ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை

author
0 minutes, 16 seconds Read
This entry is part 28 of 29 in the series 19 ஜூலை 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

‘ ஜெயகாந்தன் கவிதைகள் ‘ என்ற தொகுப்பு தொடுவானம் வெளியீடாக வந்துள்ளது. ” எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத சிதைந்த
படைப்புகள் இவை. இதைக் கவிதைத் தொகுதி எனக் கருதி யாராவது விமர்சனம் செய்வார்களேயாகில் அவர்களுக்காக நான் பரிதாபப்
படுகிறேன். ” என்கிறார் ஜெயகாந்தன் தன் முன்னுரையில் ! எதுகை மோனையுடன் சிறு சிறு வடிவங்களில் காணப்படும் இவை நிச்சயம்
உரைநடையல்ல. சொற்கள் கவிதையை நோக்கிப் புறப்பட்டுவிட்டன. இத்தொகுப்பில் சில திரைப்படப் பாடல்களும் உள்ளன. வடிவச்
செம்மையை மறந்து கருத்தை ரசிக்கலாம். நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கணத்திற்கு அடங்கவில்லை என்பதால் அவை புறக்கணிக்கப்பட
வில்லையே ! எனவே கவிதைச் சாயல் கொண்ட இவற்றையும் ரசிக்கலாம். இவை சுமார் 60 ஆண்டுகளில் அவ்வப்போது எழுதப்பட்டவை.

கவிதைகளின் பாடுபொருள் இயற்கை , விமர்சன மறுப்பு , பெண் ரசனை , மற்றும் வாழ்வியல் என விரிகிறது ஓசைக்கு முக்கியத்துவம்
தரும் ஒரு கவிதை நறுக்கு…..
நேசிக்கலாம் நேசம் மிகுந்தால் உன்னைப்
பூசிக்கலாம்
ஏசிக்கலாம் சில நேரம் இனிய கதைகள்
பேசிக்கலாம் பேச்செல்லாம் ஓய்ந்த பின்னே
யோசிக்கலாம் உயிராய்ச்சு
வாசிக்கலாம் உன்னை வீணைபோல் மடியிருத்தி
வாசிக்கலாம்
—— கவிதைத் துறையில் காலடி எடுத்து வைக்கும் தொடக்க நிலையில் இது அமைந்துள்ளது. ஒரு பழம்பாடலை [ ஞானத்திலே …
மோனத்திலே…] நினைவுபடுத்துகிறது. ஓர் ஆணின் வழக்கமான , பெண் ரசனை காணப்படுகிறது.

மெல்லிய தத்துவப்பூச்சுடன் ஒரு கவிதை. ஆசைப்படாவிட்டால் வாழ்க்கை ஏது ? பலருடைய ஆசைகள் இதில் பேசப்படுகின்றன.

கிழவிக்கு கிழவர்மேல் ஆசை – அந்தக்
கிழவர்க்குக் குமரிமேல் ஆசை !
குமரிக்குக் குமரன்மேல் ஆசை – அந்தக்
குமரர்க்குக் கிழவிமேல் ஆசை

ஆசை வளையத்தின் உள்ளே – இவர்
அத்தனை பேரும் அகப்பட்டுக் கொண்டார்

மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றால் அதற்குப் பதிலாக ‘ நடந்தும் பிறந்தும் ‘ என்று தொடங்கும் கவிதை பதில் சொல்கிறது.
நடந்தும் பிறந்தும் ஓடியும் ஊர்ந்தும்
நாமெலாமிங்கு அலைகின்றோம்
இடந்தெரியாமல் முகம் தெரியாமல்
எவரையோ இங்கு தேடுகிறோம்
தடமென ஒன்றில்லை நடந்து நடந்து
தடங்கள் உண்டக்குகின்றோம்

—— கவிதை இதே போக்கில் தொடர்ந்து , இடம் இல்லாமல் இருக்கிறது , நாமே இடம் உருவாக்குகிறோம் , விடம் என்று ஒன்றுமில்லை.,
நாமே விடம் உருவாக்குகிறோம் என்று அமைந்துள்ளது. இறுதியாக ,,,,
மடமென ஒன்றுமில்லை மயிற்சடை யானவர்க்கே
மடங்கள் உண்டாக்குகின்றோம் !
என்று முடிகிறது
…… அடுத்து வெண்பா போல ஒரு செய்யுள்….தளை தட்டவும் செய்கிறது. தட்டாமலும் சில இடங்கள் அமைந்துள்ளன.

பற்றுமில்லை பிடிப்புமில்லை பார்க்கவந்தேன் வேடிக்கை
சற்றும் தகுதியில்லாச் சண்டாளன் – சிற்றூராம்
பூண்டியிலே இருந்து புன்னகையால் பேசுகிற
ஆண்டியிடம் பெறவருவேன் ஆசி !

முதல் வரியில் இரண்டாம் சீர் தளை தட்டுகிறது. ஜெயகாந்தனுக்குச் சாமியார் பற்று உண்டு என்பதற்கு மேற்கண்ட வரிகள் மட்டுமல்லாது
அவரது கதைகளிலும் சாமியார்கள் வருவதுண்டு.
கல்விப் பயன் என்ன ? நாம் கற்றதைப் பிறர் பயன்படுத்திக் கொள்ளும்படிக் காரியம் ஆற்ற வேண்டும் என்கிறார் ஜெயகாந்தன்.
கொள்ளுவன கொள்ளுக
கொண்டபின் கொடுப்பவர் ஆகுக !
தள்ளுவன தள்ளுக
தள்ளியபின் தவமொன்றியற்றுக
சொல்லுவன சொல்லுக
சொல்லாலே ஒருசுடர்தனை ஏற்றுக !
—- இன்னும் ஒரு வரி அமைந்திருந்தால் கவிதை முழுமை கொள்ளும் ! மேற்கண்ட வரிகளில் நெறி காட்டும் போக்கு தெரிகிறது.

புதிய பாதை அமைத்தல் , கடும் உழைப்பால் வெற்றியடைதல் பற்றிப் பேசுகின்றன இரண்டு வரிகள்.
காண்போரின் கண்ணுக்குத் தெரியாத பாலைக்
கறக்க முயன்றவன் நான் !
சாண்போக முடியாத சந்திரனுக்குள்ளே
சரீரம் எடுத்தவன் நான் !
—– ஜெயகாந்தனின் ஆரம்பகால வாழ்க்கை சோதனைக்குரியது. அதனால் மேற்கண்ட வரிகள் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு எனலாம்.
வாழ்க்கைப் பாதை விரும்பியபடியே எல்லோருக்கும் அமைவதில்லை. அதன் மாயப் போக்கில் நாம் சிக்கித் தவிப்பதும் நடைமுறைதான்.
இட்டு நிரப்பிய பின்னும்
இடம் கொஞ்சம் இருக்கிறது
பட்டு அறிந்திட வேண்டுமென்பார் – பட
வேண்டியது பாக்கி இருக்கிறது
கெட்டுத் திருந்திட வேண்டுமென்பார் – நான்
கெடவேண்டியது கொஞ்சம் இருக்கிறது.
சிந்திக்கத் தெரிந்த ஒரு கலைஞன் வாழ்க்கைப் பாதையில் அவன் கால்படும் இடமெல்லாம் படைப்பைத் தூண்டும் இடறும் கல் தட்டுப்படலாம்
மேற்கண்ட கவிதையில் அனுபவம் பேசுகிறது. அதே நேரத்தில் வடிவத்தில் ஒரு போதாமை காணப்படுகிறது.
வாலிபக் குறும்பைச் சொல்கிறது மற்றொரு கவிதை.

தலைவிரிச்சான் தமுக்கடிச்சான்
மாதாகோயில் மணியடிச்சான்
வலைவிரிச்சான் வழிமறிச்சான்
வாடீன்னு கையைப் படிச்சான்
—- ஓசையை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மார்க்ஸ் படத்துடன் உள்ள சமுதாய விடியலை நம்பிக்கையுடன் முன்வைக்கிறது. சொற்கள் வலிமையுடன் அமைந்துள்ளன.

அடிமையின் கண்கள் சிவக்கும் – பல
ஆனைகளின் பலம் பிறக்கும்
பொடிபட விலங்குகள் தெறிக்கும் – இந்தப்
புன்மைச் சிறைகள் திறக்கும்
—- என்று பேசுகிறார், கடைசிச் சொல்லான ‘ திறக்கும் ‘ என்பதற்குப் பதிலாக ‘ நொறுங்கும் ‘ என்று இருக்கலாமா ? உலகம்
பொதுவுடமைக் கொள்கையை ஏற்கும் காலம் வரும் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

கொடிபல உயர்ந்து பறக்கும் – இந்தக்
குவலயம் முழுதும் சிவக்கும் !
அடுத்து , எளிய அழகான சந்தத்தில் ஒரு கவிதை !
முட்டையுடைந்து கண்
மொட்டு மலர்ந்த
மொனச் சிறுகுருவி – உயர்
சட்டை தரித்த
நாள்முத லாயெனைச்
சார்ந்த மனக்குருவி !
—- இதில் பல்வேறு நிலைகள் பேசப்படுகின்றன. காதல் வயப்பட்டதால் ஒருவன் மனம் எப்படித் துயரம் அடைகிறது என்பதை அழகாகச்
சொல்கிறார் ஜெ.
எண்ணக்குருவி ஓர்
பெண்ணின் உறவால்
ஏங்கி அழும் அருவி – விதி
விண்ணிற் பறந்து
சிறகுகள் பிய்த்துயிர்
விட்ட மனக்குருவி !
—— குருவி , தனியாகவே அழகு , அதை மனத்தோடு ஒப்பிட்டாலும் அழகுதான்.

‘ தன் தவறுகளைப் பேசுதல் ‘ என்ற சுய விமர்சன உத்தி அமைந்துள்ள கவிதை ஒன்று நம் கவனத்தை ஈர்க்கிறது.
மூட நினைத்துநான் திறந்துவிட்டேன் – நிர்
மூடருலகமிதை மறந்துவிட்டேன் !
தேட நினைத்துநான் இழந்துவிட்டேன் – எதைத்
தேடுகிறேன் என்றும் மறந்துவிட்டேன் !
பாடநினைத்துநான் உளறிவிட்டேன் – மனப்
பாழின் துயர்க்கதையைக் கிளறிவிட்டேன் !
ஆட நினைத்துநான் அமர்ந்துவிட்டேன் – எனை
ஆட்டிய கயிற்றையும் அறுத்துவிட்டேன் !
கூட நினைத்துநான் குறைந்துவிட்டேன் பெருங்
கூட்ட நெரிசலில் கரைந்துவிட்டேன்

——- இதில் ஜெயகாந்தனின் வழக்கமான உரைநடைக் கம்பீரம் தலைகாட்டாமல் இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
‘ பாதை தெரியுது பார் ‘ என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்,,,
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் ஓலையிலே
சிட்டுக்குருவி ஆடுது – தன்
பெட்டைத் துணையைத் தேடுது !
—– என்று பி. பி. ஸ்ரீநிவாஸ் பாடிய இப்பாடல் சாகா வரம் பெற்ற பாடல். காற்றில் ஓலை ஆடுவதை , தென்றலில் நீந்திடும் ஓலை
என்று சொன்னது சிறப்பு !
நீலக்கடல் எங்கிருந்தோ
ஓலமிட்டுக் கூவுது
அருவிபாடி நடக்குது – கடல்
அலையில் கலக்கத் துடிக்குது !
—- ‘ அருவி பாடி நடக்குது ‘ என்ற படிமம் புதியது ! இப்பாடலி இயற்கையோடு ஜெயகாந்தனின் தமிழ் கொஞ்சுகிறது.

கண்டதைச் சொல்லுகிறேன் – உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால் – அவ
மானம் எனக்குண்டோ ?
—– என்று தொடங்கி மேலும் மூன்று பத்திகளுடன் அமைந்துள்ளது இத்திரைப்படப் பாடல். ‘ நம்பவும் நம்பி அன்பினில் தோயவும்
நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ ? ‘ என்ற கேள்வியோடு முடிகிறது பாடல்.
‘ ஜெயகாந்தன் கவிதைகள் ‘ என்ற இத்தொகுப்பில் 155 தலைப்புகளில் கவிதைகள் – பாடல்கள் உள்ளன. பதிப்பகத்தார் விரும்பிக்
கேட்டதால் இக்கவிதைகளைப் புத்தகமாக்கத் தந்துள்ளார் ஜெ. ஆனாலும் ஜெயகாந்தன் ஓர் ஆசுகவி என்பதற்கு அவர் கட்டுரை ஒன்றில்
ஒரு தகவல் நமக்குக் கிடைக்கிறது. ஒரு முறை அவர் தன் வீட்டுச் ‘ சபை ‘ யில் பேசிக்கொண்டிருக்கும் போது ‘ இதை யாரும் எழுதிக்
கொள்ளக் கூடாது ‘ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பல வெண்பாக்களைச் சொன்னாராம். ஜெயகாந்தன் உரைநடை மட்டுமே படித்தவர்கள்
இதையும் படித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் இக்கட்டுரையை எழுதினேன்.
!

Series Navigationவழி தவறிய பறவைகே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *