தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3

This entry is part 14 of 23 in the series 21 டிசம்பர் 2014

 

 

திரு.வையவன் அவர்களின் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழ் வரும் போது, பல நாள் பழகிய உறவுகளை விட்டு விலகுவதைப் போன்றதோர் உணர்வு. செங்கை. சொர்ப்பனந்தலிலும் ஒரு இயக்கத்தை துவங்க வேண்டும் என்ற ஜானகி அம்மாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்தேன். அங்கிருந்து திரு.வையவன் அவர்கள் அன்றாடம் செல்லும் பார்த்த சாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு எங்கள் தாயாரின் குலத் தெய்வமான பத்மநாப சுவாமிகள் கோவில். எப்பொழுதேனும் அவர் கோவிலில் இருக்கும் போது கைப்பேசியில் பேச நேரும் போது வந்தொலிக்கும் மணி ஓசையின் ரீங்காரம் இன்னமும் மனதை விட்டு நீங்காமல்.

 

அங்கிருந்து சாலையோரம் மெரினா கடற்கரைக்குச் சென்று, பிறகு திருவல்லிக்கேணி கடற்கரை ஓரமே சென்றோம். நுரை தளும்பும் அலைகளில் முதல் ஸ்பரிசம். என்னைக் கடலின் நடுவில் கற்பனை வனத்தில் நிறுத்தியது. அலைகளில் ஈரத்தை மானசீகமாய் என் பாதங்களில் உணர்ந்தேன்.

 

திரு.வையவன் அவர்கள் பணிக்க, டிரைவர் தனுசு மாங்காய், அன்னாசிப் பழம், மசாளா மக்காச்சோளம் என வாங்கித் தர ஒரு படைப்பாளியாய் அத்தனை சுவையும் உணரும் ஆத்ம வேகத்தோடே ருசி பார்த்தேன்.

 

இத்தனைக்கும் இடையில் டிரைவர் தனுசு தன் இயற்கை உபாதையை ஒரு பேருந்தின் சக்கரத்தில் தீர்ப்பதை, எதார்த்தமாய் சுழன்ற பார்வை படம் பிடிக்க, எத்தனை பகுத்தறிவு வாதியாக இருந்தாலும் அந்த அனுபவம் தனக்கு நேரும் போது சாதாரணராய் பாமரத்தனமாய்  நடந்துக்கொள்வதை எண்ணி கொண்டேன். உபதேசம் என்பதற்கும் அனுபவத்திற்கும் வித்தியாசம் அநேகம்.

 

கடலிடம் விடைபெற்று ஒரு ஹோட்டலில் சாம்பார் சாதமும் புளியோதரையும் உண்டோம். டிரைவரும் எங்களோடு காரிலேயே உணவு உண்டார். அங்கிருந்து மீண்டும் வையவன் அவர்களின் இல்ல வாயிலில் வையவன் அவர்களை இறக்கி விட்டு, பிரியா விடையுடன், பிரிந்தது எங்கள் வாகனம், அவ்விடத்தை விட்டு.

 

சிறிது நேரம் பிரயாணத்திற்குப் பிறகு எனக்கு களைப்பு ஏற்பட ஓட்டுநரின் அனுமதி பெற்று காரின் பின் இருக்கையில் கோழியின் உறக்கம் போல் உறங்கினேன். காரின் சன்னலை ஒரு கையாலும், எதிர்ப்புற சீட்டில் ஒரு கையுமாக பிடித்திருந்தேன். இடை வழியில் நிறுத்தி ரெஸ்டராண்டில் டிரைவர் தனுசு மட்டும் இரவு நேர உணவை முடித்துக்கொண்டார்.

 

மீண்டும் என் பயணத்தில், வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை அசைப்போட்ட படி நிஜமான நிகழ்வுகளை மீண்டும் அசைபோட்டது மனம். வலி, வறுமை, மகிழ்ச்சி, ஏளனம், பரிகாசம், புகழ் என்ற ஏற்ற தாழ்வுகளோடே வாழ்க்கையின் பயணம்.

 

கடந்து வந்த பாதையின் அந்த ஆரம்பப் புள்ளியின் அனுபவத்திற்காக மீண்டும் ஏங்கிடும் மனம். இறந்த காலத்தின் ஊடான பயணத்திலேயே! எதிர்கால ஆசைகளையும் தேக்கி, அந்த கனவு தமிழ்ச்செல்வி ஐ.ஏ.எஸ் ஆகி அதிகாரத் தோரணைவில் வாழும் போது கலைந்து நிஜவுலகிற்கு வந்தது.

 

மேடம் வீடு வந்துடுச்சு என்றார் டிரைவர் தனுசு.

 

இப்படியோர் பயணம் மீண்டும் வாய்க்க வேண்டும் எண்ணத்தோடு, ஒரு நாள் முழுவதும் என்னோடு இருந்த அந்த வாகனத்திடமும், ஓட்டுனரிடமும் நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டேன்.

 

எதார்த்தத்தை விட கற்பனை சுகம். கற்பனை கண்டு செயல்பாடா நிகழ்வு என்பது வீண்.

 

கடலும் நானும் இனிதே முற்றிற்று.

 

[தொடரும்]

Series Navigationயாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)கிளி ஜோசியம்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *