ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை

This entry is part 6 of 22 in the series 15 செப்டம்பர் 2013

அதிகாலை நேரம்.

 

சார்லஸ் தூக்கிக் கொண்டருக்கும் மகனின் பக்கம் சென்று, “பாவ் பாவ், விடிச்சிடுச்சு. எழுந்திரு, எழுந்திரு!” என்று உரக்கக் கத்தினார்.

 

பாவ்வுக்கோ நல்ல உறக்கம்.

 

எழலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையிலேயே,  போர்வை வேகமாக இழுக்கப்பட்டது.

 

பல முறை இப்படி இழுக்கப்பட்ட போது பாவ் தலை குப்புற விழுந்திருக்கிறான்.  பல முறை தலை தரையில் படாமல் தப்பிக்கப் பல சாகசங்களைச் செய்யதிருக்கிறான். இப்போது பழகிவிட்டிருந்ததால், தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு எழுந்தான்.

 

சார்லஸ் சான் சீனாவின் “கிழக்கு நாடுகளின் முத்து” என்று அழைக்கப்படும் சான்காய் நகரில் வாழ்ந்த போது, மிகவும் நல்ல நிலையில் இருந்தவர். அனைவரும் போற்றும், வீரமிக்க, பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். குங்பூ  கலையை நன்கு கற்றவர்.

 

கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும், தன்னுடைய கடந்த கால வாழ்க்கை முறையின் பயனாக, அவற்றை எதிர்கொண்டு வாழக் கற்றிருந்தார் சார்லஸ் சான். குப்பைகளில் கிடைத்தப் பொருட்களைக் கொண்டு, உடற்பயிற்சிச் சாதனங்களைச் செய்து வைத்து இருந்தார்.

 

பாவ் நன்கு நடக்கவும் ஓடவும் பழகியவுடனேயே, பயிற்சி தர ஆரம்பித்தார். மேலே குறிப்பிட்டிருந்ததைப் போல சூரியன் எழும் முன்பே எழுப்பி, பாவ்வை பலசாலியாக்கும் வண்ணம், எளிதான உடற்பயிற்சிகளைச் செய்ய வைத்தார். சண்டைப் போடவும், எதிரியை வீழ்த்தும் உத்திகளையும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

பன்னிரண்டு மாதங்கள் தாயின் வயிற்றிலேயே இருந்து, நன்கு உண்டு, உறங்கி, அதிக சக்தியை திரட்டிக் கொண்டு பிறந்த நம் சாகச நாயகனின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் வித்தியாசமானவே இருந்தது.

 

பிரன்சுத் தூதுவரின் வீடு, பற்பல தூதுவர்களையும் விருந்தினர்களையும் சந்திக்க வசதியாக பெரிய  அறைகள் கொண்டதாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது.  சார்லஸ் சான் தம்பதியினர் அந்த  தூதுவரின் வீட்டில் வேலை செய்ததால், அவர்கள் அந்த வீட்டின் ஒரு பகுதியில் இருந்த அறையிலேயே தங்கினர்.

 

வீட்டின் கீழ்தளத்தில் சமையல் அறை.

 

அவர்கள் மூவரும் சமையலறையிலிருந்து சற்று தொலைவில் இருந்த சிறிய அறையில் தங்கியிருந்தனர். அந்த அறை வெகு சுத்தமாக இருந்தது. அது சன்னல்கள் எதுவும் இல்லாமல், விளக்குப் போட்டால் மட்டுமே வெளிச்சம் தரும் அறையாக இருந்தது. அறையில் மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தன. சார்லஸ் சான் தனக்குக் கிடைத்த மரக்கட்டைகளை வைத்து, அவரே செய்த அடுக்குக் கட்டில், மேஜை, ஒரு இரும்புப் பெட்டி. அவ்வளவே. அந்தக் கட்டிலின் கீழே பாவ்வும், அதன் மேலே பெற்றோரும் உறங்குவர்.

 

எப்போதும் எதையாவது சமைத்துக் கொண்டே தன் வேலையை சார்லஸ் சான் செய்யும் நேரத்தில், லீ லீ சான் வீட்டில் இருப்பவர்களின் ஆடைகளையும், பல்வேறு அறைகளில் பயன்படுத்தும் மெத்தை உறைகளையும்  தலையணை உறைகளையும் சன்னல் திரைகளையும் துவைத்துக் காயப் போட்டு, இஸ்திரி செய்து மடித்து வைக்கும் வேலையைச் செய்த வண்ணம் இருப்பார்.

 

அவர்கள் இந்த வேலைகளைச் செய்யும் சமயம் நம் சாகச நாயகன் என்ன செய்வார் தெரியுமா?

 

தவழ ஆரம்பித்ததுமே, இருக்கும் துணிகளை இப்படி அப்படி எடுத்து எறிந்து கொண்டும், துணிகளால் தன்னைச் சுற்றித் கொண்டும், சிறிய சோப்புத் துண்டுகளை வாயில் போட்டுக் கொண்டும், தாயின் காலடியை சுற்றிச் சுற்றி வருவான். துணிகளைத் துவைக்க சூடு நீர் வைத்து  அதை தொட்டியில் விட எடுத்துச் செல்லும் போது, தாயை வழிமறித்து ஓடி பயமுறுத்துவதும் உண்டு. தாயை வெகுவாகப் படுத்தும் குழந்தையாக இருந்தான் பாவ். இரவு முழுவதும் அழுது, வீட்டில் உள்ளவர்கள் எல்லோரையும் எழுப்பி, பெற்றோருக்கு திட்டு வாங்கித் தருவான். குழந்தையை அமைதிப்படுத்த, தாய் மிகவும் மெல்லிய குரலில் பாடி, தூங்க வைப்பார்.

 

எத்தனைத் தொல்லை கொடுத்தாலும், தாய் மன அமைதி வேண்டும் என்று எண்ணும் போது, பாவ்வை சந்தோஷப்படுத்த, துணி துவைத்துக் கொண்டு இருக்கும் போதே, அதன் அருகே ஒரு சிறிய நீர்த் தொட்டியில் விட்டு விடுவார். அவன் நீரை இங்கும் அங்கும் வாரி இறைத்துக் கொண்டு விளையாடுவான்.

 

பிரன்சு தூதுவர் மிகவும் இளகிய மனம் படைத்தவர். மற்ற உயர் அதிகாரிகள், பணக்காரர்கள் போல் இல்லாமல், தன் குழந்தைகள் பாவ்வுடன் விளையாடுவதை மறுத்துக் கூறியது கிடையாது. பாவ் அவரது மகனுடனும் மகளுடனும் விளையாடுவான். ஆனால் பாவ் அவர்களுடன் விளையாடுவதை மற்ற குழந்தைகள் ஏற்கவில்லை. அதனால் பாவ்வை அவர்கள் அடிக்கடி கேலி செய்வார்கள். பாவ் அதை எப்போதும் பொறுத்துக் கொள்வான்.

 

ஒரு நாள் அவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, ஒரு சிறுவன், தூதுவரின் மகளை கேலி செய்து, கீழே தள்ளி விட்டு விட்டான். இதைக் கண்டதும் பாவ்விற்கு வந்ததே கோபம். அவன் தன்னை விடப் பெரியவன் என்று தெரிந்தும், தைரியமாகச் சண்டைப் போட்டு, உருட்டிப் பிரட்டி, இறுதியில் அவன் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்.

„எனக்கே வெற்றி, எனக்கே வெற்றி… என்று அவன் கத்திக் கொண்டு இருந்த சமயம் சார்லஸ் தன் மகனின் செயலைக் கண்டு கோபம் மிகக் கொண்டார்.

 

குழந்தைக்குச் சண்டைப் போடக் கற்றுக் கொடுப்பது என்ன பலனைத் தரும் என்பதைப் பாவ் செய்து காட்டினான்.

 

வேகமாகச் சென்று, பாவ்வை தரதரவென்று இழுத்துச் சென்றார். பாவ்விற்குத் தான் செய்தது தவறாகத் தோன்றவில்லை.

 

„அப்பா, நான் தானே ஜெயித்தேன்!” என்று கூறிக் கொண்டே சென்றான்.

 

ஆனால் சார்லஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

 

“உனக்குச் சண்டை போட கற்றுக் கொடுத்தது நண்பர்களுடன் சண்டை போடுவதற்கு இல்லை” என்றார்.

 

உடனே பாவ், “அப்பா, அவன் எனக்கு நண்பன் இல்லையே!” என்றான்.

 

“இருந்தாலும், நீ எப்போதும் யாருடனும் சண்டை போடவே கூடாது என்பதற்காகத் தான் சண்டை போடக் கற்றுத் தருகிறேன்” என்று கூறினார்.

 

பேசிக் கொண்டே, சார்லஸ் அவர்களது அறைக்கு அருகே இருந்த குப்பையறையை நோக்கி பாவ்வை இழுத்துச் சென்றார்.

 

“அப்பா.. நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கேட்ட வண்ணம் இருந்தான் பாவ்.

பாவ் சொன்னதைக் கேட்காமல், அறையின் உள்ளே போட்டுப் பூட்டினார்.

 

இருண்ட அறைக்குள் நுழைந்ததுமே சுற்றிப் பார்த்தான் பாவ்.

 

சமைத்த மிச்ச மீதிகளும், இதர குப்பைகளும் இருந்த அந்த மிகச் சிறிய அறையின் மேலே ஒரேயொரு சின்னஞ்சிறு சன்னல் மட்டுமே இருந்தது.

 

பாவ்விற்கு பயமாக இருந்தது. இருந்தாலும் அறைக்கு வெளியே எப்படிச் செல்ல வேண்டும் என்பது தெரியாமல், முழித்துக் கொண்டு இருந்தான். நேரம் ஆகிக் கொண்டே இருந்தது.

 

சாப்பிடும் நேரம் ஆனதுமே, வயிறு கபகபவென்று எரிந்தது. என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை.

 

பாவ்விற்கு உணவு உண்பது மிகவும் பிடித்த விஷயம். எந்த உணவானாலும், ஒரு பிடி பிடிப்பது பழக்கம்.

 

அப்போது, அறைக்கு வெளியே யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. தந்தை கதவைத் திறந்துவிட வந்திருப்பார் என்று ஆவலுடன் பார்த்தான்.

 

அறையின் மேலே இருந்த சன்னலோ மிக உயரத்தில் இருந்தது.

 

பாவ்வின் தாய் மிகவும் குட்டையானவர் என்பதால், சன்னல் எட்டாமல், குதிக்காலில் எம்பி எம்பி, தன்னுடைய விரல் நுனியின் மூலமாக ஒரு உணவுப் பொட்டலப் பையை உள்ளே எறிந்தார்.

 

பாவ்விற்கு இருந்த பசிக்கு வேறு எதையும் யோசிக்காமல், உணவுப் பொட்டலத்தை வேகமாகப் பிரித்து உண்டான். உண்ட பின்பு, இரவில் அந்த அறையிலேயே அப்படியே உறங்கிப் போனான்.

கதவின் மேல் சாய்ந்து கொண்டே உறங்கியதால், காலையில் எப்போதும் கூறும் அதிகாலைக் கூற்றைக் கூறிக் கொண்டே தந்தை கதவைத் திறந்த போது, அப்படியே வெளியே விழுந்தான். முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல், தந்தை அவனை அழைத்துச் சென்று, அன்று குவிந்து இருந்த குப்பைகளை வாரிப் போட உதவி செய்யச் சொன்னார். அதைச் செய்து முடிக்கவும், சூரியன் உதிக்கவும் சரியாக இருந்தது. இருவரும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தனர்.

ஜாக்கி சான் இன்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.  இந்த தன் ஆரம்ப கால நாட்களை நினைவு கூர்வது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.

 

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜிடௌரி தராத கௌரி கல்யாணம் ……19
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *