தாயகம் கடந்த தமிழ்

This entry is part 17 of 18 in the series 26 ஜனவரி 2014

சென்ற வாரம் (ஜனவரி 20 – 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது.  புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். தொன்மையும், செழுமையும் நிறைந்த  நம் தமிழ் மொழி காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறதே என்ற துக்கம் எழாமல் இல்லை.  12 நாடுகளிலிருந்து, 35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு, அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச் சாராத எழுத்தாளர்களால் இந்தக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருபவருமான திரு சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர் அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்) கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை உரை நிகழ்த்தினார். முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் வாழ்த்துரை வழங்கினார்.

 

இன்றைய நிலையில் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மொழிப்பற்று உடையவர்கள் என்று பார்த்தால், இளம் சிறார்களின் பெற்றோர்களில் ஒரு பகுதியினர் மற்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் மத்திய வயதைக் கடந்தவர்கள் மட்டுமே என்பதே உண்மை.  இந்நிலையில் அடுத்த தலைமுறை குழந்தைகளை ஓரளவிற்கு இழுத்துப்பிடித்து தமிழ் கற்க வைக்கலாம் என்றாலும், அதற்கு அடுத்த தலைமுறையினரின் நிலை குறித்த கவலை எழாமல் இல்லை.  கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்படி ஒரு அச்சம் இருப்பது புரிந்துகொள்ள முடிந்தது. நான் கருத்தரங்கின் மூன்றாம் நாள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததால் அன்று உரையாற்றியவர்களான முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்கள், பேராசிரியர் உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி) திருமதி. வெற்றிச்செல்வி, (அமெரிக்கா), பேராசிரியர் வீரமணி, (ஜப்பான்), திரு.அன்பு ஜெயா (ஆஸ்திரேலியா), டாக்டர் ந.சுப்ரமணியம் , (அமெரிக்கா)  ஆகியோரின் உரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. பெரும்பாலும் தாங்கள் சமர்ப்பித்த கட்டுரையின் சாரமே உரையாக அமைந்ததால், ஏனையோரின் கட்டுரைகளின் சாராம்சம் கொண்டு அவர்களின் கருத்துகளையும் உணரும் வகையில் நம் தமிழ் மொழியின் வருங்கால நிலை குறித்து அறிய முற்பட்டேன்.

​​வல்லமை இதழில் வெளியிட்டுள்ள இக்கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்வுகள் குறித்த பதிவு இதோ இங்கேஇருக்கிறது.

 

இக்கட்டுரைத் தொகுப்பின் முதல் கட்டுரையே, திரு சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ‘பெண்ணெழுத்து’  என்ற நீண்ட நாளைய விவாதத்தில் சிக்குண்டிருக்கும் செவ்வி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகம் முழுவதும், ஆண் மைய அதிகாரத்தின் கொடூர நிழலில் சுயம் இழந்து, இருப்பிழந்து, குரலிழந்து சுணங்கிக்கிடந்த பெண் எழுத்து, கடந்த இருபத்தைந்தாண்டு கால இடைவெளியில் வரலாற்றின் பெரு வெடிப்பில் தன்னையும், தன் இருப்பையும், இடத்தையும் மீட்டெடுத்துக்கொண்டது என்கிறார். அருமையான பலப்பல வித்தியாசமான எடுத்துக்காட்டுகளும் அதில் அடக்கம்.

 

திரு மாலன் அவர்களின், ‘கயல் பருகிய கடல்’, முன்னெப்போதையும் விட, இன்று தமிழ் எழுத்துலகம், ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதையும், பெரும் சாதனைகளும், சவால்களும் அதன் முன் விரிந்து கிடப்பதையும், இன்று அவற்றை எதிர்கொள்ளும் தன்மையைக் கொண்டே அதன் நாளைய வரலாறு இருக்கப் போகிறது என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறார். தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் தங்கள் மொழியையும், இலக்கியத்தையும் எடுத்துச் சென்றதன் காரணம், மொழி தமிழர்களுக்கு வெறும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல. அது அவர்களது கலாச்சார அடையாளம் என்று தெளிவாகக் கூறினாலும், அடுத்த தலைமுறை தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர் இளைஞர்கள் தங்கள் சந்ததியினருக்கு,  நம் சங்க இலக்கியங்களையும், நவீன இலக்கியங்களையும் எந்த அளவிற்கு கொண்டுசெல்லப்  போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

 

உலகளாவிய தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில், முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள், “இன்றைய அறிவியல் தொழில் நுணுக்கச் சூழ்நிலையில் தமிழின் புழக்கம் மிகத் தீவிரமாக அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு” என்று ஆரம்பிக்கிறார்.

மேலும், “உலகத் தமிழ் இலக்கியம் பற்றியும் அயலகத் தமிழ் இலக்கியம் பற்றியும் மீண்டும் சிந்திக்கும் வாய்ப்பை சிங்கப்பூரில் நடந்த மாநாடும், இப்போது கோவையில் நடைபெறும் மாநாடும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. ஆகவே உலகத் தமிழ் இலக்கியத்தை ஒருங்கிணைத்து இலக்கியவாதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் அளிக்கும் ஐயரின் முன்னோடி முயற்சியை மேலும் முழுமைப்படுத்துவது பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்:

 

திரு ரெ.கா, அவர்களின் சிந்தனைகள்:

 

1. ஆண்டுக்கு ஒரு முறை அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகளை தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும்.

 

2. இதில் இந்தியாவுக்கு வெளியே நாடுதோறும் உள்ள தமிழ்ப் படைப்பாளர்களுக்கு வாய்ப்புத் தரப்படவேண்டும்.

 

3. பதிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும். தொகுப்பாசிரியரும் படைப்புகள் தேர்வு செய்யும் குழுவும் நியமிக்கப்பட வேண்டும்.

 

4. இந்தத் தொகுப்பை தமிழ் இலக்கியச் சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இலவசமாகவே வழங்கலாம்.

 

5. இதற்கான நிரந்தர நிதி ஆதாரம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

 

 

’ஐரோப்பிய அமெரிக்க தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில், பிரான்சு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், “வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தமிழிலக்கிய வெளியில் பெரும்பாய்ச்சலைக் காண்கிறோம். அப்பாய்ச்சலுக்கு இருவகையான காரணங்களை முன்வைக்கலாம்.

 

முதலாவதாக இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம். பாதிக்கப்பட்டவர்கள் புகலிடம் தேடியபொழுது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் அகதிகளுக்கான கொள்கை மற்றும் மேம்பாடான வாழ்க்கை அவர்களை உலகின் பிற்பகுதிகளைக் காட்டிலும் அதிகம் ஈர்த்தது. எனவே பெரும் எண்ணிக்கையில் இந்நாடுகளுக்குப் புலம் பெயர முடிந்தது. இன்றளவும் அது தொடர்கிறது. விளைவுகள் தமிழ் மொழிக்குப் பெரிதும் சாதகமாக அமைந்ததெனில் மிகையில்லை. தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழையும், தமிழ் இலக்கியத்தையும் இந்நாடுகளில் கொண்டுவந்தார்கள்.

 

இரண்டாவதாகக் கணினித் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி, ஊடகமும், இதழ்களும் விரல்முனைக்கு வந்திருக்கின்றன. எண்ணற்ற வலைத் தலங்கள், வலைப்பூக்கள், அவற்றில் பல்வேறுவகையான வகைமைகள் எனப் பெருகியுள்ளன. உலகமெங்கும் பரவி வாழ்கிற தமிழர்களை ஒன்றிணைக்கவும், அவர்கள் உணர்வுகளை ஒருமுகப்படுத்தவும் கணினி காரணமானது. இன்றைக்கு எழுதும் ஆர்வத்தை இளைஞர்களிடம் ஊக்குவித்திருப்பதே இக் கணினி அறிவுதான். ஐரோப்பிய மொழிகளுக்கு ஈடாக இன்றைக்கு கணினியில் தமிழ் இடம் பெற்றிருக்கிறது. இதில் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழர்களின் பங்கு கணிசமானது. கவிஞர் கோ.இராஜாராமை பொறுப்பாசிரியராகக் கொண்ட தமிழின் முதல் இணைய இதழ் ‘திண்ணை’ இன்றளவும் தீவிர இலக்கிய பங்களிப்பினை அளித்து வருகிறது. நன்கு அறியப்பட்ட மூத்த தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, புதிய எழுத்தாளர்கள் வரை எழுதுகிறார்கள். ஜெயமோகன், பாவண்ணன், வே.சபாநாயகம், எஸ்.ஷங்கரநாராயணன், வெங்கட் சாமிநாதன், ஜோதிர்லதாகிரிஜா ஆகியோர் தொடர்ந்து இவ்விணைய இதழில் பங்களிப்பு செய்கிறார்கள்”.

 

 

மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகம் குறித்து தம் கருத்துகளைப்  பகிர்ந்துள்ள , டாக்டர்.கிருஷ்ணன் மணியம், “ தமிழ்த் தொழிலாளர்கள் தங்களுடைய இரப்பர் தோட்டங்களில் தொடர்ந்து வேலை செய்யவேண்டும் என்பதால் தோட்ட முதலாளிகள் தமிழ்ப்பள்ளிகளை தங்கள் தோட்டங்களில் அமைக்க சம்மதம் தெரிவித்தனர். அத்துடன் இந்தியாவில் அப்பொழுது அமைந்த சுயராஜ்ய பரீட்சார்த்த அரசு மலாயாவில் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற புகாரைப் பெற்ற பிறகு உண்மையைக் கண்டறிய ஆய்வுக்குழு ஒன்றினை அனுப்பி வைத்தது. அக்குழுவினரின் பரிந்துரையின் பேரில் உருவான தமிழ்ப்பள்ளிகளின் பற்றிய குறிப்புகள் 1923 ஆம் தொடக்கம் தொழிலாளர் சட்டவிதியில் ஒரு தோட்டத்தில் பத்து அல்லது அதற்கு மேற்பட்டப் பிள்ளைகள் இருப்பார்களேயானால் தமிழ்ப்பள்ளியை அந்தத் தோட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என வற்புறுத்தின. தோட்ட நிர்வாகிகள் பலர் சட்டத்திற்குப் பயந்து தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்தனர். அப்பள்ளிகளுக்கு கல்வியியல் பயிற்சி பெறாதாவர்களையும், தோட்டத்தில் வேலை செய்யும் கிராணியர்களும், கோயில் பூசாரிகளும், தமிழாசியர்களாக நியமனம் பெற்றனர். அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்தன.

 

தொண்ணூறுகளின் பிற்பகுதி தொடங்கி மலேசியாவில் ஒரு புதிய இலக்கியப் போக்கினைக் காண முடிகிறது. சண்முகசிவாவின் நுழைவும், ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகமது, சாமிமூர்த்தி, அருசு. ஜீவானந்தன், அன்புச் செல்வன் போன்றோரின் உக்கிரமான மறுபிரவேசமும் எழுத்துப் போக்கிலே புதிய வரவுகளைக் கொணர்ந்தன. இவர்கள் தமிழகத்தில் அறிமுகமான காத்திரமான எழுத்துக்களைத் தங்களுடைய வாசிப்புகளுக்கு கொண்டு வந்தனர்” என்கிறார்.

 

’சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் தம் கருத்துக்களைப் பதிவிட்டிருக்கும் முனைவர் சீதா லட்சுமி அவர்கள், சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் இன்னும் 50 ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்று கணித்திருப்பது சிந்திக்கத் தக்கது.

 

“இங்கு மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ் இலக்கியம் இருக்கும். ஆனால் அது தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பது சந்தேகம். இப்போது யாரும் எழுதலாம், யாரும் பதிப்பிக்கலாம் என்ற நிலை உள்ளது. நல்ல எழுத்தாளராக ஒருவர் வரவேண்டுமென்றால் அவர் நிறைய எழுத வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். எழுதுவதற்கு அயராத முயற்சி வேண்டும்; அற்புதமான ஆற்றல் வேண்டும். ஒரு புத்தகம் எழுதினாலும் போதும், ப.சிங்காரம் எழுதிய நாவல் போல் எழுத வேண்டும். இப்போது வரும் படைப்புகளில் ஆழம் இலை, திடம் இல்லை” என்ற லதாவின் கருத்தை முன்வைக்கிறார்.

தாம் ஒரு தமிழாசிரியர், படைப்பாளர் என்ற முறையில் நம்பிக்கையுடன்(?) பதில் தர விரும்புவதாகத் தெரிவிக்கும் கண்ணபிரான் , “எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம், தமிழ் மொழி இரண்டும் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் சொல்வதென்றால், The glass is half full of water and half empty. இதை நான் நம்பிக்கையுடன் பார்க்கும்போது பாதி முழுமையாக உள்ளது என்றுதான் கூறுவேன்” என்கிறார்.

 

‘வாழ்வும், வலியும்’ என்ற தலைப்பில் திரு அ.முத்துலிங்கம் (கனடா) அவரகள், “தமிழர்கள் எட்டு கோடி பேர் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது.

என்னுடைய கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருந்தது. அதற்கு இரண்டு செட்டை . ஆறு மணிக்குருவியும் இருந்தது. அதற்கும் இரண்டு செட்டை. சரியாக காலை ஆறு மணிக்கு இந்தக் குருவி ‘கீஈஈஈய்க், கீஈஈஈய்க்’ என்று சத்தமிடும். காகத்துக்கு பறக்கும் எல்லை இரண்டு மைல் தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப் பறந்துபோய் மீண்டும் திரும்பும், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் இந்த ஆறுமணிக்குருவி போல. அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் பனியும் பனி சார்ந்த நிலமும். ஆறாம் திணை” என்கிறார் நம்பிக்கை பட்டொளி வீச!

 

 

தாயகம் பெயர்தலில் வாழ்வும், வலியும் சமமாக உள்ளதை மிக உணர்வுப்பூர்வமாக குருதி வழியும் பார்வையுடன் வாசிக்கச் செய்யும் கட்டுரையின் நாயகரான, எஸ்.பொ. என்று அனைவராலும் அறியப்படும் , இலங்கையின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான ச.பொன்னுத்துரை அவர்கள்,

 

“கருமேகத்தில் மின்னல் சொடுக்குவது போன்று, சில சமயங்களிலே ஒளிப்பிழம்பு தெரியுமல்லவா? அதன் பிரகாசம் சில நொடிகளிலே மறைந்தாலும், அந்தப் பளிச்சிடல் மகா பரவசமானது. சீழைப் பிதுக்கி எடுத்து, முள்ளை வெளியே எடுத்துச் சுகம் பெறும் வித்தையை தான் வசப்படுத்திக் கொண்டதினால், இழப்புகளிலே மூழ்கிடாது, அர்த்தமுள்ளதான வாழ்வினைத் தொடருகின்றேன். அந்த வித்தையின் பிள்ளையார் சுழியாக, ‘நனவிடை தோய்தல்’ என்கிற படைப்புக் கட்டுரைகள் கொண்ட தொகுதியை வெளியிட்டேன்.

தாயகம் பெயர்தலின் வலிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும், வாழ்வைத் தொடர்வதற்கும் தமிழ் படைப்பாளிகளுக்குக் கிடைத்துள்ள அற்புத மருந்து, புதிய புறநானூறுகளையும், அகநானூறுகளையும் படைத்துத் தமிழை என்றென்றும் இளமைப்படுத்தி வாழவைப்பதே”, என்பதின் யதார்த்தம் வெகுவாகச் சிந்திக்கச் செய்கிறது.

 

மலேசியா நாட்டின் டாக்டர். சண்முக சிவா அவர்கள், தாயகம் பெயர்தலில் தங்களின் வாழ்வும், வலியும் குறித்து எழுதுகையில்,  ‘இடம்பெயர்வு’ என்பது பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்தபோதிலும் கூட பறவைகளுக்கு இருக்கும் சுதந்திரம் மனிதருக்கு இல்லை என்கிறார்.  “தோட்டப்புற தமிழ்ச் சமுதாயத்தை அடித்துப் போட்டு புரட்டி எடுக்க அடுத்து வந்த அலைகளில் ஒன்று அவர்களின் ‘குடியுரிமை’ பிரச்சனை மலாயாவில் பிறந்திருந்தாலுமே குடியுரிமை இல்லாதத் தமிழர்களாய் தோட்டப்புறங்களில் சுமார் 60,000 பேருக்கு மேல் இருந்தனர். குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தெரியாத அறியாமையில் மூழ்கிக் கிடந்த இவர்கள் பிறப்புப் பத்திரம் இல்லாதவர்கள். எப்படி குடியுரிமையைப் பெறுவது என்று அறியாதவர்கள்”

 

மேலும் அவர், ”ஆறாம் ஆண்டுவரை மட்டுமேதான் தமிழ்க்கல்விக்கான வசதிகள் இருக்கின்ற இந்தச் சூழலில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் முன்னெடுத்துச் சென்ற இலக்கிய முயற்சிகள் தமிழுக்கும் தமிழ்ச் சார்ந்த வாழ்வுக்கும் அதன் பங்கை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகின்றன.  துன்பமும் துயரமுமே தமிழர்களின் வாழ்வாக இருந்து வந்திருக்கின்றபோதும், தமிழர்கள் குடியேறிய எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இன்றுவரை 523 தமிழ் ஆரம்பப் பள்ளிகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றோம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அதில் பயின்று வருகிறார்கள் கல்வி அமைப்பில் தமிழைத் தக்க வைத்துக்கொள்ள நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி அந்தப் பள்ளிகளின் இருத்தலுக்கான அவசியத்தையும், அதற்கான அரசு மானியத்தையும் தொடர்ந்து பெற்று வருகிறோம். அரசு சாரா தமிழ் இயக்கங்கள் பல மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் உழைத்து வருகின்றன” என்பதை ஒரு கட்டுரையின் சாரம் கொண்டு விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இந்த மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து சிந்திக்க வேண்டியதாக  உள்ளது.

 

அமுத சுரபி மாத இதழின் ஆசிரியர் முனைவர். திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ’தமிழ் கூறும் ஊடக உலகம்’  என்ற தலைப்பிட்ட தம் கட்டுரையில், இணையத்தில் இருக்கும் சிக்கல்கள் பற்றி குறிப்பிடும்போது, “ தங்களின் அதிக முதிர்ச்சியற்ற கருத்துக்களால் தங்களுக்கென்று ஓர் உலகை நிர்மாணித்துக்கொண்டு உலவுகிறார்கள். இவர்கள் இந்த உலகைத் தாண்டி வெளியே வருவதே இல்லை. பெரும்பாலான இணைய தள எழுத்தாளர்களுக்கும், பெரும்பாலான இணைய தள வாசகர்களுக்கும் அவரவர் எல்லையே போதுமானதாய்  இருக்கிறது. அதுதாண்டி அவர்கள் வளர்வதில்லை” என்ற ஆதங்கத்தையும் முன்வைக்கிறார்.

 

 

நிறைவு விழாவில் நன்றி கூறும் வரை, நம் தமிழ் மொழி காலங்கடந்து, தொய்வில்லாமல்,  நிலைத்து நிற்பதற்கான தீர்வுகள் ஏதேனும் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எந்தவிதமான தீர்வும் கூறாமலேயே நிகழ்ச்சி நிறைவடைந்தது . நம்முடைய தாய்த் தமிழானது ஈழத்தமிழர்கள், மலாய்த் தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள். அமெரிக்கத் தமிழர்கள் இவர்களால் மட்டும்தான்  வாழ வேண்டுமா? இங்கு தமிழ் நாட்டில் வாழக்கூடியவர்கள் தங்களுடைய மக்களையும் பேரர்களையும் பெரும்பாலும் மாற்று மொழியில்தான் படிக்க வைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதற்கும் ஒரு தீர்வு காண வேண்டிய முக்கியமான நேரம் இது.

 

1. நம் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டும் வைப்பது. அதாவது நம் தமிழ் மொழியைக் காத்தவர்களின் பெயர்களை வைப்பது.

 

2. புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் மொழிபெயர்த்து நடைமுறைப்படுத்துவது.

 

3. மின்னஞ்சல், பணப் பரிமாற்றங்கள் ஆகிய அனைத்திற்கும் தமிழைப் பயன்படுத்துவது.

 

4. தமிழ் படித்தால் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது.

 

5. தாயகம் கடந்த தமிழர் மத்தியில் அவர்களுடைய குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய எழுத்து மற்றும் ஒலி வடிவங்களையும் , மற்றும் அவர்கள் சூழலுக்குக் தகுந்தவாறான கதைகள், பாடல்கள்  போன்றவற்றையும் கிடைக்கச் செய்வது.

 

6. நம்முடைய தமிழ் மொழி அழியாமல் இருக்க வேண்டுமென்றால் பழம்பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிராமல் புதிய ஆக்கங்களை சுவையாக உருவாக்கி நம் தமிழர்களின் பெருமையை நிலைநாட்டுவது

 

அரங்கில் பேசியது போல தற்போது, மின்னிதழகள் அல்லது அச்சு ஊடகங்கள் அனைத்திலும் எழுதிக் கொண்டிருப்பவர்கள், பெரும்பாலும் மத்திய வயதைக் கடந்தவர்களகாவே இருக்கிறார்கள். இளைஞர்கள் எழுத வரும்போதும், மேடைப்பேச்சு பேசுவோரையும், ஊக்கப்ப்டுத்தி, ஆற்றுப்படுத்தினால் மொழி வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்பதும் சத்தியம்.

 

 

தேர்ந்த வழிப்போக்கன் ஒருவன் தன் பயணத் திட்டங்களைத் தீட்டுவதுமில்லை,

திரும்பிவருவதைப் பற்றி சிந்திப்பதுமில்லை! –  அறிஞர் லாவோட்சு.

 

Series Navigationஸ்ரீதரன் கதைகள்
author

பவள சங்கரி

Similar Posts

38 Comments

  1. Avatar
    பவள சங்கரி says:

    திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

    வணக்கம். கட்டுரையின் இடையில்

    // நிறைவு நாள் நிகழ்வுகள் குறித்த பதிவு இதோ இங்கே// என்ற இடத்தில் அதற்கான தொடுப்பு இணையவில்லை.அந்த இணைப்பை தயவுசெய்து அங்கு சேர்க்க வேண்டுகிறேன். வல்லமை இதழில் வெளியான இந்தக் கட்டுரையிலும் சில முக்கிய செய்திகள் இருப்பதாலேயே இந்த வேண்டுதல்

    நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

  2. Avatar
    ருத்ரா இ.பரமசிவன் says:

    அன்பார்ந்த திருமிகு.பவளசங்கரி அவர்களே

    “தாயகம் கடந்த தமிழ்” என்ற தலைப்பு உருக்கமானதா? நம் சிந்தனையை உலக்குவதா? தெரியவில்லை.தமிழை மறந்து போன தமிழ் நாடு அல்லது
    தமிழ் நாட்டை மறந்து போன தமிழ் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி.
    குறுக்கு நெடுக்கு அரசியலின் “இடியாப்ப”சிக்கல்களில் தமிழ் அமிழ்ந்து கிடக்கிறது என்பதே உண்மை.அமிழ்ந்து கிடந்தாலும் அதுவே நம் அமிழ்து என்ற உணர்வையும் நம் துடிப்புகளையும் வெளிக்காட்டி அந்த “கோவை” தமிழ் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்திய முனைவர்கள் கவிஞர்கள் மற்றும் அராய்ச்சியாளர்கள் எல்லோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.உங்கள் கட்டுரை ஒரு ஆற்றோட்டமாய்..ஆம் புலம் பெயர்ந்தவர்களின் அடி நீரோட்டமாய் (அது கண்ணீர் மட்டும் அல்ல)அமைந்திருந்ததற்கு என் உள்ளப்பூர்வமான பாராட்டுகள் பவளசங்கரி அவர்களே.சிற்பியின் கவிதைகள் நம் நெஞ்சில் ஒரு உளியின்றி ஆனால் ஒரு உள்ளொளியை திரிஏற்றி பெரிதாக்கி சிற்பங்கள் படைத்திருக்கின்றன.அவரை நினவு கூர்வது நம் கவிதைகளைக்கூர்தீட்டி தமிழ்ப்பொறியை கிளர்வு செய்ய பெரிதும் உதவும்.
    மாநாட்டை சிறப்புற நடத்திய தமிழ் ஆர்வலர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    அன்புடன் ருத்ரா

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் கவிஞர் திரு ருத்ரா அவர்களுக்கு,

      தங்களுடைய வாசிப்பிற்கும், கருத்துரைக்கும், வாழ்த்திற்கும் நன்றி. தங்களால் தீர்வு ஏதும் சொல்ல முடியவில்லையா? என்ன செய்யலாம்? வருங்காலச் சந்ததியினரை எப்படி தமிழ் கற்க வைக்க முடியும்?

      அன்புடன்
      பவள சங்கரி

  3. Avatar
    Dr.G.Johnson says:

    பயன்மிக்க அருமையான கட்டுரை பவள சங்கரி. புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழ் பேசவேண்டும், தமிழில் எழுதவேண்டும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகமான ஆங்கிலச் சூழலில் வாழ்ந்து வந்தாலும் தாய்மொழி தமிழை மறக்காமல் பேசவும், எழுதவும், இலக்கியங்கள் படைக்கவும் ஆர்வம் கொண்டுள்ளது உண்மையே ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து நீதிக்குமா என்பது நம்முடைய வருங்கால சந்ததியாரைப் பொறுத்துள்ளது. அவர்கள் இப்போதே தமிழில் படிப்பதும் எழுதுவதும் மிகக்குறைவு.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்புமிக்க பவள சங்கரி அவர்களுக்கு,

    ///கவிஞர் கோ.இராஜாராமை பொறுப்பாசிரியராகக் கொண்ட தமிழின் முதல் இணைய இதழ் ‘திண்ணை’ இன்றளவும் தீவிர இலக்கிய பங்களிப்பினை அளித்து வருகிறது. நன்கு அறியப்பட்ட மூத்த தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, புதிய எழுத்தாளர்கள் வரை எழுதுகிறார்கள். ஜெயமோகன், பாவண்ணன், வே.சபாநாயகம், எஸ்.ஷங்கரநாராயணன், வெங்கட் சாமிநாதன், ஜோதிர்லதாகிரிஜா ஆகியோர் தொடர்ந்து இவ்விணைய இதழில் பங்களிப்பு செய்கிறார்கள் //

    பத்துப் பனிரெண்டு ஆண்டுகளாகத் திண்ணையில் எண்ணற்ற விஞ்ஞான, இலக்கியப் படைப்புகளை வெளியிட்டு வரும் இரு முக்கிய எழுத்தாளரைக் [கவிஞர் பரமேஸ்வரன் (ருத்ரா), சி. ஜெயபாரதன்] குறிப்பிடாமல் போய்விட்டீர்களே.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      ஷாலி says:

      “தாயகம் கடந்த தமிழை” தொகுத்தளித்த பவளசங்கரி அவர்கள் உங்களின் திண்ணை பங்களிப்பை மறந்தார்கள். “தாயகம் கடந்த தமிழை” நடத்தியவர்களோ அறிவியல் தமிழை அடியோடு மறந்து பழம் தமிழ் பாடல்களுக்கே பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். இன்றைய இணைய உலகோடு உலாவரும் இளம்தமிழ் சிறார்களுக்கு அறிவியல் தமிழை அளிக்க தவறி விட்டார்கள்.இனி எதிர் காலத்தில் தமிழில் எவரும் அறிவியல் ஆய்வு செய்து புதிய கண்டுபிடிப்புகளை காண நமக்கு மனமும் இல்லை,மார்க்கமும் இல்லை.

      1. Avatar
        பவள சங்கரி says:

        அன்பின் திரு ஷாலி அவர்களுக்கு,

        நீங்களும் தவறாக புரிந்துகொண்டீர்களே. பிரான்சு எழுத்தாளர் திரு.நாகரத்தினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டியிருக்கிறேன். என்னுடைய கருத்துக்களாக இறுதி பகுதியில் தெளிவாக அளித்துள்ளேன். அதில் நாம் புதிய ஆக்கங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் அறிவியல் ஆக்கங்களும் அடங்கும். மற்றபடி எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த குழந்தைகள் மட்டுமல்லாது இங்கு தமிழ் நாட்டிலேயே பிறந்து வளரும் குழந்தைகளின் தமிழ் ஞானம் எந்த அளவில் இருக்கப் போகிறது என்ற ஆதங்கம்தான் இந்தக் கட்டுரைக்கான காரணம். இதற்கான தீர்வுகளை நாம் ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்தால் பயனுள்ளதாக அமையலாம் அல்லவா?

        அன்புடன்
        பவள சங்கரி

  5. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

    //’ஐரோப்பிய அமெரிக்க தமிழ் இலக்கியம்’ என்ற தலைப்பில், பிரான்சு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், “வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தமிழிலக்கிய வெளியில் பெரும்பாய்ச்சலைக் காண்கிறோம். அப்பாய்ச்சலுக்கு இருவகையான காரணங்களை முன்வைக்கலாம்.//

    மேற்கோள் குறியிட்டு காட்டியிருக்கிறேன் பாருங்கள். இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. கட்டுரையாளர்களின் முக்கியமான கருத்தை எடுத்து மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அத்துனை அறிஞர்களின் பெயரையும் குறிப்பிட முடியாமல் ஒரு சிலரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

    அன்புடன்
    பவள சங்கரி

  6. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜெயபாரதன் அவர்களே, தங்களின் ஆதங்கம் புரிகிறது. தாங்கள் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தாலும் அவை ஜெயமோகன் வெங்கட் சாமிநாதன் எழுத்துகள் போன்று தமிழ் இலக்கியமாகக் கருதப்படுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு அனுபவப்பூர்வமாக எழுந்துள்ளது. நான்கூட மலேசியாவில் கடந்த 15 வருடங்களுக்கு மேல் வாரந்தோறும் மருத்துவ கட்டுரைகளை கேள்வி பதிலாக எழுதி வருகிறேன். இன்றுவரை யாருமே அவற்றை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை! அதனால்தான் நான்கூட திண்ணையில் மருத்துவம் தொடர்பான சம்பவங்களை சிறுகதைகள் பாணியில் எழுதினேன்.

    பவள சங்கரி வேண்டுமென்றே உங்களின் பெயரை விட்டுவிட்டதாக நான் கருதவில்லை. மூத்த எழுத்தாளர்கள் என்று ஒரு சிலரைதான் குறிப்பிட்டுள்ளார். ஆகவே கவலை வேண்டாம். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நன்றி நண்பர் டாக்டர் ஜான்சன்,

      திண்ணையில் எண்ணற்ற விஞ்ஞானக் கட்டுரைகள் மட்டுமல்ல. ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா ஆகியோரின் தமிழாக்க நாடகங்கள் உன்னத மனிதன், ஆயுத மனிதன், கிளியோபத்ரா, சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க், வேதாளத்தின் மாணாக்கன்,காப்பணிச் சேவகி, நெஞ்சை முறிக்கும் இல்லம், மேடம் மோனிகா, மற்றும் ஆஸ்கர் ஓயில்டின் ஸாலமி, சீதாயணம், கீதாஞ்சலி 103 கவிதைகள், இன்னும் மீரா, எலிஸ்பெத் பிரௌனிங் கவிதைகள். இவை எல்லாம் இலக்கியம் இல்லையா ?

      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        ஷாலி says:

        பொதுவாக எழுத்தாளர்கள் என்றாலே,கற்பனைலோகத்தில் சஞ்சரித்து கதை எழுதுபவர்கள்.சொந்தமாக மூளையை தேய்த்து உருவாக்கும் புனைவு எழுத்தாளர்கள்.இந்த லிஸ்டுப்படி பார்த்தால் திரு.ஜெயபாரதனுக்கு எழுத்தாளர் பட்டியலில் எங்கும் இடமிருக்காது.

        ஏனெனில் அவர் கற்பனை குதிரையில் பயணிப்பவறல்ல.ஆய்வு மூலம் அறிந்துகொண்ட உண்மையை அழகு தமிழில் தருபவர்,மற்றும் பிற நாட்டு இலக்கியங்களை மூலத்தை சிதைக்காமல் தமிழ் மொழியில் தருபவர்.கற்பனைத்தேரில் பயணிக்கும் குழாத்தில் அவரை சேர்க்காமல் இருப்பதே அவருக்குள்ள சிறப்பு.

        பவளசங்கரி அவர்கள் திரு.ஜெயபாரதனுக்கு உரிய இடத்தை கொடுத்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி, வணக்கம். தங்களின் கட்டுரை குறித்து மேலும் சில உண்மைகள். நான் புலம் பெயர்ந்துள்ள வெளி நாட்டு தமிழர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி மேலும் சில கருத்துக்கள் கூற விரும்புகிறேன். இந்த பிள்ளைகளுக்கு ஆங்கில கலாச்சாரத் தாக்கம் பெருகி வருகிறது. அதற்கு ஏற்ப புதுப்புது பொழுதுபோக்கு சாதனங்ககளும் நிறையவே உள்ளன.இந்த சூழலில் இவர்கள் தமிழ் பேசுவதும், படிப்பதும் அரிதாகி வருகிறது. பல பிள்ளைகள் வீடுகளிலும் வெளியிலும் தமிழே பேசுவதில்லை. தமிழ் படிக்காமலேயே இவர்களுக்கு கொஞ்சமாவது தமிழ் தெரிகிறது அல்லது புரிகிறது என்றால் அது தமிழ்த் திரைப்படங்களால்தான் என்று நான் சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆகவே தமிழ்த் திரைப் படங்களும், தமிழ்ப் பாடல்களும் இளைய சந்ததியினர் தாய் மொழியான தமிழை மறக்காமல் நினைவு படுத்திக்கொள்ள பெரிதும் துணை நிற்கிறது எனில் அது மிகையன்று! அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் மரு. திரு ஜான்சன்,

      நீங்கள் சொன்ன கருத்துக்கள் எதையும் மறுக்க வாய்ப்பில்லை. கதாநாயக வழிபாடு இன்று சிறார்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும் அதனால் மொழியில் பெரிய வளர்ச்சி ஏதும் இருக்குமா? இன்றைய திரைப்படங்கள் பெரும்பாலும் தங்கிலீஷ் மொழியைத்தானே வளர்க்கிறது?

      அன்புடன்
      பவள சங்கரி

    2. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      நண்பர் டாக்டர் ஜான்சன் சொல்வதை நானும் ஏற்று வழி மொழிகிறேன்.

      நாங்கள் வடநாட்டில் /அன்னிய நாட்டில் கடந்த 45 ஆண்டு கட்கு மேல் வசித்து வருகிறோம். என் பெண் பிள்ளைகள் இருவரில் ஒருத்தி மருத்துவ டாக்டர், அடுத்தவள் எஞ்சினியர்.

      அவர்கள் படித்த மொழிகள் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் [கேந்திரிய வித்தியாலயம்]. அவர்களுக்கு வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுத்தோம். அவருடன் தமிழில்தான் நாங்கள் பேசுவோம். பார்க்கத் தமிழ்த் திரைப்படம், கேட்கத் தமிழ்த் திரைப்படப் பாடல் வீட்டில் எப்போதும் போடுவோம்.

      இருவரும் நன்றாகத் தமிழில் பேசுவார், தமிழ் எண்ணிக்கையும் தெரியும். எழுத்துக் கூட்டி மெதுவாக வாசிப்பார்.

      சி. ஜெயபாரதன்

  8. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பவள சங்கரி. நான் மொழி வளர்ச்சி பற்றி கூறவில்லை. வீட்டில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடுவதால் தமிழ் பேசாதா பிள்ளைகளின் செவிகளில் தமிழ் ஓரளவு ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. அதுவும் இல்லையேல் தமிழை இவர்கள் அடியோடு மறந்து விடும் வாய்ப்பு உள்ளது. காரணம் வீட்டில் தமிழ் பத்திரிகையோ, தமிழ் நூல்களோ வாங்கி படிக்கும் பழக்கம் இல்லாமல் போனது. நான் இங்கு வரும் பல தமிழர்களிடம் தமிழ் படிப்பீர்களா என்று கேட்கும் போது 90 சதவிகிதம் ” இல்லை ” என்றே பதில் வருகிறது. தமிழ் நூல்கள் இங்கு தமிழ் திரைப்பட குறுந்தட்டுகள் போன்று விற்பனை ஆவதில்லை. இங்கு ஒரு சாதாரண ஊரில் குறுந்தட்டு கடைகள் நிறைய உள்ளன. ஆனால் தமிழ் நூல்கள் விற்பனை செய்யும் கடைகள் காணமுடியாது. தமிழ் நாட்டு நிலை எனக்குத் தெரியவில்லை. இளைஞர்கள் நூல்களை வாங்குவதைவிட குறுந்தட்டுகள் வாங்குவதில் தான் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர். காரணம் அவர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  9. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இந்நிலையில் அடுத்த தலைமுறை குழந்தைகளை ஓரளவிற்கு இழுத்துப்பிடித்து தமிழ் கற்க வைக்கலாம் என்றாலும், அதற்கு அடுத்த தலைமுறையினரின் நிலை குறித்த கவலை எழாமல் இல்லை. \

    சஹோதரி ஸ்ரீமதி பவளசங்கரி இரண்டரை தசாப்தங்களாக ஹிந்துஸ்தானத்தில் எல்லைப்பகுதிகளில் பணியாற்றிய எனக்கும் என்னைப் போன்றோருக்கும் மேற்கண்ட விஷயத்தில் மிக முக்ய அக்கறை / கவலை உண்டு. எங்கள் குழந்தைகளுக்கு தமிழை எப்படி போதிப்பது என்ற கவலை இருந்ததுண்டு.

    இருபது வருஷ முன்னர் நேபாள எல்லையில் இருந்த போது என்னுடைய மகனுக்கு தமிழில் பேச நானும் என் பத்னியும் மட்டிலும் தான். எங்கு சென்றாலும் எங்களுடன் இருக்கும் அமுதினுமினிய திருப்புகழ் என் மகனுக்கு போதிக்கப்பட்டது எனினும் ஆசிரியராக இருந்த என் மாமனார் அவர்கள் ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் போன்ற நூற்களை மனனம் செய்விக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். இணையம் போன்ற வசதிகள் இல்லாத அச்சமயத்தில் ஓரிரு மாதத்திற்குப் பின் தபாலில் இவற்றை வரவழைத்தேன்.

    பின்னிட்டும் மகனுக்கு தமிழ் கற்பிப்பது ஒரு சவாலாகவே இருந்தது. பல எல்லைப் பகுதிகளில் உத்யோகத்தில் இருந்த எனக்கு அங்கிருந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் ஆங்க்லம் மட்டிலும் போதிக்கப்பட்டதால் என் மகன் அந்த மொழிகளையே பள்ளி வாயிலாக கற்க முடிந்தது. ஆனால் அவன் கற்கும் ஒவ்வொரு சொல்லையும் அச் சொல் ஹிந்தியில் என்ன ஆங்க்லத்தில் என்ன மற்றும் தமிழில் என்ன என்று நானும் என் பத்னியும் மண்டையைக் குடைந்து கொண்டு அவனுக்கு போதிக்க நேர்ந்தது நினைவில் உள்ளது.

    என் மகன் எங்களுடன் தமிழிலேயே பேசுவான். எங்களுடன் திருப்புகழ் ஓதுவான். ஆயினும் தமிழ் எழுத்துக்களை அவனுக்கு எங்களால் கற்பிக்க முடியவில்லை. அவன் மேற்படிப்புக்கு தமிழகம் வந்த போது அவசர அடியில் தமிழ் எழுத்துக்களை கற்க முயற்சி செய்தான். ஆனால் தமிழில் எண்ணிக்கையை முறைப்படி கற்கவில்லை. பள்ளியில் ஹிந்தி மற்றும் ஆங்க்லத்தில் எண்ணிக்கை கற்ற அவன் – தமிழ் பேசத் தெரிந்த அவன் தமிழில் எண்ணிக்கை கற்கவில்லை / நாங்கள் கற்பிக்கத் தவறி விட்டோம்? தெரியவில்லை?

    எங்களைப் போன்ற பல குடும்பங்களில் அடுத்த தலைமுறையினர் தமிழில் பேசுவதில் பெரும் ப்ரச்சினை இல்லையெனினும் தமிழில் எழுதுவது ஒரு சவால் தான். பல குழந்தைகளுக்கு எண்ணிகையும் ப்ரச்சினை தான்.

    முறையான தமிழ்க்கல்வி இல்லாத சூழ்நிலையில் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழில் என்ன சொல்லிக்கொடுப்பது எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற விஷயங்களில் முறையான வழிகாட்டல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் அனுபவம்.

    \ தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் தங்கள் மொழியையும், இலக்கியத்தையும் எடுத்துச் சென்றதன் காரணம், மொழி தமிழர்களுக்கு வெறும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல. அது அவர்களது கலாச்சார அடையாளம் \

    தனித்து வழி நடக்குமெனதிடத்துமொரு வலத்துமிரு புறத்தும் — திருப்புகழே.

    எங்களது தமிழ் திருப்புகழில் தொடங்கி திருப்புகழில் அமிழ்வது.

  10. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    நான் பகிர விழையும் இன்னொரு விஷயம் மேற்கண்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று அறிய ஆவலாக உள்ளேன்.

    பல பகுதிகளில் இருந்த வேற்று மொழி பேசும் அன்பர்கள் பலர் தமிழ் கற்பதில் தங்கள் ஆவலை என்னிடம் பகிர்ந்ததுண்டு. ஓரளவு தமிழில் பேச நான் அவர்களுக்கு உதவி செய்ததுண்டு. எனக்குப் பரிச்சயமான தமிழ் நூற்களான திருப்புகழ், தேவாரம் மற்றும் திவ்யப்ரபந்தம் பற்றி அவர்களிடம் பகிர்ந்ததுமுண்டு.

    ஹிந்துஸ்தானமுழுவதும் தேசத்தில் உள்ள அத்தனை மொழிகள் வாயிலாகவும் ஹிந்தி மொழி கற்க கேந்த்ர சர்க்கார் வழி வகை செய்துள்ளது.

    அது போல மற்ற மொழியைச் சார்ந்தவர்கள் முறையாக தமிழ் கற்க விழைந்தால் அதற்கு ஒரு ஸ்தாபன ரீதியாக தமிழகம் சார்ந்தோ அல்லது உலகத் தமிழ் இயக்கங்கள் சார்ந்தோ முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

    அப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருந்தால் அதைப்பற்றிய தகவல்களைப் பகிரவும்.

    இந்த விஷயம் சார்ந்த விவாதம் மேற்கண்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்றும் தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

    அருமையான தகவல்கள் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள் பல.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு. கிருஷ்ணகுமார்,

      வணக்கம். தங்களுடைய ஆக்கப்பூர்வமான தகவல்களுக்கு நன்றி. நான் மூன்றாவது நாள் கருத்தரங்கில் மட்டுமே கலந்துகொண்டேன். அன்று தாங்கள் கேட்ட கேள்விக்கான விடை ஏதும் இல்லை. கட்டுரைத் தொகுப்பு நூலையும் பெரும்பாலும் வாசித்துவிட்டேன். அதிலும் இப்படி செய்தி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ரெ.கா. ஐயா போல யாராவது கருத்தரங்கின் பங்களிப்பாளர்கள் இதற்கான விடையை அளித்தால் நம் அனைவருக்கும் பயனுள்ள தகவலாக அமையலாம். நானும் அதற்காகக் காத்திருக்கிறேன். நன்றி நண்பரே.

      அன்புடன்
      பவள சங்கரி

      1. Avatar
        R.Karthigesu says:

        Tamil Virtual University எனும் இணையப் பல்கலைக் கழகம் தமிழ் வகுப்புக்களை எல்லா நிலையிலும் இணையம் வழியாக நடத்தி வருகிறது. முனைவர் பொன்னவைக்கோ அதன் இயக்குநர், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்த்திரேலியா ஆகிய பிரதேசங்களில் தனியார் முயற்சிகளும் கூட்டு முயற்சிகளும் பல உள்ளன. இணையத்திலும் தனியார் வலைத்தளங்கள் பல உள்ளன.

        ரெ.கா.

  11. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இளைஞர்கள் நூல்களை வாங்குவதைவிட குறுந்தட்டுகள் வாங்குவதில் தான் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளனர். காரணம் அவர்களுக்கு தமிழ் படிக்க தெரியாது….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன். \

    வைத்யர் ஸ்ரீ ஜான்சன், வெளிநாடுகள் என்ன வெளிமாகாணங்களிலும் இந்த ப்ரச்சினை உண்டு.

    அடுத்த தலைமுறையினர் தமிழ் எழுத்துக் கற்காததற்கு பெற்றோருடைய முறையான வழிகாட்டலின்மை / முனைப்பின்மையும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

    அல்லது மற்ற மொழி பேசும் குடும்பங்களில் குழந்தைகள் அவர்கள் மொழியினை பேசாத போது நம் குழந்தைகள் தமிழ் பேசுகின்றதே என்ற Over Confidence எழுத்துக் கற்பிக்க திட்டமிடாமைக்கு காரணமாயிற்றா தெரியவில்லை?

    அன்பின் ஸ்ரீ பூவண்ணன் அவர்களுடைய குழந்தைகள் சிறு வயதினர் என நினைவு. அன்பர் அவர்கள் இந்த வ்யாசத்தை வாசிக்க நேர்ந்தால் அவர் அனுபவத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

  12. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு மரு.ஜான்சன்,

    நாம் சற்று யதார்த்த உலகிற்கு வரத்தான் வேண்டும். தமிழ் மொழி மட்டும் படிப்பதால் எத்தனைப் பேருக்கு நல்ல வேலை கிடைத்துவிடும். புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகள் அதிகமாக கேட்கும் கேள்வி இவ்வளவு சிரம்ப்பட்டு நாங்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பது. இதற்கான சரியான பதிலை நாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும். அடுத்து அவர்கள் எளிதான முறையில் பழகும் வகையில், எந்த திணிப்பும் இல்லாமல், சுவையாக கற்றுத்தர தனிப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேண்டும். இப்படி பல வேண்டும் சொல்ல வேண்டியுள்ளது! எந்த அளவிற்கு அதெல்லாம் சாத்தியம் என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது..

    அன்புடன்
    பவள சங்கரி

  13. Avatar
    புனைப்பெயரில் says:

    இன அடையாளத்தை உடையில், உணவில், பழக்கவழக்கங்களில், விவசாய முறையில், தொழில் விற்பனத்தில், மருத்துவ முறையில், சிந்தனையில், இறை தத்துவங்களில் என எல்லாவற்றையும் தொலைத்த ஒரு சமூகம், அதன் மொழி கொண்டிருந்த மேற்சொன்ன கருத்துக்களை புறந்தள்ளிய சமூகம் அதன் வரி , ஓசை வடிவங்களில் மட்டும் அடையாளம் இருக்கிறது என்று நினைத்து புலம்புவது மூட கேனைத்தனமான நிலை. 1940 களிலேயே , நாகரீகமானவன் கோட்டு சூட்டு போட்டு, ஹாய், தேங்க்ஸ், எக்ஸ்கூயூஸ் மீ என்ற போதே இதற்கு அடித்தளம் போட்டாச்சு. துரைச்சானி வீட்டில் இருக்க, துரை ஊருக்குள்ளும் பண்ணைகளுக்கு வந்த போது என்ன நடந்ததோ ( பரதேசி படத்தில் ஆணி அறைந்தார் போல் சொல்லப்பட்டிருக்கும் ) அப்போது அடையாளம் சிதைய ஆரம்பித்து விட்டது. இந்த மாதிரி கூட்டங்கள், அந்தக்கால கிளப் கூட்டங்கள் போல. ஒரு கூட்ட இடைவெளி மதிய பஃபேயில் தட்டேந்தி நாகரீகமாக ஸ்பூனால் சாப்பிடும் போது, “..வாட் ஐ சே இஸ், டமில் இஸ் அ ரிச் லாங்குவெஜ்..) என்பதில் இருக்கு உண்மையான காரணம்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் புனைப்பெயரில் ஐயா,

      :-))) எதிர்பார்த்தேன். மௌனத்தை மட்டுமே பதிலாகத் தரும் ஒரு கருத்தைச் சொல்வீர்கள் என்று. நல்லதுங்க ஐயா.

      அன்புடன்
      பவள சங்கரி

  14. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ நாங்கள் வடநாட்டில் /அன்னிய நாட்டில் கடந்த 45 ஆண்டு கட்கு மேல் வசித்து வருகிறோம். என் பெண் பிள்ளைகள் இருவரில் ஒருத்தி மருத்துவ டாக்டர், அடுத்தவள் எஞ்சினியர்.

    அவர்கள் படித்த மொழிகள் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் [கேந்திரிய வித்தியாலயம்]. அவர்களுக்கு வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுத்தோம். அவருடன் தமிழில்தான் நாங்கள் பேசுவோம். பார்க்கத் தமிழ்த் திரைப்படம், கேட்கத் தமிழ்த் திரைப்படப் பாடல் வீட்டில் எப்போதும் போடுவோம்.

    இருவரும் நன்றாகத் தமிழில் பேசுவார், தமிழ் எண்ணிக்கையும் தெரியும். எழுத்துக் கூட்டி மெதுவாக வாசிப்பார். \

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    என் மகன் தமிழ், ஹிந்தி, ஆங்க்லம், சம்ஸ்க்ருதம், பஞ்சாபி / டோக்ரி மொழிகள் அறிந்தவன். மேற்படிப்புக்காக தமிழகம் வந்தபோது எங்களது வேறான தமிழ் சைலியில் பேசித் திணறியதாகவும் ஓரிரு மாதங்களில் சுதாரித்துக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறான். தமிழகம் போகுமுன்னர் தட்டிக்கொட்டி எழுத்து கற்றுக்கொண்டாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் எழுத்து கற்றுக்கொண்டதில் மெதுவாக எழுத்துக்கூட்டி வாசிக்கும் திறன் பெற்றுள்ளான். தமிழில் எண்ணிக்கை இன்னமும் அவனுக்கு கடினமே.

    இருபது வருஷமுன்னர் நேபாள எல்லைப்பகுதியில் இருந்த எங்களுக்கு தமிழ் திரைப்படங்கள் பார்க்கும் வசதி வாய்ப்புகள் இருந்ததில்லை. பார்க்காததில் குறைகளும் இல்லை.

    பல மாகாணங்களில் உத்யோகம் செய்த எங்களது வாழ்வில் மாற்று பாஷைச் சொற்களில் மிகக் குறிப்பாகப் பெயர்ச்சொற்கள் எங்களை அறியாது புகுந்தன என்றால் மிகையாகாது. காய்கறிகள் பழங்கள் அன்றாட வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ள பெயர்ச்சொற்கள் வேற்று பாஷைச் சொற்கள். குறிப்பாக ஹிந்தி சொற்கள். கொஞ்சம் பஞ்சாபிச் சொற்கள்.

    ஆனால் இன்று எனக்கு ஆயாசம் தரும் விஷயம் பெற்றோரான நாம் நம் குழந்தைகளுக்கு ஏன் தமிழ் எழுத்தை பசுமரத்தாணியாக சிறுவயதில் பதிக்க முடியவில்லை என்பது.

    கந்தர் அந்தாதியும், அனுபூதியும் திருப்புகழ்களும் எழுதாக்கிளவி போல என் மகன் கற்றுள்ளான். என் பெற்றோர் அவர் தம் பெற்றோர் அவர் தம் பெற்றோர் என குலதனமாக எங்களுக்குக் கிடைத்த செல்வமாயிற்றே திருப்புகழ். அதை என் மகன் தனது அடுத்த தலைமுறைக்கு எடுத்துத் தருவான் என்ற உகப்பும் பெருமிதமும் எனக்குண்டு.

    ஆனால் நான் வாசித்து மகிழ்ந்த எனக்கு மிகவும் பிடித்த ஸ்ரீமான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளையவர்களின் பிரதாப முதலியார் சரித்ரம் அமரர் கல்கியவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு மற்றும் அலைஓசை போன்ற நூற்களை அவன் வாசித்து மகிழவில்லையே என்ற ஆதங்கம் எனக்குண்டு.

    இங்கு கருத்துப்பகிரும் அன்பர்கள் பலர் தமிழ் இயக்கங்களில் பங்கு பெறுபவர்கள் என அறிகிறேன்.

    வேறு மாகாணங்களிலும் த்வீபாந்தரங்களிலும் இருக்கும் அடுத்த தலைமுறையைச் சார்ந்த குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தை எப்படி சுமையின்றி சுவையுடன் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க முயலலாம் என்பதனை தமிழ் இயக்கங்களில் விவாதிக்க விக்ஞாபித்துக்கொள்கிறேன். அதேபோல தமிழ் கற்க விழையும் மாற்று மொழியினருக்கு தமிழ் கற்க சாதனங்களை ஸ்தாபன ரீதியாக வரையரை செய்ய வேண்டிய விஷயமும்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      //ஆனால் இன்று எனக்கு ஆயாசம் தரும் விஷயம் பெற்றோரான நாம் நம் குழந்தைகளுக்கு ஏன் தமிழ் எழுத்தை பசுமரத்தாணியாக சிறுவயதில் பதிக்க முடியவில்லை என்பது.//

      அன்பின் திரு கிருஷ்ணகுமார்,

      தங்களுடைய ஆதங்கம் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. இப்பொழுது பெற்றோர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம். அடுத்தவரை எதிர்பார்த்து, திட்டம் தீட்டித் தருவார்கள் என்று தவறான நம்பிக்கை கொண்டு காத்திருப்பதில் பலன் ஏதுமில்லை என்பது என்னுடைய அபிப்ராயம். சபையில் ஆன்றோர்கள் பேசியதின் உட்கருத்தாகவும் என்னால் இதையே புரிந்துகொள்ள முடிந்தது. திருமதி வெற்றிச்செல்வி 4000 குழந்தைகளுக்கும் மேல் படிக்கும் தங்கள் பள்ளிக்கு தங்களுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றவாரு குழந்தைகள் விரும்பி கற்கும் வகையில் நல்ல பாடத்திட்டங்கள், குறுந்தகடுகள், வாய்மொழிப்பாடங்கள் என தேவைப்படுவதை பல முறை அழுத்தமாக வேண்டினார். அந்த ஆக்கப்பூர்வமான அவருடைய தேடுதலுக்குச் சரியான தீர்வு அமைய வாய்ப்பே இல்லாதது போல இருந்தது சற்று வேதனையளிக்கக் கூடியதாக இருந்தது. தாய்மொழி தமிழ் மொழி மீது பற்று கொண்டுள்ளோர் பலர் இருக்கும் இந்த காலகட்டத்திலேயே இப்படி ஒரு நிலை என்றால் வருங்காலத்தில் நம் அடுத்த தலைமுறையில் என்ன நடக்கும் என்ற சிந்தனை வேதனையையே அளிக்கிறது.

      தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை ஒருவராலும் எழுப்ப முடியாது! அவர்களாகப் பார்த்து மனமிறங்கி எழுந்து வரவேண்டும். ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டிருப்பதுதான் ஒரே வழி!

      அன்புடன்
      பவள சங்கரி

  15. Avatar
    IIM Ganapathi Raman says:

    //இவ்வளவு சிரம்ப்பட்டு நாங்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பது. இதற்கான சரியான பதிலை நாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.//

    இக்கேள்விக்கு திண்ணை வாசகர்கள் பதிலை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ஒன்றுக்குமுதவா தமிழை – அதுவும் பிறதேயங்களில் வாழ்வோரின் குழந்தைகளுக்கு – ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும் அப்பெற்றோர்கள் ?

    இக்கேள்விக்கு போதுமானவரை திருப்தியளிக்கா பதில் இல்லாதவரை எல்லாமே வெட்டிப்பேச்சுதான்.

    //….நாம் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும்.//

    முதலில் பதில் தெரிந்தால்தானே ஏற்றுக்கொள்ளும்படி சொல்வதைப்பற்றி நினைக்கலாம்?

    சும்மா க்யூரிசியாட்டிவ்காக, அல்லது மோதுமான நேரமிருந்து அதை இலக்கியம் படித்து இன்புற தமிழ் படிக்கலாம். அதைப்போலவே சைனீஸு, கொங்கணி, போர்த்துக்கீர்சியம் எனறு விதவிதமாகப் படிக்கலாம்.

    க்யுரியாசிடி, இலக்கிய இன்பம் தேடி பொழதை போக்குதல் – இவையிரண்டுமே பதிலாக இருக்கலாம். வேறெதாவது உளதோ?

    அடடே ஒன்றை மறந்துட்டேனே! நாஸ்டால்ஜியா! மருத்துவர் ஜாண்சன் போன்றோர், பால்யகால நினைவுகள் விட்டுப்போகாமல நினைந்துநினைந்து வாழ.

    இன்னொன்று: ஆன்மிகவாதிகளுக்கு. அதாவது தமிழில் சமய இலக்கியம் – குறிப்பாக சைவம் – ஆழமான ஆன்மிகத்தைக்கொண்டது. ஒரு மலையாளி, சிவ பகதரென்றால், அவர் திருவாசகத்தைப்படிக்க விழைவார். முருக பக்தரென்றால் (கேரளாவில் இவர்கள் அதிகம்) திருப்புகழைப்படிக்க. இப்படி ஆன்மிகத்துக்காக இவர்கள் தமிழை படிக்கிறார்கள்.

    மற்றபடி நோ யூஸ். வெரி வெரி சாரி.

    1. Avatar
      பவள சங்கரி says:

      அன்பின் திரு கணபதி ராமன்,

      தாய் மொழி படிப்பதில் நோ யூஸ் என்று விட்டேத்தியாகப் பதில் சொல்வதில் எந்த பெருமையும் இருப்பதாக எனக்குப் புரியவில்லை ஐயா. நமக்கென்று ஒரு அடையாளம் கொடுப்பது நம் தாய் மொழி. இன்று பன்மொழி மோகம் வேண்டுமானால் ஒரு இன்பத்தைக் கொடுக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் நம் அடையாளத்தைத் தொலைத்துவிட்டோமே என்ற சொல்லொணா வேதனை வந்து வாட்டும். அன்று விழுந்து புரண்டு பழைய ஆவணங்களைத் தேடி அலைவார்கள். அப்போது புரட்சி வெடிக்கலாம். அதற்கு ஆதரவாக நாம் இன்று நம்மால் முடிந்ததை அங்கங்கு பதிந்து வைத்துவிட்டுப் போகலாமே. எதற்கு இந்த எதிர்மறை சிந்தனை. ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்ற பாரதியின் வார்த்தை உண்மையாகைவிடும் சாத்தியக்கூறு இன்று இல்லாமல் இருக்கலாம். காரணம் குறைந்தது 1 இலட்சம் பேர் ஒரு மொழியைப் பேசுபவராக இருந்தால் அந்த மொழி தழைத்து நிற்கும் என்ற மொழி வல்லுநர்களின் கருத்தின்படி இன்று பிழைத்து, தளைத்தோங்கி நிற்கும் நம் அன்னை மொழியின் எதிர்காலத்தைப் பற்றி கவலைகொள்ள வேண்டிய சாத்தியக் கூறுகளும் இல்லாமல் இல்லை.

      கொஞ்ச நாட்கள் முன்பு இறந்து போன 89 வயதான அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தைச் சார்ந்த மரியா ஸ்மித் ஜோனெஸ், பழங்குடியினத்தைத் சேர்ந்த மக்களின் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருந்தவர். பழங்குடியினரின் மொழியான ‘ஏயக்’ என்ற மொழியை இறுதியாகப் பேசத் தெரிந்தவர் இவர் மட்டும்தான் என்று படித்த போது வேதனையாக இருந்தது. ஒரு மொழியே அழிவது என்றால் அந்த மொழியைச் சார்ந்த கலாச்சாரம், பண்பாடு எல்லாம் அழிகிறது என்று பொருள் இல்லையா? மரியா தன்னால் இயன்ற நன்மையை செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். “ஏயக்” மொழி அழிந்து விடக்கூடாது என்பதற்காக மரியா ஸ்மித் ஆக்கப்பூர்வமாகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியுடன் ஏயக் மொழிக்கான அகராதி மற்றும் இலக்கண நூலையும் தயாரித்து வைத்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேச முனைந்தால் அந்த மொழி மீண்டும் உயிர் பெறும் வாய்ப்பு அமையும்.ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. பிற்காலத்தில் நம் தமிழ் மொழிக்கும் இந்த நிலை வரலாம். நாம் நம் பங்கிற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் இன்று நம் முன் நிற்கும் கேள்வி.

      அன்புடன்
      பவள சங்கரி

  16. Avatar
    Dr.G.Johnson says:

    திரு கணபதி ராமன் அவர்களே, உங்களுடைய பின்னூட்டம் படித்தேன். நம்முடைய இளைய சந்ததியினர் தமிழ் எங்கள் தாய் மொழியாய் இருந்தால் என்ன? இருந்துவிட்டு போகட்டுமே ? அதை நான் படித்துதான் வாழ்க்கையில் முன்னேறப் போகிறேனா? என்ற நிலையில் போய்கொண்டிருப்பது வெளி நாடுகளில் மட்டுமல்ல. தமிழ் நாட்டிலும் இந்த நிலை உள்ளது என்றே கருதுகிறேன். இதற்கு சரியான விடை யாருக்கும் தெரியவில்லை என்பது ஓரளவு உண்மையே.

    இந்த நிலை எப்படி வந்தது? இதற்கு முழுக்க முழுக்க காரணம் பெற்றோரே., நமக்கு ஆங்கிலத்தில் பேசினால்தான் மவுசும் மரியாதையும் பெருமையும் என்று எண்ணும் காலம் இது. குழந்தைகளிடம் ஆங்கில்த்தில் பேச சொல்லித் தருகிறோம். செல்ல நாய்க் குட்டிகளிடமும் ஆங்கிலம் பேசுகிறோம். இந்தச் சூழலில் வளரும் பிள்ளைகள் எப்படி தமிழ் பேசவும், படிக்கவும், எழுதவும் விரும்புவார்கள்? இதற்கு நான் சில வழிகள் கூற ஆசைப்படுகிறேன்.

    1. வீடுகளில் தமிழில் பேசுவதை வ்ழக்கில் கொள்ள வேண்டும்.

    2. வீட்டிலும் கோவில்களிலும் தமிழில் வழிப்படும் பழக்கத்தை பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்து ஊட்ட வேண்டும்.

    3. ஆங்கிலப் பள்ளிகளில் பிள்ளைகளை அனுப்பினாலும் அந்‌தந்த நாட்டு அரசுகளிடம் தாய்மொழியான தமிழை அங்கு சொல்லித் தர குரல் கொடுக்க வேண்டும். இது சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உள்ளது. மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. ஆனால் தமிழில் ஒரு உயர்நிலைப் பள்ளியும் இல்லை. வேறு நாடுகளின் நிலை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.

    4. தமிழர்களின் இல்லங்களில் தமிழ்ப் பத்திரிகைகள், வார இதழ்கள், மாத இதழ்கள், தமிழ் நூல்கள் வாங்கி படிக்கும் பழக்கத்தை பெற்றோர் முதலில் மேற்கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும்.

    5. ஒரு அனுபவ பூர்வமான உண்மை: மலேசியாவில் தமிழ்க் கிறிஸ்துவ ஆலயங்களில் பாடல்களும் , பிரசங்கங்களும் , போதனைகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் என்று தேசிய ரீதியில் நாங்கள் ஒரு இயக்கமே வைத்துள்ளோம். பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லித்த்தர முயற்சிக்களும் எடுத்து வருகிறோம். இதன்மூலம் ஆங்கிலத்தில் தமிழைப் படிப்பதை தவிர்க்கவும் முயன்று வ்ருகிறோம்.

    இன்னும் நிறைய சொல்வேன்….அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  17. Avatar
    ஷாலி says:

    //ஒன்றுக்குமுதவா தமிழை – அதுவும் பிறதேயங்களில் வாழ்வோரின் குழந்தைகளுக்கு – ஏன் கற்றுக்கொடுக்க வேண்டும் அப்பெற்றோர்கள் ?//

    தேவையில்லை என்று தான் கவிஞர் அறிவுமதி கூறுகிறார்.பிழைக்க பிறமொழி படிக்க தூண்டுகிறார்.

    பிழைக்கும் வழி…

    மொன்னைத் தமிழனே!
    முதலில் அன்னைத்
    தமிழை
    அறவே
    மற! மற!
    பிழைக்க வேண்டுமா?
    ஆங்கிலம்கற்றுக் கொள்!
    அது போதுமா என்றா
    கேட்கிறாய்!
    போதும்!
    போதும்!
    அது மட்டும்
    போதும்!
    ஆனால்
    உயிர்
    பிழைக்க வேண்டுமா?
    மும்பை என்றால்
    மராத்தி
    கற்றுக் கொள்!
    கர்நாடகம் என்றால்
    கன்னடம்
    கற்றுக் கொள்!
    கொழும்பு என்றால்
    சிங்களம்
    கற்றுக் கொள்!

  18. Avatar
    ஷாலி says:

    //தமிழை மறந்து போன தமிழ் நாடு அல்லது
    தமிழ் நாட்டை மறந்து போன தமிழ் என்று எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி.
    குறுக்கு நெடுக்கு அரசியலின் “இடியாப்ப”சிக்கல்களில் தமிழ் அமிழ்ந்து கிடக்கிறது என்பதே உண்மை.//

    இந்த உண்மையை உரத்துக்கூறுகிறார் உணர்ச்சிக்கவிஞர் காசி.ஆனந்தன்.

    தமிழா!
    நீ
    பேசுவது தமிழா?

    அன்னையைத் தமிழ்வாயால்
    ‘மம்மி’ என்றழைத்தாய்…
    அழகுக் குழந்தையை
    ‘பேபி’ என்றழைத்தாய்…
    என்னடா, தந்தையை
    ‘டாடி’ என்றழைத்தாய்…
    இன்னுயிர்த் தமிழை
    கொன்று தொலைத்தாய்…
    தமிழா! நீ பேசுவது தமிழா?

    உறவை ‘லவ்’ என்றாய்
    உதவாத சேர்க்கை…
    ‘ஒய்ப்’ என்றாய் மனைவியை
    பார் உன்றன் போக்கை…
    இரவை ‘நைட்’ என்றாய்
    விடியாதுன் வாழ்க்கை
    இனிப்பை ‘ஸ்வீட்’ என்றாய்
    அறுத்தெறி நாக்கை…
    தமிழா! நீ பேசுவது தமிழா?
    வண்டிக்காரன் கேட்டான்
    ‘லெப்ட்டா? ரைட்டா?’
    வழக்கறிஞன் கேட்டான்
    என்ன தம்பி ‘பைட்டா?’
    துண்டுக்காரன் கேட்டான்
    கூட்டம் ‘லேட்டா?’
    தொலையாதா தமிழ்
    இப்படிக் கேட்டா?
    தமிழா! நீ பேசுவது தமிழா?
    கொண்ட நண்பனை
    ‘பிரண்டு’ என்பதா?
    கோலத் தமிழ்மொழியை
    ஆங்கிலம் தின்பதா?
    கண்டவனை எல்லாம்
    ‘சார்’ என்று சொல்வதா?
    கண்முன் உன் தாய்மொழி
    சாவது நல்லதா?
    தமிழா! நீ பேசுவது தமிழா?
    பாட்டன் கையில
    ‘வாக்கிங் ஸ்டிக்கா’
    பாட்டி உதட்டுல
    என்ன ‘லிப்ஸ்டிக்கா?’
    வீட்டில பெண்ணின்
    தலையில் ‘ரிப்பனா?’
    வெள்ளைக்காரன்தான்
    உனக்கு அப்பனா?
    தமிழா! நீ பேசுவது தமிழா ?

  19. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு ஷாலி அவர்களே, இரண்டு கவிதைகள் மேற்கோள் காட்டி அசத்திவிட்டீர்கள். இன்று தமிழ் வளர்ச்சியைப் பொருத்தவரை தமிழனின் நிலை பரிதாபமே. ஆனால் தமிழ்ப் பற்று கொண்ட நம் போன்றோர் இதை இப்படியே விட்டு விடாமல் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். முதலில் நாம் வீடுகளிலும், உறவினர் மததியிலும், நண்பர்கள் வட்டத்திலும், பொது மேடைகளிலும், ஊடகங்களிலும் இது பற்றி பரிந்துரைகள் செய்யவேண்டும்…. டாக்டர் ஜி. ஜான்சன்.

  20. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பு சஹோதரி ஸ்ரீமதி பவளசங்கரி

    எனக்கு இரண்டு விஷயங்களில் ஆர்வமும் அக்கறையும்

    1. மாற்றுமொழியினர் தமிழ் கற்க விழைந்தால் அதற்கு ஸ்தாபன ரீதியாக தமிழ் இயக்கங்கள் செய்ய முடிந்த உபகாரம். குறிப்பாக மாற்று மொழியினருக்கு அவர்கள் மொழி மூலம் தமிழ் கற்க உதவும் புத்தகங்கள். இயன்றால் இது போன்ற சான்றோர் கூட்டங்களில் இந்த விஷயம் பற்றி கலந்துரையாட வழிவகை செய்து மேலும் அது சம்பந்தமான கருத்தைப் பகிரவும்.
    2. நான் வசிக்கும் பல பகுதிகளில் கண்ட பொதுவான ப்ரச்சினை. தமிழில் மற்ற மொழிகள் கலப்பது. இது இயல்பானதே. ஆனால் குழந்தைகளுக்கு எழுத்து முறையாகக் கற்றுக்கொடுத்திருந்தால் — அவர்கள் தமிழில் வாசிக்க முனைந்திருந்தால் — ஒருக்கால் கலப்பு இருந்தாலும் – தூய தமிழையும் அடையாளம் கண்டிருக்க முடியும். பள்ளி வழியாக இல்லாது குழந்தைகளுக்கு எழுத்து மற்றும் வாசிப்புப் பயிற்சி சுமையில்லாது சுவையாகக் கொடுக்க ஸ்தாபன ரீதியாக ஒரு வழிகாட்டல் சான்றோர்கள் மூலம் இருந்தால் அது பரிமளிக்கும்.

    1. Avatar
      பவள சங்கரி says:

      சரியாகச் சொன்னீர்கள் திரு கிருஷ்ணகுமார்.இதுதான் நம்முடைய விருப்பமும்! காலம் பதில் சொல்லும்.

      அன்புடன்
      பவள சங்கரி

  21. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ ஒரு அனுபவ பூர்வமான உண்மை: மலேசியாவில் தமிழ்க் கிறிஸ்துவ ஆலயங்களில் பாடல்களும் , பிரசங்கங்களும் , போதனைகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் என்று தேசிய ரீதியில் நாங்கள் ஒரு இயக்கமே வைத்துள்ளோம். \

    வைத்யர் ஸ்ரீ ஜான்சன், தில்லியில் நான் கண்டபடி எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானே பெரும் இயக்கம்.

    அவரது திருப்புகழே தமிழ் ப்ரசார சாதனம்.

    எந்த மொழி என்று கூடத் தெரியாதவர் கூட அந்தாதியிலும் அனுபூதியிலும் திருப்புகழ்களிலும் தங்கள் மனதைப் பறிகொடுப்பதை கண்ணாறக்கண்டுள்ளேன். வியந்துள்ளேன். சர்தார் இஷ்விந்தர்ஜித் சிங்க் அவர்களது கந்தர் அனுபூதி கேட்டு பலமுறை மகிழ்ந்துள்ளேன்.

    ம்………அன்பர் ஷாலி சுவையான அருமையான கவிதை.

  22. Avatar
    muthuvalavan says:

    திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கம்……எனது முனைவர் பட்ட ஆய்விற்கு, தரமான ஒரு அயலகத் தமிழ் எழுத்தாளர் படைப்பு ஒன்றை பரிந்துரை செய்யுங்களேன்….நன்றி….

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *