திருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்

This entry is part 36 of 44 in the series 16 அக்டோபர் 2011

ஷி றி ஸேதுராஜன்

[ ஊமையர் கண்ட கனவுகள்]

படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. கிறிஸ்துவ வேதத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய மாபெரும் கோபுரத்தைக் கட்டி விட்டு, பிறகு இறைவனால் சபிக்கப் பட்டு மொழி மாறினதால் ஒருமனம் மாறி ஒருவரை ஒருவர் மனதர்கள் அடித்துக் கொண்டார்கள் என்று வருகின்றது. அதுபோலத்தான் அண்ணாந்து பார்க்கக் கூடிய நாகரீகத்தைக் கட்டி விட்டு நாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும். சமூகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கையிலே, படைப்பாளன் சொல்வதுமட்டும் எப்படி மாற்றுக் குறையாமல் வாசகனுக்குப் போய் சேரும்? படைப்பாளனை விட படைப்பு பெரியது. கம்பனை விட அவன் கதை பெரியதாய் இருப்பது போல. அதனால் எழுத்தாளரான திருமதி கமலாதேவி அரவிந்தனைப் போற்றிப் புகழ்வதை விட இந்த நேரத்தில் அவரது படைப்பை விமர்சனம் செய்யலாம். அவர் புகழ்வதற்குத் தகுதியானவர் இல்லை என்பதால் அல்ல, அந்தக் காரியத்தைச் செய்ய பல பேர் உண்டு என்பதால்.

ஒரே வரியில் நுவல் என்ற இந்த சிறுகதை தொகுப்பைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை நவீனத்துவதையும் தாண்டி பின்நவீனத்துவ சிந்தனைக்கு இட்டுச் செல்ல வல்ல புது முயற்சி என்பேன். தொடக்கம், கிளைமாக்ஸ், முடிவு என்ற யாரோ வார்த்துக் கொடுத்த அச்சு பிசகாமல் எழுதிய “பார்த்தெழுதி” பார்முலா இலக்கியத்தையும், கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கழுத்தறுத்த கதைகளையும் எவ்வளவோ பார்த்துவிட்ட உள்நாட்டு இலக்கிய வைபவத்தில் இந்த நூல் உண்மையாக இருக்கிறது, ஆடம்பர சினிமா செட்டுடன் ஒப்பிடுகையில் எப்படி ஒரு புழுதித்தெரு உண்மையாக இருக்குமோ அதுபோல. தீவிர பிரதட்ச வாதம் யாரோ கண்ட கனவைப் பெயர்த்து எழுதிக் கொன்டிருக்க, நவீனத்துவம் தன் சுய கனவுதான் முக்கியம் என்று முரசறைய, பின் நவீனத்துவம்த்ன் நகரமயமாகுதலின் (க்ஷீதீணீஸீவீணீவீஷீஸீ) காரணமாக ஊமையர்களாய் மாறி சாரி சாரியாக அலுவலுகத்துக்குப் போகும் நவீன மனிதனின் வாழ்வின் அவலங்களுக்கு வரி வடிவம் தருகின்றது. ஒரு வகையில் நகர இரைச்சலில் ஊமைளான நாகரீக கோமாளிகளான நமது கனவுகளுக்கும் அர்த்தம் கற்பிக்க பின் நவீனத்துவ இலக்கியம் அரும்பாடு படுகிறது. அந்த வகையில் ஓர் ஒப்புயர்வில்லாத சிங்கங்பூர் முயற்சிதான் நுவல் என்ற இந்த கதை தொகுப்பு.

இந்த தொகுப்பில்தான் எத்தனை ஊமைகள் – சிங்கப்பூர் நகரத்தின் மடியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஊமையானவர்கள், ஊமையாக்கப்பட்டவர்கள் – உலா வருகிறார்கள்! நுகத்தடியில் வரும் மனநலங்குன்றிய “லெட்சுமி”கள் ஆகட்டும், தாகம் என்ற கதையில் வரும் தாரிணி ஆகட்டும், நுவல் என்ற கதையில் ரேணுவாகட்டும் – வாய் இருந்தும் இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் உலவும் மாந்தரில் பெரும்பாலோர் ஊமைகளே. இவர்கள் அனைவருக்கும் தம் அநுபவத்தை எடுத்துரைக்க இயலாதவாறு மொழியே பிரச்சனையாக மிரட்டுகிறது. அவர்களுக்குப் தம் அநுபவத்தைப் பேச முடியாது என்பதல்ல, அந்த அநுபவத்தின் சுமையைச் சுமப்பதற்கு மொழிக்கு வலிமை இல்லை என்பதுதான் உண்மை. பன்னெடுங்காலம் சங்கம் வைத்து வளர்த்த் மொழிகூட நகரமயமாக்கப்பட்ட நவீன மனிதர்களின் ஊமைத்தனத்துக்கு முன்னால் செயலிழந்து போய்விடுகின்றது என்பதை விளக்கும் சரியான பின் நவீனத்துவ கதைகள் இந்த தொகுப்பில் உள்ள கதைகள். நமக்கு வாய் இருக்கிறதே தவிர அந்த வாயால் எழுப்பப்படும் ஓசையால் நமது தினசரி வாழ்க்கையிந் ஓலத்தை உரைக்க முடியவில்லை. இதுதான் நிதர்சனம், நமது நகர வாழ்வின் அன்றாட அநர்த்த (ணீதீக்ஷீபீ) தத்துவம்.

இந்த கூற்றுக்கு மாபெரும் உதாரணமாக சோறு என்ற கதையில் வரும் மாதவன்குட்டி பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பதின்ம வயது மகள் அம்பிலியை இம்சிக்கிறான் மாதவன்குட்டி. அவள் அடிபடுவதைக்கூட பொறுத்துக்கொண்ட மகள் தன் தாய் அடிபடுவது தாளாமல் குண்டாந்தடியால் மாதவன்குட்டியின் பின்மண்டையில் தாக்குகிறாள். சித்தம் கலங்கிய மாதவன்குட்டி மனநோய் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறான். அவன் பசிக்கு வெண்மையாக இருக்குமே ஒன்று அது ஞாபகத்துகு வருகிறதே அன்றி அதன் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை! பிரெஞ்சு மொழியியலாளர் சாசர் (ஷிணீக்ஷீமீ) கூறியதைப் போல் குறியீட்டுக்கும் (வீரீஸீவீயீமீக்ஷீ) குறிக்கப்படும் பொருளுக்கும் (வீரீஸீவீயீவீமீபீ) இடையே உள்ள தொடர்பு உடைவதைக் காட்ட இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை என்ற அளவுக்கு உள்ளது இந்த கதையின் உள்ளடக்கம். வாழ்வாதார பொருள் கண்முன் தெரிகிறது, ஆனால் அது என்ன என்று சொல்ல மொழியில்லை. உணர்ந்தததைச் சொல்லமுடியாத, சொல்ல வழியில்லாத கொடுமைதான் இன்றைய நகரத்து வாழ்க்கைமுறையின் உண்மையான விமர்சனம். இந்த கதைத் தொகுப்பின் உண்மைக்கும், உண்மையால் வந்த வெற்றிக்கும் இந்த விமர்சன பார்வையே மிகப் பெரிய காரணம்.

மொழி உடைந்து விட்டது என்பதை பறைசாற்றும் வகையில்தான் நூலாசிரியர் தன் கதைகளுக்கு வைத்துள்ள பெயர்களும் உள்ளனவோ என்று தோன்றுகிறது. நுவல், நுகத்தடி, காக்கைப் பொன் என்று எல்லாம் இன்றைய சராசரி சிங்கப்பூரருக்குப் பிடிகொடுக்காத பெயர்கள். அர்த்தமும் அநர்த்தமும் விரவிக் கிடக்கும் பின் நவீனத்துவ நகர சூழலிலே கதையின் தலைப்புக்கூட ஒரு வாசகனுக்கு அநர்த்தமாய்த் தோன்றுவது நல்ல உத்திதான்.

இந்த தொகுப்பில் வரும் கதைமாந்தர்கள் நமது உணர்வுக்கும் மொழிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் பிளவைத் துல்லியமாக பிரதிபலிக்கிறார்கள். மொழியே அநர்த்தமாகிவிட்ட போது, அந்த மொழியையே முதலாய் போட்டு கழுத்தறுக்கும் கயவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மொழிக்கும் உணர்வுக்கும் இடையே உளள இந்த பிளவினால் நகர வாழ்வில் தலைதூக்கியுள்ள இந்த போலித்தனம் மற்றொரு அவலமாகும். இதுவும் கூட நூலாசிரியரின் பார்வைக்குத் தப்பவில்லை. ‘நாசி லெமாக்’ என்ற கதையில் வரும் இந்தியத் தமிழன் முருகேசன் இந்தக் கயமைக்கு உதாரணமாக உலா வருகிறான். கடல்கடந்து வந்த முருகேசனைக் காதலிக்கிறாள் சிங்கப்பூர் கன்னி ஒருத்தி. அவனது கலாச்சார மரபுகளுக்கேற்ப தனது பழக்க வழக்கங்க்களை எல்லாம் மாற்றிக் கொள்கிறாள். தான் விரும்பி உண்ணும் உணவைக் கூட தத்தம் செய்கிறாள். ஆனால் அவனோ, ஆடும்வரை ஆடிவிட்டு இறுதியில் தன்னாட்டுப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்கிறான். அவளைப் பிரிய அவன் கூறும் காரணம் சிங்கப்பூர் கலாச்சாரத்துக்கு காதலித்து பிரிவதெல்லாம் சகஜம் என்பதுதான். இயற்கையிலே அழகில்லாத அவனைப் பூங்கொடி என்ற அந்த பெண் ஏன் காதலித்தாள்? அவன் ஆளுமைக்காக. ஆனால் நம்ப வைத்துக் கழுத்தறுத்தவனை அந்த நவநாகரீக மங்கையால் எதுவும் பெரிதாக செய்யமுடியவில்லைல, கடைசியில் அவளுக்கு பிடித்த அந்த உணவை ஏக்கமாக பார்ப்பதைத் தவிர. இன்டர்நெட் யுகத்தில் மொழி சாதுரியத்தால் பின்னப்பட்ட ஆளுமைகள் வெறும் கானல்நீரே என்று அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான். இதனால்தான் சாட்டிங்க் (நீலீணீவீஸீரீ) என்றும், இன்டர்நெட்டிலேயே டேட்டிங்க் (பீணீவீஸீரீ) என்றும் பல சிங்கப்பூர் மங்கைகள் தானாக இறங்கி வெண்திரையில் பின்னப்படும் சாரமில்லாத வரிவடிவங்களிலே வேயப்படும் ஆளூமைகள் உண்மையென்று நம்பி கயவர்களின் காதல் வலையிலே விழுந்து ஏமாந்துபோகிறார்கள். மொழியில்லாமல் ஆளுமையில்லை. பின் நவீனத்துவ நகரத்தில் (நரகத்தில்?) மொழியே இவர்களைக் கவர்கிறது, மொழியே இவர்களைக் கவிழ்க்கிறது. இது சிந்திக்கத்தக்க கோணம். இதை மிகைகூறாமல் எடுத்துச்சொல்வது இந்த நூலின் பலம்.

நகர வாழ்க்கையின் இரைச்சலில் மொழி வலிமை இழந்து போக உணர்வளவில் ஊமையர் ஆனவர்களின் நிலைதான் என்ன? தனிமை – லட்சோப லட்சம் மக்கள் சுற்றி இருந்தாலும் ஓசையை ஊள்ளே விடாத ஒரு கண்ணாடி கூண்டினுள் அடைபட்டதுபோல, தன் உணர்ச்சிகளைச் சொல்ல முடியாத, சொன்னாலும் உணர்ச்சி புரிந்து கொள்ளப்படுமா என்று அறிய முடியாத ஒரு செவிடாக்கும் மௌனமும், தனிமையுமே இன்றைய நகரத்துவாசியை மிரட்டுகிறது. அதிலும் எண்பது சதவிகிதம் பேர் அடுக்குமாடி வீடென்னும் கூண்டினுள்ளே வசித்தாலும் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளாமல் வாழும் வாழ்க்கை வழக்கமாகிவிட்ட சிங்கப்பூரில் பல்லாயிரம் பேர் வாழும் அடுக்குமாடி கட்டடங்களில் இந்த தனிமையே கொடுங்கோல் செய்வதை நூலாசிரியர் மிக செம்மையாக, மிகுந்த கருணையோடு எடுத்துக்காட்டியுள்ளார். முகடுகள் என்ற கதையில் வரும் காமாட்சி பாட்டியும், மிதவை செல்வியும் இந்தக் கொடூரத் தனிமைக்கு ஒரு நல்ல உதாரணம். இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து கூலி வேலை பார்க்கும் விரல் கதை பாவாடை நகர வாழ்க்கையின் அவலமான இந்த தனிமையின் வன்கொடுமை எதுவரை போகும் என்பதற்கு அடையாளமாய் படைக்கப்பட்டிருக்கிறான். வேலையின்போது ஒரு விரல் போகிறது வெளிநாட்டு ஊழியனான பாவாடைக்கு. அவனுக்கு நஷ்ட ஈடாக பணம் வந்தாலும் கூட அதை வாங்க அவன் பட்ட கஷ்டம், பணம் கிடைத்தவுடன் கனன்றுவரும் நண்பர்களின் பொறாமை கலந்த அறிவுரைகள், இதற்கெல்லாம் மேலாக சிங்கப்பூரில் கடன் வாங்கி வந்து வேலையில் அடிபட்ட வெளிநாட்டு ஊழியர்கள் எப்படி ஈவிரக்கமின்றி நடத்தப்பட்டார்கள் என்று நூலாசிரியர் கொடுக்கும் சவுக்கடி:

“பாவாடைக்கு இன்ஷுரன்ஸ் காசு கிடைக்கப்போகிறது என்றவுடனேயே நண்பர்கள் எல்லோரும் கூடி விட்டார்கள். ஆளாளுக்கு அவர்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆசுபத்திரியில் கிடந்த செலவுக்கும், வேலையில்லாமல் ஊருக்குக் போய் வந்த செலவுக்கெல்லாம் சேர்த்து வைத்து இன்ஷுரன்ஸ் காசில் கழித்துக் கட்டி விட்டுத்தான் கொடுப்பார்களாம்…இதுகூட பரவாயில்லை, வெளிநாட்டு ஊழியரான பங்களாதேஷ் பையனை, அடிபட்டுக் கிடந்த கையோடு தூக்கிக் கொண்டு போய் ஏதோ அல்லூரிலெ (சாக்கடையில்) வீசிவிட்டு போயிட்டாங்கலாம்”

அப்பப்பா! ஒவ்வொரு சொர்க்கபுரி கட்டிமுடிக்கப்படும்போதும் எத்தனை எத்தனை பாவாடைகளின் கண்ணீர்க்கதைகள் அந்த செங்கற்களிலே செதுக்கப்பட்டுள்ளனவோ யார் அறிவார்? சிங்கப்பூரில் அரசும் நீதியும் நன்றாக இருப்பதால் பாவாடை பிழைத்தான். ஆனால் அவனைச் சுற்றி இருந்த முதலாளிமார்களும் சரி, ஊழியத் தோழர்களும் சரி அவன் மீது உண்மையான அக்கறை வைத்திருந்தார்களா என்றால் ‘இல்லை’ என்றே தோன்றுகின்றது. மொழி உடைந்ததால் நகரங்களில் மெல்லிய உணர்வுகள் உடைந்தனவா, அல்லது அவசர கதியில் மெல்லிய உணர்ச்சிகள் காவு கொடுக்கப்பட்டதால், மொழியும் தற்கொலை செய்துகொண்டதா? முதலில் முட்டையா, கோழியா? பொருள்முதல் வாதமாக இந்தப் பிரச்சினை நீள்கிறது.

தத்தமது மொழி தம் உணர்ச்சியிடமிருந்து பிளவு பட்டதால் தமது ஆளுமையின் அடிவேறிலே பிளவுபட்ட மனிதர்கள் இந்த தொகுப்பு முழுவதும் காணக் கிடக்கிறார்கள். நயம் பட உரை கதையில் வரும் முற்போக்கு எழுத்தாளர் ஜெயதேவ், தன் மகள் வயது பெண்ணான வேலைக்காரியைக் கண்டு காமுறும் நண்டு முத்தையா, உற்றுழி கதையில் பெண்ணியத்தின் உச்சிக்கே போய் வந்த பெண் எழுத்தாளர் – இவர்களெல்லாம் நகர வாழ்க்கையின் பிளவுகளால் பின்னி எடுக்கப்பட்டவர்களாகத்தான் தென்படுகிறார்கள். எல்லோருக்கும் ஏதோ ஓர் அடையாளம் கொடுத்து, ஒரே அச்சுக்குள் வார்க்கப் பார்க்கும் நகரமயமாகுதலுக்கு எதிராக மூர்க்கமாக எழப் பார்த்து முடியாமல் போகவே முறிந்துபோன மாநுடத்தின் கிளைகள் இவர்கள். இந்த கிளைகள் இனிமேல் கனி தரா. நுவல் கதையில் வரும் ரேணுபோல் மற்றவர்களோ இந்த தனிமையைத் தகர்க்க முடியாது என்று தெரிந்து கொண்டு சிறுசிறு சடங்குகளால் தமது வாழ்க்கைக்கு அர்த்தம் தர பார்க்கிறார்கள் – ரேணு (தன்னைப்போல்?) வாய் பேச முடியாத கிளியிடம் தன்னுடைய அன்பையெல்லாம் கொட்டுவதைப் போல. இந்த சிறு சடங்குகளிலே உணவு உண்பதற்கு ஆசிரியர் தந்திருக்கும் பங்கினைப் பற்றி முழு ஆய்வே செய்யலாம். எல்லைகள் சிறிதான மிகச் சிறு தீவான சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு பொழுபோக்கென்றால், அது விதவித மாக உண்பதுதான் என்று சொல்லும் வழக்கம் உண்டு. இந்தக் கதைகளிலும் உணவு பிரதான இடம் பெறுவது ஆச்சரியம் இல்லைதான். சோறு, நாசி லெமாக், நண்டு, உற்றுழி என்ற கதைகளிலே உணவு முக்கிய பங்கு பெறுகின்றது. ஏன்? ஒருவரோடு ஒருவர் சகஜமாகப் பஜக முடியாத படி அவசர கதியில் போய்க் கொண்டிருக்கும் நகர வாழ்க்கையின் ஒரு நபர் அநுபவிக்கக் கூடிய, அவர்களது ஆளுமை ஓரளவாவது வெளிப்படக்கூடிய இடம் உணவுதான் என்பதாலா? உணவைச் சுற்றித்தான் இந்தக் கதைகளில் பலவற்றில் உள்ள சம்பவங்களும், கதைமாந்தரும் சுழல்கின்றன, சுழல்கிறார்கள். மற்றபடி அவர்களுக்கு அர்த்தம் கொடுக்கத்தான் இந்த அவசர யுகத்தில் சாத்தியங்கள் ஏது? அதுவும் எந்த வகையான உணவுகள் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்! எல்லாம் பல இன பல வர்ண உணவுகள், நூலாசிரியர் வாழும் சிங்கப்பூரைப் போல, உட்கொள்ளும் உணவு ஒரு சமூகத்தைப் பதிவு செய்கிறது என்பதற்கு இதை விட விளக்கம் எதற்கு?

சடங்குகள் மட்டும் போதுமா என்றால், மொழி தளர்ந்துவிட்ட வேளை, உணர்வுகள் அனாதை ஆகிவிட்ட போது, அவசர கதியின் அவலங்களிலே சிக்கி சீரழியும் தலைமுறை அன்பினால் சாபல்யம் அடையலாம் என்பதுதான் நூலாசிரியரின் பதிலாக உள்ளது. நுவல், நுகத்தடி போன்ற கதைகள் வழியும் மொழியும் தவறிய மாந்தருக்கு அன்பு செய்வது ஒன்றுதான் மீட்புக்கான வழி என்பதைத் தெளிவாகக் காட்டிவிடுகின்றன. ஏனென்றால் அன்பு மொழிக்கு அடங்கியதல்ல, அது செய்கையில் வெளிப்படுவதால் யாரும் எங்கேயும் அன்பு செய்யலாம் – அங்கே மொழியோ, இனமோ கூட தடை போட முடியாது. கிளிக்கும் அன்பு புரியும் என்கிறார் நூலாசிரியர்.

இந்த சிறுகதை தொகுப்பு வெல்வது இந்த துல்லியமான பதிவுகளினால்தான் என்றால் மிகையாகாது. சிங்கப்பூரைப் பற்றி, அதன் நவீனத்தைப் பற்றி, பொருளாதார வளர்ச்சி பற்றி நீங்கள் வெகுவாக அறிந்திருக்கலாம். இந்த நுவலைப் படியுங்கள். கனவுலக ஊமையர்களான பல சிங்கப்பூரர்கள் உங்கள் கண்முன் தெளிவாக தெரிவார்கள்.

[முற்றும்]

Series Navigationஆசைஒரு உண்ணாவிரத மேடையில்
author

ஷி றி ஸேதுராஜன்

Similar Posts

Comments

  1. Avatar
    R.Karthigesu says:

    கமலம் அரவிந்தனின் “நுவல்” தொகுப்புக்கு சேதுராஜன் எழுதிய உற்சாகம் கொப்பளிக்கும் விமர்சனம் படிக்க ஆர்வம் தருவதாக இருக்கிறது. நுவலை முழுக்கப் படித்த பின் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ள சிறுகதைத் தொகுப்புக்களில் இது மிக முக்கியமானது எனவே நானும் கருதியிருந்தேன். சிங்கப்பூரிலும் இருண்ட பகுதிகள் உள்ளன என்னும் அவலத்தை (எந்த நாட்டில் இல்லை?) கமலம் காட்டியிருக்கிறார். அந்த இருட்டுக்களே அவரின் கதைக்கான கருப்பொருள்கள் ஆகியிருக்கின்றன. நல்ல சிறுகதைகளுக்கு இந்த அவலம் ஒரு வெல்லும் ஃபோர்முலா. கமலம் அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். கமலத்தின் மொழியும் உயிரோட்டமானது. உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாசகனின் உள்ளத்தைக் கவ்வவும் உதவும் கருவி.

    ஆனால் இந்தக் கதைகளைப் பின்நவீனத்துவக் கதைகள் என சேதுராஜன் வகைப்படுத்துவது புதிராக இருக்கிறது. சிங்கப்பூர் தனது பொருளாதார/சமுக வளர்ச்சியில் தீவிரமான நவீன கட்டத்தை அடைந்த பின், இப்போது அந்த வெற்றியின் பின்விளைவுகள் சில அவலங்களைக் கொண்டு வருகின்றன என்ற சுற்றி வளைத்த பொருளில் வேண்டுமானால் அதனைப் பின்நவீனத்துவம் எனலாம். (அந்தப் பொருளில் Occupy Wall Street இயக்கம் பின்நவீனத்துவம்தான்.) ஆனால் இயல்பான இலக்கிய வகைப் பயன்பாட்டில் இப்போது உள்ள பொருளில் அது பின்நவீனத்துவத்துக்கு உள்ள பலவித குழப்பமான நிர்ணயங்கள் (definition) எவற்றுக்குள்ளும் வாராது என்பதே என் கருத்து. ஆனால் இந்த லேபல்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மார்த்தமான மனித நேயம்தான் கமலத்தின் கதைகளுக்கான தலையாய அடையாளம். கமலத்தின் அந்த அம்சங்களையும் சேதுராஜன் நேர்த்தியாக வருணித்துள்ளார்.

    ரெ.கா.

Leave a Reply to R.Karthigesu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *