தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 6 of 10 in the series 27 ஜூன் 2021

வளவ. துரையன்  

         

                  என்றலும் முகிழ்ந்த குறுமுறுவலோடும் ரசதக்

                  குன்றவர் கொடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.       291

 

குறுமுறுவல்=சிறுநகை; ரசதக்குன்று=வெள்ளிமலை]

 

உமையம்மை இப்படிக் கூறியதும் புன்னகை புரிந்தபடி வெள்ளிமலைக்கு இறைவர் விடைதர, உமை விடைபெற்றுச் சென்றார்.

                  பங்கனகலத் திறைவி வேள் பழுதாகத்

                  தங்கனகலத் தமர்செய்தாதை மனைபுக்கே.               292

 

[பங்கனகலம்=பங்கன்+அகலம்; பங்கன்=இறைவன்; அகலம்=மார்பு; பழுது=தடை; தம்+கனகலம்=தங்கனகலம் ; கனகலம் என்பது வேள்வி நடக்கும் இடம்]

 

சிவபிரானின் இடப்பக்கம் கொண்ட உமையம்மை வேள்வி தடைப்படவும், அதன் காரணமாக, வேள்வி நடைபெறும் கனகலம் என்னுமிடத்தில் ஒரு போர் உண்டாவதற்கும் காரணமாக இருக்கின்ற தன் தந்தையின் இல்லம் சென்றடைந்தார்.

                  காதலனை விட்டுஅவள் எழுந்தருளவும் கண்டு

ஏதிலார் எனத்தமர் இருந்தனர் இருந்தே.                 293

 

[காதலன்=கணவன்; ஏட்திலார்=வேற்றாள்; தமர்=உறவினர்]

 

கணவர் வராது உமையன்னை தாம் மட்டும் தனியாக வரக்கண்டு அங்கிருந்த அன்னை, தந்தை உறவினர் எல்லாம் இவரை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாது வேற்றாள் போல இருந்தனர்.

                  தன்னைஇகழ் தாதையொடு தங்கைய ரொடுந்தன்

                  அன்னையை முனிந்து உலகின் அன்னை அருள்செய்வாள் 294

 

[முனிந்து=கோபித்து]

 

தன்னை இகழ்வது போல உதாசினப்படுத்திய தந்தை, தங்கைகள், தாயார் மீது சினம் கொண்டு கோபித்து உலகுக்கே தாயான உமையம்மை கூறுவார்.

                  பின்னோர் பெறுங்கண் பெறேஎன்

                  என்னோ இவன்பட்டது இன்றே.                          295

 

[ பெறும்=பெற்ற; கண்=கண்ணோட்டம், அன்பு]

 

எனக்குப் பின்னால் பிறந்த என் தங்கைகள் பெற்ற அன்பு உபசரிப்பைக் கூட நான் பெறாது போனேனே. என்ன ஆயிற்று இபனுக்கு”

                  ”இழைப்பாய் இழைப்பாய் இனியாகம்

                  பிழைப்பய் பிழைப்பாய் பிதாவே”                        296

 

[இழைத்தல்=செய்தல்; பிழைத்தல்=உயிர் வாழ்தல்]

 

“தந்தையே! யாகத்தை நீர் விரும்பியபடியே நடத்து, நடத்து; பிழைத்துப் போ! நன்றாக இரு” என வேதனை வெறுப்பில் உமாதேவியார் உரைத்தார்’

                  ”யாயும் கொடியேற்கு இரங்காய்

                  நீயும் கெடவோ நினைப்போ?”                           297 

 

[யாயும்=தாயும்]

 

“தாயே! நீயும் பாவி என் மேல் இரக்கம் காட்ட வில்லையே! நீயும் கெட்டழிவதென்று முடிவு செய்து விட்டாய் போலும்”

                   ”எங்கைமீர்! ஏன் என்கிலீர்

                    தங்கைமீர்!  ஈதோ நலனே”                         [298]

 

”என் தங்கைகளே! நீங்களும் ஏனென்று கேட்கவில்லையே! இது உமக்கே நன்றாக உள்ளதா? இது உமக்கே நன்றாக உள்ளதா?”

                  எம்படைப்புத் தானும் யாயும்

                  கும்பிடப் போலும் குறிப்பே.                            [299]

 

[படைப்பு=பிறப்பு; தான்=தக்கன்; யாய்=தாய்; குறிப்பு=நோக்கம்]

 

நான் பெண்ணாகப் பிறந்ததன் நோக்கம் தந்தை உங்களையும் தாயையும் கும்பிட்டுக் குற்றேவல் செய்து வாழ்வதுதான் போலும்.

                  ”தந்தைஆர்? தாய்ஆர்? தலைவருக்கு

எந்தைஆர்? யாய்ஆர்? எமக்கே”                          [300]

 

[எம் தலைவர் சிவபெருமானுக்குத் தந்தை யார்? தாய் யார்? எனக்கும் கூடத் தந்தை யார்? தாய் யார்?

Series Navigationஞானிகண்ணனால் ஆட்கொள்ளப்பட்ட கவியரசர் கண்ணதாசன்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *