திரை விமர்சனம் தாரை தப்பட்டை

This entry is part 5 of 16 in the series 17 ஜனவரி 2016

0tharai2

இயக்குனர் பாலாவின் பல படங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் புதிய ரீமேக் படம் தாரை தப்பட்டை!

பதினாறு வருட திரையுலக வாழ்வில் ஏழாவது படத்திலேயே இப்படி இறங்கியிருக்கும் இயக்குனர் பாலாவுக்கு ரசிகனின் ஆழ்ந்த இரங்கல்கள்!

சாமி புலவரின் ஒரே மகன் சன்னாசி! தாரை தப்பட்டை என்கிற கிராமிய நடனக் குழுவை நடத்தி வருகிறான். அவனது குழுவில் முன்னணி ஆட்டக்காரி சூறாவளி! மாமா சன்னாசி மேல் மையல் கொண்ட அவளுக்கு, வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்கிறான் சன்னாசி. அவனது ஆசைக்காக அவளும் சம்மதிக்கிறாள். ஆனால் அவள் வாழ்வு நல்ல முறையில் இருக்கிறதா என பார்க்க புறப்படும் சன்னாசிக்கு அதிர்ச்சி. சீர்குலைந்த சூறாவளியின் வாழ்விலிருந்து அவனால் அவளை மீட்க முடியவில்லை. அவளது பெண் குழந்தையை மட்டும் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு திரும்புகிறான்.

‘ நான் கடவுள் ‘ ஆர்யாவை மாற்றி சசிகுமாரை போடு! ‘பிதாமகன்’ சங்கீதாவை மெயின் நாயகி ஆக்கு. ஜி,எம். குமாரை அப்படியே விட்டு விடு! கொஞ்சம் ரத்தம். நிறைய வன்முறை. பூடகமாக கெட்ட வார்த்தைகள். புது தலைப்பு கொடுத்து லோ பட்ஜெட்டில் எடுத்து, ஹை ரேட்டில் விற்று விடு. இதுதான் இயக்குனர் பாலாவின் ஃபார்முலா. ரசிகன் முழித்துக் கொள்கிறான். படம் முழுக்க முழி முழி என்று முழிக்கிறான்!

உண்மையில் படத்தில் இரண்டு சூறாவளி! ஒன்று  சந்தேகமில்லாமல் இசைஞானி. இன்னொன்று வரலட்சுமி சரத் குமார்.

ஞானி புது நாற்றாக திரும்ப வந்திருக்கிறார். படமெங்கும் முதல் தூறல் விழுந்த மண்ணின் வாசம். மேளமும் நாதஸ்வரமும் அவரிடம் கைக்கட்டி வாசிக்கின்றன. வார்த்தைகள் வரலாமா என்று யோசிக்கின்றன.

பிதாமகன் சிம்ரன் காட்சிபோலச் ஒரு கூத்து ஆட்டம். அதில், நடிகர்களை விட்டுவிட்டு இசைஞர்களை கிண்டலடிக்க ராஜாவும் உடந்தை. இதை அடுத்தவர் செய்தால் பொறுப்பாரோ ஞானம்?

நான் கடவுள் ஆர்யா போல, முன் விழும் தலைமுடியுடன் ஜடா முனியாக சசிகுமார். க்ளைமேக்ஸ் சண்டை வன்முறையின் உச்சம். சசிகுமார் அடக்கி வாசிக்கவில்லை. பயந்து பேதலித்திருக்கிறார். குட்டி புலி கருவிலேயே கருக்கப் பட்டது போல ஆகிவிட்டது.

மணிரத்தினம் இனி பெரிய கதை சொல்லி. பாதி அஞ்சல் தலையில் கதை சொல்ல பாலா வந்து விட்டார். மீதி தலை அடுத்த படத்திற்கு!

ஏமாற்றி திருமணம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் வில்லனின் கதை என்று ஒற்றை வரியில் சொல்ல வேண்டியதை, 140 நிமிடங்களுக்கு சொன்ன பாலாவிற்கு சிறந்த திரைக்கதை விருது தரலாம்.

0

முத்தாய்ப்பு: பீப்

0

கித்தாப்பு : வரலட்சுமி இனிமே நடிப்பாங்கன்னு தோணலை! கசக்கி கிழிச்சுட்டாரு பாலா!

0

Series Navigationசிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பதுநோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *