் சங்கத்தைத் தொடங்கி வைத்தார், திரு.வி.க. சென்னையில் அப்போது பின்னி அன் கோ என்ற ஆங்கிலேய நிறுவனம் பக்கிங்காம் கர்னாடிக் மில்ஸ் என்ற பிரமாண்டமான இரட்டை ஆலைகளை நடத்தி வந்தது. ஒன்று நூற்பாலையாகவும் இன்னொன்று நெசவு ஆலை யாகவும் இயங்கியது. இந்த ஆலைத் தொழிலாளர்களுக்காகத்தான் முதல் முதலில் தொழிற் சங்கம் தொடங்கப்பட்டது. அதேபோல் இந்தத் தொழி லாளர்களுக்காகத்தான் நம் நாட்டிலேயே முதல் முதலாக வேலை நிறுத்தமும் நடந்தது!
ஆர்க்காடு நவாபிடம் பணியாற்றுவதற்காக 1797 ஆம் ஆண்டு நம் நாட்டிற்கு வந்த ஜான் டெஃப் பின்னி (John Deaf Binny) என்கிற ஆங்கிலேயர், ராபர்ட் டென்னிஸன் (Robert Dennison) என்ற இன்னொரு ஆங்கிலேயருடன் சேர்ந்து ஒரு ஏஜன்சியாக 1799-ல் பின்னி அன் டென்னிஸன் கம்பெனி என்ற பெயரில் ஆரம்பித்த நிறுவனம்தான் படிப்படையாக வளர்ந்து, 1812-ல் பின்னி அன் கோ வாகப் பெயர் மாற்றம் பெற்று, 1870-ல் பக்கிங்காம் (Buckigham), கர்நாடிக் (Carnatic) என்ற பெயர்களில் இரு பஞ்சாலைகளைப் பெரம்பூரில் நிறுவியது. ஒன்று பஞ்சடித்து நூல் நூற்க, மற்றது துணியாக நெய்து முடிக்க.
சுற்றிலும் இருந்த விவசாயக் கூலிகள், கிராமியக் கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரைத் திரட்டி ஆசை வார்த்தைகள் கூறித் தனது ஆலைகளில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டது, பின்னி அன் கோ.
தினமும் பதினைந்து முதல் பதினெட்டு மணி நேர வேலை. மிக மிகக் குறைந்த, அணாக் கணக்கில் தினக் கூலி (ஓர் அணா என்பது ஒரு ரூபாயில் பதினாறில் ஒரு பாகம்), வாரத்தில் ஏழு நாட்களும் வேலை, தொழிலாளர்களுக்கு உணவருந்தும் இடமோ, ஓய்வெடுக்கும் அறையோ ஒதுக்காத அலட்சியம், இப்படித்தான் ஆலைகளை நடத்தி வந்தது, பின்னி நிர்வாகம்.
தொழிலாளர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுங்கூட இருந்தார்கள்! ஆண்களுக்கு ஒரு கூலி, பெண்களுக்கு ஒரு கூலி, குழந்தைகளுக்கு ஒரு கூலி என முடிந்த அளவுக்கு உழைப்புச் சுரண்டல் தொடர்ந்தது. வேலை யும் வியாபாரமும் செய்ய வந்த ஆங்கிலேயர் இப்படித்தான் எஜமானர் களாக மாறினார்கள்!
1920 அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியது. நிர்வாகம் தொழிலாளர் களின் வேலை நிறுத்தத்தை முரட்டுத் தனமான வன்முறையைப் பிரயோகித்து முடிவுக்குக் கொண்டு வந்தது. குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறிது காலத்திற்குப் பிறகு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் பொருட்டு மீண்டும் வேலை நிறுத்தம் தொடங்கச் சரியான நேரத்திற்குக் காத்திருந்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்துப் பல்வேறு குரல்களும் ஒலிக்கத் தொடங்கின. ‘தி ஹிந்து’ நாளிதழின் கஸ்தூரி ரங்க ஐயங்கார், சி. ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி), சிங்கார வேலு முதலியார், சக்கரைச் செட்டியார் எனக் கட்சி வேறுபாடின்றிப் பலரும் தொழிலாளர்கள் சார்பாகப் பேசலாயினர். அப்போது சென்னை ராஜதானியில் அமைச்சரவையை அமைத்திருந்த நீதிக் கட்சியும்கூட தொழிலாளர்களுக்கு ஆதரவான போக்கை மேற்கொண்டது.
அன்றைக்கு அமைச்சரவை என்பது பெயரளவில்தான் அதிகாரம் பெற்றிருந்தது. குறிப்பாகச் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் உள்துறை ஆங்கிலேய துரைத்தனத்திடம்தான் இருந்தது. அதிகாரிகள் முதன்மை அமைச்சரை விட மாநில ஆளுநருக்குத்தான் கட்டுப்பட்டிருந்தார்கள்.
பக்கிங்காம் கர்னாடிக் ஆலைகளின் நூற்பாலைப் பிரிவுத் தொழிலாளர்கள் துணிவு வரப்பெற்றவர்களாய் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் முறைப்படி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்து, விதிகளின் பிரகாரம் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். அதனால் சட்டப்படி நடந்த இதையே நம் நாட்டிலேயே முதல் முதலில் நடந்த அமைப்புரீதியான வேலை நிறுத்தம் என்கிறார்கள். விரைவில் பக்கிங்காம் ஆலைத் தொழி லாளர்களும் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டனர்.
அந்தச் சமயத்தில் பக்கிங்காம், கர்நாடிக் இரு ஆலைகளிலும் பதினாறு ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்களில் பிராமணர் அல்லாத பிற சாதியினரும் முகமதியரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும் கணிசமாக இருந்தனர்.
தாழ்த்தப்பட்டோரின் தலைவராக விளங்கி வந்த எம்.சி. ராஜா சென்னை ராஜதானி சட்ட சபைக் கவுன்சிலில் அரசாங்கத்தின் நியமன உறுப்பினராக இருந்தார். அவருக்கு ராவ் பகதூர் என்கிற பட்டமும் அளித்து கெளரவித் திருந்தது, பிட்டிஷ் அரசாங்கம்.
பின்னி ஆலை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று அரசாங்கம் ராஜாவிடம் கேட்டுக் கொண்டது. அவர் அந்த வேண்டுகோளை ஏற்றுத் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த பின்னி ஆலைத் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்தார்.
தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்குப் பக்க பலமாக நின்ற திரு.வி.க.வும், அதை ஆதரிக்காத எம்.சி. ராஜாவும் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்கள். இரண்டு பேருமே ராயப் பேட்டை வாசிகளும் கூட! இருவருக்கிடையேயும் நல்ல நட்புறவும் இருந்து வந்தது. ராஜாவை அழைத்துப் பேசிய திரு.வி.க., தாழ்த்தப் பட்டோரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“ஆங்கிலேய ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோருக்குத் தடையில்லாத கல்வி, வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு சமூக அங்கீகாரமும் ஓரளவுக்காவது சாத்தியமாகியுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று அரசு என்னிடம் வேண்டியுள்ளது. ஆகையால் அரசின் வேண்டு கோளை மீறி வேலை நிறுத்தத்தை என்னால் ஆதரிக்க இயலாது” என்று கூறிவிட்டார், எம்.சி.ராஜா.
வேலை நிறுத்தத்தின்போது ஆலை வாயிலில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோது பிராமணர் அல்லாத பிற சாதியினரும் முகமதியரும் அவர்களை வேலைக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். வேலைக்குச் செல்ல முயன்ற தாழ்த்தப்பட்டோருக்கு ஆலைக் குள் நுழையப் போலீசார் பாதுகாப்பு அளித்தனர். பிராமணர் அல்லாத பிற சாதித் தொழிலாளர்களின் ஆத்திரம் போலீசார் மீது திரும்பியது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பிராமணர் அல்லாத பிற சாதித் தொழிலாளர்களில் ஏழு பேர் குண்டடி பட்டு இறந்தனர். பலர் காயமுற்றனர். போலீசாரின் பாதுகாப்பு வளையத் திற்குள் இருந்த தாழ்த்தப்பட்டோர் காயமின்றித் தப்பினர்.
தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ‘கருங்காலிகள்’ எனத் தூற்றப்பட்டனர். தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பிளவு விரைவில் சாதிக் கலவரமாக மாறிவிட்டது.
அன்று பின்னி ஆலையில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட பிரிவினர் பெரம்பூரின் ஒரு பகுதியான புளியந்தோப்பில் வசித்து வந்தனர். அவர்கள் மீது பிராமணர் அல்லாத பிற சாதித் தொழிலாளர்கள் தாக்குதல் தொடுத் தனர். தாழ்த்தப்பட்டோரின் நூறு குடிசைகள் கொளுத்தப்பட்டன. தாழ்த்தப் பட்டோர் பலர் மாண்டனர்.
தாழ்த்தப்பட்டோர் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். புளியந் தோப்பிற்குள் பிற சாதியார் எவரும் நுழைய முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. புளியந்தோப்பின் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரம்பூர் சென்று பிராமணர் அல்லாத பிற சாதியினரைக் குறி வைத்துத் தாக்கலானார்கள்.
புளியந் தோப்பில் மீண்டும் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொழிலாளர் நலத் துறை ஆணையரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தாழ்த்தப்பட்டோருக்குச் சாதகமாக இருந்தார்.
போலீஸ் இலாகாவை நிர்வகித்த உள் துறை ஆளுநரின் நேரடிப் பொறுப் பில் இருந்தது. ஆங்கிலேயரன தொழிலாளர் நலத் துறை ஆணையரோ, ஆளுநருக்குத்தான் கட்டுப்பட்டிருந்தார். நீதிக் கட்சி அமைச்சரவை அதிகாரம் இல்லாத பொம்மை ஆட்சியாக இருந்ததால் சட்டசபையில் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவிக்க மட்டுமே அதனால் சாத்தியமாகியது. சட்டசபைக்கு வெளியே இருந்த காங்கிரசும் ஆளுநர் ஆட்சியைக் கண்டித்தது. சென்னை மாகாண அரசியலில் பரம எதிரிகளாக இருந்த காங்கிரசும் நீதிக் கட்சியும் இந்த விவகாரத்தில் கருத்தொற்றுமையுடன் விளங்கின!
நீதிக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டியார் தாழ்த்தப் பட்டோரைச் சென்னை மாநகர எல்லைக்கு வெளியே குடியமர்த்த வேண்டுமென்றும் ஒரே இடத்தில் திரளாக அவர்கள் வசிக்கவிடாமல் அதிக இடைவெளிகளில் வெவ்வேறு பகுதிகளில் அவர்களைக் குடியேற்ற வேண்டுமென்றும் அறிக்கை அளித்தார். நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஓ. தணிகாசலம் செட்டியார் தொழிலாளர் நலத் துறையையே எடுத்துவிடலாம் என்றார்!
சென்னை மாநகர வரலாற்றில் ‘புளியந் தோப்புக் கலவரம்’ என்று முக்கியத்துவம் பெறக் காரணமாயிருந்த பின்னி ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆறு மாத காலம் நீடித்தது. எந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள் என்ற தகவல் இல்லை.
இன்று புளியந்தோப்பு தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் வசிக்கும் பகுதியாக இல்லை. மாறாக அங்கு வாழும் மக்களில் எழுபது சதவீதம் முஸ்லிம்கள். மீதி முப்பது சதவீதத்தில் அதிகம் பேர் மார்வாடிகளும் சீக்கியர்களும்தான்!
ஆதாரம்: இயூகன் எஃப். இர்ஸ்ஷிக் (Eugene F. Irschick) எழுதிய ‘தென்னிந்தியாவில் அரசியல், சமூக மோதல்: பிராமணர் அல்லாதார் இயக்கமும் தமிழர் பிரிவினை வாதமும் 1916-1929’ (Politics and Social Conflict: in South India: Non-Brahmin Movement and Tamil Separatism 1916-1929 University of California Press) என்ற ஆய்வு நூல்.
நன்றி: நம்ம சென்னை மாத இதழ் அக்டோபர் 2012

Series Navigationஇந்திய தேசத்தின் தலைகுனிவுகண்ணீரில் எழுதுகிறேன்..
author

மலர்மன்னன்

Similar Posts

9 Comments

  1. Avatar
    seethaalakshmi says:

    திரு .மலர்மன்னன் அவர்களுக்கு நன்றி. பல வருடங்கள் நான் தமிழக அரசில் இருந்த பல தொழில் சங்கங்களீல் ஒன்றில் தீவிரமாக இருந்தேன். தொழிற்சங்கத்தின் ஆரம்ப வரலாறு எனக்குத் தெரியாது இன்று அந்த வரலாறு அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. மீண்டும் நன்றி

  2. Avatar
    மலர்மன்னன் says:

    வாழ்நாளின் பெரும் பகுதி சுய முயற்சியில் இப்படி முக்கியமான விஷயங்களைத் திரட்டுவதிலும் தெருவில் இறங்கி நியாயம் கேட்பதிலும் கழிந்துவிட்டது. ஆனாலும் வருத்தமில்லை, குறையொன்றும் இல்லை! ஆதாரம் இல்லாமல் இவன் எதையும் பதிவு செய்ய மாட்டான் என்று உறுதியாகக் கூறும் பலர் உள்ளனர் என்பதிலேயே மனநிறைவு அடைந்துவிடுகிறேன். நீங்கள் தொழிற் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்பதை அறிவதில் மிக்க மகிழ்ச்சி. நானும் சில முக்கியமான தொழிற் சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் பின்னணியில் இருந்து இயங்கியுள்ளேன். நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் என்று கொண்டாடப்படும் பிட்டி தியாகராயச் செட்டி தாழ்த்தப்பட்டோரை சென்னை நகர எல்லைக்கு வெளியே அனுப்பி அவர்களை ஒன்றாக ஒரே இடத்தில் வசிக்க அனுமதிக்காமல் தொலைவிடங்களில் மட்டுமே இருக்க விட வேண்டும் என்று வலியுறுத்தியது பற்றிய எனது தகவலை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    -மலர்மன்னன்

  3. Avatar
    someone says:

    //புளியந்தோப்பின் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரம்பூர் சென்று “பிராமணர் அல்லாத” பிற சாதியினரைக் குறி வைத்துத் தாக்கலானார்கள்//

    எளிதான இலக்கான பிராமணர்களை அடிப்பதுதானே மரபு? அதை விட்டுவிட்டு மாற்றி செய்தால் இப்படித்தான் சென்னையை விட்டு வெளியேறி கஷ்டப்பட நேரிடும். மேலும் செத்த பாம்படித்த சுகமும் கிடைக்காது.

  4. Avatar
    Kavya says:

    //அவர்களில் பிராமணர் அல்லாத பிற சாதியினரும் முகமதியரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரும் கணிசமாக இருந்தனர்//

    இது கட்டுரையில் முதலில். பின்னர் பலவிடங்களில் இது தொடர்கிறது. கட்டுரையில் தொடக்கத்தில், “சுற்றிலும் இருந்த விவசாயக் கூலிகள், கிராமியக் கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரைத் திரட்டி ஆசை வார்த்தைகள் கூறித் தனது ஆலைகளில் வேலைக்குச் சேர்த்துக்கொண்டது, பின்னி அன் கோ.” என்றெழுதிவிட்டார்.

    பிராமணர்கள், அதாவது பார்ப்பனர்கள் அங்கில்லை. அவர்கள் வாழுமிடமஃதில்லை. மேலும், அவர்கள் நெசவாளர்களாகவோ, விவசாயக்கூலிகளாகவோ சென்னையில் அன்று வாழவில்லை. இன்றுமில்லை.

    ஆக, இக்கட்டுரைப் பொருளுக்கும் பார்ப்பனர்களுக்கும் தொடர்பே இல்லை. எனினும் மலர்மன்னன், தொடர்ச்சியாக, ”பிராமணரல்லா பிற சாதியினரும், முகமதியரும்” என்றே சொல்லிக்கொண்டு வரும் உள்ளோக்கமென்ன ?

    உண்மையைத் திரிக்காத வரையில் வரலாற்றைச் சொல்வதில் தவறொன்றுமில்லை. அவ்வரலாறு ஒரு குறிப்பிட்ட உள்ளோக்கத்திலே எழுதப்படுகிறது என்பது மிகவும் வேதனைக்குறியது.

  5. Avatar
    A.K.Chandramouli says:

    வந்துட்டார்யா, வந்துட்டார்யா, காவ்யா வந்துட்டார்யா. வார்த்தைகளில் புகுந்து கட்டுரையின் சாரத்தைவிட்டு வெகு தூரம் கொண்டு செல்வதில் வல்லவர் காவ்யா. எழுதுவது மலர் மன்னன் ஆயிற்றே. அவரை தாக்குவதே வாழ்க்கையின் லட்சியமாக கொண்டுள்ளார் காவ்யா அவர்கள். இவரிடம் மலர்மன்னனின் வயது, அனுபவம் எல்லாம் கால் தூசு. தொடரட்டும் காவ்யாவின் சீரிய பணி.

  6. Avatar
    Kavya says:

    //கட்டுரையின் சாரத்தைவிட்டு வெகு தூரம் கொண்டு செல்வதில் வல்லவர் //

    அதே பாயிண்டைத்தான் நானும் சந்தரிமவுளியிடம் கேட்கிறேன்.

    கட்டுரையின் முதலிலேயே பார்ப்ப்னர்களைத்தவிர மற்றவர்கள்தான் சேர்ந்தனர் அந்த தொழிற்சாலையில். காரணம் நெசவாளர்கள், விவசாயக்கூலிகள்தான் அங்கிருந்தனர். பார்ப்பனர்கள் இல்லை. அதாவது பார்ப்ப்னர்களுக்கும் பின்னர் நடந்த எந்த பிரச்சினைக்கும் தொடர்பேயில்லை. இக்கட்டுரையில் எங்கும் பார்ப்ப்னர் என்ற சொல் தேவையேயில்லை.

    அப்படியிருக்க, ‘பிராமணர் அல்லாதோர்’ என்று திரும்பத்திரும்ப சொல்வதன் நோக்கமென்ன ? படிப்பவர் என்ன நினைக்கவேண்டுமென மலர்மன்னன் நினைக்கிறார்? இதுதான் வரலாறு எழுதும் லட்சணமா?

    சந்திரமவுளி சொல்லுங்கள்.

  7. Avatar
    Kavya says:

    உட்பொருளைத் தெரியாதவர் மாதிரி நடிப்போருக்கு நான் சொல்லி விடுகிறேன்.

    தலித்துக்களுக்கு எதிரானவர்கள் பிராமணரல்லாத பிற ஜாதியினர் என்றும், தலித்துகளுக்கு பிராமண ஜாதியினரால் எந்த கொடுமையும் இல்லையென்றும் எனவே பிராமணர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தோர் என்று சொல்லி தலித்துக்களின் கோபத்தை பிராமணரல்லாதோர் மீது திருப்பி விடுவது இன்றைய பாணி. பெரியாரும் திராவிட இயக்கமும் தலித்துகளுக்கு எதிரானது என்பதை நிரூபிக்க பல கட்டுரைகள் தொடர்ந்து இணையங்களில் வெளியாகின்றன.

    அதிலொன்றுதான் ‘பிராமணரல்லாதோர்’ என்று சொல்லைத் திரும்பத்திரும்ப சொல்லி படிப்போரை உள்வாங்க வைத்தல். ஓபனாகச்சொல்லாமல் வரலாற்று நிகழ்ச்சியொன்றை வைத்துச்சொல்லும் தந்திரம்.

    கட்டுரை ஒரு உள்ளோக்கத்துடனே எழுதப்பட்டிருக்கிறது என நாம் சொல்ல முடியும்.

Leave a Reply to someone Cancel reply

Your email address will not be published. Required fields are marked *