தொடுவானம் 146. காணி நிலம் வேண்டும்…

This entry is part 19 of 23 in the series 27 நவம்பர் 2016

தேர்வுகள் நெருங்கிவிட்டது.

இரவு பகலாக கண்விழித்து படிப்பில் கவனம், செலுத்தினோம். வரக்கூடிய வினாக்கள் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பாடநூல்களில் முக்கிய வரிகளைக் கோடிட்டு வைத்தோம். வெள்ளைத் தாள்களில் குறிப்புகள் எழுதிக்கொண்டோம். மனப்பாடம் செய்ய வேண்டிய குறிப்புகளை சிறு சிறு அட்டைகளில் எழுதி சட்டைப் பயில் வைத்துக்கொண்டு கல்லூரி பேருந்தில் மருத்துவமனை செல்லும் வேளையிலும், உணவு அருந்தும்போதும் வெளியில் எடுத்து பார்த்துக்கொள்வோம்.

தேர்வுகள் வந்தன. எழுத்துத் தேர்வுகளை கல்லூரியிலேயே எழுதினோம். நான் நன்றாகத்தான் எழுதினேன். ஆனால் சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும் தேர்வில் ஒரு கேள்விக்கு திருப்திகரமாக பதில் எழுதவில்லை. அது மனதை உறுத்தியது. நுண்ணுயிரி  இயல், கண்ணியல், மருந்தியல், சமூக மருத்துவம் ஆகிய தேர்வுகளில்  நன்றாகச் செய்தென்.

தேர்வு முடிவுகள்  வெளிவர ஒரு மாதம் ஆகும். நீண்ட விடுமுறை. நான் உற்சாகத்துடன் ஊருக்குப் புறப்பட்டேன். தெம்மூரிலும் தரங்கம்பாடியிலும்  விடுமுறையைக் கழிக்க முடிவு செய்தேன். ஏனோ தெரியவில்லை தாம்பரம் செல்ல ஆர்வம் இல்லை.

வழக்கம்போல் நான் திருப்பதி – இராமேஸ்வரம் துரித பிரயாணிகள் புகைவண்டிமூலம் வேலூர் கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து புறப்பட்டேன். அது மாலை நேரம். கையில் ஒரு தமிழ் நாவலுடன் சன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு வெளியில் இயற்கையின்  எழிலை இரசித்தவாறு நாவலில் மூழ்கினேன். ஓய்வு உறக்கமின்றி எந்நேரமும் படிப்பு படிப்பு என்றிருந்த நிலை மாறி இப்படி ஒய்யாரமாக இரயில் பயணம் செய்வது மனதுக்கு ரம்மியமாகவே இருந்தது.

அதிகாலையில் சண்முகம்  இரயிலடி வந்திருந்தார். வண்டி அருகில் படுத்திருந்த எங்கள் வீட்டு காளைகள் எழுந்து நின்று என்னை வரவேற்றன  சிதம்பரம் கோவிலிலி ருந்து பக்தி கீதங்கள் ஒலித்தன. சில பக்தர்கள் அதிகாலையிலேயே ஆற்றில் குளித்துவிட்டு கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். சிதம்பரம் கடைத்தெருக்கள் இன்னும் வெறிச்சோடிக் கிடந்தன.ஒருசில தேநீர்க் கடைகள் மட்டும் திறந்திருந்தன. நாங்கள் வண்டியை ஓரங்கட்டிவிட்டு சூடாக தேனீர் பருகினோம்.

சிதம்பரத்தை  விட்டு வெளியேறினோம். வயல்வெளிகள் பனியால் படர்ந்திருந்தன. கதிர்கள் நனைத்து சாய்த்திருந்தன. குளிர் காற்று சில்லென வீசியது. காளைகள் இரண்டும் அதைப் பொருட்படுத்தாமல் ஜல் ஜல்  என்று சலங்கைகள் ஒலிக்க வீடு நோக்கி சவாரி செய்தன.

பால்பிள்ளை வீட்டில் காத்திருந்தான். இருவரும் ஆற்றுக்கு குளிக்கச்  சென்றோம்.செட்டியார் வயல் வரப்பு வழியாக மேற்கே சென்றோம். செட்டியார் வயல் என்பது எங்களுடையது. அதனுடன் சேர்ந்து வீதி ஓரமாக ஒரு செட்டியார் குடும்பம் முன்பு இருந்தது. அவர் அங்கு நிறைய தென்னை மரங்கள் வைத்திருந்தார். அவற்றிலிருந்து எடுக்கும் தேங்காய்களை அவர் தோட்டத்திலேயே செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்து விற்பார். அவர் வீட்டொடு சேர்ந்தமாதிரி ஒரு மாளிகைக் கடையும் வைத்திருந்தார். அவர் எங்கள் ஊரை விட்டு வெளியேற எண்ணியபோது, அம்மாவிடம் அவர் மனையையும் நிலத்தையும் விற்க ஆசைப்பட்டார். அம்மா அப்பாவுக்கு அதைத் தெரிவித்து பணம் அனுப்பப் சொல்லி அதை வாங்கிக்கொண்டார். ( அந்த மனையில்தான் இப்போது நான் வீடு கட்டியுள்ளேன் ) அதன்பிறகு அந்த நிலத்தை செட்டியார் வயல் என்றே அழைப்பதுண்டு.

” பால்பிள்ளை.நாம் பசியாறியபின்பு நம் வயல்களைச் சுற்றிப்பார்க்க போவோம் . ” என்றேன்.

” சரி அண்ணே. அம்மாவுக்குத் தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படும். நாம் முதலில் கிழக்கு வெளிக்குச் செல்வோம். அதுதான் தூரம். வெயில் ஏறுவதற்குள் நடந்து சென்று விடுவோம். மாலையில் மேற்கு வெளிக்கு போவோம். ” என்றான்.

பால்பிள்ளைக்கு எங்களுடைய வயல்கள் அனைத்தும் அத்துப்படி. அவன் அம்மாவுக்கு வயல் வேலைகளில் உதவி வந்தான். பண்ணை ஆட்கள் இருந்தாலும் பால்பிள்ளை கடமை உணர்வுடன் எங்களில் ஒருவனாகவே வளர்ந்து வருகிறான். அவன் எனக்கு பக்கத்து வீடுதான். நான் ஊருக்கு வந்துவிட்டால் எந்நேரமும் என்னுடன்தான் இருப்பான்.

நாங்கள் குளித்துவிட்டு வீடு திருப்பியதும் கோழிக்குழம்பு வாசனை கமகமத்தது. அதிகாலையிலேயே அம்மா சமையலில் ஈடுபட்டுவிட்டார். சூடாக தோசையும் கோழிக்கறியும் உட்கொண்டோம்.

தலைக்குத் துண்டை எடுத்துக்கொண்டு கீழவெளி  நோக்கி நடையிட்டோம். வரப்பு வழியாக சின்னத்தெரு அடைந்தோம். அங்கிருந்து மீண்டும் வரப்பு  வழியாக நடையிட்டோம். இரு மருங்கிலும் செழிப்புடன் விளைந்திருந்த நெற்கதிர்கள் ஒரே திசையில் தலைசாய்ந்திருந்தன. பனியின் கனம்  இன்னும் போகவில்லை.

தொலைவில் ஆண்டவர் கோவில் தெரிந்தது. எனக்கு கோகிலத்தின் நினைவு வந்தது. அவள் உயிர் துறக்கும் முதல் நாளில் அவளை அந்தக் கோவிலினுள் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவள் பாடிய சோக கீதமும், கூக்குரலிட்டுக் கதறியதும் செவிகளில் ஒலித்தது.

” என்ன அண்ணே? கோகிலத்தின் நினைவா?” பால்பிள்ளை என்னை நிதானத்துக்குக் கொண்டுவந்தான்.

” ஆமாம் பால்பிள்ளை. அதை எப்படி மறக்க முடியும்? வாழ்க்கையில் ஒரு முறை வந்து போனவள். அவளைப் போல் அன்புக்காக உயிரையே விட இனி  யாரால் முடியும்? கோகிலம் இறந்துபோனாலும் என் நினைவில் என்றும் வாழ்வாள்.” பேசிக்கொண்டே ஆண்டவர் கோவிலை அடைந்தோம். அங்கு ஒரு கணம் நின்றேன். உள்ளே சென்றும் பார்த்தேன். இருட்டாக இருந்தது. வெளியில் வந்தபோது பால்பிள்ளை என்னை ஆச்சரியத்துடன் பார்த்தான்.
வரப்பின் வழியாகத் தொடர்ந்து நடந்து சுடலையை அடைந்தோம். அங்குதான் கோகிலத்தின் உடலை எரித்தார்கள். அங்கும் அவளின் சோக நினைவுதான்.

அங்கிருந்து கட்டை வண்டிகள் செல்லும் வயல்வெளிப் பாதையில் நடந்து சென்றோம். ஆங்காங்கே களத்து மேடுகள் செப்பனிடப்பட்டிருந்தன. அங்குதான் நெல் கட்டுகள் சேர்க்கப்படும். பின்பு அதை அடித்து நெல் எடுத்து அங்கேயே வைக்கோல் போர்களும் எழும்பும். கோணி சாக்குகளில் நெல் மூடடைகள் கட்டி மாட்டு வண்டிகளில் ஏற்றி வீடு வந்து சேரும். அக்காலத்தில் அறுவடை செய்யும் இயந்திரங்களும், நெல் சேகரிக்கும் இயந்திரங்களும்  வழக்கில் இல்லை. கூலியாட்கள்தான் அறுவடை செய்வார்கள். அந்த களத்து மேட்டு வேலை காலங்களில் களத்தின் ஓரத்தில் குச்சி என்னும் சிறு குடிசைகள் போட்டுக்கொள்வார்கள். மூங்கில் கழிகளை வளைத்துக் கட்டி அதன்மேல் கோணிப்பைகளை போட்டுவிட்டால் அது குச்சி ஆகிவிடும். தரையில் வைக்கோல் பரப்பி அதன்மேல் துணியை  விரித்து விடுவார்கள். களத்து மேட்டில் நெல் மூட்டைகள் இருந்தால், அவற்றைக் காவல் புரிவோர் இரவில் அந்த குச்சியில்தான் கழிப்பார்கள். எங்கள் வயல்களில் அறுவடை நடக்கும்போது அம்மாதான் மதிய உணவு கொண்டுவருவார். நான்கூட சிறு வயதில் அந்த குச்சியில் அமர்ந்து உணவு உண்டபின் படுத்து உறங்குவேன்.

நாங்கள் கட்டாந்தரையில் நடந்து முன்னேறினோம். இறுதியாக எங்களுடைய களத்து மேட்டுக்கு வந்தோம். அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலும் கருவேல் முள் மரங்களும், கள்ளிச் செடிகளும் அங்கு வளர்ந்திருக்கும். ஒவ்வொரு அறுவடைக் காலத்தில் அந்த இடத்தைச் செதுக்கி சுத்தம் செய்துகொள்வோம்.

எங்கள் களத்து மேட்டின் அருகில் ஆறு உள்ளது. அதன் குறுக்கே பெரிய கருவேல் மரம் போடப்பட்டுள்ளது. அதன்மீது நடந்து ஆற்றைத் தாண்டினோம். அங்குதான் எங்களுடைய வயல்கள். இவற்றை நாங்கள் கிழக்கு வெளி வயல்கள் என்று அழைப்போம். இவை தாத்தா காலத்திலிருந்து எங்களுடைய பூர்வீகம். இங்கே காணிகள் என்று வயல்களை அழைப்போம். மொத்த காணிகளில் பங்கு போட்டபோது பெரியப்பாவுக்கு இரண்டு காணிகளும், அப்பாவுக்கு இரண்டு காணிகளும், அத்தைக்கு ஒரு காணியும் கிடைத்தன. தாத்தா ஒரு காணியை வைத்துக்கொண்டார்.

அப்பா சிங்கப்பூரிலிருந்து பணம் அனுப்பி மேலும் இரண்டே முக்கால் காணியை பாப்பாக்குடியார் என்பவரிடமிருந்து வாங்கி மொத்தம் நான்கே  முக்கால் காணிக்கு சொந்தக்காரர் ஆனார். இது தவிர தாத்தாவுக்கு மேற்கு வெளியில் நான்கு காணிகள் இருந்தன. அதையும் பங்கு போட்டதில் அப்பாவுக்கு இரண்டு காணிகள் கிடைத்தன. ஆக மொத்தம் அப்பாவுக்கு ஆறே முக்கால் காணிகள் இருந்தன. அம்மா செட்டியாரிடம் இருந்து முக்கால் காணி வாங்கியது. அதையும் சேர்த்தால் எங்களுக்கு மொத்தம் ஏழரை  காணிகள் இருந்தன.

தாத்தாவின் நேரடிப் பார்வையில்தான் அனைத்து காணிகளும் இருந்தன. அம்மாவும் உடன் உதவினார். தாத்தாவுக்கு வயதானபின்பு அம்மா முழுப் பொறுப்பையும் ஏற்று சிறப்பான முறையில் பண்ணை ஆட்களை வைத்து நிர்வாகம் செய்தார்.  பெரியப்பா மலாயாவிலுருந்து ஊர் திரும்பியபின்பு அவருடைய பங்கை அவர் கவனித்துக்கொண்டார். எங்களுடையதை அம்மா பார்த்துக்கொண்டார்.இதில் அண்ணன் தலையிடவில்லை. அவர் தரங்கம்பாடியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்ததோடு சரி. விவசாயத்தின் மீது அவ்வளவு நாட்டம் கொள்ளவில்லை. எனக்கு எப்படியோ நிலங்களின் மீது அப்போதே பற்று உண்டானது.

          ” காணி நிலம் வேண்டும் – பராசக்தி
             காணி நிலம் வேண்டும் ”  என்று மகாகவி பாரதி கனவு கண்டார். அப் பாடலை சிதம்பரம் ஜெயராமன் மிகவும் இனிமையாகப் பாடுவதைக் கேட்டு நான் இரசித்ததுண்டு. எனக்கு உண்மையிலேயே காணிகள் உள்ளன. அவற்றைப் பராமரித்துக் காக்கவேண்டும் என்ற ஆவல் என் மனதில் பதிந்திருந்தது!

நம் முன்னோர்கள் இந்த நிலங்களை நம்பியே வாழ்ந்தவர்கள். விளைச்சலில் வரும் நெல்லில் உணவு போக, விதையும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளதைச் சேர்த்துவைத்துதான் புதிதாக நிலங்களையும் வாங்கியிருப்பார்கள். அவர்களின் வழிவந்த பூர்விக நிலங்களை விற்றுவிடுவது சுலபம். அவர்களின் நினைவாக நாம் வைத்திருப்பது சிறப்பானது. அதனால்தான் பால்பிள்ளையுடன் தாத்தா சம்பாதித்து வைத்திருந்த நிலங்களைக் காண வந்துள்ளேன். கிழக்கு வெளி நிலங்களை சுற்றி வரப்புகள் மீது நடந்து சென்று பார்த்தேன். அவை செழிப்பாக விளைந்திருந்தன.நல்ல மகசூல் கிடைப்பது திண்ணம்.

மன நிறைவுடன் வீடு திரும்பினோம். மதிய  உணவு உண்டபின் திண்ணையில் படுத்து உறங்கினேன். சிலுசிலுவென்று வேப்பங் காற்று! நல்ல நித்திரை.  தூங்கி எழுந்தபின்பு மாலையில் மேற்கு வெளி நிலங்களைப் பார்த்துவிடலாம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஉயிரோடைத் தமிழ் மக்கள் வானொலிகம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *