தினம் என் பயணங்கள் -21 தேர்விற்கான நான்காம் நாள் பயணம்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

(22.05.2014)

வாழ்க்கையை ரசிப்பு வட்டத்திற்கு கொண்டு வர பல அனுபவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் ருசித்துப் பருகுவதான முயற்சிதான் என்னுடையது. வாழ்வோ சாவோ அதை ரம்மியத்தோடு கடந்து உயிர்ப்போடு வாழ்ந்து முடிக்க எத்தனிக்கும் ஒரு சாதாரணளின் வாழ்க்கையை எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்ல ஆசிக்கும் இலட்சிய நடை இந்த எழுத்து.

சராசரி பெண்ணிற்கு மறுக்கப்படாத வாழ்வனுபவங்கள், பாசம், பாதுகாப்பு, இயலாமை என்று காரணம் காட்டி மறுக்கப்பட்ட போதும், அதை முனைந்து வாழ்ந்து கடக்க முயலும் உயிர் முனைப்புதான் இந்த எழுத்துக்கள்.

இன்றைய பயணத்தில் திடீர் திருப்பு முனையாக அம்மாவும் என்னோடு திருவண்ணாமலை வர ஆட்டோவில் ஏறினாள். அவள் வருவது எனக்கு முன் தகவலாக இல்லாதபடியால், ஆச்சரியப்பட்டேன்.

“மாத்திரை வாங்கனும் நாளைக்கு டென்த் ரிசல்ட், மார்ஷலைப் போய் பார்க்கனும்“ (அக்கா மகன்) இப்படி ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்களை அவள் ஒப்புவிக்க.

தேவனைக் கெஞ்சுதலாய் பார்த்தேன். அந்த பார்வையின் அர்த்தத்தை அவன் உணர்ந்திருந்தான். முகம் கோணாமல் அம்மா போக விரும்பும் இடங்களுக்கு அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதின் குறிபொருள் அதில் இருந்தது.

எப்போழுதும் போல் முறையாறில் விஜயை ஏற்றிக் கொண்டாயிற்று, இன்று தண்டா பெண் வராததால் அம்மாவின் அருகில் விஜய் அமர்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டு வந்தான். பேச்சில் மனம் லயிக்க வில்லை. விஜயின் நச்சரிப்பின் பேரில் எனது நூல் “இது நிகழாதிருந்திருக்கலாம்” கவிதைத் தொகுப்பு ஒன்று என் கைப்பையில் தஞ்சம் புகுந்திருந்தது.

முதல் கவிதை தொகுப்பு, எழுதத் துவங்கிய ஆரம்ப கால கவிதைகள். ஒவ்வொரு கவிதையும் உணர்வின் உயிர்ப்பு, நான் உணர்ந்து உயிர்த்து எழுதியது. சில கண்ணீர் துளிகளைப் பிரசவித்திருக்கும் வரிகளும் அதில் அடக்கம். கற்பனையின் சிறகடிப்பில் வானத்தை தொடச் செய்த வரிகள். அது என் முதல் புத்தக பிரசவிப்பு என்பதால், என் பார்வையில் விலையேறப் பெற்றது தான். இருப்பினும் அவர் பார்வையில், இதென்னடா தேர்வு எழுத வந்தவள், புத்தகம் பரிசளிக்கிறாள் என்று எண்ணினால், இரு மனநிலை வாசலில் எப்பக்கமும் உள் நுழைய முடியாமல் நான். மெல்ல நினைவுகளை ஒன்று குவித்து, பாடத்தில் கவனம் செலுத்த முனைந்தேன். மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என்று திருப்பிய பக்கங்களை ஆட்டோவின் குலுக்கல் பயணத்தில், கைவிட்டேன்.

சாலையோர தூரத்து மலை வெயிலின் கைங்கரியத்தில் தக தகத்தது. நெருப்பு ஜ்வாலையின் மஞ்சள் சாரலில் நனைந்ததைப் போன்ற தோற்றம். ஆட்டோ சீரான வேகத்தில் விரைந்து கொண்டிருக்க, மஞ்சள் வண்ணத்தில் சாமந்தி மலர்கள், கொஞ்சம் கட்டாந்தரை, பொட்டல்காடு, ஆழ்பள்ளத்தில் வரண்ட தரை வெடிப்புகளில் வேலிகாத்தான் மரங்கள் என்று மாறி மாறி வந்தன. ஒரு புறம் சவுக்குத் தோப்பு அதன் எல்லை வரை பார்வையை ஈர்த்தது.

திருவண்ணாமலை அருகே நெருங்க நெருங்க உயர்ந்த மலைமகள் அடர் யானை கருப்பில் இருகரம் கூப்பி வரவேற்றாள். ரமணாசிரமம் அருகே சின்ன சின்ன சிலைகள். அதில் வெகுவாய் என் கண்களைக் கொள்ளை யிட்டது குட்டி சிவலிங்கம்.

போகிற வழியில் முதல் நாள் பார்த்த பாட்டிகளின் இருப்பிடத்தை பார்த்தேன். நாங்கள் அன்று இருந்த இடத்தில் ஒரு கார் நின்றிருந்தது. அந்த புன்னகைப் பாட்டியைக் காணவில்லை. மற்றொருத்தி வீட்டின் சுவர் புறம் திரும்பி எங்களுக்கு புறமுதுகு காண்பித்தாள்.

சண்முகா தொழிற்சாலை மேல் நிலைப்பள்ளியில் உள் நுழைந்த போது அந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணைப் பார்த்தேன். ஸ்கூட்டி ஒட்டிக்கொண்டு வந்தாள். சற்று குண்டு, அவள் சேலை கட்டியிருந்த பாங்கு என்னைக் கவர்ந்தது. நீண்ட கூந்தல் பின்னப்பட்டு முதுகில் சிறு தார் சாலை அமைத்திருந்தது.

விஜய் என்னிடம் இருந்து கவிதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தேர்வு நடத்தும் அலுவலரைத் தேடிச் சென்றான். அவன் ஒரு அறையில் போய் கேட்டு மறு அறை நாடிய போது அவர் வெளியில் வந்து கை கழுவினார். மதிய உணவு நேரம். சாப்பிட்டு முடித்திருந்தார். விஜய் ஏதோ பேசினான். பின் சிரித்தான். அதன் பிறகு புத்தகத்தை அவரிடம் நீட்டினான். அவர் வாங்க வில்லை. அவனிடம் ஏதோ கூற, விஜயும் தேவனும் மீண்டும் என்னை நோக்கி வந்தார்கள்.

மனதில் சிறு ஊசி குத்தும் வலி, இது எப்போதேனும் எதிர்பாராது காயப்படும் வேலைகளில் வந்து போதும். அந்த வலி இரு சுண்டு விரல்களிலும் பிரதி பலிக்கும். நாக்கு வரண்டு தண்ணீர் கேட்கும். முதல் முறை நண்பன் ராஜகுரு எனக்கு எழுதிய 16 பக்க விலகல் கடிதத்தைப் படித்த போது ஏற்பட்டது. மறுமுறை என் நெருங்கிய நண்பரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது. அடுத்து அதே உணர்வு இப்போதும்.

“அதற்குத்தான் புத்தகம் தர வேண்டாம்ன்னு சொன்னேன். இவனுங்க கேட்டாத்தான என்று எனக்குள் ஒரு குரல் புலம்ப அதன் மேலேயே வைத்திருந்தேன் கவனத்தை. யாரேனும் நிராகரிக்கும் போது அந்த வலி ஏற்பட்டது. அல்லது நிராகரிப்பதாக நான் உணர்ந்த போதும் அந்த வலி வந்தது.
விஜய் சிரித்தபடியே வந்தான் உன்கிட்டயே வாங்கிக்காறாராம் என்றான். இதுக்குத்தான் எதுவும் தர வேண்டாம் என்றேன். அய்யோ! அவர் ஒண்ணும் வேணாம்ன்னு சொல்லல; உங்க அக்காக் கிட்டயே வாங்கிக்கறேன்னு தான் சொன்னார்.

எங்கடா தேர்வு ? மேலதானா இன்னைக்கும் என்றேன்

இல்ல அவர் ரூம் பக்கத்துல தான் உட்காரச் சொன்னார், வேணும்ன்னா அவரையே பிட் கொடுக்க சொல்லவா?

இது தான் வரம் கொடுத்தவன் தல மேல கை வைக்குறது.

தேவனும் விஜயும் சிரிக்க, நானும் வலி மறந்து இலகுவானேன். தேர்வு நடத்தும் அலுவலருக்கு கொடுக்கவென கொண்டு வந்த கவிதை புத்தகம் பையில் இடம் பெற்றிருந்த போதிலும் மனதிற்கு கனமானது.

தேர்வு அறையில் கடைசி பென்சிற்கு முன் வரிசையில் முதலிடத்தில் அமர்ந்தேன். பக்கத்தில் சன்னல். என்ன பிட் அடிக்க வசதியா இந்த இடமா என்றவனுக்கு ஒரு புன்னகை பதில் அளித்தேன்.

எனக்கு தானே தெரியும் அடிக்கடி வாசல் நோக்கி தேர்வு நடத்தும் அலுவலரின் பின்னே ஓடும் கண்களை கட்டுப்படுத்த என.

தேர்வு அறைக் கண்காணிப்பாளர் வந்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் தேர்வுத் தாள் தரப் போகிறார்கள். தேர்வு நடத்தும் அலுவலர் நீங்க அவங்களுக்கு ஆன்ஸர் ஷிட் தந்துடுங்க கொஸ்டியன் பேப்பர் அங்க இருந்து கொண்டு வரேன் என்று போனவர் சிறிது நேரத்திற்கு எல்லாம் வினாத்தாளை கொண்டு வந்து கொடுத்தார்.
முன்னாடியே உட்கார்ந்திருக்காலாமே என்றவருக்கு ஏதும் பதில் தராமல் அமைதியாய் இருந்தேன்.

ஏதோ புரிந்தது போல் தலையசைத்து நகர்ந்தவர் சிறிது நேரத்தில் வந்து இந்த ரூம்ல மூணு பேர் பிட் வச்சிருக்கீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வரும்போது வச்சிருந்தீங்கன்னா சார்ஜ் பண்ணிடுவேன்னு சொல்லி வெளியேறினார்.

என்னைத் தான் சொல்கிறாரோ என்று மனம் தவித்த போதும், நான் எந்த காப்பி பேப்பரையும் வைத்தில்லாததால் மனம் பதைக்காமல் இருந்தது. சிறிது நேரத்தில் வந்திருந்த மற்றொரு அலுவலர் இங்கு யார் பிலிட் [B.Lit] தேர்வு எழுதுவது என்று வினவினார்.

நான் என்றதும், என்னுடைய வினாத்தாளை கொண்டு சென்றவர் திரும்பி கொண்டு வர தாமதமாகத் தேர்வு அறைக் கண்காணிப்பாளரே வினாத்தாளை வாங்கிவர வெளியில் செல்ல அந்த நேரத்தில் பின் புறம் அமர்ந்திருந்த அந்த பெண்ணும் ஆணும் ஒரு நோட்ஸ் வைத்து எழுதுவதை கண்டு பிடித்து அவர்களைக் கண்டித்தார்.

அடுத்து என் அருகில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த ஒருவரிடமிருந்தும் காப்பி பேப்பர் அகற்றப்பட்டது.

பல்கலைக் கழகத்தில் இருந்து சிறப்பு கண்காணிப்பாளர்கள் வந்திருப்பதாக அலுவலக உதவியாளர் வந்து அறைக்கு தகவல் தெரிவித்து செல்ல, அறையில் சிறு பேச்சுச் சலனம் ஏற்பட்டு அமைதியடைந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் தேர்வு நடத்தும் அலுவலருடன் இரு சிறப்பு கண்காணிப்பாளர்களும் வர உடன் வந்த தேர்வு நடத்தும் அலுவலர் தோரணையில் சிறு பவ்வியம் தென்பட்டது.

அது ஏதோ ஒரு புதிய விடயத்தை எனக்குப் புரியவைக்க முயன்று தோற்றது புத்தி. என் கவனித்தலை உணர்ந்த அவர் புருவங்களைச் சுருக்கி என்ன என்பது போல் குறிப்பு உருவாக்கினார்.

நான் ஒன்றும் இல்லை என்று தலையசைத்தேன்.

அடுத்த கணம் இவங்க 15 ரூம் மாடியில மேல ஏற முடியாததால இங்க உட்கார வச்சிட்டோம் என்றார் வந்திருந்தவர்களிடம்.

இருக்கை வசதியா இருக்காம்மா என்றார்

ம் என்று தலையசைத்து மேலும் எழுதத் துவங்கினேன்.

வாயிலில் பார்த்த அந்த மாற்றுத்திறனாளிப் பெண் பின்புறம் அமர்ந்திருந்த அவர்கள் குரூப்பை பார்த்து எழுதிக் கொண்டிருந்தாள். கண்காணிப்பாளர் தலையில் அடித்துக்கொண்ட போதும் கண்டிக்கவில்லை. மாற்றுத்திறனாளி என்னும் பரிதாப உணர்வு.

தேர்வு முடிந்து அனைவரும் வெளியே சென்ற பிறகு, நான் அங்கேயே அமர்ந்திருந்தேன். என்னுடைய பை அதில் இருந்த கவிதை புத்தகம் அதை கொண்டு போக விஜய் அல்லது யாரேனும் வர வேண்டும்.

தேர்வு வருகை பதிவேட்டில் கையெழுத்துப் போட வேண்டும். என்னுடைய பதில் தாளின் வரிசை எண்ணை அதில் குறிக்க வேண்டும். இதற்காக காத்திருக்கும் படி கண்காணிப்பாளரும் தேர்வு நடத்தும் அலுவலரும் கூறியிருந்தார்கள்.

அந்த மாற்றுத்திறனாளிப் பெண் எழுந்து வெளியே செல்ல முற்பட்ட போது பேச்சுக் கொடுத்தேன். எந்த ஊர் நீங்க?

திருவண்ணாமலை தான்.

நல்லா ஸ்கூட்டி ஓட்டுறீங்க.

நீங்களும் ஒட்டலாம் பா ஈசி தான்

ம்ம்ம் அழகாவும் இருக்கீங்க, சேரி அழகா கட்டியிருக்கீங்க.

அவள் மலர்ந்து சிரித்தாள்

உங்க பேரு என்ன ?

கல்பனா.

என் பேரு தமிழ்ச்செல்வி.

நீங்க என்ன பண்றீங்க ?

தாலுக் ஆபிஸ்ல எபிக் ஆபரேட்டரா இருக்கேன்.

நீங்க ?

ஹவுஸ் வைஃப் தான்

ஓ உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா? குழந்தைங்க!

ம் என்று வெட்கச் சிரிப்பு சிரித்தாள். இப்ப தான் கன்சிவ்வா இருக்கேன்.

வாவ்! ரொம்ப சந்தோஷம்.

தேர்வறைக் கண்காணிப்பாளர் இடை புகுந்தார். நீ்ங்க எதும் காப்பி பண்ணலியா? நீங்கல்லாம் நல்லா படிக்கலாம். நீங்க போயி என்று கல்பனாவை பார்த்து இழுத்தார். ரெண்டு மூனு முறை எழுதிட்டேன் அதான் சார் என்றாள். தலை கவிழ்ந்து அவள் வெளியேறிய பின் நானும் வெளி வர.

பதிவேட்டில் கையெழுத்து வாங்கினார்கள்.

தேர்வு நடத்தும் அலுவலரிடம் விடைபெற்ற போது அவரிடம் எனது கவிதை புத்தகத்தைக் கொடுத்தேன்.

அதில் கையெழுத்திட்டுத் தரும்படி கூறினார்.

முதல் ஆட்டோகிராப் போடுவது விசித்திர உணர்வை ஏற்படுத்தியது. உடனிருந்த அம்மா மற்றும் விஜயும் தொலைபேசி எண்ணெய் குறிப்பிடும்படி கூற சிரித்துக் கொண்டேன். இரயில் சிநேகம் போல நாளை தேர்விற்கு பின் பார்க்கப் போவ தில்லை. இதற்கு தொலைபேசி எண் வேறு தர வேண்டுமா? என்று எண்ணியபடி தொலைபேசி எண்ணையும் எழுதி அவரிடம் கொடுத்தேன்.

நன்றிம்மா.

மிகவும் நன்றிங்க சார் என்று அவரிடமிருந்தும் அந்த சண்முகா தொழிற்சாலை மேல்நிலை பள்ளிடமிருந்தும் விடைப்பெற்று கடந்து சென்றேன்.

என் மனம் அடுத்த நாள் தேர்வில் முன் திட்டத்தில் மூழ்க சாலையில் பொட் பொட் டென்று விழுந்த மழைத்துளி முகத்தில் சாரல் தெளித்தது.

இதென்ன குழந்தையாட்டம் குதூகலிப்பு ? என்ற லம்பாடிப் பெண்ணிற்கு,

இவ இப்படித்தான் இருக்க இவ பெத்த பொண்ணும் மழையை கண்டா இப்படித்தான் இருக்காளுங்க என்றாள்.

யார் என்ன விமர்சித்தாலும், மழை என் சிநேகிதி, அவள் திடீர் வருகை என் வருத்தங்களைக் கரையச் செய்து உவகை கொள்ள வைக்கிறது என்பதே உண்மை.

[ஐந்தாம் நாள் தேர்வு தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *