ஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘

This entry is part 28 of 40 in the series 1 ஏப்ரல் 2012

தமிழில் சிறகு இரவிச்சந்திரன்

ஜெரமியால் நம்பவே முடியவில்லை. அவனுக்கெதிரே அரபெல்லா உட்கார்ந்திருந்தாள். அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற பெண். ·பியான்சி! அவர்கள் ரிட்ஸ் ஓட்டலில் உட்கார்ந்திருந்தார்கள். சுற்றி இருந்தவர்களெல்லாம், அவளைப் பார்த்தும், கையசைத்தும், பறக்கும் முத்தங்களை தந்தும் கொண்டிருந்தார்கள். அவள் சொன்னது போல இது அவளுடைய ‘ செட் ‘. அவள் அடிக்கடி இங்கே வந்து பழக்கப்பட்டவளாக இருந்தாள். வழக்கமாக வருபவர்களுக்கு அவளை நன்றாகத் தெரிந்திருந்தது.

ஜெரமி அவளை முதலில் ஆஸ்காட் குதிரைப் பந்தய மைதானத்தில் தான் சந்தித்தான். அவள் மன்னர் அரங்கில் இருந்தாள். இவன் வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந் தான். மெல்ல எழுந்து அவள் வெளியே வந்தாள். இவனைப் பார்த்து சிரித்தாள். கடந்து போகும்போது ‘ ட்ரம்பெட்டரை நம்பு ‘ என்று சொல்லிவிட்டு போனாள். அவன் அவளை நம்பினான். எப்போதும் கட்டும் பத்து பவுண்டை விட, இருபது பவுண்ட் கட்டினான். ட்ரம்பெட்டர் ஐந்துக்கு ஒன்று என்று வென்று விட்டது. நூறு பவுண்ட்! அடுத்த பந்தயத்திற்கு அவளைத் தேடினான். எங்கும் காணவில்லை. சுற்றிப் பார்த்த போது, ஒரு உயர மனிதனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவன் குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான். இவனைப் பார்த்தவுடன் சற்று விலகி அவனிடம் வந்தாள்.

‘ நான் சொன்னபடி செய்தீர்களா? ‘

‘ ஆமாம்.. எப்படி உங்களுக்குத் தெரியும். ‘

‘ அது என் தந்தையின் குதிரை! ‘

‘ மீண்டும் அதிலேயே கட்டிவிடவா? ‘

‘ நிச்சயமாகக் கூடாது.. எப்போதுமே ஒரு குதிரையையே நம்பக்கூடாது. என்னை டின்னருக்குக் கூட்டிப் போகும் அளவிற்கு வென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘

சிறிது நேரத்திற்கு ஜெரமிக்கு பேச்சே வரவில்லை. ‘ எங்கு போக விரும்புவீர்கள்? ‘ என்று திக்கினான்.

‘ தி ஐவி.. எட்டு மணிக்கு.. என் பெயர் அரபெல்லா வார்விக் ‘

0

ஐவியில் ஒரு மேசையை முன்பதிவு செய்யப் போனபோது, ஒன்று கூட இல்லை என்றார்கள். அவள் பெயரைச் சொன்னவுடன், மந்திரம் போல ஒரு மேசை அவனுக்கு ஒதுக்கப்பட்டது.

உணவுக்கப்புறம், அவன் எண்ணத்தில் அது கொஞ்சம் விலை அதிகம்தான், அவளை வீட்டில் விடப்போனான் ஜெரமி. காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று மேலே அழைத்தாள். அவளுடனேயே தூங்கி, காலையில் வீட்டுக்குப் போகும்போது, அவனால் நம்பவே முடியவில்லை. முதல் சந்திப்பிலேயே ஒரு பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது அவனுக்கு இதுதான் முதல் முறை. ‘ செட் ‘ டுகள் இப்படித்தான் இருப்பார்கள். இதோடு முடிந்து விடும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஆனால் அவன் எண்ணம் பொய்த்துவிட்டது. அதற்கப்புறம் ஒரு நாள் கூட அவர்கள் பார்க்காமல் இருந்ததில்லை. எல்லாமே படுக்கையில் முடிந்தது இன்னமும் ஆச்சர்யம். ஒரு நாள் முழங்காலிட்டு ‘ என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா ‘ என்று அவன் கேட்டபோது அவள் ஒப்புக் கொண்டதுதான் அதைவிட அதிசயம்.

0

‘ நாளைக்கே மோதிரம் வாங்கப்போகிறேன். ‘

‘ மிகச் சிறந்த மோதிரத்தைத் திருடலாம் என்கிறபோது, எதற்கு விலை கொடுத்து வாங்க வேண்டும். ‘

அப்போதே அவன் விலகியிருக்க வேண்டும். ஆனால் அவள் மீதான போதை அவனை விலக விடவில்லை.

‘ எதைத் திருடச் சொல்கிறாய்? ‘ என்றான் விளையாட்டாய்.

டி பியர்ஸ் நிறுவனத்தின் விலைப்பட்டியலை எடுத்தாள். பக்கம் 48ல் இருந்த மோதிரம் ஒன்றைக் காண்பித்தாள். ‘ இதன் பெயர் கேண்டிஸ் வைரம் ‘ என்றாள்.

அவள் ஏதோ அவனைக் கேலி செய்கிறாள் என்றே ஜெரமி எண்ணினான்.

‘ எப்படி நான் அதைத் திருடப்போகிறேன் என்று திட்டம் தீட்டிவிட்டாயா? ‘

‘ அது ரொம்ப சுலபம். நான் சொல்வது மாதிரி நீ நடந்து கொண்டால் போதும். அவள் தன் திட்டத்தைச் சொல்லும் வரை அவன் பேசவேயில்லை.

0

ரிட்ஸ் ஹோட்டலுக்குக் காலையிலேயே வந்துவிட்டான் ஜெரமி. அவனிடம் இருந்த ஒரே சூட்டை அணிந்து கொண்டிருந்தான். கையில் கட்டியிருந்த கார்ட்டியர் கடிகாரமும் கழுத்தை அலங்கரித்த விலையுயர்ந்த ஈடோனியன் டையும், வைர க·ப் லிங்சும் அரபெல்லாவின் தந்தையினுடையது.

‘ இரவுக்குள் இதை எல்லாம் நான் திரும்ப வைத்து விடவேண்டும். இல்லையென்றால் அப்பா கண்டுபிடித்துவிடுவார். ‘

‘ நிச்சயமாக ‘ என்றான், இது வரை பணக்காரப் பொருட்களை அணியாத ஜெரமி.

‘ நீ தயாராகி விட்டாயா? ‘ என்றாள் காபி குடித்துக் கொண்டே அரபெல்லா. அவள் கால்கள் லேசாக அவன் கால்களை உரசின. அங்கேயே அவன் முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

ஜெரமி எழுந்த வெளியே வந்தான். உடைகளைச் சரி செய்து கொண்டான். கோட் பையிலிருந்த பெரிய பபுள்கம்மை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தான். போக்குவரத்து கொஞ்சம் ஓய்ந்தபோது, சாலையைக் கடந்து டீ பியர்ஸ் வைரக் கடைக்குப் போனான்.

‘ யார் வேண்டுமானாலும் உள்ளே போய்விடமுடியாது. உன்னை எடை போட்டுவிட்டு, நீ தகுதியானவன் என்று தெரிந்த பிறகுதான், உள்ளேயே விடுவார்கள். அப்பாவின் கடிகாரத்தைப் பார்த்தவுடன், அவர்களுக்கு அந்த சந்தேகமெல்லாம் போய்விடும். ‘

அரெபெல்லா சொன்னதுபோலவே நடந்தது. அவன் இப்போது தனியறையில் உட்கார்ந்திருந்தான். அவன் எதிரில் கறுப்பு வெட்வெட் துணியால் மூடப்பட்ட மேசை இருந்தது.

‘ என் பெயர் க்ரோம்பி. ஏதாவது சாப்பிடுகிறீர்களா? காபி? ‘

ஜெரமிக்கு நேரத்தைக் கடத்துவதில் நாட்டமில்லை. நேரமாக நேரமாக அவன் துணிவு குறைந்து கொண்டே வரும் என்று அவன் நினைத்தான்.

‘ எனக்கு நிச்சயம் ஆகியிருக்கிறது. ஒரு கல்யாண மோதிரம் வாங்கலாம் என்று வந்தேன். ‘

க்ரோம்பி மேசைக்கு அடியிலிருக்கும் பொத்தானை அழுத்தினான். சில நிமிடங்களில் வேலையாள், ஓக் மரத்தாலான அழகிய பெட்டி ஒன்றை அவர்கள் முன் வைத்தான். அவன் அறையை விட்டு வெளியேறும் வரை, க்ரோம்பி காத்திருந்து விட்டு, இடுப்பு சங்கிலியில் இருந்து ஒரு சாவியை எடுத்து, பெட்டியைத் திறந்தான்.

ஜெரமி அசந்து போய்விட்டான். அவன் இம்மாதிரி வைரங்களைப் பார்த்ததேயில்லை. அவன் வெளியிலிருந்து, கண்ணாடி வழியாகப் பார்த்த ஹெச். சாமுவேல் கடை வைரங்கள், இவைகள் அருகில் கூட நெருங்க முடியாது.

‘ எதை முதலில் எடுக்கிறாய் என்பதில் கவனம் வேண்டும். அதை வைத்துதான் உன் அந்தஸ்தைக் கடைக்காரன் கணிப்பான், உன்னைக் கேட்காமலே ‘

ரொம்பவும் பரிசீலனை செய்வதாகப் பாவித்து மூன்று சிறிய வைரங்கள் பதித்த தங்க மோதிரம் ஒன்றைக் கையிலெடுத்தான் ஜெரமி.

‘ நூற்றி இருபத்துநாலு ஆயிரம் ‘ என்றான் க்ரோம்பி. அதைத் திரும்ப வைத்து விட்டான் ஜெரமி. அவன் கவனம் மேல் வரிசைக்குப் போனது. சிறிது யோசனைக்குப் பின் வட்ட வடிவமாகப் பதித்த வைரங்கள் உள்ள மோதிரத்தைத் தேர்வு செய்தான் ஜெரமி.

‘ இருநூற்றி அறுபத்தொன்பது ஆயிரம் ‘ அதையும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டான் ஜெரமி. க்ரோம்பி முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது. சரியான பார்ட்டி தான். பெரிய வியாபாரம்.

இம்முறை முதல் வரிசையில் இருந்த பெரிய தனி வைர மோதிரத்தை எடுத்தான் ஜெரமி. கையில் வைத்து கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘ பதினெட்டு புள்ளி நான்கு கேரட் வைரம். சமீபத்தில் எடுக்கப்பட்டது. அமெரிக்காவின், விலை உயர்ந்த கற்களை மதிப்பிடும் கழகம், இதற்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறது. எங்களது சிறந்த பொற்கொல்லர்கள் இதை வெட்டி வடிவமைத்து இருக்கிறார்கள். பிளேட்டினத்தில் பதிக்கப்பட்டு இருக்கிறது இது. எண்ணூற்றி ஐம்பத்தி நான்கு ஆயிரம் பவுண்டுகள்..’

‘ இதை நான் ஆராய வேண்டும். உங்களிடம் லூவ்ப் இருக்கிறதா? ‘ என்றபடியே மோதிரத்தை க்ரோம்பி கையில் கொடுத்தான் ஜெரமி. மீண்டும், பெட்டியில் அதன் இடத்தில் வைத்துவிட்டான் க்ரோம்பி.

‘ நகை வியாபாரிகள் பூதக்கண்ணாடியை ‘ லூவ்ப் ‘ என்றுதான் அழைப்பார்கள். அந்தப் பெயரைச் சொல்வாயானால், நீ அடிக்கடி நகை வாங்குபவன், விவரம் தெரிந்தவன் என்று கடைக்காரன் நம்பிவிடுவான். ‘

க்ரோம்பி பக்கவாட்டு மேசை அறையைத் திறந்து, சிறிய ஆமை ஓடு போன்ற பூதக்கண்ணாடியை எடுத்தான். நிமிர்ந்த போது அந்த பெரிய வைர மோதிரத்தைக் காணவில்லை.

க்ரோம்பி பதட்டமானான். ‘ சார்.. மோதிரம் உங்களிடம் இருக்கிறதா ‘ என்றான்.

‘ அப்போதே உங்களிடம் கொடுத்து விட்டேனே! ‘

க்ரோம்பி பட்டென்று பெட்டியை மூடினான். மேசைக்கடியிலிருக்கும் அழைப்பானை அழுத்தினான். இரண்டு தட்டை மூக்கு தடியன்கள் உள்ளே வந்தார்கள். ஒருவன் கதவருகில் நின்று கொண்டான். இன்னொருவன் ஜெரமி பின்னால் நின்று கொண்டான்.

‘ மோதிரத்தை தயவு செய்து கொடுத்து விடுங்கள். நாங்கள் போலீஸ¤க்கு போக மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். கொடுக்கவில்லையென்றால்.. ‘

‘ அந்த மோதிரத்தை உன்னிடம் கொடுத்து விட்டேன். அதுதான் கடைசியாக அதை நான் பார்த்தது. ‘ எழுந்திருக்க முயன்ற ஜெரமியை ஒரு கை தோளில் வைத்து அழுத்தியது. தட்டை மூக்கு தடியன்! மீண்டும் உட்கார்ந்து கொண்டான் ஜெரமி.

‘ எதிர்ப்பைக் காட்டாதே. எதுவும் வன்முறை இருக்காது. அவர்கள் சொல்வதுபோல் நடந்து கொள். ‘ அரபெல்லாவின் வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.

‘ என்னுடன் வாருங்கள் ‘ என்றபடி க்ரோம்பி எழுந்தான். ஒரு தடியன் கதவைத் திறந்து, ஜெரமியைக் கூட்டிக் கொண்டு போனான். இன்னொரு தடியன் ஒரு அடி பின்னால் தொடர்ந்தான்.

வராண்டாவின் கோடியில் ‘ தனியறை ‘ என்று எழுதப்பட்ட அறைக்குள் ஜெரமியை அழைத்துப் போனார்கள். அந்த அறையில் ஒரு மேசை இருந்தது. ஆனால் அதன் மேல் வெல்வெட் துணி மூடியிருக்கவில்லை. மேசைக்கு அருகில் ஒருவன் உட்கார்ந்திருந் தான். இந்த முறை யாரும் ஜெரமியை உட்காரச் சொல்லவில்லை. அந்த அறையில் இன்னொரு நாற்காலி இல்லை.

‘ என் பெயர் க்ரேங்கர். டீ பியர்சில் பதினான்கு வருடங்களாக பாதுகாப்பு அதிகாரி யாக இருக்கிறேன். அதற்கு முன்னால் இந்த நகரத்தின் துப்பறியும் அதிகாரியாக இருந்திருக்கிறேன். நான் கேட்காத கதை, பார்க்காத விசயம் இல்லை. அதனால் இதிலிருந்து தப்பித்து விடலாம் என்று ஒருபோதும் எண்ணிவிடாதே இளைஞனே!’

சாரிலிருந்து மரியாதை இளைஞனே என்று இறங்கி விட்டதை ஜெரமி கவனித்தான்.

‘ எங்களோடு ஒத்துழைக்கப்போகிறாயா? அல்லது நாங்கள் போலீசுக்குப் போகலாமா? அப்படிப்போனால், உனக்கென ஒரு வக்கீலை நியமிக்க உனக்கு உரிமை உண்டு. ‘

‘ எனக்கு பயமொன்றுமில்லை. உங்களோடு ஒத்துழைப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ‘ அரபெல்லா சொல்லிக்கொடுத்த வசனம்!

‘ அப்படியிருக்கும் பட்சத்தில் உன் உடைகளைக் கழற்றி விடுகிறாயா.. கூடவே உன் ஷ¥க்களையும். ‘

கேங்கர் ஒவ்வொரு உடையாக சோதித்தான். பேண்ட் பைகளை, சட்டைப் பைகளை, டையைக் கூட விடவில்லை. ஜட்டியைக் கழற்றிச் சோதித்தான். சாக்சைக் கூட! க்ரேங்கர் அவன் பின்னால் வந்து நின்றான். இரு கைகளையும் தூக்கி அவன் முடியை பிரித்து சோதித்தான். கைகளைத் தூக்கச் சொல்லி அக்குள்களை, கால்களைத் தூக்கச் சொல்லி பாதங்களை, வாயத்திறக்கச்சொல்லி உள்நாக்கு வரை ஆராய்ந்தான்.

‘ நான் என் உடைகளைப் போட்டுக்கொள்ளலாமா? ‘

‘ இன்னும் இல்லை ‘ க்ரேங்கர் அவனை அடுத்த அறைக்குள் கூட்டிப்போனான். நீண்ட வெள்ளைக் கோட் அணிந்த ஒருவன், அவனைப் படுக்க வைத்து எக்ஸ்ரே படம் எடுத்தான். அந்த வைர மோதிரம் எங்கேயுமில்லை.

ஜெரமி உடையணிந்து கொண்டான். க்ரோம்பியைப் பார்த்து ‘ என் வக்கீலிடமிருந்து செய்தி வரும் ‘ என்று மிரட்டலாகச் சொல்லிவிட்டு, வெளியே வந்து, சாலையைக் கடந்து, ரிட்சில் அரபெல்லா எதிரில் உட்கார்ந்தபோதுதான், அவன் சமநிலைக்கு வந்தான்.

‘ எதுவும் குழப்பமில்லையே? ‘

‘ நீ சொன்ன படியே நடந்தது! ‘

‘ இப்போது என் முறை.. ஆனால் அதற்கு முன்னால் என் தந்தையின் பொருட்களை கொடுத்து விடு. அவர் கண்டுபிடிப்பதற்குள், உரிய இடத்தில் வைத்து விடவேண்டும். ‘

0

அடுத்த சில நிமிடங்களில் அரபெல்லா டீ பியர்ஸ் கடைக்கு முன்னால் இருந்தாள். அழைப்பு மணியை அழுத்தியவுடனே கதவு திறக்கப்பட்டது. அவள் அணிந்திருந்த உயர்ரக வாட்சும் நகைகளும் செய்த மேஜிக் அது.

‘ கல்யாண மோதிரங்களைப் பார்க்க வேண்டும். ‘

ஜெரமி செய்த அத்தனை செய்கைகளையும் அரபெல்லா அதே வரிசையில் செய்தாள். கடைசியில் எதுவும் முடிவு செய்யாமல், தன் கணவனாகப் போகிறவனைக் கூட்டி வருவதாகச் சொல்லி வெளியேறினாள். வெளியே வந்தவுடன் ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டாள். தன் வீட்டு முகவரியைச் சொல்லிப் போகச் சொன்னாள். அப்பா வருவதற்குள் எடுத்த பொருட்களை எல்லாம் வைத்துவிடவேண்டும் என்கிற அவசரம் அவளுக்கிருந்தது. கைப்பையிலிருந்து அந்த பெரிய மஞ்சள் வைர மோதிரத் தைக் கையிலெடுத்து ரசித்துப் பார்த்தாள்.

தன் நண்பர்களிடம் ஜெரமியுடனான திருமணம் நின்று போனதைச் சொல்லவேண்டும். பாவம் ஜெரமி. நல்ல ஆள். அதுவும் படுக்கையில் வெகு சுவாரஸ்யம். ஆனால் அவன் தன் ‘ செட்டில் ‘ சேர அருகதையில்லை. ரிட்ஸ் ஓட்டல் பில் கட்ட அவனிடம் பணம் இருக்குமா என்று யோசித்தாள். உடனே அந்த எண்ணத்தைக் களைந்தாள்.

அவள் மனம், விம்பிள்டனில், தான் சந்திக்கப் போகும், வேறு ஒருவனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தது. அவன் தான் இந்த மோதிரத்திற்கு ஜோடியாக, வைரக் கம்மல்களை திருடி, இவளிடம் தரப்போகிறவன்!

0

க்ரோம்பி கடையை விட்டபோது இரவு மணி ஒன்பது. அதுவரைக்கும், எப்படி அந்த மோதிரத்தை ஜெரமி திருடினான் என்று அவனால் யூகிக்கவே முடியவில்லை. டோரிஸ் வாக்குவம் கிளீனருடன் உள்ளே வந்தாள். க்ரோம்பிக்கு தினமும் அந்த அறையைத் துடைக்க வேண்டும். தூசி என்பதே ஆகாது அவனுக்கு.

சுத்தம் செய்து கொண்டே வந்த டோரிஸ், மேசைக்கு வந்து, வெல்வெட் துணியை எடுத்து விட்டு அழுந்தத் துடைத்தாள். கையில் ஏதோ நெருடியது. அழுத்திச் சுரண்டிய பிறகுதான் அதை அவளால் வெளியேற்ற முடிந்தது.

‘ என்ன ஒரு அநாகரீகமான பழக்கம் ‘ என்று சுரண்டி எடுத்த பப்புள்கம்மை குப்பைக் கூடையில் போட்டாள்.

0

Series Navigationஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Punai peyaril says:

    Good…. Interesting… Nice translation. This is ur strength. Dont waste ur time in cinema vimarsanam, tamil movies are not worth for ur time. Cocentrate on ur translation work… Best of luck. U can fill ra.ki.rangarajan’s absence.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *