தி கைட் ரன்னர்

This entry is part 14 of 42 in the series 1 ஜனவரி 2012

காலெட் ஹொசைனியின் முதல் நாவலான ‘ தி கைட் ரன்னர் ‘ பற்றி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அட என்ன ஆச்சர்யம்.. நேற்று சோனி பிக்ஸில் போட்டு விட்டார்கள்.
ஒரு அற்புதமான நாவலை படிக்கும்போது ஏற்படும் வலி பல சமயம் அதை ஒரு திரைப் படமாகப் பார்க்கும்போது கிடைப்பதில்லை. சுஜாதாவின் ப்ரியாவிற்கு அப்படித்தான் ஆயிற்று. ஹீரோயிஸம் என்று போய் சொதப்பி விட்டார்கள். கைட் ரன்னரும் அந்த லட்சணத்தில்தான் இருக்கும் என்கிற முன்முடிவு தீர்மானத்தில்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன்.
324 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை ஒன்றரை மணி நேரப் படமாகப் பார்க்கும் போது படித்த பக்கங்கள் வரிசையாக ஞாபகத்துக்கு வரும். கூடவே அதற்கப்புறம் இது என்று எதிர்பார்க்கும்போது அது இல்லாது போனால் வரும் ஏமாற்றம் தவிர்க்க முடியாதது. டாவின்சி கோட் படத்தைப் பார்க்கும்போது அப்படித்தான் ஆனது.
அமிர், ஹாசன், அவர்களது தந்தைமார்கள் என்று சுற்றிச் சுழலும் கதை. உபபாத்திரமான ரஹீம் கான், அசீப் என்கிற வில்லன். சிறுவர்களின் பன்னிரெண்டு வயதில் ஆரம்பிக்கிறது கதை. ஆனால் படத்தில் காட்டப்படும் அமிரும் ஹாசனும் இன்னமும் சின்னஞ்சிறுவர்களாக இருக்கிறார்கள். அசீப் ஒருவன் தான் கதையில் வந்த வயதில் இருக்கிறான். பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவாக இல்லாத கதை.
பாபா எனும் ஓரளவு வசதியான காபூல்வாசி. அவரது மகன் அமிர். வீட்டில் இருக்கும் வேலைக்காரன் அலி, அவரது மகன் ஹாசன், பாபாவின் நண்பர் ரஹீம் கான், சிறுவர்களை சண்டைக்கிழுக்கும் முரட்டு பையன்களின் தலைவன் அசீப். வருடந்தோறும் நடைபெறும் காற்றாடி விடும் போட்டியில் அமிர் பட்டம் விட நூல்கண்டை சுற்றவும் விடவும் ஹாசன். அமீர் காற்றாடி எல்லா பட்டங்களையும் அறுத்து வெற்றி பெறுகிறது. கடைசியாக அறுந்த நீலப் பட்டத்தை பிடிக்க ஓடுகிறான் ஹாசன். அதை பிடித்துவிட்டால் வெற்றி முழுமையாகிவிடும். சின்ன வயதிலிருந்தே படிக்கவும் எழுதவும் கதை சொல்லவும் தெரிந்த அமிர், தன் கதைகளை சொல்லும் ஒரே நபர் வேலைக்காரனின் பிள்ளையான ஹாசன்தான். அதனாலேயே அவர்களுக்குள் நெருக்கம்.
நேரம் கடந்தும் ஹாசன் வராததால் அமிர் அவனைத் தேடிச் செல்கிறான். ஒரு முட்டுச் சந்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் ஹாசனை அசீபும் அவனது முரட்டு நண்பர்களும் பிடித்து வைத்திருக்கிறார்கள். அவர்களது குறி அவன் வைத்திருக்கும் நீலப்பட்டம்.
ஹாசன் கவண்கல் எறிவதில் வல்லவன். அவனிடம் எப்போதும் அந்தக் கருவி இருக்கும். முன்னொரு முறை அமிரைக் காப்பாற்றுவதற்காக அதைக் கொண்டே அசீபை அவன் மிரட்டியிருக்கிறான். பட்டத்தைத் தவிர எதைவேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள ஹாசன் தயாராயிருக்கிறான். தன்னை எதிர்த்ததிற்கு தண்டனையாக அவனை வன்புணர்ச்சியாக ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்துகிறான் அசீப். தடுக்க தைரியமில்லா மல் அமிர் ஓடிவிடுகிறான். ஆனாலும் அது அவன் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது. ஹாசன் இருக்கும்வரை அந்த எண்ணம் தன் மனதிலிருந்து மறையாது என்பதால், அவன் மீது வீண்பழி சுமத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறான் அமிர்.
பல வருடங்கள் கழித்து அமெரிக்காவில் குடியேறி, ஒரு புகழ் பெற்ற நாவலாசிரியனாக மாறிவிட்ட அமிருக்கு, தந்தையின் நண்பர் ரஹீம் கானிடமிருந்து போன். ஹாசனுக்கும் அமிருக்கும் ஒரே தந்தை.. அது தன் தந்தை பாபாதான் என்பது தெரியவருகிறது அமிருக்கு. ஹாசன் உயிரோடு இல்லை. ருஷ்யர்கள் சுட்டு விட்டார்கள். அவன் மகன் சோரப் காபூலில் ஒரு அனாதை இல்லத்தில் வளருகிறான். அவனை நீ வளர்க்க வேண்டும் என்பது ரஹீம்கானின் வேண்டுகோள்.
காபூல் வரும் அமிர் மீண்டும் அசீபை சந்திக்கிறான் தாலிபான் தளபதியாக. அவன் கட்டுப்பாட்டில் இருக்கிறான் சோரப். எப்படி அவனை மீட்கிறான் என்பது கதை. சோரபும் கவண்கல் எறிவதில் சூரன் என்பதும், பட்டம் விடுவதில் கெட்டிக்காரன் என்பதும் கதையில் வரும் பளிச் பகுதிகள்.
கதையின் சாரம் கெடாமல் திரைப்படம் இருப்பது நிறைவைத் தருகிறது. அதிலும் சப் டைட்டிலில் வரும் வசனங்கள் எல்லாமும் நாவலில் இருந்தே எடுத்தாளப்பட்டிருப்பது சபாஷ் போட வைக்கிறது. பட இடங்களில் படம் ஒரு காட்சியை விட்டு பல பக்கங்களைத் தாண்டி அடுத்த காட்சிக்குத் தாவுவது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தருகிறது.
மிகையில்லாத நடிப்பு அத்தனை நடிகர்களுக்கும் கை வந்திருக்கிறது. அதிலும் பாபாவாக நடிப்பவர் கண்களாலேயே எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார். தாலிபான் வசம் போன ஆப்கானிஸ்தானின் நிலை நம்மை அதிர வைக்கிறது. ஆண்கள் எல்லோரும் தாடியுடனே அலைவது, தலிபான் வீரர்களைப் பார்த்தால் தலையைக் குனிந்து கொள்வது, மருந்துக்குக் கூட தெருக்களில் பெண்கள் நடமாட்டமே இல்லாதது என்று துல்லியமாகப் படமெடுத்திருக்கிறார்கள்.
நாவலைப் படிக்க ஆர்வம் இலலாதவர்கள் படத்தைப் பார்க்கலாம். பார்த்தவுடன் ஒரு வேளை நாவலைப் படிக்கும் ஆர்வம் வரலாம்.
0

Series Navigationமனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    வன்னிமகன் says:

    Khaled Hhossseini ஆப்கானிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1980 இல் அமெரிக்காவிற்குப் குடிபெயர்ந்தார். ‘The Kite Runner ‘ மிகப் பிரபலமடைந்தது. பின்னர் அவர் எழுதிய ‘A Thousand Splendid Sons ‘ என்ற நாவலும் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. இவரின் இரு நாவல்களுக்கும் அமெரிக்க ஊடகங்கள் தந்த ஆதரவு மிக அதிகமென்றே சொல்லவேண்டும். ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டே இவரின் இருநாவல்களும் எழுதப் பட்டுள்ளன.
    தலிபான்களையும், கம்யூனிஸ்ட்களையும் தன் நாவல்களூடாகச் சாடியிருக்கும் இவர் அமெரிக்கர்களை துதிபாட தவறவில்லை. ஆப்கானில் அமெரிக்கத் தலையீட்டின் பினான காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை நேர்மையான மனதுடன் இவர் எழுத முன்வருவாரா? இவரது இரு நாவல்களும் மிகத் தரமானவையே. அவற்றையும் தாண்டி அமெரிக்க அடிவருடும் அவரின் மனநிலை அங்கு அப்பட்டமாகத் தெரிகிறது.

  2. Avatar
    BagavathiGanesh says:

    Khaled Hosseini’s father is a former diplomat of Afghanisthan. During Taliban rule their family sought asylum in U.S. Khaled studied medicine in US. He is now UN’s peace ambassador for human rights..There is nothing wrong in his attitude towards US. Of course he is an american citizen..! There is no doubt he is one of the celebrated author in US and Afghanisthan..Please enjoy his writings…Please do not personalise his writings..You are living in a democratic, republic country..But he lost his homeland..How can you understand his pains…? I always feel pity for him.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *