துறைமுகம், தேடல் நாவல்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல்

author
1
3 minutes, 15 seconds Read
This entry is part 3 of 10 in the series 28 ஏப்ரல் 2019

த. ரவிச்சந்திரன்,

ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்,

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

காந்திகிராமம் – 624 302,

திண்டுக்கல் மாவட்டம்.

முன்னுரை

                  பண்டைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தொட்டு இன்றுவரை கிடைத்துள்ள இலக்கியங்களில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் நெய்தல் நிலத்தை கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியாகக் குறிப்பிடுகின்றார். மேலும் இந்நிலத்து மக்களின் உரிப்பொருளை இரங்கலும் இரங்கல் நிமிர்த்தமும் என்று குறிப்பிடுகின்றார்.

                  தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றுவரை எழுந்துள்ள அனைத்து வகை இலக்கியங்களிலும் நெய்தல் நில மக்களின் வாழ்வியல், துன்பகரமாகவே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. அவ்வகையில் தற்கால இலக்கியங்களில் ஒன்றான நாவல் இலக்கியத்தில் நெய்தல் நில மக்களின் வாழ்வியல் சிக்கல்கள், துன்பம் மிகுந்ததாகவே அமைந்திருப்பதை தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ‘துறைமுகம்’ நாவலும் பொன்னீலன் எழுதிய ‘தேடல்’ நாவலும் முன்வைப்பதை ஒப்பீட்டு நோக்கில் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

படைப்பும் படைப்பாளர்களும்

                  தோப்பில் முஹம்மது மீரான் 1994, செப்டம்பர் 26-ல் குமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது ‘துறைமுகம்’ என்ற நாவலும் குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய கடற்கரைக் கிராமத்தில் வாழும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டுகின்றது.

                  மற்றொரு நாவலாசிரியரான பொன்னீலன், குமரி மாவட்டம் நாகர்கோயிலை ஒட்டிய மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940-ல் பிறந்தவர். இவரது ‘தேடல்’ என்ற நாவலிலும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறையினைப் புனைந்து கூறியுள்ளார்.

                  எந்த ஒரு படைப்பையும் தனியாக ஆராய்ந்து பார்ப்பதில் எப்பயனும் இல்லை. அவ்வாறே, ‘‘இலக்கியங்களை – படைப்பாளிகளை – ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது மிகப் பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கின்றது’’1 என்பார் தி.சு. நடராஜன். படைப்பாளனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு அவர்களது படைப்புகள் அமைந்து இருப்பதை பல்வேறு படைப்புகள்வழி உணர முடிகின்றது.

வட்டார நாவல்கள்

                  ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் வாழும் மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களைக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் வட்டார நாவல்கள் எனப்படும். அம்மக்களின் உரையாடல் நடையிலேயே அந்நாவல்களும் இயற்றப்படும்.

                  வட்டார நாவல்களுக்கு, ‘‘மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது போல மொழிபேசும் எல்லைக்குள்ளே ஒரு குறிப்பிட்ட பொருளியல் கருத்தில் பொதுவாகக் காணப்படும் பகுதிகளை வட்டாரம் எனலாம். அங்குள்ள படைப்பாளிகளாலோ அதைப் புரிந்த படைப்பாளிகளாலோ படைக்கப்படும் புதினங்களே வட்டாரப் புதினங்கள்’2 என்று விளக்கம் தருவார் சு. சண்முகசுந்தரம்.

                  அவ்வகையில் சூரியகாந்தனின் மானாவரி மனிதர்கள், அகிலனின் நினைவு, ஜெயமோகனின் ரப்பர், தோப்பில் முஹம்மது மீரானின் சாய்வு நாற்காலி, பெருமாள் முருகனின் ஏறுவெயில், இராஜம் கிருஷ்ணனின் கூட்டுக் குஞ்சுகள் போன்றவை அந்தந்த வட்டாரத்தை – நாவலாசிரியரின் வட்டாரத்தைச் சார்ந்த வட்டார நாவல்களாகும். வட்டார நாவல்கள் நாட்டுப்புறத்தையும் மண்வாசனையையும் வெளிப்படுத்துவன. அதுமட்டுமின்றி ஒரு வட்டாரத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் வட்டார நாவல்கள் முன்வைக்கின்றன.

கதைக்கரு

                  ‘‘கதைக்கரு இயற்கையாக அமைதல் வேண்டும். ஆசிரியர் பாடுபட்டு விந்து அமைப்பதாக இருத்தல் ஆகாது. நடக்கக்கூடியதே என்று நம்பத்தக்க வகையில் இயல்பாக அமையும் கருவே கதைக்குக் கவர்ச்சி தருவதாகும்’3 என்ற மு.வ.வின் கருத்துக்கு ஏற்ப தேடல், துறைமுகம் ஆகிய நாவல்களின் கரு அமைந்துள்ளது.

                  கல்வியறிவில்லாத மக்களிடம் மதம் பற்றிய தவறான போதனைகளை வளர்த்து, முதலாளி வர்க்கத்தால் சுரண்டப்படும் மீனவர்களில் ஒருவரின் மகன் மட்டும் படித்து மக்களிடம் இருக்கும் நம்பிக்கைகளைக் களைக்க வேண்டுமெனப் போராடுவதாகத் துறைமுகம் நாவலின் கதைக்கரு அமைந்துள்ளது.

                  ஏழ்மையில் இருக்கும்போது மனிதர்களின் மனநிலை ஒரு மாதிரியாகவும் அதே மனிதன் வாழ்வில் உயர்வு அடைந்தால் அவனுடைய மனநிலை மாறுபடுவதும் தேடல் நாவலின் கதைக்கருவாக அமைந்துள்ளது.

                  இவ்விரு நாவல்களும் மீனவர்களின் பிரச்சனையான வறுமையைப் பற்றியும் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலையும் எடுத்துக் கூறுகின்றது. தேடல் நாவல் மட்டும் மீனவ மக்களின் காதல் வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.

கதைக்களம்

                  துறைமுகம், தேடல் இரண்டு நாவலும் குமரி மாவட்டக் கடற்கரையை ஒட்டிய மீனவ மக்களின் வாழ்வியல் துயரங்களைக் கதைக்களமாகக் கொண்டு இயங்குகின்றது.

கதைச் சுருக்கம்

                  துறைமுகம் நாவலில் குமரி மாவட்டத்தை ஒட்டிய கடற்கரைக் கிராமங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் இஸ்லாம் சமுதாயத்தைச் சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வியல் முறையினைச் சித்தரித்துக் காட்டுகின்றது. கல்வியறிவற்ற அம்மக்களிடம் மதத்தின் மீதான நம்பிக்கையானது வேரூன்றி இருக்கின்றது. பத்திரிகை படிக்கக்கூடாது@ ஆங்கிலம் பயிலக்கூடாது@ ஆண்கள் மொட்டையடித்துத்தான் இருக்க வேண்டும் என்றும், அப்படி இதையெல்லாம் செய்யத் தவறினால் அது ஹராம் என நினைத்து தம் மத்தின் மீதான தீவிரப் பற்றோடு வாழ்கிறார்கள் மத போதகர் என்று கூறிவரும் ஒருவரை மக்கள் அவர் கூறும் வார்த்தைகளை எல்லாம் இறைவன் வாக்காக நம்புகின்றனர். வயது அதிகமான அவருக்கு ஊரில் உள்ள ஒரு ஏழைப் பெண்ணை முதலாளியான பரீது பிள்ளை மக்களுடன் சேர்ந்து திருமணம் செய்து வைக்கின்றார். அவர் அன்று இரவு மட்டும் இருந்துவிட்டு, காலையில் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகின்றார். அப்படி இருந்தும் மக்கள் அவரை அரசர் போருக்காக அழைத்து இருப்பர் என்று அறியாமையுடன் நம்பினர்.

                  மீன் இருக்கும்போது சரியான விலை இல்லை@ விலை இருக்கும்போது மீன் இருப்பதில்லை@ அப்படி இருந்தாலும் ஈனாபீனாகூனா போன்ற முதலாளிகளால் ஏமாற்றப்படுதல், இவரால் அந்தக் கிராமத்தில் பல மக்கள் கடன் நிறைந்தவர்களாக ஆகுதல், அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் வீடுகளை எழுதி வாங்குதல், தன்னை எதிர்க்கும் வியாபாரிகளின் பொருள்களை நஷ்டம் அடையச் செய்தல் என ஒரு முதலாளித்துவ ஆதிக்கம் காணப்படுகின்றது. இதில் கதையின் மையக் கதாப்பாத்திரமான மீரான் பிள்ளையும் இந்த முதலாளியால் தன்னுடைய வீட்டை இழந்து வீதிக்கு வருகின்றார். இதனை எல்லாம் உடைக்க ஊரில் படித்த இளைஞனான மீரான் பிள்ளையின் மகன் காசீம் மக்களிடம் இருக்கும் அறியாமையைப் போக்க வேண்டும் என முயற்சி செய்கின்றான். ஆனால் மக்கள் அவனை எதிரியாகவே பார்க்கும் நிலையில் காசீம் கைது செய்யப்பட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

                  தேடல் நாவலின் கதைத் தலைவி சில்வியின் தந்தை சில்வரசு, சில்வியை ஒருதலையாகக் காதல் செய்யும் தாசன் இவர்கள் இருவரும் ரூபனின் தந்தை மிக்கேலிடம் கட்டுமரத்தை வைத்து மீன்பிடிக்கும் தொழிலாளர்களாக வேலை செய்பவர்கள். தாசன் சில்வியைக் காதலிக்க, சில்வியோ ரூபனைக் காதல் செய்கின்றாள். கடலில் மீன் பிடிக்கப் போகும்போது கடலில் சிக்கி, சில்வியின் தந்தை இறந்துவிடுகின்றார். இதற்கிடையில் சில்வி ரூபனால் ஏமாற்றப்பட்டுக் கர்ப்பமாக்கப்படுகின்றாள். சில்வியிடம் பேசி அவளது கர்ப்பத்தைக் களைக்க ரூபன் முயற்சி செய்கின்றான். சில்வி முடியாது எனக் கூற, அவளை விட்டு வேறு ஒரு முதலாளியின் மகளைத் திருமணம் செய்ய நினைத்து ஊரை விட்டுத் தலைமறைவாக இருக்கின்றான். பின்பு சில்விக்கு ஆண் குழந்தை பிறக்கின்றது. ஊரில் நடக்கும் போட்டி ஒன்றில் சில்வியின் மகன் முதலிடம் பிடிக்க அதற்குத் தலைமை தாங்க ரூபனின் தந்தை வருகின்றார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாசனின் நண்பர்கள் சில்வியை ரூபனுடன் சேர்த்து வைக்கின்றனர். மீன்பாடு இல்லாத காலங்களில் மக்களுக்கு ஏற்படும் வறுமை நிலையும் கடலுக்குள் செல்லும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் உணர்ந்து கட்டுமரத்தை மட்டும் வைத்து மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு என தோழர் ஜோசப், சந்திரன் ஆகியோரது தலைமையில் தாசன், சைமன் முன்னிலையில் மீனவ நலச்சங்கம் அமைக்கப்படுகின்றது. தாசன் மற்றும் அவர்கள் நண்பர்களின் பலநாள் கனவான நலச்சங்கம் அமைப்பது வெற்றியடைகிறது.

வாழ்வியல் சிக்கல்

                  ‘‘வாழ்க்கையின் எந்தப் பகுதியைப் புதினம் கூற எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியைப் பற்றிய மெய்ம்மையைக் கூறவேண்டும். அதாவது அப்பகுதியை ஆசிரியன் நன்கு அறிந்து அதில் பழகி இருத்தல் வேண்டும்’’4 என            அ.ச. ஞானசம்பந்தன் கூறுவதற்கிணங்க, தான் வாழ்ந்த கடற்கரைப் பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்க்கைச் சிக்கலையும் முதலாளித்துவச் சுரண்டலும் மீன்பாடு இல்லாத நிலையில் மீனவ மக்களுக்கு ஏற்படும் வறுமை நிலையையும் இவ்விரு நாவல்களின் வாழ்வியல் சிக்கலாக நாவலாசிரியர் கூறுகின்றனர்.

வட்டார வழக்கு

                  வட்டார வழக்கு என்பது அந்தந்தப் பகுதிகளில் வழங்கப்பட்டு வருகின்ற வழக்கு மொழி ஆகும். துறைமுகம், தேடல் என்ற இரு நாவல்களிலும் குமரி மாவட்ட வட்டார வழக்குச் சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக,

                  ‘இஞ்சித் தல்லிக் கொடுத்தாயா….., வயிச்சியருட்டெ கொண்டு காட்டுங்கோ’5

                  ‘தொடுலோய் தொடுலோய் தொடுலோய்’6

போன்ற வட்டார வழக்குச் சொற்களைக் கூறலாம். அதுமட்டுமின்றிப் பிறமொழிச் சொற்களும் இவ்விரு நாவல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முடிவுரை

                  துறைமுகம், தேடல் ஆகிய இரு நாவல்களுமே மீனவர்களைச் சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இவற்றிற்கான தீர்வுகளாக இரு நாவல்களிலும் இரண்டு விதமான முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்விரு முடிவுகளுமே மீனவர்களுடைய வாழ்வியல் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிப்பதாக அமைகின்றன.

                  இரண்டு நாவல்களிலும் பேசப்படுகின்ற பிரச்சனைகளில் வறுமை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. மீனவர்களுடைய வறுமைக்கு முதலாளிகளின் சுரண்டல் முக்கியக் காரணமாக இருந்தாலும் மீனவ மக்களின் சிக்கனமின்மையும் ஒரு காரணமாக இருக்கின்றது என்பது உண்மை. இப்பிரச்சனை மீனவர்களின் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இவ் இரு கதைகளும் பதிவு செய்கின்றன.

                  இவ்விரு கதைகளிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

                  தேடல் நாவல் மதத்தைப் பற்றிப் பேசாவிட்டாலும் துறைமுகம் நாவல் மதமானது மீனவ மக்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களை எப்படி அறியாமையில் மூழ்கவைத்துள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளது.

                  தொல்காப்பியம் கூறிய இரங்கலும் இரங்கல் நிமிர்த்தமும் மீனவர்களின் துன்பத்தை மட்டுமே கண்டு உழறுகின்றன. இதனை நெய்தல் இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.

சான்றெண் விளக்கம்

                                    1. தி.சு. நடராஜன், திறனாய்வுக் கலை, ப. 25

                                    2. சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப. 1

                                    3. தோப்பில் முஹம்மது மீரான், துறைமுகம், ப. 58

                                    4. மு. வரதராசன், இலக்கிய மரபு, ப. 130

                                    5. அ.ச. ஞானசம்பந்தன், இலக்கியக் கலை, ப. 347

                                    6. பொன்னீலன், தேடல், ப. 2

Series Navigation“சுயம்(பு)”பிராந்தி
author

Similar Posts

Comments

Leave a Reply to Bama Cancel reply

Your email address will not be published. Required fields are marked *