தொடுவானம் 154. இறுதித் தேர்வுகள்.

This entry is part 1 of 13 in the series 22 ஜனவரி 2017
தொடுவானம்

டாக்டர் ஜி. ஜான்சன்

          154. இறுதித் தேர்வுகள்.

Untitled-11          ஆவலோடு எதிர்பார்த்திருந்த எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் வந்தன. தேர்வு என்றாலே யாருக்கும் ஒருவிதமான பயம் இருக்கும். அதை ஆவலோடு யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் என் நிலைமையே வேறு. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று உடன் ஒரு மருத்துவன் ஆகவேண்டும் என்ற ஆவலே அதற்குக் காரணம்.

திருப்திகரமாக தேர்வுக்கு தயார் செய்திருந்தேன். பாட நூல்களை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை படிக்கவில்லையென்றாலும் வரக்கூடிய வினாக்களுக்கு போதுமான வகையில் திரும்பத் திரும்பப் படித்தும் எழுதியும் தயார் செய்திருந்தேன். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட நூல்கள் என்பதால் எல்லா பக்கங்களையும் படிப்பது என்பது இயலாத காரியம்.

இந்த நேரத்தில் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு காரியம் நினைவில் வந்தது. ஒரு பாடத்தில் எண்பது மதிப்பெண்கள் கிடைத்தால் பாட நூலில் எண்பது சதவிகிதப் பக்கங்களைத்தான் நான் படித்துள்ளதாகக் கூறி கடிந்து கொள்வார். இது ஏற்புடையது அல்ல. சிலர் நூல் முழுவதையும் படிக்காமலேயே தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். வேறு சிலரோ நூல் முழுவதையும் படித்தும் தோல்வி அடைந்துவிடுவதும் உண்டு. அது கேட்கப் படும் வினாக்களையும் தேர்வு எழுதும்போது உள்ள மனநிலையையும் பொருத்துள்ளது. கேள்விக்கு நாம் நன்றாகத் தயார் செய்திருந்தாலும் தேர்வு எழுதும் வேளையில் மனநிலை சரியில்லையெனில் பதில் தெரிந்திருந்தாலும் சரிவர எழுத்தமுடியாமல் போய்விடுவதுண்டு. தேர்வின் முதல் நாள் இரவு பதட்டத்துடன் விடிய விடிய படிப்பது நல்லதல்ல.அதற்கு மாறாக நன்றாகத் தூங்கிவிட்டு காலையில் உற்சாகமாக திடமனத்துடன் நம்பிக்கையுடன் தேர்வு எழுதச் செல்வதே மேல். அப்போது படித்ததை நினைவில் கொண்டுவர இயலும். நான் இத்தகைய முறையைத்தான் ஒவ்வொரு தேர்வின்போதும் கடைப்பிடிப்பேன்.

எழுத்துத் தேர்வுகள் மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளிலும் ஒரு பாடம். முதல் நாள் மருத்துவம். இரண்டாம் நாள் அறுவை மருத்துவம். மூன்றாம் நாளில் பிரசவமும் மகளில் நோய் இயல். மொத்தம் இரண்டு மணி நேரம் தரப்படும். அதற்குள் ஆறு கேள்விகளுக்கு பதில் எழுதிவிடவேண்டும். அவற்றில் ஐந்து கேள்விகளுக்கு நீண்ட பதில்கள் எழுத  வேண்டும். சுமார் நான்கு பக்கங்கள் எழுதலாம். ஆறாவது  கேள்விக்குள் நான்கு சிறு கேள்விகள் அடங்கியிருக்கும். அதில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு பக்கங்கள் பதில் எழுதினால் போதுமானது. அல்லது ஒரு பக்கத்திலேயே முடித்துக்கொள்ளலாம்.

தேர்வு நாள். காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்துகொண்டு உற்சாகமாக புறப்பட்டேன். தேர்வு கல்லூரியின் தேர்வுக் கூடத்தில் நடைபெறும். சம்ருதியும் நானும் பேசிக்கொண்டே செம்மண் சாலையில் நடந்து சென்றோம். வகுப்பு மாணவர்களும் உடன் வந்தனர். பெண்கள் விடுதியில் வகுப்புப் பெண்கள் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். தேர்வுக்கூடம் அடைந்ததும் நாங்கள் கை குலுக்கி வாழ்த்து கூறினோம். அது புது தெம்பைத் தந்தது.

தேர்வுக் கூடத்தில் அனைவரும் அமர்ந்தோம். அச்சன் ஊமன் எங்களுக்காக ஜெபம் செய்தார். நாங்கள் கண்களை மூடி தியானித்தோம். வினாத்தாள்கள் தரப்பட்டன. நான் அதை நோட்டமிட்டேன். பரவாயில்லை போன்ற தோன்றியது. ஆனால் நீண்ட பதில் எழுதவேண்டிய ஒரு கேள்வி கொஞ்சம் சிக்கலாக இருப்பதுபோல் தோன்றியது.அதை கடைசியில் எழுதலாம் என்று முடிவு செய்தென். நநன்றாகத் தெரிந்த பதில்களை முதலில் எழுதி முடித்துவிட்டால், சிக்கலான கேள்வியை  எழுத நேரம் எடுத்துக்கொள்ளலாம்.இது ஒரு நல்ல வியூகம். நேரத்துடன் எல்லா வினாக்களுக்கும் பதில் எழுதி முடிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது.

நான் ஒரு அழகான முன்னுரையுடன் முதல் கேள்விக்கு பதில் எழுதலானேன். விடைத் தாளைத் திருத்துபவரை என்னுடைய பதிலின் முதல் வரியிலேயே கவரவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நான் கதைகள் எழுதும் பழக்கம் கொண்டவன். அதனால் இது எனக்கு கைகொடுத்தது. முதல் பத்தியை அவர் படித்ததும் என் மீது அவருக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகும் அல்லவா? அதுபோன்றே கடகடவென்று ஐந்து வினாக்களுக்கும் பதில்களைத் தங்கு தடை இல்லாமல் எழுதிவிட்டேன். இறுதியாக அந்த சிக்கலான கடைசி வினாவுக்கு வந்தேன். அது நரம்பியல் தொடர்புடையது. மருத்துவப் பாடத்தில் நரம்பியல்த்தான் சிரமமானது. உடல் உறுப்புகளில் நம் மூளை எவ்வளவு முக்கியமானதோ அதுபொன்றே அதைப் படித்து புரிந்துகொள்வதும் கடினமானதே!

என்னை தடுமாற வைத்த அந்த வினா சிரிங்கோமைலியா ( Syringomyelia ) என்பது. இது முதுகுத்தண்டு நரம்புக் கற்றையைச் சுற்றிலும் நீர் தேக்கமுற்று அந்தப் பகுதியில் அழுத்தத்தை உண்டுபண்ணுவது.  இது பற்றி நான் படித்துள்ளேன். ஆனால் இது வினாவாக வரலாம் என்று நான் சரிவர தயார் செய்யவில்லை. அதனால்தான் இந்த சிக்கல். இருப்பினும் கொஞ்சம் யோசித்தால் நினைவில் வரும். கூடுமான வரையில் நினைவில் வந்ததையெல்லாம் எழுதினேன். தேர்வு நேரம் முடியும் வேளை நெருங்கிவிட்டது. பதட்டப்படாமல் எழுதி முடித்தேன். ஆனால் எனக்கு அதில் அவ்வளவு திருப்தி இல்லைதான். என்ன செய்வது. வேறு வழியில்லை. இன்னும் நேரம் கிடைத்தால்கூட அதற்குமேல் வேறு எதையும் நினைவில் கொண்டுவர இயலாது!

பதில் தாள்களை தேர்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினேன். சம்ருதி எனக்காக காத்திருந்தான். வினவினான். நான் அந்த கேள்வி பற்றி சொன்னேன். அவனுக்கும் ஒரு கேள்வியில் தடுமாற்றமாம். ஒத்த நண்பர்கள் என்பது இதுதானா? நேராக மூலை கடைக்குச் சென்று குளிர்பானம் அருந்தினோம். பின்பு மெல்ல நடந்து விடுதி சென்றோம்.

மருத்துவ நூலில் சிரிங்கோமைலியா பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.அதில் சிலவற்றை நான் எழுதவில்லை என்பது தெரிந்தது. சரி பரவாயில்லை. எழுதியவற்றில் தவறுகள் இல்லை. இனி அதுபற்றி கவலை கொள்வதில் அர்த்தமில்லை. இனி அறுவை மருத்துவம் தேர்வுக்கு கடைசி நேர தயாரிப்பில் ஈடுபடுவதே நல்லது என்று அறுவை மருத்துவ நூலை கடைசியாக ஒரு முறை புரட்டினேன். இரவு உணவுக்குப்பின் நன்றாக தூங்கினேன். நாளை அறுவை மருத்துவத் தேர்வு.

மருத்துவத்தை விட அறுவை மருத்துவம் இன்னும் கடினமானது. அதற்கு திருப்திகரமாகத்தான் தயார் செய்திருந்தேன்.

இரண்டாம் நாள் தேர்வு. ஆறு கேள்விகளையும் நோட்டமிட்டேன். அனைத்தும் எனக்கு சுலபமாகவே தோன்றியது. வரிசைப்படி பதில் எழுதினேன். எழுதியபின் நேரம் இருந்தது. பதில்களை ஒரு முறை படித்துப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. பதில் தாள்களைத் தந்துவிட்டு வெளியேறினேன். சம்ருதி காத்திருந்தான். அவன் எனக்கு முன்பே வெளியேறிவிட்டான். சுலபமாக இருந்தது என்றான். நானும் அவ்வாறே கூறினேன். குளிர் பானம் அருந்தினோம். விடுதி திரும்பினோம்.

அன்று இரவு  பிரசவமும் மகளிர் நோய் இயலும் பாட நூல்களைப் புரட்டினேன். இரவு உணவுக்குப் பின்பு நன்றாக நிம்மதியாகத் தூங்கினேன்.

மூன்றாம் நாள். இன்று கடைசித் தேர்வு. இதை முடித்துவிட்டால் நிம்மதி. சம்ருதியுடன் சித்தூர் சென்று கொண்டாடலாம். அது ஆந்திராவில் உள்ளது. அங்கு மதுவிலக்கு இல்லை!

பிரசவமும் மகளிர் நோய் இயல் வினாத் தாள் சுலபமாக இருந்தது.  ஆறு கேள்விகளுக்கும் நிதானமாக பதில் எழுதினேன். எழுதி முடித்தபின்பு ஒருமுறை படித்துப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. தேர்வு நேரம் முடியுமுன்பே வெளியேறினேன். சம்ருதி வழக்கம்போல் காத்திருந்தான். குளிர் பானம் அருந்திவிட்டு மகிழ்ச்சியுடன் விடுதி திரும்பினோம். எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டோம். இது வாழக்கையில் நடந்துள்ள பெரிய சாதனை! அன்று மாலையே சித்தூர் புறப்பட்டுவிட்டோம் கொண்டாடுவதற்கு!

          இனி ஒரு வாரம் வகுப்புகள் இல்லை. விடுதியில் இருந்து செயல் முறைத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் தயார் செய்யலாம். படித்து முடித்த பாடங்களை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே போதுமானது. தேர்வுக்கு முதல் நாள் சென்னை சென்று வாடகை விடுதியில் தங்கவேண்டும். பெரும்பாலும் எழும்பூரில்தான் தங்குவோம். அங்கு நிறைய உணவகங்களும் இதர வசதியும் உள்ளன. சென்னை பொது மருத்துவமனைக்கு வாடகை ஊர்தியில் செல்லலாம்.
          சென்னையில் நடைபெறும் தேர்வுகள் முடிந்து வேலூர் திரும்பியபின் நீண்ட விடுமுறைதான். தேர்வு முடிவுகள் வர ஒரு மாதம்  ஆகும். ஊர் .சென்றுவிடலாம். தேர்வில் வெற்றி எனில் விடுதியைக் காலி செய்துவிட்டு சி.எம்.சி.மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண் மருத்துவர் விடுதியில் தங்கவேண்டும். இல்லையேல் இதே அறையில் இன்னும் ஆறு மாதங்கள் தங்கி தோல்வி அடைந்த பாடத்தை அல்லது பாடங்களை மீண்டும் எழுதியாக வேண்டும்!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமியில் நேர்ந்த இருட்டடிப்பும், குளிர்ச்சியும் டைனோசார்ஸைக் கொன்றன.
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *