ஜென் ஒரு புரிதல் – பகுதி 24

This entry is part 5 of 29 in the series 25 டிசம்பர் 2011

 

நடு வயதைக் கடந்த பிறகு விரும்பியதைச் சாப்பிட முடியவில்லை என்னும் மனக் குறை அனேகமாக எல்லோருக்குமே இருக்கிறது. இது ஒரு பானைச் சோற்றில் ஒரே ஒரு பருக்கை தான். மனக் குறைகள் நிறையவே இருக்கின்றன. அவை என்றுமே தீராதவை. புதிது புதிதாக வளர்பவை. குறைகளும் ஆசைகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும் ஒன்றாக இருந்தே தீரும். ஒரு மனதின் சம நிலை மிகவும் பாதிக்கப் படுவது இந்த இரண்டினால் தான். மாற்றுத் திறனாளிகள் தமது வித்தியாசமான உடல் அமைப்புடன் வாழப் பழகி விடுவது போல நாமும் சமநிலையை பாதிக்கும் ஆசைகளும் குறைகளும் ஆழ்ந்த அனுபவம் எதையுமே அண்ட விடாமல் செய்து விடுவதை உணர்ந்து அவற்றோடு வாழ்ந்து அவற்றை மீறி ஆன்மீக அனுபவங்களை நோக்கி நகருவது ஒன்றே வழி.

ஆன்மீகத் தேடலுக்கு கண்டிப்பாக மிகவும் தேவைப் படுவது திடமான முடிவு. அது ஒன்றே போதுமானது. ஆனால் ஆரம்ப காலத்தில் (சற்றே நீண்டதாக அமையலாம்) தனிமையே நல்லது. தேடலில் உள்ளவர் இயங்க வேண்டிய சூழலும், சுற்றுப் புறமும் மற்றும் பழகும் மனிதரும் சாதகமாக அமையாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருப்பது மிகவும் அவசியம். மலைப்புறத்தில் அமைதியில் தனிமையில் எழுதப்பட்ட பல ஜென் பதிவுகளில் இவற்றை நாம் காண்கிறோம்.

மலினப் படுத்தப்பட்டவற்றில் கலையும் ஆன்மீகமும் பெருத்த அடி வாங்கியதைக் காண்கிறோம். சினிமாக்காரர்கள் தங்களைத் தாங்களே கலைஞர்கள் என்று கூறிக் கொண்டு பட்டங்களையும் ஒருவருக்கொருவர் வாரி வழங்கிக் கொள்வதைப் போல் ஆன்மீகம் இடைத் தரகர்கள் வழி கிடைப்பது என்று மலினப் படுத்தப் பட்டுள்ளது.

ஆன்மீகம் தேடும் ஒரு தாகம் இதயத்தின் ஆழத்தில் நீறு பூத்த நெருப்பாய் என்றுமே இருக்கிறது. அது எப்போது கொழுந்து விட்டு எரியுமோ அப்போது ஒரு தனி மனிதனுக்கு பொற்காலம். தன்னுடைய அடையாளத்தைப் பிறரின் வழி புரிந்து நகல் கனவுகளுடன் வாழும் ஒரு தனி மனிதன் கானல் நீர்க் காட்சிகளாக புற உலகில் தான் தேடியவை யாவுமே நிலையற்றவை என்று புரிந்து நிலையானதைத் தேடும் போது நிகழும் புரிதல் பல நிலைகளில் மேம்படுகின்றது. ஆனால் அந்தப் புரிதல் ஒவ்வொரு நிலையிலும் அவனுக்கு வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கிறது. அதாவது வைரத் துண்டுகள் ஒவ்வொன்றும் ஜொலிப்பது போல பூரணமான விழிப்பை ஞானததைத் தேடும் அனுபவத் தடத்தின் ஒவ்வொரு நிலையும் அவனை உயர்ந்த தளத்தில் நிலை நிறுத்துவதை அனுபவிக்கிறான். அசலின் ஒவ்வொரு பகுதியும் அசலானதே. முழுமையின் ஒவ்வொரு துண்டும் பூரணமானதே .

பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “ஷிஹ்ஷு ” வின் பதிவுகளை வாசிப்போம்:

மென்மையாய் வீசும் வசந்தத்தின் காலைப் பொழுதில்
————————————————————-

மென்மையாய் வீசும் வசந்தத்தின் காலைப் பொழுதில்
திமிருடன் கடந்து செல்லும் ஒரு குதிரை வண்டியின் ஒலி
“பீச்” பூக்கள் தொலை தூர கிராமத்திலிருந்து அழைக்கின்றன
“வில்லோ” மரக் கிளைகள்
என் சுனையின் தோள்களைத் தடவி விடுகின்றன

சுனையில் மீன்கள் தங்கள் தங்க நிறத் துடுப்புகள் மின்ன
ஒன்றாய்த் திரியும் வாத்துகள் வேலைப் பாடு செய்யப் பட்ட
அழகுச் சிறகுகளுடன்
கவிஞன் சில நேரம் இப்பக்கம் சில நேரம் அப்பக்கம்
என வெறித்த படி
சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒரு
வலையில் அகப்பட்டு

—————————————————————

ஒடும் நீரெல்லாம் பனிமூட்டத்தில் சென்று மறைகையில்
நாம் அவற்றின் தடத்தை நழுவ விட்டு விடுகிறோம்
ஒவ்வொரு இதயமும் தனக்குத் தானே புத்தர்
ஒரு துறவியாக நீ எதுவும் செய்ய வேண்டாம்

புரிதல்: உலகம் புழுதி உருண்டை
சொர்க்கத்தின் வட்ட வடிவக் கண்ணாடி ஊடே
எல்லா உருவங்களையும் பருமன்களையும் கடந்து
“தாவோ” வைத் தவிர வேறு எதுவும் அருகிலில்லாமல்
ஒன்றுமின்மையுடன் அமர்வாய்
(‘தாவோ’ என்பதற்கு வழி என்றே சீன பாஷையில் பொருள். தத்துவம்
என்று ஒரு பொருளும் பௌத்தத்தில் உண்டு)

————————————————————————————–

வெற்றிடம் என்பது
வானத்தையும் பூமியையும் விழுங்கி விடும்
ஒரு நீண்ட கதை
சிதறிய மையை அவதானி
இரண்டு டிராகன்களாக ஆகியிருக்கும்
அலையும் மேகங்கள் கருநீல நிற நாய் வடிவில்

—————————————————————————————

மலையின் ஒலிகள் ஒரு சில்லிடும் மெய்யறிவைச் சுமக்கின்றன
பிரவாகித்து வரும் வசந்தம் நுட்பமான கதைகளை முணுமுணுக்கும்
பைன் மரத்திலிருந்து வரும் தென்றல் மென்மையாய்
என் தேனீருக்கு அடியில் இருக்கும் தீயை அசைக்கும்
மூங்கில்களின் நிழல்கள் என் அங்கிகக்குள்
ஆழ்ந்து மறையும்

நான் என் எழுது மையை அரைத்துக் கொண்டிருக்கிறேன்
மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் மேகங்கள்
ஒரு கவிதையைப் பிரதி எடுக்கின்றன
பறவைகள் மரக் கிளைகளில் சேருகின்றன
நகரும் உலகம் ஒவ்வொரு திருப்பத்திலும்
செயல் அல்லாததைத் தேடிக் காண்கிறது

—————————————————————————————-
‘செய்ய ஏதுமில்லை; இழக்க ஏதுமில்லை’
மலர்களிடையே கருக்கும் மேகங்கள்
பைன் மரங்களுக்கு மேலே முழுகும் சூரியன்
பறவைகளின் அவசர அழைப்பில் வசந்தம் ஆழ்கிறது
மாரிக்காலம் பூச்சிகளின் குரலை நிராகரிக்கிறது
விடியல்: இருள் இருளுள் சுற்றி வைக்கப் படுவது
இதுவே எல்லாத் தேடல்களின் முடிவாகும்

—————————————————————————————-

Series Navigationப்ளாட் துளசி – 2கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2
author

சத்யானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    yousuf Rowther Rajid says:

    ஆடம்பரமில்லாத சிந்தனையைத் தூண்டும் அமைதியான உண்மைக் காட்சிகள். பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *