துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை

This entry is part 26 of 42 in the series 1 ஜனவரி 2012

ஹெச்.ஜி.ரசூல் 

முனைவர் செள..வசந்தகுமார் தேர்ந்த கல்வியாளர். இலக்கியவிமர்சகர். மொழியியலிலும், தத்துவத்திலும் ஆர்த்தம் நிறைந்த விவாதங்களை முன்வைப்பதில் தேர்ச்சி பெற்றவர். மு.வ.வின் படைப்புகளில் கல்வியியல் சிந்தனைகள் தலைப்பின்கீழ் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல் துறையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதால் இவரது ஏற்கெனவே வெளிவந்த இலக்கிய கல்வியின் பரிணாமங்கள், புதிய நோக்கில் தமிழ்பாடமும் கல்வியும், தாய்மொழியும் திறன்மேம்பாடும் என்பதான மூன்று நூல்களும் தமிழ் அடையாளத்தை முன்வைத்து அறிமுகமாயின. தற்போது இவரது ஆழ்ந்த வாசிப்புக்கும், ஆய்வுக்கும் சான்றாக தமிழ் சமூக சமய வரலாறு சார்ந்த பக்தி ஈயக்கமும் பெண்களும் என்ற இந்த நூல் வெளிவருகிறது.

 

மரபு வழி அறிவு ஜீவிகள் என்பவர்கள் வரலாற்றை ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட வகையிலேயே ஆளும் கருத்தியலுக்கு சார்பாக வாசித்து அர்த்தப்படுத்துபவர்கள். இந்நிலையில் வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் முறையிலும், வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களை அம்பலப்படுத்துவதும் ஓரங்கட்டப்பட்ட வரலாறுகளை மையத்திற்கு கொண்டு வருவதும், அறியப்படாத வரலாறுகளை தொகுப்பதும், கீழிருந்து மாற்று வரலாறுகளை எழுதுவதும் மறுபுறத்தில் உருவாகி வளர்ந்து வருகிறது. இத்தகைய வரலாற்று ஆய்வாளர்களை உயிர்ப்புமிகு அறிவு ஜீவிகள் என்ற சொல்லாலும் குறிப்பிடலாம்

தமிழகத்தில் நாட்டார் வரலாறுகளின் வாயிலாக, அடித்தள மக்கள் வரலாற்றுக்கான மாற்றுச் சிந்தனையை முன்வைத்த அறிஞர்களின் வரிசை பேராசிரியர் நா. வானமாமலை, ஏஸ்.வி.ராஜதுரை  ஆ. சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன், பொ.வேல்சாமி, ராஜ்கெளதமன், ந.முத்துமோகன் என நீண்டு செல்கிறது. அடித்தள மக்கள் வரலாற்றுப் பார்வை அயோத்திதாசரின் தமிழ்பவுத்தம் வழிநின்று தலித்திய வரலாற்றை எழுதுதல் ஏன்கிற புதிய வரலாற்றுவாதமாகவும்  உருவெடுத்துள்ளது. இலக்கியப்பிரதிகளை சமூக, அறிவு வரலாற்றுச் சூழலில், சாதி, இனம், பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கி, உற்றுநோக்கி அதன் கருத்தியல்களையும், படைப்பாளிக்கே தெரியாது பிரதிகளுக்குள் உட்புதைந்து கிடக்கும் பண்பாட்டு அரசியலையும் புதிய வரலாற்றுவாதம் வெளிக்கொண்டு வருகிறது. இது பொருளியல் முரண் சார்ந்த வர்க்க அதிகாரம் என்ற எல்லையைத் தாண்டி மிகேல் பூக்கோவின் சிந்தனைவழி சமூகம் முழுமையிலும் பரவிக்கிடக்கும் அதிகாரம் குறித்த கட்டுடைத்தலைச் செய்கிறது. இத்தகைய அறிவுச் சூழலிலிருந்து அணுகும்போது முனைவர் வசந்தகுமாரின் பக்தி இயக்கமும் பெண்களும் பிரதியானது மரபுவழிச் சிந்தனையையும், மறுவாசிப்பைக் கோரும் உயிர்ப்புமிகு சிந்தனையையும் இணைத்த ஓரு பார்வையாக உருவாகியுள்ளது. கல்விப் புலச்சூழலில் ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடாக இது உருவான காரணத்தால் இதற்கு எல்லைவரம்புகளும், கட்டுப்பாடுகளும் இருந்திருக்கக்கூடும். எனினும் பக்தி இயக்கத்தில் பெண்ணின் இடம் குறித்து விவாதிப்பதற்கும், பக்தி இயக்கத்தின் மீதான பெண்ணிய வாசிப்பை நிகழ்த்துவதற்கும் ஓரு திறப்பை இந்நூல் உருவாக்கி உள்ளது. முனைவர் செள.வசந்தகுமாரின் பக்தி இயக்கம் பெண்களும் தொகுப்பு பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பக்தி இயக்கப் பெண்களின் சமயப்பணி தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்த கொடை, சைவ, வைணவ பின்னணி சார்ந்த பெண் கவிகளான காரைக்காலம்மையார், ஆண்டாளின் பாடல்கள் குறித்த உரையாடல், நாயன்மார்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த துணைவியர்களின் தொண்டுள்ளம் என்பதாக விரிவடைகிறது. தமிழ்பக்தி மரபு கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு தென்னிந்தியாவில் வைதிகச் சமயங்களான சைவ, வைணவ சமய நெறிகளிலிருந்து உருவாகிறது. சிவனும் விஷ்ணுவும்இச்சமயங்களின் கடவுளாகின்றனர். இறைக்காதலை துறவியர்களும், கவிகளும் லட்சிய நாட்டமாகக் கொண்டனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு இந்திய மாநிலங்களிலும், 17ம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியப் பகுதியிலும் பக்தி இயக்கத்தின் செல்வாக்கு பரவி முடிவுக்கு வந்தது.

 

உலக ஒருமை, மானுடநேயம், அன்பு நெறி, நிறுவனச் சமய மறுப்பு, உறவுகளிலிருந்து விலகிய துறவுத்தன்மை, அடித்தள ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பெண்களிடத்து செலுத்த வேண்டிய சமத்துவநோக்கு இதில் வெளிப்பட்டது. பக்தி இயக்க பெண்கவிகள் இல்லற வாழ்க்கையில் துன்புறுத்தல்களால் காதலனான கணவனை விட்டு விலகினர். ஆன்மீக வாழ்வில் இறைவனைக் காதலனாக எண்ணி கசிந்துருகினர். தமிழ் சூழலில் பக்தி இயக்கப்பாடல்கள் பன்னிரண்டு திருமுறைகளென சைவ நூல்களாகவும், திவ்விய பிரபந்தமென வைணவப் பாடல்களாகவும் தொகுக்கப்பட்டன. தமிழக பக்தி இயக்கம் குறித்த விவாதத்தில் வைதீக பிராமணர்களின் சிவனும், அடித்தள மக்கள் பண்பாட்டில் இடம்பெறும் சுடலைசிவனும் வெவ்வேறு அடையாளங்களோடு காணப்படும் நிலையில் இந்திய சமய ஒற்றுமையின் வடிவமாகவும், இந்து பண்பாட்டின் ஒருமையாகவும் சைவத்தை கருதும் நோக்கிற்கு எதிர்நிலையிலான விவாதங்களும் எழுந்துள்ளன. சேக்கிழாரின் பெரியபுராணம் முன்வைக்கும் 63 நாயன்மார்களின் வரலாற்று கதையாடல்களும் சைவசமய கருத்தாக்கத்தை கட்டுமானம் செய்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் மேல் கீழென படிநிலையாக்கம் செய்யப்பட்ட தீட்டுத்தன்மை பிரித்து வைத்த சாதிகளையும் ஒன்றிணைக்கும் கூறு பக்தி இயக்கமரபில் செயல்பட்டுள்ளது என்ற கருத்தை உரத்துபேசும் அறிஞர்களும் உண்டு. எனினும் தொகுக்கப்பட்ட 63 சைவ நாயன்மார்களில் பார்ப்பன அடியார்கள் 12, வேளாள சாதி அடியார்கள் 13, அரசர் சிற்றரசர்களான சத்திரியர் 10, வைசியர்களான வணிகர்கள் 5 என நீண்டு சென்று பறையர், வண்ணார், பாணர், குறும்பர் ஆகியோர் ஒவ்வொன்றும், சாலியர், குயவர், வாணியர், இடையர், பரதர் என கைவினைஞர் உள்ளிட்ட இடைநிலை சாதியினர் 18 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இதன் அடிப்படையில் அனைத்து சாதியினரையும் பக்தி இயக்கம் சமமாக கருதி ஒன்றிணைத்தது என்ற கூற்று ஆதாரமற்றதாகிவிடுகிறது. ஏனெனில் அனைத்து சாதியினர்களுக்குமான சமபங்கு ஏன்பது பக்தி இயக்கத்தில் இல்லை. வைதீகப் பார்ப்பனர்களும், உயர்சாதி வேளாளர்களுமே இதில் தீர்மானகரமான பங்கினை ஆற்றியுள்ளனர். பக்தி இயக்கத்தின் மூலவர்களாக கருதப்படும் அப்பர், சுந்தரர் ஞானசம்பந்தரில் முதலாமவர் வேளாளராகவும், பிற இருவரும் பார்ப்பனர்களாகவுமே உள்ளனர். தமிழ் பக்தி மரபின் மற்றொரு முக்கியத்துவம் சமஸ்கிருத முதன்மையை புறந்தள்ளிவிட்டு தாய்மொழியிலும், தமிழ்மொழியிலும், வழிபாடு ஏன்பதான நிலையை முன்வைத்தாகும். அந்தந்த வட்டாரங்களின் தாய்மொழியையும், பக்தி இயக்கம் முதன்மைப்படுத்தியது. தமிழில் ஆண்டாளின் பாடல்கள் காரைக்காலம்மையாரின் பதிகப்பாடல்களை இவ்வகையில் குறிப்பிடலாம்.

 

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடகாவின் அக்கமகாதேவி சிவன் மீதான இறைக்காதல் பொங்க நீண்ட கூந்தலால் மட்டும் உடல் மறைத்து நிர்வாண கோலத்தில் வாழ்ந்து பாடிய பாடல்கள் வாழ்வின் மீதான மீறல்களையும் நிராகரிப்பையும், இறைக்காதலின் உள்ளார்ந்த துடிப்பையும் வெளிப்படுத்துகின்றன. பதின் மூன்றாம் நூற்றாண்டில் மகாராஷ்ராவில் சூத்திர குடும்பத்தில் பிறந்து உயர் சாதி நாமதேவிற்கு பணிவிடை செய்து இறைபக்தையாய் மாறி முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பெண்கவி ஜனாபாய், ஒடுக்கப்பட்ட சாதியில் வாழும் பெண் எதிர்கொண்ட தடைகள், சிக்கல்களையும் இறைக்காதலின் உள்ளீடாகப் பேசினார். ராஜஸ்தானின் ராஜபுத்திர உயர் வகுப்பு குடும்பத்தில் பிறந்த மீராபாய் குடும்ப வாழ்வில் கணவனின் வன்செயல்களை எதிர்கொண்டவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வைணவத்தில் திளைத்து கிருஷ்ணன் மீதான மையல் மேலிட இறைக்காதல் பாடல்களைப் பாடுகிறார். மகாராஷ்டிராவின் பகினாபாய், காஷ்மீரின் லால்தத் என பக்தி இயக்க பெண்கவிகள் இந்தியா முழுவதும் இறைவனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் நாயகன் நாயகி பாவமாக பெண்ணுணர்ச்சிகளை தங்கள் தாய்மொழியிலேயே எழுதிச் செல்லும் பண்பினைக் காணலாம். வேதமரபில் முக்கியச் சடங்குகளாக வேள்வியும், யாகமும், தீவழிபாடும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. கோவில் கட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் பக்தி வழிபாட்டில் பூக்களால் பூசை ஏன்பது நிகழ்கிறது. நிலம், பெண், குறியீடுகள் நிறைந்த சடங்குகளும் முதன்மை பெறுகின்றன. தாய் வழிபாட்டில் தனித்த அடையாளங்களோடு இருந்த சக்தி, இசக்கி, காளி பெண் தெய்வங்கள் சிவனுக்கு பார்வதியாகவும், விஷ்ணுவுக்கு திருமகளாகவும் மாறுபாடடைகின்றனர். ஆணும் பெண்ணுமிணைந்த அர்த்த நாரீஸ்வரனாகவும் வெளிப்பட்டன. பெண்ணியம் சார்ந்த வாசிப்பு சிவனின் வலப்பக்கம் என்றில்லாமல் இடப்பக்கம் பார்வதியை கட்டமைத்திருப்பதின் பண்பாட்டு அரசியலை விமர்சிக்கிறது. புனிதம் சார்ந்து வலதுகை உயர்ந்தது, இடதுகை கீழானது என்ற கருத்தியலின் வெளிப்பாடாகவே சிவனின் இடதுபக்கம் பார்வதியின் இடது என்பதாகவும் விவாதிக்கிறது. பக்தி இயக்க சாராம்சங்களில் ஒன்று காலம், வெளிகடந்த பேருண்மையாக கருதப்பட்ட மறுஉலகையும், முக்தி பெறுவதையும் மறுத்து இவ்வுலகியல் ரீதியான பக்தியையும் முதன்மைப்படுத்துவதாகும். இறைவனின் முன் தன்னை அடியானாக உருவகிப்பதுமாகும். இதுவே சைவ வைணவ மரபின் சொல்லப்படும் நாயன்மார்களான சிவனடியார்கள், ஆழ்வார்களான திருமாலடியார்கள் என அனைவரிடத்திலும் ஒரு சமனற்ற உறவுநிலையை உருவாக்குகிறது. பக்தித்தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மேல் கீழ் கருத்தியல் படிமம் சமூகத்தளத்தில் நிலவுடமையாளன், கூலி அடிமை என்பதாக ஆண்டான் அடிமை எதிர்வுகளாகவும், மறுபிரதியாக்கம் பெறுகிறது. நவீன வாழ்விலும் இத்தகையதான அடிமை மனோபாவம் தொழிற் உற்பத்தி சார்ந்த உறவுகளிலும் ஆண் பெண் மதிப்பீடுகளிலும் நுண் அரசியலாகவும் உருவாகி வந்துள்ளது. இப்பின்னணியில் முனைவர் வசந்தகுமாரின் ஆய்வியல் நோக்கை மீண்டும் வாசிக்கலாம். இப்பிரதியில் சைவ பக்தி இயக்க மரபின் தோற்றுவாயை பேசமுற்படும் ஆசிரியர் சமண, பெளத்த இயக்கம் மீதான எதிர்விமர்சனங்களையும் முன்வைக்கிறார். இது மரபுவழி ஆதிக்க கருத்தியலாளர்கள் முன்வைப்பது போன்று கி.பி. 1 முதல் 7ம் நூற்றாண்டு வரையிலான தமிழர்களின் வாழ்வை இருண்டகாலமாக்கிவிட்டது என்பது போன்ற குற்றச் சாட்டாகவே அமைந்துள்ளது. இளம் வழுதி இமயவர்மன் போன்ற தமிழ்ப் பெயர்கள் மகேந்திரவர்மன் ராஜசிம்மன் என்பதான வடமொழி பெயர்களாயின. மகேந்திர வர்மன் எழுதிய நாடகம் மத்தவிலாச பிரகசனம் கல்வெட்டு பட்டயங்களில் வடமொழி கலப்புடன் உள்ளது. வேற்று மன்னர்களின் ஆதரவையும், பாலி, பிராகிருதம் போன்ற பிறமொழி ஆதிக்கமும் மீட்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது என்கிறார். இக்கூற்றினை வரலாற்றின் வேறு வகையான ஆதாரங்கள் கொண்டும் மறுப்பதற்கான சாத்தியங்கள் ஊண்டு. தமிழ் ஏழுத்து மரபில் பிராமிஏழுத்து வட்டெழுத்து, கிரந்த ஏழுத்து என்பதான வரிவடிவங்களே இருந்துள்ளன. இவற்றில் ஒலிவடிவம் வரிவடிவம் என்பதான இரு கூறுகள் செயல்படுகின்றன. எனவே தமிழின் மூலவடிவம் குறித்து. மேலும் விவாதிக்க வேண்டியுள்ளது.. வேதமரபுக்கல்வி வைதீக பார்ப்பன பெண்களுக்கு மட்டுமே உரிமைப்பட்டிருந்த காலத்தில் கல்வியிற் சிறந்தவளாக முதன்மைப்படுத்திய கணிகையர் குலத்திற் பிறந்த மணிமேகலை கொலைச் செயல் பாதிப்புக்குள்ளான பெண்ணின் எதிர்க்குரலை மையப்படுத்திய நீலகேசி, வணிகமரபின் மாற்றுக்குரலை ஒலித்த சிலப்பதிகாரத்தின் கண்ணகி, பதியிலார் பெண் மாதவி என தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற பெண்களும், விளிம்பு நிலை பெண்களும் கீர்த்தி பெற்ற காலமாக இருந்ததை எவ்வாறு தமிழர்களின் இருண்டகாலம் ஏனக் கூற முடியும் என்ற கேள்வியே எழுகிறது. சைவமரபின் முழுமுதற் கடவுளை சிவனை ஆதிப்பழங்குடி மரபை உள்ளடக்கிய சங்க இலக்கியத்தில் தேடுவதும் பழம் பெருமை புனைவுகளை மீட்டெடுக்க முயல்வதற்கும் இங்கு அடிப்படையான மொழியியல் வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்பதே நடைமுறை சார்ந்த உண்மையாகும். ஏனெனில் கி.பி. 1200 களில்தான் வேளாண்குடியின் சேக்கிழார் மரபில் வந்த அருள்மொழித்தேவர் சைவக் கருத்தியலை நிலை நிறுத்தும் பெரிய புராணத்தை படைத்தளித்தார் என்ற வரலாற்று குறிப்பு ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. சமண பெளத்த குழுக்களின் வணிக உறவுகள் வீழ்ச்சியுற்றதும் வேளாண் குடிகளின் நிலங்களின் உற்பத்தியும், செல்வாக்கு பெருகியதின் வழி சைவ வேளாள எழுச்சியும், வைதீக பார்ப்பனர்களுக்கு வளமிக்க விளைச்சல் நிலங்கள் தேவதானம், பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என தானமாக வழங்கப்பட்டதும் நிகழ்ந்தது. வைதீக பார்ப்பன வேளாள பண்பாட்டு மேலாண்மையின் விளைவாக பக்தி இயக்க தோற்றமும் நிகழ்ந்துள்ளது. என்ற சமூகவியல் அடிப்படையையும் இத்தோடு இணைத்து புரிந்து கொள்ளலாம்.

Series NavigationDelusional குரு – திரைப்பார்வைஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *