டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 15

This entry is part 11 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013


ஜெயஸ்ரீ ஷங்கர் – புதுவை.

என்னசெய்வதென்றே அறியாத சித்ரா , பதட்டத்தில் கௌரி…..கௌரி….என்னாச்சும்மா…..இங்க பாரு..இதோ…இதோ….என்னைப் பாரேன்…கெளரிம்மா…என்று மகளின் கன்னத்தை பட படவென்று தட்டிய சித்ரா பக்கத்திலிருந்த தம்ளரில் இருந்து தண்ணீரை எடுத்து ‘சளக்…சளக்’ கென்று கௌரியின் முகத்தில் தெளிக்கவும்….சட்டென்று கண்களைத் திறந்த கௌரி குழப்பமான பார்வையில் “என்னாச்சு”…..? என்று கண்களைச் சுழற்றி அறையை பார்வையிட….அருகில் கவலையோடு நின்றிருந்த அம்மாவையும் வசந்தியையும் பார்த்ததும் மேலும் குழம்பினாள். அம்மா…அம்மா….என்று பிதற்றிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள் கௌரி.

கண்ணைத் திறந்து என் நெஞ்சில் பாலை வார்த்தேடி …! இதை நான் எங்க போய் சொல்வேன்..? பகவானே…சித்ராவுக்கு வார்த்தைகள் நெஞ்சை முட்டிக் கொண்டு நின்றது.

வசந்தி… கொஞ்சம் இவளைப் பார்த்துக்கோ…நான் கௌரிக்கு குடிக்க சூடா ஒரு காப்பி போட்டு எடுத்துண்டு வரேன்…என்று பர பர வென்று அடுக்களைக்குள் போனவள் ஸ்விட்சைத் தட்டி .மைக்ரோவேவில் பாலை வைத்து ஒரு நிமிஷத்தை செட் பண்ணிவிட்டு, பூஜையறைக்குள் நுழைந்தவள் கையில் கிடைத்த பணத்தை மஞ்சள் கரைத்து நனைத்த துணியில் வைத்து வேண்டிக் கொண்டே முடிச்சுப் போட்டு கண்ணீர் மல்க குருவாயூரப்பனைத் தொழுது படத்துக்கு கீழே ‘ஒழிஞ்சு’வைக்கிறாள்.மனம் பதபதைக்கிறது. கையும் ஓடலை காலும் ஓடலை என்ற நிலைமை சித்ராவுக்கு.

அடுக்களைக்கு வந்து காப்பியை கலந்து எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வருகிறாள். கௌரி, இந்தாக் காஃபி என்று சிறிது சிறிதாக டம்ப்ளரில் விட்டு கொடுத்தவள், பயப்படாதே …இதொண்ணுமில்லை ..கவலைப் படாதே, தைரியமாயிரு…என்று ஆறுதலாக் அவள் தலையைத் தடவிக் கொடுத்தவள்….கௌரியின் முகத்தைப் பார்க்கிறாள். சாதாரணமாக இந்த விஷயத்தில் சந்தோஷத்தால் மலர்ந்து புன்னகை ததும்ப வேண்டிய கௌரியின் முகம்.சோகத்தில், பயத்தில் கூம்பிக் கிடந்தது. என்ன தான் வாய் வார்த்தையில் தைரியமாக பேசினாலும் உள் மனம் துவளுவது முகத்தில் நிறைந்திருந்ததை சித்ரா கவனித்தாள்.

தனக்கு மட்டும் இந்த விஷயத்தில் சந்தோஷமா என்ன? அல்லது எப்படி சந்தோஷமாக இதை ஏற்றுக்கொள்வது…?

கல்யாணச் சத்திரம் தேடித் பிடித்து, ஊருக்கெல்லாம் பத்திரிகை வைத்து அழைத்து, கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்து , பட்டுப் புடவைகள், நகைகள், என்று கடை கடையாய் தேடிப்போய் பார்த்துப் பார்த்து வாங்கி மகளை அழகு பண்ணி கல்யாணக் கோலத்தில் மாலையும் கழுத்துமாய் தழையத் தழையத் முஹூர்த்தத்துக்கு மடிசார்ப் புடவை கட்டிண்டு கழுத்து நிறைஞ்ச திருமாங்கல்ய சரடோட பக்கத்துல மாப்பிள்ளையையுமாப் பார்த்து ரசிக்க கனவு கண்டிருந்தவளை, பாலைவனத்தில் நிறுத்தி கதற வைத்தது போல ஒரே நாளில் என்னைப் பார்த்து நீ ‘பாட்டி’ ஆயாச்சுன்னு சொன்னாக்கா என்னவாக்கும் பண்றது? ஆசையில் மண் விழுந்ததுமில்லாமல் தலையில் இடி விழுந்தால்….!எல்லாம் என் தலையெழுத்து….இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு கல்லூளி மங்கியா மூணு மாசத்தைக் கடத்திட்டு இப்பச் சொல்றா…இப்படி தனியா விட்டுட்டுப் போன அவருக்கு வந்த சாவு நேக்கு வந்திருக்கப் படாதா..? இப்போ இப்படி வாயும் வயிறுமா இருக்கறவளை பரிதவிக்க விட்டுட்டு நான் தூக்குலையா தொங்க முடியும். பாவி மகளே..என்னை இப்படி புலம்ப வெச்சு பைத்தியம் பிடிக்க வெச்சுட்டியே…நான் என்னத்த செய்வேன்..? அக்கம் பக்கம், சொந்தக்காரான்னு இன்னும் எத்தனை இருக்கு….அவா கேள்விக்கும், பார்வைக்கும் என்னவாக்கும் பதில் சொல்றது? மனசு பூராவும் ஆக்ரோஷ அலைகள் அடித்துக் கொண்டே இருந்தது.

கௌரி…என் தங்கமே ….நமக்கு இந்த மாதிரி துரோகியோட குழந்தை வேண்டாம்டி….நல்ல லேடி டாக்டராப் பார்த்து காதும் காதும் வெச்சாப்போல ….ஒத்துக்கோடி . இப்பவும் சொல்றேன்…..அந்த பிரசாத் வீட்டுக்கு போயி அவா கிட்ட உண்மையைச் சொல்லி அவா கையில கால்ல விழுந்தாவது…….

ஸ்டாப் இட் ப்ளீஸ்…..! உனக்கு வேணா கார்த்தி துரோகியாத் தெரியலாம்…ஆனா என்னால அதை ஏத்துக்க முடியலை. அவனோட சூழ்நிலை அப்படி. என்னை அவன் வெறுக்கறா மாதிரி நடிக்கிறான். அது அவனோட சுயநலத்துக்காக. இதை நான் அன்னிக்கே புரிஞ்சுண்டாச்சு. அதனாலத் தான் என்னிக்கு அவனை கடைசியா பீச்சுல பார்த்தேனோ அன்னிக்கே என்னோட ஃபோன் நம்பரைக் கூட மாத்திட்டேன். இது துரோகத்துல உருவான கரு இல்லை… கௌரி அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியது கண்டு, சர்வ நாடியும் அடங்கியபடி இவளிடம் இனி என்னோட எந்த நல்ல வார்த்தையும் செல்லாது…என்பதை உணர்ந்து கொண்டவளாக சித்ரா அங்கிருந்து மெல்ல நகர்ந்தாள் .

நடப்பது ஒவ்வொன்றையும் கவனித்து வந்த வசந்தி, தனது சந்தேகத்தையும் சேர்த்து, “அய்யைய…. கெளரிம்மா….மோசம் போயிட்டாங்க போலிருக்கு. எந்த நாசமாப் போறவன் இவங்களைப் போயி இப்படி ஏமாத்தி நாசம் பண்ணீட்டு போனானோ.இம்புட்டுப் படிச்சு பெரிய உத்தியோகத்துல இருக்குற இவங்களுக்கே இந்த நெலமை….இப்படி ஒரு தங்கமான பிள்ளைய நாறடிச்ச அந்த கஸ்மாலம்…நாதாரி…அவன் குடும்பத்தோட நாசமாப் போக என்று முணுமுணுத்துக் கொண்டே விரல்களை நெட்டி முறிக்கிறாள் . மனத்துக்குள் வருத்தமும் கண்ணில் சோகமும் முகம் முழுதும் பரவி இருந்தது.

அடுத்த அறையிலிருந்து வசந்தி மனசுக்குள் புலம்புவதைப் பார்த்த சித்ரா கண்களில் கண்ணீர் மல்க , இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்லிப்புடாத வசந்தி…..என்று வார்த்தையால் சொல்ல இயலாமல் மெளனமாக சைகையால் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அம்மா….இத்தப் போயி நா வெளிய யார்கிட்டயும் சத்தியமா மூச்சு விடமாட்டேன்.நான் கௌரியம்மாவை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறேன். நீங்க கவலைப் படாமே தைரியமா இருங்க..என்று பதிலுக்கு சைகை செய்தவள் ..ஆனால்…இந்தக் குழந்தையை மட்டும் கெளரிம்மா பெத்துக்கிறட்டும். அந்தச் சின்ன உசுரை வெளிய வரவிடுங்கம்மா…! என்று அழுதபடியே ஓடிச் சென்று சித்ராவின் காலடியில் விழுந்து தேம்புகிறாள் வசந்தி.

இதைப் பார்த்த கௌரி, என்னை நம்பி இருக்கும் உயிரை கொல்லும் அளவுக்கு மனசாட்சி இல்லாதவங்க இல்லை. என்னோட இந்தக் குழந்தை பிறக்கும். நீ அழாதே எழுந்திரு வசந்தி. எங்கம்மாவும் நல்லவங்க தான். நான் தான் உனக்கு முன்னமே சொன்னேனே , மனசுக்குள் எதையும் வெச்சுக்க மாட்டாங்க. நெனைச்சதை மறைக்காமல் சொல்லிடுவாங்க.

என்னடி கௌரி….விஷயம் இப்படி கைமீறி அம்பலமாயிண்டு இருக்கே….சித்ரா வாயில் தன் புடவைத் தலைப்பை வைத்து மூடியபடி விம்முகிறாள்.

அதற்குள் வசந்தி வாசலில் வந்து விழுந்த அன்றைய செய்தித்தாளை எடுத்துப் புரட்டியபடியே….”அம்மா…இங்க பாருங்க ஒரு பொண்ணு பண்ணியிருக்குற காரியத்தை…இதே போலத் தான் …அவ காதலன் ஊட்டாண்ட போய் உண்ணாவிரதம்னு குந்திக்கிச்சாம்..நீங்க கூட அப்படி செய்து அந்தாள தெருவுக்கு இழுககோணம் , சும்மா விடக்கூடாது…” என்ன சொல்றீங்க..நா சொல்றது கரீட்டு தான…!

போடி பைத்தியம்….அவனைத் தெருவுல இழுத்தால் இவளும் தான் தெருவுக்கு வரணம். அவனுக்கு வேற கல்யாணமே ஆயாச்சாம். அதான் பிரச்சனை. ஆமா உன் குடும்பத்துல நடந்த அநியாயத்துக்கு நீ ஏதாவது இது மாதிரி செய்ய முடிஞ்சதா,அப்படித்தான். இதெல்லாம் போயும் போயும் நம்மாத்துலையா நடக்கணம்….என்று ஓச்சை எடுத்து அழ ஆரம்பிக்கிறாள் சித்ரா.

ச்சே……அம்மா….கொஞ்சம் சும்மா இரேன். இப்ப என்னாயிடுத்துன்னு இப்படி அழுது ஆகாத்தியம் பண்றே ? கௌரியின் கோப முகம் சித்ராவை நோக்கியது. நான் இனிமேல் எதுக்கும் அழ மாட்டேன். அதே மாதிரி, நீ தான் சொல்லுவியே, வாழ்கையில் எந்த கஷ்டமும், சுகமும் நமக்கு மட்டும் முதலாவதா வரது கிடையாதுன்னு. இந்தாத்தில் இனிமேல் யாரோட அழுகைச் சத்தமும் கேட்கப் படாது…புரிஞ்சுதா?

பொறக்கப் போற குழந்தையின் அழுகை சத்தம் கூடவா? சித்ரா சுமுகமான சூழ்நிலைக்கு நிலைமையை மாற்ற நினைத்தவளாக முகத்தில் வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்தபடி கண்களைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே கேட்கிறாள்.

அம்மா….அம்மா….உன்னை நேக்குத் தெரியாதா ? நான் உன் பொண்ணும்மா…..நீ வெளில தான் பலாப் பழம் மாதிரி முள்ளு முள்ளா….ஆனால் உள்ளுக்குள்ள எத்தனை இனிமையானவள்மா நீ…!உன்னால் யாரோட மனத்தையும் காயப்படுத்த முடியாது. அப்பறம் எதுக்கு வீணா ட்ரை பண்றே ? ஆரம்பத்துலயே விட்டுக் கொடுத்துட வேண்டியது தானே? கௌரி சித்ராவை கட்டிக் கொள்கிறாள்.

அதானே….பார்த்தேன். அப்பறம் நேக்குன்னு இருக்கற பொய் கெளரவம் என்னாறதாம்.? சித்ரா , வாய் வார்த்தைக்கு மகளுக்காக இந்த வார்த்தையைச் சொன்னாளே தவிர உள்ளுக்குள் நெருப்பு கனன்று கொண்டிருந்ததை அவள் மட்டுமே அறிவாள் .

சித்ரா சொன்னதைக் கேட்ட வசந்தியும் குபுக் கென்று சிரிக்கிறாள்.

நீண்ட நாட்கள் கழித்து அவள் சிரிப்பதை அவளே உணர்ந்தவள் கண்களில் பனித்த கண்ணீரை விரல்களால் தட்டிவிட்டு சிறிது பயம் கலந்த வெட்கத்தோடு சித்ராவை பார்க்கிறாள்.

மூவருமே….சூழ்நிலையை மறந்து தனை மறந்து ஏதோ நல்ல காரியம் முடிந்து விட்ட நிறைவில் சிரிக்கிறார்கள். மூவரின் மனமும் லேசாகிறது. , கௌரி….இன்னைக்கு நீ லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோட்டியா…..சாயந்தரமா டாக்டரைப் போய் பார்த்துட்டு வரலாம்…சரியா… என்று கௌரியைப் படுக்க வைத்த சித்ரா ,”வசந்தி…நீ போயி இன்னைக்கு உன்னோட க்ரெச்சை கவனிச்சுக்கோ.
.இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தி வேற…..அந்தப் பிள்ளையார் தான் நம்மள இந்தப் பெரிய தர்ம சங்கட நிலைமைலேர்ந்து நிவர்த்தி பண்ணணம்.

வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவும், வசந்தி வாசல்ல யார் வந்திருக்கான்னு கொஞ்சம் போய் பாரேன்..சித்ரா சொன்னதும் வசந்தி,
நேரங்கெட்ட நேரத்தில் தான் இப்படி யாராச்சும் வந்து நிப்பாங்க? நிம்மதியா அளுவக் கூட முடியாது போல….பால்காரன், பேப்பர்காரன், குப்பைக்காரன்,அயர்ன்காரன்னு …..அலுத்துக் கொண்டே சென்று கதவைத் திறந்ததும்.,

வாசற்படியில் இரண்டு பேர்கள் நின்றுகொண்டு, முகத்தில் இவளை எதிர்பார்க்காததால் ஒரு தயக்கத்துடன், நாங்க பக்கத்து வீடு தான். கௌரி இருக்காளா? என்று உரிமையோடு அழைத்ததும் இல்லாமல்….”சித்ரா மாமி இருப்பாளே….எங்கே மாமியை இப்போல்லாம் கண்ல படறதே இல்லை….என்று கண்கள் அலைபாய கொஞ்சம் சத்தமாக கேட்கவும்,

அவளருகில் நின்றிருந்த அவளது கணவர், “கொஞ்சம் மெல்லமாப் பேசுடி கோதை…..நோக்கு அத்தனையும் மறந்து போச்சா…கௌரியோட அப்பா ஈஸ்வரன் தவறிப் போய்ட்டாரோல்லியோ, மாமி கவலைல இருப்பாளேடி” தன் மனைவியின் காதைக் கடிக்கிறார் வந்தவர்.

அதற்குள் வசந்தி உள்ளே போய் சித்ராவிடம் “பக்கத்துவீட்டுக் காரங்களாம்…புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வந்திருக்காங்க ..என்ன சொல்ல….”.என்று சித்ராவிடம் கேட்கவும்.

இரு…வரேன்…..என்று வாசல் வராண்டாவரை வந்து…வாங்கோ…வாங்கோ…. கோதையா …ஆச்சரியமா இருக்கே….? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் மலர்ச்சியை நிரப்பிக் கொண்டவள் சித்ரா , நான் வேற யாரோன்னு நெனைச்சேன்…ஆத்துல எல்லாரும் சௌக்யமா ? ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் பார்த்து…சித்ரா குசலம் விசாரித்துக் கொண்டே உட்காருங்கோ….உட்காருங்கோ என்று எதிர் சோபாவில் தானும் உட்காருகிறாள்.

சிறிது நிமிட இடைவெளிக்குப் பிறகு…ஆமா….திடீர்னு என்ன விஷயமா வந்த்ருக்கேள்…?

கௌரியைப் பார்க்கணம் மாமி. வேற ஒண்ணுமில்லை மாமி..இவர் என்னை ‘டாட்டா ட்ரிபிள் ஏ இன்ஸ்யூரன்ஸ்’ கம்பெனில டெவெலப்மெண்ட் ஆஃபீசரா சேர்த்து விட்டிருக்கார். எங்க கம்பெனில நல்ல நல்ல பென்ஷன் பிளான் , இன்வெஸ்ட்மென்ட் ப்ளான்ஸ், டாக்ஸ் பெனிஃபிட் ப்ளான்ஸ் எல்லாம் கூட இருக்கு. அதான் கௌரியைப் பார்த்து அவள் ஆபீசுக்கு போறதுக்கு முன்னாடி சொல்லிட்டு எனக்கு அவ கையால ஒரு பிசினெஸ் கொடுக்கச் சொல்லி கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம். கௌரி புதுசாக் கார் வாங்கிருக்கா போலருக்கே. சூபெர்ப் கலர். சொல்லிக்கொண்டே ஒரு ஃபைலில் இருந்து சில ஃபாரம்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கோதை. கண்கள் கெளரியைத் தேடிக் கொண்டிருந்தது.

அருகிலிருந்த அவளது கணவர்,…’இதெல்லாம் பொம்பளைங்கள் சமாச்சாரம்’ என்று தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல , டீபாயிலிருந்து ரீடர்ஸ் டைஜெஸ்ட் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்டதும் சித்ரா, மனசுக்குள் ஏதோ கணக்குப் போட்டவளாக ….ஆமாம் கோதை….புதுசா கார் வாங்கிருக்கா கௌரி..என்னவோ பிரமோஷனாம் …அது .சரி.. உன்னோட இன்சுரன்ஸ் வேலைக்கு என்னோட வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம்…..கௌரி ஏதாவது பிளானில் இன்வெஸ்ட் பண்ணினாலும் பண்ணுவா….நீயே…அப்பறமாஇன்னொரு நாள் வந்து கேளேன்…அவள் இன்னைக்கு தலை வலின்னு நன்னாத் தூங்கிண்டு இருக்காள்.நேக்கு இதொண்ணும் சரியாத் தெரியாது, மழுப்பி பேசி விட்டு மெல்ல எழுந்து இருங்கோ…காப்பி சாப்ட்டுட்டு போலாம் என்றபடி சமையலறை நோக்கிச் செல்கிறாள் சித்ரா.

கௌரி அறையில் இருந்து எட்டிப் பார்த்து வெளியில் வந்தவள், மென்மையான குரலில், சௌக்கியமா ஆன்டி, ? உங்க குரல் கேட்டு வந்தேன். நீங்க பேசினதைக் கேட்டேன்…பட்…இப்போ தான் நான் எங்க ஆஃபீஸ் கொலீக் மூலமா இன்வெஸ்ட்மென்ட் ப்ளானில் கமிட் பண்ணிண்டேன். அதனால எனக்கு இப்ப வேற எந்த ஸ்கீமும் வேண்டாம்…ஐம் சாரி….நான் உங்களை இந்த விஷயத்தில் டிஸ்ஸப்பாயிண்ட் பண்ணிருந்தா மன்னிச்சுக்கோங்கோ. காஃபி சாப்பிடறேளா ?என்றதும்,

இப்பத்தான் சாப்ட்டுட்டு வரோம்…..சரி…அப்ப நாங்க கிளம்பறோம்…சித்ரா மாமி வரோம்..என்று பொதுவாக குரல் கொடுத்துவிட்டு ஃ பைலில் பேப்பர்களை செருகி விட்டு வேகமாக வெளியேறுகிறாள் கோதை. படியிறங்கும்போதே …..”ம்ம்ம்….கௌரிக்கு கர்வம் ஜாஸ்தியாயிடுத்து…அவ முகத்தைப் பார்த்தாலே எழுதி ஒட்டியிருக்கு….இல்லையான்னா…இனிமேல் இங்க யார் வருவா? ” என்ற மனைவியின் சொல்லுக்கு மந்திரமாக “ம்ம்ம்…ம்ம்ம்…..” என்றார் அவர்.

இரண்டு தம்ளர் காப்பியோடு வந்த சித்ரா, ஏண்டி…..வந்தவாள ரெண்டே வார்த்தைல அனுப்பிச்சுட்டியா ? ஏதாவது ஒண்ணு எடுத்துண்டு இருக்கலாமோல்லியோ…? நாளப்பின்ன நம்மளப் பத்தி இவா அவதூறாப் பேசமாட்டா இல்லையா? மனுஷா வேணம். ஆனா, நீயும் உங்கப்பா மாதிரியே வீடு தேடி வந்தவாள வெரட்டி அடிப்பதில் கெட்டிக்காரி தான்.

தூக்கமே வராமல் தவிச்சுண்டு இருக்கறவளப் பார்த்து நீ நன்னாத் தூங்கிண்டு இருக்கான்னு சொல்றே…..மணி எட்டாறது….அவா என்ன நினைப்பா..அதும் இந்தக் கோதை மாமிக்கு ஒண்ணுமே இல்லாட்டாலும் வண்டிக் கதை பேசுவாம்மா…..இப்ப ஒண்ணு எடுத்துக்கறோம்னு வெய்யி….தெனம் ஏதாவது சொல்லீண்டு, ஹெல்த் செக் அப், அது இதுன்னு வந்துண்டே இருப்பா. இருக்கற இருப்புல இவா வேற எதுக்கு? அதான்….நீ .விடு. தப்பா நெனைச்சா என்னை மட்டும் தானே நினைப்பா.நெனைச்சுட்டுப் போறா . ஆனால் இவா பிடுங்கலில் இருந்து இப்போ நான் தப்பிச்சேன்.

இதைக் கேட்ட வசந்தியும்….ஆமாம்மா….நான் கூட நெனைச்சேன் வேளை கேட்ட வேளையில இதென்ன தொந்தரவுண்டு, ஆனா கௌரி மேடம் கரீட்டாத் தான் சொல்லி அனுப்பினாக, என்றாள் .

அம்மா….இப்போ எனக்கு கொஞ்சம் தேவலை. நான் பாட்டுக்கு எப்பவும் போல ஆபீஸ் போறேன்.வேலைகள் நிறைய இருக்கு. என்று கிளம்பத் தயாரானாள் கௌரி.

வேண்டாம்டி , நான் சொல்றதைக் கேளு….டாக்டரை வேற பார்க்கணம். இன்னைக்கு மட்டும் லீவப் போடு. நமக்கு மனசுக்கு கொஞ்சம் அமைதி வேணம் கௌரி.

இன்று, வீட்டிலேயே இன்னும் சற்று நேரத்தில் அவர்களது அமைதி மொத்தமாகக் குலைந்து போகப்போவதை அறியாத சித்ரா.

வசந்தி காலை வீட்டு வேலைகளை முடித்து விட்டு சித்ரா தந்த டிபனை சாப்பிட்டு விட்டு…”வரேன்மா…”எதுனா இருந்தா சொல்லுங்க ஓடியாறேன்” என்று சொல்லிவிட்டு ஹவாய் செருப்பில் காலை அவசர கதியில் நுழைத்துக் கொண்டவள் கேட்டைத் தாண்டி தெருவரை நடந்து செருப்பைத் தேய்த்து தேய்த்து சரி செய்து கொண்டே நடந்தாள் .

வீட்டினுள் ஒரு அமைதி….படர்ந்து பகலே…. இருளாக இருண்டு கிடந்தது. கௌரியும் சித்ராவும் ஒருவருக்கொருவர் எதையும் பேசிக் கொள்ளாமலும் வேறெந்த வேலைகள் எதுவும் செய்யாமலும் உட்கார்ந்திருந்தார்கள். ‘டைமெக்ஸ்’ சுவர் கடிகாரம் மணி மூன்றாகிப் போனதை ராகம் போட்டுப் பாடியது.

அப்போது வாசலில் ‘இண்டிகா கார்’ வந்து ஹாரன் அடித்து நின்றது. சித்ரா கண்ணாடி ஜன்னலைத் திறந்து ஜன்னல் கம்பியூடே முகத்தை அழுத்தி பார்க்கிறாள். “யாராக்கும் நம்மாத்துக்கு வரது?”

அவளது ஆவலில் ஆஸிட் வீசியது போலிருந்தது..அவள் கண்ட காட்சி.

காரிலிருந்து இறங்கியவர்கள் வேறு யாருமல்ல. கல்யாணியும், லாவண்யாவும்….கூடவே இன்னொரு பெண்மணி….லாவண்யாவின் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று முகச்சாயல் முத்திரை ஓட்டுப் பதித்தது.

இவாள்லாம்….இங்க ஏன் வந்திருக்கா..? மனசுக்குள் எழுந்த கேள்வியும், கூடவே…வரட்டும்…நல்லவேளையா வந்து என்கிட்டே மாட்டி யிருக்கா …..கேட்குற கேள்வில…என்று கொண்டே வாசல் கதவைத் திறந்தவள்….பார்வையில், இங்க ஏன் வந்தேள் ? என்ற கேள்வி இருந்தது.

பேச எந்த வார்த்தையும் வராத கல்யாணி……”உங்க பொண் கௌரி, இன்னும் கார்த்தியோட பேசிண்டு இருக்கா…இது நல்லதுக்கில்லை…சொல்லிட்டேன்…..என் பையனுக்கு கல்யாணம் ஆயாச்சுன்னு தெரிஞ்சும்..இது நடக்கறதாக்கும் ..” இது கல்யாணி.

கார்த்தியை மாதிரியே நீங்களும் இல்லன்னு பதில் சொன்னா, நாங்க விட்டுடுவோமாக்கும்..அவனே ஒரு ஃப்ராடு ” இது லாவண்யாவின் அம்மா.

திமிராக நின்று கொண்டிருந்தாள் லாவண்யா. அவள் முகத்தில் துணிச்சல் துணை இருந்தது.

எங்கே கூப்பிடுங்க உங்க கௌரியை…..இருவரும் சேர்ந்து ஒரே வார்த்தையைச் சொல்லவும்.

சித்ராவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.”என்ன நெனைச்சுண்டு இங்க வந்து இந்த மாதிரியெல்லாம் பேசறேள்….?”
உங்க பையன் என்ன அவ்வளவு பெரிய உத்தமனா? அவனே ஒரு அயோக்கியன். ஒரு பெண்ணோட வாழ்கையை நாசமாக்கிட்டு அவன் வேற எவளுக்கு வாழ்க்கை கொடுத்தா என்ன கொடுக்காட்டா என்ன? என்று அவர்களுக்கு மட்டும் கேட்கும் தொனியில் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்கிறாள் சித்ரா.

யாரோட வாழ்கையை யாரு கெடுத்தா? கெடுத்தது யாரு…உங்க பொண்ணு தான்….பீச்சுலயும் பார்க்குலயும் பேசிப் பேசி……அவன் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி….இதெல்லாம் உங்களுக்கே நன்னாருக்கா….இன்னும் எழுதவே கூச வைக்கும் வார்த்தைகளைக் கேட்டதும்…

சித்ரா, வெறியோடு சொன்னாள் …..”எல்லாரும் போங்கோ வெளியே…”

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை…இருந்தாலும் எழுந்தார்கள்…”கூப்பிடுங்க கௌரியை…”

அதற்குள் கௌரியே வெளியே வருகிறாள். முகத்தில் சோகத்தின் சாயல் இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஒரு திமிரின் சாயல். கையில் அன்றைய நாளிதழின் பக்கம்.

இந்தாங்கோ….இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கோ…! செய்தித் தாளை முகத்துக்கு நேராக நீட்டினாள் கௌரி.

வேண்டா வெறுப்பாக அதை அவளது கையிலிருந்து பிடுங்கிப் படிக்கிறாள் கல்யாணி.

“திருமணம் முடிக்குமுன் “மூன்று மாதங்கள்” கர்ப்பவதியாக்கிவிட்டு திருமணம் செய்ய முடியாது என்று நழுவிய தன் காதலனின் வீட்டின் முன்பு பட்டதாரிப் பெண் நியாயம் கேட்டு தொடர் உண்ணாவிரதம் ”

கொட்டை எழுத்தில் படங்களோடு வந்திருந்தது அந்த செய்தி.

படித்துவிட்டு அந்த செய்தித்தாளை சுருட்டி வீசி எறிந்த கல்யாணி, இதை எதுக்கு என்கிட்ட தராள் ..? கேள்வியோடு மற்ற இருவரின் முகத்தைப் பார்க்கவும்.

நாடு இப்படியெல்லாம் கூட போயிண்டிருக்கு. நான் கார்த்திக்கு கல்யாணம் ஆயாச்சுன்னு தெரிஞ்சதும் அவனை விட்டு விலகியாச்சு. நான் அவனைக் கடைசியா பெசன்ட் நகர் பீச்சுல பார்த்தப்போ அவன் ஏதோ அவசரத்தில் கல்யாணம் ஆச்சுன்னு சொன்னான்…அந்தக்ஷணமே நான் கார்த்தியை .” நீ உன் மனைவிக்கு உண்மையா இரு”ன்னு சொல்லிட்டு வந்தாச்சு.

அவன் லாவண்யாவுக்கு ஒரு நல்லது செய்யணம்னு எனக்கு துரோகம் செய்தான். ஆனால் என்ன, அவன் வாழ்க்கை நன்னாருக்கணம்..அதனாலத் தான் நான் அப்படியே ஒதுங்கிட்டேன் .இப்போ என்னோட ஃபோன் நம்பர் கூட அவனுக்குத் தெரியாது.எனக்கும் அவனுக்கும் ஒண்ணுமே இல்லாத போது , உங்க யாருக்கும் என்னோட வந்து பேச ஒண்ணுமேயில்லை …இனிமேல் இங்கே எதையும் கேட்டுண்டு யாரும் வரவேண்டாம்….ப்ளீஸ்…..என்று சொல்லியபடி வாசலைப் பார்த்து கைகளை நீட்டுகிறாள்.

என்னடி….அவன்…இவன்னு ஏக வசனத்தில் பேசறே..? என்னமோ நீ பெத்துப் பேர் வேச்சாப்பல..திமிர் பிடிச்சவளே….என்றபடியே , வந்தவர்கள் மூவரும் கௌரியின் முகத்தில் அறைந்த வார்த்தைகளில் உறைந்து போய் அவமானத்தில் குறுகி வெளியேறினார்கள்.

சற்றைக்கெல்லாம் அவர்கள் வந்த கார் சிலுப்பிக் கொண்டு கிளம்பிச் சென்றது.

லாவண்யாவின் மனத்திற்குள் மட்டும் நிம்மதி தொத்திக் கொண்டது.

அவர்கள் சென்றதும், சித்ரா, கௌரியைப் பார்த்து பிலு பிலுவென்று பிடித்துக் கொள்கிறாள்…..நீ ஏன் சொல்லலை…..?”

அம்மா…இப்ப இதைச் சொல்றதால என்ன ஆகப் போறது..? அவனே நான் இல்லைன்னு சொல்லிட்டான்னு வெச்சுக்கோ….தன்னை காப்பாத்திக்க என்ன வேணா செய்வான்….இல்லையா? அப்போ எனக்கு மன ஏமாற்றம்….!வேண்டாம் …நான் இதைச் சொல்லியிருந்தால் வீணாக அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகமாகும்.அவன் கஷ்டப்பட்டு செய்த ஒரு நல்ல காரியத்துக்கு மதிப்பு இல்லாமல் போகும். அதனால் தான்…என் சுமையை நான் சுகமாக சுமந்துட்டுப் போறேன்.எனக்கு இதில் வருத்தமில்லை..இனி எனக்கு அவன் தேவையுமில்லை. கௌரி தெளிவான பதிலில் சித்ரா திகைக்கிறாள்.

அமைதியாக இருந்த வீடு அமர்க்களைபட்டு மீண்டும் அமைதியானது. மனத்தின் அதீத அலுப்பில் படுக்கையில் சென்று படுத்துக் கொண்டாலும் கௌரிக்கும்,சித்ராவுக்கும் மனசு நிறைந்த கேள்விகள்…அத்தனையும் விடை தெரியாத கேள்விகள்..! புரண்டு புரண்டு படுத்தாலும் புலப்படாத பதில்கள் அவர்களை உறங்க விடாமல் அலக்கழித்தது . இன்னைக்கு கார்த்தால வந்த கோதை மாதிரி இன்னும் நம்ப சொந்தக்காரா….இப்படி இன்னும் எத்தனை பேரை சந்திக்கணமோ…ஒரு நாள் போறதே உம்பாடு எம்பாடா இருக்கே….இன்னும் ஏழு மாசங்கள்…! எப்படித் தான் கழியப் போறதோ..? அதுக்கும் அப்பறம்….?

கௌரி…கௌரி….எழுந்திரு…..கிளம்பு….ஒரு தடவை லேடி டாக்டரைப் பார்த்துட்டு வந்துடலாம்…சித்ரா மகளை எழுப்பிக் கொண்டிருந்தாள்.

இந்தா..இந்த கர்நாடக சில்க் புடவையை கொடுத்து இதைக் கட்டிண்டு வா. முதல் முதலா கார்ல வெளில போறோம்….எல்லாம் சுபமா நடக்கணம்னு பிள்ளையார் கோயிலுக்குப் போயிட்டு அங்கேர்ந்து சத்யம் ஹாஸ்பிடல் போகலாம்…நேக்கு நன்னாத் தெரிஞ்ச டாக்டர் மாலதி அங்க தான் கைனகாலஜிஸ்ட்டா இருக்கா, சீக்கிரமா கிளம்பு கிளம்பு…சித்ரா அவசரப் படுத்தவும் கௌரி எழுந்து கொள்கிறாள்.

சோ ஃ பா மேலே மரகதப் பச்சைக் கலரில் அரக்கு பார்டரில் அழகாக அன்னங்கள் அணிவகுத்து கெளரிக்காக காத்திருந்தது பட்டுப் புடவை.

என்னம்மா நீ….இதையா கட்டிண்டு வரச் சொல்றே…போற இடத்துக்கும் போட்டுக்கற உடைக்கும் பொருத்தம் வேண்டாமா..? எனக்கு சிம்பள் சுடி போதும்.

ஆமா….வேண்டாததுக்கெல்லாம் பொருத்தம் பாரு. பார்க்க வேண்டிய நேரத்தில் கோட்டை விட்டுடு..நீ எதையோ உடுத்திக்கோ…என்று போறபோக்கில் அந்தப் புடவையை அப்படியே மடித்து அலமாரியில் அடுக்கினாள் .

சிறிது நேரத்தில் கார் கிளம்பி கோயம்பேடு வழியாகக் கடந்து குருங்கலீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நின்றது. கௌரி அருகில் இருந்த அம்மாவைப் பார்த்து புன்னகைத்தபடி இறங்கு…கோயில் வந்தாச்சு…என்கிறாள்.

இது லவ குச கோயிலல்லவாடி ….? என்று சொல்லிக்கொண்டே இறங்குகிறாள்.

ம்ம்ம்…..என்ற கௌரி அம்மாவின் கைகளைப் பற்றியபடி நடக்கிறாள்.

கோயில் தரிசனம் முடிந்து கார் நேராக ‘ சத்யம் மருத்துவமனை’ பார்கிங்கில் சென்று மூச்சு வாங்குகிறது.

டாக்டர் ஆப்பரேஷன் தியேட்டரில் இருக்கிறார் கொஞ்ச நேரம் உட்காருங்க என்று ரிசெப்ஷனில் இருந்த பெண் இவர்களிடம் சொல்லிவிட்டு கண்களால் கௌரியை ஸ்கேன் செய்து கொண்டிருந்தாள் அவள்.

இனம் புரியாத உணர்வில் நெளிந்த கௌரி…ம்ம்மா…இந்த ஹாஸ்பிடல் நேக்குப் பிடிக்கலை…வா போலாம்…என்று எழுந்திருக்கிறாள்.

அதே நேரம் இறுதியாக கைகளைத் துடைத்தபடியே வந்த டாக்டர் மாலதி, சித்ராவைப் பார்த்து, உன் டாட்டரா …வா..வா..என்று அறைக்குள் நுழைந்து கொள்ள இருவரும் பின் தொடர்கிறார்கள்.

டாக்டர் மாலதியில் எதிரில் சித்ராவும், அருகில் கௌரியும் அமர்ந்து கொள்ள.,

டாக்டர் கேட்ட கேள்விகளுக்கு கௌரி பதில் சொல்லிக் கொண்டே வர,

ம்ம்…வா டெஸ்ட் பண்ணிடலாம்….என்றவள்…கௌரி அங்க போங்க..என்று அங்கிருந்த வெளிர் நீல நிற திரையின் பின்னால் காண்பிக்கவும்.

கௌரி அங்கு சென்று படுத்துக் கொள்கிறாள்.

கையுறைகளை கழற்றி குப்பை கூடையில் வீசிவிட்டு, சிரித்தபடியே…”கன்ஃபர்ம் ” சித்ரா நீங்க பாட்டியாகப் போறீங்க..கங்கிராஜுலேஷன்ஸ்…வாம்மா கௌரி..உட்கார். என்றவள் அவளது சீரியஸான முகத்தைப் பார்த்ததும்.

எனி ப்ராப்ளம்….!

டாக்டர்….இந்தக் கருவை அழிச்சுட முடியுமா உங்களால..? சித்ரா கேட்டதும் கௌரி விருட்டென்று எழுந்திருக்கிறாள்.

வொய் ….?

விஷயங்கள் மெல்ல மெல்லத் தயங்கி தயங்கி வெளியே வருகிறது…..கௌரியின் சம்மதம் இல்லாமல்.

ஐ…ஸீ …..பட் நொவ் திஸ் இஸ் டூ லேட்.. டி & சி வேணாப் பண்ணலாம்…அதுவும் இன்னும் கொஞ்சம் எர்லியா இருந்திருக்கணம். இப்பக் கூட இதே மாதிரி ஒரு கேஸ் தான், முடிச்சுட்டு வரேன். ஆனால் இப்போல்லாம் தைரியமா பெத்துக்கவும் செய்யறாங்க. அதே சமயம் கலைக்கவும் தயாரா இருக்காங்க.அதெல்லாம் அவங்கவங்க மனநிலமை, சிட்டுவஷன் பொறுத்தது. யூ வெயிட் கௌரி.
எனக்கென்னமோ இது ட்வின்ஸ் மாதிரி தெரியுது….எதுக்கும் இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்…கூல் கௌரி…

டாக்டர் மாலதி பேசிக் கொண்டிருக்கும் போதே, கௌரி அந்த அறையை விட்டு வெளியேறி வரும்போது நிறைய பெண்கள் அவரவர் கணவனோடு பாசத்தோடு தங்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தபடி தனக்குள் தலை குனிந்தபடி கார் வரை சென்று சித்ராவுக்காக காத்திருந்தாள்.

கௌரி….கௌரி…என்று அரக்க பரக்க காருக்கு அருகில் வந்த சித்ரா,என்னடி…நீ பாட்டுக்கு எழுந்து வந்துட்டே…அங்க அவ பாட்டுக்கு ரெட்டைக் குழந்தைகள்ன்னு கல்லைத் தூக்கிப் போடறா…அதைத் தெரிஞ்சுண்டு தான் நீ லவ குச கோயிலுக்கு அழைச்சுண்டு போனியா….? வேண்டாம்டி ..இந்த விஷப் பரீட்சை…..சொன்னாக் கேளுடி கௌரி..

ஏறு……! கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கௌரியின் கனமான குரல்.

டப்…டப்….பென்று பெரும் சப்தத்துடன் காரின் கதவுகள் அடித்துச் சாத்தப்பட்டு அசுர வேகத்தில் கிளம்பி வீட்டை நோக்கிப் பறக்கிறது. வழி பூரா நிறைய ஹாரன்கள் .

கௌரி…நான் சும்மாத்தான் அந்த டாக்டரிடம் கேட்டுப் பார்த்தேன்…என்று சமாதான வார்த்தைகள் சொல்கிறாள்.

இப்ப அனாவசியமா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு….சொல்ல ஆரம்பிச்ச…! கௌரி சொல்லியபடியே சித்ராவை பார்க்கிறாள்.

நீ முதல்ல ரோட்டைப் பார்த்து வண்டிய ஒட்டு…இருட்டு வேற..மத்ததை ஆத்துக்கு போய் பேசிக்கலாம்…என்ற சித்ரா. டாக்டர் கிட்ட பொய் சொல்லக் கூடாதுன்னு தெரியாதா?

ஆனால் இந்த சத்யம் ஹாஸ்பிடல் வேண்டாம்…இந்த மாலதி டாக்டரும் வேண்டாம்…மா.

ஏன் கௌரி…?

குழந்தைகளோட கருவை கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் அழிக்கும் இந்த டாக்டரின் முதல் ஸ்பரிசம் என்னோட குழந்தைகள் மேல பட்டுடக் கூடாது. பேரு தான் சத்யம்…..பண்றதெல்லாம் பாவம்…பொய்..!கௌரியின் குரலில் வெறுப்பு மிகுந்தது.

சரிடி….உன்னிஷ்டம்….சித்ரா சீட்டின் பின்புறம் தலையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

காருக்குள் எஃப் எம் ரேடியோவில் வாணிஜெயராமின் குரல் கணீரென்று கேட்டது.

“வேறு இடம் தேடித் போவாளோ….
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள் …- விதி
ஊழ்வினையில் இவள் அகப்பட்டாள் ..
வேறு இடம் தேடித் போவாளோ…..! ”

பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவின் கண்களுக்குள் நடிகை லக்ஷ்மிக்கு பதில் “கௌரி தெரிந்தாள் ”

நீண்ட வருடங்களுக்குப் பிறகு கேட்ட பாடல்…..இசையை மீறி கண்களில் கண்ணீரை வரவழைத்தது அவளுக்கு.

“சிறு வயதில் செய்த பிழை…சிலுவையெனச்
சுமக்கின்றாள்…..இவள் தரவில்லை பெறவில்லை
தனிமரமாய் நின்றாளே …தரவில்லை பெறவில்லை…
தனிமரமாய் நின்றாளே …வேறுஇடம் தேடிப் போவாளோ…

பாடிக் கொண்டிருந்த ரேடியோயை டக்கென்று அணைத்தாள் கௌரி.

அதைத் தொடர்ந்து க்ரீச் சென்று ப்ரேக் போட்டு கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. லேசாக தூக்கிப் போட்ட சித்ரா…வந்தாச்சா….? என்கிறாள்.

(தொடரும்)

Series Navigationஇராஜராஜன் கையெழுத்து.முக்கோணக் கிளிகள் ! [நெடுங்கதை] மீள் பதிப்பு
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *