ஞானரதமும் வாக்குமூலமும்

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 14 in the series 18 பெப்ருவரி 2018

சுயாந்தன்
எனக்குத் தெரிந்த பாட்டி ஒராள் இருந்தார் அவரும் நகுலனைப்போல தாயுமானவர் பாடல்கள், ஆழ்வார் பாசுரம் என்று சதா பாடியபடி இருப்பார். அப்போது எனக்குப் புரியவில்லை. எதற்கு இவர் இப்படி இந்த வயதில் உளறுகிறார் என்று கடந்து போய்விடுவேன். நான் அடிக்கடி நினைத்தது கிழவி சாவுக்குப் பயந்தவர் என்றுதான். இது நடந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் இருக்கும். அடுத்த சில வருடங்களில் அந்த மூதாட்டி இறந்துவிட்டார். அப்போது எனக்கு நகுலனோ நவீன இலக்கியமோ அறிமுகமாகி இருக்கவில்லை. அப்படி அறிமுகமாகி இருந்திருந்தால், அவர் இன்றும் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு நகுலனின் “வாக்குமூலம்” என்ற குறுநாவலை வாசித்துக் காட்டியிருப்பேன். இந்நாவல் முதியவர் ஒருத்தரின் மனஞ்செலுத்துகைக் குறிப்புகளாலானது. அந்த முதியவர் பல உலக இலக்கிய அனுபவங்களால் ஆன தன்னனுபவக் குறிப்புகளை மனம்போன போக்கில் செலுத்திவிட்டு உரையாடலை நிகழ்த்துவது என்றும் ஒரு பார்வையில் கூறலாம். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு முதியவர் தான் இறக்க வேண்டும் என்பதனை தன்விருப்பு அறிக்கையாகவும் வாக்குமூலமாகவும் வழங்குவது என்று இன்னொரு முறையில் கூறலாம்.

இதனை பாத்திர, உள்ளடக்க, உருவ மேன்மை கருதி நாவலாகப் பலர் கருதுகின்றனர். இதன் அகலம் கருதி குறுநாவலாகவும் கருதலாம்.

தேசமுன்னேற்றச் சட்டம் என்கிற அறிவிப்பு கெஸட்டில் பிரசுரமாகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தாமாகவே முன்வந்து தமது வாக்குமூலத்தை வழங்கிவிட்டு இறப்பதற்கான அனுமதியை அரசிடம் பெற்றால் அரச ஆணைமூலம் அவர்களே இந்த முதியவர்களைக் கொன்று விடுவார்கள் என்பது அந்த ஆணை. இதற்காக 110 கேள்விகள் கேட்கப்படுகிறது. கேள்விகள் அனைத்தும் தத்துவபூர்வமானவை. இவ்வனைத்துக் கேள்விகளையும் மனதில் கொண்டு விடை எழுதுவது போல் ஒரு வாக்கு மூலத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு எழுதப்பட்ட வாக்கு மூலத்தில் எது சிறந்ததாக இருக்குமோ அதன் நியாயப்பாடு கருதி இந்தச் சட்டம் ரத்துச் செய்யப்படும். அல்லது ஏற்றுக்கொள்ளப்படும். அதிசிறந்த வாக்குமூலத்தை அரசாங்கமே அச்சடித்து விநியோகிக்கும். பலர் பல வாக்கு மூலங்களை எழுதுகின்றனர். அவற்றை ஊடுருவிப் பரிசோதிக்க உளவியல் நிபுணர்கள் எல்லாம் நியமிக்கப்படுகின்றனர். அதில் ராஜசேகரன் எழுதிய வாக்குமூலம் மட்டும் மிக வித்தியாசமாகவும் இறக்க விரும்பியவர்களுக்கு முதிய வாழ்வின் மீது பிடிப்பினைத் தருவதாகவும் எழுதப்படுகிறது. இவர்தான் இக்குறுநாவலின் பிரதான பாத்திரமாகவும் உள்ளார்.

இக்குறுநாவலின் முக்கியத்துவங்கள்.
1. ஏனைய நாவல்களிலிருந்து தன்னை மாறுபடுத்திக் காட்டுகிறது என்பதனை, நாவலுக்குள் உள்ளடங்கிய கேள்விகளையும், அறிக்கைகளையும் பிரதான விடயமாகக் கொண்டு நிறுவலாம். ஆரம்பத்தில் ராஜசேகரன் பற்றிய மேலோட்டமான அறிமுகத்தைத் தருகின்ற நாவல், 110 கேள்விகளுக்குப் பிறகு அந்தக் கேள்விகளைப் பிரதானப்படுத்தியே தன் சுயம் பற்றிய அனுபவங்கள் வாக்குமூலமாக எழுதப்படுகிறது.
உதாரணமாகச் சில கேள்விகள்;
“நீங்கள் உங்களுடனேயே பேசிக்கொள்வதுண்டா?”
“உங்களுக்கு எப்போதாவது பைத்தியம் பிடித்துவிடும்போல் தோன்றியிருக்கிறதா? இந்த மனநிலை அடிக்கடி வருவதுண்டா? இதைத் தடுக்க நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டதுண்டா?”
“உங்கள் சொந்தத் தாய்மொழியில் எழுதுவதைவிட அயல்நாட்டு மொழியில் எழுதுவது மேல் என்று நினைக்கிறீர்களா? ஏன்?” இதுபோன்ற அனைத்துக் கேள்விகளும் தத்துவப் பார்வையாலானவை. இவற்றுக்கு விடை சொல்வதுதான் வாக்குமூலத்தின் ஆதார எழுத்துக்கள்.
2. நாவலுக்குரிய அழகுணர்வு மீதுரப்பெற்ற படைப்பு என்றுதான் இதனைக் கூறவேண்டும். மனதினைக்கொண்டு எழுதும்போது சுயம் வேடிக்கை பார்க்கும் என்று எம்.யுவன் சொன்னார். ஆனால் நகுலனின் வாக்குமூலம் சுயத்தை வெளிக்கொணரவென்றே மனதைக்கொண்டு எழுதப்பட்டதெனலாம். இவ்வாறான யுக்தியை அவரது கவிதைகளில் காணலாம். அநேக தருணங்களில் அவை பெய்லியர் கருத்தாகப் போக வாய்ப்புண்டு. ஆனால் இந்நாவலில் அத்தன்மை குறைவுதான்.
3. முதுமையில் எழுதப்படும் குறிப்புகள், நினைவோடைகள் அநேகமாகக் கழிவிரக்கம் சார்ந்தவை. அதனைப் படித்த பிறகு ஒரு ஏக்கம் எமக்குள் உண்டாகிப்போகும். இந்த வாக்குமூலமும் குறிப்புகளால் ஆனதுதான். ஆனால் ஏக்கங்களை மலரச் செய்யவில்லை. வாக்குமூலத்தில் இருப்பது ஒருவித முற்போக்கான எண்ணங்கள். இனிவருங் காலங்களுக்கான தத்துவப் பார்வை. அந்தக் கேள்விகளும் பதில்களும் அவற்றாலானவைதான்.
4. 2084 ஆம் ஆண்டு என்றுதான் தேசமுன்னேற்றச் சட்டம் அறிமுகமாகிறது. சிலவேளைகளில் முதியவர்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பு தேசத்துக்கான பாதிப்பு என்ற நோக்கில் எதிர்காலத்தில் இப்படியொரு சட்டம் வரக்கூடும் என்று நகுலன் ஊகித்த தீர்க்கதரிசனமாகவும் இருக்கக்கூடும்.
5. பாரதியாருடைய ஞானரதம் என்ற உரைநடைத்தொகுப்பினுடைய அதீத உந்துதல்தான் இவ்வாக்குமூலம் என்பதனை இரண்டையும் படித்தவர்கள் ஊகிக்கலாம். ஞானரதத்தில் “பீடிகை” என்றொரு பகுதி இடம்பெறும். அதில் பாரதியார் சொல்வார் தான் எதற்காக இந்த உலகிலிருந்து கற்பனை லோகத்துக்குச் செல்கிறேன் என்று. அதே போல வாக்குமூலத்திலுள்ள பீடிகையில் தேசமுன்னேற்றச் சட்டம் தொடர்பான நிபந்தனைகளும் கேள்விகளும் காணப்படும். இதைத் தவிர்த்து வாக்குமூலத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. அதேபோலத்தான் ஞானரதப் பீடிகையும். இங்கு பீடிகை என்பதன் பொருள் முன்னறிமுகம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆக நகுலன் தீவிரமான பாரதியாரின் கவிதை உந்துதலால் கைவரப்பெற்ற மிகநவீன எழுத்தாளர் என்றும் கூறலாம்.

00
“எனக்கு இந்த மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகமுண்டு. ஆதியில் எவ்வாறு இந்த மோகம் உண்டாயிற்று என்பதை இங்கே விஸ்தரிக்க முடியாது. அது ரகஸ்யம். ஆனால், நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்து போகும் வண்ணமாக எனக்கு இம் மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும் பாடுகளைக் கண்டு பொறுக்காமலேதான் நான் சாந்திலோக தரிசனத்திலே விருப்பம் கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் நிஷ்காரணமாக வெறுப்புக் கொள்வதைக் கண்டு எனக்குத் திகைப்பும், இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமாதானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண் மூடிக்கொண்டு ஒரேயடியாக மூடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, ஒரே நிச்சயத்துடன், “மனமே, நான் இந்த விஷயத்தில் உன் பேச்சைக்கேட்கவே மாட்டேன். உன்னுடைய நான்மையைக் கருதியே நான் செய்கிறேன். – ஞானரதமே, – உடனே புறப்படு” என்றேன்”

-பாரதியாரின் ஞானரதம் உரைநடையிலிருந்து….
===
தமிழ் உரைநடையின் தொடக்ககாலச் சாதனைகளில் ஒன்று ஞானரதம். தன்னை முன்னிலையில் வைத்து ஞானத்துடனும் மனதுடனும் நிகழ்த்திய சம்பாஷணைகள்தான் “ஞானரதம்” ஆக உருப்பெற்றது. இதில் பீடிகை என்ற முதல் அத்தியாயம் இவ்வுரைநடைக்கான முன்னுரையாகப் பார்க்கலாம். இதையறிந்தும் பலர் இதற்கு முன்னுரை தந்து செல்வது தமது இலக்கிய இடாம்பீகத்தைக் காட்டவன்றி வேறில்லை.

இந்த உரைநடையின் செல்வாக்கைப் பிற்கால எழுத்தாளர் நகுலனின் கவிதைகளில் காணலாம்.
1. “எனக்கு யாருமில்லை நான்கூட”
2. “திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சியளிக்கிறது”
3. “நினைவு ஊர்ந்து செல்கிறது. பார்க்கப் பயமாக இருக்கிறது. பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை”
4. “யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது எல்லாம்”
5. “இந்த மனதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது”
6. “ஆகாய வடிவமான உன்னை நான் ஊழிதோறும் தேடி நின்றேன்”

முதலான நகுலனின் பல கவிதைகளில் வெளிப்பட்டது ஞானரதம் உரைநடையின் செல்வாக்குத்தான் . இதை யாராலும் மறுக்க முடியாது. அல்லது இந்த விடயத்தைப் பற்றிப் பேசியவர்கள் இல்லையென்றே படுகிறது.

மனதை அதன் ஆழ்தளத்தில் உலவவிட்டுக் கவிதையெழுதிய பல கவிஞர்கள் உள்ளனர்தான். ஆனால் பாரதியார், நகுலன் இருவரும் மனதின் ஆழ்தளத்தில் இருக்கும் பிறிதொரு பக்கத்தையும் நமக்குக் கையளித்துள்ளனர். அதுதான் ஞானரதமும் நகுலனின் பல கவிதைகளும்.

ஞானரதம் உரைநடைத் தொகுப்பில் உள்ளடங்கிய பதினொரு அத்தியாயங்களும் தத்துவத்தின் சதுரத்திலுள்ள நான்கு மூலைகளையும் விலக்கிக்கொண்டு முன்னேறிய அழகியல் விவகாரங்கள்தான். ஆனால் நகுலனின் கவிதைகள் அழகியலுக்குள் தத்துவத்தை நிற்கவைத்து மனதைச் சலனப்படுத்தியவை. இதில் நகுலன் மனத்தை இயந்திரமாகவும் பாரதியார் அறிவை தொழிநுட்பமாகவும் கையாண்டிருந்தார். அதனால்தான் திடீரென வாசிக்கும் போது நகுலன் ஒரு பிரமிப்பையும், ஆராய்ந்த தளத்தில் படிக்கும்போது பாரதியார் Creative God ஆகவும் தெரிகின்றார்.

இன்றைய படைப்புத்தளத்தில் மனம்-அறிவு இரண்டின் இயந்திர தொழிநுட்பத் தகவமைவின் போதாமையால்தான் ஞானரதம் போன்ற எழுத்துக்கள் மீள்வாசிப்புச் செய்யவேண்டியதன் தேவை அதிகம் உள்ளதென நினைக்கிறேன்.
00

Series Navigationதொடுவானம் 209. நண்பர்கள பலவிதம்.தூக்கமின்மை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *