தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

This entry is part 8 of 13 in the series 10 ஜனவரி 2021

ஸிந்துஜா 

 

ல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் “இவைகள் கதைகளல்ல, காட்சிகள்” என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப்  பல கட்டுரைகளில் தனது  கதைகளைப் பற்றி அவர் பேசும் போது நாம் கவனிக்க முடியும். ‘பிள்ளையார் பிடிக்கிறேன்’ என்று குரங்கைப் பிடித்து விட்டு மர்க்கட கணபதி என்று கூப்பிடும் சூழலில் இது ஒரு அதிசயித்தக்க குரல்.  

“அதிர்வு”  காட்சிகளாய் விரியும் ஒரு கதை.

‘நெருப்பு என்றால் வாய் வெந்து போக வேண்டும்’ என்று ராமாமிருதம் ஒருமுறை சொன்னார். “அதிர்வு” படிக்கும் போது இவ்வார்த்தைகள் நினைவில் எழுகின்றன. கதை முழுவதும்  வாசக மனதில் ஒரு வித பரவசம் நிரம்பிய நடுக்கம் நிலவுகின்றது.இவ்வளவு அடக்கமாக அழுத்தமாக ஒளிரும் வார்த்தைகளில் வாசகனுக்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் இக்கதையில் இவ் வார்த்தைகள் சிற்பியின் உளியால் செதுக்கப்பட்ட சிலையில் இறங்கி நிற்கும் கூர்மையையும், வனப்பையும் கொண்டிருக்கின்றன. ஜானகிராமன் ஏதோ ‘பெண்களை அவமானப்படுத்தி எழுதுகிறவர்’ என்று புலம்பும் கிளிப்பிள்ளைகள்   படிக்கத் தவறிய கதையாக “அதிர்வு” இருக்கிறது. 

செங்கமலம் ‘அந்தத் தெருப்’ பெண்தான். அவளைப் பார்த்து எந்தக் கண் இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்காமல் இருந்தது? அவள் ஜனக் கூட்டம் திரளும் அந்தக் கோவிலுக்கு வந்தாள். ‘காலம் காலமாக நீட்டின கிடையாகக் கிடக்கும் பள்ளிகொண்ட ரங்கநாதனா எழுந்து பேசப் போகிறான்? நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஜனம் நினைத்து ‘போனால் வராது’ என்ற நிலையில் இருக்கும் மனித அதிசயத்தைப் பார்க்க நெருக்கி அடித்துக் கொண்டு வந்த  கூட்டத்தில் அவள் வந்து நின்றாள்.

.           

உள்ளேயிருந்து மெதுவாக நடந்து வந்த சாதாரண உருவத்தைப் பார்த்து செங்கமலம் “இதுக்குத்தானா இந்தக் கைமிதி கால்மிதி எல்லாம்?” என்று உள்ளுக்குள்ளேயே நகைத்தாள். ஆனால் அந்தக் கேள்வி மலையில் கேட்கும் எதிரொலியாக நாலைந்துதடவைகள் கேட்டு மடிந்து விட்டன.  மாநிறம் போலிருந்த அந்த உடல் மானிட நிறமாக இல்லை. பளிச்சென்று உடனே கண்ணைப் பறிக்கவில்லை. ஆனால் கண்ணை ஊடுருவி நெஞ்சைக் கடந்து உள்ளே பாய்கிற எதிர்க்க முடியாத ஒளியாக ஒளிர்ந்தது. உடலில் ஒரு கட்டு. ஆனால் மனித , உடலில் தோன்றுகிற சாதாரண இளமையின் கட்டாக இல்லை. பெண்மையின் மென்மையும் ஆண்மையின் வைரமும் மட்டுமில்லை, அவற்றையும் கடந்த ஒரு சத்து. ஒரு பொலிவு. பொலிவு என்றால் போதுமா?

கருவூர்ச் சித்தன் இவனா? எட்டுத் திக்கும் வென்று வந்த ராஜராஜ சோழன் இவன் காலடியிலா விழுந்தான்? பொதிகை மலையில் இருந்து கொண்டு ‘நெல்லையப்பா’ என்று மூன்று முறைகள் அழைத்தும் விடை வராததால் 

கோவிலையே சபித்து விட்ட கோபியா இவன்? மனிதக் கூட்டம் வளைத்துக் கொண்டு கேள்விகள்,பிரார்த்தனைகள், இறைஞ்சல்கள் என்று என்னென்னவோ கேட்டது. இதெல்லாம் கவனிக்கத்தான் அவன் இருக்கிறானே என்று தலையைப் பள்ளிகொண்டான் பக்கமாக அசைத்தான் கருவூரான். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து விட்டது.

அந்த உடலையே, வயதில்லாத அந்த உடலையே, ஆண்மையையும் பெண்மையையும் சேர்த்து உண்டு கண்ணை அள்ளின அந்தக் கட்டைப் பார்த்துக் கொண்டு நின்றாள் செங்கமலம்.

அவளுக்கு என்ன வேண்டுமென்று கருவூர்த் தேவர் நிமிர்ந்து பார்த்தார்.

“சித்தின் கால் பட வேண்டும் என் குடியில்…”

அப்படியா என்று கேட்டு விட்டு மறுநாள் இரவு வருவதாகச் சொன்னார். 

மறுநாள் பொழுது முழுவதும் செங்கமலம் நினைவில் சித்தன்தான். கண்ணாடிக்குள் நின்ற பிம்பம் அவள் அழகைக் கண்டு வியந்தது. அவளுடைய அழகைக் கண்டு மோகித்தது. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் அவளை இப்பாலும் அப்பாலும் தள்ளிக் கொண்டே இருந்தன. நிச்சயம் வருவாரா? எப்படி இசைந்தார்?

அவள் வீட்டிற்குள் கருவூர்த் தேவர் வரும் போது நினைவையும் உடலையும் உருக்கிய அந்த உடற்கட்டும் பொலிவும் 

அவளுடைய இதயத்தை இறுக்கி அணைப்பது போலிருந்தன. உள்ளே வந்த அவர் மஞ்சத்தை, பட்டு விரிப்பை, மல்லிகைப் பூவை, விதானத்துச் சித்திரத்தை ஒவ்வொன்றாகப்பார்த்தார். நெட்டுக்குத்தலாக விழுந்த பார்வை ஒவ்வொரு பொருளின் மேல் கோசத்தைக் கடந்து உள்ளே ஊடுருவுவது போலிருந்தது. ஒரு நாழிகை கழித்துத்தான் அவள் கண்மீது விழுந்தது அந்தப் பார்வை. எண்ணத்தின் மதுவில் மயங்கிக் கிடந்த அவளுக்குப் பொறுமை நழுவிக் கொண்டே இருந்தது. கேலியாகப் புன்னகை செய்தாள். 

அவர் உள்ளத்தில் சுருக்கென்று அது தைத்திருக்கவேண்டும் அருகே வருமாறு சைகை காட்டினார். அவர் கரத்தைப் பற்றிய அவள் என்ன இது என்று திடுக்கிட்டாள்.

ஜானகிராமன் இவ்வாறு எழுதுகிறார்:

                பிருபிருவென்று அந்தக் கரம் வேகமாக அதிர்ந்து கொண்டிருந்தது. கண்ணால் உற்றுப் பார்த்தாள்

                ஒன்றும் தெரியவில்லை. சாதாரணமாக இருந்தது. ஆனால் உள்ளுக்குள்ளே அதே அதிர்வு. புஜத்தைத்

                தொட்டாள். ஆமாம்! கணுக்காலைத் தொட்டாள். பிடறியைத் தொட்டாள். முதுகைத் தொட்டாள்

                தொட்ட இடமெல்லாம் படபடவென்று அதிர்ந்து கொண்டே இருந்தது. நான்கைந்து வினாடிகளுக்கு 

                மேல் பொறுக்க முடியாமல் கை தானாகத் தொட்ட இடத்தினின்று மீண்டது. ஆனால் மீண்டும் 

                தொடும் ஆசை உந்தியது. கரத்தைப் பற்றினாள். பகபகவென்று அதிர்ந்த அதிர்வு அவள் கையில் 

                மட்டுமில்லை, காதில் ஒலியாகக் கேட்டது. உடல் முழுவதும் ஊடுருவி உதற அடித்தது. கையை விட

                மனமில்லாமல் பிடித்துக் கொண்டேயிருந்தாள். கண் மூடியது. உள்ளேயும் பாய்ந்த அந்த அதிர்வு

                பெரும் அரவமாகக் கேட்ட்டது. எங்கு போகிறோம் என்று தெரியவில்லை. ஒரே வெற்று வெளியாக 

                இருந்தது.          

                இருள் இல்லை. ஒளியில்லை. வெள்ளை இல்லை. கறுப்பு இல்லை. வேறு வர்ணமும் இல்லை. வேலியும் 

                வரம்பும் மேலும் கீழும் இல்லாத வெறும் வெளியொன்றில் நிற்பது போலிருந்தது. அவளுடைய உடலில்

                பகபகவென்று பரந்து கொண்டிருந்த அதிர்வு மட்டும் நிற்கவில்லை. பற்றியிருந்த விரல் வழியாகப் 

                பாய்ந்து அவள் உடல் முழுவதையும் நடுங்கி அதிர வைத்து விட்டது.

எங்கு போகிறோம் என்று தெரியவில்லை.ஒரே வெற்று வெளியாக இருந்தது’ என்று செங்கமலம் உணர்ந்த தருணம் ! மின்னல் விளக்கின் ஒளியை விழுங்கி விட்ட, எல்லை இல்லாத வடிவத்தின் சிறிய புள்ளியைக் கண்ட அதிர்ச்சி. இதைத்தானே மகான்களும் யுகபுருஷர்களும் காலங் காலமாய்த் தேடித் தேடி அலைந்து பெற்றது? கருவூர்த் தேவர் செங்கமலத்தையும் அந்த நிலைக்கு கொண்டு சேர்த்தார் என்று கூறும் ஜானகிராமனின் மேன்மையைக் கண்டு வியப்பும் பெரும் மரியாதையும் வாசகனின் மனதில் தோன்றுகின்றன. மேரி ஜீஸஸ்ஸின் தாயாவதும், மாதவி துறவு பூணும் நிலையை அடைவதும் கொண்ட சரித்திரம்தான் செங்கமலம் எதிர்கொள்ளும் தரிசனமும் நம்பத் தகுந்ததே என்று வலியுறுத்துகிறது.  

Series Navigationகோடுகள்மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *