தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்

author
0 minutes, 20 seconds Read
This entry is part 5 of 29 in the series 12 மே 2013

egnath
ஏக்நாத்

வேப்பெண்ணையை தலைக்குத் தடவி திண்ணையில் அமர்ந்து அனஞ்சி தலைசீவிக் கொண்டிருக்கும்போது, அவள் மகன் பதினோரு வயது பிள்ளையாண்டன், ஐஸ் குச்சியை நக்கிக்கொண்டே வந்தான். குச்சியில் இருந்து ஐஸ் கரைந்து வலது கையின் வழியே கோடு மாதிரி வடிந்து விழுந்து கொண்டிருந்தது. அதையும் விட்டுவைக்காமல், முழங்கையில் இருந்து மேல்நோக்கி, அந்த கோடிட்ட இடத்தை சரட்டென்று நக்கிக்கொண்டான். ‘எய்யா, கீழ சிந்தாதடா…’ என்ற அனஞ்சியின் கரிசனையை அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஐஸ் இப்போது முழுவதுமாகக் கரைந்து வெறும் மூங்கில் குச்சி மட்டும் கையில் இனித்துக் கொண்டிருந்தது. அதையும் நீண்ட நேரமாக வாயில் வைத்து சூப்பிக்கொண்டிருந்த பிள்ளையாண்டன், பிறகு என்ன நினைத்தானோ, ‘போனா போவுது’ என்று வாசலில் நின்ற முருங்கை மரத்தை நோக்கி எறிந்தான். எறிந்த குச்சி, கோழி குஞ்சின் முதுகில் பட்டு, அது கொஞ்ச தூரம் ஓடி, ‘கொக் கொக்’ என்று நின்று திரும்பி பார்த்தது.

இன்னொரு ஐஸ் வாங்கலாமா என்று நினைத்து வாசலில் எட்டிப்பார்த்தான். ஐஸ்க்காரனையும் அவன் சத்தத்தையும் காணவில்லை என்றதால் மனம் மாறி வீட்டுக்குள் வந்தான். வரும் வழியில் எதிரில் இருந்த கோழிக் கூட்டின் உள்ளே இரண்டு முட்டைகள் கிடப்பதை பார்த்ததும் நின்றான். கோழி இறகுகளும் கழிவுகளும் சிதறிக்கிடந்த கூட்டுக்குள் வலது கையை விட்டான். அதிலிருந்து வந்த நாற்றம் அவனுக்குப் பழக்கப்பட்டதுதான். கூட்டின் மேலே நின்ற குஞ்சு ஒன்று, பயத்தில் தள்ளிப் போய் நின்றது. மூக்கை உறிந்துவிட்டு கைகளை வெளியே எடுத்தான். இளஞ்சூட்டோட்டு இருந்தன முட்டைகள். இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு வாசலில் நின்றபடியே, ‘ஏழா. முட்டைய பாரு’ என்று சத்தம் கொடுத்தான். வீட்டுக்குள் அரிசி புடைத்துக்கொண்டிருந்த அனஞ்சி, ‘ஒடச்சிராதல. பூபோல கொண்டா?’ என்று உத்தரவிட்டு எழுந்தாள். அவன் இரண்டு முட்டைகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு முட்டை பளீர் வெண்மையாகவும் மற்றொன்று கொஞ்சம் பழுப்பு நிறமாகவும் இருந்தது. அதெப்படி முட்டையில் இந்த மாற்றம் என்று நினைத்தபடி வந்த பிள்ளையாண்டன், அதை அம்மா கையில் கொடுத்துவிட்டு ‘எனக்கு?’ என்றான். ‘ஒனக்குதான். அவுச்சி தாரென். பச்ச முட்டை வேண்டாம்’ என்று அடுக்களைக்குப் போனாள்.

இந்த பிள்ளையாண்டனுக்குத் தூண்டி மாடன் என்ற நாமம், குடும்ப முதியோர்களால் சூட்டப்பட்டிருந்தது. தூண்டி மாடன் யார் என்பதற்கு நீண்ட புராண கதையே சொல்வாள் அனஞ்சி. புராணங்களின் பால் பேசப்பட்டதாக, கோயில் கொடை வில் கதையில் சொல்லப்படுவதாலும் முப்பாட்டன் குல வழி வந்த பெயர் என்பதாலும் மகனுக்கு அந்த நாமம் சூட்டப்பட்டிருந்ததில் அனஞ்சிக்குப் பெருமை. குழந்தைகள் தெய்வங்களுக்கு ஒப்பானவர்கள் என்பதால் தனது வளர்ந்த குழந்தையையும் குல வழி தெய்வமாக அவள் நினைத்துக்கொண்டாள். தெய்வங்கள் அபூர்வ சக்திகளை கொண்டவை. அப்படியொரு சக்தி தனது மகனுக்குள்ளும் இருக்கலாம் என நினைத்தாள். இப்படியொரு பெருமைமிகு பிள்ளையாண்டனின் போக்கில், சமீப காலமாகத் தெரிந்த மாறுதலை அவள் கண்டுகொள்ளவில்லை.

அதாவது தொழுவத்தில் பசும்பால் கறக்கும் சத்தம் கேட்டதும் படுக்கையில் இருந்து எழுந்து நேராக அனஞ்சியின் அருகில் அமர்ந்துகொள்வதும், பால் கறக்கப்பட்டதும் சொம்பில் இளஞ்சூட்டோடு இருக்கும் பாலை பிடுங்கி, வாய் வைத்து மடக் மடக்கென குடிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தான் பிள்ளையாண்டன். மகன் எவ்வளவு குடித்தாலும் அவள் கண்டுகொள்வதில்லை. தெய்வக்குழந்தைகள் வேண்டிய மட்டும் சாப்பிடலாம் என்று விட்டுவிடுவாள். இவன் இப்படி வாய் வைத்து எச்சிலாக்கிய பாலைத்தான், எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டுமோ, அவ்வளவு ஊற்றி பக்கத்து வீடுகளுக்கு விற்று வந்தாள் அனஞ்சி. வியாபாரத்தில் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாலும் அவளது அசைக்க முடியாத நம்பிக்கையாக, ‘தெய்வம் குடிச்ச பாலு மத்தவங்களுக்கு கிடைக்க, கொடுத்துலா வச்சிருக்கணும்’ என்பது இருந்தது. சிறு வயதிலேயே இப்படி பால் குடித்து வளர்ந்ததாலோ என்னவோ, உடல் ஊதத் தொடங்கியிருந்தான் அவன். அவனுக்கென்று அதிகம் சமைக்க வேண்டியிருந்தது.

காலையில் பழையச் சோறு. தாம்பூலம் வடிவ தட்டில் அவனுக்குத் தண்ணீரோடு பிழிந்து சோற்றைப் போட போட, சுண்டக் கறியோடு இறக்கிக்கொண்டிருந்தான் பிள்ளையாண்டன். கணக்கு வழக்கில்லாமல் சாப்பாடு இறங்கியது. தின்று முடித்து நீத்தண்ணியையும் குடித்த பிறகு பெரும் ஏப்பத்துடன் எழுந்திரிப்பான். இதன் பொருட்டு கொஞ்சம் பூரிப்புதான் அனஞ்சிக்கு.

தனது அண்ணன் மனைவியான செண்பகம், ‘எம் மவன் என்னத்த கொடுத்தாலும் திங்க மாட்டேங்காம் தாயி. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி காட்டலாமா?’ என்று ஆலோசனை கேட்டதை நினைத்துக் கொள்வாள் இவள். ‘கள்ளங்கபடம் இல்லாம வளருத பிள்ள நல்லாதான் வளரும்’ என்று மனதுள் நினைத்துக்கொள்வாள். அப்படியென்றால் அண்ணன் மகன் என்ன கள்ளங்கபடத்தைக் கண்டான் என்று கேட்டால், ‘அத்தாக்காரி அப்டி நெனச்சா, அது புள்ளக்கிதான வந்து விடியும்’ என்று விளக்கம் சொல்லி செண்பகத்தை வம்புக்கிழுப்பாள். அவரவர்களுக்கான நியாயங்களும் கணக்குகளும் அவரவர்களுக்கானது.

பொருளீட்டுவதற்காக, கணவனான செல்லையா கேரளாவுக்குச் சென்ற பிறகுதான் அனஞ்சிக்குப் பிரச்னைகள் ஆரம்பமானது.

‘ஒம்புருஷனாவது மாடுவோள காடு கரையில மேய்ச்சுட்டு காலங்கழிச்சான். நீ இப்படி அவுத்துவிட்டு வளத்தன்னா, எங்க வயக்காட்டுலலா வந்து விழுது? எல்லாத்துக்கும் பொறுமை இருக்கு பாத்துக்கோ. என் மவனுவோ பாத்தாம்னா எங்கயாவது கொண்டு போயி வித்துட்டு வந்துருவானுவோ’ என்று சண்முகத்தாச்சி கூப்பாடு போட்டுப் போனாள்.

‘மாடுவோள கெட்டிப் போட்டு வள. இப்படியா அவுத்து விடுவே? வயல பூரா மிதிச்சு அழிச்சுட்டு சனியம் புடிச்சதுவோ. இன்னோராட்டி வந்துச்சுன்னா, என் தொழுவுல கெட்டிருவேன். பெறவு யாரை கூட்டியாந்தாலும் முடியாது’ என்று சொல்லிவிட்டு போனாள் மூன்றாவது தெரு இசக்கியம்மாள். இப்படியாக இருந்த ஆரம்ப கால பிரச்னைகள் இப்போது இல்லை. இப்போதைய பிரச்னை வேறுவிதமாக வரத்தொடங்கியது.

ஐந்து வயதுவரை கொளு கொளு என்றிருந்த பிள்ளையாண்டனுக்கு இப்போது வயதுக்கு மீறிய வளர்ச்சி. முகம் முழுவதும் தாடி, மீசை கருநிறத்தில் கணக்கு வழக்கில்லாமல் வளரத் தொடங்கிவிட்டன. நெஞ்சின் மீது படர்ந்திருக்கிற ரோமங்கள், கருப்பு புல்வெளியாகியிருந்தன. கால்கள் புஷ்டியாகியிருந்தது. டவுசர் போட்டால் திமிறிக்கொண்டு நிற்கிற சதைகள் என திடீர் மாற்றம் கண்டிருந்தான். மகன் இப்படி பெரும் வளர்ச்சிக் கண்டிருப்பது பற்றியோ, ஒரு பதினெட்டு வயது வாலிபனுக்கு உண்டான முக மற்றும் உடல் தோற்றங்களைப் பதினோரு வயதிலேயே கொண்டிருக்கிறான் என்பது பற்றியோ, புகார் வரும்வரை அனஞ்சி ஒருபோதும் கவலை கொண்டதில்லை.

வழக்கமாக வாய்க்காலில் சின்னப்பிள்ளைகளுடன் அம்மணமாகக் குளிக்கும் பிள்ளையாண்டனை, இப்போது துணிதுவைக்கும் பெண்கள் ஆச்சர்யமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். ‘அனஞ்சியக்கா மவன்தான? இப்படியாயிட்டான்?’ என்று பேச்சுக்கள் வந்தவண்ணம் இருந்தன. மைக் செட் மந்திரம் மகன், ‘ஏல, ச்சீ. எருமைமாடு மாதிரி வளந்துட்டு அம்மணமா குளிப்பியோல? துண்டை உடுத்து’ என்று போகிறபோக்கில் அதட்டிச் சொன்னதெல்லாம் அவன் காதில் விழவில்லை. ஹி என்று சிரித்துவிட்டு அவன் போக்கிலேயே இருந்தான்.

மேலத்தெரு மோர்க்காரி மல்லிகாவும், ஓம் சக்தி கொத்தனார் பொண்டாட்டி பிரேமாவும் வாய்க்காலில் குளித்துவிட்டு, நனைந்த சேலை மற்றும் தலைமுடியுடன் அப்படியே அனஞ்சியின் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள் அனஞ்சி. அவர்களின் உரையாடல்களின் போது, அடிக்கடி மூக்கின் மேல் விரல் வைத்தும் கொண்டார்கள். ‘அப்படியா?’ என்று ஆச்சரியம் தாங்கியும் சிரித்தும் அவர்கள் முகபாவங்கள் பலவாறு மாறிக்கொண்டிருந்தன. அவர்களின் குசு குசு பேச்சில் பல விஷயங்கள், பல கதைகள் பரிமாறப்பட்டிருக்கலாம். இந்த உரையாடல் நடந்த மறுதினத்திலிருந்து டவுசரில் அலைந்த பிள்ளையாண்டன் அப்பாவின் சாரத்துக்கு (லுங்கிக்கு) மாறியிருந்தான்.

முகத்தில் மீசை அடர்த்தியாக முளைக்கத்தொடங்கி இருந்தன. இரண்டு கன்னங்களிலும் தாடி வளரும் பகுதி அலசலான கருந்துணி மாதிரி அப்பி இருந்தது. நெஞ்சு நன்றாக விரிந்து வாலிபனுக்கான தோற்றத்தைக் கொடுத்திருந்தது. தெருக்கார சொந்தங்கள், ‘ஏல ஒடம்பு நல்லா ஏறிட்டுல. வா, மம்பட்டி புடிச்சு வேலை பாத்தாதான் ஒடம்பு சரியாவும்’ என்று வயல் வேலைக்காக கிண்டலுக்கு அழைப்பார்கள். அவன் சிரித்துக்கொண்டே ஓடிவிடுவான்.

பள்ளிக்கூடத்தில் பிள்ளையாண்டனை ஒரு மாதிரியாகப் பார்க்கத் தொடங்கி இருந்தார்கள். அஞ்சாம் வகுப்பு படிக்கும் பயலாக அவன் தெரியவில்லை. அவனது தோற்றம் அவன் மீது வித்தியாசமான மரியாதையை கொடுத்திருந்தது. பிரேயரில் இவன் நின்றால் தனித்து தெரியலானான். ஏதாவது சண்டை போடுகிற பிள்ளைகள், ‘பிள்ளையாண்டன்ட்ட புடிச்சுக் கொடுத்துருவோம்’ என்று பயங்காட்டிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் இவனது காதை பிடித்தோ அல்லது தொடையை பிடித்தோ திருகுகிற ஆசிரியைகள், அவனைத் தொடவே தயங்கினார்கள். அவன் தேகம் அதற்கு அப்பாற்பட்டு இருப்பதை பார்த்து அதட்டலிலேயே இப்போது முடித்துக் கொண்டார்கள். அவன் பற்றிய கிசு கிசுக்கள் ஆசிரியைகள் மத்தியில் தாராளமாக வலம் வந்துகொண்டிருந்தன. அறியா வயதுக்காரனான அவனுக்கு இந்த கிசுகிசுக்கள் ஏதும் அறியாததாகவே இருந்தது.

உடல்ரீதியாக பிள்ளையாண்டன் இப்படி மாறியிருந்தாலும் அவன் குரலிலும் மனதிலும் மாற்றமில்லை. குரல் இன்னும் உடையாமல் சிறுவன் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது. மனமும் விளையாட்டுப் புத்தியிலேயே இருந்தன.

சாயங்கால நேரம் ஒன்றில் வழக்கம்போல ராமர் கோயில் வாசலில் பக்கத்து வீட்டு லட்சுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தான் பிள்ளையாண்டன். அப்போது அங்கு திடீரென வந்த அவளின் அம்மா, ‘இவன் கூடலாம் என்ன வெளாட்டுட்டி?’ என பொடதியில் அடித்து அழைத்துப்போனாள். ‘லட்சுமி சாப்டுட்டு வருவியா..?’ என்று பிள்ளையாண்டன் கேட்டதுக்கு, ‘மிளா கெனக்கா இருக்க, ஒனக்கு பொட்டப்பிள்ளை கூட என்னல விளாட்டு? போய் பெரிய பயலுவோ கூட விளாடு’ என்றாள் அவள் அம்மா. கூடவே மறுபக்கம் விளையாடிக்கொண்டிருந்த செல்லம்மா பிள்ளையையும் அவன் கூட விளையாடக்கூடாது எனத் திட்டி அனுப்பினாள். பிள்ளையாண்டனுக்கு முகம் சுருங்கி விட்டது. ‘ஏன் அவள் இப்படிச் சொன்னாள்?’ என்பது தெரியாமல் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு கோயில் எதிரில் இருந்த பூவரசம் மரத்தின் அடியில் உட்கார்ந்த பிள்ளையாண்டன், சேக்காளி குட்டியுடன் கோலிக்காய் விளையாடத் தொடங்கினான். வாய்க்காலில் தண்ணீர் எடுத்துவிட்டு வரும் அக்காள்கள் நின்று பிள்ளையாண்டனை அதிசயமாகப் பார்த்துவிட்டு போனார்கள். கொஞ்சம் தூரமாகச் சென்றதும் குபுக்கெனச் சிரித்துக்கொண்டார்கள். அவன் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. எதிரில் வந்த பொன்னம்மா பாட்டி, ‘ஏம்ட்டி சிரிச்சுட்டு போறியோ’ என்றதும் ‘நீ வாய்க்கால்ல பாத்தன்னு சொன்னல்லா?’ என்று கூறிவிட்டு பிறகு என்னவென்று சொல்லாமல் சிரித்தனர்.

‘ஒங்களுக்கெல்லாம் கொழுப்பு கொஞ்ச நஞ்சமில்லட்டி’ என்று பாட்டி சொன்னதும் மீண்டும் சிரித்தார்கள். பிள்ளையாண்டன் இந்த விஷயங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் கோலி விளையாடுவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகு, வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு குட்டி கிளம்பவும் பிள்ளையாண்டனும் திரும்ப வேண்டியதாயிற்று.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, ‘ஏழா’ என்று அழைத்தான் அம்மாவை. தொழுவில் மாடுகளுக்குப் புண்ணாக்கு வைத்துக் கொண்டிருந்த அனஞ்சி, ‘சொல்லுய்யா’ என்றாள் அங்கிருந்துகொண்டே. அருகில் சென்றவன் அவள் சேலை முந்தியை பிடித்துக்கொண்டான். அவள் முகத்தை ஏறிட்டு பார்த்து, ‘ஏம்ழா பொட்டப்புள்ளைலுவோல எங்கூட வெளாட விட மாட்டக்காவோ?, லட்சுமி புள்ள அம்மா, பெரிய பயலுவோ கூட வெளாடுங்கா? ய்யாங்? நீ சண்ட கிண்ட போட்டியா?’ என்றான் இங்கும் அங்கும் ஆடிக்கொண்டே.

அவன் முகத்தைப் பார்த்த அனஞ்சி, ‘நல்லா சாப்புட்டு நீ குண்டாருக்கல்லா, அதனால பொறாமைல சொல்லியிருப்பா, ஊமைக்குசும்பி. அந்த பிள்ள இல்லைனா என்னல, மத்த பிள்ளைலுவோ கூட வெளாடு. இவா மட்டுந்தான் அலுவசமா பிள்ளப் பெத்து விட்டுருக்காளா, ஊர்ல? எடுபட்டவா…’ என்று ஏச ஆரம்பித்தாள். பிறகு கொஞ்சமாகச் சாப்பிட்டுவிட்டு பிள்ளையாண்டன் திரும்பவும் ராமர் கோயில் வாசலுக்கு விளையாடச் சென்றபோது, லட்சுமி, செல்லம்மாவுடன் பாண்டியாடிக் கொண்டிருந்தாள். ஊருக்குப் புதிதாக வந்திருக்கிற சுந்தரியும் அவளது தங்கையும் அவர்களுடன் இணைந்திருந்தார்கள்.

ஆட்டத்துக்கான கட்டம் போடப்பட்டு அதில், ‘ரைட்டா, தப்பா’ என்று தொடர்ந்துகொண்டிருந்தது. ஆடிக்கொண்டிருந்த லட்சுமியிடம், ‘ஏட்டி, சப்பையாங்கும். நீ அவுட்டு பிள்ள’ என்று ரெஃப்ரி வேலை செய்துகொண்டிருந்தாள் சுந்தரி. ஓரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த பிள்ளையாண்டன் ஓடிப்போய் அவர்களின் பின் நின்று, ‘ஏப் பிள்ளேலா?’ என்றவாறு சிரித்தபோது பயந்தவர்களாக எல்லாரும் தலைதெறிக்க ஓடினார்கள். ‘ஏட்டி ஓடிருங்கெ.அவங்கூட வெளாட கூடாதாம்’ என்று பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஒடினார்கள். ஆட்டத்துக்கு ஏன் சேர்க்கவில்லை என்பது தெரியாமல் பிள்ளையாண்டன் என்கிற தூண்டி மாடன், அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘எங்க கூட நீ வெளாட வராதல’ என்ற லட்சுமியின் சத்தம் அவன் காதி்ல் விழுந்து அறைந்தது. அவர்கள் போகும் பாதையை பார்த்தவாறே ஏக்கமாக நின்றான். சிறிது நேரத்தில் அவனுக்கு அழுகை வரத் தொடங்கியது.

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்விளையாட்டு வாத்தியார் – 1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *