தலைமுறைக் கடன்

author
7
0 minutes, 11 seconds Read
This entry is part 30 of 41 in the series 23 செப்டம்பர் 2012

முகில் தினகரன்
(சிறுகதை)

தான் அமர்ந்திருந்த அந்த சேரை உடகார்ந்தவாறே, அப்படியும் இப்படியுமாக இடுப்பை அசைத்து சோதித்துப் பார்த்தார் கேஷியர் வரதராஜன். ‘லொடக்…லொடக்” என ஒரு பக்கமாய் ஏறி இறங்கியது. குனிந்து பார்த்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு புஷ் மட்டும் இல்லாமலிருந்தது.

‘அடப்பாவி!…எல்லாச் சேருக்கும் புது வயர் பின்னியாச்சு….புஷ் போட்டாச்சுன்னு சொன்னானே அந்த வயர் பின்னறவன்!…வரட்டும்…வரட்டும்…பில் சாங்ஷன் ஆகி…பேமெண்டுக்கு என்கிட்டதானே வரணும்?…கவனிச்சுக்கறேன்!” கோபத்துடன் தனக்குத்தானே பேசிக் கொண்டார்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, ‘சார்…இந்தாங்க சார் பில்லு!” என்று பவ்யமாக வளைந்தபடி சாங்ஷன் ஆன பில்லை நீட்டினான் அவன். கிட்டத்தட்ட ஐம்பத்தஞ்சு…அல்லது அறுபது வயதிருக்கும் அவனுக்கு. கம்பெனி கம்பெனியாகச் சென்று அங்கிருக்கும் சேர்களின் பழைய பிய்ந்து போன வயர்களையும்…அடிப்பகுதி புஷ்களையும் மாற்றிக் கொடுத்து வயிறு வளர்ப்பவன். கூடவே ஒரு பத்து வயதுச் சிறுவன். ஹெல்ப்பர். ஆந்தச் சிறுவன் அவனுடைய பேரனைப் போல் தோன்றினாலும் மகனாம்.

‘யோவ்!…எல்லாச் சேர்களுக்கும் கரெக்டா புது வயர் மாத்திட்டியா?” கேஷியர் அதட்டலாகக் கேட்க,

‘ஆமாங்க சார்!….எல்லாச் சேர்களுக்கும் புது வயரும்…பது புஷ்களும் மாத்தியாச்சுங்க சார்!”

‘நெஜம்மாவா?…யாரு செக் பண்ணினாங்க?”

‘யாரும் செக் பண்ணலைங்க சார்…ஆனா அதுக்கு அவசியமே இல்லைங்க சார்…சரியா பண்ணி முடிச்சுட்டேன் சார்!” எனற்hன் அவன் வெகு நம்பிக்கையுடன்.

‘அப்படியா?…கொஞ்சம் இந்தப் பக்கம்..வா!” கேஷியர் எழுந்து நின்று தன் சேரை இழுத்து அவனிடம் ஆட்டிக் காட்ட, அது ஒரு பக்கம் புஷ் இல்லாமல் நொண்டியது.

அவன் துணுக்குற்றவனாய், அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘ஏண்டா…எல்லாச் சேருக்கு புஷ் போட்டாச்சுன்னு பொய்யாடா சொன்னே?”

‘இல்லைப்பா…ஒரே ஒரு புஷ் பத்தலை…அதான்!” பையன் நடுங்கியபடி சொன்னான்.

‘என்கிட்ட சொல்ல வேண்டாமா?….” என்று பையனைக் கடிந்து விட்டு, கேஷியரைப் பார்த்து, ‘சார்…அதை சரியா கவனிக்காம விட்டுட்டேன்…ஒரே ஒரு புஷ்தானே?…நாளைக்கே கொண்டாந்து மாட்டிடறேன்!” கெஞ்சலாய்ச் சொன்னான் அவன்.

‘என்னய்யா வெளையாடறியா?…எல்லாச் சேர்களுக்கும் வயர் மாத்தியாச்சு…புஷ் போட்டாச்சுன்னு பொய் சொல்லி பில்லை சாங்ஷன் பண்ணிட்டு வந்திருக்கே….அப்படித்தானே?”

‘சார்…வந்து…ஒரு புஷ்தானே..”

‘பேசாதய்யா!…உன்னையெல்லாம் உள்ளார விடறதே தப்பு!…ஏதோ போனாப் போகுதுன்னு வேலையக் கொடுத்தா ஃபிராடா பண்றே?” கத்தினார் கேஷியர் வரதராஜன்.

அத்தனை பேர் முன்னிலையிலும் கூனிக் குறுகினான் அவன்.

‘வயசானவன்னு பார்க்கறேன்!…இல்லேன்னா பில்லைத் தூக்கி மூஞ்சில வீசி ‘போடா வெளிய”ன்னு தொரத்தியிருப்பேன்!…போ…போயி நாளைக்கு இன்னொரு புஷ்ஷோட வந்து பேமெண்ட் வாங்கிக்க!”

அதிர்ந்தான் அவன்.

ஒரு வாரத்திற்கும் மேலாக எங்கும் வேலையே கிடைக்காமல் வறட்சியில் கிடந்தவனுக்கு அதிர்ஷ்டவசமாய் இன்றைக்கு இந்த ஆபீசில் வேலை கிடைத்தது. வேலை முடித்ததும் கிடைக்கும் பணத்தில் இன்றைக்காவது தானும் தன் மகனும் வயிறார சாப்பிடலாம் என்று கனவு கண்டிருந்தான்.

‘சார்…பாதிக் காசாவது குடுத்தீங்கன்னா…புண்ணியமாயிருக்கும்!” கேட்க நினைத்தான்;. ஆனால் கேஷியரின் அமிலப் பார்வையைக் கண்டதும் பேச வந்ததை அப்படியே விழுங்கிக் கொண்டான்.

இதற்குள் ஆபீசிலிருந்த மற்றவர்கள் அந்த வயர் பின்னுகிறவனுக்கு சாதகமாய்ப் பேசத் துவங்கினர்.

‘கேஷியர் சார்…அவன்கிட்ட ஏன் சார் தகராறு பண்ணிட்டிருக்கீங்க?..பணத்தைக் குடுத்தனுப்புங்க சார்” டெஸ்பாட்ச் மோகன் சொல்ல,

‘குடுக்கறதைப் பத்தி ஒண்ணுமில்லை மோகன்…இவனுகளையெல்லாம் நம்ப முடியாது…இந்த ஒரு புஷ்ஷ_க்காக இவன் நாளைக்கு வரப் போறானா?….கண்டிப்பா வரமாட்டான்!…வேற எங்காவது வேலை கெடைக்கும்…அங்க போய்டுவான்…இதை அப்படியே மறந்திடுவான்!” கேஷியர் இன்னும் பிடிவாதமாகவே இருந்தார்.

‘வேணும்னா….அந்த ஒரு புஷ்ஷோட அமௌண்ட்டை கழிச்சிட்டு மீதியக் குடுத்தனுப்பலாமில்ல?” டெஸ்பாட்ச் மோகனும் விடாமல் பேசினார்.

சிறிது நேரம் அமைதி காத்த கேஷியர், ‘ஓ.கே!…நீங்க சொல்லறதுனால தர்றேன்…அதுவும் மொத்த அமௌண்ட்டையும் தர்றேன்!…”யோவ்…வாய்யா….இந்தா ஃபுல் பேமெண்ட்டுமே வாங்கிக்க!…ஆனா நாளைக்கு கண்டிப்பா வந்துட்டுப் போகணும்!…என்ன?”

‘சரிங்க சார்!…கண்டிப்பா வந்து உங்க சேருக்கு ஒரு புஷ் போட்டுட்டுத்தான் வேற வேலைக்கே போகப் போறேன்!” வெகு சந்தோஷமாய் பணத்தை வாங்கிக் கொண்டு முகமலர்ச்சியுடன் சென்றான் அவன். பையனும் பெரிய ஆட்டுக்குப் பின்னால் ஓடும் குட்டி ஆட்டைப் போல் கூடவே ஓடினான்.

மறுநாள் மாலை ஐந்து மணியிருக்கும்,

‘நான் சொன்னதைக் கேட்காம….அந்த சேர் பின்னுறவனுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசினீங்களே….பாத்தீங்களா?….இன்னிக்கு அவன் வரவேயில்லை!…எனக்குத் தெரியும் சார் இவனுகளைப் பத்தி. வேற எங்கியாவது வேலை கெடைச்சிருக்கும்…டக்குன்னு ஓடியிருப்பான்!” கேஷியர் வரதராஜன் டெஸ்பாட்ச் மோகனைக் கிளறினார்.

புதில் பேச முடியாத மோகன் வேலையில் மும்முரமாய் மூழ்கியிருப்பதைப் போல் பாவ்லா காட்டினான். மனசுக்குள், ‘அடப்பாவி…ஏழையாச்சேன்னு அவனுக்கு பரிஞ்சு பேசினது தப்பாப் போச்சு!…இப்ப நம்மையே தலை குனிய வெச்சிட்டான்!” என்று அந்த வயர் பின்னுபனைத் திட்டித் தீர்த்தான்.

மறுநாளும் அவன் வரவில்லை.

தொடர்ந்து பத்து நாட்கள் அவன் வராததால், ‘சரி…இனி இவனை நம்பிக்கிட்டிருந்தால் இந்த ஆடற சேர்ல உட்கார்ந்தபடியே நான் ரிட்டையர்டு ஆய்டுவேன்…பேசாம ஆபீஸ் பையன்கிட்டச் சொல்லி நானே ஒரு புஷ் வாங்கிப் போட்டுக்க வேண்டியதுதான்!” என முடிவு செய்தார் கேஷியர் வரதராஜன்.

காலை பத்தரை மணிவாக்கில் அந்தச் சிறுவன் மட்டும் வந்து நின்றான்.

‘வாய்யா…பெரிய மனுசா…இப்பத்தான் வழி தெரிஞ்சுதா?…எங்க உங்கப்பன்?…வரப் பயந்திட்டு உன்னைய அனுப்பிட்டானா?…” கிண்டலாய்ப் பேசியவாறே எழுந்து நின்ற கேஷியரின் சேரை தலைகீழாகத் திருப்புp அந்த புஷ்ஷை நேர்த்தியாக மாட்டி விட்டு, சிறிதும் ஆட்hதபடி செய்து விட்டு கிளம்பினான் சிறுவன்.

அவன் டெஸ்பாட்ச் மோகனின் டேபிளைக் கடந்து செல்லும் போது, அவனை அருகில் அழைத்த மோகன், ‘ஏம்பா?….மறுநாளே வர்றேன்னு சொல்லிட்டுத் தானே போனீங்க?…இப்ப என்னடான்னா பத்து நாளு கழிச்சு நீ வந்திட்டுப் போறே!… உங்கப்பனுக்கு வக்காலத்து வாங்கப் போயி நான் மாட்டிக்கிட்டேன் இந்தக் கேஷியர்கிட்ட” என்றான்.

‘சார்…அது…வந்து….நாங்க அன்னிக்கு இங்கிருந்து போனோமா?…அதே அன்னிக்கு ராத்திரி எங்கப்பாவுக்கு மாரடைப்பு வந்திடுச்சு…செத்துப் போயிட்டாரு!” என்ற சிறுவனின் கண்களில் நீர்

அதிர்;ந்து போயினர் கேஷியர் வரதராஜனும், டெஸ்பாட்ச் மோகனும்.

சிறுவனே தொடர்ந்தான்.

‘எங்கப்பா செத்துப் போனதும், அவரோட எல்லாக் கடன்களையும் அடைக்க வேண்டியது அவரோட மகனான என்னோட கடமைன்னு எனக்குத் தெரியும் சார்!…அன்னிக்கு நீங்க அவரைத் திட்டியது…அவர் மறு நாள் வர்றேன்னு உறுதியாச் சொல்லிட்டுப் போனது எல்லாத்தையும் நான் பார்த்திட்டுத் தான் இருந்தேன்…!…அதனால..நான் அடுத்த நாளே இங்க வரணும்னு கிளம்பினேன்…ஆனா எங்க சொந்தக்காரங்கதான் ‘பத்தாம் நாள் சடங்க முடிச்சிட்டுத்தான் போகணும்”னு நிறுத்திட்டாங்க!…இன்னிக்குத்தான் பத்தாம் நாள்….அங்க சடங்கு வேலைக முடிஞ்சதும் நேரா இங்கதான் வர்றேன்!…” பரிதாபமாய்ச் சொல்லி விட்டு வெளியேறினான் அவன்.

அவன் சென்ற பின் வெகு நேரம் அந்த ஆபீஸ் அமைதியாகவே இருந்தது.

இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்த கேஷியர் தன் சேரை தன்னிச்சையாக அசைத்துப் பார்த்தார். அது ஆடவில்லை. ஆனால் அவர் மனசு மட்டும் அமைதி இழந்து ஆடிக் கொண்டிருந்தது.

(முற்றும்)

mukildina@gmail.com

Series Navigationகுரல்செல்பேசிகளின் பன்முகத் தாக்கங்கள்
author

Similar Posts

7 Comments

  1. Avatar
    S. Palanichamy says:

    அதிகார மமதையையும் மனித நேயத்தையும் உணர்த்தும் அருமையான கதை. வாழ்த்துக்கள்.

    1. Avatar
      mukil thinakaran says:

      தங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி. எனது எழுதுகோலுக்கு டானிக் வழங்கி விட்டீர்.

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    மிக அருமையாக யதார்த்தமாக எழுதிய கதை….உணர்வுகளைத் தட்டி எழுப்பி…பரிதாபப் படவைத்தது.
    உருக்கமான கதை. இறுதி வரைக்கும் அழகாகக் கொண்டு சென்ற விதம் அருமை.
    நன்றி
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    1. Avatar
      mukil thinakaran says:

      பாராட்டு வார்த்தை எனும் நெம்புகோல் கொண்டு எனது படைப்பார்வத்திற்கு ஊக்கமூட்டிய தங்களுக்கு நன்றி.

    1. Avatar
      முகில் தினகரன் says:

      மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி அம்மா.

Leave a Reply to mukil thinakaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *