டெஸ்ட் ட்யூப் காதல்

5
0 minutes, 2 seconds Read
This entry is part 26 of 40 in the series 26 மே 2013

புவனாவா அது… துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல் அவளைப் பார்த்ததும் எரிமலைக் குழம்பாய் கொதித்து கை நரம்புகள் புடைத்து கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி நடந்தது. கடைசியாய் ஒரு தரம் அவளைப் பார்த்து அக்னிச் சொற்களை அள்ளி தெளித்திட அலைபாயும் மனதுடன் தன் நடையை துரிதப்படுத்தினான்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிருக்கு உயிராய்… ஈருயிர் ஓர் உயிராய் ஒருமித்து காதலித்தவர்கள் பிரதீப்பும் புவனாவும். பிரதீப் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று திரும்பியவுடன் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று சம்மதித்து அவனை வாழ்த்தி அனுப்பியவள் தான் அந்த புவனா. கொடுத்த வாக்கையும் கொண்ட காதலையும் மீறி தன் மாமனை அவன் சென்ற மறு வருடமே திருமணம் செய்ததோடு அல்லாமல் அவனையும் ஏமாற்றியவள் என்ற கோபம் அவனுக்குள் இருக்கத்தான் செய்தது. அந்த ஆற்றாமையிலிருந்து அவன் மீளவே வெகு காலம் ஆனதுதோடு தன்னுடைய இந்தியா திரும்பும் எண்ணத்தையே கைவிட்டு அங்கேயே பிஹெச்டி முடித்து வேலை தேடிக் கொண்டான் பிரதீப்.

புவனாவை அடியோடு மறக்க முடியாமலும் அதேசமயும் பெற்றோர்களின் வற்புறுத்தலை மீறமுடியாமலும் வேறுவழியின்றி வைஷ்ணவியை கரம் பிடிக்க இந்தியா திரும்பியன், தன் புது மனைவியோடு ஷாப்பிங் சென்ற சமயம் அவளைக் காண நேர்ந்தது. எப்பொழுது வைஷ்ணவியை கரம் பிடித்தானோ அப்பொழுதே புவனாவை மனத்திரையிலிருந்து அகற்றியவன், அவளை இனிக்காணவே கூடாதென்று மனதில் கங்கணம் வேறு கட்டிக்கொண்டான். எவளை தன் வாழ்நாள் முழுவதும் காணக் கூடாதென்றானோ அவளை தற்செயலாய் கண்டது கோபத்தீயை மேலும் அதிகரித்தத்தோடு அவனுக்கு பழைய நினைவுகளுக்கு தூபம் போட்டது போல ஆனது.

‘பிரதீப்… நான் இங்கே இருக்கேன்..’ வைஷ்ணவி.. அவன் புது மனைவி கூப்பிட சட்டென்று நடையை நிறுத்தியவன்.

‘நான் இங்க இருக்கேன்… அங்க எங்க போறீங்க… ‘

‘என்னோட பழைய பிரெண்ட கூட்டத்தில பார்த்தேன்.. ‘

‘என்னத்தேடித்தான் போயிட்டு இருந்தீங்கன்னு நெனெச்சேன்… அதான் கூப்பிட்டேன்.. போய் பார்த்திட்டு வாங்க.. நான் இங்கேயே டிரெஸ் செலக்ட் பண்ணிட்டு இருக்கேன் டியர்…’ அவள் மழலையாய் கொஞ்ச.. வேண்டாத நினைவுகள் எல்லாம் வர ஆரம்பித்து… வெறியுடன் அவளைக் காண அந்த ஷாப்பிங்மாலின் எதிர் சாரியில் அவள் இருந்த கடையை நோக்கிச் சென்றான்.

‘மம்மி… மம்மி….’ புவனாவின் சேலைத்தலைப்பை ஒரு கையால் பிடித்தபடி மறு கையால் அந்தக் குழந்தை கண்ணாடிப் பெட்டியினுள் அழகாய் சிரித்து காதில் ஸ்டெடஸ்கோப் மாட்டிபடி இருந்த டாக்டர் செட் பொம்மையை வாங்கித் தரும்படி அடம் பிடித்தது.

‘இப்பவே உனக்கு அது வேண்டுமாடா செல்லம்.. நீ பெரியவானானா டாக்டருக்கு படி.. உனக்கு உண்மையான ஸ்டெடஸ்கோப்பையே அம்மா வாங்கித்தரேன்… என்ன…’ அந்தக் குழந்தையின் பிஞ்சுக் கையை சேலையிலிருந்து விடுவித்து தூக்கி முத்தமிட்டு அணைத்து இடுப்பில் வைத்துக் கொண்டாள் புவனா.

அதே அன்பு கலந்த கனிவான பேச்சு… அதே கரிசனம்.. அப்பொழுதிருந்த அதே பொறுமை.. இவளால் எப்படி தன்னை மறந்து வேறோருவனை திருமணம் செய்ய முடிந்தது… அன்று சுடிதாரில் சின்னப் பெண்ணாக இருந்தவள்.. இன்று காட்டன் சேலையில் குடும்பப் பெண்ணாக, நெற்றியில் நீட்டிய கருப்புப் பொட்டுடன்,  கன்னத்தின் கீழ் லேசான கருவளையமுடன் இருந்தாள்… காலம் மாறிவிட்டது… அவள் உருவத்தையும் கூட்டி… கோபமாய் சென்றவன் அவளை அந்தக் குழந்தையையுடன் பார்த்ததும் குணம் மாறி  நிலை தடுமாறி நிற்க… அதற்குள் அவள் கூட்டத்தில் மறைந்து காணாமல் போனாள்.

ஆறு வருடங்களுக்கு முன் ‘தாய்மை – கரு வங்கி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற பெயருடன் அந்த ஆராய்ச்சி மையம் சென்னையில் தொடங்கியபோது அது ஒரு புதிய விஷயமாகப் பேசப்பட்டது. ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கரு முட்டையும் சேகரித்து அதை நவீன முறையில் நீண்ட நாட்கள் பாதுகாத்து தாய்மை பெறமுடியாத தம்பதிகளுக்கு செயற்கை முறையில் கருக்கட்டல் செய்து மழலைச் செல்வத்தை பெற்றுத் தருவதே அந்த மையத்தின் உயரிய பணியாகும்.

அந்த மையத்தின் ஆராய்ச்சி பணிக்கு தேவையான இளம் விஞ்ஞானிகளைத் தேர்வு செய்து… தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை அனுப்பி அவர்கள் அனைவரும் ஒரு சேர பணி சேரும்  நாள் அது…

அவர்களுள் ஒருவனாக பிரதீப் கையில் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் மற்றும் படித்த சான்றுகளுடன் அந்த அலுவலகத்தின் வரவேற்பரையில் அமர்ந்திருக்க.. அவனைப்போல மற்றவர்களும் அமர்ந்திருந்தனர். வரவேற்பரையின் சுவர் முழுவது பல விதமான முக பாவனையோடு குழந்தைகளின் அழகிய முகங்களும்.. குழைந்தைப் பிறப்பு பற்றிய படங்களும், உயிர் அணுக்கள் இயங்கும் விதமும், அதனைப் பற்றிய விளக்கங்களும் மற்றும் அங்கு தரக்கூடிய சிகிச்சையான ஐவிஎப் டெக்னாலஜி… ஸ்பெர்ம் இஞ்செகஷன்.. விட்ரோ பெர்ட்டிலைஷேன் பற்றிய விளக்க குறிப்புகளும் படங்களாக சுவரை நிரப்பியிருந்தன.  

‘எக்கியூஸ்மி மேடம்… இது உங்களோடதா…’ கீழே கிடந்த அந்தக் கவரை பிரதீப் எடுத்துக் கொடுக்க…

‘ஓ… தேங்க்ஸ்… இதத்தான் இவ்வளவு நேரம் தேடிட்டு இருக்கேன்…’ கவரில் புவனா என்று எழுதியிருந்தை மனதில் படித்தப்படியே அவளிடம் கொடுத்தான், அதுதான் அவளுடனான அவனின் முதல் அறிமுகம்… பின்னர் அது காதாலாய் விரிவடையும் என்பது அறியாமல் ஆரம்பித்தது அந்த கன்னிப் பேச்சு.

‘நீங்களும் இன்னிக்குத்தான் ஜாயின் பண்றீங்களா…’

‘யெஸ்..‘  நட்புடன் புன்னகையித்தாள்..  சுமாரான அழகு.. நேர்வகிடு.. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு.. அதன் மேல் திருநீற்று கீற்று… பொட்டின் அடியில் கோவில் குங்குமம் தீற்றலாய்.. அதிகமும் குறையும் இல்லாமல் மிதமான மேக்கப்புடன்… குட்டை கழுத்தும்.. வட்ட முகமும்.. ஒரு பக்திப் பழமாய் இருந்தாள்.. தலையில் சூடிய மல்லிகைப்பூ அவள் திரும்பும் சமயமெல்லாம் வாசனையை அவன் முகத்தில் தெளித்து அவனை வசீகரச்செய்தது.  

சிறிது நேரம் செல்ல… குட்டைப் பாவாடை பெண் ஒருத்தி வெளியில் வந்து… உங்களை இந்த ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் பத்ரிநாத் இன்னும் சிறிது நேரத்தில் சந்திக்கவிருக்கிறார்… சொன்னவள் உள்ளே செல்ல அறைக்கதவு தானாகவே மூடியது. டாக்டர் பத்ரிநாத்.. அந்த உயிர் அணுக்கள் சேமிப்பு வங்கி மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைமை விஞ்ஞானி.

குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரஸ் அறையில் அனைவரும் ஒன்றாய் அமர… தங்க பிரேம் முகத்தில் ஜொலிக்க.. வழுக்கை தலையில் டியுப்லைட் மின்ன… நெற்றியில் சுருக்கங்களுடன்.. வெள்ளை கோட்டால் இளம் தொப்பையை மறைத்தப்படி.. சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராய் காணப்பட்டார் அவர். தொண்டையை கனைத்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்து…. தன் உரையை டாக்டர் பத்ரிநாத் ஆரம்பித்தார்…

இளம் விஞ்ஞானிகளான உங்களை மகிழ்வோடு வரவேற்பதில் பெருமிதம் அடைகிறேன்.. ‘God created humans… we are producing children…’ இது தான் இந்த ஆராய்ச்சிக் கூடத்தின் தாரக மந்திரம்’

‘எதுக்கும்மா பயோடெக்னாலாஜி தான் வேணுமின்னு அந்தக் கோர்ஸை எடுத்துப் படிக்கிற.. பேசாம எல்லாரும் படிக்கிற மாதிரி கம்யூட்டர் சயின்ஸ், ஐடி படிச்சிட்டு சீக்கிரம் வேலைக்குப் போகறத விட்டு..’ அப்பா பிளஸ்2 ரிசல்ட் வந்த அன்றே சொன்னபோதிலும் விடாப்பிடியாக பிடெக் பயோ டெக்னாலாஜி தான் படிப்பேன் என்று அடம் பிடித்து சேர்ந்தாள் புவனா.

‘எனக்கு சயிண்டிஸ்ட் ஆகனும் ஆசைப்பா.. அதுவுமில்லாம பயலாஜி எனக்கு பிடிச்ச சப்ஜெக்ட்…’ அன்று அடம் பிடித்து சேர்ந்தது புவனாவின் நினைவுக்கு வர…  இன்று இளம் விஞ்ஞானிகளுள் ஒருத்தியாக அவளும் அமர்ந்திருந்தது பெருமையாக இருந்தது.

‘ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றாலும்… தாய்மை அடைவதும் அடையாததும் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்திற்கும் பங்கு உள்ளது என்று ஆன்மீகம் கூறுகிறது… அது உண்மையோ பொய்யோ என்று ஆராய்ச்சி செய்வது நம் வேலை அல்ல… இன்றைய நவீன விஞ்ஞான உலகில் எல்லோரும் தாய்மை அடைய முடியும் என்று நிரூப்பிப்பது தான் இந்த செயற்கை கருக்கட்டல் ஆராய்ச்சியின் நோக்கமாகும். நீங்கள் இதுவரைக்கும் செயற்கை கருக்கட்டல் வழிமுறைகளை ஒரு பாடமாக கல்லூரிகளில் படித்து இருப்பீர்கள்… இனி அதனை நேரிடை செய்முறைப் பயிற்சி மூலமாக எப்படி நடைபெறுகிறது என்பதை காணப்போகிறீர்கள்.. அதோடு மட்டுமல்ல அதில் இன்னும் என்னென்ன முறைகளில் விரிவுபடுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்யும் வசதியும் இங்கு உள்ளது. இன் விட்ரோ பெர்ட்டிலைஷெஷன்… ஐவிஎப் மற்றும் இன்டெரக்ரைடோப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் இஞ்செக்ஷன் என்ற ஆண்களுக்கான கருக்கட்டல் வழிமுறைகளையும்…. பெண்களுக்கு…’

ப்ரதீப் கொட்டாவி விட்டான்… அவனைப் பார்த்து மற்றவர்களுக்கும் அது தொற்றிக்கொள்ள… ஒருவர் மாற்றி மற்றவர் கொட்டாவி விட…

‘என்ன போரடிக்குதா…’ புவனா.. பிரதீப்பைக் கண்களால் கேட்க…

‘யெஸ்.. ‘ என தலையை ஆட்டி ஆமோதித்தான்…

‘ப்ராப்ளம் வித் ஓவுலேட்டிங், அன் எஃஸ்ப்ளென்ட் பெர்ட்டிலிடி. அண்ட் ப்ளாக்குடு ஆர் டாமேஜுடு ட்யூப்ஸ்….’  பத்ரிநாத் தொடர.. ஒன்றும் புரியாமல் ஒருவர் மற்றவர் முகத்தை பார்த்து… எப்பொழுது அவர் உரையை முடிப்பார் என்று காத்திருக்க.. இறுதியில் ப்ரொக்ஜெக்டர் மூலமாக ஒரு ஆவணப்படத்தைக் காண்பிக்க… கூடியிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

‘செம போர் இல்லங்க… ரெண்டு மணி நேரம் போட்டு தாளிச்சிட்டார் இல்ல…’ உரை முடிந்த வெளியே வரும் சமயும் புவனாவைப் பார்த்து பிரதீப் கேட்க..

‘கேக்கற விஷயத்துல இன்டெரெஸ்ட் இருந்தா… கிரிக்கெட் ஸ்டேடியத்துலேயும் பாடம் கேக்கலாம்..’ பளிச்சென்ற அவளின் அந்த பதில் அவனுக்கு பிடித்திருந்தது… மறுநாள் புதிதாக சேர்ந்தவர்களை தனித்தனி பிரிவுகளாய் பிரிக்க… அவன், புவனா மற்றும் சுகன்யா மூவரும் லேபரெட்டரி பிரிவுக்கு தேர்வாயினர்…. தன்னுடன் புவனா வந்ததில் பிரதீப் உற்சாகமானான்.

வேலையில் அவள் காட்டிய ஆர்வமும் செய்முறைப் பயிற்சியில் புதிய உத்திகளை கையாண்ட விதவும் அவள்பால் அவனுக்கு ஈர்ப்பை உண்டுபண்ணியதோடல்லாமல் காதலாகவும் உருவெடுத்தது.

மதிய உணவு வேளையில் ஒன்றாக சாப்பிட்ட போதும், அரட்டைக் கச்சேரியிலும் அவள் பேச்சு ஆராய்ச்சியை மையப்படுத்தியே இருந்தது… அந்த பாதிப்பு பிரதீப்புக்கும் தொற்றிக் கொள்ள… அவனும் அது சம்பந்தமாக நிறைய படிக்க ஆராம்பித்தான்.

எலியட் பீச்சில் ஒரு மாலை வேளையில்…

‘கண்டிப்பா அமெரிக்கா போயித்தான் ஆகனுமா பிரதீப்… ‘ காற்றில் படபடக்கும் சுரிதாரை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் பறக்கும் துப்பட்டாவை இழுத்து அணைத்தப்படி கால் விரல்களின் இடுக்குகளில் புகுந்த மணல் துகள்களை உதறிவாறு புவனா கேட்டது பிரதீப்பின் காதில் விழ…

‘ரெண்டு வருஷம் தான்.. என்னோட எம்எஸ் முடிச்சிட்டு… அப்புறம் நானே சென்னையிலே ஒரு ரிசெர்ச் செண்டர் ஆரம்பிச்சிடலாம் இருக்கேன் புவனா… அதுக்கு சீப் கன்சல்டிங் ஆபிசரா உன்னையே அப்பாயிண்ட்மென்ட் பண்ணப்போறேன்.. என்ன சம்மதம் தானே…’ அவள் முகத்தில் வெட்கப்பூக்கள் சிதறியது.

‘படிப்பு… ஆராய்ச்சி… வீடு.. படிப்பு… இதுதான் உலகம்மின்னு இருந்த என்ன… இப்படி ஏதாவது அடிக்கடி பேசியே காதல்ல விழவச்சிட்ட பிரதீப்..’

‘நம்ம காதல் இந்த எலியட் பீச்ல இருக்கற நினைவுச் சின்னம் மாதிரி.. எப்பவும் நெலச்சி இருக்கணும்…’

‘மண்டு.. அது காதல் சின்னம் இல்ல… கார்ல் ஸ்மிட் நினைவுச் சின்னம்…  1930 ஒரு அலையில மாட்டின ஒரு பொண்ண டச்சு மாலுமியான் கார்ல் ஸ்மிட் தான் தன் உயிரை கொடுத்து காப்பாத்தினாரு…  அவர் நினைவா அது கட்டினது..  நெறைய பேரு அது காதல் சின்னமின்னு நெனெச்சிட்டு இருக்காங்க… எட்வர்ட் எலியட் சென்னை கவர்னர் இருந்தால அவர் பேரு இந்த பீச்சுக்கு வந்தது…’ அவள் சொல்லச் சொல்ல அவள் விழிகளையே பார்த்தவன்..

‘சரித்திரத்தக்கூட கரைச்சி குடிச்சி இருக்க…  உன்ன போல ஒரு புத்திசாலி பொண்ண காதலியா கிடைச்சது…. காதலிச்சிட்டு இருக்கறது நெனெச்சா எனக்கு பெருமையா இருக்கு..’ தோள்பட்டையிலிருந்து கையை மெதுவாக கீழிறக்கி அவள் இடுப்போடு சேர்த்தணைக்க…

‘போதும் ஸ் வச்சது…. சந்தடி சாக்கில… கையை எடுங்க…’ வலுக்கட்டாயமாய் அவனின் கையை விலக்கினாள்.

‘பிரதீப் நம்ம காதலிச்சது பெரிசில்ல… கல்யாணம் பண்ணி எப்பவும் மகிழ்ச்சியா எல்லோரும் புகழ்ற மாதிரி ஒரு ஆத்மார்த்த தம்பதிகளா வாழனும்… அது தான் என்னோட ஆசை..’

‘அப்படி நடக்கமின்னுதான் எனக்கும் ஆசை… ஒருவேளை அப்படி நடந்தா நான் உனக்கு தாஜ்மகாலே கட்டிடறேனே’

‘அப்படின்னா என்ன சீக்கிரம் பரலோகம் போகச்சொல்றீங்களா..’ வாட்டத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள் புவனா.

‘சே.. சே… அப்படிச் சொல்லல… ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்.. வேணுமின்னா நீ உயிரோட இருக்கும்போதே உனக்கு தாஜ்மகால் கட்டிடறேனே… ‘ சொல்லவந்ததை சமாளித்தான்.

‘ஷாஜகான்… ஒரே மனைவியுடன் வாழ்ந்திருந்தா அந்தக்காதலைப் போற்றலாம்… உங்களுக்குத் தெரியுமா… மும்தாஜ்.. ஷாஜகானுடைய ஏழு மனைவிகளுள் நான்காவது மனைவி…’

‘இது புதுசா இருக்கே…’ ஆச்சிரியத்தை கண்களில் காட்டினான் பிரதீப்.

‘அதுமில்லாம… ஷாஜகான்… மும்தாஜின் முதல் கணவனை கொண்ணுட்டுதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்… இதில எங்க உண்மையான காதல் இருக்கு.. காமவெறிதான் இருக்கு. அதுமில்லாம மும்தாஜ் இறந்த ஒரே வாரத்தில மும்தாஜின் தங்கையை ஷாஜகான் கல்யாணம் பண்ணிக்கிட்டான் அது தெரியுமா உங்களுக்கு’

‘நீ சொல்றது உண்மையின்னே வச்சுக்குவோம்.. அவுங்க ஒரு விஷயத்தில உண்மையான காதலர்களா இருந்தாங்க தெரியுமா…  வாழ்ந்த 19 வருடத்தில 14 குழந்தைகளை மும்தாஜ் பெற்றால்ன்னா.. அப்ப அவுங்க எந்த அளவுக்கு காதலிச்சி இருந்திருப்பாங்க.’  தனக்கு கொஞ்சம் சரித்திரம் தெரியும் என்பதைப்போல பிரதீப் புவனாவைப் பார்த்து கண்ணடித்தவாறு சொன்னான்.

‘அந்த மாதிரி விஷயம்மின்ன கரெக்டா ஞாபகம் வச்சி இருக்கீங்க… அதுல எல்லா ஆம்பளைங்களும் ஒண்ணுதான்.’ சொன்னவள் பேச்சை மாற்ற…

‘அடுத்த வாரம் மாங்காடு அம்மன் கோவிலுக்குப் நாம போறோம்… ‘

‘என்ன திடீர்ன்னு… ஆராய்ச்சியிலிருந்து சரித்திரம் பக்கம் போயி.. இப்ப ஆன்மீகம் பக்கம் காத்து வீசுது’

‘ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க… எல்லாம் உங்களுக்குத்தான்.. நீங்க நல்லபடியா படிச்சி திரும்பி வரவும் நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கவும் வேண்டிக்க’

‘இப்பவே மகாராணியின் உத்திரவு பலமா இருக்கே.. போகப்போக எப்படியோ..’ அவள் கலகலவென்று சிரிக்க.. அந்த ஒரு வாரத்தில்… அவர்கள் நிறையவே பேசினார்கள்.

‘பிரதீப்… என்னோட செலக்க்ஷன் முடிந்சிடுச்சி… பில்லுக்கு பணம் கட்டிட்டு வாங்க… போறவழியில மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு வீட்டுக்குப் போவோம்.. ’ வைஷ்ணவி கேட்க..

‘ராணி உத்திரவு போட்டா மீற முடியுமா என்ன…’ பிரதீப் சொல்ல..

‘என்ன உளர்ரீங்க…  நான் உங்க வைஷ்ணவி.. ராணி இல்ல..’ வைஷ்ணவி அவன் தோளைப் பிடித்து உலுக்க.. சட்டென சுயநினைவு வந்தவன்

‘ஓ.. சாரி… ஏதோ ஞாபகம்…’

‘என்னாச்சி.. உங்க பிரெண்டா பாத்தீங்களா.. பேசினீங்களா.. எனக்கு அறிமுகம் செய்யவேயில்ல…’

‘பார்த்தேன்… அவசர வேலையின்னு போயிட்டான்.. அப்புறமா வீட்டுக்கு வரேன்னு சொன்னான்’ மனைவியை சமாளித்து… பில்லுக்கான பணத்தை கவுண்ட்டரில் செலுத்திவிட்டு… கார் பார்க்கிங்கிலிருந்து காரை வெளியே எடுத்து… கபாலீஸ்வரர் கோயிலை நோக்கி காரை செலுத்தினான்.

கபலீஸ்வரர் கோயிலின் தெப்பக்குளத்தை தாண்டி, கோவிலின் முகப்பு வாயில் வழியே பிரதீப்பும், வைஷ்ணவியும் செல்ல… அவனுக்கு புவனாவுடன் மாங்காடு கோயில் சென்ற ஞாபகம் நினைவுத் திரையில் நிழலாடச் செய்தது.

‘பிரதீப்… ஒரு புதிய உயிரை உருவாக்கறோமே…. அப்ப நாமளும் கடவுளும் ஒன்னாயிடறோம் இல்லையா..’ கோவில் பிரகாரத்தை சுற்றியபடி புவனா அந்த கேள்வியை எழுப்ப…

‘அப்பகூட நாம கடவுளாக ஆக முடியாது….’

‘ஏன்… அப்படிச் சொல்றீங்க..’

‘நாம் கடவுள் அனுப்பி வச்ச தூதுவர்களாக இருப்போமே தவிர… கடவுளாக யாராலேயும் ஆக முடியாது..’

‘ஓ… நீங்க அப்படிச் சொல்றீங்களா..’

அந்த பிரகார வழியில் இருந்த மரத்தில் ஒரு சில பெண்கள் மஞ்சள் சேலையில் தூளி செய்தும்.. தொட்டில் கட்டியும் பிள்ளை வரத்தை வேண்டியபடி அந்த மரத்தை சுற்றி வந்தனர்.

‘இதெல்லாம் பாக்கும் போது வேடிக்கையாயில்ல..’ பிரதீப் சொல்ல…

‘ஒரு நம்பிக்கை தான்…  நீங்க அமெரிக்க போயிட்டு வந்து என்னதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் நம்பிக்கையா இல்லையா.. அது மாதிரி தான்..’

‘யூ… ‘ அவள் ஓட.. அவன் துரத்த.. கல்மண்டப மேடையில் இருவரும் அமர்ந்தனர்.

‘பிரதீப்.. எனக்கு ஒரு யோசனை தோணுது… நாம ஏன் நம்மளோட உயிர் அணுவ நம்ம வங்கியில தானாமா கொடுக்கக் கூடாது.. பின்னாடி யாருக்காவது உபயோகமா இருக்குமில்ல… எவ்வளவு பேரு குழந்த இல்லாம கஷ்டப்படறாங்க..’ உண்மையான கரிசனத்துடன் அவள் கேட்க.

‘நல்ல யோசனைதான்.. நாமதான் வாழ்க்கையில ஒன்னா இணையப்போறமே… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்..’

‘ஒருவேளை நாம் இணையாம போனோம்மின்னு வச்சுக்கோ… நம்மளோட உயிர் அணுக்களாவது பிற்காலத்தில் யாருக்காவது உபயோகமா இருக்கும் இல்ல..’ சொல்லும் போதே அவள் கண்களை கண்ணீர் குளமாக்கியது.

‘எதுக்கு இப்படி நெகட்டிவ்வா நெனெக்கற.. எல்லாம் நல்லபடியா நடக்கும்… உனக்கு அதுதான் விருப்பமின்னா.. உன் விருப்பப்படியே.. சரி சரி.. கண்ண தொடச்சிக்கோ… ரெண்டு பேரும் உயிர் அணுக்களை டொனேட் பண்ணிடுவோம்..’

அன்று பிரதீப் தன் புது மனைவியுடன் அமெரிக்கா திரும்பும் நாள்.. மனதின் புவனாவை சந்திக்க முடியவில்லை என்ற குறை பல்லின் இடுக்கில் மாட்டிய நல்லி எலும்பாய் உறுத்தியதே தவிர மற்றபடி உற்சாகமாய் ஏர்போர்ட் சென்றான். பேக்கேஜ் செக்கிங், குடியிரிமை செக்கிங், போர்டிங் செக்குரிட்டி செக்கிங் முடித்து லவுஞ்சில் உள்ள மேஜையில் அமர்ந்து ஒரு பீர் கேனை உடைத்து குடித்துக்கொண்டிருந்த பொழுது..

‘ஹலோ… நீங்க பிரதீப் தானே…’ ஒரு மென்மையான பெண்ணின் கரம் தன் முதுகில் பட திரும்பியவன்..

‘நீங்க…’ எங்கேயோ பார்த்த முகமாய் இருந்தாலும்… அந்த சமயத்தில் அவனுக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை..

‘என்னத் தெரியலையா.. ‘ அந்தப் பளீர் சிரிப்பு… நினைவு மேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக விலக்க…

‘நீ… சுகன்யாதானே….’

‘அப்பாடி இப்பாவது உங்களுக்கு ஞாபகம் வந்ததே..’

‘ஆளே அடையாளம் தெரியல… உருவம் மாறிடுச்சில்ல… ‘ ஆறு வருடத்திற்கு முன் அவள் வேலை செய்த அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் புவனாவோடு அவளும் இருந்தவள்.. அப்போதெல்லாம் ஒல்லியாய் புடலங்காய்க்கு கண்ணாடி அணிவித்தாற் போல இருப்பவள்… இன்று சேலை கட்டிய பூசணிக்காயக இருக்க அடையாளம் காண சிரமப்பட்டுத்தான் போனான் பிரதீப்.

‘நான் உன்ன இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல… இங்க எப்படி…’

‘எனக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சி… ஹீ ஸ் மை ஹஸ்பண்ட்…  வொர்க்கிங் இன் மைக்ரோசாப்ட் அட் சன்னிவில்லி, கலிபோர்னியா….’ என்று ப்ரௌன் கலர் டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்த அந்த இளைஞனை அறிமுகப்படுத்தினாள்.

‘ஹாய்…. ‘ என்று அவனை கைகுலுக்கினான்.. பிரதீப்பும் தன் பங்கிற்கு வைஷ்ணிவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினான்.

‘கங்ட்ராட்ஸ்… ‘ இருவரும் அவர்களை வாழ்த்தினர்.

‘சுகன்யா உங்கள பத்தி ரொம்ப சொல்லியிருக்கா.. வொர்க் பண்ணும் போது கலாட்டா எல்லாம் பண்ணிவீங்களாம்… ஆனா உங்கள பார்த்தா அப்படி தெரியலையே.. ரொம்ப சாதுவா இருக்கீங்க..’

‘ம்ம்… தட்ஸ் ஒன்ஸ் அப்பான் எ டைம்…’ இரண்டு கைகளை மேலே தூக்கி காண்பித்தான் பிரதீப்.

‘ஓகே…  நீங்க சுகன்யாகிட்ட பேசிட்டு இருங்க…  பிளைட்ல படிக்க ஹிக்கின்பாதம்ஸ் வரைக்கும் போயிட்டு வரேன்….’ அவன் செல்ல.

‘ஆமா..  நீங்க எங்க யுஎஸ்ல இருக்கீங்க…’ சுகன்யா கேட்க..

‘நியுஜெர்ஸில…. ‘

‘நாங்க அந்த கடைசினா… நீங்க இந்த கடைசி.. ‘ சொல்லிவிட்டு சுகன்யா சிரிக்க…

‘நீங்க பேசிட்டு இருங்க.. நான் ரெஸ்ரூம் போயிட்டு வந்திடறேங்க…’ வைஷ்ணவி தூரமாய் செல்லும் வரை அமைதியாய் இருந்த சுகன்யா..

‘புவனாவ ஞாகமிருக்கா பிரதீப்…’ குரலை தாழ்த்தி சன்னமான குரலில் கேட்டாள் சுகன்யா.

‘அவளப் பத்திப் மட்டும் பேசாத…. எந்தளவுக்கு நாங்க காதலிச்சோம்ன்னு உனக்குத் தெரியுமில்ல… கொஞ்சம் கூட கொடுத்த வாக்க காப்பத்த முடியல அவளால.. அதுக்குள்ள என்ன அவசரம் அவளுக்கு… அட்லீஸ்ட் ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லி இருந்தா உடனே வந்திருப்பேனே…’

‘அவ சூழ்நிலை அப்படி அமைஞ்சிப் போச்சு..’

‘என்ன புடலங்காய் சூழலோ… இருந்தாலும்..  அவள சுத்தமா மறந்து போய்த்தான் வைஷ்ணவியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நவ் ஐ ஆம் ஆல்ரைட்.. ஒரு வாரத்திற்கு முந்திதான் புவனாவ ஒரு மால்ல ஏதேச்சையா பாத்தேன்…  அவ என்ன பாக்கல… கடைசியா அவ நாக்க புடுங்கற மாதிரி நாலு வார்த்த கேட்க நெனெச்சேன்… அதுக்குள்ள கூட்டத்தோட அவ காணாம போயிட்டா..’

‘எப்படி இருந்தா’

‘பார்த்தேன்.. ஒரு குழந்தையோட…  பேசலாமின்னு கிட்ட போறதுக்குள்ள… ஷி ஸ் கான்… உனக்கு தெரியுமா சுகன்யா…  நான் எம்எஸ் முடிச்ச உடனே…. சென்னைக்கு வரவேண்டியவன்… அப்படித்தான் எனக்கும் புவனாவுக்கும் பேச்சு… அதுக்கப்புறம் அவ எங்கிட்ட பேசறதவே நிறுத்திட்டா…  நிறைய தடவை ட்ரை பண்ணிப் பாத்தும் ஒரு பிரயோஜனும் இல்ல… கடைசியா அவ கல்யாண செய்தி கேட்டு ஆடிட்டேன் தெரியுமா.. சோ… கண்ட்டினுயூடு மை ஸ்டடி… எங்கிட்டா பிரச்சினை என்னன்னு அவ சொல்லிருந்தாவது நான் உடனே வந்து தீர்த்திருப்பேன்… ம்ம்ம்… எல்லாம் முடிஞ்சி போச்சு….’

‘புரியது… பிரதீப்…. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா ’

‘என்ன பெரிசா நடந்து இருக்கும்… ‘

‘நீ பார்த்தீயே அந்த குழந்த அது யாருன்னு நெனெக்கிற…’

‘யார்து இருந்தா எனக்கென்ன…’

‘அது உன்னோட குழந்த பிரதீப்… ஐ மீன் உனக்கும் புவனாவுக்கும் பொறந்த குழந்த அது..’

‘என்ன உளர்ற.. அதெப்படி சாத்தியம்..’

‘உண்மை தான் பிரதீப்…  நீ அமெரிக்கா போனதும் அவ அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து கடைசி கட்டத்துல இருந்தாரு… அடுத்து ஒரு அட்டாக் வந்தா அவர் காலின்னு டாக்டர் கைவிரிச்சிட்டாரு… அப்ப அவுங்க அம்மா.. அப்பா உசிரோட இருக்கறதுக்குள்ள அவளுக்கு கல்யாண பண்ண முடிவு பண்ணிட்டாங்க… அப்ப அவ உன்ன நெனெச்சி அழாத நாளே இல்ல… அவ சம்மதமே இல்லாம அவ மாமனை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க… ஆனா அதிலும் அவளுக்கு எந்த சுகமும் இல்ல… ஒரு ஆக்கிடேண்ட்ல அவ மாமனுக்கு முதுகு தண்டுவடத்தில நல்லா அடிப்பட்டு படுத்த படுக்கையாகிட்டான்… அவனால குழந்த பெத்துக்கவே முடியாதுன்னு தெரிஞ்சும்… அத யாருக்கும் சொல்லாம மூடி மறைச்சி… தனக்குன்னு ஒரு வாரிசு வேணுமின்னு நம்ம பெர்டிலிட்டி கிளினிக்கில் இருந்து உன்னோட உயிர் அணுவ எடுத்து குழந்தைய பெத்துக்கிட்டா…. அந்தக் குழந்த பொறந்தத கூட பாக்காமா அவ புருஷன் அல்பாயுசுல போய் சேர்ந்திட்டான்… இப்ப சொல்லுங்க அவள் நிலைமையில யார் இருந்தாலும் அப்படித்தான் நடந்து இருப்பாங்க…’ அவள் சொல்லச் சொல்ல அவன் கண்கள் கலங்கியது..

‘என் கிட்ட அவ மொபைல் நம்பர் இருக்கு பேசறியா பிரதீப்…’

‘வேண்டாம் சுகன்யா… அவ அந்தக் குழந்தையோட சந்தோஷமா இருக்கட்டும்..’

‘ஒருவேளை நாம் இணையாம போனோம்மின்னு வச்சுக்கோ… நம்மளோட உயிர் அணுக்களாவது பிற்காலத்தில் யாருக்காவது உபயோகமா இருக்கும் இல்ல..’ புவனா அன்று சொன்ன வார்த்தை இன்று அவள் வாழ்க்கையில் நடந்தது வினோதமாய் இருந்தது…. அவளின் அன்பிற்கும் நேசத்திற்கும் முன் தான் தலை குனிந்துப் போனதாய் உணர்ந்தான்.. கடைசிவரை அவளை சந்திப்பதையோ பேசுவதையே முற்றிலும் தவிர்த்தான் பிரதீப்.

(முற்றும்)

Series Navigationதியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”வால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. !
author

ரிஷ்வன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ரிஷ்வனின் ” டெஸ்ட் ட்யூப் காதல் ” என்ற கதைத் தலைப்பு நகைச்சுவையாக உள்ளதே என்று படிக்கத் துவங்கினேன், முழுக்க முழுக்க பயோடெக்னாலஜி , ஐ.வி.எப். டெக்னாலஜி போன்ற புதுமையான சூழலில் ” பழமையான ” காதலைப் புகுத்தி அதில் ஒரு பிரிவையும் உண்டுபண்ணி, காதலர் இருவருமே மணமான நிலையில், அவர்களுக்குப் பிறந்துள்ள ஒரு குழந்தையையும் காட்டி வியப்பில் ஆழ்த்திவிட்டார் ரிஷ்வன்! அருமையான நடை. டாக்டர் பத்ரிநாத்தின் உரை நல்ல நகைச்சுவை.! பாவம் புவனா! அவள் காதலித்த பிரதீப்புடன் சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அவனின் பிள்ளையோடு வாழ்கிறாளே! அது போதும். இரசித்து படித்த கதை இது. வாழ்த்துகள்….டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள திரு ரிஷ்வன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் கதை பற்றி மேலும் யோசித்தேன்.

    1. அவ்வளவு அன்யோன்யமாக காதலித்தவர்கள் அது பற்றி தங்களின் பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்துடன் அவன் அமெரிக்கா சென்றிருக்கலாமே? இருவருமே ஏறக்குறைய நல்ல அந்தஸ்தில்தானே உள்ளவர்கள்? பெற்றோர் நிச்சயம் சம்மதித்து இருப்பார்களே?

    2. வயதான பெற்றோர் கண்ணை மூடுவதற்குமுன் பிள்ளைகளின் திருமணத்தையாவது பார்த்துவிட வேண்டும் என்பது எவ்வளவு அபத்தமானது என்பதை இக் கதை சுட்டியுள்ளது. பெண் மனம் அறியாமல் அவளுக்கு கட்டாயத் திருமணம் முடித்துவிட்டு கண்ணை மூடுவதில் என்ன பயன்? அதன்பின் அவள் சந்தோஷமாக வாழ்வாளா என்பதல்லவா முக்கியம்? இந்த விஷயத்தில் நம் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் எதிர்கால மணவாழ்க்கை பற்றி யோசித்து முடிவெடுப்பது நல்லது…டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. Avatar
    ரிஷ்வன் says:

    திரு. ஜான்சன் அவர்களே… காதலிப்பவர்கள் எல்லாம் வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்துடன் காதலிப்பதில்லை. பிறகு கூறிக்கொள்ளலாம் என்று இருந்திருக்கலாம் அல்லது பெற்றவர்களுக்கு தெரியாமல் திருமணம் முடித்து பிறகு தெரிவிக்க நினைத்து இருக்கலாம்.

  4. Avatar
    Dr.G.Johnson says:

    ஆமாம் திரு ரிஷ்வன் அவர்களே, இப்போதெல்லாம் காதல் அப்படித்தான். திரைப் படங்களின் தாக்கம் இளம் வயதினரிடையே காதல் உணர்வை அதிகரித்துள்ளது. பள்ளிப் பருவத்திலேயே காதலிக்கத் துவங்கி விடுகின்றனர். இதற்கு கைப்பேசி வழி குறுஞ்செய்தியும் , இணைய வழி மின்னஞ்சலும் பெரிதும் பயன்படுகின்றன. இவர்கள் காதலிக்கத் துவங்கியதும் பெற்றோர் பற்றி எண்ணுவதில்லை. பெற்றோர் தடை செய்தால் நிலைமை விபரீதமாகி விடுகின்றது.அதனால் காதலிப்பவர்களுக்கு பெற்றோரிடம் பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்ற தைரியம் வந்துவிட்டது. இந்த கதையில் வரும் புவனா சூழ்நிலை காரணமாக, கட்டாய திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறாள். அப்போதாவது தன் காதலைக் கூறி மன்றாடியிருக்கலாம். ஆனால் தந்தையின் உடல் நலம் கருதி அவள் அதை மறைத்திருக்கிறாள்.அதோடு உடன் திருமணம் செய்யவேண்டுமெனில் பிரதீப்பின் மேல்படிப்பு கெடும் என்றும் எண்ணி அவனையும் தியாகம் செய்துவிட்டாள். பாவம் அவள்!…..டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *