தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 7 of 10 in the series 22 மே 2022

பாச்சுடர் வளவ. துரையன்


பொங்கக் களிற்றுஈர் உரிப் போர்வை கொண்டும்
புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே
சிங்கப் பசுந்தோல்கொடு ஏகாசம் இட்டும்
செய்யப் பெறா வல்லபம் செய்து சென்றே. 551

[ஈர்=-பசுமை; உரி=தோல்; புயம்=தோள்; ஏகாசம்=மேலாடை; வல்லபம்=வீரம்]

பெரிய யானையின் பசுந்தோலை மேலே போர்த்திக் கொண்டும், புலித்தோலை இடையிலே ஆடையாகக் கட்டிக்கொண்டும், கீழே இட்டும், தோள்களில் சிங்கத்தின் பசுந்தோலை மேலாடை போல அணிந்து கொண்டும், ஒரு பூதம் சிவபெருமானைப் போல விளங்கச் செய்ய இயலாதவற்றை எல்லாம் செய்து பார்க்க முயன்றது.


சங்கும் பொலன் கற்பகக் காவும் மாவும்
சதுர்த் தந்தியும் சர்வமும் தேரும் வாரிப்
பொங்கும் கடற்கே புகப்போக வீசும்
பூதம் தபோவாரி கோதம் புரைத்தே. 552

[சங்கு=சங்கநிதி; கா=சோலை; மா=குதிரை; சதுர்தந்தி=ஐராவதம்; தபோவரி=தவக்கடல்; கோதம்=கோபம்; புரைத்து=போலானது

சங்கநிதி, கற்பகச் சோலை, உச்சயிச்சிரவம் என்னும் குதிரை, ஐராவதம் எனும் யானை, எல்லாம் கடலில் போய் விழுமாறு ஒரு பூதம் எடுத்து வீசியது. இது முன்பு துர்வாசர் இட்ட சாபத்தின் விளைவாக இந்திரனின் எல்லாச் செல்வங்களும் அழிந்த சாபத்தை ஒத்திருந்தது.

நீர்இன்றியே செல்நெருப்புண்டு அறுத்தும்
நெருப்பின்றியே நீரை நேரேகுடித்தும்
கார்இன்றியே நின்று இடிக்கின்ற பூதம்
கடற்கும் கனற்கும் கடும்கௌவை கண்டே. 553
[செல்=எரியும்; கார்=மேகம்; கனல்=நெருப்பு; கௌவை=பழிச்சொல்]

நீர் ஊற்றாமலே சில பூதங்கள் நெருப்பை உண்டு அழித்தன. நெருப்பில்லை என்றாலும் தாகம் தணிய நீரை நிறையக் குடித்தன. மேகம் இல்லாமலே இடி போல முழங்கி ஒலியெழுப்பின சில பூதங்கள். இதனால் நீரும் நெருப்பும் பழிச்சொல்லுக்கு ஆளாயின.


மஞ்சுஊடு வேவக் கொளுத்தும் கனற்கண்
மாநாகம் ஓர்எட்டும் மட்டித்து அவற்றின்
செஞ்சூடி காகோடி சிந்தப் பறித்துச்
சிறைப் புட்குலம் காவலன் சீர்சிதைத்தே. 554

[மஞ்சு=மேகம்; ஊடு=இடம்; வேவ=வெந்திட=மாநாகம்=எட்டு நாகங்கள்; அநந்தன், வாசுகி, கார்க்கோடகன்; தட்சகன்; சங்கன்; குளிகன்; பற்பன்; மகாபற்பன்; செஞ்சூடிகா=சிவந்த முடித்தலை; கோடி=மகுடம்; சிறை=சிறகு; புட்குலம்=பறவைக் கூட்டம்; சீர்=பெருமை]

மேகம் இருக்கும் இடமெல்லாம் வெந்துபோகும்படிச் சுடும் கண் நெருப்பால் உற்றுப் பார்த்துச் சுடுகின்ற எட்டு நாகங்களையும் கொன்று, அவற்றின் தலைமுடிகளில் இருக்கும் நாகரத்தினங்களைப் பிய்த்தெறிந்து பறவைகளுக்கு அரசனான கருடனின் பெருமையை அழித்தது ஒரு பூதம்.

கட்டுகொள் பொற்றேரின் ஞாயிற்றையும்தண்
கதிரிக்கோளையும் பாரிடம் சென்று கௌவிச்
சுட்டுக்கொல் கூசிக்கொல் விட்டும் பிடித்தும்
தொடர்ந்திராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே. 555

[கட்டுகொள்=கட்டிய; பாரிடம்=பூதம்]

ஏழு குதிரைகள் கட்டிய பொன்னாலான தேரில் வலம் வரும் சூரியனையும், குளிர்ந்த கதிர்களை உடைய சந்திரனையும், ஒரு பூதமானது வாயில் கவ்வியும், விட்டும், பின் மீண்டும் கவ்வியும் விட்டும் செய்து இராகு கேதுக்களின் பெருமையைக் குலைத்தது.

மக்காள் நுமக்குஅம்ம! தாய்காணும் யான்நீர்
மறந்தீர்கள் என்றென்று வஞ்சப்பெண் அங்குப்
புக்காள்முலைக் கண்களால் ஆவிஉண்டு அப்
பொய்மாயனார் செய்திபோகப் புணர்த்தே. 556

[புக்காள்=புகுந்தாள்; ஆவி=உயிர்;போகவிடுத்து; பனர்த்தல்=கூடிப் பேசுதல்]

“பிள்ளைகளே! நான் உமக்குத் தாய்; நீங்கள் என்னை மறந்துவிட்டீர்” என்று ஒரு வஞ்சகப் பேய் கூற, அதற்கு
நீ சொல்வது உண்மையாயின், எமக்குத் தாய்ப்பால் தா” என்று ஒரு பூதம் அவ்வஞ்சகப் பேயின் மார்பில் வாய் வைத்து அதன் உயிரையே குடித்துவிட்டது. கிருஷ்ணன் முன்னொரு காலத்தில் பூதகியைக் கொன்ற கதையை விட்டு விட்டு மற்றவர்கள் இதையே பேசினர்.

எயிறார வாயார, மிடறார ஒருகாலும் எரிதீஅறா
வயிறார ஆறாத வடவுஆற இமையோரை வரவாரியே. 557

[எயிறு=பல்; மிடறு=தொண்டை; ஆர்தல்=நிறைதல்; அறாத=நீங்காத; வடவு=களைப்பு; இமையோர்=தேவர்கள்]

பல் நிறைய, வயிறு நிறைய, தொண்டை நிறைய உண்டாலும், என்றும் அணையாத வயிற்றுப் பசி தீர்ந்து உடல் களைப்பு நீங்குவதற்குப் பூதப்படைகள் தேவர்களை வாரி விழுங்கின.

அரிது இன்றுபோர் என்று கோன்அஞ்சன
அமிர்தோடும் அமிர்துண்டெழும்
கரிதின்று பரிதின்று தேர்தின்று
முளி கூளி களிகூரவே. 558

[கோன்=இந்திரன்; கரி=யானை; பரி=குதிரை; முளி=வறட்சி; கூளி=பேய்; களி=மகிழ்ச்சி]

இனியும் தன்னால் போரிட இயலாது என்று இந்திரன் எண்ணி அஞ்ச, பூதங்கள் அவனின் ஐராவதம் எனும் யானையையும், உச்சயிரஸ் எனும் குதிரையையும் தின்றதோடு அவனின் தேரினையும் தின்று தீர்த்தன.

தேர்இல்லை கரிஇல்லை பரிஇல்லை இவைநிற்க
தேவு என்பதோர்
பேர்இல்லை சுரராசன் விடுசேனை பேய்தின்று
பேய் ஆகியே. 559

[கரி=யானை; பரி=குதிரை; தேவு=தேவர்; சுரராசன்=தேவேந்திரன்]

தேவேந்திரனின் தேர்ப்படை அழிந்தது. யானைப்படை அழிந்தது. குதிரைப் படை அழிந்தது. இதனால் தேவர்கள் என்னும் பெயரும் அவர்களுக்கு இல்லாது போகவே அவர்களும் பேய்களாயினர்.

பரந்ததரனார் படைஊழியின் ஆழியை ஒத்தது
பாய்எரிகொன்று படுங்கடல் போல்குறைபட்டது
புரந்தரனார் படைவந்து படும்படும் உம்பர்கள்
பூதங்களும் வேதாளங்களு மாயே புகுதவே. 560

[பரந்தரனார் படை=சிவபெருமான் படை; ஆழி=கடல்; புரந்தரனார்=இந்திரன்; உம்பர்=தேவர்]

சிவபெருமானின் படை எங்கும் பரவும் ஊழித்தீயை ஒத்தது. ஊழித்தீயால் கடல் வற்றுதல் போல இந்திரன் படைகள் அழிந்தன. இறந்தழிந்த இந்திரனின் படையினர் வேதாளங்களாக பூதங்களாக மாறி சிவபெருமானின் படையுடன் சேர்ந்துகொண்டு உயிர் பிழைக்கலாயினர்.

தந்தடி தின்றனர் தந்தலை மூளை விழுங்கினர்
தத்தம் உருத்துரும் ஆறுதடுத்து மடித்தனர்
சிந்தடி வன்குறளால் அலகைக்குல மாகியே
தேவர்பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே. 561

[தந்தடி =தேவர்களின் உடல் இறைச்சி; உகுத்தும்=சிந்தும்; குறள்=குட்டை; அலகை=பேய்]

பூதங்கள் தேவர்களின் உடல் இறைச்சியைத் தின்றனர். மூளைக் கொழுப்பை விழுங்கினர்.ஆறு போலப் பெருக்கெடுத்தோடும் இரத்தத்தை தடுத்துக் குடித்தனர். சின்ன அடிகளை உடைய குட்டிப் பூதங்களினால் பேய்கள் மற்றும் வேதாளங்களான தேவர்களும் பிறப்பு இறப்பு இல்லாத சிவகணத்தவர்களாயினர்.

ஆடாவிழிகளைக் காகம் அமர்ந்து பறிப்பன
அடிபடி தோயாதன கதநாய்கள் அலைப்பன
வாடாமிஞிறு இமிராமுடி மாலை துகைப்பன
வல்வாய் எருவைகள் வானோர் பெருமிதம் வாழியே. 562

[ஆடா=இமைக்காத; கால்=பூமி; படி=பூமி; தோயாத=படியாத; கதம்=கோபம்; மிஞிறு=வண்டு; இமிறு=மொய்க்காத; துகைத்தல்=மிதிபடல்; எருவை=கழுகு]

தேவர்களின் இமைக்காத விழிகளைக் காக்கைகள் வந்து கொத்தின; நிலத்தில் படியாத அவர்களின் கால்களைச் சினம் கொண்ட நாய்கள் வந்து கடித்துக் குதறின; வாடாத மாலைகள்,பறவைகள் மற்றும் விலங்குகள் கால்களில் மிதிபட்டன; வானத்துத் தேவர்கள் இப்படியா பெருமைப்பட வேண்டும்?


போர்த்தேர் இவுளி தின்று ஆளும்
பாகும் மிசைந்து பூட்டழிந்து
தேர்தேர் என்னவரும் பேய்த்தேர்
தேவர் உலகில் திரியுமால். 563

[இவுளி=குதிரை; பாகு=பாகர்; பூட்டழிந்து=கட்டுப்பாடின்றி; பொய்த்தேர்=கானல்நீர்]

போரிட வந்த தேர்களின் குதிரைகளைத் தின்று அதைச் செலுத்திய பாகர்களையும் தின்றுவிட்டபடியல் அத்தேர்கள் செலுத்த ஆளில்லது அவையும் பேய் என எண்ணும்படி அங்குமிங்கும் திரிந்தன.

அமையோம் என்னும் அலகைஇனம்
தின்றுவிடாப் பண்டுஅமிர்துண்ட
இமையோர் இமையாப் பேயாகி
இந்தர லோகத்து ஈண்டுவரால். 564

[அமையோம்=அடங்கோம்; அலகை=பேய்; இமையோர்=தேவர்; இமையா=கண்ணிமைக்காத]

நாங்கள் பசி அடங்கோம் என்று பேய்கள் தேவர்களைத் தின்றபடியே இருக்க, முன்னர் அமுதம் உண்ட தேவர்கள், இமைக்காத கண்கள் உடைய பேய்களாகி பேய்களின் வயிற்றுப் பசி தணிக்க இயலாதவர்களாக இந்திரலோகம் போயினர்.


முடைக மழ்ந்து தசை இழந்து
முது நரம்பொடு என்புமாய்
அடைய இந்த்ர லோகமும்
பசாச லோக மாகவே. 565

[தேவர்கள் பேய்களானதால் அவர்கள் உடலில் நறுமணம் ஒழிந்து, துர்நாற்றம் வீசத் தொடங்கியது. உடம்பின் தசைகள் எல்லாம் வற்றிப் போய் வறண்ட நரம்பும் எலும்புமாய் மேல் உலகம் போக, இந்திர லோகமும் பேய் உலகம் ஆனது.

முடை அமுங்கி அமிர்தம் நாறி
அழக மைந்த மொய்ம்பினால்
அடையவும் பசாச லோகம்
இந்த்ர லோகம் ஆகவே. 566

[முடை=துர்நாற்றம்; அமுங்கி=மறைந்து; நாறி=மணம் வீசி; மொய்ம்பு=உடம்பு; பசாசலோகம்=பேயுலகம்]

பேய்கள் அமுதம் உண்ட தேவர்களின் உடல்களைத் தின்றதால் அவற்றின் உடலிலிருந்து துர்நாற்றம் அகன்று நறுமணம் வீசத்தொடங்கியது. அவற்றின் உடல்களும் அழகுடன் திகழ்ந்ததால் பேய்கள் வழும் வேதாள உலகம் தேவலோகமாயிற்று.

பின்னையும் பிதாமகன் படைக்கப் பேரமர்
முன்னையின் எழுமடி முடுகி மூளவே. 567

[பிதாமகன்=பிரமதேவன்; எழுமடி=ஏழு மடங்கு; மூளவே=மூண்டது]

இவ்வாறாகத் தன் படைகள் அழிந்து போவதைக் கண்ட பிரமதேவன் மேலும் அவை போன்ற படைகளைப் படைக்கப் போரானது முன்பை விட ஏழுமடங்கு உக்கிரமாக மூண்டது.

பித்த வானவர் எங்கே பிழைப்பது
மொய்த்த பூதம் வயிற்றெரி மூண்டவே. 568

புதிய படைகளைக் கண்டதும் பூதப்படைகளின் வயிற்றில் பசித்தீ பற்றி எரியலாயிற்று. தக்கன் வேள்வியில் அவி உண்ணப் பித்துப் பிடித்து வந்த தேவர்கள் எனி எங்கே தப்பிப் பிழைக்கப் போகிறார்கள்?

மேலும் கீழும் வெளிப்பட வான்விடும்
கோலும் குத்தமு மோவினை கொள்ளியே. 569

[கோல்=அம்பு; குத்தம்=தண்டாயுதம்; கொள்ளி=நெருப்புண்டாக்கும் கொள்ளிக்கட்டை]

வானமும் [பூமியும் அளாவத் தேவர்கள் எய்த அம்புகள் மற்றும் தண்டாயுதம் ஆகியவற்றைப் பூதப்படைகள் பிடித்து விழுங்க அவையே அவற்றின் வயிற்றுப் பசித்தீயை மேலும் பற்றி எரியச் செய்யும் விறகுக் கட்டைகள் ஆயின.

விட்ட தேர்எல்லாம் வாரி விழுங்கஓர்
இட்ட பேருதரத் தீ எரிவதே. 570

[உதரம்=வயிறு; தீ=பசி நெருப்பு]

பிரமன் புதிதாக விட்ட தேர்ப்படைகள் எல்லாம் பூத கணங்கள் வாரி எடுத்து உண்டு விழுங்கத்தான் போலும். பூதகணங்களின் வயிற்றில் பசித்தீ பற்றி எரிந்தது.

புக்க வேழம் பொரியப் புகைபுறம்
கக்க ஏழு பொழிலும் கதுவவே. 571

[புக்க=புகுந்த; வேழம்=யானை; கக்க=வெளிப்பட; ஏழுபொழில்=ஏழு உலகம்]

பூதப்படைகள் யானைகளை வரி விழுங்க, தீயிலும் யானைக் கொழுப்பிலும் தீய்ந்து கிளம்பிய புகைமூட்டம் ஏழு உலகங்களிலும் சென்று படிந்தது.

இரிந்தது அப்பறம் இந்திரன் ஏவலால்
விரிந்ததீ அடையச் சென்று விம்மவே. 572

[இரிதல்=அழிதல்; விம்முதல்=கலங்குதல்]

இந்திரன் ஏவிய நெருப்புப்படைகள் நிலைகுலைந்து அழிந்து இருந்த இடம் தெரியாமல் கலங்கிப் போயின.

சேனை எல்லாம் திரிய விழுந்தன
ஆனை எல்லாம் அணிஅணியாகவே. 573

[திரிய=திரும்பவும்]

சேனை வீர்ர் படைகள் எல்லாம் திரும்பவும் முன்போலவே விழுந்தன. யனைப்படைகளும் அவ்வாறே வரிசைவரிசையாக வந்து அழிந்தன.

ஆழம் எட்டுங்கொல் அவ்வயிறு எண்டிசை
வேழம் எட்டும் புகப்புக வீழவே. 574


பூத கணங்கள் எட்டுத்திக்கு யானைகளையும் தம் வயிற்றில் விழ விழுங்கின என்றால் அவற்றின் வயிறு ஆழம் எவ்வளவு என்று யாரால் அளந்தறிய இயலும்?

வீழ்ந்த வேழங்கள் வெந்துவயிற்று வீழ்ந்து
ஆழ்ந்தது அண்ணல் அயிரா பதமுமே. 575

இவ்வாறு வீழ்ந்த யானைகளில் இந்திரனின் பட்டத்து யானையான ஐராவதமும் வெந்தழிந்தது.

மெய்அடங்க வெந்தார்சிலர் விண்ணவர்
கைஅடங்கிய செந்தீக் கதுவவே. 576

[ மெய்=உடம்பு; அடங்கழிய; கதுவ=பற்ற]

தேவர்களில் பலர் பூத கணங்களின் கைகளில் பற்றியிருந்த தீய்க்கு ஆளாகி உடல் வெந்தழிந்தனர்

சோற்றுப் பாவகன் வெந்தனன் சூழ்திசை
வேற்றுத் தேவர் எழுவரும் வேவவே. 577

[வேவவே=வெந்து போகவே

எங்கும் பரவிய தீயால் சோறு சமைக்க உதவும் பாவகன் என்னும் அக்கினியும் அழிந்தான். சுற்றி நின்ற திசைகளைக் காக்கும் திசைக்காவலர் எழுவர் வெந்தனர்.


சாலத் தீயில் அரக்கர் உபாதிகள்
ஆலத் தீயில் அறவெந்து அவியவே. 578

[சால=மிகுதி[ உபாதி=உடம்பு; ஆலத்தீ=ஆலகால நஞ்சு]

பூதகணங்கள் உமிழ்ந்த ஆலகாலப் பெருந்தீயில் அரக்கர்கள் உடல்கள் அழிந்தன.

அடைய வெந்தனர் துவாதசா தித்தரும்
உடைய வெங்கதிர் தம்மை உருக்கவே. 579

[ தாத்துரு, சக்கரன், அரியமன், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான், திவச்சுவான், பூடன், சவித்துரு, துவட்டா ஆகியோர் பன்னிரு சூரியர்கள் ஆவர்]

சூரியக்கதிர்கள் தம்மை வருத்தி உருக்கச் செய்ததால் துவாதசாத்திரர் எனப்படும் பன்னிரு சூரியர்களும் பெருந்தீய்க்கு ஆளாயினர்.

தடஞ்செய்து ஏகாதசரைத் தனித்தனி
முடஞ்செய்தே அவர் முத்தெடுத்து எற்றியே. 580

[தடம்=பெருமை; ஏகாதசர்=உருத்திரர் பதினொருவர்; முத்தெருது=மூத்த காளை]

உரித்திரர் பதினொருவரையும், பெருமை அழியச் செய்து அவர்களின் வாகனமான கிழட்டுக்காளைகளை மோதி அழித்தனர்.

Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 10இரங்கலுரை: பெரும்புலவர் முகமட் ஹன்ஸீர்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *