“செய்வினை, செயப்பாட்டு வினை“

This entry is part 32 of 43 in the series 24 ஜூன் 2012

       கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை அவர் கழுத்தில் போட்டபோது என் இதயமே வெடித்து விடும் போலானது. பெருகியிருக்கும் அந்த நெரிசலில் தெரிந்த, தெரியாத எல்லா சோக முகங்களையும் கடந்து, மறந்து, கதறி அழ ஆரம்பித்தேன். அவர் மடியில் விழுந்த வேகத்தில் உடம்பு சாய்வதைக் கண்டு யாரோ வந்து தாங்கிப் பிடித்து நிமிர்த்தி நாற்காலியோடு இணைந்த கட்டுக்களை இறுக்கினார்கள்.

    அப்போதும் அந்த முகம் எந்தவிதச் சலனமும் இல்லாமல்தான் இருந்தது. ஆம், நான் எப்பொழுதும் பார்க்கும் முகம் அதுதான். இத்தனை அழுத்தமான ஆளை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அவர் எங்கு போகிறார், எங்கிருந்து வருகிறார் என்பது யாருக்குமே தெரியாது. ஏதேனும் காரியார்த்தமாகத்தான் அலைந்து கொண்டிருப்பார். அது பெரும்பாலும் பலருக்கும் உதவும் வேலையாகத்தான் இருக்கும்.

    எப்போதும் தோன்றும் வெள்ளைச் சட்டை, வேட்டி.. சட்டையின் கைகளை இரு புறமும் முழங்கை வரை ஒரே சீராக மடக்கி விட்டிருப்பார். வலது கை அந்தத் தோல்பையைப் பற்றியிருக்க இடது கை வேட்டியின் நுனியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும். ஒரே சீரான அளந்து வைத்தது போலான  நடை. சிந்தனையிலான பார்வை.

    அலுவலக நேரத்திற்குச் சரியாக வந்து விடுவார். வந்ததும், வராததுமாக வேலையையும் ஆரம்பித்து விடுவார். ஒரு அனாவசியப் பேச்சைக் காண முடியாது. அச்சுப் பிடித்தாற்போல் ஒவ்வொரு எழுத்தாகப் பதித்ததுபோல் இருக்கும் கையெழுத்து. அடித்தல் திருத்தல் என்பது அறவே பிடிக்காது. அரைகுறையாக ஒரு வேலையைச் செய்தல் என்பதும் அவர் அறியாதது. ஒரு நாள், இரண்டு நாள் தாமதமானாலும் சரி, நூறு சதவிகிதம் சரியாகச் செய்து விட வேண்டும் என்பதில் மிகவும் உறுதி. மற்ற எல்லோருக்கும் முன்னால் தன் வேலைகளை முடித்து விட வேண்டும் என்பதில் ரொம்பவும் உறுதியானவர். அப்படி இருந்ததனால்தான் மாறுதல் இல்லாமல் அந்த ஊரிலேயே கழிக்க முடிந்தது அவரால். அது அவர் ராசி. ஏனெனில் அவரைப் போலவே  கடமையை மிகச் சரியாகச் செய்திடும் வேறு பலர் இடம் மாறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அவரை யாரும் தொடமாட்டார்கள்.

    இந்த ஆபீசே ஒவ்வொருத்தனுக்குத்தானே பட்டயம் எழுதி வச்சிருக்கு…என்று காதுபடவே சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். எந்த எதிர்வினையும் இருக்காது அவரிடம். அமைதியாகவும், அழுத்தமாகவும் இருப்பதே ஒரு பெரிய ஆளுமை என்பதாய் இருக்கும் அவரது இருப்பு.

    சங்கத்தின் தலைவராய் வேறு இருந்தார். எல்லோரையும் அரவணைத்துப் போகிறேன் என்று தோளில் கை போட்டுக் கொண்டு டீ குடிக்கப் போய் அரட்டை அடிக்கும் பழக்கமுடையவரல்ல. சங்கத்தை அத்தனை கட்டுக் கோப்பாக நடத்துபவர். யாரும் அவர்களுடைய குறைகளை நேரடியாய்ச் சொல்லலாம். இப்படி நீங்க செய்தது தவறு என்று முறையிடலாம். எனக்குத்தான் இது கிடைச்சிருக்கணும் என்று வாதாடலாம். நியாயம்தான் என்று தோன்றினால் அந்தக் கணமே இருக்கையை விட்டு எழுந்து விடுவார். யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் சென்று அதிரடியாய்ப் பேசி வாதாடுவார். முறையாய்க் கிடைக்க வேண்டியதை நழுவ விடவே மாட்டார். அதனால்தான் பலரும் அவரை நம்பினார்கள். அவர் சொன்ன சொல்லுக்குத் தலையசைத்தார்கள்.

    இன்னைக்கு சாயங்காலம் நேதாஜி பூங்கால கூட்டம்…என்று உறாலுக்கு வந்து சத்தமாய்க் கூறுவார். அதுதான் கூட்டத்திற்கான அறிவிப்பு. வேறு எழுத்து மூலமானதெல்லாம் கிடையாது. கண்டிப்பாய் எல்லாரும் வரணும் என்ற பேச்செல்லாம் இல்லை. சொன்னால் வந்தாக வேண்டும். வராமல் எவனும் தப்ப முடியாது. டிமிக்கி கொடுத்தால் மறுநாள் முகத்துக்கு நேரே  பட்டென்று கேட்டு விடுவார்.

    மன்னிச்சிருங்கண்ணே, ஒரு வேலையாப் போச்சு….

    என்னய்யா பெரிய வேலை…ஒரு, ஒரு மணி நேரம் வந்து உட்கார்ந்திட்டு டீ, பிஸ்கட் சாப்டுட்டு என்ன பேசுறாங்க…என்ன செய்
யுறாங்கன்னு தெரிஞ்சிட்டுப் போகக் கூடாதாக்கும்….சங்கச் செயல்பாடுகளக் காதுலயாச்சும் வாங்குங்க…ஆறு மணிக்கே போய் வீட்டுல அடைகாக்கணுமா…?

    அதிர்ந்துதான் போவார்கள். என்னய்யா, இப்டிப் பேசுறான் இந்த ஆளு… என்று கேட்டவர்கள்தான் தனியே சங்கம் வைத்தார்கள். மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த சிலர் அதில் சேர்ந்து கொண்டார்கள். ஒருவருக்கொருவர் மறைபொருளாய்ப் பேசிக் கொண்டு, போலியாய்ச் சிரித்துக் கொண்டு, மனதுக்குள் கடுப்பாய், ஒரு மாதிரியான பிரிவினை ஆரம்பித்திருந்த நேரம் அது. ஒற்றுமையாய் இருந்த அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்திற்குள் இரண்டு பிரிவுகள் உருவெடுத்திருந்த கால கட்டம் அது.

    அந்த நேரத்தில்தான் நான் மாறுதலில் சென்னையிலிருந்து அங்கு வந்து சேர்ந்தேன். நியாயமாய் எனக்கு சீனியர் ஒருவர் இருந்தார்.  அவரது விண்ணப்பம்தான் முன்னே இருந்தது. அவரும் எனக்கு வேண்டியவர்தான். ரொம்பவும் நெருங்கிய நண்பர். ஆனால் அவர் இந்தப் போட்டியில் முன்னே நிற்பார் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் பிறகு கூட நான் வாங்கிக் கொள்கிறேன், அவருக்குக் கொடுங்கள் என்று கூறியிருப்பேன். மாறுதல் ஆணையிட்டு, நான் உள்ளுர் வந்து ஜாய்ன் பண்ணிய பிறகுதான் தெரிந்தது அவர் எனக்கு முன்னதாக இருந்தவர் என்று. அவர் ஒன்றும் கோபித்துக் கொள்ளவோ, முறையிடவோ இல்லை. ஆனால் இந்தப் போட்டியில் அவர் புதிதாகத் தோன்றிய எதிரணியை நம்பியதுதான் தப்பு என்று ஆகிப் போனது. ஏதோ காசைப் பிடுங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. அது யானை வாய்க் கரும்பு.

    எனக்கு வாங்கிக் கொடுத்தவர் அண்ணாச்சிதான். அவரை அப்படித்தான் கூப்பிடுவார்கள். சங்கரலிங்கம் அண்ணாச்சி. என் முகம் கூடத் தெளிவாக அவருக்குத் தெரியாது. லீவுக்கு வந்திருந்த சமயம், ஒரே ஒரு முறை அந்த அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன் நான். அவரப் பாருங்க…நடந்துரும், என்று பியூன் ஒருவர் சொன்னார். அண்ணாச்சியை முதன் முதலாய் நான் பார்த்தது அப்போதுதான். நான் வந்தது, நின்றது, பார்த்தது, பேசியது, சொன்ன பிறகு உட்கார்ந்தது, அதுவும் நாற்காலியின் நுனியில் அமர்ந்தது என்று எல்லாவற்றையும் கவனித்தார். பெயரென்ன என்று கேட்டார் என் அப்ளிகேஷனைப் பார்த்துக் கொண்டே சங்கர்ராமன் என்ற பெயரை சங்கரன் என்று சுருக்கிச் சொன்னேன். லேசாகப் புன்னகைத்தது போலிருந்தது. அவருக்குப் பிடித்து விட்டதோ என்னவோ, கவலப்படாமப் போங்க….என்று ஒரு வார்த்தை மட்டுமேதான் சொன்னார்…அடுத்த வாரம் ஆர்டர் வந்துவிட்டது.

    அதுவும் அவர் புதிதாகத் தன்னை மாற்றிக் கொண்ட அந்தச் சிறு அலுவலகத்திற்கு நான் ஸ்டெனோவாகப் போய்ச் சேர்ந்தேன். தன்னையும் மாற்றிக் கொண்டு என்னையும் அவரருகே அழைத்திருக்கிறார். அவர் தன் வேலையில் சின்சியர் என்றால் நான் அதைவிட சின்சியர். இது கொஞ்சம் ஓவராகத் தெரியும் உங்களுக்கு. வேலையே செய்யாமல் சதாசர்வகாலமும், டிமிக்கி கொடுத்துக்கொண்டு திரிபவர்கள் ரொம்பவும் கடமையுணர்வோடு பேசும்போது, உண்மையிலேயே வேலையில் பக்தியோடு இருக்கும் நான் என் சார்பாகவும், அண்ணாச்சியின் சார்பாகவும் இப்படிக் கூறிக் கொள்ளக் கூடாதா? எனது வேலைத் திறன் அலுவலருக்குப் பிடித்திருந்தது. நேரந்தவறாமையும், நேரம் கணக்கிடாமையும் அவருக்கு ரொம்பவும் உதவியாய் இருந்தது. நான் அந்த அலுவலகத்தில் ஆபீசருக்கு மட்டும் ஸ்டெனோ இல்லை. அண்ணாச்சிக்கும்தான். சங்கக் கடிதப் போக்குவரத்துக்கள் பலவும் என் மூலமே நடந்தேறின. அந்த அளவுக்கு நாங்கள் இருவரும் நெருங்கி விட்டோம். என்னைக் கூடப் பிறக்காத தம்பியாகவே வரித்திருந்தார் அண்ணாச்சி. எங்கு வெளியில் சென்றாலும் அவர் கூடவே இருப்பேன் நான். இருப்பேன் என்ன கிடப்பேன். அலுவலக நேரத்திலேயே டிரஷரி, வங்கி என்று எங்கு செல்ல வேண்டுமானாலும் என்னை இழுத்துக் கொண்டுதான் அலைவார். மாலை வேளையில் மூலைக்கடையில் வெள்ளையப்பம் சாப்பிட்டு, காபி ருசிப்பது வரை கூடவே, கூடவே என்று பழகிப்போனது.

    எங்க உங்க துணைப்பொட்டலத்தைக் காணல? என்றுதான் நான் இல்லாத அன்று கேட்பார்கள் பலரும்.

    அப்படித்தான் நான் எல்லா வேலையும் பழகினேன் அவரிடம். அலுவலக வேலை அத்தனையும் அத்துபடி ஆனது எனக்கு. மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு மேலாளருக்குள்ள தகுதியோடு வலம் வந்தேன். தான் இல்லாவிட்டாலும் ஆபீசைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை என்பதான ஒரு காலகட்டத்திலேதான் அண்ணாச்சி அவ்வப்போது ஆப்சென்ட் ஆகத் தொடங்கினார். எங்கே என்று ஒரு நாளும் சொன்னதில்லை.  அவர் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் நானே செய்தேன். அவர் எப்படிச் செய்வாரோ அப்படியே அச்சுப் பிடித்தாற்போல். என்ன, என் கையெழுத்து கொஞ்சம் சுமாராக இருக்கும். நிறுத்தி எழுதுங்க…என்பார். அவ்வளவுதான் அவர் கண்டிப்பு.

    எங்கள் அலுவலகத்தில் நான், அவர், ஒரு பியூன். அந்த மாவட்டத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டிருந்தோம் நாங்கள். அந்தப் பெரிய அலுவலகத்தில் இருந்துதான் இந்தச் சின்ன அலுவலகத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.  இருக்கிறோமா, இல்லையா என்று யாருக்கும் தெரிந்து விடாத இடம் அது. அந்தப் பக்கமாகக் கழிப்பறைக்கு வந்து செல்பவர்கள் கூட ஏதேனும் தேவை கருதி, அண்ணாச்சி…என்று கூப்பிட்டுக் கொண்டு வலிய எட்டிப் பார்த்தால்தான் உண்டு. என்னைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. நான் புதிது அந்த அலுவலகத்திற்கு. அந்த மாவட்டத்திற்குமே…கொஞ்ச நாளைக்கு நான் அப்படித்தான் இருந்தேன். நான் ஒட்டவில்லை. பிறகு அதுவாய் வந்து ஒட்டியது என்னிடம்.

    ஒரே ஒரு நாளில் அந்த அலுவலகம் என்னைப் பற்றிப் புரிந்து கொண்டது. எதிரணியினர் ஏதோ ஸ்டிரைக் பண்ணினார்கள். பொதுவான கோரிக்கைகள்பற்றி இல்லை. அந்த அலுவலகத்தின் ஏதோ ஒரு இரண்டாம் நிலை அலுவலரை, அவரது செயல்பாடுகளை விமர்சித்து, அவரை மாற்ற வேண்டும் என்று வாசலில் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைய முற்பட்ட என்னைப் பிடித்து நிறுத்தினார்கள். நீயும் பாடு என்றார்கள். இந்தப் பிரச்னை அண்ணாச்சிக்குத் தெரியாது. அவர் வெளியூர் சென்றிருந்தார். நான் அண்ணாச்சி சங்கத்தைச் சேர்ந்தவன். பிரச்னை நியாயமா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அண்ணாச்சியின் முடிவு என்னவோ அதுதான் எங்களுக்கு. அவரில்லாத நேரத்தில் எதிரணியில் நிற்பதாவது? அவரோட ஆள் என்று தெரிந்திருந்தும் எப்படி என்னை நிறுத்தினார்கள்? வம்புதானே…!

    நான் வேறு சங்கம் என்பது உங்களுக்குத் தெரியும். என்னை எப்படிக் கூப்பிடுகிறீர்கள்? என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்து விட்டேன். அன்று அந்த மாபெரும் அலுவலகத்தில் ஒரு சிலர்தான் பணியாற்றினார்கள். அவர்கள் எங்கள் சங்கக்காரர்கள். மிரட்டல்களுக்கு அஞ்சாத அனுபவஸ்தர்கள்.

    என்ன, வெரட்டினாங்களா? பயந்திராதீங்க… அண்ணாச்சி வரட்டும், கவனிச்சிக்கிடுவோம்…என்று என்னைச் சமாதானப்படுத்தினார்கள் சிலர்.

    யாருடைய துணையையும் நான் எதிர்பார்க்கவில்லைதான். இல்லையென்றால் மதியம் போல் வந்த அவர்களிடம் அப்படிப் பேச முடியுமா? அரைநாள்தான் அந்த ஸ்டிரைக் நீடித்தது. தலைமை அலுவலர் காரில் வந்து இறங்கி என்ன விபரம் என்று கேட்டு வேண்டியதைச் செய்வதாகச் சொன்னபோது படக்கென்று முடித்துக் கொண்டார்கள். யாராவது அப்படிச் சொல்ல மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்தது போலிருந்தது அந்த வாபஸ்.

    நான் வேற சங்கம்ங்கிறது உங்க எல்லாருக்கும் தெரியும். அப்படியும் எங்கிட்ட வந்து எப்படிச் சந்தா கேட்குறீங்க? ஒரே சமயத்துல ரெண்டு சங்கத்துக்கு எவனாவது சந்தா கொடுப்பானா? முதல்ல நீங்க அப்டி இருப்பீங்களா? உங்ககிட்டே யாராச்சும் அப்டி வந்து கேட்டா நீங்க என்ன செய்வீங்க? ரெண்டு சங்கத்துல ஒருத்தர் மெம்பரா இருக்கலாமா? அசிங்கமில்லே?  அப்டி என்னால இருக்க முடியாது. இந்த மாதிரி நீங்க வந்து கேட்குறதே தப்பு. ஒரு சங்கத்தைச் சேர்ந்தவங்க இப்டி வந்து நிக்குறதும், வற்புறுத்துறதும், பயமுறுத்துறமாதிரிப் பேசுறதும், நிர்வாகிகளா இருக்கிறவங்களுக்கு அழகு இல்லை. இது உங்க சங்கம் எப்படிப்பட்டதுன்னு எல்லாருக்கும் காண்பிச்சுக் கொடுக்கிற மாதிரி இருக்கு. ஸாரி…..படபடவென்று அடுக்கி விட்டேன்.

    ரொம்பப் பேசுறீங்களே தம்பீ…..தெனம் இந்த ஆபீசுக்கு வந்து போகணும்ல…எங்களக் கடந்துதான் வரணும்…அதையும் ஞாபகம் வச்சிக்குங்க…எங்க சங்கத்துல மெம்பரா ஆகலைன்னா பிறகு நீங்க ரொம்ப வருத்தப் பட வேண்டிர்க்கும்….

    சொல்லிக் கொண்டே என் மூஞ்சியையே பார்த்தார்கள். நான் அசைவதாய் இல்லை. போய் விட்டார்கள்.

    அண்ணாச்சி அந்தப் பெரிய அலுவலகத்தை விட்டு மாறிக் கொண்டது அவர்களுக்கு ரொம்பவும் வசதியாயிருந்தது. உறாலில் எல்லோரோடும் கலந்து அவர் அமர்ந்திருக்கையில் பெட்டிப் பாம்பாய் அடங்கிக் கிடந்தவர்கள் இப்பொழுது மெல்ல மெல்லச் சீற ஆரம்பித்திருந்தார்கள்.

    அவர்களின் தொல்லை வேண்டாம் என்று அண்ணாச்சியே ஒதுங்கி விட்டாரா, அல்லது இன்னும் தீவிரமாய்ப் பணியாற்ற அந்தச் சிறு அலுவலகம் உதவும் என்று நினைத்து வந்தாரா என்பதை இன்னும் உறுதி செய்ய முடியவில்லை.

    ஒரு நாள் அது நடந்தது.

    அண்ணாச்சி, என்னை அடிச்சிப்புட்டான் அண்ணாச்சி அந்த டெக்னிக்கல் பய…..என்று கொண்டே வந்து நின்றார் நாதப் பிரம்மம். விபரத்தை முழுக்க கேட்டார் அண்ணாச்சி. அப்படியே எழுச்சியோடு எழுந்தவர்தான். உறாலில்சென்றுஃபோனைச் சுழற்றினார். அடுத்த பத்தாவது நிமிடம் எங்கிருந்துதான் வந்தார்களோ, எப்படித்தான் குவிந்தார்களோ வாசலில் கே…கே..என்று கூட்டம் கூடி விட்டது.

    அந்தாளப் பதிலுக்கு பதில் சாத்தாம விடக்கூடாதுங்க…அதெப்படிங்க நம்ம ஆள் மேல கை வைப்பான் .அவன்? என்ன பெரிய டெக்னிக்கலு, கொம்பா முளைச்சிருக்கு அவனுக்கு…கிளம்புங்கய்யா போவோம்….ஆபீஸ் டெக்கோரம் கலகலத்தது அன்று.

    நடந்து போய்க் கொண்டிருந்த ஜனம் நின்று பார்த்தது. அங்கங்கே கடைகளில் இருப்போர், வியாபாரத்தை மறந்து இங்கே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

    ஆத்திரத்தில் அறிவிழந்து விடக் கூடாது என்று சிலர் எடுத்துரைத்தனர். வேண்டாம், இந்தக் கொந்தளிப்பு கூடாது என்று எங்கள் சங்கத்தைச் சேர்ந்த சில சீனியர்களே கையை நீட்டிக் கூட்டத்தைத் தடை செய்தனர். கொந்தளிப்பை அடக்க முயன்றனர். யாராவது பிரதிநிதிகள் நால்வர் சென்று பேசுவோம். எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்க வைப்போம் என்றனர். யாரும் கேட்டால்தானே…உணர்ச்சி வசப்பட்ட இடங்களில் எங்கே அறிவு வேலை செய்திருக்கிறது? அள்ளிக் கொட்டி கூடையில் வாரினால்தான் ஆச்சு என்று நின்றார்கள்.

    “அந்தாளக் கொண்டுவந்து என் கையால பதிலுக்கு பதில் அதே சவுக்கால அடிச்சாத்தான் மகாராஜா என் ஆத்திரம் தீரும்”

    எனக்குக் கட்டபொம்மன் வசனம் ஞாபகம் வந்தது.

    திரட்டிய ஊர்வலம் அல்ல, திரண்ட ஊர்வலம் அது.

    அங்கங்க பிரிஞ்சு பிரிஞ்சு நடந்து போங்க…மொத்தமா சேர்ந்து ஊர்வலம் மாதிரிப்  போக வேண்டாம்… அண்ணாச்சியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டது கூட்டம்.

    அங்கிருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த அலுவலகத்திற்கு க்ரூப் க்ரூப்பாய்  நடந்தே வீறு கொண்டு சென்ற கூட்டம் வாசலில் நின்றது. முதலில் அண்ணாச்சியை உள்ளே அனுப்பி பின்னே தொடர்ந்தது.

    தன்னந்தனியாய் பொட்டல் காடுபோல் பழங் கட்டடத்தில் கிடந்த அந்த பூட் பங்களா அலுவலகத்தில் நுழைந்ததும்..…

    எங்கய்யா உங்க செக் ஷன் ஆபீசரு….கூப்டுய்யா அந்த டெக்னிகல்…மசிர….என்று சொல்லிக் கொண்டே முன்னேறியவர், அவரைப் பார்த்தாரோ இல்லையோ…காலில் கிடந்த செருப்பைக் கழற்றி கண் இமைக்கும் நேரத்தில் பட்டுப் பட்டென்று சாத்தத் தொடங்கி விட்டார். அண்ணாச்சி அப்படிச் செய்தது கூடியிருந்த கூட்டத்தை பயங்கரமாய் உசுப்பி விட அந்த விஞ்ஞானக் கூடத்தின் பாட்டில்கள், குடுவைகள், கோப்பைகள், மருந்துகள், சோதனை இருப்புகள், கண்ணாடிகள், பல்புகள்  டேபிள், சேர், ஃபேன்கள் என்று எல்லாமும் அடித்து நொறுக்கப்பட்டு, உடைந்து சிதற ஆரம்பித்தன. அங்கே இருந்தவர்கள் ஓடி ஒளிந்தார்கள். கூட்டத்தின் வேகத்தை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. அடி வாங்கிய பிரிவு அலுவலர், அதான் டெக்னிகல், டேபிளுக்கு அடியில் போய் காமெடியன் மாதிரி ஒளிந்து கொண்டு வெளியே வரவே மாட்டேன் என்று பதுங்க, ஆளாளுக்கு அவரை பிருஷ்டத்தில் உதைப்பதும், முகத்தில் குத்துவதுமாக வேகம் கொள்ள வாசலில் போலீஸ் வேன் வந்து நின்றபிறகுதான் பிரச்னை பூதாகாரமாகியது. அவ்வளவு பேரையும் ஒட்டு மொத்தமாய் வேனில் ஏற்றினார்கள்.

    போவோம்யா…போவோம்…இப்ப என்ன? தலையையா வாங்கிருவாங்க…? ஒரு நீண்ட பெரிய வளாகத்தினுள் நுழைந்தது வேன். மரத்தடியில் எல்லோரையும் இறக்கி இரு பிரிவுகளையும் எதிரெதிரே அமரச் செய்தார்கள். வெகு நேரத்திற்கு அப்படியே உட்கார்ந்து கிடந்தோம் நாங்கள். பிறகுதான் பேச்சு ஆரம்பித்தது.

    அசிங்கமாயில்ல…நீங்கள்லாம்படிச்சவங்களா…இல்லகாட்டான்களா…என்னய்யா இப்டி நடந்துக்கிறீங்க…? பொது ஜனம் பரவால்ல போலிருக்கு…தமிழ்நாடு பூராவும் எங்க பார்த்தாலும் உங்க ஆபீஸ்கள்தான் பரவிக் கெடக்குது. ஆயிரக்கணக்கான ஆட்களக் கொண்டது. நாட்டு மக்களுக்கே தேவையான முக்கியமான வேலைகளைச் செய்றவங்க… …நீங்கதான் அடிப்படை ஆதாரமே… இப்டி அடிச்சிக்கிறீங்களே…இது பரவிச்சின்னா என்னாகுறது? நாட்டோட முன்னேற்றமே ஸ்தம்பிச்சிப் போயிடாது…வளர்ச்சி நின்னு போயிடாது? அதுல உங்களுக்குச் சம்மதமா? அதக் கூட விடுங்க…அறுபது வயசுவரைக்கும், ஒண்ணுக்குள்ள ஒண்ணா, அண்ணன் தம்பியா பழகி, நல்லது கெட்டதுகளுக்குக் கலந்துக்கிட்டு, காலம் பூராவும் கண்ணியமா, ஒத்துமையா, முனைப்பா இருந்து கழிக்க வேண்டிய நீங்களே இப்டிச் சல்லித்தனமான காரியங்கள்ல ஈடுபட்டீங்கன்னா, அப்புறம் பொது மக்கள் உங்களப்பத்தி என்னய்யா நினைப்பாங்க? நம்மளோட தேவைகளுக்கு இவுங்கள வச்சாங்கன்னா, இவுங்களே இப்டி அடிச்சிக்கிறாங்களேன்னு நினைச்சு வருத்தப்படமாட்டாங்களா? நாம யார நம்ம காரியங்களுக்காக அணுகறதுன்னு பிரமிக்க மாட்டாங்களா? அது உங்களுக்கு ஒப்புதலா? யோசிச்சுப் பாருங்க…ஜனங்களோட நம்பிக்கைக்கு ஏத்தா மாதிரி நாம நடந்துக்க வேண்டாமா? போனது போகட்டும்….இந்த விஷயத்த இத்தோட விட்டுடறேன் …இதுக்கு மேல இழுக்க விரும்பல…எனக்கு வர்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக்கிடுறேன். ஏன்னா உங்கள்ல நானும் ஒருத்தனா இருக்கிறதால…தயவுசெய்து சமாதானமாப் போயிடுங்க…அதுதான் எல்லாருக்கும் நல்லது….

    அற்புதமாக அட்வைஸ் கொடுத்து எங்கள் மனங்களைப் பதப்படுத்தினார் அந்தக் காவல் துறை ஆய்வாளர். அவரின் பேச்சில் கூட்டம் வசியப்பட்டது என்னவோ உண்மை. அமைதியாக அடிபணிந்த அந்த நாளின் ஒரு பொன் மாலைப் பொழுது, வாழ்நாளில் மறக்க முடியாதது. அடித்தவர்கள், அடிபட்டவர்கள், கொதித்தவர்கள், கொதிக்கத் தூண்டியவர்கள், என்ற எந்த வித்தியாசமுமில்லாமல் எல்லாவற்றையும் உடனுக்குடன் மறந்து கைகுலுக்கி, மார்பணைத்து  விலகியது அந்த இரு தரப்புக் கூட்டமும்.

    ஆனால் அதையே குறி வைத்து ஸ்திரப்படுத்தியது அந்த எதிரணி. எதுடா என்று காத்துக் கொண்டிருந்தவர்கள்தானே…! கும்பனியர்களுக்கு எப்படிப் பாளையக்காரர்கள் சிலர் அடிபணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்களோ, அதுபோல் அந்த அடித்து, அடிவாங்கிய டெக்னிகலை முன்வைத்து அந்தக் கூட்டத்தையும் தங்களோடு அணி சேர்த்துக் கொண்டு எதிரிக்கு எதிரி நண்பன் என்று  எங்கள் மீது பகைமை கொண்டார்கள் அவர்கள். இனம் இனத்தோடு என்கிற கால உண்மை பொய்யாக்கப்பட்டது அங்கே.

    சூட்டோடு சூடாக அங்கிருந்துதான் ஏவப்பட்டாள் அந்த மாய யட்சினி. தீராப் பசி கொண்ட வேங்கை. யானைப் பசி. குதிரை இனம். அண்ணாச்சி எப்படி விழுந்தார் அவள் வலையில்? உள்ளார்ந்த அந்த பலவீனத்தை அவர்கள் எப்பொழுது கண்டு பிடித்தார்கள்? முழுக்க முழுக்க ஒரு மேலாளர் நிலைக்கு அனைத்து வேலைகளிலும் நான் அத்துபடியானேன் என்று சொன்னேனே…அது திட்டமிட்டே செய்யப்பட்டதோ என்று கூட எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. காலம் ரொம்பவும் கொடுமையானது.

    யமுனையாற்றங்கரையில் வனம் முழுவதும் திவ்ய வாசனை வீசக் கண்ட தேவகன்னிகையின் மீது தீராத  மோகம் கொண்ட சந்தனு மகாராஜாவைப் போல் இந்தத் தாக யட்சினியே கதி என்று கிடந்தார் அண்ணாச்சி. அந்தப் புனிதம் என்பது வேறு. இந்தப் போகம் என்பது? யார் எது நினைத்தார்களோ அது படிப்படியாக வெற்றிகரமாக நடந்தேறிக் கொண்டிருந்தது அங்கே.

    ஒரு நாள் லீவு போடலாம். இரண்டு நாள் லீவு போடலாம். காரணமேயில்லாமல் அடிக்கடி காணாமல் போனால்? வீட்டுக்கே தெரியாது என்றால்?  ஒரு தவறு பல தவறுகளுக்குத் தூண்டியது. தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடர்ந்தது. வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, இதோ வந்து விடுகிறேன் என்று போகிறவர்தான். இப்படி ஒன்று ஆரம்பமானது பிறகு. பின்னால் சிரிப்பதும், கும்மாளமிடுவதும் வழக்கமானது. ஒரு மனிதன் கெடுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி? தன்னால் முடியாததை மற்றவன் செய்யும்போதும், தான் செய்திருந்தால் என்ன கதி ஆகியிருப்போம் என்று மற்றவன் மூலமாக உணர முற்படுவதும், அதிலிருந்து சுதாரித்துக் கொள்ளத் தலைப்படுவதும், சுதாரித்துக் கொண்டதுபோல் நாடகமாடுவதும், அல்லது தர்மிஷ்டனாய்த் தோற்றம் தர முயல்வதும், என்னே இவர்களின் மனப்பாங்கு?

    எதிரே சந்தித்த அன்று அழுதேன் நான். அது அவரைச் சகோதரனாய் வரித்த சோகம். வழக்கம் போல் அந்த லாட்ஜிலிருந்து வெளியேறிக் கொண்டிந்தார் அவர். கைகளைப் பிடித்துக் கொண்டு மன்றாடினேன். அந்த அமைதி பிடித்திருந்தது அவருக்கு. நன்றாக அழட்டும் என்பதுபோல் என் கூடவே கலங்கி நின்றார். நட்ட நடு ரோட்டில் நடந்தது இது. என்னால் விட முடியவில்லையே என்பவராய் விசித்தார். தவறுதான், மாட்டிக் கொண்டேனே என்று நடுங்கினார். உண்மையா பொய்யா…? எப்படி நம்புவது?

    டேய், நல்லால்ல நீ செய்றது….ரெண்டு பொம்பளப் புள்ள இருக்கு உனக்கு…ஞாபகம் வச்சிக்க…உன்ன நம்பி உன் பொஞ்சாதி இருக்கா… தம்பி, தங்கச்சி இருக்காக….சுற்றம் இருக்கு…எங்களக் கூட விட்ரு….நாங்க சொல்றமேன்னு நீ கேட்க வேண்டாம்…உன் குடும்பத்துக்காக கேளு…இத்தன நாள் பழகிட்டமேன்னு மனசு கேட்கலடா…நாங்க இத்தன பேர் சொல்றமே…அதுக்காகவாவது யோசிடா….ஆபீசு முடிஞ்சிச்சின்னா இப்டித்தாண்டா கால் இழுக்குது…நீ இங்கதான் கெடப்பியோன்னு எங்களையறியாம வந்து நிக்கிறோம்டா…ஒரு நிமிஷம் போதும்டா எங்களுக்கு…அவள அடிச்சித் துரத்துறதுக்கு…ஆனா நீ மனம் மாறணும்ங்கிறதுதாண்டா எங்களுக்கு முக்கியம்…இந்த விஷயம் அப்டித்தாண்டா முடியணும்….அதுதான் எல்லாருக்கும் நல்லது…உனக்கும், உன் உடம்புக்கும், உன் ஆரோக்யத்துக்கும்….உன் குடும்பத்துக்கும்….எல்லாத்துக்குமேடா…சொன்னாக் கேளுடா மச்சான்…எங்க வார்த்தையத் …தட்டாதே….அண்ணாச்சி அண்ணாச்சின்னு உன்னச் சுத்தியிருந்த கூட்டம் இன்னும் ஒதுங்கலடா….மனசு கலங்கிப் போயி நிக்குது….அவுங்கள ஏமாத்திறாதடா….உன் மேல பாசமுள்ள கூட்டம்டா அது…உன்னால நன்மையடைஞ்ச ஒவ்வொருத்தனும் அப்டியே நிக்கிறான்டா…யாரும் அசைச்சுக்க முடியல இன்னைவரைக்கும்…இந்தக் கூட்டை அத்தனை சீக்கிரம் கலைச்சிற முடியாதுடா…வந்துர்றா…பழையபடி வந்துர்றா…

    அவர்கள் முகங்களையெல்லாம் நிமிர்ந்து பார்க்கத் தகுதியின்றி என்னையே என் கைகளையே பிடித்தமேனிக்கு அழுது கொண்டிருந்தார் அண்ணாச்சி. நான் அவரின் தவறுகளுக்காக அழுதேன். அந்தத் தவறின் வீரியத்திலிருந்து விடுபட முடியாமல் அவர் தவிப்பதை உணர்ந்தேன். கையறு நிலை.

    செய்வினையின் எதிர்வினையைக் காலம் காட்டிக் கொடுத்தது. ஆனால் அத்தனை சீக்கிரம் அது நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு விடியலில் அது இருண்டு போனது.

    ”அண்ணாச்சி சங்கரலிங்கம் எக்ஸ்பையர்ட்…”

    எங்கள் சங்கத்தின் மாநிலமே தகவலறிந்து திரண்டிருந்தது அங்கே. எப்பொழுதும் கூடிச் சிந்திக்கும் கூட்டம், கூடிக் கலைவதற்காக அங்கு குழுமியிருந்தது.

    என்ன மாமா…நல்லாத்தான இருந்தாரு…? என்னாச்சு திடீர்னு…?

    உறார்ட் அட்டாக்குப்பா….அது எப்ப வரும்னு யாரு கண்டது? போதாக் குறைக்கு மனுஷன் அப்டி இப்டி இருந்திருப்பார் போலிருக்கு…..இந்த வயசுல அதெல்லாம் தாங்குமா….தெரிய வாணாம்…அருமையான மனுஷன்…தேடிக்கிட்ட முடிவப் பாரு…..

    ஒரு மிகப் பெரிய ஆளுமையின் அற்பமான பலவீனம் யதார்த்தங்களின் காலடியில் மிதிபட்டுப் போனது அங்கே…!!!

                    ————————————-

Series Navigation“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”பஞ்சதந்திரம் தொடர் 49
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

16 Comments

    1. Avatar
      ushadeepan says:

      நன்றி. சற்று விரிவான விமர்சனத்தை எதிர்பார்த்தேன். சுருக்கமாய் முடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  1. Avatar
    jayashree shankar says:

    /////செய்வினையின் எதிர்வினையைக் காலம் காட்டிக் கொடுத்தது. ஆனால் அத்தனை சீக்கிரம் அது நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு விடியலில் அது இருண்டு போனது.//////

    அன்பின் திரு.உஷாதீபன் அவர்களுக்கு,
    கதையின்…செய்வினையில் இடத்துக்கு இடம் வார்த்தைகளால் முத்திரை குத்திக் கொண்டே சென்ற
    வரிகள் பிரமாதம்…..பன்ச் டயலாக் ரொம்ப அளவாகவும் அழகாகவும் கையாண்ட விதம் அருமை.
    கதை எங்கெல்லாமோ கொண்டு சென்று இறுதியில் சரியான இடத்தில் வந்து நின்றது…அருமையாக..!
    நல்ல நேர்த்தியான படைப்பு. பாராட்டுக்கள்.
    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      ushadeepan says:

      நன்றி மேடம். மிகப் பெரிய நீளமான கதையாக இருக்கிறதே என்று பார்க்காமல் எல்லோரும் படித்து விடுகிறீர்கள். அத்தோடு படைப்பினைப் பற்றி மனம் திறந்த தாராளமான விமர்சனத்தையும் கொடுத்து விடுகிறீர்கள். இன்னும் நிறைய எழுதத் தூண்டுகிறது இந்த விமர்சனங்கள். உங்களின் குறிப்பான கவனத்திற்கு நன்றி. அன்பன் உஷாதீபன்

  2. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    உண்மைதான்! விரிவாய்க் கலந்துரையாடத்தக்க ஒரு வித்தியாசமான கதைக் கருதான்.

    மனிதர்களிடம் காணப்படும் அபூர்வமான திறமைகளைப் பாராட்டி வளர்த்தெடுக்கும் பெருந்தன்மை சமூகத்தில் மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. இது ஒரு வகையான ஊன நிலை/நோய்வாய்ப்பட்ட நிலைதான் என்றால், அது மிகை அல்ல.

    அதேநேரம், ஒரு மனிதனி/மனுஷியிடம் உள்ள ஒரே ஒரு பலவீனத்தைக்கூட தூண்டிவிடவும், தவறுகளை ஊதிப் பெருப்பித்து அவனை/அவளை அதற்கு மேல் எழவே விடாமல் ஆழ்ந்த இருள்வெளிக்குள் தள்ளிவிடவும் இந்தச் சமூகம் தயங்குவதே இல்லை. சரியாகச் சொல்வதானால், நம்மைச் சூழவும் வைக்கோல் போர் நாய்களைப் போன்றவர்கள் அனேகர் உள்ளனர். தமது செயல், அதன் துர்விளைவு குறித்த குறைந்தபட்ச மன உறுத்தல்கூட அவர்களுக்கு இருப்பதில்லை. அதை அவர்களிடம் எதிர்பார்க்கும் சராசரி நபர்கள்தாம் வீணாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.

    இதனை மிகவும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்!

    கதையைப் படித்து முடித்ததும் சொல்லத் தெரியாத ஒருவகை அவல உணர்வே என்னை ஆட்கொண்டது. எதுவும் அதிகம் எழுதக்கூடத் தோன்றவில்லை. அதனை உங்கள் எழுத்தின் உயிரோட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும் சொல்லலாம் என நினைக்கின்றேன்.

    இன்னும் நிறைய எழுதுங்கள். :)

    1. Avatar
      ushadeepan says:

      அன்பரே, உங்கள் மனநிலையைத்தான் நான் அடைந்தேன்.வாழ்க்கையில் எத்தனையோ விதமான காரெக்டர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான ஆளுமை புதைந்திருக்கிறது. அது விஸ்வரூபமெடுக்காமல் திசை திரும்பும்போது அது அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்று கடைசியில் அவனின் முடிவுக்கே வழிவகுத்து விடுகிறது. என் மனதில் இன்னும் ஆறாமல், ஆற்ற முடியாமல் இருக்கும் ஒரு மிகப் பெரிய ஆளுமைதான் அது. அவரின் நினைவுகளோடுதான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிகழ்வுகளோடு புனைவுகளும் கலக்கும்போது, அங்கே படைப்பு பரிணமிக்கிறது. நீங்கள் உள்வாங்கியிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. இன்னும் எழுதித் தள்ள வேண்டும். காலம் துணை செய்யட்டும். அன்பன், உஷாதீபன்

  3. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு உஷாதீபன்,

    நல்ல கதைக்களம். தொய்வில்லாமல் சுவையாக கொண்டுசென்று, யதார்த்தமாக முடித்திருக்கிறீர்கள். தன் தவறே இருதய வியாதியாக உருவெடுத்து அழித்துவிட்டது என்பதை அழகாக புரிய வைத்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

  4. Avatar
    bandhu says:

    I encountered a similar writing in a totally different context. It is in the biography of Benjamin Graham. Graham was a investment whiz, teacher of Warren Buffet. He did have one vice which was women. The biography was written by a women who was very critical of Graham when she came to know about this vice. But having already committed to write his biography, she met him and tried to understand him without any prejudice. Once she found the good side of him, she wrote “After knowing him, he is someone like my father. Yes. my father had vices. but still, he was my father!” (words were not the exact ones. but something similar to that) I am reminded of this ability to see the good in people among the vices. (was I too out of context?)

  5. Avatar
    punai peyaril says:

    உஷாதீபன், கதை சொல்லலை ஒரு அற்புத குதிரையை அழகாக சவாரி செய்வது போல் கையாண்டிருக்கிறீர்கள்… நல்ல வீச்சும்.. தடம் புரளா கதை போக்கு வேகமுடன்… தொடங்கி முடியும் வரை படிக்க வைத்தது… ( பந்து, கதை நம்மை பல ஞாபகங்களை தூண்டி விட்டால், அது தான்யா அருமைக் கதை… உங்களின் பகிர்வு விஷயத்தை இதோ தேடி கூகுளுக்கு போகிறேன்..)

    1. Avatar
      ushadeepan says:

      அன்பு நண்பரே வணக்கம். ரசித்துப் படித்திருக்கிறீர்கள். நன்றி. ushaadeepan.blogspot.com பார்க்கவும்.

  6. Avatar
    தி.தா.நாராயணன் says:

    நண்பரே!
    அண்ணாச்சியின் கேரக்டர் ஸ்டடி அருமை,யதார்த்தம்.அவருடைய நேர்மை சிம்பாலிக்காக வெள்ளை உடையில் துவங்குகிறது.அதிகம் பேசாத,பேசுவதெல்லாம் மற்றவர்களுக்கு ஆணையாக,அவரின் ஆளுமையை நேர்த்தியாக சொல்லி எங்களை ஈர்த்துவிட்டீர்கள். அந்த டெக்னிக்கல் பயலை செருப்பால் அடித்தது அவருடைய அந்தஸ்துக்கு அதீதம் என்று பட்டபோது, அந்த மனிதர் சடக்கென்று உணச்சி வயப்படுபவர், வயப்பட்டு கீழே பாதாளத்தில் விழக்கூடியவர்தான் என்பதை அவருடைய பெண் தொடுப்பை சொன்னபோதுதான் புரிந்தது, இதற்கான முன்னோடி அது என்று.இறுதியில் ஓங்கி உயர்ந்து, சலனப்பட்டு சரிந்து போன ஒரு மனிதனின் கதை என்பதோடு தங்களின் எழுத்தின் ஆளுமையையும் உணர்ந்தேன் .சிறிதும் முகஸ்துதியில்லை.

    1. Avatar
      ushadeepan says:

      எங்கடா ரொம்பப் பெரிசா இருக்கேன்னு படிக்க விட்ருவீங்களோன்னு நினைச்சேன். அனுபவிச்சு உள்வாங்கிப் படிச்சதுக்கு நன்றி. உங்க எழுத்த அடுத்தாப்புல எதிர்பார்க்கிறேன். உங்களின், உஷாதீபன்

  7. Avatar
    தி.தா.நாராயணன் says:

    முயற்சி செய்கிறேன்.எங்கே? கற்பனை குதிரை இடக்கு பண்ணுகிறதே, என்ன செய்வேன்?.சுவையான கதைகளை தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கும் மெஷினாக இயங்கும் உங்கள் வேகத்தைப் பார்த்து நான் பொறாமைதான் பட இயலும்.வாழ்த்துக்கள் நண்பா!.

    1. Avatar
      ushadeepan says:

      உங்கள் எழுத்தின் வகைமாதிரி வேறு. என் எழுத்து வேறு. உங்கள் வழியில் உங்களால் நிறைய எழுத முடியும். அழுத்தமாக விஷயத்தை முன் வைப்பவராயிற்றே நீங்கள். ரெண்டு மூணுதரமல்லவோ படிக்க வேண்டும் உங்கள் படைப்பை. எழுதிக் கொண்டேயிருங்கள். எங்கேனும், என்றேனும் ஒரு நாள் பரவலான அடையாளம் கிடைக்காமலா போகும். அப்படியில்லையென்றாலும் போகட்டுமே…! என்னவோ என் மன அரிப்புக்காக எழுதினேன். நாலு பேராவது படித்து உணர்ந்திருப்பார்கள் அல்லவா? அந்த அளவில் திருப்திப் பட்டுக் கொள்ளலாம். நன்றி. உஷாதீபன்

Leave a Reply to bandhu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *