திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் இலக்கியத்திலிருந்து பயணித்து, கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது பெற்ற கி.ராஜநாராயணன்

author
0 minutes, 13 seconds Read
This entry is part 1 of 19 in the series 2 அக்டோபர் 2016

Barack Obama

முருகபூபதி – அவுஸ்திரேலியா

கயத்தாறில் தூக்கில் தொங்கிய கட்டபொம்மன் சிலையான கதையை தெரிந்துகொள்ளுங்கள்

                            

வள்ளுவர் கம்பன்   இளங்கோ  பாரதி  முதலான முன்னோடிகளை  நாம்  நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான்  அவர்கள்  என்று ஓவியங்கள் உருவப்படங்கள் சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.   இவர்களில் பாரதியின் ஒரிஜினல் படத்தை  நம்மில்  பலர் பார்த்திருந்தாலும் கறுப்புக் கோர்ட் வெள்ளை தலைப்பாகை தீட்சண்யமான   கண்களுடன் பரவலாக அறிமுகம்பெற்ற  படத்தைத்தான் பார்த்து வருகின்றோம்.

அந்தவரிசையில் வீரரபாண்டிய  கட்டபொம்மனை  நடிகர் திலகம்  சிவாஜியின்  உருவத்தில்   திரைப்படத்தில்  பார்த்துவிட்டு  அவரது சிம்ம கர்ஜனையை கேட்டு வியந்தோம்.

பிரிட்டிஷாரின்  கிழக்கிந்தியக்கம்பனிக்கு  அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து  இறுதியில் தூக்கில்  தொங்கவிடப்பட்ட   வீரபாண்டியகட்டபொம்மன்  மடிந்த  மண்  கயத்தாறை கடந்து 1984  இல்   திருநெல்வேலிக்குச்  சென்றேன்.

கட்டபொம்மன்  தூக்கிலிடப்பட்ட   அந்தப் புளியமரம்   இப்பொழுது அங்கே இல்லை.

கட்டபொம்மன்   பற்றிய  பல கதைகள்  இருக்கின்றன.  அவன் ஒரு தெலுங்கு மொழிபேசும் குறுநில மன்னன்  என்றும்   வழிப்பறிக்கொள்ளைக்காரன்   எனவும் எழுதப்பட்ட   பதிவுகளை  படித்திருக்கின்றேன்.  இவ்வாறு கட்டபொம்மனைப் பற்றிய  தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு   முன்பே எனது  இளம்பருவ  பாடசாலைக்காலத்தில்  இலங்கை  வானொலியில்  வீரபாண்டிய  கட்டபொம்மன்   திரைப்படத்தில்  சக்தி  கிருஷ்ணசாமியின் அனல்கக்கும்  வசனங்களை சிவாஜிகணேசனின்  கர்ஜனையில்  அடிக்கடி   கேட்டதன்பின்பு- அந்த  வசனங்களை  மனப்பாடம்செய்து  பாடசாலையில்  மாதாந்தம்  நடக்கும் மாணவர்  இலக்கிய மன்ற  கூட்டத்தில்   வீரபாண்டிய கட்டபொம்மன்  வேடம்  தரித்து நடித்தேன்.  ஜாக்சன்  துரையாக நடித்த  மாணவப்பருவத்து  நண்பன்  சபேசன்  தற்பொழுது   லண்டனிலிருக்கிறான்.

இடைசெவலைக்   கடந்துதான்   திருநெல்வேலிக்குப்போக   வேண்டும். வழியில் வருகிறது கயத்தாறு.  அந்த இடத்தில்  இறங்கி கட்டபொம்மன்   சிலையைப்பார்த்தேன்.   பாடசாலைப்பருவமும்   வீரபாண்டிய  கட்டபொம்மன் திரைப்படமும்  நினைவுக்கு  வந்தன.  அவ்விடத்தில் அந்தச்சிலை  தோன்றுவதற்கு  முன்னர்  மக்கள்  தாமாகவே  ஒரு நினைவுச்சின்னத்தை   எழுப்பியிருந்தார்களாம்.

எப்படி?

அந்தக்கதையை  இடைசெவல்  கிராமத்தில்  நான் சந்தித்த கரிசல்  இலக்கியவாதி  கி.ராஜநாராயணன்  சொன்னார்.

கயத்தாறை   கடந்து  செல்வோரும்  வருவோரும்  ஒரு கல்லை எடுத்து  அந்த இடத்தில் போட்டுவிட்டு  அஞ்சலி செலுத்துவார்களாம்.   காலப்போக்கில்  ஒரு பெரிய கற்குவியலே அங்கு தோன்றிவிட்டது.

நடிகர்திலகம்  சிவாஜிகணேசன் வீரபாண்டிய  கட்டபொம்மனாக நடித்த பந்துலுதயாரித்து  இயக்கியபடம் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் வரையில்தான் அந்தமக்கள் எழுப்பிய கற்குவியல் நினைவுச்சின்னம்  இருந்திருக்கிறது.

பின்னர் –  இரவோடிரவாக யாரோ  லொறிகளில்  வந்து அப்புறப்படுத்திவிட்டார்கள்.

சில நாட்களில் அங்கே  ஒரு கட்டபொம்மன்  சிலை தோன்றியிருக்கிறது.

” அது கட்டபொம்மனைப்  போலவா  இருக்கிறது?  அந்த வேஷம் போட்ட சிவாஜி கணேசனைப்போலத்தான் இருக்கிறது ” என்று  கி. ராஜநாராயணன் அவர்களை  முதல்தடவையாக  அவரது கரிசல்   கிராமம் இடைசெவல் இல்லத்தில் சந்தித்தபொழுது  சற்று கோபத்துடன் என்னிடம்  குறிப்பிட்டார்.

இதுவரையில் நான்கு  பதிப்புகளைக் கண்டுவிட்ட  அவரது கரிசல் காட்டுக்கடுதாசி  நூலில் –  வீரனுக்கு   மக்கள் எழுப்பிய ஞாபகார்த்தம் என்னும்  தலைப்பில் தமது ஆதங்கத்தை அவர் விரிவாகப்பதிவு செய்துள்ளார்.

கயத்தாறில் வீரபாண்டிய   கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட  நிலத்தை அரசிடமிருந்து விலைக்கு வாங்கி  –  சிலையையும் நிறுவிய   சிவாஜிகணேசனுக்கும் அந்த மகத்தான  வீரனிடத்தில்  உணர்வுபூர்வமான ஈடுபாடு   நீண்டகாலம்  இருந்திருக்கிறது. இதனை மிகவும்   விரிவாக  தமது சுயசரிதையிலும்  அவர்  குறிப்பிட்டிருக்கிறார்.

சிறுவயதில் கம்பளத்தார் கூத்தில்  கட்டபொம்மனைப்   பார்த்துவிட்டு  –  என்றாவது ஒருநாள்  கட்டபொம்மனாக   நடிக்கவேண்டும் என்ற கனவோடு   இருந்திருக்கிறார்.  நடிகனாகும்  ஆசையில் கிராமத்திலிருந்து வீட்டை   விட்டு   சின்னவயதிலேயே  ஓடிவந்த காலத்திலிருந்தே கட்டபொம்மனை மறக்கவில்லை.  தான்   யாருமற்ற  அனாதை என்று பொய் சொல்லிக்கொண்டு நாடகக்கம்பனியில்  சேர்ந்ததே கட்டபொம்மனாக  நடிப்போம் என்ற நம்பிக்கையில்தானாம்.

சிறுவனாகவிருந்து   வளர்ந்து  இளைஞனாகிய   பின்னர்  சிவாஜி என்ற பட்டத்தை  ஈ.வே.ரா பெரியாரிடம்   பெற்றபிறகு சிவாஜிநாடக மன்றத்தை தமது தம்பி   சண்முகம்பொறுப்பில் தொடங்கியிருக்கிறார்.   இந்த மன்றத்தின்  தயாரிப்பாக கட்டபொம்மன் நாடகத்தை   தமிழ் நாட்டிலும்   பம்பாய்  (இன்றைய   மும்பாய்)   முதலான  வடநாட்டு நகரங்களிலும் நூற்றுக்கணக்கான தடவைகள் மேடையேற்றியிருக்கிறார்.  பல  சமூகசேவை நிறுவனங்களின் நிதியுதவிக்காட்சியாகவும்  பல  தடவைகள் மேடையேறி லட்சம் லட்சமாக சேகரித்துக்கொடுத்துள்ளது   இந்த நாடகம். ஒருதடவை இந்த நாடகத்தைப்பார்க்க வந்த ராஜாஜி ஒரு  காட்சியின்போது சிவாஜிகணேசனின்   உணர்ச்சிகரமான நடிப்பைப்பார்த்து மயங்கி விழுந்திருக்கிறார்.

1959 இல்  சக்தி கிருஷ்ணசாமியின்  இன்றைக்கும் மறக்கமுடியாத கனல்பறக்கும்   வசனங்களுடன்( வரி-வட்டி –கிஸ்தி- வானம்பொழிகிறது  பூமி  விளைகிறது.  எங்களோடு வயலுக்கு  வந்தாயா?   ஏற்றம்   இறைத்தாயா? உழவருக்கு   கஞ்சி   கலையம் சுமந்தாயா   அல்லது  எம்குலப்பெண்களுக்கு   மஞ்சள்   அரைத்துக்கொடுத்தாயா ? மாமனா ?  மச்சானா?’) வெளியான  இத்திரைப்படம்   வெள்ளிவிழாவும்  கண்டது.

கெய்ரோவில் நடந்த  ஆசிய  –   ஆபிரிக்கதிரைப்படவிழாவிலும் விருதுபெற்றது.  அந்த விழாவுக்குச்சென்றிருந்த சிவாஜிகணேசன் எகிப்து  அதிபர் நாஸர்   விழாவுக்கு  வரமுடியாமல்  அவசரமாக சிரியா சென்றிருந்தமையால் அவரது வாசஸ்தலத்துக்குச் சென்று நாஸரின்  மனைவியை  நேரில்சந்தித்து  இந்தியாவுக்குவருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறார். பின்னர்  பிறிதொரு  சந்தர்ப்பத்தில ்நாஸர் டெல்லிக்கு வந்த   சமயம் அப்பொழுது  பிரதமராகவிருந்த நேருவுடன்  தொடர்புகொண்டு நாஸரை சென்னைக்கு  அழைத்து பெரிய கூட்டமும்  நடத்தி விருந்தும்கொடுத்து உபசரித்திருக்கிறார்.

(இந்தத் தகவல்களை  சிவாஜிகணேசனின்  சுயசரிதையில்  பார்க்கலாம்)

இப்படியெல்லாம்   சிவாஜியின் வாழ்வில்   இரண்டறக்கலந்துள்ள கட்டபொம்மனுக்கு அவன்  மடிந்த   மண்ணில் சிலை எழுப்புவதற்கு  அவர்விரும்பியது   இயல்பானதுதான்.   கட்டபொம்மன்  தூக்கிலடப்பட்ட   நிலத்தை  அரசிடமிருந்து விலைகொடுத்து  வாங்கி  அங்கே தனது வீரபாண்டிய கட்டபொம்மன்  திரைப்பட தோற்றத்தில்  ஒரு  சிலையையும்  ஏற்பாடுசெய்து  திரையுலக நட்சத்திரங்களை  அழைத்து சிலை திறப்புவிழாவை  கோலாகலமாகவே நடத்திவிட்டார்  சிம்மக்குரலோன்.

16-10-1799   ஆம் திகதியன்று  பிரித்தானிய மேஜர் பானர்மேனின் உத்தரவுக்கு அமைய தனது கழுத்தில் தானே தூக்குக்கயிற்றை மாட்டிக்கொண்டு உயிர்துறந்த அந்தவீரனுக்கு அவன் மறைந்த  பின்னர்  அந்தப்புளியமரமும்  பட்டுப்போனபின்னர்   –   ஊர்மக்கள் கற்களைப்போட்டு குன்று போன்ற பெரிய கற்குவியலையே நினைவுச்சின்னமாக   எழுப்பியிருந்தபோது தமிழ் சினிமாவில் தோன்றிய கட்டபொம்மன்  வந்து அள்ளிச்சென்றுவிட்டானே என்பதுதான்   கி. ராஜநாராயணனின்   தார்மீகக்கோபம்.

அவர் – தமது கரிசல்காட்டுகடுதாசியில்  இப்படி   எழுதுகிறார்:-

” நடிகர்திலகம்   சிவாஜிகணேசனுக்கு –  கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடத்தில் அவனுக்கு ஞாபகார்த்தமாக  ஒரு சிலை எழுப்பவேண்டும்  என்ற நினைப்பு  வந்தது.  இது ரொம்ப வரவேற்க வேண்டிய – பாராட்டப்படவேண்டிய   காரியம்.  ஆனால்  –  மக்கள் தங்களால் இயன்ற ஒரு ஞாபகார்த்தத்தை  ஒவ்வொரு  கல்லாகச்சேர்த்து   வீரபாண்டியனுக்கு  எழுப்பியிருந்தார்களே. அதை ஏன் அழித்தார்கள்…?

வேறு ஒரு நாட்டில்  இப்படி  ஒரு  காரியம் நடக்குமா? மக்கள்   அதற்குச் சம்மதிப்பார்களா?

சத்தம் காட்டாமல்  நடந்து முடிந்துவிட்டது இங்கே.  பாஞ்சாலங்குறிச்சி  கோட்டையை நொறுக்கி  இடித்து  தரைமட்டமாக்கி   அதை  இருந்த  இடம்  தெரியாமல்  ஆக்கிய வெள்ளைக்காரனுடைய காரியத்துக்கும்   இதற்கும்  ரொம்ப  வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.”

ஒரு சினிமா நடிகரினதும் ஒரு இலக்கியவாதியினதும் வேறுபட்ட சிந்தனைகளை ஒரு கட்டபொம்மனில் நாம் பார்க்கின்றோம்.

கி.ராஜநாரயாணனின்   படைப்புகளில் நான் முதலில் படித்தது  அவரது கிடை  குறுநாவல்தான்.   இலக்கியப்பிரவேசம் செய்த  காலப்பகுதியில் தமிழ்நாடு  வாசகர்வட்டம்  வெளியிட்ட ஆறு குறுநாவல்கள் தொகுப்பு  அறுசுவையில்  கிடையும்  இடம்பெற்றிருந்தது.  அதன்பின்னர் அவரது   எழுத்துக்களின் மீதும்  ஈர்ப்பு  வந்தது.  வியட்நாமில்  அமெரிக்கா  மேற்கொண்ட  ஆக்கிரமிப்பு  தொடர்பாக  வியட்நாம்  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை  கிராமப்புற  விவசாயியின்   பார்வையில் அழகாக அவர் பதிவு செய்திருந்தார். தமிழகம்  சென்றால் கி.ரா. என்று இலக்கியவட்டாரத்தில்  நன்கு அறியப்பட்ட இந்த கரிசல்  இலக்கியவாதியை சந்திக்கவேண்டும்  என்று  விரும்பியிருந்தேன்.

எனது விருப்பம் 1984   இல்தான்  நிறைவேறியது.  அவர்  திருநெல்வேலிக்கு  அருகாமையில்  கோவில்பட்டி  என்ற ஊரில்  இடைசெவல்   விவசாய   கிராமத்தில்  வசிப்பதாக  அறிந்து –   எனது  ஆவலை  திருநெல்வேலியில்  வசித்த எமது  தந்தைவழி உறவினரும் மூத்தபடைப்பாளியும் பாரதி இயல் ஆய்வாளருமான  சிதம்பர ரகுநாதனின் துணைவியார்  ரஞ்சிதம்  அவர்களிடம் தெரிவித்தேன்.

இடைசெவல் என்றதும் ”  யார்… கி. ராஜநாராயணனையா…? முன்பே  தெரியுமா?”  எனக்கேட்டார்.

”  தெரியாது.  அவரது எழுத்துக்கள் எனக்குப்  பிரியமானது.  இவ்வளவு  தூரம்   வந்திருக்கின்றேன்.   அவரையும்   பார்க்கவிரும்புகின்றேன்”  எனச்சொன்னேன்.

ரஞ்சிதம்  அவர்கள்   என்னை  திருநெல்வேலி  பஸ்   நிலையத்தில்  பஸ்  ஏற்றிவிட்டார்கள்.

வாய்  இருந்தால்  வங்காளமும்  போகலாம்தானே..?

பஸ்   நடத்துனரிடம் என்னை இடைசெவலில்  இறக்கிவிடுங்கள்  எனச்சொல்லிவிட்டு  அடிக்கடி  அவரிடம்  இடைசெவல் வந்துவிட்டதா?  எனக்கேட்டபடி  இருந்தேன்.

” ஊருக்குப்புதுசு” என்று நடத்துனருக்குத் தெரிந்துவிட்டது.

”  சிலோனிலிருந்து  வர்ரீங்களா?  உங்கட  பேச்சுத்தமிழ்  சொல்லுது.”  என்றார். இலங்கையில் 1983  இனக்கலவரம்   வந்தபின்னர்  இலங்கைத்தமிழர்கள்   மீது தமிழகத்தில்  ஆழ்ந்த அனுதாபம் இருந்தகாலம்.

நல்லவேளையாக  அந்த நடத்துனருக்கும்  ராஜநாராயணனைத்   தெரிந்திருக்கிறது. ஒருகிராமத்துக்குச் செல்லும்  பாதையை காண்பித்து  என்னை  இறக்கிவிட்டார்.

” வழியில் எவரைக்கேட்டாலும்  கி.ரா.வின்  வீட்டைக் காண்பிப்பார்கள்  சார்”  என்றார்   அந்த முகம் மறந்துபோன  பெயர்  தெரியாத அந்த பஸ் நடத்துனர்.

கருங்கல் பதித்து தார்போடாத  மண்வீதியில்   நடந்தேன். வழியில்  தென்பட்டவர்களிடம் கேட்டேன். கி.ரா.வின்   சின்னஞ்சிறிய  அந்த  வீட்டைக்கண்டுபிடிப்பதில்  சிரமம்  இருக்கவில்லை.

வீட்டின்  கதவு திறந்திருந்தது.   மெதுவாகத்தட்டினேன்.  உள்ளே  வாழைக்காய்   பஜ்ஜியின்  வாசம்  வந்தது. வீட்டின்  உட்புறச்சுவரில்  இரசிகமணி டி.கே.சிதம்பரநாதரின் பெரிய  உருவப்படம்  காட்சியளித்தது.  ஒரு  அம்மா எட்டிப்பார்த்தார்கள்.

” கி.ராஜநாரயாணன்   அவர்களை  பார்க்கவந்திருக்கிறேன்” என்றேன்.

”  உங்களைத்தான்  பார்க்க யாரோ  வந்திருக்காங்க…” என்றுஅந்த அம்மா குரல்   கொடுத்தார்கள்.

அரைக்கைச்சேர்ட்டை  அவசரமாக  அணிந்துகொண்டு வந்து  வரவேற்றவர்   –  தான்தான்  ராஜநாராயணன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு  உள்ளே அழைத்தார்.

இலங்கையிலிருந்து நான் திடுதிப்பென  அவரைப்பார்க்க  வந்ததையிட்டு   வியந்தார்.

முன்னறிவிப்பின்றி  வந்துவிட்டேன் அதற்கு  முதலில் மன்னிப்புக்கோருகின்றேன்  எனச்சொன்னேன்.

” நான்  என்ன  பெரிய  அரசியல்வாதியா..?   முன்னறிவிப்புச்சொல்வதற்கு.  என்ன யோசிக்கின்றேன்   தெரியுமா…?   தொலைதூரத்திலிருந்து  வருகிறீர்கள்.  சிலவேளை என்னை  சந்திக்கமுடியாது போயிருந்தால்  ஏமாற்றத்துடன்   திரும்பியிருப்பீர்களே…  நல்லவேளை  இன்று நான்  வீட்டிலிருக்கின்றேன்.” என்று  சொல்லிவிட்டு  சில கணங்கள் என்னை  ஆச்சரியத்துடன்  நோக்கினார்.

உங்கள்  எழுத்துக்கள் எனக்கு மிகவும் விருப்பமானது. கிடை  குறுநாவல்  படித்த நாள் முதலாக உங்கள் படைப்புகளை  தேடித்தேடி படிப்பது  எனது வழக்கம் என்றேன்.

இலங்கையில்  1983இல் நடந்த வன்செயல்கள்  பற்றிக்கேட்டார்.

அதற்கெல்லாம்   அரசியல்வாதிகளும்  காடையர்களும்தான் காரணம் என்று   சொன்னவுடன் –  என்ன  சொன்னீர்கள் ? திரும்பவும்  சொல்லுங்கள்   என்றார்.  மீண்டும்  காடையர்கள்  என்றேன்.

உடனே  உள்ளே சென்று  ஒரு  காகிதம் எடுத்துவந்து காடையர்  என்ற சொல்லை எழுதிவிட்டு அதற்கு அர்த்தம்  கேட்டார்.

” அந்த வார்த்தை தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை.  குண்டர்கள் என்பார்கள்.”

” அவர்களுக்கு எங்கள்  நாட்டில்  தீயசக்திகள் -வன்முறையாளர்கள்  என்று நல்ல தமிழ்அர்த்தமும்  இருக்கிறது ”  என்றேன்.

தாம் சொல்அகராதி  தயாரித்துவரும் தகவலைச்சொன்னார்.

இலங்கையின்  மூத்த   படைப்பாளி   மு. தளையசிங்கம்  பற்றிக்கேட்டுவிட்டு  மீண்டும்  உள்ளே சென்று சக்தி என்ற   மாத இதழை எடுத்துவந்து காண்பித்தார்.

” இலங்கையில்  கைலாசபதி  சிவத்தம்பி  என்றெல்லாம் பல  விமர்சகர்கள்  இருப்பதாக அறிந்ததுண்டு. ஆனால்  அவர்களை நான்  படித்ததில்லை.  இருந்தாலும்  தளையசிங்கம் என்று  ஒருவர். கொஞ்சம்  கண்களை  நுழைச்சுப்பார்த்தேன்.  படிக்கும்போது –   ஒரு சுயம்பான சிந்தனையாளர் – என்று  உணரமுடிந்தது. அதனால் அவரது  கட்டுரையை  இந்த சக்தி இதழில் பிரசுரிக்கச்செய்தேன். ” என்றார் கி.ரா.

மனைவியை அழைத்து  அறிமுகப்படுத்தினார்.  அந்த அம்மா  வாழைக்காய்   பஜ்ஜியும் காப்பியும்  தந்து  உபசரித்தார். கி.ரா. உற்சாகமாகவே  உரையாடினார்.   தமக்கு பெண்குழந்தைகள் இல்லை.  பிறந்தவர்கள்  ஆண்கள்தான்  என்றெல்லாம் வெளிப்படையாகவே  பேசினார்.  எனது  முகவரியை  எழுதிக்கேட்டு  வாங்கும்பொழுது  தனக்கு ஆங்கிலம் தெரியாது அதனால் முகவரியை ஆங்கிலத்தில்  எழுதும்பொழுது  தனித்தனி எழுத்துக்களாக  எழுதுங்கள் என்றார்.

அவருடைய  படைப்பிலக்கியத்திலிருந்த எளிமையை  அவரது  பேச்சிலும் காணமுடிந்தது. தனது  பிஞ்சுகள்  நாவலை கையெழுத்திட்டு தனது  நினைவாக வைத்திருக்குமாறு தந்தார். அவருடைய  புகைப்படம்   ஒன்றையும்  கேட்டு  வாங்கிக்கொண்டேன்.   என்னை  பஸ்தரிப்பிடம் வரையும்  அழைத்துவந்து  வழியனுப்பினார்.

மழைக்கும் கூட பாடசாலைப்பக்கம்  ஒதுங்காதவர்தான் இந்த இலக்கியவாதி.  அவ்வாறு ஒதுங்கியிருந்தாலும்  மழையைத்தான் ரசித்திருப்பேன்.  பாடசாலையை  பார்த்திருக்கமாட்டேன்  என்று  வெளிப்படையாகவே எழுதியிருப்பவர்.

கிடை  குறுநாவலைத்தொடர்ந்து பிஞ்சுகள் –   கோபல்ல  கிராமம் – கோபல்லகிராமத்து  மக்கள் – கதவு -வேட்டி – அப்பாபிள்ளை  அம்மாபிள்ளை – கொத்தைப்பருத்தி  -தாத்தா சொன்னகதைகள் – கிராமியக்கதைகள் – தமிழ்நாட்டு  நாடோடிக்கதைகள் – வட்டாரச்சொல்  அகராதி – மாந்தருள் அன்னப்பறவை (இரசிகமணி  டி.கே.சி  பற்றியது) கரிசல்காட்டு கடுதாசி –  கி. ராஜநாரயணன் கடிதங்கள் முதலான  நூல்களை இலக்கிய  உலகிற்கு  வரவாக்கியவர்.

இவற்றில்  நான்கு   பதிப்புகளைக் கண்டுவிட்ட கரிசல்காட்டுக்  கடுதாசி  தேசிய  புத்தக  நிறுவனத்தின் மூலம் இந்தியமொழிகள்  அனைத்திலும்   வெளியிடப்பட்டு   இலட்சக்கணக்கான வாசகர்களை  சென்றடைந்திருக்கிறது.

கி.ரா.வின்  சிறந்த இயல்பு  தானும்  இயங்கி  மற்றவர்களையும்  இயங்கவைப்பது.  அதனால்தான்  அவரால் பெறுமதியான சொல்லகராதி தயாரிக்க  முடிந்தது.   இருபத்தியொரு  கரிசல்பிரதேச  படைப்பாளிகளின்  கரிசல்  கதைகளைத் தொகுக்க முடிந்திருக்கிறது. கழனியூரானுடன்  இணைந்து எழுதிய   மறைவாய்ச்சொன்ன கதைகள் நூலை  படித்தால்   வாய்விட்டுச் சிரிக்கலாம்.  பாலியல்  சார்ந்த  கதைகளை  இப்படியும்  பக்குவமாகச் சொல்ல முடியும் என்ற கதை சொல்லிதான்  கி.ரா.

பாடசாலைப்பக்கமே செல்லாத  தனித்துவமான   இந்தப்படைப்பாளியை  புதுவை பல்கலைக்கழகம் விருந்தினர்  அடிப்படையில்  விரிவுரையாற்றுவதற்கு அழைத்து  குறிப்பிட்ட பணியை  ஒப்படைத்தது.  நாட்டார்  இலக்கியத்தின்  விரிவுரையாளராக பல ஆண்டுகள்  அங்கே பணியாற்றினார்.

பொதுவாக  எவரும்  அறுபது  வயதில்  தொழிலிருந்து  ஓய்வுபெற்றுவிடுவார்கள்.  ஆனால் கி.ரா.   வை அந்தப்பதவி தேடிவந்தது அவரது  அறுபது வயதுக்குப் பின்னர்தான்.

இதழ்கள்-   வெகுஜன  அமைப்புகள் படைப்பாளிகளுக்கு தனிநபர்களுக்கு  விருதுகள்   – பணப்பரிசில்கள் வழங்கி பாராட்டி  கௌரவிப்பது பற்றி அறிந்திருக்கின்றோம்.  ஆனால்,  ஒரு  இலக்கியவாதி  ஒரு  இலக்கிய  இதழின் சேவையை  கவனத்தில்கொண்டு  விருது வழங்கியதை அறிந்திருக்கின்றோமா…?

கி.ரா. –  குமுதம்  குழுமத்தின் தீராநதி மாத இதழுக்கு விருதுவழங்கி  அந்த இதழைப்பாராட்டி  கௌரவித்தார். இலங்கை இலக்கிய  உலகத்தின்மீதும் அவருக்கு அக்கறை இருக்கிறது.

இலங்கை மலையகபடைப்பாளி மு. சிவலிங்கத்தின் ஒப்பாரிக்கோச்சி  என்ற  சிறந்த  சிறுகதையை படித்திருந்த கி.ரா. அதனை தீராநதியில் தனது விசேடகுறிப்புடன் பிரசுரிக்க  ஆவன செய்தார்.

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் எனது நண்பர்  சண்முகம்  சபேசனும் தீவிரமான வாசகர். மெல்பன்  3 CR தமிழ்க்குரல்  வானொலியின்  ஊடகவியலாளர்.  அவருக்கும்   கி.ரா வின் படைப்புகளில்   ஆர்வம்.  புதுச்சேரியில்  கி.ரா.வைநேரில் சந்தித்து  உரையாடித்திரும்பினார்.

அந்தச்சந்திப்பு  பற்றியும் கி.ரா. எழுதியிருக்கிறார்.

1984 இல்  முதல் தடவையாக அவரை  இடைசெவல் கிராமத்தில்  சந்தித்துவிட்டுத்  திரும்பியதும் வீரகேசரியில்  விரிவான பதிவொன்றை  எழுதியிருக்கின்றேன்.

2008 ஆம் ஆண்டு  ஜனவரியில் தமிழகம்  சென்றபொழுது  சென்னையில் நடந்த  புத்தகச்சந்தைக்கு   வந்தேன். அன்றுதான் இறுதிநாள்.  முதல்நாள்  நள்ளிரவுதான்  சென்னையை  வந்தடைந்தேன். அன்னம்  பதிப்பகத்தின் ஸ்டோலுக்குச் சென்று  கி.ரா.வை   விசாரித்தேன்.  அவர் அச்சமயம் அங்கில்லை.  அன்று மாலை  இராமேஸ்வரம்  செல்லும்  பயண  ஒழுங்கிருந்தமையால்   ஒரு  காகிதத்தில்  எனது  வருகையையும்  குறிப்பிட்டு  கைத்தொலைபேசி  இலக்கத்தையும் எழுதி  அன்னம் புத்தக ஸ்டோலிலிருந்தவரிடம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

எமது  வாகனம் இராமேஸ்வரத்துக்கு மாலை நான்கு  மணிக்குப்புறப்பட்டது.

செங்கல்பட்டை  கடக்கும்   வேளையில்  கி.ரா. தொடர்புகொண்டு  உரையாடினார். இயலுமானால்  புதுச்சேரிக்கு வருமாறும்  கேட்டுக்கொண்டார். ஆனால்,  நேர அவகாசம்   இல்லாதமையால்   அவரை மீண்டும் சந்திக்க   முடியவில்லை.

மீண்டும் என்றாவது ஒருநாள் அவரைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கை  எனக்குண்டு.

இந்தப்பத்தியில்  நான்  முக்கியமில்லை.  நாம் வாழும் காலத்தில்  இப்படியும் ஒரு  எளிமையான  மூத்த இலக்கியவாதி கரிசல் மண்ணை  ஆழமாக நேசித்த  ஒருவரைப்பற்றி தெரியாதவர்கள்  தெரிந்துகொள்ளவேண்டும்  என்பதற்காகத்தான் மீண்டும்  மீண்டும்  பதிவுசெய்கின்றேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் ஏழை விவசாயிகளுக்கான  போராட்டத்தில்  ஈடுபட்டு  சிறைவாசமும் அனுபவித்தவர்தான்  கி.ரா.

தொழிலாள   – விவாசாய  –  பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அவர்  குரல்கொடுத்தபோதிலும் தனது படைப்புகளில் பிரசாரவாடையே  வந்துவிடாமல்  அழகியலைப் பேணியவர்.  அவரது எழுத்துநடை  யதார்த்தமானது.  எங்கள் நெஞ்சோடு உறவாடுவது.

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து  மாநிலத்தில் வதியும் ஒரு  ஈழத்துப்பெண்மணி  கி.ரா. எழுதிய வேலை  – வேலையே  வாழ்க்கை  என்ற சிறுகதையை  தன்னால்  இன்றளவும்  மறக்கமுடியவில்லை  எனச்சொன்னார்.

என்னால்   அவரது கதவு கதையை  மறக்க முடியவில்லை. இப்படி  பல வாசகர்களினால்  மறக்கமுடியாத படைப்பாளி கி.ரா. அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், அவரால் கனடாவுக்கு பயணம்செய்ய முடியவில்லை. சென்னைக்கு விருதை  அனுப்பி  பெற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார்கள். எனினும் அவரால் தற்பொழுது பிரயாணங்கள் மேற்கொள்ள இயலவில்லை. சென்னைக்கும் அவர் இயல்விருதுக்காக செல்லவில்லை. அவருடைய இலக்கிய நண்பர்களே அவர் சார்பில் விருதைப்பெற்று அவருக்குச்சேர்ப்பித்துள்ளார்கள்.

இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட  கி.ரா.வின்  கிடை  குறுநாவல்   அமஷன்குமாரின்   இயக்கத்தில்  ஒருத்தி  என்றபெயரில்  திரைப்படமாகியுள்ளது.

1923 இல் பிறந்த கி.ரா. அவர்களுக்கு தற்பொழுது 93 வயது. மனமார்ந்த வாழ்த்துக்களைத்  தெரிவித்துக்கொள்கின்றேன்.

—0—

Series Navigation2030 ஆண்டுக்குள் நிலவில் பயண ஆய்வு நிலையம் அமைக்க ஈரோப் விண்வெளி ஆணையகத்தின் திட்டம்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *