தந்தையானவள் – அத்தியாயம் -2

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

 

“ நீ தடிச்சுப் போயிட்ட ராஜி” என்றாள் அம்மா. குரலில் ஒரு அதட்டல்.அம்மாவால் மட்டும்தான் அவளிடம் ஓங்கி பேச முடியும்.மற்ற இரண்டு சகோதரிகளுக்கும் ராஜி ஒரு கண்கண்ட தெய்வம்.

“ பதினஞ்சு வருஷமா ரெயின்போ டைலர் கிட்டதான் ஜாக்கட் தச்சுக்கிறேன். ஒரே அளவுதான் கொடுத்துட்டு வர்ரேன். தடிச்சா மாதிரி தெரியலியே” என சோபாவில் வாங்கிப் போட்டிருந்த தீபாவளி சேலைகளைப் பார்த்தபடி சொன்னாள்.

அவளுடைய நக்கல் மொழியில் அம்மா சற்று கோபமானாள்.

“ தடிக்கறதுன்னா உடம்பு மட்டும்தானா? உனக்கு மனசு நாக்கு ரெண்டும் தடிச்சுப் போயிருக்கு ராஜி”

“ ஏன் இப்படி ஒரு திடீர் ஞானோதயம்? “ என்ற ராஜி ஒரு பச்சை வண்ண சேலையை மேனியில் பாவனையாக சுற்றிக் கொண்டு பீரோவில் பதித்திருந்த கண்ணாடி முன்பு நின்று அழகு பார்த்தாள்.

“ இதை யாரு செலக்ட் பண்ணினது? “

“ சித்ரா “ என்றாள் ரமா.

“ சித்ரா உனக்கு பச்சை நிறமே பிடிக்காதே எப்படி இதை செலக்ட் பண்ணின?”

“ பிடிச்சது பிடிக்காதது இதெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான்”

“ சொல்லுங்க குருவே” கை கட்டி வாய் பொத்தி ராஜி சித்ரா முன்னால் நின்றாள். சித்ரா சிரிக்கவில்லை.

“ ஒரு வயசுக்கு மேல நமக்கு பிடிச்சது என்பதை விட மத்தவங்களுக்கு நம்மகிட்டே என்ன பிடிக்கும் என்பதில்தான் கவனம் போகும்.”

“ அப்போ உனக்கு பச்சை நிறம் பிடிக்கும்னு சொல்ல ஆள் வந்தாச்சா? “ என்று ராஜி சித்ராவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

“ போ ராஜி ! ஒனக்கு எப்பவும் இப்படிதான்.என் கூட வேலை பாக்குற டீச்சருங்க சொன்னாங்க.எனக்கு பச்சை நிறம் எடுப்பா இருக்காம்.”

“ ராஜிக்கா! சித்ராக்கா தனக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லாம சொல்றாங்க” என்று ரமா சிரித்தாள்.

சித்ரா ராமாவை பார்த்து முறைத்தாள்.

“ ராஜி ”அம்மாவின் குரல் மீண்டும் ஓங்கியது.

“ எஸ் மதர் “

“ என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை.”

“ சாய்ஸ்ல விட்டுடரேன்மா”

“ இந்த ஆடி வந்தா…..” அம்மா முடிக்கவில்லை.

“முப்பந்தஞ்சு முடிஞ்சு முப்பத்தியாறு. ப்ளீஸ் உன் டயலாக்கை மாத்தேன்.”

“ தடித்தனம்னு சொன்னது இதைத்தான்.அன்னிக்கு அந்த பையன்…”

“ பையன் இல்லை. பையர். நாற்பது வயசு அவனுக்கு. கல்யாணம் ஆகலேன்னா          வாஜ்பாயைக் கூட நீ பையன் என்றுதான் சொல்லுவியா? “

“ எவ்வளோ இணக்கமா பேசறான். பாத்தா நல்ல மாதிரியா தெரியறான். நாலு விஷயத்தை அலசி ஆராயற அளவுக்கு கதை இலக்கியம் ஆர்வம் உள்ளாவானா இருக்கான். ஜாதகமும் பத்துக்கு எட்டு பொருந்துதுன்னு நம்ம ஜோசியர் சொல்லிட்டார். நீ என்னடான்னா எடுத்தெறிஞ்சு பேசற. நல்லால்ல”

“ சத்தியாவோட கதை இந்த வாரம் கல்கி புஸ்தகத்துல வந்திருக்கு” என்றாள் ரமா.

“ நம்ம வீட்டு கதை. “ என்றாள் சித்ரா.

“ கொடு பார்க்கலாம்” என்ற ராஜேஸ்வரியிடம் புத்தகத்தை கொடுத்து விட்டு ரமா துணிகளை அழகாக மடித்து அலமாரியில் அடுக்க ஆரம்பித்தாள். ரமாவின் சுறுசுறுப்பு இந்த வீட்டில் வேறு யாருக்கும் கிடையாது.மேஜை ,அலமாரி, சமையல்கூடம் போன்ற இடங்களில் அவளுடைய கை வண்ணத்தைப் பார்க்கலாம்.ராணுவ கெடுபிடி என்றாலும் அந்த பராமரிப்பு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வண்ணம் இருக்கும்.

ராஜி பத்திரிகையை படித்து விட்டு தூக்கி ஏறிந்தாள். மூலையில் விழுந்த புத்தகத்தை ரமா எடுத்து அலமாரியில் அதற்குரிய இடத்தில் வைத்தாள்..

“ முட்டாள்.” ராஜி கர்ஜித்தாள்.

“ என்னடி தப்பா எழுதிட்டான் அந்த கதையில்? “ என்றாள் அம்மா.

“ தலைப்பு கூட நல்லா இருக்கு . தந்தையானவள்.” என்றாள் சித்ரா.

“ நீ எங்களுக்கு அப்பாவுக்கும் மேல இல்லியாக்கா? “ சொல்லும்பொழுது ரமாவின் குரல் தழு தழுத்து விட்டது.

“ இவனுங்களுக்கு இதேதான் பொழப்பு. பார்க்கறவங்க கிட்டே சிரிச்சு பேசி விஷயம் கறக்க வேண்டியது. கண் காது மூக்கு வச்சு கதை எழுத வேண்டியது.அதை வச்சு காசு சம்பாதிக்க வேண்டியது.”

“ நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லல” என்றாள் அம்மா.

“ அம்மா நீ சும்மா இரேன்.” என்று சித்ரா அம்மாவை அடக்கினாள்.

வார்த்தை வளர்ந்து ராஜியின் சுய விளக்கம்: குறுக்கும் நெடுக்குமாய் கையை கட்டிக் கொண்டு ஒரு நடை: இன்னும் என்னத்தையெல்லாம் பாக்கனும்னு என் தலையில் எழுதுயிருக்கோ என்று அம்மாவின் புலம்பலுடன் நாடகம் முடியும்.வாரம் ஒருநாள் என்று நடக்கும் இந்த நாடகம் இப்பொழுது தினமும் அரங்கேறுகிறது.

“ என் வாயை அடக்குங்க.” சொர்ணம்மாள் சீறினார்.

“ வேற என்ன செய்யணும்? எவ்வளவு வாட்டி சொல்லுறது? கேட்கலேன்னா வாயைத்தான் அடக்கணும். அப்பா உசிரோட இருந்திருந்தா பொண்ணுங்களை நல்லா படிக்க வெச்சு கல்யாணம் செஞ்சு கொடுத்திருப்பாரு இல்லியா? அதைத்தான் இப்ப நான் செய்யறேன். அப்படி இப்படின்னு சித்ராவுக்கே வயசு முப்பது ஆயிடுச்சு. ஒரு நல்ல தகப்பனுக்கு எப்படி ஒரு கலவரம் வருமோ அதே கலவரம்தான் எனக்கும் இருக்கு. இது என் தகுதிக்கோ என் படிப்புக்கோ கிடைச்ச வேலை இல்லை. அப்பாவோட உயிருக்கு கிடைச்ச வேலை. அப்பா உயிரை மதிக்கறதுனாலதான் நான் கலியாணம் வேண்டாமுன்னு இருக்கேன். நான் கொஞ்சம் நெகிழ்வா இருந்துட்டா போதும், மத்தவங்க அவங்க சௌகரியத்துக்கு என்னை இழுப்பாங்க. அது வேண்டானுதான் “ரிஜிட்டா” நீ சொல்றியே அது மாதிரி தடித்தனமா இருக்கேன். போதுமா?”

முகம் சுண்டிப்போன சொர்ணம்மாள் வாசல் திண்ணையில் போய் அமர்ந்தாள். ரமா கிரைண்டரில் மாவு வழிக்க கிளம்பி விட்டாள். சித்தரா வாசலுக்கு அம்மாவின் பின்னால் சென்றாள். அம்மாவின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. சித்ரா அம்மாவின் கைகளைப் பற்றினாள். அம்மா கைகளை உதறினாள்.

“ நான் தாலியறுத்தவடி. உங்கப்பாவுக்கு பதில் நான் போயிருக்கக் கூடாதா?”

“ நீ போயிருந்தா எனக்கு இழப்பீட்டின் பெயரில் வேலை கிடைச்சிருக்காது.”பின்னால் ராஜி நின்று கொண்டிருந்தாள்.

“ அக்கா. ஏன் இவ்வளவு ஸாடிசத்தோட பேசற? “ என்றாள் சித்ரா இறைஞ்சும் குரலில்.

“ அப்போ அம்மாவை உள்ளே வந்து அழச் சொல்லு. பக்கத்து வீட்டு ஐயரம்மா நம்ம வீட்டில் சத்தம் பெரிசான்னா போதும் உடனே ஒட்டு கேட்க வெளிய வந்துடுவாங்க. ந்தா பாரு .நிஜமாவே வந்துட்டாங்க .அம்மா அழுது சீன போட்டா அவங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி இருக்கும்.”

அதன் பிறகு சொர்ணம்மாள் உளே வந்து விட்டார். ரமா எல்லாருக்கும் தட்டு வைத்தாள்.

ரமாவின் சமையலுடன் எவரும் போட்டி போட முடியாது. ராஜி அவளுக்கு ஹோம் மேக்கர் என்று பெயர் வைத்துள்ளாள். பெண்களின் உழைப்பு நான்கு சுவர்களுக்குள் அடங்கி விடுவதால் அதன் எந்தப் பகுதியும் பதிவு செய்யப் படாமல் போய் விடுகிறது என்பாள்   ராஜி. .ஒரு அலுவலக நிர்வாகம் போல ,ஒரு இசை மேதையின் இசை ஒழுங்கமைவைப் போல, ஒரு தேர்ந்த மருத்துவரின் பழகிய அறுவை சிகிச்சையை போல குடும்ப மகளிரின் குடும்ப நிர்வாகமும் சமமானது என்பாள். ஒவ்வொரு வகை உணவும் ஒவ்வொரு வகை சுவை. இந்த நாட்களில் இந்தக் குழம்பு இந்தப் பொரியல் என அவளுடைய சமையல் ஒரு நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்துடன் விளங்கும்.

“ மோர்க்குழம்பும் வாழைப் பூ உசிலியும் செமையா இருக்கு. எந்த அதிர்ஷ்டசாலிக்கு குடுத்து வச்சிருக்கோ?” என்றாள் ராஜி.

அவள் பேச்சை கேலியும் கிண்டலுமாக மறுக்கும் ரமா அன்று வாய் திறக்கவில்லை. சாப்பிடுவது என்பது வெறும் சம்பிரதாயம் இல்லை அந்த வீட்டில். கிண்டல், கலாட்டா, வம்பு,வாதம்,பிரதிவாதம்,விமர்சனம் என்று தூள் கிளம்பும். பெண்கள் குறித்த ஆண்கள் பார்வையிலான விமர்சனங்களை கிழித்து தோரணம் கட்டி விடுவார்கள். உடலைத் தாண்டி பெண்களைப் பார்க்கத் தெரியாதபொழுது கற்பு என்பது பெண்களுக்கு அவசியம் இல்லாத ஒன்று என்பாள் ராஜேஸ்வரி. தினம் ஒரு விவாதத்துடன்தான் சாப்பாட்டுக் கடை ஓயும்.

ஆனால் சற்று முன் அடங்கி முடிந்த புயல் காரணமாக எவரும் வாய் திறக்கவில்லை.இது போன்ற தருணங்களில் ராஜிதான் மற்றவர்களை பழைய நிலைக்குக் கொண்டுவர வாயைக் கிண்டி பேச்சைத் தொடங்குவாள்.ஆனால் இன்று எவரும் பேசும் நிலையில் இல்லை.

“ ஏன் எல்லோரும் உம்முன்னு இருக்கீங்க?”

“நீ எஸ்ஸுன்னு சொல்ற வரையில் யாரும் பேசறதா இல்லை.” என்றாள் சித்ரா.

“ எதுக்கு எஸ்?”

“ அந்த சத்யா நம்ம வீட்டு மாப்பிள்ளையா வரதுக்கு…” என்றாள் ரமா.

“ ப்ளாக் மெயிலா?”

“ அப்படித்தான்னு வச்சுக்கோ”

“ எஸ் சொல்லாட்டி?”

“போராட்டம் தொடரும்”

“ சீரியல்கள்ல வர்றா மாதிரி சீப்பா இருக்கு. சென்சிபிலா பிகேவ் பண்ணுங்க.”

“ இருந்துட்டு போகட்டும்”

ராஜேஸ்வரி மற்ற மூவரின் முகங்களை உற்று பார்த்தாள்.

“ நீங்க இவ்வளவு நிர்பந்தம் பண்றதாலே நானும் ஒரு நிபந்தனையை முன் வைக்கலாமா?”

“ என்ன நிபந்தனை ? ” என்றாள் சித்ரா.

“ அந்த சத்யா ரொம்ப விவரமா நம்மை எல்லாம் நல்லா விசாரிச்சிட்டு பொண்ணு கேட்க வந்தா மாதிரிதான் படுது. முள்ளங்கி பத்தையாட்டும் நான் ஆயிரம் ஆயிரமா கொண்டுவரும் சம்பளத்தை கலியாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டுக்குத்தான் அனுப்புவேன்னா சம்மதிப்பானா?”

“ இதுதான் உன் நிபந்தனையா? “ என்றாள் சொர்ணம்மாள் அற்பமாக.

“ இது இல்லை.என் நிபந்தனை வேற. தன்னை பத்தி அவன் ஒரு சுய புராணம் பிலாக்கணம்       பாடி அழுதானே அது நிஜமான்னு தெரியணும். எனக்கு வேண்டப் பட்டவங்க மூல்யமா     தெரியணும். அப்படி தெரியறதும் எந்த விட திட்டமிடலும் இருக்கக் கூடாது. தானா தெரிய வரணும்.”

“ சுத்தம் “ என்றாள் ரமா.

“ அமானுஷ்யம் “ என்றாள் சித்ரா.

“ இது அமானுஷ்யம் இல்லை” என்று மறுத்தாள் ராஜேஸ்வரி.

அவளுடைய விசித்திரமான நிபந்தனையை ஏற்றுக் கொள்ளும் விதமாக ராஜியின் கைப் பேசி அழைப்பு விடுத்தது.ராஜி அதை காதருகே கொண்டு போனாள்.

“ என்னது ரங்கம்மா டீச்சரா? எந்த ஹாஸ்பிடல்? ஐ சி யூவா? இதோ இப்ப வர்ரேன்”

மொபிலை அனைத்து விட்டு “ அம்மா நான் கோபி நர்சிங் ஹோம் வரைக்கும் போயிட்டு வர்ரேன்.” என்றாள்.

“ ஏன்?” என்றாள் தாய்.

“ நம்ம பாட்டு டீச்சர் ரங்கம்மாவுக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக்காம். கோபி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.”

 

———————————————-

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    தந்தையானவள் ராஜேஸ்வரியை அவளுடைய அம்மாவும் தங்கைகள் சித்ராவும் ராமாவும் சத்யாவை மணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது வேறு வழி இல்லாமல் அவள் விடும் நிபந்தனை சுவையாக உள்ளது. அது நியாயமானதாகவும் தெரிகிறது. அதற்கு அவன் சம்மதிப்பானா என்பது இனிமேல்தான் தெரியும்.அவர்களின் வீட்டில் நடக்கும் உரையாடல்கள் இயல்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. பாராட்டுகள் சத்தியப்பிரியன் அவர்களே. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *