தொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.

This entry is part 13 of 18 in the series 3 ஜனவரி 2016

101

” அனேட்டோமி ” என்னும் உடற்கூறு மனித உடலின் அனைத்து பாகங்களையும் அறுத்துப் பார்த்து, தொட்டுத் தடவி பயிலும் ஒர் அற்புதமான பாடமாகும். ( இப்போதெல்லாம் இதற்கு போதுமான உடல்கள் கிடைக்காத காரணத்தால் பிளாஸ்டிக் பொம்மைகளையும் உறுப்புகளையும் வைத்துக்கூட பயில்கின்றனர். )
இந்த பாடம் துவக்க காலங்களில் மேல்நாடுகளில் புழக்கத்தில் வந்தபோதுகூட இறந்தவர்களின் உடல்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இது எப்படி வழக்கில் வந்தது என்பதும் சுவையானதுதான். முறையான பல மருத்துவ ஆராய்ச்சிகளைப்போன்று உடற்கூறும் மேல்நாடுகளில்தான் உருவானது.
மத்திய காலங்களில் ( Middle Ages ) கத்தோலிக்க திருச்சபைதான் ஐரோப்பியா முழுதும் பரவியிருந்தது. அதற்குக் காரணம் ரோமர்கள் ஐரோப்பியாவைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்ததே. அதன்பின்பு அது புனித ரோம சாம்ராஜ்யம் ( Holy Roman Empire ) என்றே அழைக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே புனித போப்பாண்டவரின் ஆணைக்குக் கட்டுபட்டிருந்தன. அனைத்து அரசர்களும்கூட போப்பாண்டவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுதான் இயங்கினர். அப்போது அவருக்கு அவ்வளவு பெரிய செல்வாக்கு. அவர் கூறுவதுதான் வேதவாக்கு. மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்தச் சபை உருவாகாத காலமாதலால் கத்தோலிக்கத் திருச்சபைதான் ஒரே திருச் சபையாக ஐரோப்பிய நாடுகள் முழுதும் பரவியிருந்தது.
கடவுளால் படைக்கப்பட்டது மனித உடல் என்பதால் அதை அறுக்கவோ இரத்தம் சிந்தவோ திருச்சபை தடை விதித்திருந்தது. மனிதனின் இரத்தமும் புனிதமாகக் கருதப்பட்டது. இதை 1163 ஆம் இது திருச்சபையால் சட்டமாகவே இயற்றப்பட்டது. அதற்கு டூர்ஸ் சட்டம் ( Edict of Tours ) என்று பெயர். அதில் ” திருச்சபை இரத்தம் சிந்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது ” என்று கூறப்பட்டது. அது நடைமுறையில் இருந்தபோது, இரண்டு நூற்றாண்டுகள் கழித்து போப்பாண்டவர் போநிபேஸ் V 111 என்பவர் ஓர் அறிக்கை விடுத்தார்.
” மனித உடலை அறுப்பதும், உடலின் பகுதிகளைக் கொதிக்கவைத்து எலும்புகளை எடுப்பதும் திருச்சபையால் தடைசெய்யப்படுகிறது ” என்பதே அது.
அதுபோன்ற கடுமையான தடைகளால் உடற்கூறும் அறுவைச் சிகிச்சையும் வளர்ச்சியின்றி தடைப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் அறுவைச் சிகிச்சையை உடற்கூறு பற்றி ஒன்றுமே தெரியாத முடி வெட்டுபர்களும் தூக்குத்தூக்கிகளும் செய்துவந்தனர். இவர்களை அன்றைய சமுதாயம் கேவலாமாக மதித்து ஒதுக்கியது.அறுவை சிகிச்சை என்பது மிகக் கேவலாமான தொழிலாகக் கருதப்பட்டது. படித்த மரியாதைக்குரிய யாரும் இத்தகைய ” கேவலமான ” தொழிலைச் செய்ய மாட்டார்கள் – திருச்சபையின் கட்டுப்பாட்டை மீற துணிச்சல் இருந்தாலும்! திருச்சபை சர்வ வல்லமையுடன் இயங்கியதால் துணிச்சல் உள்ளவர்களும் தயங்கவே செய்வர்.
மத்திய காலங்களின் பிற்பகுதியில் நிலைமை ஒருவாறு மாறியது. இது மருத்துவ வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் திருப்புமுனை!
அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவம் மட்டும் செய்வதற்கும் உடற்கூறின் அடிடிபடை பற்றி கொஞ்சமாவது தெரிந்துப்பது அவசியம் என்பதை அப்போதுதான் திருச்சபை உணர்ந்து, கட்டுப்பாட்டைக் கொஞ்சம் தளர்த்தியது. அதன் முடிவாக அவ்வப்போது ஒருசில உடல்களை அறுத்துப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் அதற்கான உடல்கள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளின் உடல்கள்தான் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அதிலும் மதச் சடங்குகள் தேவைப்பட்டது. தூக்கிலிடுமுன் அத்தகைய குற்றவாளிக்கு சிறப்பு ஜெபங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டன. அவன் இறந்தபின் அவனுடைய உடல் அடையப்போகும் சிதைவுகள் காரணமாக ஆண்டவரிடம் மன்றாட்டுகள் செய்யப்பட்டன. அத்தகைய மதச் சடங்குகள் முடிந்ததும் அவன் தூக்கிலிடப்படுவான். பின்பு அவனுடைய பிரேதம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
பல்கலைக்கழகம் உள்ளூர் பிரமுகர்கள் , மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு அழைப்பு விடுக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் வந்து அவர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தபின்பு, மனித உடலை உடற்கூறு காரணமாக அறுத்து பார்க்கலாம் என்னும் போப்பாண்டவரின் ஆணை உரக்க்க வாசிக்கப்படும். பல்கலைக்கழகத்தின் முத்திரை அந்த உடலில் பதிக்கப்படும்.
உடலை அறுக்குமுன் முதலில் தலை துண்டிக்கப்படும். அப்போதெல்லாம் மூலையில்தான் ஒருவனின் ஆத்மா உள்ளதாக கிறிஸ்த்துவர்கள் நம்பியதால் மூளையைப் பார்க்கக்கூடாது என்று அவ்வாறு தலையை தனியாக அகற்றி வைத்துவிடுவார்கள். அதைத் தொடர்ந்து அறிமுக உரையை ஒரு மருத்துவர் நிகழ்த்துவார். பின்பு அனைத்து மருத்துவர்களும் ஒன்றாக ஒரு கீர்த்தனையைப் பாடுவார்கள்.
அறுவை செய்ய வேண்டிய தலைமை மருத்துவர் பிரேதத்தைத் தொடமாட்டார். அங்கு பணிபுரியும் ஓர் ஊழியன்தான் பிரேதத்தின் நெஞ்சிலிருந்து அடி வயிறுவரை கத்தியால் கிழித்து இரண்டாகப் பிளந்துவிடுவன். பிரேதத்தின் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு கேலன் ( Galen ) என்பவர் எழுதியுள்ள உடற்கூறு நூலிலிருந்து உரக்க படித்தபடி அந்தந்த உறுப்புகளை ஒரு குச்சியால் காட்டுவார் தலைமை மருத்துவர். கூடியுள்ள அனைவரும் ஆர்வத்துடன் உடலின் உறுப்புகளைக் கண்டு ” இரசிப்பார்கள் “.
அறுவை நிகழ்ச்சி அத்துடன் நிறைவு பெறாது. வந்துள்ள விருந்தினருக்கு ஆடல் பாடல், நாடகம் நிறைந்த கலைநிகழ்ச்சியும், இரவு விருந்தும் அளிக்கப்படும். ஆர்ப்பாட்டம் நிறைந்த இந்தக் ” கொண்டாட்டங்கள் ” அடுத்த நாளும் தொடரும். பின்பு , சிதைந்துபோன அந்த உடல் சகலவிதமான மதச் சடங்குகளுடன் கல்லறையில் புதைக்கப்படும்!
உடற்கூறு கல்வி அத்துடன் பிரபலமாகிவிடவில்லை. காரணம் போதிய பிரேதங்கள் கிடைக்காததே. ஆனால் அதில் ஆர்வம் கண்ட மருத்துவர்கள் அதை விடுவதாகவும் இல்லை. பதினேழாம் நூற்றாண்டில் ரொண்டலெட் என்னும் உடற்கூறு பேராசிரியர் பிரேதம் கிடைக்காத காரணத்தால் இறந்துபோன தன்னுடைய பிள்ளையின் உடலையே அறுத்து தன் வகுப்பில் பாடம் நடத்தியுள்ளார்.
என்னதான் போப்பாண்டவர் மனித உடலை அறுத்துப் பார்த்து உடற்கூறு பயில அனுமதி தந்தபோதிலும் மக்களில் ஒரு சாரார் அதை எதிர்க்கவே செய்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்கூட அமெரிக்காவில் பில்லடல்பியா பல்கலைக்கழகத்தின் உடற்கூறு பாடம் நடைபெறும் கட்டிடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.
இத்தகைய எதிர்ப்புகள் தொடர்ந்தபோதிலும் உடற்கூறு பயலும் ஆர்வம் மருத்துவர்களிடையே குறைந்தபாடில்லை. அதே வேளையில் பிரேதங்கள் கிடைப்பதுதான் குதிரைக் கொம்பாக இருந்தது.
எப்போதுமே எது அதிகம் தேவையோ அதற்கு விலையும் அதிகமாகும். இதைப் பயன்படுத்தி உடல்களை விற்கும் வியாபாரமும் துவங்கியது. இதில் ” புகழ் ” பெற்ற இரண்டு பேர்கள் கிடுகிடுவென்று ” பிரபலமானார்கள் “. அவர்கள் இருவரும் கேம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்த வில்லியம் ஹாரி, வில்லியம் புர்க்கி என்பவர்கள்.1827 இல் இவர்கள் இருவரும் கூட்டாக பிரேதங்களை தேடிபிடித்து பல்கலைக்கழகங்களுக்கு விற்கும் தொழில் தொடக்கினர்.அவர்கள் இருவரும் இரவு நேரங்களில் பிரேதங்களை எடின்பர்க் பலகளைகழகத்தின் உடற்கூறு பிரிவுக்கு பிரேதங்களைக் கொண்டு வந்து தந்து ஒரு பிரேதத்துக்கு பத்து பவுண்டுகள் வீதம் வாங்கினர். நாளடைவில் பேராசை பெரு நஷ்டமானது.வீதியில் திரியும் சாதாரண மனிதர்களைக் கொன்று விற்பதையே அவர்கள் தொடந்திருக்கலாம். ஆனால் இரவில் வீதியில் பவனிவரும் மேரி பேட்டர்சன் என்னும் ” புகழ்பெற்ற ” எடின்பர்க் நகரின் விலைமாது காணாமல் போனதுதான் அவர்களைக் காட்டித்தந்தது. காவல் துறையினரின் விசாரனை அவர்களிடம் இட்டுச் சென்றது. இருவரும் கைது செய்யப்பட்டனர். உடன் வில்லியம் ஹாரே அரசாங்க சாட்சியாகி குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு வில்லியம் புர்க்கியையும் காட்டிக்கொடுத்தான். விசாரணையின்போது முப்பத்திரண்டு பேர்களை கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்துள்ளனர் என்பது அம்பலமானது. வில்லியம் புர்க்கி தூக்கிலிடப்பட்டான்!
இத்தகைய வரலாற்று பின்னணியும் சிறப்பும் கொண்ட உடற்கூறு பயிலப்போகும் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவனாக அன்று நான் அந்தப் பிரேதங்களைப் பார்த்தபடி நின்றேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபுத்தகங்கள் ! புத்தகங்கள் !! ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )இன்று இடம் உண்டு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    முனைவா் பு.பிரபுராம் says:

    உடல் கூறு அறிவியல் பற்றிய அாிய செய்தி.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    நன்றி முனைவர் பு. பிரபுராம் அவர்களே.அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *